ஆர்வமுள்ளோர் அடிக்கடி கேட்கும் கேள்விகள்
ஆர்வமுள்ளோர் அடிக்கடி கேட்கும் கேள்விகள்
கடவுள் அன்புள்ளவர் என்றால், ஏன் துன்மார்க்கத்தை அனுமதிக்கிறார்?
துன்மார்க்கத்தை கடவுள் அனுமதிக்கிறார், ஆனால் கோடிக்கணக்கான மக்கள்தான் வேண்டுமென்றே துன்மார்க்கமாக நடக்கின்றனர். உதாரணமாக, போர்களை பிரகடனம் செய்கின்றனர், பிள்ளைகள் மீது குண்டுகள் போடுகின்றனர், பூமியை நாசம் செய்கின்றனர், பஞ்சங்களை ஏற்படுத்துகின்றனர். புகைபிடிப்பதால் கோடிக்கணக்கானோர் நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாகின்றனர், விபசாரத்தில் ஈடுபட்டு பாலுறவால் கடத்தப்படும் நோய்களுக்கு பலியாகின்றனர், அளவுக்கு அதிகமாக மது அருந்தி கரணை நோயை வரவழைத்துக் கொள்கின்றனர், இதுபோல இன்னும் பிற காரியங்களில் ஈடுபட்டு அவதியுறுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் எல்லாவித துன்மார்க்கமும் ஒழிய வேண்டும் என உண்மையிலேயே விரும்புவதில்லை. அதனால் வரும் தீய விளைவுகள் நீங்க வேண்டும் என்று மட்டுமே விரும்புகின்றனர். தாங்கள் விதைத்ததை அறுவடை செய்கையில், “எனக்கு ஏன் இந்தக் கஷ்டம்?” என புலம்புகின்றனர். அதோடு கடவுள் மீதே குற்றம் சாட்டுகின்றனர், நீதிமொழிகள் 19:3 இவ்வாறு சொல்கிறது: “மனிதர் தம் மடமையாலேயே வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்வர்; ஆனால் அவர்கள் ஆண்டவர்மீது சினங்கொண்டு குமுறுவர்.” (பொது மொழிபெயர்ப்பு) அவர்களுடைய தீய செயல்களுக்கு கடவுள் முடிவு கட்டினால், அவற்றை செய்வதற்கு தங்கள் சுதந்திரம் பறிபோய்விட்டதாக கண்டனக் குரல் எழுப்புவர்!
யெகோவா தீமையை அனுமதிப்பதற்கு முக்கிய காரணம் சாத்தானின் சவாலுக்குப் பதிலளிப்பதற்கே. சோதனையை எதிர்ப்படுகையில் உண்மையுடன் நிலைத்திருக்கும் ஒருவரையும் இந்தப் பூமியில் காண முடியாது என பிசாசாகிய சாத்தான் சொன்னான். (யோபு 1:6-12; 2:1-10) அந்தச் சவாலை நிரூபிப்பதற்காக சாத்தானுக்கு வாய்ப்பளிக்கவே யெகோவா அவனை விட்டு வைத்திருக்கிறார். (யாத்திராகமம் 9:16) சாத்தான் தன்னுடைய சவாலை நிரூபிப்பதற்காக, மனிதரை கடவுளுக்கு எதிராக திருப்ப இப்பொழுது அவர்கள் மீது தொடர்ந்து துன்பங்களை கொண்டுவருகிறான். (வெளிப்படுத்துதல் 12:12) ஆனால் யோபு உத்தமத்தில் நிலைத்திருந்தார். அது போலவே இயேசுவும் நிலைத்திருந்தார். இன்று உண்மை கிறிஸ்தவர்களும் அது போலவே நிலைத்திருக்கிறார்கள்.—யோபு 27:5; 31:6; மத்தேயு 4:1-11; 1 பேதுரு 1:6, 7.
நான் பூமிக்குரிய பரதீஸில் என்றுமாக வாழ விரும்புகிறேன், ஆனால் அது நம்ப முடியாத ஒன்றாக தோன்றுகிறதே?
பைபிளின்படி அப்படியல்ல. அநேக நூற்றாண்டுகளாக தீமையான காரியங்களையே மனிதகுலம் பார்த்திருப்பதால்தான் அது நம்ப முடியாத ஒன்றாக தோன்றுகிறது. யெகோவா இந்தப் பூமியைப் படைத்து, அதை நீதியுள்ள ஆண்களாலும் பெண்களாலும் நிரப்பும்படி மனிதர்களிடம் சொன்னார். மேலும், பூமியை அழிப்பதற்குப் பதிலாக, அதிலுள்ள தாவரங்களையும் விலங்கினங்களையும் பேணி பராமரித்து, அதன் அழகை கட்டிக்காக்கும்படி சொன்னார். (12-ம், 17-ம் பக்கங்களைக் காண்க.) வாக்குப்பண்ணப்பட்ட அந்தப் பரதீஸ் நிறைவேறாத கனவல்ல, நிச்சயம்
இன்றைய மோசமான நிலைமை இனி தொடராது. பரதீஸ் இந்நிலையை மாற்றிவிடும்.பைபிள் ஒரு கட்டுக்கதை, அறிவியல்பூர்வமற்றது என ஏளனம் செய்வோருக்கு நான் எப்படி பதிலளிக்கலாம்?
இந்த வாக்குறுதிகளில் விசுவாசம் வைப்பது ஆதாரமின்றி நம்புவதைக் குறிக்காது. “விசுவாசம் கேள்வியினாலே வரும்.” கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதன் மூலம் அதிலுள்ள ஞானம் தெள்ளத் தெளிவாகிறது, விசுவாசமும் வளருகிறது.—ரோமர் 10:17; எபிரெயர் 11:1.
வரலாற்றுப்பூர்வமாக பைபிள் திருத்தமாய் இருப்பதை பைபிள் சார்ந்த புதைபொருள் ஆராய்ச்சி பெரும்பாலும் உறுதிப்படுத்துகிறது. உண்மையான அறிவியல் பைபிளுக்கு இசைவாக உள்ளது. பூமி படிப்படியாக உருவாக்கப்பட்ட வரிசைக் கிரமம், பூமி உருண்டையானது, அது விண்வெளியில் அந்தரத்திலே தொங்குகிறது, பறவைகள் இடம்பெயர்ந்து செல்கின்றன ஆகிய உண்மைகளை உலக அறிஞர்கள் கண்டுபிடிப்பதற்கு வெகு முன்னரே பைபிள் சொன்னது.—ஆதியாகமம், அதிகாரம் 1; ஏசாயா 40:22; யோபு 26:7; எரேமியா 8:7.
பைபிள் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதை நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள் காட்டுகின்றன. உலக வல்லரசுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும், மேசியா வரும் காலம், அவர் கொலை செய்யப்படும் காலம் ஆகியவற்றை முன்னரே தானியேல் அறிவித்தார். (தானியேல், அதிகாரங்கள் 2, 8; 9:24-27) இன்னும் மற்ற தீர்க்கதரிசனங்களும் இன்றைக்கு நிறைவேறி வருகின்றன, நாம் ‘கடைசி நாட்களில்’ வாழ்கிறோம் என்பதை இவையெல்லாம் அடையாளம் காட்டுகின்றன. (2 தீமோத்தேயு 3:1-5; மத்தேயு, அதிகாரம் 24) இத்தகைய முன்னறிவு மனித சக்திக்கு அப்பாற்பட்டது. (ஏசாயா 41:23) இன்னும் உறுதியான அத்தாட்சிகளுக்கு, பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா?, உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? ஆகிய ஆங்கில புத்தகங்களைக் காண்க.
பைபிள் சார்ந்த கேள்விகளுக்கு நான் எவ்வாறு பதிலளிக்க கற்றுக்கொள்ளலாம்?
நீங்கள் பைபிளைப் படித்து அதை தியானிக்க வேண்டும், அதே சமயத்தில் கடவுளுடைய ஆவி உங்களை வழிநடத்துவதற்கு அவரிடம் கேட்க வேண்டும். (நீதிமொழிகள் 15:28; லூக்கா 11:9-13) “உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்” என பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 1:5) அதோடு, சிறந்த அறிவுரைக்கு பைபிள் சார்ந்த பிரசுரங்கள் இருக்கின்றன. மேலும், எத்தியோப்பியனுக்கு பிலிப்பு கற்றுக்கொடுத்து உதவியதைப் போலவே, பொதுவாக பிறருடைய உதவியும் தேவைப்படுகிறது. (அப்போஸ்தலர் 8:26-35) ஆர்வம் காட்டுகிறவர்களுக்கு அவர்களுடைய வீட்டிலேயே யெகோவாவின் சாட்சிகள் இலவசமாக பைபிளைக் கற்றுக்கொடுக்கிறார்கள். இந்த சேவையைப் பெற தயங்காதீர்கள்.
ஏன் அநேகர் யெகோவாவின் சாட்சிகளை எதிர்க்கிறார்கள், அவர்களோடு படிக்க வேண்டாம் என சொல்கிறார்கள்?
இயேசுவின் பிரசங்க வேலைக்கு எதிர்ப்பு இருந்தது, தம்மை பின்பற்றுகிறவர்களும் எதிர்க்கப்படுவார்கள் என அவர் கூறினார். இயேசுவின் போதனைகளைக் கேட்டு சிலர் மனம் கவரப்பட்டபோது, “நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா? அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா?” என மத எதிரிகள் எதிர்த்துக் கேட்டார்கள். யோவான் 7:46-48; 15:20) சாட்சிகளோடு படிக்க வேண்டாம் என உங்களிடம் சொல்பவர்களில் அநேகர் விஷயம் அறியாதவர்கள் அல்லது தப்பெண்ணம் கொண்டவர்கள். சாட்சிகளுடன் படியுங்கள், பைபிளை நன்கு புரிந்துகொள்ள முடிகிறதா இல்லையா என்பதை நீங்களே கண்டறியுங்கள்.—மத்தேயு 7:17-20.
(ஒவ்வொருவருக்கும் ஏற்கெனவே ஒரு மதம் இருக்கும்போது ஏன் சாட்சிகள் அவர்களை சந்திக்கிறார்கள்?
இப்படி செய்வதன் மூலம் அவர்கள் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றுகிறார்கள். அவர் யூதர்களிடம் சென்றார். யூதர்களுக்கு சொந்த மதம் இருந்தது. ஆனால் பல விதங்களில் யூத மதம் கடவுளுடைய வார்த்தைக்கு முரணாக இருந்தது. (மத்தேயு 15:1-9) எல்லா நாடுகளும்—அவை “கிறிஸ்தவ நாடுகளாக” இருந்தாலும்சரி கிறிஸ்தவமல்லாத நாடுகளாக இருந்தாலும்சரி—ஏதோ ஒரு மதத்தைப் பின்பற்றுகின்றன. ஆனால் ஜனங்கள் கடவுளுடைய வார்த்தைக்கு இசைவான நம்பிக்கைகளை கொண்டிருப்பது மிகவும் இன்றியமையாதது. இந்த விஷயத்தில் அவர்களுக்கு உதவ சாட்சிகள் எடுக்கும் முயற்சிகள் அயலாருக்கு அவர்கள் காட்டும் அன்பின் வெளிக்காட்டுகள்.
சாட்சிகள் தங்களுடைய மதமே சரியான மதம் என நம்புகிறார்களா?
தன்னுடைய மதம் முக்கியம் என கருதும் எவரும் அதுவே சரியான மதம் என நினைக்க வேண்டும். இல்லாவிட்டால், அவர் ஏன் அதைப் பின்பற்ற வேண்டும்? “எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள்” என கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கொடுக்கப்படுகிறது. (1 தெசலோனிக்கேயர் 5:21) தனது நம்பிக்கைகளுக்கு பைபிள் ஆதாரம் இருக்கிறதா என ஒருவர் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும்; ஏனென்றால் ஒரேவொரு உண்மை மதமே உள்ளது. “ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும்” இருக்கிறதென குறிப்பிடுவதன் மூலம் எபேசியர் 4:5 இதை உறுதிப்படுத்துகிறது. பல பாதைகளும் பல மதங்களும் இருக்கின்றன, அவை எல்லாமே இரட்சிப்புக்கு வழிநடத்துகின்றன என்ற “பரந்த மனப்பான்மையை” இயேசு ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக, “ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” என அவர் கூறினார். யெகோவாவின் சாட்சிகள் அதைக் கண்டுபிடித்துவிட்டதாக நம்புகிறார்கள். இல்லாவிட்டால் அவர்கள் வேறொரு மதத்தைத் தேடுவார்களே!—மத்தேயு 7:14.
தாங்கள் மட்டுமே இரட்சிக்கப்படுவார்கள் என அவர்கள் நம்புகிறார்களா?
இல்லை. கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த, யெகோவாவின் சாட்சிகளல்லாத லட்சோபலட்சம் மக்கள் உயிர்த்தெழுந்து வந்து என்றும் வாழும் வாய்ப்பை பெறுவார்கள். இன்று வாழும் அநேகர் ‘மிகுந்த உபத்திரவம்’ வரும் முன்பு சத்தியத்திற்காகவும் நீதிக்காகவும் நிலைநிற்கை எடுத்து இரட்சிப்பை பெறலாம். மேலும், நாம் ஒருவரையொருவர் நியாயந்தீர்க்கக் கூடாது என இயேசு சொன்னார். நாம் வெளிப்புற தோற்றத்தை பார்க்கிறோம்; கடவுளோ இருதயத்தைப் பார்க்கிறார். அவர் உள்ளதை உள்ளபடி பார்த்து இரக்கத்துடன் நியாயந்தீர்க்கிறார். அவர் நியாயந்தீர்க்கும் பொறுப்பை இயேசுவிடம் ஒப்படைத்திருக்கிறார், நம்மிடம் அல்ல.—மத்தேயு 7:1-5; 24:21; 25:31.
யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு செல்வோரிடம் எவ்வளவு நன்கொடை எதிர்பார்க்கப்படுகிறது?
பண நன்கொடைகள் வழங்குவதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு சொன்னார்: “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.” (2 கொரிந்தியர் 9:7) யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றங்களிலும் மாநாட்டு அரங்கங்களிலும் ஒருபோதும் காணிக்கைகள் வசூலிக்கப்படுவதில்லை. விருப்பமுள்ளவர்கள் நன்கொடை வழங்க நன்கொடை பெட்டிகள் வைக்கப்படுகின்றன. மற்றவர்கள் கொடுக்கிறார்களா, அல்லது எவ்வளவு கொடுக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. சிலருக்கு மற்றவர்களைவிட அதிகம் கொடுக்க முடிகிறது; இன்னும் சிலரால் ஒன்றும் கொடுக்க முடியாமலும் போகலாம். எருசலேம் ஆலயத்திலிருந்த காணிக்கை பெட்டியையும் நன்கொடை அளிப்பவர்களையும் பற்றி இயேசு குறிப்பிட்டபோது சரியான நோக்குநிலையைக் காண்பித்தார்: அதாவது ஒருவர் எவ்வளவு கொடுக்கிறார் என்பது அல்ல, ஆனால் அவரால் எவ்வளவு கொடுக்க முடிகிறது என்பதும் எந்தளவு மனமுவந்து கொடுக்கிறார் என்பதும்தான் முக்கியம்.—லூக்கா 21:1-4.
நான் யெகோவாவின் சாட்சியாக மாறினால், அவர்களைப் போலவே பிரசங்கிக்கும் வேலையிலும் பங்குகொள்ள வேண்டுமா?
கிறிஸ்துவின் ராஜ்யத்தின்கீழ் பூமி பரதீஸாக மாறும் என்ற வாக்குறுதியைப் பற்றி ஒருவர் முழுமையாக அறிந்துகொள்கையில், அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறார். நீங்களும் விரும்புவீர்கள். ஏனெனில் அது ஒரு நற்செய்தி!—அப்போஸ்தலர் 5:41, 42.
இதைச் செய்வது நீங்கள் இயேசு கிறிஸ்துவின் சீஷர் என்பதைக் காண்பிப்பதற்கு ஒரு முக்கியமான வழி. இயேசுவை “உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சி” என பைபிள் அழைக்கிறது. அவர் பூமியில் இருந்தபோது “பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது” என பிரசங்கித்தார், இதை செய்வதற்கு தமது சீஷர்களையும் அனுப்பினார். (வெளிப்படுத்துதல் 3:14; மத்தேயு 4:17; 10:7) “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்” என பின்னர் தமது சீஷர்களுக்கு கட்டளையிட்டார். முடிவு வருவதற்கு முன்பு, “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்” என்றும் முன்னறிவித்தார்.—மத்தேயு 24:14; 28:19, 20.
இந்த நற்செய்தியை அறிவிப்பதற்கு அநேக வழிகள் உள்ளன. நண்பர்களோடும் அறிமுகமானவர்களோடும் உரையாடுவது பெரும்பாலும் இதற்கு வழியைத் திறந்து வைக்கிறது. சிலர் கடிதங்கள் வாயிலாகவோ தொலைபேசியின் வாயிலாகவோ இதை செய்கிறார்கள். வேறு சிலரோ தங்களுக்கு தெரிந்தவர்களுக்குப் பிடித்தமான விஷயத்தின் பேரில் பிரசுரங்களை தபாலில் அனுப்புகிறார்கள். ஒருவரையும் தவறவிடக் கூடாது என்ற ஆசையில் சாட்சிகள் வீடு வீடாக சென்று எல்லாருக்கும் இச்செய்தியை அறிவிக்கிறார்கள்.
பைபிள் இந்த அன்பான அழைப்பை விடுக்கிறது: “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத் தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.” (வெளிப்படுத்துதல் 22:17) பரதீஸ் பூமியையும் அதன் ஆசீர்வாதங்களையும் பற்றி மனப்பூர்வமாகத்தான் பிறருக்கு சொல்ல வேண்டும்; இந்த நற்செய்தியை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டுமென்ற ஆசை இருதயத்தில் நிரம்பியிருக்க வேண்டும்.
யெகோவாவின் சாட்சிகளையும் அவர்களுடைய நம்பிக்கைகளையும் பற்றி தெரிந்துகொள்வதற்கு உங்களிடம் இன்னும் நிறைய கேள்விகள் கண்டிப்பாக இருக்கும். ஒருவேளை அவற்றில் சில சர்ச்சைக்குரியவையாகவும் இருக்கலாம். உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்க நாங்கள் விரும்புகிறோம். இந்தச் சிற்றேட்டில் அனைத்தையும் விவரிக்க இடமில்லை. ஆகவே உள்ளூரில் உள்ள சாட்சிகளை அணுகும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறோம். அவர்களுடைய ராஜ்ய மன்ற கூட்டங்களுக்குச் சென்று அவர்களிடம் நீங்கள் கேட்கலாம் அல்லது உங்களுடைய வீட்டுக்கு அவர்கள் வரும்போது கேட்கலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருத்தமான விலாசத்தைப் பயன்படுத்தி யெகோவாவின் சாட்சிகளுக்கு உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.