நற்செய்தியை அறிவிப்பதற்கு அவர்கள் பயன்படுத்தும் வழிகள்
நற்செய்தியை அறிவிப்பதற்கு அவர்கள் பயன்படுத்தும் வழிகள்
‘சகல தேசத்தாரையும் சீஷராக்கும்படி’ கிறிஸ்தவர்களுக்கு கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வற்புறுத்தியோ பலவந்தப்படுத்தியோ பிறரை மதமாற்றம் செய்வதை இது அர்த்தப்படுத்துவதில்லை. ‘சிறுமைப்பட்டவர்களுக்கு சுவிசேஷத்தை அறிவிப்பதும்,’ ‘இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுவதும்,’ ‘துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்வதுமே’ இயேசுவின் ஊழியமாக இருந்தது. (மத்தேயு 28:19; ஏசாயா 61:1, 2; லூக்கா 4:18, 19) பைபிளிலிருந்து நற்செய்தியை அறிவிப்பதன் மூலம் இதைச் செய்யவே யெகோவாவின் சாட்சிகள் முயலுகிறார்கள். பூர்வத்தில் வாழ்ந்த எசேக்கியேல் தீர்க்கதரிசியைப் போல, இன்று யெகோவாவின் சாட்சிகள், “சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற”வர்களைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள்.—எசேக்கியேல் 9:4.
தற்போதைய நிலைமைகளால் துயரப்படுகிற ஆட்களைக் கண்டுபிடிக்க வீட்டுக்கு வீடு சென்று பிரசங்கிக்கும் முறையை பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு பொது மக்களை அணுகுவதற்கு இயேசுவைப் போலவே நடைமுறையான முயற்சி எடுக்கிறார்கள். அவர் “பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம் பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்து வந்தார்.” அவருடைய ஆரம்ப கால சீஷர்களும் இது போலவே செய்தார்கள். (லூக்கா 8:1; 9:1-6; 10:1-9) இன்று, சாத்தியமான இடங்களில், யெகோவாவின் சாட்சிகள் ஓர் ஆண்டில் ஒவ்வொரு வீட்டையும் பல முறை சந்திக்க முயல்கிறார்கள். ஏதாவது அக்கறைக்குரிய அல்லது கவலைக்குரிய உள்ளூர் சம்பவத்தையோ அல்லது உலகறிந்த விஷயத்தையோ பற்றி வீட்டுக்காரரோடு சில நிமிடங்கள் உரையாடுகிறார்கள். ஓரிரு பைபிள் வசனங்களை காண்பிக்கிறார்கள். வீட்டுக்காரர் ஆர்வம் காண்பித்தால், கூடுதலாக பேசுவதற்கு வசதியான ஒரு நேரத்தில் மீண்டும் சந்திக்க சாட்சிகள் ஏற்பாடு செய்கிறார்கள். பைபிள்களையும் பைபிள் சார்ந்த பிரசுரங்களையும் கொடுக்கிறார்கள். வீட்டுக்காரர் விரும்பினால், இலவசமாக அவருடைய வீட்டிலேயே பைபிள் படிப்பை நடத்துகிறார்கள். இது போன்ற பயனுள்ள பைபிள் படிப்புகள் தனி நபர்களோடும் குடும்பங்களோடும் உலகம் பூராவும் லட்சக்கணக்கில் தவறாமல் நடத்தப்படுகின்றன.
‘ராஜ்யத்தின் சுவிசேஷத்தை’ அறிவிக்கும் மற்றொரு வழி, உள்ளூர் ராஜ்ய மன்றங்களில் நடத்தப்படும் கூட்டங்களின் மூலமாகும். சாட்சிகள் அங்கே வாரந்தோறும் கூட்டங்கள் நடத்துகிறார்கள். ஒரு கூட்டத்தில், இன்று மக்களின் அக்கறைக்குரியதாக இருக்கும் ஒரு விஷயத்தில் பொதுப் பேச்சு கொடுக்கப்படுகிறது. இதற்குப் பிறகு காவற்கோபுர பத்திரிகையை உபயோகித்து, ஏதாவது ஒரு பைபிள் தலைப்பின் பேரில் அல்லது தீர்க்கதரிசனத்தின் பேரில் படிப்பு நடத்தப்படுகிறது. மற்றொரு கூட்டத்தில், சாட்சிகள் நற்செய்தியை திறம்பட்ட முறையில் அறிவிப்பதற்கு பயிற்றுவிக்கும் ஒரு பள்ளி நடத்தப்படுகிறது. பிறகு உள்ளூர் பிராந்தியத்தில் சாட்சி கொடுப்பதைப் பற்றி கலந்தாலோசிப்பதற்கு ஒரு பாகம்
ஒதுக்கப்படுகிறது. மேலும், வாரம் ஒரு முறை சாட்சிகள் சிறிய தொகுதிகளாக பைபிள் படிப்புகளுக்கு தனிநபர்களுடைய வீடுகளில் கூடிவருகிறார்கள்.இந்த எல்லா கூட்டங்களுக்கும் பொது மக்கள் தாராளமாக வரலாம். ஒருபோதும் காணிக்கைகள் வசூலிக்கப்படுவதில்லை. இப்படிப்பட்ட கூட்டங்கள் அனைவருக்கும் பிரயோஜனமாக இருக்கின்றன. பைபிள் சொல்கிறது: “அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக. சிலர் வழக்கமாகவே நம் சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை. நாம் அவ்வாறு செய்யலாகாது; ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக. இறுதிநாள் நெருங்கி வருகிறதைக் காண்கிறோம்; எனவே இன்னும் அதிகமாய் ஊக்கமூட்டுவோம்.” தனிப்பட்ட படிப்பும் ஆராய்ச்சியும் அவசியம், ஆனால் மற்றவர்களுடன் கூடிவருவது நம்மை உந்துவிக்கிறது: “இரும்பை இரும்பு கூர்மையாக்குவது போல, ஒருவர்தம் அறிவால் மற்றவரைக் கூர்மதியாளராக்கலாம்.”—எபிரெயர் 10:24, 25; நீதிமொழிகள் 27:17, பொது மொழிபெயர்ப்பு.
அன்றாட வாழ்க்கையில் மற்றவர்களை சந்திக்கும் வாய்ப்புகளையும் சாட்சிகள் நன்கு பயன்படுத்திக் கொண்டு, நற்செய்தியைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அக்கம்பக்கத்தில் வசிப்பவரோடு அல்லது பேருந்திலோ விமானத்திலோ பயணம் செய்பவரோடு அவர்கள் சில வார்த்தைகளை பரிமாறிக்கொள்ளலாம், நண்பரோடு அல்லது உறவினரோடு நீண்ட நேரம் உரையாடலாம் அல்லது தங்களுடன் வேலை பார்க்கும் ஒருவரோடு சாப்பாட்டு வேளையில் பேசலாம். பூமியில் இருந்தபோது பெரும்பாலும் இயேசு இப்படித்தான் சாட்சி கொடுத்தார்—கடற்கரையில் நடந்துசெல்கையில், ஒரு மலைச்சரிவில் உட்கார்ந்திருக்கையில், யாருடைய வீட்டிலாவது உணவு அருந்துகையில், கலியாணத்திற்குச் செல்கையில், அல்லது கலிலேயா கடலில் மீன்பிடிக்கும் படகில் பயணிக்கையில் சாட்சி கொடுத்தார். ஜெப ஆலயங்களிலும் எருசலேமிலிருந்த ஆலயத்திலும் கற்பித்தார். எங்கே இருந்தாலும், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி பேசுவதற்கு சந்தர்ப்பங்களைக் கண்டுபிடித்தார். யெகோவாவின் சாட்சிகள் இந்த விதத்திலும் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்ற முயல்கிறார்கள்.—1 பேதுரு 2:21.
முன்மாதிரியின் மூலம் பிரசங்கித்தல்
நற்செய்தியை பிரசங்கிப்பவர் தாம் போதிப்பதை கடைப்பிடிக்காவிட்டால், மேற்கண்ட எந்த விதங்களில் அவர் பிரசங்கித்தாலும் அது அர்த்தமுள்ளதாக இருக்காது. சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருப்பது மாய்மாலத்தனம். மத மாய்மாலம் லட்சக்கணக்கானோரை பைபிளிடமிருந்து விலகிச் செல்ல செய்திருக்கிறது. இதற்காக பைபிளைக் குற்றப்படுத்துவது நியாயமல்ல. சதுசேயர்களும் பரிசேயர்களும் எபிரெய வேதாகமத்தை வைத்திருந்தனர், ஆனால் இயேசு அவர்களை மாய்மாலக்காரர்கள் என கண்டனம் செய்தார். அவர்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தை வாசித்ததைக் குறிப்பிட்டு, தமது சீஷர்களிடம் அவர் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள்.” (மத்தேயு 23:3) மணிக்கணக்காக பிரசங்கிப்பதைவிட ஒரு கிறிஸ்தவரின் நேர்மையான வாழ்க்கையே வலிமைமிக்க சாட்சி கொடுக்கிறது. விசுவாசத்தில் இல்லாத கணவனையுடைய கிறிஸ்தவ மனைவிமார்களுக்கு இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது: “உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக் கொள்ளப்படுவார்கள்.”—1 பேதுரு 3:1, 2.
ஆகவே, கிறிஸ்தவ நடத்தையில் சிறந்த முன்மாதிரியாக திகழ்வதன் மூலமும் யெகோவாவின் சாட்சிகள் மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்கிறார்கள். ‘பிறர் தங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் தாங்களும் மற்றவர்களுக்குச் செய்ய’ முயற்சி செய்கிறார்கள். (மத்தேயு 7:12, பொ.மொ.) சக சாட்சிகளிடமோ நண்பர்களிடமோ அக்கம்பக்கத்தாரிடமோ உறவினர்களிடமோ மட்டுமல்ல, அனைவருடனும் இப்படி நடக்கவே முயற்சி செய்கிறார்கள். ஆனால் அபூரணர்களாக இருப்பதால், அவர்கள் எப்போதும் 100 சதம் வெற்றி பெறுவதில்லை. எல்லாருக்கும் ராஜ்யத்தின் நற்செய்தியை சொல்வதில் மாத்திரமல்ல, வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எல்லாருக்கும் நற்காரியங்களைச் செய்வதிலும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதே அவர்களுடைய ஆசை.—யாக்கோபு 2:14-17.
[பக்கம் 19-ன் படம்]
ஹவாய்
[பக்கம் 19-ன் படம்]
வெனிசுவேலா
[பக்கம் 19-ன் படம்]
யுகோஸ்லாவியா
[பக்கம் 20-ன் படங்கள்]
நடைமுறைக்கேற்ப கட்டப்பட்ட ராஜ்ய மன்றங்கள் பைபிள் கலந்தாலோசிப்புக்குரிய இடங்கள்
[பக்கம் 21-ன் படங்கள்]
குடும்ப வாழ்க்கையிலும் மற்றவர்களோடு பழகுகையிலும், தாங்கள் போதிக்கும் விஷயங்களுக்கேற்ப வாழ சாட்சிகள் மனதார முயற்சி செய்கிறார்கள்