Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அன்பிலும் ஒற்றுமையிலும்கட்டியெழுப்புவதற்குச் சபைகள்

அன்பிலும் ஒற்றுமையிலும்கட்டியெழுப்புவதற்குச் சபைகள்

அன்பிலும் ஒற்றுமையிலும்கட்டியெழுப்புவதற்குச் சபைகள்

நீங்கள் வாழும் இடத்துக்கு அருகில் யெகோவாவின் சாட்சிகளுடைய சபை கூட்டங்கள் சிலவற்றிற்கு நீங்கள் சென்றிருக்கலாம். எல்லா வாழ்க்கைத் துறைகளிலுமிருந்து வரும் ஆட்கள் குடும்பங்கள், தனி நபர்கள், வயதானவர்கள் மற்றும் இளைஞர்கள் அங்கிருந்தார்கள். அவர்கள் அனைவரும் தங்களுடைய வணக்கத்தில் ஒன்றுபட்டும் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அக்கறை கொண்டும் இருந்தார்கள்.

பெரும் எண்ணிக்கையான ஆட்கள் ஒற்றுமையாக வேலை செய்ய விரும்பும் எந்த ஒரு ஏற்பாட்டிலும், ஏதோ ஒருவித மேற்பார்வை இருக்க வேண்டும். கடவுள் ஒழுங்கின் கடவுளாக இருக்கிறார். ஆகவே அந்த ஒழுங்கு அவருடைய ஜனங்களின் சபையில் பிரதிபலிக்கப்பட வேண்டும். முதல் நூற்றாண்டிலிருந்தது போலவே இன்றும் தகுதியும் முதிர்ச்சியும் அனுபவமுமுள்ள கிறிஸ்தவ ஆண்கள் மூப்பர்களாக அல்லது கண்காணிகளாக நியமனம் செய்யப்படுகிறார்கள். அவர்கள் சபையை மேற்பார்வை செய்து அதன் ஆவிக்குரிய தேவைகளைக் கவனித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு உதவி ஊழியர்கள் என்றழைக்கப்படும் மற்ற உண்மையுள்ள மனிதர்கள் உதவி செய்கிறார்கள். மூப்பரும் உதவி ஊழியரும் சம்பளமோ அல்லது மற்றப் பண உதவியோ பெற்றுக்கொள்ளாமல் தாங்களாகவே மனமுவந்து சேவிக்கிறார்கள், தங்கள் சொந்த செலவுகளைக் கவனித்துக்கொள்ள பொதுவாக உலகப்பிரகாரமான வேலை செய்கிறார்கள்.—1 கொரிந்தியர் 14:33, 40; பிலிப்பியர் 1:1; 1 தீமோத்தேயு 3:8, 9.

இவர்கள் எவ்வாறு தெரிந்துகொள்ளப்படுகிறார்கள்? இவர்கள் குறிப்பிட்ட வேதப்பூர்வ தகுதிகளை வாழ்க்கையில் வெளிப்படுத்தும் கடவுளின் உண்மையுள்ள ஊழியர்களாக இருக்க வேண்டும். அவற்றில் சில: ‘பழக்க வழக்கங்களில் மிதமாகவும், தெளிந்த புத்தியுடனும், ஒழுங்குடனும் உபசரிப்புடனும், போதக சமர்த்தனாயும், நியாயமாயும் இருக்கவேண்டும்; பண ஆசைக்காரனாக இருக்கக்கூடாது; தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனாயிருக்க வேண்டும்; புதிதாக மதமாறினவனாக இருக்கக்கூடாது; புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றிருக்க வேண்டும்’; ‘கற்பிக்கும் கலையின் சம்பந்தமாக உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும்.’—1 தீமோத்தேயு 3:1-15; தீத்து 1:7-9.

பெரும்பான்மையர் புதிய கிறிஸ்தவர்களாயிருக்கும் சபையாரால் இந்த மனிதர் பொறுப்புள்ள ஸ்தானத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுகிறதில்லை, அதற்கு மாறாக, இந்தப் பொறுப்பு ஸ்தானங்களுக்காக ஆலோசிக்கப்படுகிறவர்கள் எந்த அளவுக்கு வேதப்பூர்வத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள் என்பதைக் கண்டறிய, பகுத்துணர்வை பெற்றிருக்கும் முதிர்ச்சியும் அனுபவமுமுள்ள ஆண்களாகிய மூப்பர்களால் சிபாரிசு செய்யப்படுகிறார்கள். பின்னர், யெகோவாவின் சாட்சிகளுடைய நிர்வாகக் குழுவின் கண்காணிப்பின் கீழ் மூப்பர்களும் உதவி ஊழியர்களும் நியமனம் செய்யப்படுகிறார்கள். இதில் அவர்கள் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையின் மாதிரியைப் பின்பற்றுகிறார்கள்.

இந்த மூப்பர்கள், அல்லது கண்காணிகள் குருவர்க்க வகுப்பாக அமைகிறதில்லை. அவர்கள் மற்றவர்கள் மீது எஜமானர்களாக இல்லை. இயேசு சொன்ன பிரகாரம் தலைமை தாங்குகிற எவனும் அனைவருக்கும் அடிமையாய் இருக்க வேண்டும். யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் உண்மையாகவே மூப்பர்கள், தேவனுடைய ராஜ்யத்துக்காக உழைக்கும் உடன் வேலையாட்களாக இருக்கிறார்கள்.—மத்தேயு 20:26, 27; 23:8-11; ரோமர் 12:8; 1 கொரிந்தியர் 3:5; 4:1, 2; கொலோசெயர் 4:11; 1 தெசலோனிக்கேயர் 5:12-14.

கண்காணிகளாக, அவர்கள் கூட்டங்களில் அளிக்கப்படும் போதனைகளைக் கண்காணித்து பிரசங்க வேலையில் தலைமைத் தாங்கி வழிநடத்துகிறார்கள். ராஜ்யத்தின் நற்செய்தியை, சபைக்கு நியமிக்கப்பட்ட பிராந்தியம் முழுவதிலும் பிரசங்கிப்பதே சபையின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. கண்காணிகள் மேய்ப்பர்களாகவும் சேவை செய்து தேவைக்கு ஏற்ப சபையின் அங்கத்தினர்களை உற்சாகப்படுத்த அவர்களைச் சென்று பார்க்கிறார்கள்.—மத்தேயு 24:14; அப்போஸ்தலர் 1:8; 1 தெசலோனிக்கேயர் 2:11, 12; 5:14, 15; 2 தீமோத்தேயு 2:24-26; எபிரெயர் 13:17; யாக்கோபு 5:13-16; 1 பேதுரு 5:1-4.

தவறான போக்கில் சென்று சபையின் ஆவிக்குரிய மற்றும் ஒழுக்க சுத்தத்துக்கும் அதன் ஒற்றுமைக்கும் ஆபத்தைக் கொண்டுவரும் நிலையில் இருப்பவரைக் கடிந்துகொண்டு சிட்சைக் கொடுக்கும் உத்தரவாதமும் மூப்பர்களுக்கு இருக்கிறது.—1 கொரிந்தியர் 5:4, 5, 7, 11-13; தீத்து 1:9; 2:15; 3:10, 11.

சபையோடு தவறாமல் ஒழுங்காகக் கூட்டுறவு கொள்ளும்போது, சிறப்பான கூட்டுறவும் அநேக ஆவிக்குரிய நன்மைகளும் உங்களுக்குக் கிடைக்கும்.—சங்கீதம் 35:18; 84:10.

● தனி சபைகளின் விவகாரங்களைக் கண்காணிப்பது யார்?

● கண்காணிகள் எந்த அடிப்படையில் தெரிந்துகொள்ளப்படுகிறார்கள்?

● அவர்களுடைய உத்தரவாதங்கள் என்ன?

[பக்கம் 13-ன் படங்கள்]

கண்காணிகள் சபையில் போதிக்கிறார்கள், வீட்டுக்கு வீடு பிரசங்க வேலையில் தலைமை தாங்கி வழிநடத்துகிறார்கள், மேய்க்கும் சந்திப்புகளைச் செய்து உற்சாகப்படுத்துகிறார்கள். தேவைப்படும்போது புத்திமதியையும் கடிந்துகொள்ளுதலையும் கொடுக்கிறார்கள்