Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவப்படுவதற்காகக் கூட்டங்கள்

அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவப்படுவதற்காகக் கூட்டங்கள்

அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் ஏவப்படுவதற்காகக் கூட்டங்கள்

பூர்வ கிறிஸ்தவர்கள் போதனைகளைப் பெற்றுக்கொள்ளவும் கட்டியெழுப்பும் தோழமையை அனுபவித்துக் களிக்கவும் பொதுவாக தனிப்பட்டவர் வீடுகளில் ஒன்றாகக் கூடிவந்தார்கள். இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் வாரத்துக்கு மூன்று முறை கூடிவருகின்றன. எந்தக் கூட்டத்திலாகிலும் ஆஜராயிருக்க நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள். அவர்களுடைய கூட்டங்களில் சடங்குகள் இல்லை. ஆனால் அவை தெய்வீக கல்வியின் மீது கவனத்தை ஊன்ற வைக்கின்றன. சபை கூட்டங்கள் பாட்டு ஜெபத்தோடு ஆரம்பிக்கப்பட்டு அவற்றோடு முடிக்கப்படுகின்றன. அனுமதி இலவசம், காணிக்கைகள் வசூலிக்கப்படுவதில்லை.—அப்போஸ்தலர் 4:23-31; 14:22; 15:32, 35; ரோமர் 16:5; கொலோசெயர் 4:15.

ஒருவேளை நீங்கள் ஆஜராகும் முதல் கூட்டம், பைபிள் போதகங்கள், தீர்க்கதரிசனம், அல்லது கிறிஸ்தவ வாழ்க்கையின் பேரில் அறிவுரையைப் பற்றி சிந்திக்கும் 45 நிமிட பொதுப்பேச்சாக இருக்கலாம். இந்தப் பேச்சைத் தொடர்ந்து காவற்கோபுரத்தில், சபையில் படிப்பதற்காக விசேஷமாகத் திட்டமிடப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையைப் பயன்படுத்தி பைபிள் படிப்பு நடைபெறுகிறது. படிப்பு பின்வரும் இந்த முறைப்படி நடத்தப்படுகிறது; காவற்கோபுரத்திலிருந்து ஒரு பாரா வாசிக்கப்படுகிறது. நடத்துபவர் பொருளின் பேரில் கேள்விகளைக் கேட்கிறார். சபையார் தங்களுடைய கையை உயர்த்துவதன் மூலம், பதிலளிக்க முன்வரலாம். பொதுவாக ஒவ்வொரு பாராவின் மீதும் பல்வேறு குறிப்புகள் கொடுக்கப்படுகின்றன. கூட்டம் ஒரு மணி நேரம் நீடிக்கிறது.

பின்னால், வாரத்தில் வேறு இரண்டு 45 நிமிட கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. ஒன்று தேவராஜ்ய ஊழியப்பள்ளியாகும். பைபிள் விஷயங்களின் பேரில் எவ்வாறு தகவலைச் சேகரித்து, அதைத் திறம்பட்ட விதத்தில் கற்பிக்கலாம் என்பதன் பேரில் பயிற்றுவிப்பை அது அளிக்கிறது. 21 நிமிட விசேஷித்தப் போதனையைத் தொடர்ந்து, முன்கூட்டியே நியமிக்கப்பட்ட மாணாக்கர்கள், சுருக்கமான பேச்சுகளைக் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு பேச்சுக்குப் பின்னும் மாணாக்கர் எவ்வாறு முன்னேறலாம் என்பதைக் காட்டி பள்ளியை நடத்துபவர் ஆலோசனை தருகிறார். இந்தப் பள்ளியில் உபயோகிப்பதற்காக பல்வேறு பாட புத்தகங்கள் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. கூட்டங்களுக்கு ஒழுங்காக வருபவர்கள், கிறிஸ்தவ நியமங்களுக்கு ஏற்ற விதத்தில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தால் இந்தப் பள்ளியில் பெயர் பதிவு செய்து கொள்ளலாம்.

இதைத் தொடர்ந்து நடத்தப்படும் கூட்டம் ஊழியக்கூட்டம் என்று அழைக்கப்படுகிறது. நற்செய்தியை வீட்டுக்கு-வீடு அறிமுகம் செய்வது பற்றியும் ஊழியத்தின் மற்ற அம்சங்களைப் பற்றியும் சிந்திக்கும் மூன்று அல்லது நான்கு பகுதிகள் இதில் அடங்கியிருக்கின்றன. இந்தப் பகுதிகள் ஓரளவு சபையாரின் பங்கேற்றலோடுகூட பேச்சுகள், கலந்தாலோசிப்புகள், அல்லது நடிப்புகளாக அளிக்கப்படுகின்றன. நிகழ்ச்சிநிரலின் பெரும்பகுதி, உவாட்ச் டவர் சங்கம் மாதந்தோறும் வெளியிடும் நம் ராஜ்ய ஊழியம் என்ற நான்கு பக்க போதனை தாளிலுள்ள தகவலை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

மற்றொரு கூட்டம் சிறிய தொகுதிகளில் நடத்தும் வாராந்தர படிப்பாகும். இது பொதுவாகச் சபையின் பிராந்தியம் முழுவதிலும் தனி நபர்களின் வீடுகளில் நடத்தப்படுகிறது. இந்தப் படிப்பு பைபிளையும் சங்கம் அண்மையில் பிரசுரித்த ஒரு புத்தகத்தையும் அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படுகிறது. தொகுதி சிறியதாக இருப்பதால், கலந்தாலோசிப்பில் அனைவரும் பங்குகொள்ள நல்ல வாய்ப்பிருக்கிறது, மேலும் ஆஜராயிருப்பவர்கள் ஒருவரோடொருவர் நன்றாய்ப் பழகுவதற்கும் நல்ல சந்தர்ப்பம் இருக்கிறது.

பெரும்பாலான சபைகள் யெகோவாவின் சாட்சிகளால் கட்டப்பட்ட ராஜ்ய மன்றத்தில் தங்களுடைய கூட்டங்களை நடத்துகிறார்கள். இதைக் கட்டும் செலவுக்குச் சாட்சிகள் தாமே முன்வந்து நன்கொடைகள் அளிக்கின்றனர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தாங்களாக முன்வந்து வேலை செய்பவர்களால் வேலை இலவசமாகச் செய்து முடிக்கப்படுகிறது. நன்கொடை அளிக்க விரும்புகிறவர்கள் பயன்படுத்துவதற்காக, நன்கொடை பெட்டிகள் எல்லா கூட்டங்களிலும் வைக்கப்படுகின்றன.

சபை கூட்டங்கள் எபிரெயர் 10:24, 25-லுள்ள புத்திமதியைப் பின்பற்றுவதற்கு யெகோவாவின் சாட்சிகளுக்கு உதவி செய்கின்றன: “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம்; நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்ல வேண்டும்.”

● பூர்வ கிறிஸ்தவ கூட்டங்களின் என்ன அம்சங்களை யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் காணலாம்?

● சாட்சிகள் ஒழுங்காக நடத்தும் ஐந்து கூட்டங்களில் நடப்பதைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்.

● கூட்டம் நடத்துவதற்கு மன்றங்கள் எவ்வாறு கிடைக்கின்றன?

[பக்கம் 14-ன் படங்கள்]

மூப்பர் காவற்கோபுர படிப்பு நடத்துகிறார், ஐக்கிய மாகாணங்கள்

தேவராஜ்ய ஊழியப்பள்ளியிலிருந்து ஒரு காட்சி, ஃபேரோ தீவுகள்

தனிப்பட்டவர் வீட்டில் சிறு தொகுதியாக படித்தல், யாப்

ராஜ்ய மன்றம், நியு ப்ரான்பெல்ஸ், டெக்ஸாஸ், அ.ஐ.மா. யெகோவாவின் சாட்சிகளால் இரண்டு நாட்களில் கட்டப்பட்டது

[பக்கம் 15-ன் படங்கள்]

பல்வேறு நாடுகளில் ராஜ்ய மன்றங்கள்

ஜப்பான்

ஆஸ்திரேலியா

ஆஸ்திரியா

ஸ்பெய்ன்