பயணக் கண்காணிகள்சத்தியத்தில் உடன்வேலையாட்கள்
பயணக் கண்காணிகள்சத்தியத்தில் உடன்வேலையாட்கள்
முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையில், சபைகளைக் கட்டியெழுப்புவதற்காக அவற்றை சந்தித்த பயணக் கண்காணிகள் இருந்தார்கள். சபையிலுள்ளவர்கள் கடவுளுக்குப் பாத்திரமாக தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதற்கு உதவி செய்வதற்காக இவர்கள் தங்களையே அளித்தார்கள். தனிப்பட்ட ஆதாயத்தை நாடவில்லை.—அப்போஸ்தலர் 11:23, 24; 14:21, 22; 15:32; 20:2, 31-35; பிலிப்பியர் 2:20-22, 29; 1 தெசலோனிக்கேயர் 2:5-12.
இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளும் பயணக் கண்காணிகளால் பயனடைகின்றன. இவர்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலையிலும், கண்காணிகளாகவும் அநேக வருட அனுபவத்தை உடையவர்கள். இவர்கள் முழுநேர ஊழியத்தில் தங்களை அளிப்பதற்காக உலகப்பிரகாரமான வேலையை ஏற்காமலும் குடும்பப் பொறுப்பில்லாமலும் தங்களை வைத்துக் கொள்கிறார்கள். விவாகமானவர்களின் விஷயத்தில், பொதுவாக அவர்களுடைய மனைவிகளும் தங்களுடைய கணவன்மாரோடு முழுநேர ஊழியத்தில் பங்கு கொண்டிருக்கிறார்கள்.
ஒரு வட்டார கண்காணிக்குச் சுமார் 18-லிருந்து 25 சபைகள் கொண்ட ஒரு வட்டாரத்தை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு கொடுக்கப்படுகிறது. வட்டாரத்திலுள்ள ஒவ்வொரு சபையையும் அவர் வருடத்துக்கு இருமுறை சந்திக்கிறார். இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்குப் பின்னர் அவர் வேறொரு வட்டாரத்துக்கு நியமிக்கப்படுகிறார். இவ்விதமாக சபைகள், பல்வேறு வட்டார கண்காணிகளின் வித்தியாசமான அனுபவங்கள் மற்றும் திறமைகளிலிருந்து நன்மையடைய முடிகிறது.
வட்டார கண்காணி, சபையின் ஆவிக்குரிய நிலைமையையும் அதன் வேலையையும் ஆராய்ந்து பார்க்கிறார். அவர் சபைக்குப் பல பேச்சுகளைக் கொடுக்கிறார். மூப்பர்களும் உதவி ஊழியர்களும் சபைக்குச் செய்யும் தங்கள் சேவையை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைச் சிந்திக்க அவர்களையும் இவர் சந்திக்கிறார்.
அந்த வாரத்தின்போது, அவரும், விவாகமானவராக இருந்தால் அவருடைய மனைவியும் உள்ளூரிலுள்ள சாட்சிகளோடு சென்று வீட்டுக்கு வீடு ஊழியத்தில் அவர்கள் முன்னேறுவதற்கு அவர்களுக்கு உதவி செய்கிறார்கள். விசுவாசத்தில் உற்சாகப்படுத்துவதற்காகப் புதிதாய் அக்கறைக் காட்டும் ஆட்களையும், அவரும் அவருடைய மனைவியும் சந்திப்பார்கள். அவ்விதமாக உங்களை வந்து சந்திக்கும்படியாகவும் நீங்கள் கேட்கலாம்.
மாவட்ட கண்காணிக்கும் அது போன்ற ஆவிக்குரிய தகுதிகளும் அனுபவமும் உண்டு. அவர் வட்டாரத்துக்கு வட்டாரம் பிரயாணம் செய்து, வட்டார மாநாடுகளின் சம்பந்தமாக ஒவ்வொரு வாரமும் சேவை செய்கிறார். அவரும் அவருடைய மனைவியும்கூட அவர்கள் சந்திக்கும் வட்டாரத்திலுள்ள
சபைகள் ஒன்றில் சாட்சிகளோடு வெளி ஊழியம் செய்கிறார்கள். வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரலின் இறுதியான தயாரிப்புகளை மேற்பார்வை செய்து, பொதுப்பேச்சு உட்பட, பல பேச்சுக்களை அவர் மாநாட்டில் கொடுக்கிறார்.பயணக் கண்காணிகள் ஒரு சபையை அல்லது ஒரு வட்டாரத்தைச் சந்தித்து முடித்தப் பின்பு தொடர்ந்து மற்றொன்றுக்குச் செல்கிறார்கள். எல்லா சபைகளையும் அல்லது வட்டாரங்களையும் ஆறு மாதத்தில் சந்தித்து முடிக்கும் வரையாக, இதே அட்டவணையை அவர்கள் பின்பற்றுகிறார்கள். பின்பு மறுபடியுமாக அவர்கள் ஆரம்பிக்கிறார்கள்.
அநேக தேசங்களில் பயணக் கண்காணிகள் மோட்டார் வண்டியில் பிரயாணம் செய்கிறார்கள் அல்லது பொது போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார்கள். மற்ற தேசங்களில் அவர்கள் சைக்கிளைப் பயன்படுத்தலாம் அல்லது நடந்தும் செல்லலாம். பயணக் கண்காணிக்குப் போக்கு வரத்து செலவைச் சங்கம் ஏற்றுக்கொள்கிறது. மேலும் அவர்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்காக அவருக்கும் அவருடைய மனைவிக்கும் ஒரு மிதமான செலவீட்டுத் தொகையையும் தருகிறது. பொதுவாகப் பயணக் கண்காணிக்கும் அவருடைய மனைவிக்கும் அந்தந்தச் சபையின் அங்கத்தினர்கள் அறை வசதிக்கும் உணவுக்கும் ஏற்பாடு செய்கிறார்கள்.
இந்த ஊழியத்துக்குச் சுய-தியாக ஆவி வேண்டியதாயிருக்கிறது. பயணக் கண்காணிகளும் அவர்களுடைய மனைவிகளும் சபைக்கு அதிக பாரமாக இல்லாமல், அவர்களுக்குத் தங்களுடைய சேவையைச் செய்ய தீர்மானமாக இருக்கிறார்கள்.—1 தெசலோனிக்கேயர் 2:9.
● முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையில், பயணக் கண்காணிகளின் நோக்கம் என்னவாக இருந்தது?
● பயணக் கண்காணிகள் இன்று எவ்வாறு இந்த ஊழியத்துக்குத் தகுதிபெற்று உபயோகிக்கப்படத்தக்கவர்களாகிறார்கள்?
● வட்டார மற்றும் மாவட்டக் கண்காணிகளின் சேவையையும் அவர்கள் வாழ்க்கையையும் விவரியுங்கள்.
[பக்கம் 20-ன் படம்]
மாவட்டக் கண்காணி வட்டார மாநாட்டில் பேசுகிறார்
[பக்கம் 21-ன் படங்கள்]
வட்டாரக் கண்காணிகள் வீட்டுக்கு வீடு பிரசங்கிப்பில் அறிவுரைகளை வழங்குகிறார்கள், சபை மூப்பர்களிடம் பேசுகிறார்கள், புதிதாக அக்கறை காண்பிக்கும் ஆட்களோடு நடத்தப்படும் பைபிள் படிப்புகளைச் சந்திக்கிறார்கள், சபைகளில் பேச்சுக் கொடுக்கிறார்கள்