Skip to content

யெகோவாவின் சாட்சிகள் நம்புவதென்ன?

யெகோவாவின் சாட்சிகள் நம்புவதென்ன?

யெகோவாவின் சாட்சிகள் நம்புவதென்ன?

“உன்னுடைய கருத்துக்கள் என்னவென்பதை உன்னிடமிருந்தே கேட்பது சரியானது என்று நாங்கள் எண்ணுகிறோம்; ஏனென்றால் உண்மையில் இந்த மதப்பிரிவைக் குறித்து எங்கும் விரோதமாகப் பேசப்படுகிறது என்பதாக அறிந்திருக்கிறோம்.” (அப். 28:22, NW) முதல் நூற்றாண்டு ரோமில் இந்தச் சமய கூட்டுக் குழு தலைவர்கள் சிறந்த முன்மாதிரியை வைத்தார்கள். புறம்பேயிருந்த குற்றங் காண்பவர்களிடம் மாத்திரமே கேட்பதைப் பார்க்கிலும், மூல காரணரிடமிருந்தே கேட்டறிய விரும்பினார்கள்.

இவ்வாறே, இன்றும் யெகோவாவின் சாட்சிகளுக்கு விரோதமாய் அடிக்கடி பேசப்படுகிறது, அவர்களைப் பற்றிய உண்மையை, தப்பெண்ணம் கொண்டுள்ள செய்திமூலங்களிடமிருந்து கேட்டறிவது பிழையாகும். ஆகவே எங்களுடைய முக்கிய நம்பிக்கைகளில் சிலவற்றை உங்களுக்கு விளக்க நாங்கள் பிரியப்படுகிறோம்.

பைபிளும், இயேசு கிறிஸ்துவும், கடவுளும்

“வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; . . . பிரயோஜனமுள்ளவை” என்று நாங்கள் நம்புகிறோம். (2 தீமோத்தேயு 3:16) நாங்கள் உண்மையில் கிறிஸ்தவர்களல்ல என சிலர் விவாதிக்கிறபோதிலும், இது சற்றும் உண்மையல்ல. இயேசு கிறிஸ்துவைப் பற்றிய அப்போஸ்தலன் பேதுருவின் பின்வரும் சாட்சியத்தை நாங்கள் முற்றிலும் ஆதரிக்கிறோம்: “நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை.”

ஆயினும், தாம் “தேவனுடைய குமாரன்” எனவும் “பிதா என்னை அனுப்பினார்” எனவும் இயேசு சொன்னதால், இயேசுவைப் பார்க்கிலும் கடவுள் பெரியவர் என்று யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள். (யோவான் 10:36; 6:57) “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்” என்று இயேசுதாமேயும் ஒப்புக்கொண்டார். (யோவான் 14:28; 8:28) இதனால், திரித்துவ கோட்பாடு சொல்லுகிறபடி, பிதாவுக்கு இயேசு சமமாயிருக்கிறாரென நாங்கள் நம்புகிறதில்லை. மாறாக, கடவுள் அவரைச் சிருஷ்டித்தார் எனவும் அவர் கடவுளுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார் எனவும் நாங்கள் நம்புகிறோம்.—கொலோசெயர் 1:15; 1 கொரிந்தியர் 11:3.

தமிழில் கடவுளுடைய பெயர் யெகோவா. ‘யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர்’ என்று பைபிளில் சொல்லியிருக்கிறது. (சங்கீதம் 83:17) இதற்கு இசைவாக, கடவுளுடைய பெயருக்கு இயேசு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்; “பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக” என்று ஜெபிக்கும்படி தம்மைப் பின்பற்றினவர்களுக்குக் கற்பித்தார். மேலும், “நீர் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன்” என்று அவர்தாமே கடவுளிடம் ஜெபித்தார்.—மத்தேயு 6:9; யோவான் 17:6.

கடவுளுடைய பெயரையும் நோக்கங்களையும் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதில் இயேசுவைப்போல் தாங்கள் இருக்க வேண்டுமென்று யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள். ஆகவே நாங்கள் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை ஏற்றிருக்கிறோம், ஏனெனில், “உண்மையுள்ள சாட்சி”யான இயேசுவை நாங்கள் பின்பற்றுகிறோம். (வெளிப்படுத்துதல் 1:5; 3:14) பொருத்தமாகவே, கடவுளைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஜனங்களுக்கு, ஏசாயா 43:10-ல் (திருத்திய மொழிபெயர்ப்பு) “நீங்களே என் சாட்சிகள், நீங்கள் நான் தெரிந்தெடுத்த என் தாசன், இது யெகோவாவின் திருவாக்கு” என்று சொல்லியிருக்கிறது.

கடவுளுடைய ராஜ்யம்

“உம்முடைய ராஜ்யம் வருவதாக” என்று ஜெபிக்கும்படி இயேசு கற்பித்தார். மேலும் அந்த ராஜ்யத்தையே தம்முடைய போதகத்தின் மையப்பொருளாக கொண்டு பேசினார். (மத்தேயு 6:10; லூக்கா 4:43) இந்த ராஜ்யம் பரலோகத்திலிருந்து பூமியின்மேல் ஆளும் மெய்யான அரசாங்கம் என்றும், இயேசு கிறிஸ்து அதன் நியமிக்கப்பட்ட காணக்கூடாத அரசர் என்றும் யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள். “ராஜாதிகாரம் அவர் தோளின்மேலிருக்கும்; . . . அவருடைய ராஜாதிகாரப் பெருக்குக்கும் சமாதானத்துக்கும் முடிவில்லை” என்று பைபிளில் சொல்லியிருக்கிறது.—ஏசாயா 9:6, 7. தி.மொ.

ஆயினும், இயேசு கிறிஸ்து மாத்திரமே கடவுளுடைய அரசாங்கத்தின் ஒரே அரசராக இரார். பரலோகத்தில் தம்முடன் சேர்ந்து ஆளும் அரசர்கள் பலர் அவருக்கு இருப்பர். “அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (2 தீமோத்தேயு 2:12) பரலோகத்தில் கிறிஸ்துவுடன் ஆளும்படி உயிர்த்தெழுப்பப்படும் அந்த மனிதர்கள், “பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர்” என்று வரையறுக்கப்பட்டிருப்பதை பைபிள் குறிப்பிடுகிறது.—வெளிப்படுத்துதல் 14:1, 3.

நிச்சயமாகவே எந்த அரசாங்கத்துக்கும் குடிமக்கள் இருக்க வேண்டும். இந்தப் பரலோக அரசர்களைத் தவிர, கோடிக்கணக்கான மக்கள் நித்திய ஜீவனைப் பெறுவார்களென யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள். அழகிய பரதீஸாக மாற்றப்பட்ட இந்தப் பூமி, முடிவில், கடவுளுடைய ராஜ்யத்தின் தகுதிவாய்ந்த இந்தக் குடிமக்களால் நிரப்பப்பட்டிருக்கும், இவர்களெல்லாரும் கிறிஸ்துவும் அவருடைய துணை அரசர்களும் செலுத்தும் ஆட்சிக்குக் கீழ்ப்படிந்திருப்பார்கள். இவ்வாறு இந்தப் பூமி ஒருபோதும் அழிக்கப்படாதென்றும், “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்” என்று பைபிளில் கொடுத்துள்ள வாக்கு நிறைவேற்றமடையும் என்றும் யெகோவாவின் சாட்சிகள் உறுதியாய் நம்புகிறார்கள்.—சங்கீதம் 37:29; 104:5.

ஆனால் கடவுளுடைய ராஜ்யம் எப்படி வரும்? எல்லா ஜனத்தாரும் தாங்களே மனமுவந்து கடவுளுடைய அரசாங்கத்தினிடம் சரணடைவதன் மூலமா? மாறாக, கடவுளுடைய ராஜ்யம் வருவது, பூமியின் விவகாரங்களில் கடவுள் நேரடியாய்த் தலையிடுவதைத் தேவைப்படுத்துமென பைபிள் காட்டுகிறது. ‘பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் . . . அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.’—தானியேல் 2:44.

கடவுளுடைய ராஜ்யம் எப்பொழுது வரும்? இப்பொழுது நிறைவேறும் பைபிள் தீர்க்கதரிசனங்களை ஆதாரமாகக் கொண்டு கவனிக்கையில், அது வெகு சீக்கிரத்தில் வருமென்று யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள். இந்தப் பொல்லாத காரிய ஒழுங்குமுறையின் “கடைசி நாட்களை” வேறுபடுத்திக் காட்டும் அம்சங்களை முன்னறிவிக்கும் சில தீர்க்கதரிசனங்களைக் கவனிக்கும்படி நாங்கள் உங்களை அழைக்கிறோம். அவை மத்தேயு 24:3-14; லூக்கா 21:7-13; 2 தீமோத்தேயு 3:1-5-ல் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

‘எங்கள் கடவுளாகிய யெகோவாவை எங்கள் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும், பலத்தோடும் நாங்கள் நேசிப்பதாலும், எங்களைப்போல் எங்கள் அயலானை நேசிப்பதாலும்,’ தேசீயம், குலம், சமுதாயம் என்ற வேறுபாட்டினால் பிரிக்கப்படாதிருக்கிறோம். (மாற்கு 12:30, 31) எல்லா நாடுகளிலும் வாழும் எங்கள் கிறிஸ்தவ சகோதரர்கள் காட்டும் அன்பினிமித்தம் நாங்கள் பரவலாக அறியப்பட்டிருக்கிறோம். (யோவான் 13:35; 1 யோவான் 3:10-12) இவ்வாறு அந்த நாடுகளின் அரசியல் விவகாரங்களைப் பொறுத்ததில் நாங்கள் நடுநிலை வகிப்பைக் காத்துவருகிறோம். இயேசுவின் முதல் சீஷர்களைப் போலிருக்க நாங்கள் முயற்சி செய்கிறோம், அவர்களைக் குறித்து இயேசு இவ்வாறு சொன்னார்: ‘நான் உலகத்தின் பாகமல்ல அதுபோல் அவர்களும் உலகத்தின் பாகமல்ல.’ (யோவான் 17:16) உலகத்துக்கு விலகியிருப்பது, பொய் சொல்லுதல், திருடுதல், வேசித்தனம், விபசாரம், ஓரினப் புணர்ச்சி, இரத்தத்தைத் தவறாகப் பிரயோகித்தல், விக்கிரகாராதனை, மற்றும் பைபிளில் கண்டனம் செய்யப்பட்டுள்ள இத்தகைய மற்ற காரியங்கள் உட்பட, கேடான நடத்தையைத் தவிர்ப்பதைக் குறிக்கிறதென நாங்கள் நம்புகிறோம்.—1 கொரிந்தியர் 6:9-11; எபேசியர் 5:3-5; அப்போஸ்தலர் 15:28, 29.

எதிர்கால நம்பிக்கை

இவ்வுலகத்தில் வாழும் தற்போதைய வாழ்க்கையே எல்லாமல்ல என யெகோவாவின் சாட்சிகள் நம்புகிறார்கள். மனிதர் கடவுளுடன் நீதியுள்ள நிலைநிற்கையைக் கொண்டிருந்து புதிய காரிய ஒழுங்குமுறையில் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படி, கிறிஸ்து மீட்பின் கிரயமாக தம்முடைய உயிர் இரத்தத்தை ஊற்றும்படி யெகோவா அவரைப் பூமிக்கு அனுப்பினாரென நாங்கள் நம்புகிறோம். இயேசுவின் ஓர் அப்போஸ்தலன் சொன்னபடி: “நாம் அவர் இரத்தத்தினாலே இப்பொழுது நீதிமான்களாகத் தீர்க்கப்பட்டிருக்”கிறோம். (ரோமர் 5:9, தி.மொ.; மத்தேயு 20:28) எதிர்கால வாழ்க்கையைச் சாத்தியமாக்குகிற இந்த மீட்பின் கிரய ஏற்பாட்டுக்காக கடவுளுக்கும் அவருடைய குமாரனுக்கும் யெகோவாவின் சாட்சிகள் உள்ளப்பூர்வமான நன்றியை தெரிவிக்கிறார்கள்.

கடவுளுடைய ராஜ்யத்தின்கீழ் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்படுவதன்பேரில் ஆதாரங்கொண்ட, எதிர்கால வாழ்க்கையில் யெகோவாவின் சாட்சிகளுக்கு முழுமையான நம்பிக்கை உண்டு. பைபிள் கற்பிக்கிற பிரகாரம், ஓர் ஆள் சாகையில் அவன் உயிர்வாழ்வது உண்மையில் நின்றுபோகிறது, “அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்” என்று நம்புகிறோம். (சங்கீதம் 146:3, 4; எசேக்கியேல் 18:4; பிரசங்கி 9:5) ஆம், மரித்தோருக்கு எதிர்கால வாழ்க்கை, உயிர்த்தெழுப்புவதில் கடவுள் அவர்களை நினைவுகூருவதன்பேரில் சார்ந்திருக்கிறது.—யோவான் 5:28, 29.

எனினும், கடவுளுடைய ராஜ்யம் தற்போதைய எல்லா அரசாங்கங்களுக்கும் முடிவைக் கொண்டுவருகையில் இப்பொழுது வாழும் பலர் தப்பிப்பிழைப்பார்கள் என்றும், நோவாவும் அவருடைய குடும்பமும் ஜலப்பிரளயத்தைத் தப்பிப்பிழைத்ததைப் போல், சுத்திகரிக்கப்பட்ட பூமியில் என்றென்றும் வாழ்வார்கள் என்றும் யெகோவாவின் சாட்சிகள் உறுதியாய் நம்புகிறார்கள். (மத்தேயு 24:36-39; 2 பேதுரு 3:5-7, 13) ஆனால் தப்பிப் பிழைப்பது, யெகோவாவின் கட்டளைகளைப் பின்பற்றுவதன் பேரில் சார்ந்திருக்கிறதென்று நாங்கள் நம்புகிறோம், பைபிளில் சொல்லியிருக்கிற பிரகாரம்: ‘உலகம் . . . ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.’—1 யோவான் 2:17; சங்கீதம் 37:11; வெளிப்படுத்துதல் 7:9, 13-15; 21:1-5.

தெளிவாகவே, யெகோவாவின் சாட்சிகளின் எல்லா நம்பிக்கைகளையும் இதற்குள் அடக்குவது சாத்தியமல்ல, ஆனால் மேலுமான தகவல்களைப் பெற்றுக்கொள்ள நாங்கள் உங்களை அழைக்கிறோம்.

மொழிபெயர்ப்பு இன்னதென்று குறிக்கப்படாத மேற்கோள்கள் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. NW என்பது ஆங்கில மொழி பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு​—⁠துணைக்குறிப்புகளுடன்.

[பக்கம் 1-ன் படக்குறிப்பு]

நாங்கள் இயேசுவின் மாதிரியைப் பின்பற்றுவதால் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை ஏற்றிருக்கிறோம்.