யெகோவாவின் சாட்சிகள் யார்?
யெகோவாவின் சாட்சிகள் யார்?
யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? கிறிஸ்தவ மதத்தைப் பரப்புகிறவர்கள், ஒரு புதிய கிறிஸ்தவ குழு, யூத மதத்தால் செல்வாக்கு செலுத்தப்படும் ஒரு கிறிஸ்தவ மதப்பிரிவு, மருத்துவ சிகிச்சையை மறுக்கும் மதவெறியர் என்றெல்லாம் சிலர் முத்திரை குத்துகின்றனர். ஆனால் உண்மையில் சாட்சிகள் இப்படிப்பட்டவர்களே அல்ல. அப்படியென்றால், ஏன் இவர்களைப் பற்றி சிலர் இப்படி சொல்கின்றனர்? இவர்களுக்கு தவறான தகவல் கிடைத்திருப்பதே முக்கிய காரணம்.
யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் தெரிவிக்கிறபடி, அவர்கள் யெகோவாவுக்காக சாட்சி கொடுப்பவர்கள். யெகோவா யார்? யெகோவா என்பது சர்வவல்ல கடவுளின் பெயர்; இதை அவரே பைபிளில் வெளிப்படுத்தியிருக்கிறார். a இது தனிப்பட்ட பெயர், தேவன் அல்லது கர்த்தர் போன்ற பட்டப்பெயர் அல்ல. பொதுவாக சொல்லப்போனால், கடவுளுடைய மகிமைக்காக தொன்றுதொட்டே சாட்சிகளாக இருக்கிறவர்களை யெகோவாவின் சாட்சிகள் என அழைக்கலாம்.—யாத்திராகமம் 3:13, 15; ஏசாயா 43:10.
ஆபேல் முதல் பூர்வகால உண்மையுள்ள மனிதர்களுடைய நீண்ட பட்டியலை பைபிள் தருகிறது; இவர்களை ‘மேகம் போன்ற திரளான சாட்சிகள்’ என அழைக்கிறது. (எபிரெயர் 11:4; 12:1) நோவா, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு, மோசே, தாவீது போன்ற குறிப்பிடத்தக்க நபர்கள் கடவுளுடைய சாட்சிகளாக—யெகோவாவின் சாட்சிகளாக—பட்டியலிடப்பட்டுள்ளார்கள். இயேசு கிறிஸ்து, “உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சி” என அழைக்கப்படுகிறார்.—வெளிப்படுத்துதல் 3:14.
ஏன் சாட்சிகள் தேவை
மனிதன் பரிபூரணமாக படைக்கப்பட்டு பூங்காவனத்தைப் போன்ற பரதீஸில் குடி வைக்கப்பட்டான் என பைபிள் சொல்கிறது. என்றென்றும் வாழும் திறமையுடனும் பிள்ளைகளைப் பிறப்பிக்கும் திறமையுடனும் தன்னுடைய பரதீஸிய வீட்டின் எல்லைகளை உலக முழுவதும் விஸ்தரிக்கும் திறமையுடனும் படைப்பாளர் அவனை படைத்தார். அந்தச் சமயத்தில் கடவுளை மனிதன் அறிந்திருந்தான், ஆகையால் சாட்சிகளுக்கான அவசியம் இல்லை.—ஆதியாகமம் 1:27, 28.
தெரிவுசெய்யும் சுயாதீனத்தை மனிதனுக்கு கடவுள் கொடுத்திருந்தார், ஆனால் நம்முடைய முதல் பெற்றோர் தவறான தீர்மானமெடுத்தார்கள். அவருடைய உதவியின்றி தன்னிச்சையாக செயல்படுவதற்கு தெரிவு செய்தார்கள். ஆகவே, கடவுள் பரிபூரணராகவும் நியாயமானவராகவும் தூயவராகவும் இருக்கிறபோதிலும், பூமியிலுள்ள மனிதவர்க்கத்தினர் பாவிகளாகவும் அநீதியுள்ளவர்களாகவும் ஆனார்கள். ஆனால், பாவமும் துன்மார்க்கமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே தொடர்ந்திருக்க நம்முடைய பரிசுத்த கடவுள் அனுமதிப்பார். கடவுளால் அனுமதிக்கப்பட்ட அந்தக் காலப்பகுதி முடிவடையும் தறுவாயில் நாம் வாழ்கிறோம் என்பதை பைபிள் சுட்டிக்காட்டுகிறது. மனிதவர்க்கம் இந்தக் காரியங்களை அறிந்துகொள்வதற்காக அவர் தம்முடைய வார்த்தையை—தோரா, சங்கீதங்கள், சுவிசேஷகங்கள் ஆகியவற்றை—நம்முடைய நாள் வரையாக பாதுகாத்து வைத்திருக்கிறார்.
பெரும்பாலானோர் கடவுளை அறியாததால், தம்மை பற்றி சாட்சி கொடுக்கும்படி உண்மையுள்ள மனிதர்களுக்கு கடவுள் கட்டளையிட்டிருக்கிறார். இப்படிப்பட்ட உண்மையுள்ள ஆட்களிடம் அவர் சொல்கிறார்: ‘நீங்களே என் சாட்சிகளாயிருக்கிறீர்கள்.’ (ஏசாயா 43:10) அவர்கள் செய்யும் வேலையைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்: ‘ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்.’—மத்தேயு 24:14.
எல்லா இனத்தவரும் மொழியினரும் தேசத்தவரும், முன்னொருபோதும் இல்லாத அளவில் நேர்மையுடன் கடவுளுடைய வார்த்தையை ஆராய்ந்து பார்க்கிறார்கள். பெரும்பாலான மதப் பழக்கவழக்கங்கள் புறமதத்திலிருந்து வந்தவை, கடவுளுக்கு வெறுப்பூட்டுபவை என்பதை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
நீங்கள் அறிந்திருக்கிறபடி, மதத்தை சிலர் வியாபார நோக்கங்களுக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள். மற்றவர்கள் தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காகவோ, ஏழைகளுக்கு உதவும் போர்வையில் செல்வந்தராவதற்காகவோ அதை பயன்படுத்தியிருக்கிறார்கள். கடவுளைப் பற்றி உண்மையான சாட்சி கொடுக்கும்போது, மத ஆதாயம் தேடும் இப்படிப்பட்ட ஆட்கள் எப்படி பிரதிபலிக்கிறார்கள்? தெளிவாகவே, அச்சுறுத்தப்படுவதாக நினைக்கிறார்கள்.
யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி கெட்ட நோக்கத்துடன் பேசுவதை நீங்கள் கேள்விப்படுவதற்கு இது ஒரு காரணம்.எந்தச் சூழ்நிலையிலும், பைபிளை யெகோவாவின் சாட்சிகள் மிக நெருங்கிய விதத்தில் பின்பற்றுகிறார்கள். அவர்கள் ஏதோ ஒரு புதிய மதத்தைக் கண்டுபிடிக்கவில்லை. மெய் மதத்திற்கு அடித்தளமாக இருக்கும் தோரா, சங்கீதங்கள், சுவிசேஷகங்களில் எழுதப்பட்டுள்ளதைத்தான் பின்பற்றுகிறார்கள்; அப்படியானால், அவர்கள் நம்புவதென்ன? அவர்களுடைய போதனைகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வாசித்து, சத்தியத்தின் தொனி கேட்கிறதா இல்லையா என பாருங்கள்.
திரித்துவம் இல்லை
திரித்துவ கோட்பாட்டை பைபிள் போதிப்பதில்லை. மாறாக, உண்மையுள்ள, நித்தியமான கடவுள் ஒருவரே இருக்கிறார் என அது சொல்கிறது. “நம் கடவுளாகிய யெகோவா ஒரே யெகோவா.” (உபாகமம் 6:4, NW) அவர் படைப்பாளர்—நித்தியமானவர், சர்வவல்லவர், ஈடிணையற்றவர். இயேசு சர்வவல்லமையுள்ள கடவுள் அல்ல. இயேசு பூமியில் பரிபூரணராக வாழ்ந்து, அபூரண மனிதவர்க்கத்திற்காக மரித்தார். இயேசுவின் உயிரை கிரயபலியாக கடவுள் அன்புடன் ஏற்றுக்கொண்டார். இவ்வாறு இயேசுவின் மூலம் உண்மையுள்ளவர்கள் இரட்சிப்பை பெறுகிறார்கள். இதுவே கடவுளுடைய சித்தம்.—லூக்கா 22:42; ரோமர் 5:12.
அழியாத ஆத்துமா இல்லை
மனிதர்கள் மரிக்கும்போது அவர்களுக்கு என்ன நேரிடுகிறது? கடவுளுடைய வார்த்தை இவ்வாறு சொல்கிறது: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்.” (பிரசங்கி 9:5) மனிதனுக்கு அழியாத ஆத்துமா என்ற ஒன்றில்லை. மரித்தவர்களிடம் பேசுவதாக நினைக்கும் மக்கள் உண்மையில் பேய்களுடன்தான் பேசுகிறார்கள். அதைப்போலவே, மரித்தவர்களுக்காக ஜெபிக்கையில் மரித்தவர்கள் எந்த நன்மையும் பெறுவதில்லை, இதைச் செய்கிற பாதிரியாரே ‘பாக்கெட்டை’ நிரப்பிக்கொள்கிறார்.
உயிர்த்தெழுதல்
உயிர்த்தெழுதலே மனிதனுக்கு கொடுக்கப்பட்ட நம்பிக்கை. அதாவது புதுப்பிக்கப்பட்ட பரதீஸிய பூமியில் இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு வருவார்கள். கடவுளை சேவித்திருப்போர் தங்களுடைய உண்மைத்தன்மைக்காக ஆசீர்வதிக்கப்படுவார்கள். கடவுளை அறியாமல் மரித்தவர்கள் அப்பொழுது அந்த வாய்ப்பை அனுபவிப்பர். இவ்வாறாக, “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்[பார்கள்].” (அப்போஸ்தலர் 24:15) தகுதியற்றவர்கள் என யாரை கடவுள் நியாயந்தீர்க்கிறாரோ அவர்கள் மட்டுமே உயிர்த்தெழுப்பப்பட மாட்டார்கள்.
எரிநரகம் இல்லை
மரித்தோர் என்றென்றும் வதைக்கப்படும் ஓர் இடத்தை அன்பான கடவுள் படைக்க மாட்டார். மனிதர்களை எரிப்பதையும் வதைப்பதையும் பற்றி கடவுள்தாமே இவ்வாறு சொன்னார்: “அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை.”—எரேமியா 7:31.
விதி இல்லை
‘தலையெழுத்து’ என்ற எதையும் கடவுள் எழுதி வைக்கவில்லை. நாம் பிறப்பதற்கு முன்பே நம்முடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் எந்த விதியும் கிடையாது. நாம் என்ன செய்கிறோமோ என்ன தீர்மானம் எடுக்கிறோமா அதற்கு நாமே பொறுப்பு. “நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்.”—ரோமர் 14:12.
பாதிரி வகுப்பார் இல்லை
கடவுளுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ஒவ்வொருவரும் அவருடைய பார்வையில் சமமானவர்களே. மெய் வணக்கத்தார் அனைவரும் சகோதர சகோதரிகளே. பாதிரி வகுப்பார் என யாரையும் ஓர் உயர்ந்த ஸ்தானத்தில் கடவுள் நியமிக்கவில்லை. இயேசு சொன்னார்: “தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.” (லூக்கா 18:14) மதத்தின் பெயரில் தங்களை மற்றவர்களுக்கு மேலானவர்களாக உயர்த்திக்கொள்கிறவர்களை கடவுள் நியாயந்தீர்ப்பார்.—மத்தேயு 23:4-12.
சிலை வழிபாடு இல்லை
“தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்.” (யோவான் 4:24) மெய் வணக்கத்தார் சிலைகளை பயன்படுத்துவதில்லை.
அரசியலில் நடுநிலைமை
தம்முடைய சீஷர்கள் ‘இந்த உலகத்தின் பாகமானவர்கள் அல்ல’ என இயேசு சொன்னார். (யோவான் 17:16, NW) ஆகவே, தேசிய அல்லது உள்ளூர் அரசியல் விவகாரங்களில் யெகோவாவின் சாட்சிகள் தலையிடுவதில்லை. மேலும், சட்டத்திற்கு கீழ்ப்படிந்து நடப்பவர்கள்.—ரோமர் 13:1, 5-7.
உயர்ந்த ஒழுக்க தராதரங்கள்
“நான் உங்களில் அன்பாயிருக்கிறது போல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது” என்று இயேசு சொன்னபோது மெய் வணக்கத்தாரை அடையாளம் கண்டுகொள்வது எப்படி என்பதை விவரித்தார். (யோவான் 15:12, 13) பைபிளில் மற்றொரு அதிகாரம் இவ்வாறு சொல்கிறது: “ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்.” (கலாத்தியர் 5:22, 23) இப்படிப்பட்ட குணங்களை காண்பிப்பவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள், திருட மாட்டார்கள், சூதாட மாட்டார்கள், போதைப் பொருட்களை உபயோகிக்க மாட்டார்கள், பாலின ஒழுக்கக்கேட்டில் ஈடுபட மாட்டார்கள். (எபேசியர் 4:25-28) அவர்கள் கடவுளை நேசிப்பதால், அவர் வெறுக்கிற காரியங்களை தவிர்க்கிறார்கள். இந்த நியமங்களே யெகோவாவின் சாட்சிகளுடைய வாழ்க்கையை கட்டுப்படுத்துகின்றன.
இந்த உலகிற்கு நெருங்கிவரும் முடிவு
மற்ற காலங்களைவிட நம்முடைய காலம் எவ்விதத்தில் வித்தியாசமானது? இந்தக் காரிய ஒழுங்குமுறையின், அதாவது இந்த உலகத்தின் முடிவில் வாழ்ந்துவருகிறோம் என்பதை தீர்க்கதரிசன நிறைவேற்றம் காட்டுகிறது. (தானியேல் 2:44) இன்று, நாம் செய்கிற காரியங்கள் கடவுளை பிரியப்படுத்துகின்றனவா? என்பதே நாம் எதிர்ப்படும் கேள்வி. கடவுள் ஒருவரே, ஆகவே ஒரேவொரு மெய் மதமே இருக்க முடியும். இது தோரா, சங்கீதங்கள், சுவிசேஷகங்களுக்கு முரணாக இருக்க முடியாது. ஆகவே, நாம் இவற்றை ஆராய வேண்டும்.
அதைத்தான் யெகோவாவின் சாட்சிகள் செய்கின்றனர். உங்களுடைய மதம் எதுவாக இருந்தாலும்சரி, அவர்களைப் போலவே நீங்களும் ஆராய்ந்துபார்க்க வேண்டும். இதன் சம்பந்தமாக வேறு எவரும் உங்களுக்காக தீர்மானம் எடுக்க முடியாது. “நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்” என்பதை நினைவில் வையுங்கள்.—ரோமர் 14:12.
எவருமே யெகோவாவின் சாட்சியாக பிறப்பதில்லை. ஒவ்வொரு சாட்சியும் தனிப்பட்ட தீர்மானம் எடுக்கிறார். கடவுளுடைய வார்த்தையை நேர்மையுடன் ஆராயும் ஒருவர் சத்தியத்தை அடையாளம் கண்டுகொள்கிறார், அதன் அடிப்படையில் மெய் தேவனாகிய யெகோவாவுக்கு தன்னை ஒப்புக்கொடுக்கிறார். இப்படிப்பட்ட ஆராய்ச்சியை செய்ய நீங்கள் விரும்பினால், தயவுசெய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசங்களில் ஒன்றிற்கு எழுதுங்கள்.
மொழிபெயர்ப்பு இன்னதென்று குறிப்பிடப்பட்டிராத வேதவசன மேற்கோள்கள் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. NW என்பது நவீன ஆங்கில மொழி பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன்.
[அடிக்குறிப்புகள்]
a தோரா, சங்கீதங்கள், சுவிசேஷகங்கள் (தவ்ராத், ஜபூர், இன்ஜீல்கள்) என இஸ்லாமிய உலகில் அறியப்பட்டுள்ள புத்தகங்கள் பைபிளில் உள்ளன. குர்ஆனில் குறைந்தபட்சம் 64 வசனங்களாவது இந்தப் புத்தகங்களை கடவுளுடைய வார்த்தை என அழைக்கின்றன; அவற்றை வாசித்து, அவற்றின் கட்டளைகளின்படி நடப்பதன் அவசியத்தையும் வலியுறுத்திக் கூறுகின்றன. தோரா, சங்கீதங்கள், சுவிசேஷகங்கள் ஆகியவை மாற்றப்பட்டுள்ளன என சிலர் அடித்துக் கூறுகின்றனர். ஆனால், இப்படி சொல்வது குர்ஆனிலுள்ள வார்த்தைகளை அசட்டை செய்வதற்கும், கடவுளால் அவருடைய வார்த்தையை பாதுகாக்க முடியவில்லை என்று சொல்வதற்கும் சமமாகும்.