பாடம் 13
யாரைப் பயனியர் என்று சொல்கிறோம்?
ஒரு வேலையை செய்வதில் எல்லாருக்கும் முன்னோடியாக இருக்கிற ஒருவரை “பயனியர்” என்று சொல்கிறோம். இயேசுவை ஒரு பயனியர் என்று சொல்லலாம். ஏனென்றால், பிரசங்க வேலையை செய்வதில் அவர் முன்னோடியாக இருந்தார். கடவுளைப் பற்றி மக்களுக்கு சொல்லவும் அவர்களுடைய உயிரைக் காப்பாற்றவும் இயேசு இந்தப் பூமிக்கு வந்தார். (மத்தேயு 20:28) அவரைப் போலவே நாங்களும் ‘சீஷராக்கும்’ வேலையில் நிறைய நேரம் செலவு செய்கிறோம். (மத்தேயு 28:19, 20) யெகோவாவின் சாட்சிகளில் சிலர் பயனியர் ஊழியம் செய்கிறார்கள். பயனியர் ஊழியம் என்றால் என்ன?
முழு நேரமாக ஊழியம் செய்கிறவர்கள்தான் பயனியர்கள். யெகோவாவின் சாட்சிகள் எல்லாருமே கடவுளுடைய ஆட்சியைப் பற்றி மற்றவர்களிடம் சொல்கிறார்கள். அவர்களில் சிலர், ஒழுங்கான பயனியர்களாக, அதாவது, ஒவ்வொரு மாதமும் 70 மணி நேரம் ஊழியம் செய்கிறார்கள். இதை செய்வதற்காக நிறையப் பேர் பகுதி நேர வேலை செய்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் 130 மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமாகவோ ஊழியம் செய்கிறவர்களை விசேஷ பயனியர்கள் என்று சொல்கிறோம். ஊழியம் செய்வதற்கு எந்த இடத்தில் நிறையப் பேர் தேவைப்படுகிறார்களோ அங்கே போய் இவர்கள் ஊழியம் செய்கிறார்கள். இருப்பதை வைத்து திருப்தியாக வாழ்கிறார்கள். இவர்களுடைய தேவைகளை யெகோவா பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையோடு ஊழியம் செய்கிறார்கள். (மத்தேயு 6:31-33; 1 தீமோத்தேயு 6:6-8) முழுநேரமாக பயனியர் ஊழியம் செய்ய முடியாதவர்கள் துணை பயனியர் ஊழியம் செய்கிறார்கள். மாதத்திற்கு 30 அல்லது 50 மணிநேரம் ஊழியம் செய்கிறார்கள்.
பயனியர்கள் கடவுள்மீதும் ஜனங்கள்மீதும் இருக்கிற அன்பினால் ஊழியம் செய்கிறார்கள். கடவுளைப் பற்றி ஜனங்கள் தெரிந்துகொள்ள முடியாமல் இருந்ததைப் பார்த்து இயேசு ரொம்ப பரிதாபப்பட்டார். (மாற்கு 6:34) இன்றும் ஜனங்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். பைபிளில் இருக்கும் விஷயங்களை சொன்னால், அவர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும், எதிர்காலத்தைப் பற்றி பயப்படாமல் நம்பிக்கையோடு இருப்பார்கள். பயனியர் ஊழியம் செய்கிறவர்கள் ஜனங்கள்மீது நிறைய அன்பு வைத்திருப்பதால் அவர்களுடைய நேரத்தையும், சக்தியையும் பயன்படுத்தி கடவுளைப் பற்றி சொல்லிக் கொடுக்கிறார்கள். (மத்தேயு 22:39; 1 தெசலோனிக்கேயர் 2:8) இதனால், பயனியர் ஊழியம் செய்கிறவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். கடவுள்மீது அவர்களுக்கு இருக்கிற நம்பிக்கை அதிகமாகிறது, அவரோடு இருக்கிற நட்பும் பலப்படுகிறது.—அப்போஸ்தலர் 20:35.
-
பயனியர் ஊழியம் என்றால் என்ன?
-
ஏன் சிலர் முழுநேரமாக பயனியர் ஊழியம் செய்கிறார்கள்?