Skip to content

யெகோவா—யார்?

யெகோவா—யார்?

யெகோவாயார்?

கம்போடியா. புல்களும் புதர்களும் மண்டிக்கிடந்த காட்டிற்குள் ஆன்ரி மூயோ நுழைகிறார். 19-ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த பிரெஞ்சு நாட்டு ஆய்வுப்பயணி, செடி கொடிகளையெல்லாம் வெட்டி வீழ்த்தி, பாதை அமைத்துக்கொண்டு மெல்ல முன்னேறுகிறார். இதோ! எவ்வளவு பெரிய அகழி! அதன் நடுவே ஒரு கோவில்! உலகிலேயே மிகப் பிரமாண்டமான பழங்கால கோவிலை கண்டுபிடித்துவிட்டார்! இக்கோவிலின் பெயர் அங்கோரா வாட். பாசி படர்ந்து, கம்பீரமாய் காட்சியளித்த அந்தக் கோவிலை பார்த்ததும் இது யாரோ ஒருவருடைய கைவண்ணம் என்பதில் மூயோவுக்கு சந்தேகமே எழவில்லை. “மைக்கேல் ஏஞ்சலோ போன்ற கைத்திறம் படைத்த ஒரு கலைஞன் அந்தக் காலத்திலேயே இப்படிப்பட்ட ஒரு கட்டிடத்தை உருவாக்கிவிட்டான். அக்கால கிரேக்கர்களும் ரோமர்களும் கட்டிய அழகு கொஞ்சும், மாபெரும் கட்டிடங்கள்கூட இதற்கு நிகராகாது” என எழுதினார். பல நூற்றாண்டுகளாக கேட்பாரற்று கிடந்தபோதிலும், கலைநுட்பமிக்க அக்கட்டிடத்தை யாரும் வடிவமைக்கவில்லை என்று சொல்ல முடியாது என்பது இவரது அசைக்கமுடியாத கருத்து.

சுவாரஸ்யமான விஷயம் என்ன தெரியுமா? பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு ஞான நூலும் இவரது கருத்தையே சொல்கிறது: “எந்த வீடும் ஒரு​வனால் உண்டாக்கப்படும்; எல்​லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.” (எபிரெயர் 3:4) அப்படியென்றால், “எல்லாவற்றையும்” படைத்த கடவுள் யார்?

வடிவமைத்தவர் யார்?

இக்கேள்விக்கான விடை நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட பழமையான ஞான நூலில் உள்ளது. பைபிளே அந்த நூல். அதை திறந்ததும், “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” என்ற வார்த்தைகளே நம் கண்ணில் படுகின்றன. (ஆதியாகமம் 1:⁠1) கொஞ்சம்கூட குழப்பமூட்டாமல், பாமரனும் புரிந்துகொள்ளும்படி எழுதப்பட்டுள்ள இந்த வார்த்தைகள் உணர்த்துவது என்னவென்றால்: எல்லா பொருள்களையும் வடிவமைத்தவர் கடவுளே!

எத்தனையோ கடவுட்கள் உண்டு. அப்படி இருந்தும் எல்லாவற்றையும் படைத்தது தாமே என்பதை வேறுபடுத்திக் காட்ட, படைப்பாளர் தம்முடைய தன்னிகரற்ற பெயரை சொல்கிறார்: ‘வானங்களைச் சிருஷ்டித்து அவைகளை விரித்தவரும், பூமியை, அதிலே உண்டானவைகளோடு, பரப்பினவரும், அதிலுள்ள ஜனங்களுக்குச் சுவாசத்தையும் . . . கொடுத்தவருமான யெகோவாவாகிய கடவுள் சொல்லுகிறதைக் கேளுங்கள்: நானே யெகோவா, என் நாமம் [பெயர்] இதுவே.’ (ஏசாயா 42:5, 8, திருத்திய மொழிபெயர்ப்பு) பிரபஞ்சத்தை வடிவமைத்து, பூமியிலே ஆணையும் பெண்ணையும் படைத்த கடவுளின் பெயர் யெகோவா. ஆனால் யெகோவா யார்? அவர் எப்படிப்பட்ட கடவுள்? நீங்கள் ஏன் அவர் சொல்வதைக் கேட்க வேண்டும்?

அவரது பெயரின் முக்கியத்துவம்

முதலாவதாக, யெகோவா என்ற பெயரின் அர்த்தம் என்ன? இந்தத் தெய்வீக பெயர் நான்கு எபிரெய எழுத்துக்களை (יהוה) உடையது. இது பைபிளின் எபிரெய பகுதியில் மட்டும் கிட்டத்தட்ட 7,000 தடவை காணப்படுகிறது. ஹாவா (ha·wahʹ [“ஆகுவது” ]) என்ற எபிரெய வினைச் சொல்லிலிருந்து உருவானதாக கருதப்படுகிறது. ஆகவே யெகோவா என்பதன் அர்த்தம் “ஆகும்படி செய்கிறவர்.” வேறுவிதமாக சொல்லவேண்டுமென்றால், தம்முடைய நோக்கங்களை செயல்படுத்த யெகோவா என்னவாக ஆக வேண்டுமோ, அவ்வாறே ஆகிறார். தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்ற, அவர் படைப்பாளர் ஆகிறார், நீதிபதி ஆகிறார், இரட்சகர் ஆகிறார், உயிர்களை போஷிப்பவர் ஆகிறார், இதுபோல் இன்னும் எத்தனை எத்தனையோ ஸ்தானங்களை ஏற்கிறார். மேலும் இந்த எபிரெய வினைச்சொல், தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் செயலைக் குறிப்பிடுகிறது. அப்படியென்றால், யெகோவா, தாம் வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர் என இன்னமும் தம்மை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். ஆம், அவர் உயிருள்ள கடவுளே!

யெகோவாவின் சிறப்பான குணங்கள்

படைப்பாளரும், வாக்குறுதிகளை நிறைவேற்றுபவருமான இவர், எல்லாருடைய உள்ளங்களையும் கொள்ளைகொள்ளும் குணமுடையவர் என்று பைபிள் விவரிக்கிறது. யெகோவா தாமே தனித்தன்மையுடன் விளங்கும் தம்முடைய சிறப்பான குணங்களை வெளிப்படுத்தி சொன்னதாவது: “யெகோவா, யெகோவா . . . உருக்கமும் இரக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் [“தயவும்,” NW] சத்தியமுமுள்ள கடவுள்; ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்.” (யாத்திராகமம் 34:6, 7, தி.மொ.) யெகோவா, தயவு மிக்கவராக வருணிக்கப்படுகிறார். இங்கு உபயோகிக்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தை “மாறாத அன்பு” எனவும் மொழிபெயர்க்கப்படலாம். தம்முடைய நித்திய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக யெகோவா மாறாமல் தம்முடைய படைப்புகளிடம் தொடர்ந்து அன்பு காட்டி வருகிறார். இப்படிப்பட்ட அன்பில் திளைக்க நீங்கள் விரும்பமாட்டீர்களா?

யெகோவா நீடிய சாந்தம் உள்ளவர். நம்முடைய தவறுகளை உடனடியாக மன்னிக்கிறவர். தொட்டதற்கெல்லாம் குற்றம் கண்டுபிடிக்காமல், அப்படியே தெரியாமல் குற்றம் செய்துவிட்டாலும் உள்ளப்பூர்வமாக மன்னிக்கும் இப்படிப்பட்ட நபரோடு பழகுவது மனதுக்கு இதமளிக்கும். அதற்காக, யெகோவா தவறுகளை கண்டிக்காமல் விட்டுவிடுகிறார் என அர்த்தமாகாது. அவர் சொன்னதாவது: “யெகோவாவாகிய நான் நீதியை விரும்பி, அநியாயக் கொள்ளையை வெறுக்கிறேன்.” (ஏசாயா 61:8, NW) நீதியுள்ள கடவுளாகிய அவர், துணிந்து தவறு செய்துகொண்டே இருப்பவர்களை பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார். எனவே எங்கும் நிறைந்துள்ள அநீதியை ஒழித்துக்கட்டுவதற்காக காலத்தை குறித்திருக்கிறார், அதன்படி கண்டிப்பாக அதை ஒழித்துக்கட்டுவார்.

அன்பு, நீதி என்ற இரு குணங்​களை​யும் துல்லிய​மாக தரா​சில் நிறுத்த வேண்டு​மென்றால் ஞானம் தேவை. யெகோவா, நம்முடைய விஷயத்தில் செயல்படும்போது, ஆச்சரியம் தரும் விதத்தில், இந்த இரண்டு குணங்களும் ஒன்றுக்கொன்று கூடிக்​குறையா​மல் பார்த்துக்​கொள்​கிறார். (ரோமர் 11:33-36) உண்மையில் இந்த ஞானம் எங்கும் எதிலும் வியாபித்​திருப்​பதைக் காண​லாம். இயற்கை​யின் விநோதங்களே இதற்கு அத்தாட்சி!​—சங்கீதம் 104:24; நீதிமொழிகள் 3:⁠19.

ஞானம் இருந்தால் மட்டும் போதாது. தாம் நினைப்பவற்றை எல்லாம் முழுமையாக செய்துமுடிக்க படைப்பாளருக்கு மகா ஆற்றலும் வேண்டும். அவர் மகா ஆற்றல் மிக்கவரே என்று பைபிள் காட்டுகிறது. அது சொல்வதாவது: “உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்[ணுகிறவர்], . . . மகா பெலத்தினா[ல்], [“ஆற்றலினால்,” NW] . . . அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.” (ஏசாயா 40:26) உண்மைதான், யெகோவா தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற, தமது ‘மகா ஆற்றலை’ கொண்டு எதையும் செய்துமுடிப்பதில் வல்லவர். இத்தகைய குணங்கள் யெகோவாவிடம் உங்களை காந்தம்போல் ஈர்க்கவில்லையா?

யெகோவாவை அறிவதால் கிடைக்கும் பலன்கள்

யெகோவா இந்தப் ‘பூமியை வெறுமையாய் இருக்க வேண்டும் என்பதற்காக படைக்கவில்லை.’ ஆனால் அவரோடு நல்லுறவை வளர்த்துக்கொள்ளும் மக்கள் அதில் ‘குடியிருக்க வேண்டும் என்பதற்காகவே உருவாக்கினார்.’ (ஏசாயா 45:18, NW; ஆதியாகமம் 1:28) பூமியிலுள்ள தம்முடைய ஜீவராசிகள்மீது அவர் கண்ணுங்கருத்துமாய் இருக்கிறார். பரதீஸை, அதாவது பூங்காவனத்தையே வீடாக கொடுத்து, மனிதரின் வாழ்க்கையை எந்தவித குறைபாடும் இல்லாமல் துவக்கிவைத்தார். மனிதரோ யெகோவாவின் வெறுப்பை சம்பாதிக்கும் விதத்தில் பூமியை கெடுத்து சின்னாபின்னமாக்கி வருகின்றனர். இருந்தாலும், மனிதர்களும் இந்தப் பூமியும் எப்படி இருக்கவேண்டும் என்று முதலில் நினைத்தாரோ அதை முழுமையாக நிறைவேற்றிக் காட்டுவார். இப்படியாக அவர் தம்முடைய பெயரின் அர்த்தத்தை விளங்கப்பண்ணுவார். (சங்கீதம் 115:16; வெளிப்படுத்துதல் 11:18) அவருக்கு பிள்ளைகளாய் இருந்து, மனப்பூர்வமாய் கீழ்ப்படிகிறவர்களுக்கு இதே பூமியை மறுபடியும் பரதீஸாக மாற்றித்தருவார்.—நீதிமொழிகள் 8:17; மத்தேயு 5:5.

பரதீஸில் எப்படிப்பட்ட வாழ்க்கையை நீங்கள் அனுபவித்து மகிழலாம் என்பதை பைபிளின் கடைசி புத்தகம் விவரிக்கிறது: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” (வெளிப்படுத்துதல் 21:3, 4) திருப்தியளிக்கும் இப்படிப்பட்ட வாழ்க்கையையே நீங்கள் அனுபவித்து மகிழ வேண்டுமென்று யெகோவா ஆசைப்படுகிறார். ஆகா! கருணையே உருவான தந்தை! அவரைப் பற்றி நிறைய அறிந்துகொள்ள விருப்பமா? பரதீஸில் வாழ என்ன செய்யவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமா?

மொழிபெயர்ப்பு இன்னதென்று குறிப்பிடப்பட்டிராத வேதவசன மேற்கோள்கள் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை. NW என்பது நவீன ஆங்கில மொழி பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு—துணைக்குறிப்புகளுடன்.