படிப்பு 14
முக்கியக் குறிப்புகளைத் தெளிவாகக் காட்டுவது
எபிரெயர் 8:1
சுருக்கம்: ஒவ்வொரு முக்கியக் குறிப்பும் உங்கள் பேச்சின் குறிக்கோளோடும் மையப்பொருளோடும் எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுங்கள்; அப்போதுதான், பேச்சை நீங்கள் எப்படிக் கோர்வையாகக் கொண்டுபோகிறீர்கள் என்பதைக் கேட்பவர்களால் புரிந்துகொள்ள முடியும்.
எப்படிச் செய்வது?
-
ஒரு குறிக்கோளை வைத்திருங்கள். நீங்கள் வெறுமனே ஒரு தகவலைத் தெரிவிக்க வேண்டுமா, அல்லது கேட்பவர்களை நம்பவைக்க வேண்டுமா, அல்லது செயல்படும்படி தூண்ட வேண்டுமா என்பதை யோசித்துப் பார்த்து, அதற்கு ஏற்றபடி பேசுங்கள். முக்கியக் குறிப்புகள் எல்லாமே உங்களுடைய குறிக்கோளை அடைய உதவி செய்யும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
-
பேச்சின் மையப்பொருளை வலியுறுத்துங்கள். பேச்சு முழுவதும் மையப்பொருளை வலியுறுத்துவதற்காக, அதனோடு சம்பந்தப்பட்ட முக்கிய வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லுங்கள் அல்லது அதற்கு இணையான மற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்.
-
முக்கியக் குறிப்புகளைத் தெளிவாகவும் எளிமையாகவும் சொல்லுங்கள். மையப்பொருளோடு சம்பந்தப்பட்ட முக்கியக் குறிப்புகளை மட்டும் தேர்ந்தெடுங்கள்; கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் திறமையாகக் கற்பிக்க உதவும் குறிப்புகளாக அவை இருக்க வேண்டும். அளவுக்கு அதிகமான முக்கியக் குறிப்புகளைப் பயன்படுத்தாதீர்கள். ஒவ்வொரு முக்கியக் குறிப்பையும் தெளிவாகச் சொல்லுங்கள். அடுத்த முக்கியக் குறிப்பைச் சொல்வதற்கு முன் கொஞ்சம் நிறுத்துங்கள், கோர்வை தடைபடாதபடியும் பார்த்துக்கொள்ளுங்கள்.