Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய நோக்கம் விரைவில் நிறைவேறவிருக்கிறது

கடவுளுடைய நோக்கம் விரைவில் நிறைவேறவிருக்கிறது

பகுதி 7

கடவுளுடைய நோக்கம் விரைவில் நிறைவேறவிருக்கிறது

1மனித நோக்குநிலையிலிருந்து கடவுள் நீண்ட ஒரு காலத்துக்கு அபூரணத்தையும் துன்பத்தையும் அனுமதித்திருக்கிறபோதிலும், மோசமான நிலைமைகள் காலவரையறையின்றி தொடர்ந்திருக்க அவர் அனுமதிக்கமாட்டார். இந்தக் காரியங்கள் சம்பவிப்பதை அனுமதிப்பதற்குக் கடவுள் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியைக் கொண்டிருக்கிறார் என்று பைபிள் நமக்குச் சொல்கிறது.

2“ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு.” (பிரசங்கி3:1) அக்கிரமத்தையும் துன்பத்தையும் அனுமதிப்பதற்கான கடவுளுடைய கொடுக்கப்பட்ட நேரம் அதன் முடிவுக்கு வரும்போது, அப்போது அவர் மனித விவகாரங்களில் தலையிடுவார். அவர் அக்கிரமத்துக்கும் துன்பத்துக்கும் ஒரு முடிவைக் கொண்டுவந்து, பரதீஸிய நிலைமைகளின் மத்தியில் முழுமையான சமாதானத்தையும் பொருளாதார பாதுகாப்பையும் அனுபவிக்கும் பரிபூரண, மகிழ்ச்சியுள்ள மனித குடும்பத்தால் பூமியை நிரப்பும் அவருடைய ஆதி நோக்கத்தை நிறைவேற்றுவார்.

கடவுளுடைய நியாயத்தீர்ப்புகள்

3கடவுள் தலையிடுதல், அதாவது அவருடைய நியாயத்தீர்ப்புகளின் விளைவுகள் மனித குடும்பத்துக்குச் சீக்கிரத்தில் எதை அர்த்தப்படுத்தும் என்பதைப்பற்றி சொல்லும் அநேக பைபிள் தீர்க்கதரிசனங்களில் சிலவற்றைக் கவனியுங்கள்:

4“செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.”—நீதிமொழிகள் 2:21, 22.

5“பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; . . . சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:9-11.

6“நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய். நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம். அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு.”—சங்கீதம் 37:34, 37, 38.

7ஆகவே, நம்மை ஆட்சிசெய்ய சர்வவல்லமையுள்ள சிருஷ்டிகரின் உரிமையை ஒப்புக்கொள்பவர்களுக்கு வரவிருக்கும் மகத்தான எதிர்காலத்தை முன்னிட்டு நாம் இவ்விதமாக தூண்டப்படுகிறோம்: “உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும்.” உண்மையில், கடவுளுடைய விருப்பத்தைச் செய்ய தெரிந்துகொள்கிறவர்களுக்கு நித்திய ஜீவன் கூட்டிக்கொடுக்கப்படும். இதன் காரணமாக, கடவுளுடைய வார்த்தை நமக்குப் புத்திசொல்கிறது: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”—நீதிமொழிகள் 3:1, 2, 5, 6.

பரலோகத்திலிருந்து கடவுளுடைய ஆட்சி

8மனிதவர்க்கம் எக்காலத்திலும் கொண்டிருக்கக்கூடிய மிகச் சிறந்த அரசாங்கத்தின் மூலமாக கடவுள் இந்தப் பூமியைச் சுத்திகரிப்பதைச் செய்துமுடிப்பார். அது பரம ஞானத்தைப் பிரதிபலிக்கும் அரசாங்கமாகும், ஏனென்றால் கடவுளுடைய வழிநடத்துதலின் கீழ் பரலோகத்திலிருந்து ஆட்சி செய்கிறது. அந்தப் பரலோக ராஜ்யம் பூமியிலிருந்து எல்லா வகையான மனித ஆட்சிகளையும் நீக்கிவிடும். மனிதர்கள் இனி ஒருபோதும் கடவுளைச் சார்ந்திராத ஓர் ஆட்சியை முயற்சிசெய்யும் உரிமையைக் கொண்டிருக்கமாட்டார்கள்.

9இதன் சம்பந்தமாக தானியேல் 2:44-லுள்ள தீர்க்கதரிசனம் இவ்வாறு சொல்கிறது: “அந்த ராஜாக்களின் [இன்றைய நாளின் அரசாங்கங்கள்] நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை [பரலோகத்தில்] எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை. [கடவுளைச் சார்ந்திராமல் மனிதர்கள் மறுபடியுமாக ஒருபோதும் ஆட்சிசெய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள்]. அது அந்த ராஜ்யங்களையெல்லாம் [இப்பொழுது இருப்பவை] நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—வெளிப்படுத்துதல் 19:11-21; 20:4-6-ஐயுங்கூட பார்க்கவும்.

10இதன் காரணமாக, மனிதவர்க்கம் இனி ஒருபோதும் ஊழல்மலிந்த ஆட்சிமுறைகளைக் கொண்டிருக்காது, ஏனென்றால் கடவுள் இந்த ஒழுங்கை அதன் முடிவுக்குக் கொண்டுவந்தப் பிறகு, அவர் மீது சார்ந்திராத மனித ஆட்சி மறுபடியுமாக ஒருபோதும் இருக்காது. பரலோகத்திலிருந்து ஆட்சிசெய்யும் ராஜ்யம் கெடுக்கப்படாது, ஏனென்றால் கடவுளே அதை உருவாக்கியவரும் காப்பவருமாகவும் இருக்கிறார். மாறாக, மனித குடிமக்களின் மிகச் சிறந்த நலனுக்காக அது இயங்கும். அப்போது கடவுளுடைய விருப்பம் பரலோகத்திலே செய்யப்படுவதுபோல பூமி முழுவதிலும் செய்யப்படும். இதன் காரணமாகவே தம்முடைய சீஷர்களுக்குக் கடவுளிடம் இவ்வாறு ஜெபிக்கும்படியாக இயேசுவால் போதிக்கமுடிந்தது: “உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக.”—மத்தேயு 6:10.

நாம் எவ்வளவு அருகாமையில் இருக்கிறோம்?

11திருப்தியளிக்காத இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் கடவுளுடைய புதிய உலகின் ஆரம்பத்திற்கும் நாம் எவ்வளவு அருகாமையில் இருக்கிறோம்? பைபிள் தீர்க்கதரிசனம் தெளிவாக நமக்குப் பதிலைத் தருகிறது. உதாரணமாக, பைபிள் குறிப்பிடும், ‘காரிய ஒழுங்குமுறையின் முடிவு’ சம்பந்தமாக நம்முடைய நிலைநிற்கையைத் தீர்மானிக்கும்பொருட்டு நாம் எதை எதிர்பார்த்திருக்கவேண்டும் என்பதை இயேசுதாமே முன்னறிவித்தார். இது மத்தேயு அதிகாரங்கள் 24 மற்றும் 25, மாற்கு 13 மற்றும் லூக்கா 21-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும், 2 தீமோத்தேயு அதிகாரம் 3-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி, அப்போஸ்தலன் பவுல், “கடைசி நாட்கள்” என்றழைக்கப்படும் ஒரு காலப்பகுதி இருக்கும் என முன்னறிவித்தார். அப்போது பல்வேறு சம்பவங்கள் கூடுதலாக காலத்தின் ஓட்டத்திலே நாம் எங்கே இருக்கிறோம் என்ற உண்மையை உறுதிசெய்யும்.

12இந்தக் காலப்பகுதி பின்வரும் இந்தச் சம்பவங்களோடு ஆரம்பமாகும் என இயேசு சொன்னார்: “ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.” (மத்தேயு 24:7) லூக்கா 21:11 “கொள்ளைநோய்”களும் உண்டாகும் என்று அவர் குறிப்பிட்டதைக் காட்டுகிறது. அவர் “அக்கிரமம் மிகுதியாதலைப்” பற்றிக்கூட எச்சரித்தார்.—மத்தேயு 24:12.

13அப்போஸ்தலன் பவுல் முன்னுரைத்தார்: “கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; . . . பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.”—2 தீமோத்தேயு 3:1-5, 13.

14இயேசுவும் பவுலும் முன்னறிவித்த அந்தக் காரியங்கள் நம்முடைய காலத்தில் நிறைவேறியிருக்கின்றனவா? ஆம், நிச்சயமாகவே நிறைவேறியிருக்கின்றன. முதல் உலகப் போர் அந்தச் சமயம் வரையாக நிகழ்ந்ததில் மிகவும் மோசமான போராக இருந்தது. அதுவே முதல் உலகப் போராகவும் நவீன வரலாற்றின் திரும்புக்கட்டமாகவும் இருந்தது. அந்தப் போரோடுகூட உணவு பற்றாக்குறைகளும், கொள்ளைநோய்களும் மற்ற பேரழிவுகளும் சேர்ந்துவந்தன. இயேசு சொன்னவிதமாகவே, 1914 முதற்கொண்டு நடந்த சம்பவங்கள் “வேதனைகளுக்கு ஆரம்ப”மாக இருந்தன. (மத்தேயு 24:8) அவை “கடைசி நாட்கள்” என்றழைக்கப்படும் முன்னறிவிக்கப்பட்ட காலப்பகுதியைத் துவக்கிவைத்தன. அது கடவுள் அக்கிரமத்தையும் துன்பத்தையும் அனுமதிக்கும் கடைசி தலைமுறையின் ஆரம்பமாக இருந்தது.

15ஒருவேளை நீங்கள் 20-ம் நூற்றாண்டு சம்பவங்களை நன்கு அறிந்தவர்களாக இருக்கலாம். கண்ணுக்குப் புலப்படும் குழப்பத்தை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். சுமார் பத்துக் கோடி மக்கள் போர்களில் கொல்லப்பட்டிருக்கின்றனர். கோடிக்கணக்கான மற்றவர்கள் பசியினாலும் வியாதியினாலும் மரித்திருக்கின்றனர். பூமியதிர்ச்சிகள் எண்ணற்ற உயிர்களை எடுத்திருக்கின்றன. உயிரையும் உடைமையையும் அவமதிப்பது அதிகரித்திருக்கிறது. குற்றச்செயல்பற்றிய பயம் அன்றாட வாழ்க்கையின் பாகமாகிவிட்டிருக்கிறது. ஒழுக்கத் தராதரங்கள் அசட்டைசெய்யப்பட்டிருக்கின்றன. மக்கள்தொகை வெடிப்பு, தீர்க்கப்படாத பிரச்னைகளை எழுப்பியிருக்கின்றன. தூய்மைக்கேடு வாழ்க்கையின் தன்மையைக் கெடுத்து அதை ஆபத்திற்குள்ளாக்கிக்கொண்டும் இருக்கின்றது. உண்மையிலேயே, நாம் 1914 முதற்கொண்டு கடைசி நாட்களில் இருந்துவருகிறோம், நம்முடைய காலத்தை உட்படுத்தும் பைபிள் தீர்க்கதரிசனங்களின் உச்சக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறோம்.

16இந்தக் கடைசி நாட்கள் எத்தனை நீண்டதொரு காலப்பகுதியாக நிரூபிக்கும்? இயேசு 1914 முதற்கொண்டு இருந்துவரும் “வேதனைகளுக்கு ஆரம்ப”த்தை அனுபவிக்கும் சகாப்தத்தைக் குறித்துச் சொன்னார்: ‘இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது.’ (மத்தேயு 24:8, 34-36) இவ்விதமாக, கடைசி நாட்களின் அனைத்து அம்சங்களும் ஒரே தலைமுறையின், 1914-உடைய தலைமுறையின், வாழ்நாளுக்குள் நடந்தேறவேண்டும். ஆகவே 1914-ல் உயிரோடிருந்தவர்களில் சிலர் இந்த ஒழுங்குமுறை அதன் முடிவுக்கு வருகையில் இன்னும் உயிரோடிருப்பர். அந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இப்பொழுது மிகவும் வயதானவர்களாக இருக்கின்றனர், இது கடவுள் தற்போதைய காரியங்களின் ஒழுங்குமுறையை அதன் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முன்பாக அதிக காலம் இன்னும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

17இந்த ஒழுங்குமுறையின் முடிவு மிகவும் சமீபத்திலிருக்கிறது என்பதைக் காட்டும் மற்றொரு தீர்க்கதரிசனம் அப்போஸ்தலன் பவுலால் கொடுக்கப்பட்டது. அவர் முன்னுரைத்தார்: ‘இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வரும். சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, . . . அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை.’—1 தெசலோனிக்கேயர் 5:2, 3; லூக்கா 21:34, 35-ஐகூட பார்க்கவும்.

18இன்று பனிப்போர் முடிவடைந்துவிட்டது, சர்வதேச போர் இனிமேலும் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இல்லாதிருக்கலாம். ஆகவே தேசங்கள் ஒரு புதிய உலக ஒழுங்குமுறைக்கு மிகவும் அருகாமையில் இருப்பதாக நினைக்கலாம். ஆனால் தங்கள் முயற்சிகள் வெற்றியடைந்துகொண்டிருக்கின்றன என்பதாக அவர்கள் உணரும்போது, அவர்கள் நினைப்பதற்கு நேர் எதிர்மாறானதை அது குறிக்கும். ஏனென்றால் கடவுளால் இந்த ஒழுங்குமுறை அழிக்கப்படுவது உடனடியாக நிகழப்போகிறது என்பதற்கு அது இறுதி அடையாளமாக இருக்கும். அரசியல் சமரசப் பேச்சுவார்த்தைகளும் உடன்படிக்கைகளும் மக்களில் எந்த வித உண்மையான மாற்றங்களையும் செய்யவில்லை என்பதை நினைவிற்கொள்ளுங்கள். அவை மக்களை ஒருவரையொருவர் நேசிக்கும்படி செய்யவில்லை. உலகத் தலைவர்கள் குற்றச்செயலை நிறுத்தவோ, வியாதி மற்றும் மரணத்தை நீக்கிவிடவோ இல்லை. ஆகவே மனித சமாதானம் மற்றும் பாதுகாப்பின் எந்த ஒரு முன்னேற்றத்திலும் உங்கள் நம்பிக்கையை வைத்து இந்த உலகம் அதன் பிரச்னைகளைத் தீர்க்கிற வழியில் இருப்பதாக நினைக்காதீர்கள். (சங்கீதம் 146:3) இப்படிப்பட்ட ஓர் அறைகூவல், இந்த உலகம் அதன் முடிவுக்கு வெகு அருகாமையில் இருக்கிறது என்பதைத்தான் உண்மையில் அர்த்தப்படுத்தக்கூடும்.

நற்செய்தியைப் பிரசங்கித்தல்

19நாம் 1914 முதற்கொண்டு கடைசி நாட்களில் இருந்துவருகிறோம் என்பதைக் காண்பிக்கும் மற்றொரு தீர்க்கதரிசனம் இயேசு கொடுத்த ஒன்றாகும்: “சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும்.” (மாற்கு 13:10) அல்லது மத்தேயு 24:14 சொல்வது போல: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.”

20இன்று வரலாற்றில் முன்னொருபோதும் இராத வண்ணம், இந்த உலகின் முடிவு மற்றும் கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் வரவிருக்கும் பரதீஸிய புதிய உலகம் பற்றிய நற்செய்தி பூமி முழுவதிலும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது. யாரால்? இலட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளால். அவர்கள் பூமியின் மீதுள்ள ஒவ்வொரு தேசத்திலும் பிரசங்கித்துவருகிறார்கள்.

21கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி பிரசங்கிப்பதோடுகூட யெகோவாவின் சாட்சிகள் அவர்களைக் கிறிஸ்துவை உண்மையாக பின்பற்றுகிறவர்களாக அடையாளப்படுத்தும் வகையில் நடந்துகொள்கிறார்கள். ஏனென்றால் அவர் அறிவித்தார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” இதன் காரணமாக, யெகோவாவின் சாட்சிகள் முறிக்கமுடியாத அன்பின் கட்டினால் ஓர் உலகளாவிய சகோதரத்துவத்தில் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள்.—யோவான் 13:35; பார்க்கவும்: ஏசாயா 2:2-4; கொலோசெயர் 3:14; யோவான் 15:12-14; 1 யோவான் 3:10-12; 4:20, 21; வெளிப்படுத்துதல் 7:9,10.

22யெகோவாவின் சாட்சிகள் பைபிள் சொல்வதை நம்புகிறார்கள்: “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல, எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்.” (அப்போஸ்தலர் 10:34, 35) அவர்கள் இனம் அல்லது நிறம் எதுவாயிருப்பினும் எல்லா தேசங்களிலுமுள்ள உடன் சாட்சிகளை ஆவிக்குரிய சகோதர சகோதரிகளாகக் கருதுகிறார்கள். (மத்தேயு 23:8) இப்படிப்பட்ட உலகளாவிய சகோதரத்துவம் ஒன்று இன்று உலகில் இருக்கும் உண்மைதானே, கடவுளுடைய நோக்கம் விரைவில் நிறைவேறும் என்பதற்கு அத்தாட்சியைக் கூட்டுகிறது.

[கேள்விகள்]

1, 2. கடவுள் அக்கிரமத்தையும் துன்பத்தையும் முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பார் என்று நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம்?

3, 4. நீதிமொழிகள் புத்தகம் எவ்வாறு கடவுளுடைய தலையிடுதலின் விளைவுகளை விவரிக்கிறது?

5, 6. கடவுள் தலையிடும்போது என்ன சம்பவிக்கும் என்பதை சங்கீதம் 37 எவ்வாறு காண்பிக்கிறது?

7. கடவுளுடைய வார்த்தை என்ன நல்ல புத்திமதியை நமக்குக் கொடுக்கிறது?

8, 9. எதன் மூலமாக கடவுள் இந்தப் பூமியைச் சுத்திகரிப்பார்?

10. கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் கீழ், ஆளுகையில் மறுபடியுமாக ஒருபோதும் ஊழல் மலிந்திருக்காது என்று நாம் ஏன் நிச்சயமாய் இருக்கலாம்?

11. இந்த ஒழுங்குமுறையின் முடிவுக்கு எவ்வளவு சமீபத்தில் நாம் இருக்கிறோம் என்பதைத் தீர்மானிக்க உதவும் தீர்க்கதரிசனங்களை நாம் பைபிளில் எங்கே காண்கிறோம்?

12, 13. முடிவு காலத்தைப் பற்றி இயேசுவும் பவுலும் என்ன சொன்னார்கள்?

14, 15. இந்த 20-ம் நூற்றாண்டு சம்பவங்கள் எவ்விதமாக நாம் கடைசி நாட்களில் இருந்துவரும் உண்மையை உறுதிசெய்கின்றன?

16. கடைசி நாட்கள் எத்தனை நீண்ட ஒரு காலப்பகுதியை உள்ளடக்குகிறது?

17, 18. இந்த உலகின் முடிவுக்கு வெகு அருகாமையில் நாம் இருக்கிறோம் என்பதை எந்தத் தீர்க்கதரிசனம் காட்டுகிறது?

19, 20. கடைசி நாட்களில் பிரசங்கிப்பதை உட்படுத்தும் என்ன தீர்க்கதரிசனம் நிறைவேறிக்கொண்டிருப்பதை நாம் காண்கிறோம்?

21, 22. எது, விசேஷமாக யெகோவாவின் சாட்சிகளை மெய்க் கிறிஸ்தவர்களாக அடையாளம் காட்டுகிறது?

[பக்கம் 26-ன் படம்]

கடவுளுடைய பரிபூரண பரலோக ராஜ்யமே புதிய உலகில் மனிதவர்க்கத்தின் ஒரே ஆளுகையாக இருக்கும்