Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவமண்டலம் கடவுளையும் பைபிளையும் ஆதரிப்பதில் தவறிவிட்டது

கிறிஸ்தவமண்டலம் கடவுளையும் பைபிளையும் ஆதரிப்பதில் தவறிவிட்டது

பகுதி 4

கிறிஸ்தவமண்டலம் கடவுளையும் பைபிளையும் ஆதரிப்பதில் தவறிவிட்டது

1பைபிளைப் பின்பற்றுவதாக உரிமைபாராட்டுபவர்களின் கெட்ட நடத்தையின் காரணமாக அநேக நாடுகளில் ஜனங்கள் பைபிளைத் தவிர்க்கவும் அதற்காக மரியாதைக் கொண்டிருப்பதில் குறைவுபடவும் செய்கின்றனர். சில நாடுகளில், பைபிள் யுத்தத்திற்கு வழிநடத்தும் ஒரு புத்தகம், அது வெள்ளையர்களின் புத்தகம், மற்றும் அது குடியேற்ற ஆதிக்கத்தை ஆதரிக்கும் புத்தகம் என்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் அவை தவறான கருத்துக்களாகும்.

2மத்திய கிழக்கில் எழுதப்பட்ட பைபிள், நீண்ட காலமாக கிறிஸ்தவம் என்ற பெயரால் செய்யப்பட்டுவந்திருக்கும் குடியேற்றத்திற்கான யுத்தங்ளையும் பேராசையின் சுரண்டல்களையும் ஆதரிப்பதில்லை. மாறாக, பைபிளைப் படிப்பதினாலும், இயேசு போதித்த மெய்க் கிறிஸ்தவத்தின் போதனைகளைக் கற்றுக்கொள்வதாலும், யுத்தம், ஒழுக்கக்கேடு மற்றும் மற்றவர்களைச் சுரண்டுதல் இவற்றை பைபிள் பலமாகக் கண்டனம் செய்வதை நீங்கள் காண்பீர்கள். குற்றம் பைபிளில் இல்லை, ஆனால் பேராசைகொண்ட மனிதர்களிடம் இருக்கிறது. (1 கொரிந்தியர் 13:1-6; யாக்கோபு 4:1-3; 5:1-6; 1 யோவான் 4:7, 8) எனவே பைபிளின் நல்ல ஆலோசனைக்கு முரணாக வாழ்கின்ற தன்னலமான ஜனங்களின் தவறான நடத்தை, பைபிளின் பொக்கிஷங்களிலிருந்து நீங்கள் நன்மைபெறுவதைத் தடுக்க இடம் கொடாதீர்கள்.

3பைபிளின்படி வாழாதவர்களில் கிறிஸ்தவமண்டலத்தின் தேசங்களும், ஜனங்களும் உட்பட்டிருக்கின்றனர். கிறிஸ்தவம் அதிகமாக நிலவுகின்ற உலகத்தின் பாகம் “கிறிஸ்தவமண்டலம்” என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இது பெரும்பகுதி சர்ச் அமைப்புகளைக்கொண்ட மேற்கத்திய உலகமாகும். இது சுமார் பொ.ச. நான்காவது நூற்றாண்டிலிருந்து பிரபலமானது. கிறிஸ்தவமண்டலம் நூற்றாண்டுகளாக பைபிளை வைத்திருக்கிறது. அதன் குருமார்கள் அதை போதிப்பதாகவும், தாங்கள் கடவுளின் பிரதிநிதிகள் என்றும் உரிமைபாராட்டுகின்றனர். ஆனால், கிறிஸ்தவமண்டல குருமார் மற்றும் மிஷனரிகள் சத்தியத்தைப் போதிக்கின்றனரா? அவர்களுடைய செயல்கள் உண்மையிலேயே கடவுளையும், பைபிளையும் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா? கிறிஸ்தவமண்டலத்தில் உண்மையிலேயே கிறிஸ்தவம் நிலவுகிறதா? இல்லை. நான்காவது நூற்றாண்டில் அதன் மதம் முன்னணிக்கு வந்ததிலிருந்து, கிறிஸ்தவமண்டலம் கடவுள் மற்றும் பைபிளின் விரோதியாகத் தன்னை நிரூபித்துள்ளது. ஆம், வரலாற்று உண்மைகள் கிறிஸ்தவமண்டலம் கடவுளையும் பைபிளையும் ஆதரிப்பதில் தவறிவிட்டதைக் காட்டுகின்றன.

பைபிளுக்கு மாறான கோட்பாடுகள்

4கிறிஸ்தவமண்டலத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் பைபிளில் சார்ந்து இல்லை, ஆனால் பழங்காலக் கட்டுக்கதைகளில் சார்ந்துள்ளன—கிரீஸ், எகிப்து, பாபிலோன் மற்ற நாடுகளின் கட்டுக்கதைகளில். மனித ஆத்துமாவின் உள்ளியல்பான அழியாமை, நரக அக்கினியில் நித்திய வாதனை, உத்தரிக்கும் ஸ்தலம் மற்றும் திரித்துவம் (ஒரு கடவுளில் மூன்று ஆட்கள்) போன்ற போதகங்கள் பைபிளில் காணப்படுவதில்லை.

5உதாரணமாக, கெட்ட ஜனங்கள் எரிகின்ற நரகத்தில் என்றைக்குமாக வாதிக்கப்படுவார்கள் என்ற போதகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். இந்தக் கருத்தைப்பற்றி நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள்? அநேகர் இதை விரும்பத்தகாததாக காண்கின்றனர். கடவுள் மனிதர்களை அதிகமான வேதனையில் வைத்து என்றைக்குமாக வாதிப்பார் என்பதை அநேகர் நியாயமற்றதாகக் காண்கின்றனர். இத்தகைய கொடூரமான கருத்து, பைபிளின் கடவுளுக்கு முரண்பட்டதாக இருக்கின்றது, ஏனெனில், “தேவன் அன்பாகவே இருக்கிறார்.” (1 யோவான் 4:8) இத்தகைய கருத்து சர்வவல்லமையுள்ள கடவுளின் “மனதில் தோன்றவுமில்லை,” என்று பைபிள் தெளிவாகத் தெரிவிக்கிறது.—எரேமியா 7:31; 19:5; 32:35.

6இன்று கிறிஸ்தவமண்டலத்தின் சர்ச்சுகள் உட்பட அநேக மதங்கள், மரணத்தில் பரலோகத்திற்கோ நரகத்திற்கோ செல்கின்ற ஓர் அழியாத ஆத்துமாவை மனிதர்கள் கொண்டுள்ளனர் என்று போதிக்கின்றன. இது ஒரு பைபிள் போதகமல்ல. மாறாக, பைபிள் தெளிவாகச் சொல்கிறது: “உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள். . . . நீ போகிற பாதாளத்திலே [கல்லறை] செய்கையும், வித்தையும், அறிவும், ஞானமும் இல்லையே.” (பிரசங்கி 9:5, 10) மனிதன் மரணத்தில், “அவன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்,” என்று சங்கீதக்காரன் கூறுகிறார்.—சங்கீதம் 146:4.

7ஆதாமும் ஏவாளும் கடவுளுடைய சட்டத்தை மீறியபோது, தண்டனை அழியாமையல்லவென்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அது ஒரு தண்டனையாக அல்ல, பரிசாகத்தான் இருந்திருக்கும்! மாறாக ‘[அவர்கள்] பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், பூமிக்குத் திரும்பு,’வார்கள் என்று அவர்கள் சொல்லப்பட்டனர். கடவுள் ஆதாமிடம் அழுத்திக் கூறினார்: “நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்.” (ஆதியாகமம் 3:19) எனவே, உள்ளியல்பாக ஆத்துமா அழியாமை பற்றிய போதகம் பைபிளில் இல்லை. ஆனால் கிறிஸ்தவமண்டலத்தால், தங்களுக்கு முன் வாழ்ந்த கிறிஸ்தவரல்லாதவர்களிடமிருந்து கடன்வாங்கப்பட்டதாகும்.

8மேலும், கிறிஸ்தவமண்டலத்தின் திரித்துவக் கோட்பாடு கடவுளை ஏதோவொரு புரிந்துகொள்ள முடியாத ஒன்றில் மூன்று கடவுளாக காட்டுகிறது. இந்தப் போதகமுங்கூட பைபிளில் காணப்படுவதில்லை. உதாரணமாக, ஏசாயா 40:25-ல் கடவுள் தெளிவாகச் சொல்கிறார்: ‘என்னை யாருக்கு நிகராக்கும்படி என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?’ பதில் வெளிப்படையாகும்: யாருமே அவருக்குச் சமமாக முடியாது. மேலும் சங்கீதம் 83:17 எளிமையாகச் சொல்கிறது: “யெகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமி அனைத்தின்மேலும் உன்னதமானவர்.”—ஏசாயா 45:5; 46:9; யோவான் 5:19; 6:38; 7:16 ஆகிய வசனங்களையும் பார்க்கவும்.

9கடவுள் மற்றும் அவருடைய நோக்கங்களைப் பற்றிய பைபிளின் போதனைகள் தெளிவாகவும், புரிந்துகொள்ள சுலபமானதாகவும், நியாயமானவையாயும் இருக்கின்றன. ஆனால் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளின் போதனைகள் அப்படியில்லை. அதைவிட மோசமாக, அவை பைபிளுடன் முரண்படுகின்றன.

அவபக்தியான செயல்கள்

10பொய்க்கோட்பாடுகளைப் போதிப்பதுடன்கூட, கிறிஸ்தவமண்டலம் அவளுடைய செயல்களினால் கடவுளையும் பைபிளையும் ஆதரிப்பதில் தவறிவிட்டிருக்கிறது. குருவர்க்கமும், சர்ச்சுகளும் கடந்த நூற்றாண்டுகளில் செய்தவை, நம்முடைய காலத்தில் இன்னமும் செய்கின்றவை பைபிளின் கடவுள் தேவைப்படுத்துகிறவற்றிக்கு நேர் எதிரானதாக இருக்கின்றன. கிறிஸ்தவத்தை ஸ்தாபித்த இயேசு கிறிஸ்து போதித்த, செய்த காரியங்களுக்கும் எதிரானதாக இருக்கின்றன.

11உதாரணமாக, இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் இந்த உலக அரசியல் விவகாரங்களில் தலையிடவோ அதன் போர்களில் ஈடுபடவோ வேண்டாம் என்று போதித்தார். அதோடு, அவர்கள் சமாதானத்தை நேசிப்பவர்களாக, சட்டத்திற்குக் கீழ்ப்படிபவர்களாக, எந்தத் தப்பெண்ணமுமின்றி சகமனிதர்களிடம் அன்புள்ளவர்களாக, மற்றவர்களின் உயிரை எடுப்பதற்கு மாறாக தங்களுடைய உயிரையே தியாகம் செய்யவும் சித்தமுள்ளவர்களாக இருக்கவேண்டுமென்று அவர் போதித்தார்.—யோவான் 15:13; அப்போஸ்தலர் 10:34, 35; 1 யோவான் 4:20, 21.

12உண்மையில், போலிக் கிறிஸ்தவர்களிடமிருந்து, பாசாங்குசெய்பவர்களிடமிருந்து, மெய்க் கிறிஸ்தவர்களைப் பிரித்துக்காட்டும் அடையாளக்குறியே மற்ற மனிதர்களிடம் காட்டும் அன்பு என்று இயேசு போதித்தார். தம்மைப் பின்பற்றுபவர்களிடம் அவர் சொன்னார்: “நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல, நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்ற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என் சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.”—யோவான் 13:34, 35; 15:12.

13எனினும், நூற்றாண்டு நூற்றாண்டுகளாக, கிறிஸ்தவமண்டலத்தின் குருவர்க்கம் அரசியலில் தலையிட்டுத் தங்களுடைய தேசங்களின் போர்களை ஆதரித்திருக்கின்றனர். இந்த நூற்றாண்டின் இரண்டு உலக யுத்தங்களைப் போன்று, அவர்கள் கிறிஸ்தவமண்டலத்தின் உள்ளேயுங்கூட யுத்தத்தில் எதிர்க்கும் இரண்டு பக்கங்களை ஆதரித்திருக்கின்றனர். இந்தச் சண்டைகளில் ஒவ்வொரு பக்கத்திலிருந்த குருவர்க்கமும் வெற்றிக்காக ஜெபித்து, ஒரு நாட்டிலுள்ள ஒரு மதத்தைச் சேர்ந்த அங்கத்தினர்கள், அடுத்த நாட்டிலிருந்த அதே மதத்தைச் சேர்ந்த அங்கத்தினர்களைக் கொன்றனர். ஆனால் தேவனுடைய பிள்ளைகளல்ல, சாத்தானுடைய பிள்ளைகளே அவ்விதம் செய்வர் என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 3:10-12, 15) எனவே, குருவர்க்கமும், அவர்களைப் பின்பற்றுவோரும் கிறிஸ்தவரென்று உரிமைபாராட்டினாலும், “உன் பட்டயத்தைத் திரும்ப உறையில் போடு” என்று தம்மைப் பின்பற்றுபவர்களுக்குச் சொன்ன இயேசு கிறிஸ்துவின் போதனைகளுக்கு இவர்கள் முரண்படுகின்றனர்.—மத்தேயு 26:51, 52.

14பல நூற்றாண்டுகளாக, கிறிஸ்தவமண்டல தேசங்கள் ஏகாதிபத்திய சகாப்தத்தின்போது, மற்ற ஜனங்களை வெற்றிகொண்டு, அடிமைப்படுத்தி, இழிவுபடுத்தியபோது, சர்ச்சுகள் அவற்றின் அரசியல் அதிகாரங்களோடு சேர்ந்து வேலைசெய்தன. பல நூற்றாண்டுகளாக அதுவே ஆப்பிரிக்காவில் நடந்தது. மேற்கத்திய நாடுகள் அபினி போர்களிலும் பாக்ஸர் கலகத்தின்போதும் செய்ததுபோல பலாத்காரத்தின் மூலம் செல்வாக்கு ஆதிக்க எல்லைகளை உருவாக்கியபோது சீனாவுங்கூட இதை அனுபவித்தது.

15இருண்ட காலம் என்று வரலாற்றில் அழைக்கப்பட்ட அந்த நூற்றாண்டுகளின்போது தங்களோடு கருத்து வேற்றுமை கொண்ட எவரையும் துன்புறுத்துவதிலும், சித்திரவதை செய்வதிலும், கொலைசெய்வதிலுங்கூட கிறிஸ்தவமண்டல மதங்கள் முன்னணியில் இருந்திருக்கின்றன. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் நீடித்த சமய விசாரணைகளின்போது, சித்திரவதை மற்றும் கொலை போன்ற கொடூரமான பழக்கங்கள் சட்டப்பூர்வமாக அதிகாரமளிக்கப்பட்டுக் கண்ணியமான அப்பாவி மக்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டன. குற்றமிழைத்தவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்களென உரிமைபாராட்டிக்கொண்ட குருவர்க்கமும் அவர்களைப் பின்பற்றினவர்களுமே. பொது மக்கள் வாசிக்க முடியாதபடி பைபிளை அழித்துவிடவுங்கூட அவர்கள் முயற்சிசெய்தனர்.

கிறிஸ்தவமல்ல

16இல்லை, கிறிஸ்தவமண்டல தேசங்களும் சர்ச்சுகளும் கிறிஸ்தவமாக இருக்கவில்லை, இப்போதும் அவ்வாறு இல்லை. அவர்கள் கடவுளுடைய ஊழியக்காரர் அல்ல. அவர்களைப்பற்றி அவருடைய ஏவப்பட்ட வார்த்தை சொல்லுகிறது: “அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.”—தீத்து 1:16.

17பொய் மதத்தை அது உண்டுபண்ணுவதிலிருந்து, அதன் கனிகளிலிருந்து அடையாளங்கண்டுகொள்ள முடியும் என்பதாக இயேசு சொன்னார். அவர் சொன்னார்: “கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள். உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். . . . நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும். ஆதலால் அவர்களுடைய கனிகளினாலே அவர்களை [கள்ளத் தீர்க்கதரிசிகளை] அறிவீர்கள்.”—மத்தேயு 7:15-20.

18இவ்விதமாக, கிறிஸ்தவமண்டல மதங்கள் தாங்கள் கற்பித்திருக்கும் மற்றும் தாங்கள் செய்திருப்பவற்றின் மூலம், பைபிளை நம்புவதாகவும், கடவுள்-பயமுள்ளவர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் தங்களுடைய உரிமைபாராட்டல் ஒரு பொய் என்பதைக் காண்பித்திருக்கின்றன. அவர்கள் பைபிளுக்கும் கடவுளுக்கும் உண்மையற்றவர்களாக இருந்திருக்கின்றனர். அவ்விதமாகச் செய்கையில், அவர்கள் லட்சக்கணக்கான ஆட்களை வெறுப்புக்கொள்ளச்செய்து உன்னதமானவரில் நம்பிக்கை வைப்பதிலிருந்து அவர்களை விலகிச்செல்ல செய்திருக்கின்றனர்.

19இருந்தபோதிலும், கிறிஸ்தவமண்டல குருவர்க்கம் மற்றும் சர்ச்சுகளின் தோல்வியும், கிறிஸ்தவமண்டலத்துக்கு வெளியே உள்ள மற்ற மதங்களின் தோல்வியும் பைபிளின் தோல்வியை அர்த்தப்படுத்துவதில்லை. அல்லது கடவுள் தோற்றுவிட்டார் என்பதையும் அது அர்த்தப்படுத்தவில்லை. மாறாக, பைபிள் நமக்கு நம்மையும் நம் எதிர்காலத்தையும் பற்றி நிச்சயமாகவே அக்கறையுள்ளவராக இருக்கும் ஒரு கடவுளைப் பற்றி சொல்கிறது. சரியானதைச் செய்ய விரும்பி, பூமி முழுவதிலும் நீதியும் சமாதானமும் நிலவுவதைக் காணவிரும்பும் நேர்மை இருதயமுள்ள ஆட்களுக்கு அவர் எவ்விதமாக பலனளிப்பார் என்பதை அது காண்பிக்கிறது. கடவுள் ஏன் அக்கிரமத்தையும் துன்பத்தையும் அனுமதித்திருக்கிறார், எவ்விதமாக அவர் தங்கள் உடன்மானிடருக்குத் தீங்கிழைப்பவர்களையும் அவரைச் சேவிப்பதாக உரிமைபாராட்டி ஆனால் அவ்விதமாகச் செய்யாதவர்களையும் பூமியிலிருந்து நீக்கிப்போடுவார் என்பதையுங்கூட அது காட்டுகிறது.

[கேள்விகள்]

1, 2. சில ஆட்கள் பைபிளிடமாக மரியாதைக்கொண்டிருப்பதில் ஏன் குறைவுபடுகிறார்கள், ஆனால் பைபிள் என்ன சொல்கிறது?

3. வரலாற்றின் உண்மைகள் கிறிஸ்தவமண்டலத்தைப்பற்றி காண்பிப்பது என்ன?

4, 5. பைபிளுக்கு மாறான என்ன கோட்பாடுகளைச் சர்ச்சுகள் கற்பிக்கின்றன?

6. அழியாத-ஆத்துமா போதனையை பைபிள் எவ்விதமாக தவறென காண்பிக்கிறது?

7. கடவுளுடைய சட்டத்தை மீறினதற்காக ஆதாம் ஏவாளுக்குக் கிடைத்த தண்டனை என்ன?

8. பைபிள் எவ்விதமாக கிறிஸ்தவமண்டலத்தின் திரித்துவக் கோட்பாட்டைத் தவறென காண்பிக்கிறது?

9. பைபிள் போதனைகளைப்பற்றியும் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளின் போதனைகளைப்பற்றியும் நாம் என்ன சொல்லலாம்?

10, 11. என்ன விதங்களில் பைபிளின் போதனைகள் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் செய்துவந்திருப்பவற்றிற்கு எதிர்மாறானதை தேவைப்படுத்துகின்றன?

12. மெய்க் கிறிஸ்தவர்களை எது அடையாளப்படுத்தும் என்பதாக இயேசு சொன்னார்?

13, 14. கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள் கடவுளைப் பிரதிநிதித்துவம் செய்வதில்லை என்பதை எது காட்டுகிறது?

15. கிறிஸ்தவமண்டலம் என்ன தீங்குகளை இழைத்திருக்கிறது?

16, 17. சர்ச்சுகள் கிறிஸ்தவமல்ல என்று நாம் ஏன் சொல்லமுடியும்?

18. கிறிஸ்தவமண்டலத்தின் போதனைகளிலிருந்தும் செயல்களிலிருந்தும் என்ன விளைவடைந்திருக்கின்றன?

19. கிறிஸ்தவமண்டலத்தின் தோல்வி கடவுளும் பைபிளும் தோற்றுவிட்டதை அர்த்தப்படுத்துகிறதா?

[பக்கம் 17-ன் படங்கள்]

டான்டேவின் “நரகம்”

கிறிஸ்தவமண்டலத்தின் திரித்துவம்

[படத்திற்கான நன்றி]

Doré’s illustration of Barrators—Giampolo for Dante’s Divine Comedy

இந்து திரித்துவம்

[படத்திற்கான நன்றி]

Courtesy of The British Museum

எகிப்திய திரித்துவம்▸

[படத்திற்கான நன்றி]

Museo Egizio, Turin

[பக்கம் 18-ன் படங்கள்]

இயேசவின் போதனைகளுக்கு எதிர்மாறாக, இருதரப்பிலுமுள்ள குருமார் போர்களை ஆதரித்திருக்கின்றனர்

[படத்திற்கான நன்றி]

U.S. Army photo