Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யார் நமக்குச் சொல்லக்கூடும்?

யார் நமக்குச் சொல்லக்கூடும்?

பகுது 2

யார் நமக்குச் சொல்லக்கூடும்?

1வாழ்க்கையின் நோக்கம் உண்மையில் என்னவென்பதை யார் நமக்குச் சொல்லக்கூடும்? சரி, ஓர் இயந்திர வடிவமைப்பாளரை நீங்கள் சந்திக்கச்சென்று, உங்களால் அடையாளம் காணமுடியாத ஒரு சிக்கலான இயந்திரத்தில் அவர் வேலைசெய்வதை நீங்கள் கண்டால், அது எதற்காகவென்று நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கமுடியும்? உங்களுக்கு மிகச் சிறந்த வழி அதன் வடிவமைப்பாளரைக் கேட்பதாக இருக்கும்.

2அப்படியென்றால், மிகச் சிறிய உயிரணு வரை, எல்லா உயிருள்ள பொருட்களிலும் இருப்பதைப் போன்ற, பூமியின்மேல் நம்மைச் சுற்றிலும் நாம் காண்கின்ற மிக அழகான வடிவமைப்பைப் பற்றியதென்ன? உயிரணுவிற்குள் உள்ள அதைவிடச் சிறிய, அணு மற்றும் அணுத்திரண்மமுங்கூட வியக்கத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்டு, ஒழுங்காக இருக்கின்றன. மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள மனித மனதைப் பற்றியதும் என்ன? நம்முடைய சூரிய குடும்பம், பால்வீதிப் பால்மண்டலம் மற்றும் பிரபஞ்சத்தைப் பற்றியதென்ன? இந்தப் பிரமிப்பூட்டும் வடிவமைப்புகள் ஒரு வடிவமைப்பாளரைத் தேவைப்படுத்தவில்லையா? நிச்சயமாகவே இத்தகையக் காரியங்களை ஏன் அவர் வடிவமைத்தார் என்று அவரால் நமக்குச் சொல்லமுடியும்.

உயிர் தற்செயலாகத் தோன்றியதா?

3“உயிரினங்களிலுள்ள அசாதாரணமான அளவு சிக்கல் மற்றும் அமைப்பை குறிப்பிட்டுவிட்டு,” தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா சொன்னது: “பூக்கள், பூச்சிகள் அல்லது பாலூட்டிகளை நெருக்கமாக ஆய்வுசெய்வது, நம்பமுடியாத அளவு துல்லியமாக பாகங்கள் ஒழுங்காக வைக்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.” பிரிட்டிஷ் வானியலறிஞர் சர் பெர்னார்ட் லோவெல், உயிர்வாழ்பவனவற்றுள் உள்ள வேதியியல் கூட்டு அமைப்பைப்பற்றி குறிப்பிடும்போது எழுதினார்: “மிகச் சிறிய புரத உயிரணுமம் உண்டாவதற்கு வழிநடத்தக்கூடிய நிகழ்ச்சி தற்செயலாக நடைபெறுவதற்கான . . . வாய்ப்புக் கற்பனைசெய்யமுடியாத அளவு சிறியதாகும். . . . அது உண்மையில் பூஜ்யமாகும்.”

4அதேபோன்று, வானியலறிஞர் ஃப்ரட் ஹாய்ல் சொன்னார்: “பழமையான உயிரியலின் முழு அமைப்பும் இன்னமும், உயிர் குறித்த நோக்கமின்றி தோன்றியது என்பதாக ஏற்கின்றது. இருந்தபோதிலும் உயிர்வேதியியல் அறிஞர்கள் உயிரின் பிரமிப்பூட்டும் சிக்கலானத்தன்மைப்பற்றி அதிகமதிகம் கண்டறிகையில், அது ஒரு விபத்தின் மூலம் தோன்றுவதற்கான வாய்ப்பு மிகச் சிறியதாக இருப்பது தெளிவாகிறது. எனவே அவ்வெண்ணத்தை முழுவதுமாகத் தள்ளிவிட்டுவிடலாம். உயிர் தற்செயலாகத் தோன்றியிருக்க முடியாது.”

5அறிவியலில் அதிக சமீபகால துறைகளில் ஒன்றான உயிரணும உயிரியல், உயிர்வாழ்பவற்றைப்பற்றி ஜீன்கள், உயிரணுமங்கள் மற்றும் அணுக்கள் என்ற அளவில் படிப்பதாகும். உயிரணும உயிரியலறிஞர் மைக்கேல் டென்டன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளவைபற்றி குறிப்பிடுகின்றார்: “அறியப்பட்டுள்ள உயிரணுக்களில் மிக எளிமையானதினுடைய சிக்கலானது அத்தனை பெரியதாக இருக்கிறது. எனவே, அத்தகைய ஒரு பொருள் திடீரென்று, இயற்கைக்கு முரணான, நடக்கமுடியாத ஒரு நிகழ்ச்சியினால் உண்டாக்கப்பட்டது என்று ஒப்புக்கொள்வது சாத்தியமாக இல்லை.” “ஆனால் உயிரினங்களின் சிக்கல் மட்டுமே அங்கு ஓர் அழுத்தமான சவாலாக இல்லை. அதோடுகூட, அவற்றின் வடிவமைப்பில் வெளிப்படுத்தப்படுகின்ற நம்பமுடியாத அறிவுக்கூர்மை இருக்கிறது.” “உயிரணும அளவில்தானே, . . . . உயிரியல் வடிவமைப்பிலுள்ள நுண்ணறிவும் அடையப்பட்ட இலக்குகளின் பரிபூரணமும் தெளிவாகத் தெரிகின்றன.”

6டென்டன் மேலுமாகக் கூறுகிறார்: “எங்கே பார்த்தாலும், எவ்வளவு ஆழமாகப் பார்த்தாலும், முழுமையாக அறிவிற்கு அப்பாற்பட்ட பண்பின் உயரிய அழகையும், அறிவுக்கூர்மையையும் நாம் காண்கிறோம். அது உயிர் தற்செயலாக வந்தது, என்ற கருத்தை அதிகமாக மட்டுப்படுத்திப் பலவீனப்படுத்துகிறது. இயங்குகின்ற ஒரு புரதம் அல்லது ஜீன் போன்ற மிகச் சிறிய காரியங்கள்கூட நம்முடைய உண்டாக்கும் திறமைகளுக்கு அப்பாற்பட்டு, சிக்கலானதாகவும், உண்மையில் மனிதனின் அறிவுக்கூர்மை உண்டாக்கிய எல்லாவற்றையும்விட ஒவ்வொரு வகையிலும் மேம்பட்டதாகவும் இருக்கையில் குறிப்பற்ற நிகழ்வுகள் ஓர் உண்மையைக் கட்டியமைத்திருக்கின்றன என்பது உண்மையிலேயே நம்பத்தகுந்ததா?” அவர் மேலும் கூறுகிறார்: “ஓர் உயிரணுவிற்கும், மிக ஒழுங்காக அமைக்கப்பட்ட உயிரற்ற பொருட்களாகிய படிகக்கல் அல்லது பனித்துகள் போன்றவற்றிற்கும் இடையே புரிந்துகொள்ளமுடிகிறபடி மிகப் பெரிய முழுமையான இடைவெளி இருக்கிறது.” இயற்பியல் பேராசிரியர் செட் ரேமோ சொல்கிறார்: “ஒவ்வொரு உயிரணுமமும் அதனுடைய வேலைக்காக அற்புதமாக அமைக்கப்பட்டிருப்பது . . . எனக்கு பிரமிப்பூட்டுவதாய் இருக்கிறது.”

7உயிரணும உயிரியலறிஞர் டென்டன் முடிக்கிறார்: “இந்தப் புதிய உண்மைகளெல்லாம் வெறும் சந்தர்ப்பத்தின் விளைவுகள் என்று இன்னமும் பிடிவாதத்துடன் வாதாடுபவர்கள்” ஒரு கட்டுக்கதையை நம்புகின்றனர். உண்மையில், உயிருள்ள பொருட்கள் தற்செயலாக வந்தன என்ற டார்வீனிய நம்பிக்கையை “இந்தப் பிரபஞ்சம் உண்டானதைப்பற்றிய இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய கட்டுக்கதை” என்று அவர் அழைக்கிறார்.

வடிவமைப்பு வடிவமைப்பாளரைத் தேவைப்படுத்துகிறது

8உயிரற்றப் பொருட்கள், தற்செயலாக, ஏதோ ஒரு யதேச்சையான விபத்தின் காரணமாக உயிர்பெற்றன என்ற சாத்தியம் அத்தனை வாய்ப்புக்குறைவானதாக இருப்பதால் கூடாத காரியமாயிருக்கிறது. இல்லை, உன்னதமாக வடிவமைக்கப்பட்டுள்ள பூமியிலுள்ள எல்லா உயிருள்ளவைகளும் விபத்தின் விளைவாக வந்திருக்கமுடியாது. ஏனென்றால் வடிவமைக்கப்பட்ட காரியங்கள் எல்லாம் ஒரு வடிவமைப்பாளரைக் கொண்டிருக்கவேண்டும். இதற்கு விலக்காக உங்களுக்கு ஏதாவது தெரியுமா? ஒன்றுமில்லை. வடிவமைப்புச் சிக்கலாக இருக்க வடிவமைப்பாளரும் திறம்பட்டவராக இருக்கவேண்டும்.

9இந்தக் காரியத்தை நாம் இவ்விதமாகவும்கூட விளக்கலாம்: நாம் ஓர் ஓவியத்தைக் காணும்போது, ஓர் ஓவியர் இருக்கிறார் என்பதற்கு அது அத்தாட்சி என்று ஏற்றுக்கொள்கிறோம். நாம் ஒரு புத்தகத்தை வாசிக்கும்போது, அதற்கு ஓர் ஆசிரியர் இருக்கிறார் என்று ஒப்புக்கொள்கிறோம். நாம் ஒரு வீட்டைப் பார்க்கும்போது கட்டியவர் ஒருவர் இருக்கிறார் என்று ஏற்றுக்கொள்கிறோம். நாம் ஒரு போக்குவரத்து விளக்கைப் பார்க்கும்போது, ஒரு சட்டம் ஏற்படுத்தும் அமைப்பு இருக்கிறது என்று தெரிந்துகொள்கிறோம். அந்த எல்லா காரியங்களும் ஒரு நோக்கத்துடன் அவற்றை உண்டாக்கியவர்களால் உண்டாக்கப்பட்டன. அவற்றை வடிவமைத்தவர்களைப் பற்றி எல்லாவற்றையும் நம்மால் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், அவர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பற்றி நாம் சந்தேகப்படுவதில்லை.

10அதேபோன்று, ஓர் உன்னத வடிவமைப்பாளர் இருக்கிறார் என்பதற்கு அத்தாட்சி பூமியிலுள்ள உயிர் வாழ்பவற்றின் வடிவமைப்பு, ஒழுங்கு மற்றும் சிக்கலில் காணப்படக்கூடியதாய் இருக்கிறது. இவை எல்லாம் ஓர் உன்னத புத்திக்கூர்மையைக் காட்டுகின்றன. இது கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் அடங்கிய கோடிக்கணக்கான பால்மண்டலங்களைக் கொண்ட பிரபஞ்சத்தின் வடிவமைப்பு, ஒழுங்கு, சிக்கல் இவற்றைப் பற்றியதிலும் உண்மையாக இருக்கிறது. மேலும் விண்ணிலுள்ள பொருட்களெல்லாம், இயக்கம், வெப்பம், ஒளி, ஒலி, மின்காந்தம், ஈர்ப்புசக்தி பற்றிய துல்லியமான சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. சட்டம் அமைப்பவர் இல்லாமல் சட்டங்கள் இருக்கக்கூடுமா? ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் வெர்ன்ஹர் ஃபான் ப்ரான் குறிப்பிட்டார்: “பிரபஞ்சத்தின் இயற்கைச் சட்டங்கள் மிகத் துல்லியமாக இருக்கின்றன. எனவே நமக்குச் சந்திரனுக்குச் செல்ல ஒரு வானவூர்தியைக் கட்டி அதன் பறக்கும் நேரத்தை விநாடியின் பாகம் அளவிற்குத் துல்லியமாகக் கணிப்பதில் எந்தக் கஷ்டமுமில்லை. இந்தச் சட்டங்கள் யாரோ ஒருவரால் அமைக்கப்பட்டிருக்கவேண்டும்.”

11உண்மைதான், இந்த உன்னத வடிவமைப்பாளரை, சட்டப்பிரமாணிகரை நாம் நமது சொல்லர்த்தமான கண்களால் காணமுடியாது. ஆனால் நாம், ஈர்ப்புவிசை, காந்தவிசை, மின்சாரம் அல்லது வானொலி அலைகள் இவற்றைப் பார்க்க முடியாததால் இவை உள்ளன என்பதை மறுக்கிறோமா? இல்லை. அவற்றின் விளைவுகளை நாம் கவனிக்கமுடிவதால் நாம் அவ்வாறு செய்வதில்லை. அப்படியென்றால் ஓர் உன்னத வடிவமைப்பாளரை, சட்டப்பிரமாணிகரை நாம் காணமுடியாதபோதிலும் அவருடைய ஆச்சரியமான கைவேலைகளின் விளைவுகளை நாம் காணமுடிவதால் அவர் இருக்கிறார் என்பதை நாம் ஏன் மறுக்கவேண்டும்?

12இயற்பியல் பேராசிரியர் பால் டேவிஸ், மனிதன் இருப்பது விதியின் ஒரு விளைவு அல்ல என்ற முடிவுக்கு வருகிறார். அவர் கூறுகிறார்: “நாம் இங்கேதான் உண்மையிலேயே இருக்கவேண்டும்.” பிரபஞ்சத்தைப்பற்றி அவர் கூறுகிறார்: “என்னுடைய விஞ்ஞான வேலையின் மூலம், இந்தச் சொல்லர்த்தமான பிரபஞ்சம் வியக்கவைக்கும் அறிவுக்கூர்மையினால் அமைக்கப்பட்டது என்பதை நான் மேன்மேலும் உறுதியாக நம்புகிறேன். இது ஒரு காரணமற்ற நிகழ்வினால் வந்தது என்பதை என்னால் ஏற்கமுடியாது. இதைவிட ஆழமான விளக்கம் இதற்கு இருக்கவேண்டுமென்று தோன்றுகிறது.”

13எனவே, இந்தப் பிரபஞ்சம், பூமி மற்றும் பூமியின் மேல் உயிர்வாழ்பவையெல்லாம் தற்செயலாக வந்திருக்கமுடியாது என்று அத்தாட்சி நமக்குச் சொல்கிறது. அவையெல்லாம் ஓர் உயர்ந்த புத்திக்கூர்மையுள்ள, வல்லமைவாய்ந்த சிருஷ்டிகருக்கு மெளனமான அத்தாட்சியை அளிக்கின்றன.

பைபிள் என்ன சொல்கிறது

14மனிதகுலத்தின் மிகப் பழமையான புத்தகமான பைபிள் இதே முடிவுக்கு வருகிறது. உதாரணமாக, அப்போஸ்தலன் பவுல் எழுதிய பைபிள் புத்தகம் எபிரெயரில் நாம் சொல்லப்படுகிறோம்: “ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன்.” (எபிரெயர் 3:4) அப்போஸ்தலன் யோவான் எழுதிய பைபிளின் கடைசிப் புத்தகமும் சொல்கிறது: “கர்த்தாவே, தேவரீர் மகிமையையும் கனத்தையும், வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர்; உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும், சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது.”—வெளிப்படுத்துதல் 4:11.

15கடவுளைப் பார்க்கமுடியாவிட்டாலும், அவர் எப்படிப்பட்ட கடவுள் என்பதை அவர் உண்டாக்கியிருக்கிறவற்றினால் புரிந்துகொள்ளமுடியும் என்பதாக பைபிள் காட்டுகிறது. அது சொல்கிறது: “[சிருஷ்டிகரின்] காணக்கூடாத பண்புகள், அதாவது அவருடைய நித்திய வல்லமை மற்றும் தேவத்துவம் என்பவைகள், அவர் உண்டாக்கியிருக்கின்றவைகளாலே, உலகமுண்டானது முதல், நியாயத்தின் கண்களுக்குக் காணப்படும்.”—ரோமர் 1:20, தி நியு இங்கிலீஷ் பைபிள்.

16எனவே பைபிள் நம்மை விளைவிலிருந்து காரணத்திற்குக் கொண்டுசெல்கிறது. உண்டாக்கப்பட்டிருக்கும் பிரமிப்பூட்டும் காரியங்களுடைய விளைவு, புத்திக்கூர்மையுள்ள, வல்லமையுள்ள காரணத்திற்கு, கடவுளுக்கு, அத்தாட்சியாகிறது. மேலும் அவர் காணக்கூடாதவராக இருப்பதற்கு நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்கவேண்டும். ஏனென்றால் இந்தப் பிரபஞ்சத்தின் சிருஷ்டிகராக, மாம்சமும் இரத்தமுமான மனிதர்கள் பார்த்துவிட்டுத் தப்பிப்பிழைத்திருக்கமுடியாத அளவு வல்லமையுள்ளவராக அவர் இருக்கிறார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இதையேதான் பைபிள் சொல்கிறது: “ஒரு மனுஷனும் [கடவுளை] கண்டு உயிரோடிருக்கக்கூடாது.”—யாத்திராகமம் 33:20.

17இந்த மகத்தான வடிவமைப்பாளர், உன்னதமானவரைப் பற்றிய—கடவுளைப்பற்றிய—கருத்து நமக்கு வெகு முக்கியமாக இருக்கவேண்டும். நாம் ஒரு சிருஷ்டிகரால் உண்டாக்கப்பட்டிருந்தால், நம்மை உண்டாக்கியதற்கு நிச்சயமாகவே அவர் ஒரு காரணத்தை, ஒரு நோக்கத்தைக் கொண்டிருக்கவேண்டும். நாம் வாழ்க்கையில் ஒரு நோக்கத்தைக் கொண்டிருக்கவேண்டுமென்று உண்டாக்கப்பட்டிருந்தால், எதிர்காலத்தில் காரியங்கள் நமக்கு மேம்பட்டதாக இருக்கும் என்று நம்புவதற்குக் காரணமிருக்கிறது. இல்லாவிடில், நாம் நம்பிக்கையின்றி ஏதோ வாழ்ந்து மடிவோம். எனவே நமக்கான கடவுளின் நோக்கம் என்னவென்று கண்டுபிடிக்கவேண்டியது மிக முக்கியமானதாகும். அதன்பின் அதற்கிசைவாக நாம் வாழவிரும்புகிறோமா இல்லையா என்று நாமே தெரிவுசெய்யலாம்.

18மேலும் சிருஷ்டிகர், நம்மேல் வெகுவாக அக்கறைக்கொண்டுள்ள ஓர் அன்பான கடவுள் என்று பைபிள் சொல்கிறது. அப்போஸ்தலன் பேதுரு சொன்னார்: ‘அவர் உங்களை விசாரிக்கிறவர்.’ (1 பேதுரு 5:7; யோவான் 3:16-ஐயும் 1 யோவான் 4:8, 16-ஐயும் பார்க்கவும்.) வியப்படையத்தக்க வகையில் மனதிலும் உடலிலும் அவர் நம்மைப் படைத்திருப்பதைக் கருத்திற்கொள்வது, கடவுள் நம்மீது எவ்வளவு அக்கறைகொண்டுள்ளார் என்பதை காண்பதற்கு ஒரு வழியாகும்.

“அதிசயமாய் உண்டாக்கப்பட்டிருத்தல்”

19பைபிளில் சங்கீதக்காரன் தாவீது ஒப்புக்கொள்கிறார்: ‘நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டேன்.’ (சங்கீதம் 139:14) உன்னத வடிவமைப்பாளரால், மனித மூளையும், உடலும் அதிசயமாய் வடிவமைக்கப்பட்டதால், நிச்சயமாகவே அதுதான் உண்மை.

20உதாரணமாக, எந்தக் கம்ப்யூட்டரையும்விட, உங்களுடைய மூளை அதிகச் சிக்கலானது. தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா குறிப்பிடுகிறது: “எந்த மிகப் பெரிய தொலைபேசி தொடர்பு மையத்தைவிடவும், நரம்பு மண்டலத்திற்குள் தகவல் பரப்பப்படுவது அதிகச் சிக்கலானது. அதிக சக்திவாய்ந்த கம்ப்யூட்டர்களைவிட, புதிர்களை விடுவிப்பதில் மனித மூளை சக்திவாய்ந்ததாய் இருக்கிறது.”

21கோடிக்கணக்கான உண்மைகளும், மனக்காட்சிகளும் உங்கள் மூளையில் சேமித்து வைக்கப்படுகின்றன. ஆனால் அது வெறுமனே உண்மைகளைச் சேமித்துவைக்கும் இடமட்டுமல்ல. அதைக்கொண்டு நீங்கள் சீட்டியடிக்க, ரொட்டி சுட, அந்நிய மொழிகளைப் பேச, ஒரு கம்ப்யூட்டரை இயக்க அல்லது ஒரு விமானத்தை ஓட்ட கற்றுக்கொள்ளலாம். ஒரு விடுமுறை எவ்வாறிருக்குமென்றோ ஒரு பழம் எப்படி ருசிக்கும் என்றோ உங்களால் கற்பனைசெய்துபார்க்க முடியும். உங்களால் பொருட்களை ஆராய்ந்து, அவற்றைச் செய்யமுடியும். உங்களால் திட்டமிட, பாராட்ட, அன்புகாட்ட, இறந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்துடன் உங்கள் சிந்தனைகளைத் தொடர்புபடுத்திப் பார்க்கமுடியும். பிரமிக்க வைக்கும் மனித மூளை போன்ற ஒன்றை மனிதர்களாகிய நாம் வடிவமைக்க முடியாததால், அதை வடிவமைத்த ஒருவர் எந்த மனிதனையும்விட அதிக ஞானமும், திறமையும் உள்ளவர் என்பது தெளிவாயிருக்கிறது.

22மூளையைக் குறித்து அறிவியல் அறிஞர்கள் ஒப்புக்கொள்கின்றனர்: “இந்த மகத்தான வடிவமைக்கப்பட்ட, ஒழுங்கான, சிலிர்க்கவைக்கும் விதத்தில் சிக்கலான இயந்திரமானது எப்படி இந்தக் காரியங்களைச் செய்கிறது என்பது தெரியவில்லை. . . . மூளை விடுக்கின்ற எல்லா தனித்தனியான புதிர்களையும் மனிதர்கள் ஒருவேளை ஒருபோதும் தீர்க்கமுடியாமல் இருக்கலாம்.” (சயன்டிஃபிக் அமெரிக்கன்) இயற்பியல் பேராசிரியர் ரேய்மோ சொல்கிறார்: “உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், மனித மூளை எப்படித் தகவல்களைச் சேகரிக்கின்றது அல்லது வேண்டுமென்கிறபொழுது எப்படி நினைவுகளை மறுபடியும் அழைக்கின்றது என்பவை இன்னமும் நமக்குத் தெரியாது. . . . மனித மூளையில் பத்தாயிரம் கோடிக்கணக்கான நரம்பு அணுக்கள் உள்ளன. மரம்போன்ற கூடல்வாய்களால் ஒவ்வொரு அணுவும் ஆயிரக்கணக்கான மற்ற அணுக்களுடன் தொடர்பு கொள்கின்றன. எந்த அளவு உட்தொடர்புகள் இருக்கலாம் என்பது திகைப்பூட்டும் விதத்தில் மிகச் சிக்கலாக இருக்கிறது.”

23எந்தப் புகைப்படக்கருவியைவிடவும் உங்கள் கண்கள் துல்லியமானதாக, தேவைக்குத் தக்கவாறு மாற்றியமைத்துக் கொள்ளக்கூடியதாக இருக்கின்றன; உண்மையில் அவை முழுமையாக தானியங்குபவையாக, தானாகக் குவியும், வண்ண, இயங்கும் படங்களின் புகைப்படக்கருவிகளாகும். உங்களுடைய காதுகள் பலவகைப்பட்ட சப்தங்களைக் கண்டுணர்ந்து உங்களுக்குத் திசை மற்றும் சமநிலை உணர்வைக் கொடுக்கின்றன. உங்களுடைய இருதயம், மிகச் சிறந்த பொறியாளர்கள்கூட இதற்கு இணையான ஒரு போலியைத் தயாரிக்க முடியாத திறமைகளுடைய விசைக்குழாய் ஆகும். மற்ற உடல் உறுப்புகளும் மகத்தானவையாகும்: சிலவற்றைக்கூற உங்கள் மூக்கு, நாக்கு, கைகள், இரத்த ஓட்ட மற்றும் செரிமான மண்டலங்கள்.

24இவ்விதமாக ஒரு பெரிய கம்ப்யூட்டரை வடிவமைக்கவும், கட்டவும் அமர்த்தப்பட்ட ஒரு பொறியாளர் இவ்விதமாக நியாயப்படுத்தினார்: “என்னுடைய கம்ப்யூட்டர் ஒரு வடிவமைப்பாளரைத் தேவைப்படுத்தினால், இந்தப் பிரமாண்டமான பிரபஞ்சத்தில் மிகச் சிறிய ஒரு பாகமாக இருக்கும், அதிகச் சிக்கலான உறுப்பியல்-வேதியியல்-உயிரியல் இயந்திரமாகிய என்னுடைய மனித உடல் எவ்வளவு அதிகமாக ஒரு வடிவமைப்பாளரைத் தேவைப்படுத்தும்?”

25விமானங்கள், கம்ப்யூட்டர்கள், மிதிவண்டிகள் மற்ற இயந்திரங்களை உண்டாக்குவதில் மனிதர்கள் எப்படி ஒரு நோக்கத்தை மனதில் கொண்டுள்ளனரோ அதேபோன்று மனித மூளை மற்றும் உடலின் வடிவமைப்பாளரும் நம்மை வடிவமைத்ததில் ஒரு நோக்கத்தைக் கொண்டிருக்கவேண்டும். இந்த வடிவமைப்பாளர் மனிதரைவிட மிக உயர்ந்த ஞானத்தைக்கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் நாம் யாருமே அவருடைய வடிவமைப்புக்கு நகல் எடுக்கமுடியாது. எனவே அவர்தான், நம்மை ஏன் வடிவமைத்தார், ஏன் பூமியில் வைத்தார், நாம் எங்கே செல்கிறோம் என்பவற்றைப் பற்றி சொல்லமுடியுமென்பது நியாயமானது.

26அவற்றை நாம் கற்றறியும்போது, கடவுள் நமக்குக் கொடுத்த அதிசயமான மூளையையும், உடலையும் வாழ்க்கையில் நம்முடைய நோக்கத்தை நிறைவேற்றும் விதத்தில் உபயோகப்படுத்த முடியும். ஆனால் அவருடைய நோக்கங்கள் பற்றி நாம் எங்கே கற்றறியலாம்? அந்தத் தகவல்களை அவர் நமக்கு எங்கே கொடுக்கிறார்?

[கேள்விகள்]

1, 2. வடிவமைக்கப்பட்ட ஏதோ ஒன்றின் நோக்கத்தைப்பற்றி கண்டுபிடிக்க சிறந்த வழி என்ன?

3, 4. உயிர் தற்செயலாகத் தோன்றியது என்பதற்கு என்ன சாத்தியம் இருக்கிறது?

5-7. உயிர்வாழ்பவைகள் தற்செயலாகத் தோன்றியிருக்கமுடியாது என்பதை உயிரணும உயிரியல் எவ்விதமாக நிரூபித்துக்காட்டுகிறது?

8, 9. வடிவமைக்கப்பட்ட காரியங்கள் எல்லாம் வடிவமைப்பாளரைக் கொண்டிருக்கவேண்டும் என்பதைக் காண்பிக்கும் ஓர் உதாரணம் கொடுங்கள்.

10. ஓர் உன்னத வடிவமைப்பாளருக்கான என்ன அத்தாட்சி காணப்படக்கூடியதாய் இருக்கிறது?

11. உன்னத வடிவமைப்பாளரை நாம் காணமுடியாது என்பதற்காக அவர் இருக்கிறார் என்பதை நாம் ஏன் மறுக்கக்கூடாது?

12, 13. சிருஷ்டிகர் இருப்பதைப்பற்றி அத்தாட்சி என்ன சொல்கிறது?

14. சிருஷ்டிகரைப்பற்றி பைபிள் என்ன முடிவுக்கு வருகிறது?

15. கடவுளுடைய பண்புகளில் சிலவற்றை நாம் எவ்வாறு புரிந்துகொள்ளமுடியும்?

16. மனிதர்கள் கடவுளைக் காணமுடியாதிருப்பதற்காக நாம் ஏன் மகிழ்ச்சியுள்ளவர்களாய் இருக்கவேண்டும்?

17, 18. ஒரு சிருஷ்டிகரைப்பற்றிய கருத்து நமக்கு ஏன் முக்கியமானது?

19. சங்கீதக்காரன் தாவீது என்ன உண்மையை நம் கவனத்துக்குக் கொண்டுவருகிறார்?

20. மனித மூளையை ஓர் என்ஸைக்ளோப்பீடியா எவ்விதமாக விளக்குகிறது?

21. மூளை என்ன செய்கிறது என்பதை நாம் காண்கையில் என்ன முடிவுக்கு நாம் வரவேண்டும்?

22. மனித மூளையைப்பற்றி அறிவியல் அறிஞர்கள் என்ன ஒப்புக்கொள்கின்றனர்?

23, 24. அதிசயமாய் வடிவமைக்கப்பட்ட ஒருசில உடல்உறுப்புக்களை குறிப்பிடவும், ஒரு பொறியாளர் என்ன சொன்னார்?

25, 26. மிக உயர்ந்த வடிவமைப்பாளர் நமக்கு என்ன சொல்லக்கூடியவராக இருக்கவேண்டும்?

[பக்கம் 7-ன் படம்]

ஏதோவொன்று ஏன் வடிவமைக்கப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்வதற்கு மிகச் சிறந்த வழி வடிவமைப்பாளரைக் கேட்பதாகும்

[பக்கம் 8-ன் படம்]

உயிருள்ள பொருட்களின் சிக்கலும் வடிவமைப்பும் டி.என்.ஏ. அணுத்திரண்மத்தில் காணப்படமுடியும்

[பக்கம் 9-ன் படம்]

“அதிக சக்திவாய்ந்த கம்ப்யூட்டர்களைவிட, புதிர்களை விடுவிப்பதில் மனித மூளை சக்திவாய்ந்ததாய் இருக்கிறது”