Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கிறதா?

வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கிறதா?

பகுதி 1

வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்கிறதா?

தாவது ஒரு சமயத்தில், கிட்டத்தட்ட ஒவ்வொரு நபரும் வாழ்க்கையின் நோக்கந்தான் என்ன என்பதை அறிய ஆவலாய் இருக்கிறார்கள். நம்முடைய வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்திக்கொள்ள கடினமாக உழைப்பதும், நம்முடைய குடும்பங்களைக் காப்பாற்றுவதும், ஒருவேளை 70 அல்லது 80 வருடங்களுக்குப்பிறகு மரித்துப் பின்னர் என்றைக்குமாக இல்லாமற்போவதற்குந்தானா? இவ்விதமாக நினைத்த ஓர் இளவயது மனிதர் “வாழ்ந்து, பிள்ளைகளைப் பெற்று, மகிழ்ச்சியாக இருந்து பின்னர் சாவதைத்” தவிர வாழ்க்கையில் வேறு எந்த நோக்கமுமில்லை என்பதாகச் சொன்னார். ஆனால் அது உண்மையா? மேலும் மரணம் உண்மையில் எல்லா செயல்நடவடிக்கையின் முடிவாகவும் இருக்கிறதா?

2கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய நாடுகளிலுள்ள அநேகர் பொருள் செல்வத்தைச் சம்பாதிப்பதே வாழ்வதில் முக்கிய நோக்கம் என்பதாக நினைக்கிறார்கள். இது ஒரு மகிழ்ச்சியான, அர்த்தமுள்ள வாழ்க்கைக்கு வழிநடத்தக்கூடும் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் ஏற்கெனவே பொருள் செல்வமுடைய மக்களைப் பற்றி என்ன? கனடா நாட்டு எழுத்தாளர் ஹேரி ப்ரூஸ் சொன்னார்: “திகைக்கவைக்கும் எண்ணிக்கையில் பணக்காரர்கள் தாங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்று அழுத்தமாகச் சொல்கிறார்கள்.” மேலும் அவர் சொன்னார்: “நன்மையில் நம்பிக்கையின்மை வட அமெரிக்காவைப் பயங்கரமாக தொற்றிக்கொண்டிருப்பதை வாக்கெடுப்புகள் காண்பிக்கின்றன . . . இந்த உலகில் எவராவது மகிழ்ச்சியாக இருக்கின்றனரா? அப்படியானால், மகிழ்ச்சியின் திறவுகோல்தான் என்ன?”

3முன்னாள் ஐ.மா. ஜனாதிபதி ஜிம்மி கார்டர் சொன்னார்: “பொருட்களை உடைமையாகக் கொண்டிருப்பதும் பொருட்களை நுகர்வதுந்தானே அர்த்தத்திற்கான நம்முடைய ஏக்கத்தைத் திருப்திசெய்வதில்லை என்பதை நாம் கண்டுபிடித்திருக்கிறோம். . . . பொருட்களைச் சேர்ப்பது எந்த நம்பிக்கையும் அல்லது நோக்கமுமில்லாத வாழ்க்கையின் வெறுமையை நிரப்பிடமுடியாது.” மற்றொரு அரசியல் தலைவர் சொன்னார்: “பல வருடங்களாக நான் இப்பொழுது என்னையும் என் வாழ்க்கையையும் பற்றிய உண்மைகளைத் தீவிரமாக தேடுவதில் ஈடுபட்டிருக்கிறேன்; எனக்குத் தெரிந்த மற்ற அநேக ஆட்களும் இதையே செய்கிறார்கள். ‘நாம் யார்? நம்முடைய நோக்கமென்ன?’ என்பதாக என்றைக்கும்விட அதிகமான ஆட்கள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.”

அதிக கடினமான நிலைமைகள்

4வாழ்க்கை நிலைமைகள் அதிக கடினமாவதைக் காணும்போது, அநேகர் வாழ்க்கைக்கு ஒரு நோக்கமிருப்பதைக் குறித்துச் சந்தேகிக்கிறார்கள். உலகம் முழுவதிலும், 100 கோடிக்கும் அதிகமான ஆட்கள் மோசமாக நோயுற்றோ போஷாக்கு இல்லாமலோ இருப்பது ஆப்பிரிக்காவில் மட்டுமே ஆண்டுதோறும் சுமார் 1 கோடி பிள்ளைகளின் மரணத்தில் விளைவடைகிறது. ஏறக்குறைய 600 கோடியாக இருக்கும் பூமியின் மக்கள்தொகை, ஆண்டுக்கு 9 கோடிக்கும் அதிகமாக தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அந்த வளர்ச்சியில் 90 விழுக்காடுக்கும் அதிகம் வளர்ந்துவரும் தேசங்களில் ஏற்படுகிறது. ஓயாது விரிவாகிவரும் இந்த மக்கள்தொகை உணவு, வீட்டுவசதி மற்றும் தொழிற்சாலைக்கான தேவையை அதிகரிக்க, இது தொழிற்சாலைகளிலிருந்தும் மற்ற கெடுதிவிளைவிக்கும் இரசாயனப்பொருட்களிலிருந்தும் நிலம், நீர் மற்றும் காற்றுக்கு மேலுமான சேதத்தைக் கொண்டுவருகிறது.

5உலக இராணுவ மற்றும் சமுதாயச் செலவுகள் 1991 (World Military and Social Expenditure 1991) என்ற பிரசுரம் அறிவிக்கிறது: “ஒவ்வொரு ஆண்டும் [மகா பிரிட்டனின்] முழு பரப்பளவுக்குச் சமமான காட்டு நிலப்பகுதி அழிக்கப்படுகிறது. (மரம்வெட்டி திறந்த வெளியாக்கப்படும்) தற்போதைய வேகத்தில், 2000 ஆண்டுக்குள், சற்று ஈரமான வெப்பமண்டல பகுதிகளிலுள்ள காடுகளில் 65 விழுக்காட்டை நாம் அப்புறப்படுத்தியிருப்போம்.” அந்தப் பகுதிகளில், ஐநா ஏஜென்ஸி ஒன்றின் பிரகாரம், நடப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் 10 மரங்கள் வெட்டப்படுகின்றன. ஆப்பிரிக்காவில் விகிதப் பொருத்தம் 1-க்கு 20-ஐவிட அதிகமாக உள்ளது. ஆகவே பாலைவனத்தின் நிலப்பரப்பு அதிகமாகிறது, ஒவ்வொரு ஆண்டும் பெல்ஜியம் அளவான நிலப்பரப்பு வேளாண்மை உபயோகத்துக்காக இழக்கப்படுகிறது.

6மேலும், இந்த 20-ம் நூற்றாண்டில் போரினால் ஏற்பட்ட மரணங்கள், அதற்கு முந்தைய நான்கு நூற்றாண்டுகளில் ஏற்பட்டதை ஒன்றாகச் சேர்த்தாலும் கிடைப்பதைக் காட்டிலும் நான்கு மடங்காக இருந்திருக்கிறது. எல்லா இடங்களிலும் குற்றச்செயலில், விசேஷமாக வன்முறையான குற்றச்செயலில் அதிகரிப்பு இருக்கிறது. குடும்பச் சீர்குலைவு, போதைப்பொருள் துர்ப்பிரயோகம், எய்ட்ஸ், பாலுறவினால் கடத்தப்படும் நோய்கள் மற்றும் மற்ற எதிர்மறையான காரணிகளுங்கூட வாழ்க்கையை அதிக கடினமானதாக்கிவிடுகிறது. உலகத் தலைவர்கள் மனித குடும்பத்தைத் தொல்லைப்படுத்தும் அநேக பிரச்னைகளுக்குப் பரிகாரத்தை அளிக்க இயலாதவர்களாக இருந்திருக்கிறார்கள். இதன் காரணமாக வாழ்க்கையின் நோக்கம் தான் என்ன? என்பதாக மக்கள் கேட்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.

7அந்தக் கேள்வியைக் கல்விமான்களும் மதத் தலைவர்களும் எவ்விதமாக சமாளித்திருக்கிறார்கள்? எப்படியிருந்தாலும் இந்த அநேக நூற்றாண்டு காலம் கடந்துவிட்ட நிலையில், அவர்கள் திருப்திகரமான ஒரு பதிலை அளித்திருக்கிறார்களா?

அவர்கள் என்ன சொல்கிறார்கள்

8கன்பூசிய கல்விமான் டு வீ-மிங் சொன்னார்: “வாழ்க்கையின் முடிவான அர்த்தம் நம்முடைய சாதாரணமான மனிதவாழ்வில் காணப்படுகிறது.” இந்தக் கருத்தின்படி, மனிதர்கள் தொடர்ந்து பிறந்துகொண்டும், வாழ்வதற்குப் போராடிக்கொண்டும், பின்னர் மரித்துக்கொண்டுமிருப்பர். இப்படிப்பட்ட ஒரு மனோபாவத்தில் எந்த நம்பிக்கையுமில்லை. அது உண்மையாகவுங்கூட இருக்குமா?

9இரண்டாவது உலகப்போரில், படுகொலை நிகழ்ந்த நாசி மரண முகாமிலிருந்து உயிர்ப்பிழைத்து வந்த எலி வீஸல் குறிப்பிட்டார்: “‘நாம் ஏன் இங்கே இருக்கிறோம்?’ என்பதே ஒரு மனிதன் எதிர்ப்படவேண்டிய அதிமுக்கியமான ஒரு கேள்வியாகும். . . . நான் கண்ணால் பார்த்த அர்த்தமற்ற மரணத்தின் மத்தியிலும் வாழ்க்கைக்கு அர்த்தமுண்டு என்று நான் நம்புகிறேன்.” ஆனால் வாழ்க்கையின் அர்த்தம் என்ன என்பதை அவரால் சொல்லமுடியவில்லை.

10பதிப்பாசிரியர் வர்மான்ட் ராய்ஸ்டர் சொன்னார்: “மனிதனைப்பற்றியும், . . . இந்தப் பிரபஞ்சத்தில் அவனுக்குரிய இடத்தைப் பற்றியும் நாம் ஆழ்ந்து யோசிக்கையில், காலம் ஆரம்பமானதிலிருந்து நாம் வெகுதூரம் வந்துவிடவில்லை. நாம் யார், நாம் ஏன் இருக்கிறோம் மற்றும் நாம் எங்கே செல்கிறோம் என்ற கேள்விகள் நமக்கு இன்னமும் எஞ்சியிருக்கின்றன.”

11பரிணாம விஞ்ஞானி ஸ்டீஃபன் ஜே ஃகூல்ட் குறிப்பிட்டார்: “‘மேம்பட்ட’ பதிலுக்கு நாம் மிகுந்த ஆவலாயிருக்கக்கூடும்—ஆனால் எதுவுமில்லை.” இப்படிப்பட்ட பரிணாமவாதிகளுக்கு வாழ்க்கை, வல்லனவற்றின் வாழ்வுவளமாக, மரணம் அனைத்தையும் முடித்துவிடுவதாக இருக்கிறது. அந்தக் கருத்திலுங்கூட எந்த நம்பிக்கையுமில்லை. மேலும், மறுபடியுமாக, அது உண்மையா?

12மரணத்தின்போது ஒரு நபரின் ஆத்துமா பரலோகத்துக்குச் சென்று நித்தியத்தை அங்கே கழிக்கும்பொருட்டு நல்ல வாழ்க்கையை நடத்துவதே வாழ்க்கையின் நோக்கம் என்பதாக அநேக மதத் தலைவர்கள் சொல்கிறார்கள். கெட்ட ஆட்களுக்கு அளிக்கப்படும் மாற்றிடம் நரக அக்கினியில் நித்திய வாதனையாகும். இருந்தபோதிலும் இந்த நம்பிக்கையின் பிரகாரம், வரலாறு முழுவதிலும் இருந்துவந்திருக்கும் அதே திருப்தியற்ற நிலைமையே பூமியில் இன்னும் அதிகம் தொடர்ந்து இருக்கும். ஆனால் மக்கள் விண்ணில் தேவதூதர்களைப் போல வாழ்வது கடவுளுடைய நோக்கமாக இருக்குமானால், அவர் தேவதூதர்களைப் படைத்ததுபோலவே ஆரம்பத்திலேயே அவர்களை ஏன் அவ்விதமாக படைக்கவில்லை?

13பாதிரிமார்களுங்கூட இப்படிப்பட்ட கருத்துக்களைக் கடினமாக காண்கிறார்கள். இறையியலில் டாக்டர் பட்டம்பெற்ற லண்டனிலுள்ள செயின்ட் பால்ஸ் கத்தீட்ரலின் முன்னாள் குரு W. R. இஞ்ச் ஒருசமயம் சொன்னார்: “என் வாழ்நாள் முழுவதிலும் வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடிக்க நான் போராடியிருக்கிறேன். எனக்கு எப்போதும் முக்கியமானதாகத் தோன்றியிருக்கும் மூன்று பிரச்னைகளுக்கு விடை காண நான் முயன்றிருக்கிறேன்: நித்தியத்தின் பிரச்னை; மனித ஆளுமையின் பிரச்னை; தீமையின் பிரச்னை. நான் தோற்றுப்போனேன். அவற்றில் ஒன்றையும் நான் தீர்க்கவில்லை.”

விளைவு

14வாழ்க்கையின் நோக்கம் பற்றிய கேள்வியின் பேரில் கல்விமான்கள் மற்றும் மதத் தலைவர்களுடைய இத்தனை அநேக வித்தியாசமான கருத்துக்களின் விளைவு என்னவாக இருக்கிறது? அநேகர் இவ்வாறு சொன்ன ஒரு வயதான மனிதரைப்போல பிரதிபலிக்கிறார்கள்: “என் வாழ்நாளில் எப்போதும் நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறேன். நோக்கம் ஒன்று இருக்கிறதென்றால் இனிமேலும் எனக்கு அக்கறை இல்லை.”

15உலக மதங்களின் மத்தியில் கருத்துக்கள் மிகுதியாக இருப்பதைக் கவனிக்கும் அநேகர் ஒருவர் என்ன நம்புகிறார் என்பது உண்மையில் முக்கியத்துவமுள்ளதாயில்லை என்ற முடிவுக்கு வருகிறார்கள். மதம் என்பது மனதுக்கு வெறுமனே ஒரு பொழுதுபோக்கு, ஒருவர் வாழ்க்கையின் பிரச்னைகளைச் சமாளிக்கும் பொருட்டுச் சற்றே மன அமைதியையும் ஆறுதலையும் அளிப்பதற்கு ஏதோவொன்று என்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். மற்றவர்கள் மதம் மூடநம்பிக்கையேயன்றி வேறொன்றும் இல்லை என்று நினைக்கிறார்கள். மதசம்பந்தமான பல நூற்றாண்டு தீவிர சிந்தனையுங்கூட வாழ்க்கையின் நோக்கம் பற்றிய கேள்விக்கு விடையளிக்கவோ பொது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தவோ இல்லை என்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆம், உலகின் மதங்கள் அடிக்கடி மனிதவர்க்கத்தின் முன்னேற்றத்துக்குத் தடங்கலாக இருந்து பகைமைக்கும் போர்களுக்கும் காரணமாக இருந்திருக்கின்றன என்பதை வரலாறு காண்பிக்கிறது.

16இருப்பினும், வாழ்க்கையின் நோக்கம் பற்றிய உண்மையைக் கண்டுபிடிப்பதேகூட முக்கியமாக இருக்கிறதா? மன-நல வாழ்க்கைத்தொழிலர் விக்டர் ஃபிராங்கல் பதிலளித்தார்: “ஒருவருடைய வாழ்க்கையில் அர்த்தத்தைக் கண்டுபிடிக்க பிரயாசப்படுவதே மனிதனிலிருக்கும் அடிப்படையான செயல்நோக்கமளிக்கும் சக்தியாகும். . . . மிகமோசமான நிலைமைகளிலுங்கூட தொடர்ந்து வாழ உண்மையில் ஒருவருக்கு அத்தனை திறம்பட உதவிசெய்யக்கூடியது ஒருவருடைய வாழ்க்கைக்கு அர்த்தமுண்டு என்று அறிந்திருப்பதைக் காட்டிலும் உலகில் வேறு எதுவுமில்லை என்று நான் தைரியமாகச் சொல்லுவேன்.”

17வாழ்க்கையின் நோக்கமென்ன என்பதற்கு மனித தத்துவங்களும் மதங்களும் திருப்திகரமாக விளக்கமளித்திராத காரணத்தால், அது என்ன என்பதைக் கண்டுபிடிக்க நாம் எங்கே செல்லமுடியும்? இந்த விஷயத்தைப் பற்றிய உண்மையை நமக்குச் சொல்லக்கூடிய மேலான ஞானத்தின் ஊற்றுமூலம் இருக்கிறதா?

மொழிபெயர்ப்பு இன்னதென்று குறிக்கப்படாத வசன மேற்கோள்கள் தமிழ் யூனியன் மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டவை.

[கேள்விகள்]

1. வாழ்க்கையின் நோக்கம்பற்றி அடிக்கடி கேட்கப்படுவது என்ன, ஒரு மனிதர் எவ்விதமாக விளக்கம் கூறினார்?

2, 3. பொருள் செல்வத்தைச் சம்பாதிப்பதே ஏன் வாழ்க்கையில் போதுமான ஒரு நோக்கமாக இல்லை?

4. வாழ்க்கைக்கு ஏதாவது நோக்கமிருப்பதைச் சிலர் ஏன் சந்தேகிக்கிறார்கள்?

5. பூமியிலுள்ள தாவரங்களுக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறது?

6, 7. மனித தலைவர்களால் தீர்க்க இயலாதிருக்கும் ஒரு சில பிரச்னைகள் யாவை, ஆகவே என்ன கேள்விகள் பதிலளிக்கப்படுவது அவசியம்?

8, 9. () வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி ஒரு சீன கல்விமான் என்ன சொன்னார்? (நாசி மரண-முகாமிலிருந்து உயிர்ப்பிழைத்துவந்த ஒருவர் என்ன சொன்னார்?

10, 11. () பதில்கள் மனிதனிடமில்லை என்பதை ஒரு பதிப்பாசிரியர் எவ்விதமாக காண்பித்தார்? (பரிணாம விஞ்ஞானியின் கருத்து ஏன் திருப்தியளிப்பதில்லை?

12, 13. சர்ச் தலைவர்களின் கருத்துக்கள் யாவை, உலகப்பிரகாரமான பார்வையாளர்களுடையதைவிட அவை அதிக திருப்தியளிப்பதாய் இருக்கின்றனவா?

14, 15. முரண்படுகின்ற கருத்துக்கள் அநேக ஆட்களின் மீது என்ன பாதிப்பைக் கொண்டிருக்கின்றன?

16. வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடிப்பது எவ்வளவு முக்கியமாய் இருக்கக்கூடும்?

17. என்ன கேள்விகளை நாம் இப்பொழுது கேட்பது அவசியமாயிருக்கிறது?

[பக்கம் 4-ன் படம்]

“ஒவ்வொரு ஆண்டும் [மகா பிரிட்டனின்] முழு பரப்பளவுக்குச் சமமான காட்டு நிலப்பகுதி அழிக்கப்படுகிறது”

[பக்கம் 5-ன் படம்]

“என் வாழ்நாளில் எப்போதும் நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று கேட்டுக்கொண்டே இருந்திருக்கிறேன்”