Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கைக்கு மகத்தானஒரு நோக்கமுண்டு

வாழ்க்கைக்கு மகத்தானஒரு நோக்கமுண்டு

பகுதி 5

வாழ்க்கைக்கு மகத்தானஒரு நோக்கமுண்டு

1பூமியும் அதன் உயிர்பொருட்களும் உண்டாக்கப்பட்டுள்ள விதம், அவற்றின் சிருஷ்டிகர் உண்மையில் அக்கறையுள்ள ஓர் அன்பான கடவுள் என்பதைக் காட்டுகிறது. அவருடைய வார்த்தை, பைபிள் அவர் அக்கறையுடையவராய் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. பின்வரும் இந்தக் கேள்விகளுக்கு அது மிகச் சிறந்த பதில்களை நமக்குக் கொடுக்கிறது: நாம் ஏன் இங்கே உலகத்தில் இருக்கிறோம்? மேலும் நாம் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம்?

2அந்தப் பதில்களுக்காக நாம் பைபிளை ஆராய்வது அவசியமாகும். கடவுளுடைய வார்த்தை சொல்கிறது: “நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.” (2 நாளாகமம் 15:2) அப்படியென்றால் கடவுளுடைய வார்த்தையில் தேடுவது நமக்கான அவருடைய நோக்கத்தைப்பற்றி என்ன வெளிப்படுத்துகிறது?

கடவுள் ஏன் மனிதர்களைப் படைத்தார்

3கடவுள் பூமியை, மனிதரை விசேஷமாக மனதிற்கொண்டே தயார் செய்தார் என்று பைபிள் காட்டுகிறது. ஏசாயா 45:18 பூமியைப்பற்றி கடவுள் ‘வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் [ஆனால்] அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்தார்,’ என்று சொல்கிறது. மேலும் மனிதர்களுக்கு வெறுமனே வாழ்வதற்கு அல்ல, வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பதற்கு அவர்களுக்குத் தேவைப்படும் அனைத்தையும் பூமிக்கு அளித்தார்.—ஆதியாகமம் அதிகாரங்கள் 1 மற்றும் 2.

4அவருடைய வார்த்தையில், கடவுள் முதல் மானிடர்களை, ஆதாமையும் ஏவாளையும் படைப்பதைப்பற்றி சொல்லிவிட்டு மனித குடும்பத்துக்குத் தாம் மனதில் கொண்டிருந்தது என்ன என்பதை வெளிப்படுத்துகிறார். அவர் சொன்னார்: “நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், மிருக ஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள்.” (ஆதியாகமம் 1:26) மனிதர்கள் “பூமியனைத்தையும்” அதன் மிருக சிருஷ்டிப்புகளையும் கண்காணிக்க வேண்டியவர்களாக இருந்தனர்.

5கடவுள் மத்திய கிழக்கில் ஏதேன் என்றழைக்கப்பட்ட ஒரு பகுதியில் ஒரு பெரிய பூங்கா போன்ற ஒரு தோட்டத்தை உண்டுபண்ணினார். பின்பு அவர் “மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.” முதல் மானிடர்கள் சாப்பிடவேண்டியிருந்த அனைத்தையும் ஒரு பரதீஸ்தானே தன்னுள் கொண்டிருந்தது. அதில் ‘பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களும்’ மற்ற தாவரங்களும் அநேக சுவாரசியமான விலங்கின வகைகளும் இருந்தன.—ஆதியாகமம் 2:7-9, 15.

6முதல் மானிடர்களின் சரீரங்கள் பரிபூரணமாக படைக்கப்பட்டிருந்தன. ஆகவே அவர்கள் நோயுற்று, முதுமையடைந்து மரிக்கவும்மாட்டார்கள். அவர்கள் தெரிவுசெய்யும் சுயாதீனம் போன்ற மற்ற பண்புகளையுங்கூட வழங்கப்பெற்றிருந்தனர். அவர்கள் உண்டாக்கப்பட்ட விதம் ஆதியாகமம் 1:27-ல் விளக்கப்பட்டுள்ளது: “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.” நாம் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், நாம் உடல் மற்றும் மனஞ்சார்ந்த பண்புகள் மட்டுமல்லாமல் ஒழுக்க மற்றும் ஆவிக்குரிய அம்சங்களுங்கூட அளிக்கப்பட்டுள்ளோம். நாம் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமென்றால் இவையுங்கூட திருப்திசெய்யப்பட வேண்டும். இந்தத் தேவைகளையும், உணவு, நீர் மற்றும் காற்றுக்கான தேவைகளையும் திருப்திசெய்துகொள்ளும் வழிமுறைகளைக் கடவுள் அருளிச்செய்வார். இயேசு கிறிஸ்து சொன்னதுபோல, “மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.”—மத்தேயு 4:4.

7மேலும் முதல் மனித ஜோடி ஏதேனிலிருக்கையில் கடவுள் அவர்களுக்கு ஒரு மகத்தான கட்டளையைக் கொடுத்தார்: “நீங்கள் பலுகிப்பெருகி, பூமியை நிரப்”புங்கள். (ஆதியாகமம் 1:28) ஆகவே அவர்கள் தங்கள் இனத்தைப் பெருக்கி பரிபூரணமான பிள்ளைகளைப் பிறப்பிப்பார்கள். மக்கள்தொகை பெருகும்போது, அவர்கள் ஆரம்பத்திலிருந்த பூங்காபோன்ற ஏதேனின் பரதீஸ் பகுதியின் எல்லைகளை விரிவாக்கும் ஆனந்தமான வேலையைக் கொண்டிருப்பர். இறுதியாக முழு பூமியும் என்றென்றுமாக வாழக்கூடிய பரிபூரணமான, மகிழ்ச்சியுள்ள ஜனத்தால் குடியிருக்கப்பட்ட ஒரு பரதீஸாக மாற்றப்பட்டுவிடும். இவை அனைத்தையும் இயக்கிவைத்தப்பின், “தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது,” என்று பைபிள் நமக்குத் தெரிவிக்கிறது.—ஆதியாகமம் 1:31; சங்கீதம் 118:17-ஐயுங்கூட பார்க்கவும்.

8மனிதர்கள் கீழ்ப்படுத்தப்பட்ட பூமியைத் தங்களுடைய நன்மைக்காக பயன்படுத்தவேண்டியதாயிருந்தது என்பது தெளிவாயிருக்கிறது. ஆனால் இது பொறுப்புணர்ச்சியான வகையில் செய்யப்படவேண்டியதாயிருந்தது. மனிதர்கள் பூமியின் மதிப்புக்குரிய நிர்வாகஸ்தர்களாக இருக்கவேண்டியதாயிருந்தது, அதை கொள்ளையடிப்பவர்களாக இருக்கக்கூடாது. நாம் இன்று காணும் பூமியின் அழிவு, கடவுளுடைய விருப்பத்துக்கு எதிரானதாகும். அதில் பங்கேற்பவர்கள் பூமியின் மீது வாழ்க்கையின் நோக்கத்துக்கு எதிராகச் செல்கிறார்கள். அதற்குரிய அபராதத்தை அவர்கள் செலுத்தியே ஆகவேண்டும், ஏனென்றால் கடவுள், “பூமியைக் கெடுத்தவர்களைக் கெ”டுப்பார் என்று பைபிள் சொல்கிறது.—வெளிப்படுத்துதல் 11:18.

இன்னும் கடவுளுடைய நோக்கம்

9இவ்விதமாக, பரிபூரண மனித குடும்பம் பூமியின் மீது என்றென்றுமாக ஒரு பரதீஸில் வாழவேண்டும் என்பதே ஆதியிலிருந்து கடவுளுடைய நோக்கமாக இருந்துவந்தது. இன்னும் அதுவே அவருடைய நோக்கமாக இருக்கிறது! நிச்சயமாகவே அந்த நோக்கம் நிறைவேற்றமடையும். பைபிள் சொல்கிறது: “நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று சேனைகளின் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்னார்.” “அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம் பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன்.”—ஏசாயா 14:24; 46:11.

10எதிர்கால நம்பிக்கையை விரும்பின ஒரு மனிதனிடம் இவ்வாறு சொன்னபோது, பூமியின்மீது பரதீஸை நிலைநாட்டும் கடவுளுடைய நோக்கத்தைப்பற்றி இயேசு கிறிஸ்து பேசினார்: “நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்.” (லூக்கா 23:43) பேதுரு அப்போஸ்தலனுங்கூட பின்வருமாறு முன்னுரைத்தபோது வரவிருக்கும் புதிய உலகத்தைப்பற்றி பேசினார்: “[கடவுளுடைய] வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் [பரலோகத்திலிருந்து ஆட்சிசெய்யும் ஒரு புதிய அரசாங்க ஏற்பாடு] புதிய பூமியும் [ஒரு புதிய பூமிக்குரிய சமுதாயம்] உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.”—2 பேதுரு 3:13.

11சங்கீதக்காரன் தாவீதுங்கூட வரவிருக்கும் புதிய உலகத்தைப்பற்றியும் அது எவ்வளவு நீண்ட காலம் நீடிக்கும் என்பதைப்பற்றியும் எழுதினார். அவர் முன்னுரைத்தார்: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:29) அதன் காரணமாகவே இயேசு வாக்களித்தார்: “சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.”—மத்தேயு 5:5.

12எல்லா பொல்லாப்பு, குற்றச்செயல், வியாதி, துயரம், வேதனை ஆகியவற்றிலிருந்து விடுபட்ட ஒரு பரதீஸிய பூமியில் என்றுமாக வாழ்வது என்னே ஒரு மகத்தான எதிர்பார்ப்பு! பைபிளின் கடைசி புத்தகத்தில், கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தை இவ்விதமாக அறிவிப்பதன் மூலம் இந்த மகத்தான நோக்கத்தைச் சுருக்கமாகச் சொல்கிறது: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” அது மேலுமாகச் சொல்கிறது: “சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.”—வெளிப்படுத்துதல் 21:4, 5.

13ஆம், கடவுள் ஒரு மகத்தான நோக்கத்தை மனதில் கொண்டிருக்கிறார். அது நீதியுள்ள ஒரு புதிய உலகமாக, நித்திய பரதீஸாக இருக்கும். தாம் வாக்களித்ததைச் செய்யக்கூடியவரும் செய்யப்போகிறவருமான ஒருவரே இதை முன்னறிவித்திருக்கிறார். ஏனென்றால் அவருடைய “வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள்.”

[கேள்விகள்]

1, 2. கடவுள் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்று நாம் எப்படிச் சொல்லமுடியும், வாழ்க்கையின் கேள்விகளுக்குரிய பதில்களுக்கு நாம் எங்கே திரும்பவேண்டும்?

3. கடவுள் ஏன் பூமியைப் படைத்தார்?

4. கடவுள் ஏன் முதல் மானிடர்களைப் படைத்தார்?

5. முதல் மானிடர்கள் எங்கே வைக்கப்பட்டனர்?

6. என்ன மனஞ்சார்ந்த மற்றும் உடற்சார்ந்த பண்புகளோடு மனிதர்கள் படைக்கப்பட்டனர்?

7. என்ன கட்டளை முதல் மனித ஜோடிக்குக் கொடுக்கப்பட்டது?

8. மனிதர்கள் பூமியை எப்படிக் கவனித்துக்கொள்ளவேண்டியவர்களாக இருந்தனர்?

9. கடவுளுடைய நோக்கம் நிறைவேற்றமடையும் என்று நாம் ஏன் நம்பிக்கையோடிருக்கிறோம்?

10, 11. இயேசு, பேதுரு மற்றும் சங்கீதக்காரன் தாவீது பரதீஸைப்பற்றி எவ்விதமாக பேசினர்?

12, 13. மனிதவர்க்கத்துக்கான கடவுளுடைய மகத்தான நோக்கத்தைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்.

[பக்கம் 20, 21-ன் படங்கள்]

மனிதர்கள் பரதீஸிய பூமியில் என்றுமாக வாழவேண்டும் என்று கடவுள் நோக்கங்கொண்டிருந்தார். அதுவே இன்னும் அவருடைய நோக்கமாகும்

[பக்கம் 22-ன் படம்]

வீட்டுச் சொந்தக்காரர் வீட்டை நாசமாக்கும் குடித்தனக்காரர்களை விளக்கமளிக்க அதிகாரத்துடன் கேட்கமுடியும்