Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இதெல்லாம் எதை அர்த்தப்படுத்துகிறது?

இதெல்லாம் எதை அர்த்தப்படுத்துகிறது?

இதெல்லாம் எதை அர்த்தப்படுத்துகிறது?

போர்கள், உணவுப் பற்றாக்குறைகள், கொள்ளைநோய்கள், பூமியதிர்ச்சிகள் ஆகியவை “இந்த ஒழுங்குமுறையின் முடிவுக்கு” அடையாளமாக இருக்கும் என இயேசு கிறிஸ்து கூறினார்.​—மத்தேயு 24:1-8, NW; லூக்கா 21:10, 11.

1914 முதற்கொண்டு, தேசத்திற்கு தேசம், இனத்திற்கு இனம் நடைபெற்று வரும் போர்களால் மனித வாழ்க்கை நாசமாக்கப்பட்டிருக்கிறது. பாதிரிமார்கள் அரசியலில் தலையிட்டிருப்பதும், பயங்கரவாத தாக்குதல்கள் சமீபத்தில் நடந்திருப்பதுமே பெரும்பாலும் இதற்குக் காரணம்.

எவ்வளவுதான் விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்தாலும், உலகெங்கும் கோடானுகோடி மக்கள் கடும் உணவுப் பற்றாக்குறையால் கஷ்டப்படுகின்றனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் லட்சோபலட்சம் பேர் இறக்கின்றனர்.

கொள்ளை நோய், அதாவது பெருவாரியாக பரவும் தொற்று நோய், இயேசு கொடுத்த அடையாளத்தின் மற்றொரு அம்சமாகும். முதல் உலகப் போருக்குப்பின், தொற்றும் தன்மையுள்ள ஒரு விஷக்காய்ச்சல் 2,10,00,000 பேரை பலிவாங்கியது. ஒரு காலத்தில் உள்ளூரில் மாத்திரமே பரவிய தொற்று நோய்களைப் போலில்லாமல், இது தேசங்களையும் தொலைதூர தீவுகளையும் தாக்கியது. இப்பொழுது எய்ட்ஸ் நோய் உலகிலுள்ள அநேகரை வாரிக்கொண்டு போகிறது; டிபி, மலேரியா, டைஃபாய்டு, டெங்கு காய்ச்சல் ஆகியவை வளரும் நாடுகளை தொடர்ந்து பீடித்து வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அளவுகளில் ஆயிரக்கணக்கான பூமியதிர்ச்சிகள் ஏற்படுவதாக அறிக்கை செய்யப்படுகிறது. பூமியதிர்ச்சிகளையும் அவற்றின் தீவிரத்தையும் அளவிட்டு காட்டும் நவீன கருவிகள் இருக்கிறபோதிலும், மக்கள்தொகை அதிகமுள்ள பகுதிகளில் பூமியதிர்ச்சிகளால் ஏற்படும் பேரழிவுகளைப் பற்றிய செய்திகள் அடிக்கடி அடிபடுகின்றன.

பைபிள் இதையும் முன்னறிவித்தது: “கடைசி நாட்களில் [“கையாளுவதற்குக் கடினமான,” NW] கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப் பிரியராயிராமல் சுகபோகப் பிரியராயும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.”​—2 தீமோத்தேயு 3:1-5.

‘கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ நாம் வாழ்கிறோம் என்பதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்கள் அல்லவா?

மிதமீறிய விதத்தில், மக்கள் தற்பிரியர்களாயும் பணப்பிரியர்களாயும் பெருமை பிடித்தவர்களாயும் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

இவ்வுலகம் சுயநலமிக்கவர்களால், நன்றிகெட்டவர்களால், எதற்கும் ஒத்துப்போகாதவர்களால், துரோகிகளால் நிறைந்துள்ளது என்பதை யார்தான் மறுப்பார்?

பெற்றோருக்குக் கீழ்ப்படியாதிருப்பதும் அன்பில்லாமல் நடந்துகொள்வதும் சில இடங்களில் மட்டுமல்ல, உலகெங்கும் அதிர்ச்சியூட்டும் விதத்தில் அதிகரித்திருப்பது உங்களுக்குத் தெரியுமா?

சுகபோகத்தில் உழலும் ஓர் உலகில், அதேசமயத்தில் நற்பண்புகளை வெறுக்கும் ஓர் உலகில் நாம் வாழ்கிறோம் என்பதை அறிந்திருப்பீர்கள் என்பதிலும் சந்தேகமில்லை. இப்படிப்பட்ட மனோபாவங்கள் “கடைசி நாட்களில்” வாழும் மக்கள் மத்தியில் மேலோங்கி காணப்படும் என பைபிள் விவரிக்கிறது.

நாம் வாழும் காலத்தை அடையாளம் கண்டுகொள்வதற்கு இன்னும் அதிக அத்தாட்சி தேவையா? கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி இக்காலத்தில் பூமி முழுவதும் அறிவிக்கப்படும் என்றும்கூட இயேசு முன்னுரைத்தார். (மத்தேயு 24:14) இது அறிவிக்கப்பட்டு வருகிறதா?

பைபிள் அடிப்படையிலான காவற்கோபுரம் என்ற பத்திரிகை வேறெந்த பத்திரிகையையும்விட அதிக மொழிகளில் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டு வருகிறது. இது, யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பத்திரிகை.

கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி தனிப்பட்ட விதமாக மற்றவர்களுக்கு சாட்சி கொடுப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான மணிநேரத்தை யெகோவாவின் சாட்சிகள் செலவழிக்கிறார்கள்.

பைபிளைப் பற்றி விளக்கும் பிரசுரங்களை தற்பொழுது சுமார் 400 மொழிகளில் அவர்கள் பிரசுரிக்கிறார்கள்; ஒதுக்குப்புறமான பகுதிகளில் வாழும் மக்களின் மொழிகளிலும் சிறுசிறு தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் பேசும் மொழிகளிலும்கூட பிரசுரிக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகள் எல்லா தேசத்தாருக்கும் நற்செய்தியை அறிவித்திருக்கிறார்கள். அரசியல் கண்ணோட்டத்தில் மிக அற்பமாகவும் சிறியதாகவும் தோன்றுகிற பல தீவுகளிலும் பிராந்தியங்களிலும்கூட பிரசங்கித்திருக்கிறார்கள். அநேக நாடுகளில், பைபிள் கல்வி புகட்டும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

உண்மையில், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி பூமி முழுவதும் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது​—⁠இந்த உலகை மாற்றுவதற்கு அல்ல, ஆனால் அந்த ராஜ்யத்தைப் பற்றி இவ்வுலகிற்கு சாட்சி கொடுப்பதற்கே. வானத்தையும் பூமியையும் படைத்தவரைப் பற்றி அக்கறை இருக்கிறதா என்பதையும், அவருடைய சட்டதிட்டங்களுக்கு மதிப்புக் கொடுத்து சக மனிதரிடம் அன்பு செலுத்த விருப்பம் இருக்கிறதா என்பதையும் வெளிப்படுத்துவதற்கு எல்லா மக்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.​—லூக்கா 10:25-27; வெளிப்படுத்துதல் 4:⁠11.

வெகு விரைவில், கடவுளுடைய ராஜ்யம் பொல்லாதவர்கள் அனைவரையும் அழித்து, இந்தப் பூமியை பூங்காவனம் போன்ற ஒரு பரதீஸாக மாற்றும்.​—லூக்கா 23:⁠43.

[பக்கம் 6-ன் பெட்டி]

எதற்கு கடைசி நாட்கள்?

மனிதகுலத்திற்கு கடைசி நாட்கள் அல்ல. ஏனென்றால் கடவுளுடைய சித்தத்தை செய்பவர்களுக்கு, என்றென்றுமாக வாழும் எதிர்பார்ப்பை பைபிள் தருகிறது.​—⁠யோவான் 3:16, 36; 1 யோவான் 2:⁠17.

இந்தப் பூமிக்கும் கடைசி நாட்கள் அல்ல. மனிதர் குடியிருக்கும் இந்தப் பூமி என்றென்றும் நிலைத்திருக்கும் என கடவுளுடைய வார்த்தை வாக்குறுதி அளிக்கிறது.​—⁠சங்கீதம் 37:29; 104:5; ஏசாயா 45:⁠18.

மாறாக, வன்முறைமிக்க, அன்பற்ற இந்த ஒழுங்குமுறைக்கும் அதன் வழிகளை விடாப்பிடியாய் பின்பற்றுகிற ஆட்களுக்குமே இவை கடைசி நாட்கள்.​—⁠நீதிமொழிகள் 2:21, 22.

[பக்கம் 7-ன் பெட்டி/படம்]

பைபிள் உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தையா?

“கர்த்தர் சொல்லுகிறார்” என்றே பைபிள் தீர்க்கதரிசிகள் மீண்டும் மீண்டும் எழுதினார்கள். (ஏசாயா 43:14; எரேமியா 2:⁠2) கடவுளுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவும் தாம் எதையும் “சுயமாய்ச் சொல்லவில்லை” என்பதை வலியுறுத்திக் கூறினார். (யோவான் 14:10) “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது [“ஏவப்பட்டிருக்கிறது,” NW]” என பைபிளே தெளிவாக கூறுகிறது.​—⁠2 தீமோத்தேயு 3:⁠16.

வேறெந்த புத்தகமும் இத்தனை அநேக மொழிகளில் பிரசுரிக்கப்படவில்லை; 2,200-⁠க்கும் மேற்பட்ட மொழிகளில் பைபிள் பிரசுரிக்கப்பட்டுள்ளது என யுனைட்டெட் பைபிள் சொஸைட்டீஸ் அறிவித்தது. அதுமட்டுமல்ல, நானூறு கோடிக்கும் அதிகமான பைபிள் பிரதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன; இதுவும்கூட வேறெந்த புத்தகத்திற்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு. கடவுளிடமிருந்து எல்லா மனிதருக்கும் ஒரு செய்தி வருகிறதென்றால், அது இப்படி இருக்கும்படியே நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் அல்லவா?

பைபிள் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்பதற்கான அத்தாட்சிகளை விவரமாக தெரிந்துகொள்வதற்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற சிற்றேட்டைக் காண்க.

பைபிள் உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தை என்பதை ஒப்புக்கொண்டு அதை வாசிப்பீர்களென்றால் பெரிதும் பயனடைவீர்கள்.

[பக்கம் 8-ன் பெட்டி/படங்கள்]

கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன?

இது பரலோகத்திலிருந்து ஆளப்படும் ஓர் அரசாங்கம்; வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவா என்ற உண்மையான கடவுளால் ஸ்தாபிக்கப்பட்ட ஓர் அரசாங்கம். ​—⁠எரேமியா 10:10, 12.

இதை ஆளும் உரிமையை இயேசு கிறிஸ்துவுக்கு கடவுள் வழங்கியிருக்கிறார் என பைபிள் குறிப்பிடுகிறது. (வெளிப்படுத்துதல் 11:15) அவர் ஏற்கெனவே கடவுளிடமிருந்து பெரும் அதிகாரத்தைப் பெற்றவர்; இதை பூமியில் வாழ்ந்தபோது அவர் மெய்ப்பித்துக் காட்டினார்; இயற்கை சக்திகளைக் கட்டுப்படுத்துவதற்கும், சகல வியாதிகளையும் குணப்படுத்துவதற்கும், இறந்தவர்களை உயிர்த்தெழுப்புவதற்கும்கூட அந்த அதிகாரம் அவருக்கு உதவியது. (மத்தேயு 9:2-8; மாற்கு 4:37-41; யோவான் 11:11-44) ‘சகல பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவத்தையும் மகிமையையும் ராஜரிகத்தையும் [கடவுள்] கொடுப்பார்’ என்றும் கடவுளுடைய ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்ட பைபிள் தீர்க்கதரிசனம் முன்னறிவித்தது. (தானியேல் 7:13, 14) அந்த அரசாங்கம் பரலோக ராஜ்யம் என அழைக்கப்படுகிறது; பரலோகத்திலிருந்தே இயேசு கிறிஸ்து இப்பொழுது ஆட்சி செய்கிறார்.

[பக்கம் 7-ன் படங்கள்]

உலகெங்கும் நற்செய்தி பிரசங்கிக்கப்படுதல்