உங்கள் வாழ்க்கை எங்கே போய்க் கொண்டிருக்கிறது?
உங்கள் வாழ்க்கை எங்கே போய்க் கொண்டிருக்கிறது?
• அநேகர் அன்றாட வாழ்க்கையில் அந்தளவு மூழ்கிப்போயிருப்பதால், தாங்கள் எந்தத் திக்கில் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு துளிகூட கவனம் செலுத்துவதில்லை.
• எதிர்காலத்தில் அற்புதமான சம்பவங்கள் நடைபெறும் என பைபிள் நமக்கு தெரிவிக்கிறது. அதேசமயத்தில், மனித அமைப்புகள் உலகளவில் பெரும் மாற்றத்தை சந்திக்கும் எனவும் அது எச்சரிக்கிறது. இந்தச் சம்பவங்களைப் பற்றிய பைபிள் செய்தியிலிருந்து பயனடைவதற்கும் பேரழிவைத் தவிர்ப்பதற்கும் நாம் தகுந்த நடவடிக்கை எடுப்பது மிக அவசரம்.
• பைபிள் என்ன சொல்கிறது என்பதை சிலர் அறிந்திருக்கிறார்கள், அதை பின்பற்றுவதற்கும் முயற்சி எடுக்கிறார்கள், ஆனால் வாழ்க்கையின் கவலைகள் தங்கள் கவனத்தை திசைதிருப்பிவிட அனுமதித்து விடுகிறார்கள்.
• உங்கள் வாழ்க்கை போகும் பாதை உங்களுக்குத் திருப்தி அளிக்கிறதா? அன்றாட காரியங்களைத் திட்டமிடும்போது, உங்களுடைய நீண்டகால இலக்குகளை இவை எவ்வாறு பாதிக்கலாமென சிந்தித்துப் பார்க்கிறீர்களா?
[பக்கம் 9-ன் பெட்டி/படங்கள்]
உங்களுக்கு எது மிக முக்கியம்?
பின்வருவனவற்றை நீங்கள் எவ்வாறு மதிப்பிடுவீர்கள்? இவற்றை ஒவ்வொன்றாக இலக்கமிட்டு வரிசைப்படுத்துங்கள்.
இவற்றில் பலவற்றிற்கு வாழ்க்கையில் ஏற்ற ஓர் இடம் இருக்கிறது, ஆனால் இவற்றை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும்போது, நீங்கள் எதற்கு முதலிடம், இரண்டாம் இடம், . . . தருவீர்கள்?
․․․ பொழுதுபோக்கு/விளையாட்டுகள்
․․․ என் வேலை அல்லது தொழில்
․․․ என் ஆரோக்கியம்
․․․ தனிப்பட்ட சந்தோஷம்
․․․ என் கணவன்/மனைவி
․․․ என் பெற்றோர்
․․․ என் பிள்ளைகள்
․․․ அழகிய வீடு, நல்ல துணிமணிகள்
․․․ எதிலும் முதலிடம் பிடிப்பது
․․․ கடவுளை வழிபடுவது
[பக்கம் 10, 11-ன் பெட்டி]
உங்கள் தெரிவுகள் நீங்கள் போக விரும்பும் திசையில் உங்களை கொண்டு செல்கின்றனவா?
பின்வரும் கேள்விகளைச் சிந்தியுங்கள்
பொழுதுபோக்கு/விளையாட்டுகள்: நான் தேர்ந்தெடுக்கும் பொழுதுபோக்கு எனக்கு புத்துணர்ச்சி அளிக்கிறதா? நான் தேர்ந்தெடுக்கும் ‘த்ரில்’ விளையாட்டுகள் என் ஆரோக்கியத்தை பாதிக்குமா அல்லது வாழ்நாள் பூராவும் என்னை முடமாக்கிவிடுமா? கொஞ்ச நேரம் “ஜாலியாக” இருக்க வைத்துவிட்டு பின்பு காலம் பூராவும் வேதனைப்பட வைக்குமா? ஆரோக்கியமான பொழுதுபோக்கை தேர்ந்தெடுத்தாலும்கூட, அதிமுக்கியமான காரியங்களை அசட்டை செய்யும் அளவுக்கு அதில் நிறைய நேரத்தை செலவழிக்கிறேனா?
என் வேலை அல்லது தொழில்: வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளைப் பெற உதவுகிறதா, அல்லது நான் முழுமையாக அதற்கு அடிமையாகிவிடுகிறேனா? என் உடம்பை பாதிக்குமளவுக்கு அது என் நேரத்தையும் சக்தியையும் உறிஞ்சி விடுகிறதா? ஓவர்டைம் செய்ய விரும்புகிறேனா அல்லது மனைவி மக்களுடன் நேரம் செலவிட விரும்புகிறேனா? என் மனசாட்சிக்கு விரோதமான ஒரு வேலையை அல்லது ஆவிக்குரிய காரியங்களுக்கு அடிக்கடி தடையாக இருக்கிற ஒரு வேலையை என் முதலாளி செய்யச் சொன்னால், வேலை பறிபோய்விடக் கூடாதே என்பதற்காக அதை செய்வேனா?
என் ஆரோக்கியம்: அதை அசட்டை செய்கிறேனா, அல்லது அதை பேணிக் காக்கிறேனா? சதா அதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறேனா? அதை நான் எப்படி கவனித்துக் கொள்கிறேன் என்பது என் குடும்பத்தார் மீது எனக்கு அக்கறை இருப்பதை காட்டுகிறதா?
தனிப்பட்ட சந்தோஷம்: என் சந்தோஷம்தான் முதலில் என் மனதுக்கு வருகிறதா? என் துணையின் அல்லது குடும்பத்தாரின் சந்தோஷத்தைவிட என் சந்தோஷம்தான் எனக்குப் பெரிதாக இருக்கிறதா? அதை நான் பெற முயலுகிற வழி உண்மையான கடவுளை வணங்குபவருக்கு ஏற்ற ஒன்றாக இருக்கிறதா?
என் கணவன்/மனைவி: எனக்குத் தேவைப்படும்போது மட்டுமே என் மணத்துணையை தோழராக கருதுகிறேனா? என் துணையை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்துகிறேனா? கடவுள் மீதுள்ள நம்பிக்கை என் துணையை கருதும் விதத்தை மாற்றியிருக்கிறதா?
என் பெற்றோர்: நான் ஒரு மைனராக இருந்தால், என் பெற்றோருக்கு கீழ்ப்படிந்து நடக்கிறேனா? மரியாதையுடன் பதில் சொல்கிறேனா, சொன்ன வேலைகளை ஒழுங்காக செய்கிறேனா, சொன்ன நேரத்திற்கு வீட்டுக்கு வருகிறேனா, அவர்களுக்குப் பிடிக்காத கூட்டுறவுகளையும் நடவடிக்கைகளையும் தவிர்க்கிறேனா? நான் மேஜராக இருந்தால், அவர்கள் சொல்வதை மரியாதையோடு கேட்டு அவர்களுக்குத் தேவைப்படுகையில் உதவி செய்கிறேனா? என் சொந்த சௌகரியத்துக்கேற்ப அவர்களை நடத்துகிறேனா அல்லது கடவுளுடைய வார்த்தையின் அறிவுரைக்கேற்ப நடத்துகிறேனா?
என் பிள்ளைகள்: பிள்ளைகளுக்கு சிறந்த நெறிமுறைகளைக் கற்பிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருப்பதை உணர்ந்திருக்கிறேனா, அல்லது பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுப்பார்கள் என விட்டுவிடுகிறேனா? என் பிள்ளைகளுடன் நேரம் செலவிடுகிறேனா, அல்லது பொம்மைகளை வைத்து விளையாடவோ டிவி பார்க்கவோ கம்ப்யூட்டரில் நேரம் செலவிடவோ விட்டுவிடுகிறேனா? கடவுளுடைய சட்டதிட்டங்களை பிள்ளைகள் அசட்டை செய்யும் போதெல்லாம் அவர்களை கண்டிக்கிறேனா, அல்லது அவர்கள் என்னை எரிச்சலூட்டும்போது மட்டுமே கண்டிக்கிறேனா?
அழகிய வீடு, நல்ல துணிமணிகள்: என் தோற்றத்திற்கும் உடைமைகளுக்கும் கவனம் செலுத்த காரணம் என்ன—அக்கம்பக்கத்தாரை கவருவதற்கா? குடும்ப நலனை கருதியா? மெய்க் கடவுளை வணங்குவதாலா?
எதிலும் முதலிடம் பிடிப்பது: எதையும் ‘பர்ஃபெக்ட்’டாக செய்ய வேண்டுமென நினைக்கிறேனா? எதிலும் முதலிடம் பிடிக்கத் துடிக்கிறேனா? யாராவது என்னைவிட நன்றாக செய்துவிட்டால் பொறாமைப்படுகிறேனா?
கடவுளை வழிபடுவது: மணத்துணையுடைய, பிள்ளைகளுடைய, பெற்றோர்களுடைய, முதலாளியுடைய அங்கீகாரம் எனக்கு மிக முக்கியமா அல்லது கடவுளுடைய அங்கீகாரம் மிக முக்கியமா? சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காக கடவுளுடைய சேவையை இரண்டாம் இடத்திற்குத் தள்ளிவிடுகிறேனா?
பைபிளின் அறிவுரையை கவனமாக சிந்தியுங்கள்
உங்கள் வாழ்க்கையில் கடவுளுக்கு எந்த இடத்தை கொடுக்கிறீர்கள்?
பிரசங்கி 12:13: “தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர் மேலும் விழுந்த கடமை இதுவே.”
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: இந்தக் கடமையை உணர்ந்திருக்கிறேன் என்பதை என்னுடைய வாழ்க்கை காட்டுகிறதா? வீட்டிலோ, வேலை செய்யுமிடத்திலோ, பள்ளியிலோ என்னுடைய பொறுப்புகளை நிறைவேற்றும் விஷயத்தில் கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறேனா? அல்லது சொந்த விருப்பங்களையோ வாழ்க்கையின் அழுத்தங்களையோ பொறுத்துத்தான் கடவுளுக்கு நேரம் ஒதுக்குகிறேனா?
கடவுளுடன் எப்படிப்பட்ட உறவை வைத்திருக்கிறீர்கள்?
நீதிமொழிகள் 3:5, 6: ‘உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் யெகோவாவில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.’
மத்தேயு 4:10: ‘உன் தேவனாகிய யெகோவாவைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக.’
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: கடவுளைப் பற்றி நான் இப்படித்தான் உணருகிறேனா? இத்தகைய நம்பிக்கையும் பக்தியும் எனக்கு இருப்பதை என் அன்றாட நடவடிக்கைகளும் பிரச்சினைகளை நான் சமாளிக்கிற விதமும் காட்டுகின்றனவா?
பைபிள் வாசிப்பதும் படிப்பதும் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானவை?
யோவான் 17:3: “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்.”
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: கடவுளுடைய வார்த்தையை வாசிப்பதற்கும் ஆழ்ந்து சிந்திப்பதற்கும் நான் தருகிற முக்கியத்துவம் இதை உண்மையிலேயே நம்புகிறேன் என்பதை காட்டுகிறதா?
கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்வது உங்களுக்கு எவ்வளவு முக்கியம்?
எபிரெயர் 10:24, 25: “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலை . . . விட்டுவிடாமல், . . . நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்தி சொல்ல வேண்டும்.”
சங்கீதம் 122:1: ‘யெகோவாவின் ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.’
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: இந்தக் கட்டளையை மதிக்கிறேன் என்பதை என் வாழ்க்கை முறை காட்டுகிறதா? கடந்த மாதத்தில் வேறு காரியங்களுக்கு முதலிடம் கொடுத்ததால் கிறிஸ்தவ கூட்டங்களைத் தவறவிட்டேனா?
கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி மற்றவர்களிடம் வைராக்கியமாக பேசுகிறீர்களா?
மத்தேயு 24:14: ‘ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்கும் . . . சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.’
மத்தேயு 28:19, 20: “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்.”
சங்கீதம் 96:2: ‘யெகோவாவைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்கு நாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.’
உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: என் வாழ்க்கையில் இந்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேனா? காலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறேன் என்பதை இந்த வேலைக்காக நான் எடுக்கும் முயற்சி காட்டுகிறதா?