Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“உணராதிருந்தார்கள்”

“உணராதிருந்தார்கள்”

“உணராதிருந்தார்கள்”

எச்சரிக்கைகளை சட்டை பண்ணாமல் ஒதுக்கித் தள்ளுவது பேரழிவில் விளைவடையலாம்.

1974-⁠ல் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டார்வின் நகரம் பண்டிகைக்காக மும்முரமாய் தயாராகிக் கொண்டிருந்த சமயத்தில், வரவிருந்த ஒரு புயலைப் பற்றி அபாயச்சங்குகள் அலறின. ஆனால், சுமார் 30 ஆண்டுகளாக டார்வின் நகரம் புயலினால் பாதிக்கப்படவில்லை. இப்பொழுது மாத்திரம் எங்கே பாதிக்கப்படப் போகிறது? சூறைக்காற்று வீசி வீடுகளின் கூரைகளையெல்லாம் பிய்த்தெறிந்து சுவர்களை நொறுக்கிப்போடும் வரை பெரும்பாலோர் ஆபத்தை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. பொழுது விடிவதற்குள் நகரமே சின்னாபின்னமாகிவிட்டது.

நவம்பர் 1985-⁠ல், கொலம்பியாவில் எரிமலை வெடித்தது. பனி உருகி சேற்றையும் சகதியையும் வாரிக்கொண்டு வந்து, ஆர்மேரோ பட்டணத்திலிருந்த மக்களில் 20,000-⁠க்கும் அதிகமானோரை அப்படியே மண்ணுக்குள் சமாதி கட்டியது. ஜனங்களுக்கு எந்த முன்னெச்சரிப்பும் கொடுக்கப்படவில்லையா? அந்த மலை மாதக்கணக்காக அதிர்ந்து கொண்டிருந்தது. என்றாலும், எரிமலைக்குப் பக்கத்திலேயே வாழ்ந்து பழக்கப்பட்டதால், ஆர்மேரோவில் வசித்துவந்த பெரும்பாலோர் அசட்டையாக இருந்துவிட்டார்கள். விரைவில் பேரழிவு ஏற்படுமென அதிகாரிகளுக்கு எச்சரிப்பு வந்தது, ஆனால் பொது மக்களை எச்சரிப்பதற்கு அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பொது மக்களின் பயத்தை நீக்குவதற்காக ரேடியோவிலும் அறிவிப்புகள் செய்யப்பட்டன. அதிர்ச்சி அடையாமல் அமைதியாக இருக்கும்படி மக்களை உந்துவிப்பதற்கு சர்ச்சிலிருந்த ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்டது. அந்த நாள் மாலை, இரண்டு முறை பயங்கரமாக எரிமலை வெடித்தது. நீங்கள் அங்கிருந்திருந்தால், உங்களுடைய பெட்டி படுக்கைகளையெல்லாம் விட்டுவிட்டு ஓடியிருப்பீர்களா? உண்மையில் வெகு சிலரே அப்படி தப்பியோட முயற்சி எடுத்தார்கள், அதுவும் காலம் கடந்த பிறகு.

எங்கே பூமியதிர்ச்சிகள் உண்டாகும் என்பதை புவியியலாளர்கள் ஓரளவுக்கு துல்லியமாக முன்னறிவிக்கின்றனர். ஆனால் எப்பொழுது வருமென அவர்களால் துல்லியமாக முன்னறிவிக்க முடியாது. 1999-⁠ல், உலகெங்கிலும் சுமார் 20,000 உயிர்களை பூமியதிர்ச்சி விழுங்கிவிட்டது. இறந்தவர்களில் அநேகர் தங்களுக்கு அது ஒருபோதும் நேரிடாது என்றே நினைத்திருந்தார்கள்.

கடவுள் தாமே கொடுக்கும் எச்சரிக்கைகளுக்கு எப்படி பிரதிபலிக்கிறீர்கள்?

கடைசி நாட்களை அடையாளம் காட்டும் சம்பவங்களை வெகு காலத்திற்கு முன்பே பைபிள் தெள்ளத் தெளிவாக விவரித்தது. இதன் சம்பந்தமாக, ‘நோவாவின் காலத்தை’ சிந்தித்துப் பார்க்கும்படி அது நம்மை உந்துவிக்கிறது. ‘ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்தில்’ அன்றாட காரியங்களில் ஜனங்கள் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். என்றாலும், வன்முறை பரவி வருவதைப் பற்றி நிச்சயம் கவலைப்பட்டிருப்பார்கள். ஆனால் கடவுள் தமது ஊழியரான நோவாவின் மூலம் கொடுத்த எச்சரிப்புக்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை. “ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்.” (மத்தேயு 24:37-39) அந்த எச்சரிப்புக்கு நீங்கள் செவிசாய்த்திருப்பீர்களா? இப்பொழுது நீங்கள் செவிசாய்க்கிறீர்களா?

ஆபிரகாமின் உறவினனான லோத்துவின் நாட்களில் சவக்கடலுக்கு அருகிலிருந்த சோதோமில் நீங்கள் வசித்திருந்தால், என்ன செய்திருப்பீர்கள்? அதன் நாட்டுப்புறம் ஓர் அழகிய பரதீஸ் போல் காட்சியளித்தது. அந்நகரம் செழித்தோங்கியது. மக்கள் எதைப் பற்றியும் கவலைப்படாதிருந்தார்கள். லோத்துவின் நாட்களில், “ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள்.” அவர்கள் வாழ்ந்து வந்த சமுதாயத்தில் ஒழுக்கக்கேடு தறிகெட்டுப் போயிருந்தது. கெட்ட பழக்கங்களுக்கு எதிராக லோத்து கொடுத்த எச்சரிக்கைக்கு நீங்கள் கவனம் செலுத்தியிருப்பீர்களா? சோதோம் நகரத்தை கடவுள் அழிக்க தீர்மானித்திருப்பதைப் பற்றி அவர் சொன்னபோது நீங்கள் செவிகொடுத்திருப்பீர்களா? அல்லது, லோத்துவின் வருங்கால மருமகன்களைப் போல அதை விளையாட்டாக எடுத்திருப்பீர்களா? ஒருவேளை தப்பியோடும் வழியில் லோத்துவின் மனைவியைப் போல் திரும்பிப் பார்த்திருப்பீர்களா? மற்றவர்கள் அந்த எச்சரிக்கையை சீரியஸாக எடுத்துக்கொள்ளாத போதிலும், சோதோம் நகரத்தைவிட்டு லோத்து வெளியே வந்த அந்த நாளில், “வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது.”​—லூக்கா 17:28, 29.

நம்முடைய நாளிலும் பெரும்பாலோர் எச்சரிக்கைக்கு கவனம் செலுத்துவதில்லை. ஆனால் நம்மை எச்சரிப்பதற்காக, விழிப்புடனிருக்க உற்சாகப்படுத்துவதற்காக இந்த உதாரணங்கள் பைபிளில் எழுதி வைக்கப்பட்டுள்ளன!

[பக்கம் 22-ன் பெட்டி/படங்கள்]

நிஜமாகவே உலகளாவிய ஜலப்பிரளயம் வந்ததா?

இல்லை என்றே விமர்சகர்கள் பலர் கூறுகின்றனர். ஆனால் அது வந்தது என்று பைபிள் கூறுகிறது.

இயேசு கிறிஸ்துவே அதைப் பற்றி பேசினார், ஏனெனில் இது நிகழ்ந்தபோது பரலோகத்திலிருந்து அவர் அதைப் பார்த்தார்.

[பக்கம் 23-ன் பெட்டி/படங்கள்]

சோதோமும் கொமோராவும் உண்மையிலேயே அழிக்கப்பட்டனவா?

இந்தச் சம்பவம் உண்மை என்பதை தொல்பொருள் ஆராய்ச்சி உறுதிப்படுத்துகிறது.

சரித்திரம் இதைப் பற்றி குறிப்பிடுகிறது.

இந்தச் சம்பவம் உண்மை என்பதை இயேசு கிறிஸ்து உறுதிப்படுத்தினார், இந்தச் சம்பவத்தைப் பற்றி பைபிளில் 14 புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.