Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘எல்லாவற்றிற்கும் மேலாக ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்’

‘எல்லாவற்றிற்கும் மேலாக ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்’

‘எல்லாவற்றிற்கும் மேலாக ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்’

“எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; . . . எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்.”​—⁠1 பேதுரு 4:7, 8.

அப்போஸ்தலர்களுடன் தாம் செலவிட்ட அந்தக் கடைசி சில மணிநேரங்கள் அருமையானவை என்பதை இயேசு அறிந்திருந்தார். எதிர்காலத்தில் அவர்கள் சந்திக்கப் போகும் காரியங்களை அவர் அறிந்திருந்தார். அவர்கள் ஒரு பிரமாண்டமான வேலையை செய்து முடிக்க வேண்டியிருந்தது; ஆனால் தம்மைப் போலவே அவர்களும் பகைக்கப்படுவார்கள், துன்புறுத்தப்படுவார்கள் என்பதையும் அறிந்திருந்தார். (யோவான் 15:18-20) அந்தக் கடைசி இரவில், “ஒருவரிலொருவர் அன்பாயிரு”ப்பதன் அவசியத்தைப் பற்றி பல முறை அவர்களுக்கு நினைப்பூட்டினார்.​—யோவான் 13:34, 35; 15:12, 13, 17.

2 அன்றிரவு அவர்களுடன் இருந்த அப்போஸ்தலன் பேதுரு அவர் சொன்ன குறிப்பை புரிந்துகொண்டார். பல வருடங்களுக்குப் பின், எருசலேம் அழிவுக்கு சற்று முன்பு, அன்பின் முக்கியத்துவத்தைப் பற்றி பேதுரு வலியுறுத்தி எழுதினார். “எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; . . . எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்” என கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறினார். (1 பேதுரு 4:7, 8) இந்தத் தற்போதைய ஒழுங்குமுறையின் “கடைசி நாட்களில்” வாழ்ந்து வருகிறவர்களுக்கு பேதுருவின் வார்த்தைகள் அதிக அர்த்தமுள்ளவையாக இருக்கின்றன. (2 தீமோத்தேயு 3:1) “ஊக்கமான அன்பு” என்றால் என்ன? ஒருவரிலொருவர் இத்தகைய அன்பு காட்டுவது ஏன் முக்கியம்? இத்தகைய அன்பு நமக்கு இருக்கிறது என்பதை எவ்வாறு செயலில் காட்டலாம்?

“ஊக்கமான அன்பு”​—⁠அது என்ன?

3 அன்பு என்பது ஓர் உணர்ச்சி, அது இயல்பாக ஊற்றெடுக்க வேண்டும் என பலர் நினைக்கின்றனர். ஆனால் ஏதோவொரு விதமான அன்பைப் பற்றி பேதுரு பேசவில்லை; உன்னதமான ஓர் அன்பைப் பற்றியே அவர் பேசினார். 1 பேதுரு 4:8-⁠ல் குறிப்பிடப்பட்டுள்ள “அன்பு” என்ற வார்த்தை ஆகாப்பீ என்ற கிரேக்க வார்த்தையின் மொழிபெயர்ப்பாகும். இது, நியமத்தின் அடிப்படையில் வழிநடத்தப்படும் சுயநலமற்ற அன்பை குறிக்கிறது. ஒரு புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “ஆகாப்பீ என்ற அன்பு கட்டளையின் பேரில் காண்பிக்க முடிகிற அன்பாகும்; ஏனென்றால் இது உணர்ச்சியின் இயல்பான வெளிக்காட்டு அல்ல, ஆனால் செயல்படுவதற்கு வழிநடத்தும் ஓர் உறுதியான தீர்மானம்.” சுயநலம் நம் இரத்தத்தில் ஊறிப்போய் இருப்பதால், ஒருவருக்கொருவர் அன்புகாட்ட நமக்கு நினைப்பூட்டுதல்கள் தேவை; இந்த அன்பை கடவுளுடைய நியமங்கள் கட்டளையிடும் வழிகளில் நாம் காட்ட வேண்டும்.​—ஆதியாகமம் 8:21; ரோமர் 5:⁠12.

4 வெறும் கடமையுணர்வின் காரணமாக ஒருவருக்கொருவர் அன்புகாட்ட வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. ஆகாப்பீ என்பது கனிவும் உணர்ச்சியுமற்ற ஒன்றல்ல. ‘ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாய் இருங்கள்’ [சொல்லர்த்தமாக, அன்பை “விரிவாக்குங்கள்”] என பேதுரு சொன்னார். a (கிங்டம் இன்டர்லீனியர்) என்றாலும், இத்தகைய அன்புக்கு முயற்சி தேவை. “ஊக்கமான” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையைப் பற்றி ஓர் அறிஞர் இவ்வாறு கூறுகிறார்: “பந்தயத்தின் கடைமுனையை எட்டும்போது தனது தசைகள் விரிவடையும் வண்ணம் தன்னிடமுள்ள கடைசி துளி பலத்தையும் பயன்படுத்துகிற விளையாட்டு வீரனை இது சித்தரித்துக் காட்டுகிறது.”

5 அப்படியானால், நமது அன்பு எளிதான விதங்களில் மட்டுமே காட்டும் அளவுக்கு அல்லது குறிப்பிட்ட சிலரிடம் மட்டுமே காட்டும் அளவுக்கு மட்டுப்பட்டதாக இருக்கக் கூடாது. கிறிஸ்தவ அன்பு என்பது நம் இருதயத்தை ‘விரிவாக்குவதை’ உட்படுத்துகிறது, அதாவது சவாலாக இருக்கும்போதுகூட அன்புகூருவதை உட்படுத்துகிறது. (2 கொரிந்தியர் 6:11-13) விளையாட்டு வீரர் தன் திறமைகளை அதிகரிக்க பயிற்சியும் முயற்சியும் செய்ய வேண்டியதைப் போலவே, நாம் இத்தகைய அன்பை வளர்த்துக்கொள்ள உழைக்க வேண்டும். ஒருவருக்கொருவர் இத்தகைய அன்பு காட்டுவது இன்றியமையாதது. ஏன்? குறைந்தபட்சம் மூன்று காரணங்களுக்காக அது இன்றியமையாதது.

ஏன் ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டும்?

6 முதலாவது காரணம் என்னவென்றால், “அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது.” (1 யோவான் 4:7) விரும்பத்தக்க இப்பண்பின் ஊற்றுமூலரான யெகோவா நம்மிடம் முதலில் அன்புகூர்ந்தார். “தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது” என அப்போஸ்தலன் யோவான் கூறுகிறார். (1 யோவான் 4:9) மானிடராக பிறந்து, தமது ஊழியத்தை செய்து முடித்து, வாதனையின் கழுமரத்தில் மரிப்பதற்கு கடவுளுடைய குமாரன் ‘அனுப்பப்பட்டார்’​—⁠இவையனைத்தும் ‘நாம் பிழைக்கும்படிக்கே’ செய்யப்பட்டது. கடவுளுடைய அன்பின் இந்த உன்னத வெளிக்காட்டுக்கு நாம் எப்படி பிரதிபலிக்க வேண்டும்? “தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம்” என யோவான் கூறுகிறார். (1 யோவான் 4:11) ‘தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க’​—⁠வெறுமனே உன்னிடத்தில் அல்ல, ஆனால் நம்மிடத்தில்​—⁠என யோவான் எழுதியிருப்பதை கவனியுங்கள். குறிப்பு தெளிவாக உள்ளது: நமது சக வணக்கத்தாரிடம் கடவுள் அன்புகூருகிறாரென்றால், நாமும் அவர்களிடம் அன்புகூர வேண்டும்.

7 இரண்டாவது காரணம் என்னவென்றால், தேவையிலிருக்கும் நமது சகோதரர்களுக்கு உதவ இப்பொழுது நாம் ஒருவரிலொருவர் அதிகமாக அன்புகூருவது மிக முக்கியம், ஏனென்றால் “எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று.” (1 பேதுரு 4:7) ‘கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களில்’ நாம் வாழ்ந்து வருகிறோம். (2 தீமோத்தேயு 3:1, NW) உலக நிலவரங்களும் இயற்கை பேரழிவுகளும் எதிர்ப்புகளும் நமக்கு அதிக கஷ்டங்களைக் கொண்டு வருகின்றன. துன்பம் மிகுந்த சூழ்நிலைகளில், முன்பைவிட இன்னும் அதிகமாக நாம் ஒருவருக்கொருவர் நெருங்கிவர வேண்டும். ஊக்கமான அன்பு நம்மை ஒன்றுசேர்க்கும், ‘ஒருவரைக் குறித்து ஒருவர் கவலைப்படுவதற்கும்’ நம்மை உந்துவிக்கும்.​—1 கொரிந்தியர் 12:25, 26.

8 மூன்றாவது காரணம் என்னவென்றால், சாத்தான் நம்மை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும்படி அவனுக்கு ‘இடங்கொடுக்க’ நாம் விரும்பாததால் ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டும். (எபேசியர் 4:27) சக விசுவாசிகளுடைய அபூரணங்களை, அதாவது அவர்களுடைய பலவீனங்களையும் குறைகளையும் தவறுகளையும் நமக்கு தடைக்கற்களாக பயன்படுத்த சாத்தான் தயாராக இருக்கிறான். மற்றவர்களின் யோசனையற்ற வார்த்தையோ அன்பற்ற செயலோ சபையிலிருந்து நம்மை விலக்கிக்கொள்வதற்கு நாம் அனுமதிப்போமா? (நீதிமொழிகள் 12:18) ஒருவருக்கொருவர் ஊக்கமான அன்பிருந்தால் நாம் அப்படி செய்ய மாட்டோம்! சமாதானத்தைக் காத்துக்கொள்வதற்கும் “ஒருமனப்பட்டு” ஐக்கியமாக கடவுளுக்கு சேவை செய்வதற்கும் இத்தகைய அன்பு நமக்கு உதவுகிறது.​—செப்பனியா 3:⁠9.

பிறரை நேசிக்கிறீர்கள் என்பதை எப்படி காண்பிக்கலாம்

9 அன்பு காட்டுவது வீட்டிலிருந்தே ஆரம்பமாக வேண்டும். ஒருவருக்கொருவர் காட்டும் அன்பினால் தமது உண்மையான சீஷர்கள் அடையாளம் கண்டுகொள்ளப்படுவார்கள் என இயேசு கூறினார். (யோவான் 13:34, 35) சபையில் மட்டுமல்ல வீட்டிலும்கூட​—⁠மணத்துணைகளுக்கு மத்தியிலும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் மத்தியிலும்​—⁠அன்பு வெளிப்பட வேண்டும். குடும்ப அங்கத்தினர்கள் மீது அன்பாக உணர்ந்தால் மட்டும் போதாது; அதை நாம் ஆக்கபூர்வ வழிகளில் காண்பிக்கவும் வேண்டும்.

10 மணத்துணைவர்கள் எவ்வாறு ஒருவருக்கொருவர் அன்பு காட்டலாம்? தனது மனைவியை மனதார நேசிக்கிற கணவன் தான் அவளை நெஞ்சார விரும்புவதை சொல்லிலும் செயலிலும் தெரியப்படுத்துகிறார்; வீட்டிலும் சரி வெளியிலும் சரி அதை தெரியப்படுத்துகிறார். அவளை கண்ணியமாக நடத்துகிறார், அவளுடைய யோசனைகளுக்கும் நோக்குநிலைகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் கரிசனை காட்டுகிறார். (1 பேதுரு 3:7) தன் சொந்த நலனைவிட அவளுடைய நலனை மேலானதாக கருதுகிறார்; அவளுடைய பொருளாதார, ஆன்மீக மற்றும் உணர்ச்சிப்பூர்வ தேவைகளைக் கவனித்துக்கொள்ள தன்னால் இயன்ற அனைத்தையும் செய்கிறார். (எபேசியர் 5:25, 28) தனது கணவனை உண்மையிலேயே நேசிக்கிற மனைவி அவருக்கு “பயபக்தி,” அதாவது ‘ஆழ்ந்த மரியாதை’ காட்டுகிறாள்; சில சமயங்களில் அவர் தனது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாவிட்டாலும்கூட அப்படி செய்கிறாள். (எபேசியர் 5:22, 33) அவருக்கு ஆதரவாக இருந்து பணிவாக நடந்துகொள்கிறாள்; நியாயமில்லாமல் வற்புறுத்துகிறவளாக இருக்க மாட்டாள், ஆனால் ஆன்மீக காரியங்கள் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துவதில் அவருடன் சேர்ந்து ஒத்துழைக்கிறாள்.​—ஆதியாகமம் 2:18; மத்தேயு 6:⁠33.

11 பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் எவ்வாறு அன்பு காட்டலாம்? அவர்களுடைய பொருளாதார தேவைகளுக்காக கடினமாக உழைக்க நீங்கள் மனமுள்ளவர்களாக இருப்பது உங்களுடைய அன்புக்கு அத்தாட்சி அளிக்கிறது. (1 தீமோத்தேயு 5:8) ஆனால் பிள்ளைகளுக்கு உணவையும் உடையையும் உறைவிடத்தையும் பார்க்கிலும் வேறொன்று தேவை. ஆம், பிறரை நேசிக்கிற, மெய்த் தேவனை சேவிக்கிற பிள்ளைகளாக வளர வேண்டுமானால் அவர்களுக்கு ஆன்மீக பயிற்றுவிப்பு தேவை. (நீதிமொழிகள் 22:6) பைபிளை படிப்பதற்கும் ஊழியத்தில் பங்குபெறுவதற்கும் கிறிஸ்தவ கூட்டங்களில் கலந்துகொள்வதற்கும் குடும்பமாக நேரத்தை ஒதுக்குவதை இது அர்த்தப்படுத்துகிறது. (உபாகமம் 6:4-7) இந்தக் காரியங்களைத் தொடர்ந்து செய்வதற்கு, முக்கியமாக நெருக்கடிமிக்க இந்தக் காலங்களில் நிறைய தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. உங்கள் பிள்ளைகளின் ஆன்மீக தேவைகளைக் கவனித்துக்கொள்ள நீங்கள் காட்டும் அக்கறையும் எடுக்கும் முயற்சியும் அன்பின் வெளிக்காட்டாக இருக்கின்றன; ஏனென்றால் அதன் மூலம் நீங்கள் அவர்களுடைய நித்திய நலனை மனதில் வைத்திருப்பதைக் காட்டுகிறீர்கள்.​—யோவான் 17:⁠3.

12 பிள்ளைகளின் உணர்ச்சிப்பூர்வ தேவைகளை கவனிப்பதன் மூலமும் பெற்றோர் அன்பு காட்டுவது இன்றியமையாதது. பிள்ளைகள் உதவியற்றவர்களாய் இருக்கிறார்கள்; அவர்களுடைய இருதயம் மென்மையானதால் உங்கள் அன்பை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துவது அவசியம். அவர்களை நேசிக்கிறீர்கள் என்பதை அவர்களிடம் சொல்லுங்கள், அவர்களிடம் பாசத்தையும் நேசத்தையும் பொழியுங்கள், ஏனென்றால் அவர்கள் நேசிக்கப்படத்தக்கவர்கள், மதிப்புமிக்கவர்கள் என்பதை இவை அவர்களுக்கு உறுதிப்படுத்துகின்றன. அவர்களை கனிவோடு உள்ளப்பூர்வமாக பாராட்டுங்கள், ஏனென்றால் அவர்களுடைய முயற்சிகளை நீங்கள் கவனிக்கிறீர்கள், அவற்றை உயர்வாக மதிக்கிறீர்கள் என்பதை அது அவர்களுக்குத் தெரியப்படுத்தும். அன்புடன் சிட்சை கொடுங்கள், ஏனென்றால் அவர்கள் எப்படிப்பட்ட நபராக வளர்ந்து வருகிறார்கள் என்பதில் நீங்கள் அக்கறை செலுத்துகிறீர்கள் என்பதை அது அவர்களுக்கு உணர்த்தும். (எபேசியர் 6:4) இத்தகைய ஆரோக்கியமான எல்லா வித அன்பின் வெளிக்காட்டுதல்களும் மகிழ்ச்சியான, ஒன்றுபட்ட குடும்பத்தைக் கட்டுவதற்கு உதவுகின்றன, இந்தக் கடைசி நாட்களின் அழுத்தங்களை சமாளிப்பதற்கு குடும்பத்தை நன்கு தயார்படுத்தவும் செய்கின்றன.

13 பிறருடைய குற்றம் குறைகளை கண்டுகொள்ளாமலிருக்க அன்பு நம்மை உந்துவிக்கிறது. “ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்” என தமது வாசகருக்கு புத்திமதி கூறியபோது, இது ஏன் மிக முக்கியம் என்பதற்கு காரணத்தை பேதுரு கொடுத்தார், அதாவது “அன்பு திரளான பாவங்களை மூடும்” என்று சொன்னார். (1 பேதுரு 4:8) பாவங்களை ‘மூடுவது’ என்பது வினைமையான பாவங்களை ‘மூடிமறைப்பதை’ குறிப்பதில்லை. இப்படிப்பட்ட பாவங்களை சபையில் பொறுப்புள்ளவர்களிடம் அறிவித்து அவர்கள் கையில் விட்டுவிடுவதே சரியானது. (லேவியராகமம் 5:1; நீதிமொழிகள் 29:24) அப்பாவிகளை பெரும் பாவிகள் தொடர்ந்து புண்படுத்த அல்லது பலியாக்க அனுமதிப்பது அன்பற்றதாக​—⁠வேதப்பூர்வமற்றதாக​—⁠இருக்கும்.​—1 கொரிந்தியர் 5:9-13.

14 பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சக விசுவாசிகளுடைய தவறுகளும் குறைபாடுகளும் அற்பமானவையாகவே இருக்கின்றன. சில சமயங்களில் நாம் எல்லாருமே சொல்லிலோ செயலிலோ தவறுகிறோம், ஒருவரையொருவர் எரிச்சலூட்டி விடுகிறோம், புண்படுத்தியும் விடுகிறோம். (யாக்கோபு 3:2) மற்றவர்களுடைய குறைகளை உடனடியாக எல்லாரிடமும் பறைசாற்ற வேண்டுமா? இத்தகைய போக்கு சபையில் வாக்குவாதங்களைத்தான் உருவாக்கும். (எபேசியர் 4:1-3) அன்பு நம்மை ஆளுமாகில், சக வணக்கத்தாருக்கு “அவதூறு” உண்டாக்க மாட்டோம். (சங்கீதம் 50:20) காரை பூசி பெயிண்ட் அடிக்கும்போது சுவற்றிலுள்ள மேடுபள்ளங்கள் அல்லது கறைகள் மறைந்துவிடுகின்றன; அது போலவே மற்றவர்களுடைய அபூரணங்களை அன்பு மூடிவிடுகிறது.​—நீதிமொழிகள் 17:⁠9.

15 உண்மையிலேயே கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும்படி அன்பு நம்மை தூண்டும். இந்தக் கடைசி நாட்களில் நிலைமைகள் தொடர்ந்து சீர்கெட்டு வருவதால், சில சமயங்களில் நம் சக விசுவாசிகளுக்கு பொருளாதார உதவியோ சரீரப்பிரகாரமான உதவியோ தேவைப்படலாம். (1 யோவான் 3:17, 18) உதாரணமாக, நம் சபையிலுள்ள அங்கத்தினர் ஒருவர் பயங்கர பணக் கஷ்டத்தில் இருக்கிறாரா அல்லது வேலையை இழந்துவிட்டாரா? அப்படியானால், நம்முடைய சூழ்நிலைமை அனுமதிக்கிறபடி, நாம் அவருக்கு ஏதாவது பொருளாதார உதவி அளிக்கலாம். (நீதிமொழிகள் 3:27, 28; யாக்கோபு 2:14-17) வயதான விதவையின் வீடு மோசமான நிலையில் இருக்கிறதா? அப்படியானால், முன்வந்து அதை செப்பனிட்டு கொடுக்கலாம்.​—யாக்கோபு 1:⁠27.

16 நம்முடைய அன்பு நம் அருகில் இருப்பவர்களுக்கு மாத்திரமே மட்டுப்பட்டதாக இருக்கக்கூடாது. சில சமயங்களில், புயல்களாலோ பூமியதிர்ச்சிகளாலோ அல்லது உள்நாட்டுச் சண்டைகளாலோ படுமோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் கடவுளுடைய ஊழியர்களைப் பற்றிய அறிக்கைகளையும் நாம் கேட்கிறோம். உணவு, உடை, தேவையான வேறுசில பொருட்கள் இல்லாமல் அவர்கள் கஷ்டப்படக்கூடும். அவர்கள் வேறு இனத்தவர்கள் அல்லது குலத்தவர்கள் என்பது பிரச்சினையே அல்ல. நாம் எல்லா ‘சகோதரர்களிடமும் அன்புகூருகிறோம்.’ (1 பேதுரு 2:17) ஆகவே, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போல, நிவாரண பணிகளுக்கு ஆதரவளிக்க நாம் ஆர்வமாக இருக்கிறோம். (அப்போஸ்தலர் 11:27-30; ரோமர் 15:26) இப்படி எல்லா வழிகளிலும் நாம் அன்பு காட்டும்போது, இந்தக் கடைசி நாட்களில் நம்மை ஒன்றாக இணைக்கும் பந்தத்தைப் பலப்படுத்துகிறோம்.​—கொலோசெயர் 3:⁠14.

17 கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள அன்பு நம்மை உந்துவிக்கிறது. இயேசுவின் முன்மாதிரியை கவனியுங்கள். அவர் ஏன் பிரசங்கித்தார், கற்பித்தார்? ஜனங்கள் ஆன்மீக ரீதியில் பரிதபிக்கத்தக்க நிலையில் இருந்ததால் அவர்கள் மீது “மனதுருகி”னார். (மாற்கு 6:34) ஆன்மீக சத்தியங்களை கற்றுக் கொடுத்து, நம்பிக்கையூட்ட வேண்டிய பொய் மத மேய்ப்பர்களால் அவர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள், தவறாக வழிநடத்தப்பட்டார்கள். ஆழ்ந்த, இதயப்பூர்வ அன்பும் இரக்கமும் இயேசுவை தூண்டியதால், ‘தேவனுடைய ராஜ்யத்தைப்’ பற்றிய நற்செய்தியைப் பிரசங்கித்து அவர்களுக்கு ஆறுதலளித்தார்.​—லூக்கா 4:16-21, 43.

18 இன்றும் அநேகர் ஆன்மீக ரீதியில் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள், தவறாக வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள், அதனால் நம்பிக்கையின்றி இருக்கிறார்கள். மெய்க் கடவுளைப் பற்றி இன்னும் அறியாதவர்களுடைய ஆன்மீக தேவைகளைக் குறித்ததில் நாம் இயேசுவைப் போல அதிக அக்கறையுடன் இருந்தால், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிக்க அன்பும் இரக்கமும் நம்மை உந்துவிக்கும். (மத்தேயு 6:9, 10; 24:14) காலம் குறுகியதாக இருப்பதை கவனிக்கும்போது, உயிர்காக்கும் இந்தச் செய்தியை அறிவிப்பது முன்பைவிட இப்பொழுது அதிக அவசரமானதாக இருக்கிறது.​—1 தீமோத்தேயு 4:⁠16.

“எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று”

19 ஒருவரிலொருவர் அன்புகூருங்கள் என்ற அறிவுரைக்கு முன்பு, “எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று” என பேதுரு சொன்னதை நினைவில் கொள்ளுங்கள். (1 பேதுரு 4:7) இந்தப் பொல்லாத உலகத்தை கடவுளுடைய புதிய உலகம் விரைவில் நீக்கிவிடும். (2 பேதுரு 3:13) அப்படியானால், மெத்தனமாக இருப்பதற்கு இது காலமல்ல. “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்” என இயேசு கூறினார்.​—லூக்கா 21:34, 35.

20 ஆகவே, கால ஓட்டத்தில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை உணர்ந்து, ‘விழிப்பாயிருப்போமாக.’ (மத்தேயு 24:42) நம்மை திசைதிருப்பக்கூடிய சாத்தானின் எந்த சோதனைகளுக்கும் எதிராக கவனமாயிருப்போமாக. உணர்ச்சியற்ற, அன்பற்ற இவ்வுலகம் பிறர் மீது நாம் அன்புகூருவதைத் தடுப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்காதிருப்போமாக. எல்லாவற்றிற்கும் மேலாக, மேசியானிய ராஜ்யத்தின் மூலம் இந்தப் பூமியைக் குறித்த மகத்தான நோக்கத்தை விரைவில் நிறைவேற்றும் மெய்க் கடவுளாகிய யெகோவாவிடம் இன்னும் அதிகமாய் நெருங்கி வருவோமாக.​—வெளிப்படுத்துதல் 21:4, 5.

[அடிக்குறிப்பு]

a நாம் ஒருவரிலொருவர் “கபடமில்லாமல்,” “ஆழமாக,” அல்லது “மனப்பூர்வமாக” அன்புகூர வேண்டும் என பிற மொழிபெயர்ப்புகள் 1 பேதுரு 4:8-⁠ல் மொழிபெயர்த்திருக்கின்றன.

படிப்புக் கேள்விகள்

• பிரிந்து செல்வதற்கு முன் இயேசு தமது சீஷர்களுக்குக் கொடுத்த அறிவுரை என்ன, அவருடைய குறிப்பை பேதுரு உணர்ந்துகொண்டார் என்பதை எது காட்டுகிறது? (பாரா. 1-2)

• “ஊக்கமான அன்பு” என்றால் என்ன? (பாரா. 3-5)

• ஏன் ஒருவரிலொருவர் அன்புகூர வேண்டும்? (பாரா. 6-8)

• பிறரை நேசிக்கிறீர்கள் என்பதை நீங்கள் எவ்வாறு காண்பிக்கலாம்? (பாரா. 9-18)

• ஏன் மெத்தனமாக இருப்பதற்கு இது காலமல்ல, என்ன செய்ய நாம் உறுதிபூண்டிருக்க வேண்டும்? (பாரா. 19-20)

[பக்கம் 29-ன் படம்]

ஒன்றுபட்ட ஒரு குடும்பம் இந்தக் கடைசி நாட்களின் அழுத்தங்களை சமாளிக்க நன்கு தயாராக இருக்கிறது

[பக்கம் 30-ன் படம்]

உண்மையிலேயே கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட அன்பு நம்மை தூண்டுகிறது

[பக்கம் 31-ன் படம்]

கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது அன்பின் வெளிக்காட்டாகும்