Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கவனம் செலுத்தியதால் அவர்கள் காப்பாற்றப்பட்டனர்

கவனம் செலுத்தியதால் அவர்கள் காப்பாற்றப்பட்டனர்

கவனம் செலுத்தியதால் அவர்கள் காப்பாற்றப்பட்டனர்

எருசலேம் ஆலயத்தை மையமாக கொண்டிருந்த யூத ஒழுங்குமுறையின் முடிவைப் பற்றி இயேசு கிறிஸ்து முன்னரே எச்சரிப்பு கொடுத்தார். அது எப்பொழுது வருமென ஒரு தேதியை அவர் குறிப்பிடவில்லை. ஆனால் அழிவுக்கு வழிநடத்தும் சம்பவங்களை விவரித்தார். தொடர்ந்து விழித்திருக்கும்படியும் ஆபத்தான அந்த இடத்தைவிட்டு வெளியேறும்படியும் தமது சீஷர்களை அவர் துரிதப்படுத்தினார்.

இயேசு இவ்வாறு முன்னறிவித்தார்: “எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.” அவர் மேலும் கூறினார்: ‘பாழாக்குகிற அருவருப்பை . . . பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள்.’ பொருளுடைமைகளைப் பாதுகாப்பதற்காக திரும்பிச் செல்ல வேண்டாமென இயேசு தமது சீஷர்களை அறிவுறுத்தினார். உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அவர்கள் உடனடியாக தப்பியோட வேண்டியிருந்தது.​—லூக்கா 21:20, 21; மத்தேயு 24:15, 16.

நீண்ட காலமாய் நடந்துவந்த கலகத்தை அடக்குவதற்கு பொ.ச. 66-⁠ல் செஸ்டியஸ் காலஸ் எருசலேமுக்கு எதிராக ரோம படைகளுடன் வந்தார். நகரத்திற்குள்ளேயே நுழைந்து, ஆலயத்தை முற்றுகையிட்டார். கூச்சலும் குழப்பமும் நகரத்தை சூழ்ந்துகொண்டன. தொடர்ந்து விழித்திருந்தவர்களோ ஆபத்து சீக்கிரத்தில் சம்பவிக்கப் போவதை உணர்ந்துகொண்டார்கள். ஆனால் அங்கிருந்து தப்பியோடுவது சாத்தியமாக இருந்ததா? எதிர்பாரா விதமாக, செஸ்டியஸ் காலஸ் தனது படைகளுடன் திரும்பிச் சென்றுவிட்டார். யூத கிளர்ச்சிக்காரர்கள் அவர்களைத் துரத்திச் சென்றனர். எருசலேமிலிருந்தும் யூதேயா முழுவதிலிருந்தும் தப்பியோடுவதற்கு இதுவே தகுந்த சமயமாக இருந்தது!

அடுத்த ஆண்டில், வெஸ்பேஸியன் மற்றும் அவருடைய மகன் டைட்டஸின் தலைமையில் ரோம படைகள் திரும்பி வந்தன. அப்போது முழு தேசமும் போரில் மூழ்கியிருந்தது. பொ.ச. 70-⁠ன் ஆரம்பத்தில், எருசலேமைச் சுற்றிலும் கூர்முனைகள் கொண்ட கம்புகளை நாட்டி ரோமர்கள் கொத்தளம் அமைத்தனர். தப்பிச்செல்ல வழியே இல்லாமல் எல்லாம் அடைக்கப்பட்டது. (லூக்கா 19:43, 44) நகரத்திற்குள்ளிருந்த உட்கட்சி கும்பல்கள் ஒருவரையொருவர் வெட்டிக் கொன்றனர். மீதியானோர் ரோமர்களால் கொல்லப்பட்டனர் அல்லது கைதிகளாக கொண்டு செல்லப்பட்டனர். நகரமும் அதிலிருந்த ஆலயமும் முற்றிலும் அழிக்கப்பட்டன. பத்து லட்சத்திற்கும் அதிகமான யூதர்கள் துன்புற்று செத்ததாக முதல் நூற்றாண்டு யூத சரித்திராசிரியர் ஜொஸிஃபஸ் கூறினார். அந்த ஆலயம் மீண்டும் கட்டப்படவேயில்லை.

பொ.ச. 70-⁠ல் கிறிஸ்தவர்கள் எருசலேமிலேயே இருந்திருந்தால், அவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பார்கள் அல்லது அங்கிருந்த மற்றவர்களைப் போல அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் தெய்வீக எச்சரிப்புக்கு செவிசாய்த்து எருசலேமிலிருந்தும் யூதேயா முழுவதிலுமிருந்தும் தப்பியோடினர்; அவர்கள் யோர்தான் நதிக்கு கிழக்கே இருந்த மலைகளுக்குச் சென்றதாக பூர்வ சரித்திராசிரியர்கள் அறிவிக்கின்றனர். சிலர் பெரேயா மாகாணத்திலிருந்த பெல்லாவில் குடியேறினர். அவர்கள் யூதேயாவை விட்டே போய்விட்டனர், திரும்பி வரவே இல்லை. இயேசுவின் எச்சரிப்புக்கு செவிசாய்த்ததால் தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொண்டனர்.

நம்பகமான எச்சரிக்கைகளுக்கு கூர்ந்து கவனம் செலுத்துகிறீர்களா?

நிறைவேறாமல் போன அநேக எச்சரிக்கைகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பதால், பெரும்பாலோர் எல்லா எச்சரிக்கைகளையுமே லேசாக எடுத்துக்கொள்கிறார்கள். என்றாலும், எச்சரிக்கைகளுக்கு செவிசாய்ப்பது உங்களுடைய ஜீவனைப் பாதுகாக்கலாம்.

1975-⁠ல் பூகம்பம் வருமென சீனாவில் எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டன. அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மக்களும் எச்சரிக்கைக்கு செவிகொடுத்தனர். அதனால் ஆயிரமாயிரம் உயிர்கள் பாதுகாக்கப்பட்டன.

பிலிப்பைன்ஸில் ஏப்ரல் 1991-⁠ல், பினடூபோ மலைச்சரிவில் வாழும் கிராமவாசிகள் மலையிலிருந்து நீராவியும் சாம்பலும் பீறிடுவதாக அறிவித்தார்கள். இரண்டு மாதங்களாக அதை கவனித்த பின், சீக்கிரத்தில் ஆபத்து வரப்போவதைப் பற்றி பிலிப்பைன்ஸ் எரிமலையியல் மற்றும் பூகம்பவியல் நிறுவனம் எச்சரித்தது. உடனடியாக, ஆயிரக்கணக்கானோர் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டார்கள். ஜூன் 15 அன்று காலையில், எரிமலை பெரும் சப்தத்துடன் வெடித்தது; மலையிலிருந்து கோடிக்கணக்கான டன் எடையுள்ள சாம்பல் தூக்கி எறியப்பட்டு, அந்த நாட்டுப்புறத்தில் வந்து படிந்தது. எச்சரிப்புக்கு செவிசாய்த்ததால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன.

தற்போதைய ஒழுங்குமுறையின் முடிவைப் பற்றி பைபிள் எச்சரிக்கிறது. நாம் இப்பொழுது அந்த முடிவின் காலத்தில் வாழ்கிறோம். முடிவு நெருங்கி வருகையில், நீங்கள் விழித்திருக்கிறீர்களா? ஆபத்தான பகுதியைவிட்டு வெளியேற நீங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறீர்களா? மற்றவர்களும் நடவடிக்கை எடுக்க அவசர உணர்வுடன் எச்சரித்து வருகிறீர்களா?

[பக்கம் 20-ன் படம்]

எச்சரிக்கைக்கு கவனம் செலுத்தியதால், பினடூபோ எரிமலை சாம்பலை கக்கியபோது அநேகருடைய உயிர் காப்பாற்றப்பட்டது

[பக்கம் 21-ன் படம்]

இயேசுவின் எச்சரிக்கைக்கு செவிசாய்த்ததால் பொ.ச. 70-⁠ல் எருசலேம் அழிக்கப்பட்டபோது கிறிஸ்தவர்கள் காப்பாற்றப்பட்டனர்