Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘நியாயத்தீர்ப்பு வேளை’ வந்தது

‘நியாயத்தீர்ப்பு வேளை’ வந்தது

‘நியாயத்தீர்ப்பு வேளை’ வந்தது

வானத்தின் மத்தியில் ஒரு தேவதூதன் பறப்பதாகவும், பூமியில் உள்ளோருக்கு ‘அறிவிப்பதற்கு நித்திய சுவிசேஷத்தை’ அவர் பெற்றிருப்பதாகவும் பைபிளின் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்துதல் தெரிவிக்கிறது. “தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் வேளை வந்தது” என அந்தத் தூதன் மிகுந்த சத்தமிட்டு கூறுகிறார். (வெளிப்படுத்துதல் 14:6, 7) ‘நியாயத்தீர்ப்பு வேளை’ என்பது தெய்வீக நியாயத்தீர்ப்பை அறிவிப்பதையும் அதை நிறைவேற்றுவதையும் அர்த்தப்படுத்துகிறது. ‘கடைசி நாட்களின்’ உச்சக்கட்டத்தில் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்படும். இப்பொழுது, அந்தக் கடைசி நாட்களில்தான் நாம் வாழ்கிறோம்.​—2 தீமோத்தேயு 3:⁠1.

நீதியை நேசிப்போருக்கு ‘நியாயத்தீர்ப்பு வேளை’ ஒரு நற்செய்தியே. வன்முறைமிக்க, அன்பற்ற இவ்வுலகில் துன்பப்படும் தமது ஊழியருக்கு கடவுள் விடுதலை அளிக்கும் வேளை அது.

அந்த ‘நியாயத்தீர்ப்பு வேளையின்’ முடிவில் இந்தப் பொல்லாத உலக ஒழுங்குமுறை அழிக்கப்படுவதற்கு முன்னரே, ‘தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்தும்படி’ நாம் உந்துவிக்கப்படுகிறோம். அதை நீங்கள் செய்கிறீர்களா? “எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது” என சொன்னால் மட்டும் போதாது, இன்னும் அதிகத்தை செய்ய வேண்டும். (மத்தேயு 7:21-23; யாக்கோபு 2:19, 20) கடவுள் மீதுள்ள ஆரோக்கியமான பயம், அவருக்கு பயபக்தியைக் காட்டும்படி நம்மைத் தூண்ட வேண்டும். கெட்ட காரியங்களிலிருந்து விலகியிருப்பதற்கு அது நம்மை உந்துவிக்க வேண்டும். (நீதிமொழிகள் 8:13) நன்மையை விரும்புவதற்கும் தீமையை வெறுப்பதற்கும் நமக்கு உதவ வேண்டும். (ஆமோஸ் 5:14, 15) நாம் கடவுளை மகிமைப்படுத்துவோமாகில், அவர் சொல்வதை மிகுந்த மரியாதையுடன் செவிகொடுத்துக் கேட்போம். அவருடைய வார்த்தையாகிய பைபிளை தவறாமல் வாசிப்பதற்கு நேரமில்லாமல் போகுமளவுக்கு வேறு வேலைகளில் மூழ்கியிருக்க மாட்டோம். எல்லா சமயங்களிலும் முழு இருதயத்தோடு அவரை நம்புவோம். (சங்கீதம் 62:8; நீதிமொழிகள் 3:5, 6) அவர் வானத்தையும் பூமியையும் படைத்த சர்வலோக பேரரசர் என்பதை அவரை உண்மையிலேயே மகிமைப்படுத்துகிறவர்கள் அறிந்திருக்கிறார்கள்; தங்களை ஆளுவதற்கு உரிமையுடையவர் என்பதால் அவருக்கு அன்புடன் கீழ்ப்படிகிறார்கள். இந்த விஷயங்களுக்கு நாம் அதிக கவனம் செலுத்த வேண்டுமென உணர்ந்தால், தாமதிக்காமல் உடனே அப்படி செய்வோமாக.

நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும் வேளை என அந்த தேவதூதன் குறிப்பிட்டது “யெகோவாவின் நாள்” என்றும் அழைக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு “நாள்” பூர்வ எருசலேம் மீது பொ.ச.மு. 607-⁠ல் வந்தது; ஏனென்றால் யெகோவா தமது தீர்க்கதரிசிகள் மூலம் கொடுத்த எச்சரிக்கைகளுக்கு அந்த ஜனங்கள் செவிசாய்க்கவில்லை. யெகோவாவின் நாள் சீக்கிரத்தில் வராது என்று நினைத்துக்கொண்டே இருந்ததால், அவர்கள் தங்களுடைய வாழ்க்கையை அதிக ஆபத்திற்குள்ளாக்கினார்கள். “அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்து வருகிறது” என யெகோவா எச்சரித்திருந்தார். (செப்பனியா 1:14; NW) மற்றொரு “யெகோவாவின் நாள்” பொ.ச.மு. 539-⁠ல் பூர்வ பாபிலோன் மீது வந்தது. (ஏசாயா 13:1, 6, NW) பாபிலோனியர் தங்களுடைய அரண்கள் மீதும் தெய்வங்கள் மீதும் நம்பிக்கை வைத்து, யெகோவாவின் தீர்க்கதரிசிகளால் கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை அசட்டை செய்தனர். ஆனால் ஒரே இரவில், பாபிலோன் மாநகரம் மேதிய-பெர்சியர்கள் கைகளில் வீழ்ந்தது.

இன்று நாம் எதை எதிர்ப்படுகிறோம்? மிகவும் பரந்தளவில் பாதிப்பை ஏற்படுத்தும் இன்னுமொரு ‘யெகோவாவின் நாளை’ எதிர்ப்படுகிறோம். (2 பேதுரு 3:11-14, NW) ‘மகா பாபிலோன்’ மீது தெய்வீக நியாயத்தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. “பாபிலோன் மகா நகரம் விழுந்தது!” என ஒரு தேவதூதன் அறிவிப்பதாக வெளிப்படுத்துதல் 14:8 கூறுகிறது. அது ஏற்கெனவே நடந்துவிட்டது. அவள் இனிமேலும் யெகோவாவின் வணக்கத்தாரை தனது கட்டுப்பாட்டில் வைக்க முடியாது. அவளுடைய ஊழல்களும் போரில் அவளது ஈடுபாடும் உலகெங்கும் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. இப்பொழுது அவளுடைய இறுதி அழிவு சமீபித்திருக்கிறது. அதனால்தான், எல்லா இடங்களிலுமுள்ள ஜனங்களை பைபிள் இவ்வாறு உந்துவிக்கிறது: “நீங்கள் அவளுடைய [மகா பாபிலோனுடைய] பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள். அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார்.”​—வெளிப்படுத்துதல் 18:4, 5.

மகா பாபிலோன் என்றால் என்ன? இது உலகெங்குமுள்ள அனைத்து மதங்களின் ஒட்டுமொத்த தொகுதியாகும், பூர்வ பாபிலோனின் தனிச்சிறப்புமிக்க அம்சங்களை இது பெற்றிருக்கிறது. (வெளிப்படுத்துதல், 17, 18 அதிகாரங்கள்) பூர்வ பாபிலோனுக்கும் மகா பாபிலோனுக்கும் உள்ள ஒற்றுமைகள் சிலவற்றை கவனியுங்கள்:

பூர்வ பாபிலோனைச் சேர்ந்த மதகுருக்கள் அத்தேசத்தின் அரசியல் விவகாரங்களில் அதிகம் ஈடுபட்டனர். அதைத்தான் இன்றும் பெரும்பாலான மதங்கள் செய்கின்றன.

பூர்வ பாபிலோனின் மதகுருக்கள் அத்தேசம் போரில் ஈடுபடுவதை அடிக்கடி ஊக்குவித்தனர். அதைப் போலவே நவீனகால மதங்களும், தேசங்கள் போரில் ஈடுபடும்போது படைவீரர்களை ஆசீர்வதிப்பதில் பெரும்பாலும் முன்னணியில் இருந்திருக்கின்றன.

பூர்வ பாபிலோனின் போதனைகளும் பழக்கங்களும் அத்தேசத்தினர் படுமோசமான ஒழுக்கங்கெட்ட செயல்களில் ஈடுபடுவதற்கு வழிநடத்தின. இன்றும் பைபிளின் ஒழுக்க தராதரங்களை மதத் தலைவர்கள் ஒதுக்கித் தள்ளுவதால், குருவர்க்கத்தினர் மத்தியிலும் பாமரர் மத்தியிலும் ஒழுக்கக்கேடு தலைவிரித்தாடுகிறது. உலகத்துடனும் அதன் அரசியல் அமைப்புகளுடனும் மகா பாபிலோன் வேசித்தனம் செய்வதால், வெளிப்படுத்துதல் புத்தகம் அவளை ஒரு வேசியாக வர்ணிப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மகா பாபிலோன் ‘வெட்கங்கெட்ட விதத்தில் செல்வச்செருக்குடன்’ வாழ்வதாகவும் பைபிள் சொல்கிறது. பூர்வ பாபிலோனில், கோயில் ஸ்தாபனங்கள் பெருமளவில் நிலபுலன்களை சுருட்டிக் கொண்டன, மதகுருக்கள் வியாபார நடவடிக்கைகளில் பிரபலமாக விளங்கினார்கள். இன்று, வழிபாட்டு தலங்களைத் தவிர, மகா பாபிலோனுக்கு ஏகப்பட்ட சொத்துக்களும் வியாபாரங்களும் இருக்கின்றன. அவளுடைய போதனைகளும் பண்டிகை நாட்களும் வியாபார உலகிலுள்ள மற்றவர்களுக்கும் அவளுக்கும் பெரும் செல்வத்தைக் குவிக்கின்றன.

சிலைகளும் மந்திரமும் பில்லிசூனியமும் இன்று அநேக இடங்களில் காணப்படுவது போலவே அன்றும் பூர்வ பாபிலோனில் சர்வ சாதாரணமாக காணப்பட்டன. மரணம் என்பது இன்னொரு வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும் ஒரு வழியாக கருதப்பட்டது. கோயில்களும் வழிபாட்டுக் கூடங்களும் பூர்வ பாபிலோனில் ஏராளமாக இருந்தன, ஆனால் பாபிலோனியர் யெகோவாவின் வணக்கத்தாரை எதிர்த்தனர். அதே நம்பிக்கைகளும் பழக்கங்களும் மகா பாபிலோனிலும் இருக்கின்றன.

பூர்வ காலங்களில், தம்மையும் தமது சித்தத்தையும் தொடர்ந்து அவமதித்தவர்களைத் தண்டிப்பதற்காக அரசியலிலும் இராணுவத்திலும் வலிமை பெற்று விளங்கிய தேசங்களை யெகோவா பயன்படுத்தினார். உதாரணமாக, பொ.ச.மு. 740-⁠ல் அசீரியரால் சமாரியா அழிக்கப்பட்டது. எருசலேம் பொ.ச.மு. 607-⁠ல் பாபிலோனியராலும், பொ.ச. 70-⁠ல் ரோமராலும் பாழாக்கப்பட்டது. பொ.ச.மு. 539-⁠ல் மேதிய பெர்சியரால் பாபிலோன் தோற்கடிக்கப்பட்டது. நம்முடைய நாளில், அரசாங்கங்கள் ஒரு மூர்க்க மிருகத்தைப் போல அந்த “வேசி”யைத் தாக்கி, அவளை நிர்வாணமாக்கி, அவளுடைய சுயரூபத்தை அம்பலமாக்கும். பிறகு அவளை பூண்டோடு அழித்துவிடும்.​—வெளிப்படுத்துதல் 17:⁠16.

உலக அரசாங்கங்கள் உண்மையிலேயே இப்படிப்பட்ட காரியத்தை செய்யுமா? ‘தேவன் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்’ என பைபிள் கூறுகிறது. (வெளிப்படுத்துதல் 17:17) அது முன்னறிய முடியாத விதத்தில் திடீரென, திகைப்பூட்டும் விதத்தில், அதிர்ச்சியூட்டும் விதத்தில் நடக்கும், படிப்படியாக நிகழாது.

நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘மகா பாபிலோனின் போதனைகளாலும் பழக்கங்களாலும் கறைபடிந்த ஒரு மத ஸ்தாபனத்தோடு இன்னும் கூட்டுறவு வைத்திருக்கிறேனா?’ அதில் நீங்கள் ஓர் அங்கத்தினராக இல்லாவிட்டாலும்கூட, இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘அதன் மனப்பான்மை என் மீது செல்வாக்கு செலுத்த அனுமதித்திருக்கிறேனா?’ எப்படிப்பட்ட மனப்பான்மை? ஒழுக்கயீனமான செயல்களை ஏற்றுக்கொள்ளுதல், கடவுளை நேசிப்பதற்குப் பதிலாக பொருளுடைமைகளையும் இன்பங்களையும் நேசித்தல், அல்லது (ஒருவேளை சின்னச்சின்ன விஷயங்களிலும்கூட) வேண்டுமென்றே யெகோவாவின் வார்த்தையை அசட்டை செய்தல். உங்களுடைய பதிலைக் குறித்து கவனமாக சிந்தித்துப் பாருங்கள்.

யெகோவாவின் தயவைப் பெறுவதற்கு, நாம் உண்மையிலேயே மகா பாபிலோனின் பாகமல்ல என்பதை நம்முடைய செயல்களிலும் இருதயத்தின் ஆசைகளிலும் நிரூபிப்பது இன்றியமையாதது. தாமதிப்பதற்கு இது காலமல்ல. திடீரென முடிவு வருமென எச்சரித்து, பைபிள் நமக்கு இவ்வாறு சொல்கிறது: “பாபிலோன் மகா நகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒரு போதும் காணப்படாமற்போகும்.”​—வெளிப்படுத்துதல் 18:21.

ஆனால் இன்னும் சம்பவிக்க வேண்டியவை இருக்கின்றன. உலக அரசியல் அமைப்பிடமும், அதன் ஆட்சியாளர்களிடமும், இயேசு கிறிஸ்துவின் ஆட்சியைப் புறக்கணிக்கிறவர்களிடமும் யெகோவா கணக்குக் கேட்பார், இது ‘நியாயத்தீர்ப்பு வேளையின்’ மற்றொரு அம்சமாகும். (வெளிப்படுத்துதல் 13:1, 2; 19:19-21) பூர்வ பாபிலோனின் காலம் முதல் இன்று வரையுள்ள அரசியல் ஆட்சியை பொன்னினாலும் வெள்ளியினாலும் செம்பினாலும் இரும்பினாலும் களிமண்ணினாலும் செய்யப்பட்ட மாபெரும் ஒரு சிலையாக பைபிள் விவரிக்கிறது; இது, தானியேல் 2:20-45-⁠ல் பதிவு செய்யப்பட்டுள்ள தீர்க்கதரிசன காட்சியில் விவரிக்கப்படுகிறது. நம்முடைய நாளைப் பற்றி அந்தத் தீர்க்கதரிசனம் இவ்வாறு முன்னறிவித்தது: “பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார்.” யெகோவாவின் ‘நியாயத்தீர்ப்பு வேளையில்’ அந்த ராஜ்யம் இன்னும் என்ன செய்யப்போகிறது என்பதைப் பற்றி பைபிள் இவ்வாறு அறிவிக்கிறது: “அது அந்த [மனித] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”​—தானியேல் 2:⁠44.

‘உலகத்திலுள்ளவைகளில்’ அன்புகூர வேண்டாம், அதாவது உண்மையான கடவுளைவிட்டுப் பிரிந்திருக்கிற இவ்வுலகம் முன்னேற்றுவிக்கும் வாழ்க்கை முறையில் அன்புகூர வேண்டாம் என மெய் வணக்கத்தாரை பைபிள் எச்சரிக்கிறது. (1 யோவான் 2:15-17) நீங்கள் முழுமையாக கடவுளுடைய ராஜ்யத்தை ஆதரிக்கிறீர்கள் என்பதை உங்களுடைய தீர்மானங்களும் செயல்களும் காட்டுகின்றனவா? உண்மையிலேயே கடவுளுடைய ராஜ்யத்திற்கு உங்களுடைய வாழ்க்கையில் முதலிடம் கொடுக்கிறீர்களா?​—மத்தேயு 6:33; யோவான் 17:16, 17.

[பக்கம் 14-ன் பெட்டி]

எப்பொழுது முடிவு வரும்?

“நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்.”​—⁠மத்தேயு 24:⁠44.

“[அந்த] நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.”​—⁠மத்தேயு 25:⁠13.

“அது தாமதிப்பதில்லை.”​—⁠ஆபகூக் 2:⁠3.

[பக்கம் 14-ன் பெட்டி]

தேதி தெரிந்திருந்தால், உங்கள் வாழ்க்கை முறை மாறிவிடுமா?

கடவுள் நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என உங்களுக்கு உறுதியாக தெரியவந்தால், உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிவிடுவீர்களா? நீங்கள் எதிர்பார்த்தது போல இந்த ஒழுங்குமுறையின் முடிவு இன்னும் வராததால், நீங்கள் யெகோவாவின் சேவையில் மந்தமாகிவிட்டீர்களா?​—⁠எபிரெயர் 10:36-38.

அந்த நாளை நாம் துல்லியமாக அறியாதிருப்பது தூய நோக்கத்துடன் கடவுளுக்கு சேவை செய்கிறோம் என்பதை காண்பிக்க நமக்கு வாய்ப்பளிக்கிறது. யெகோவா இருதயத்தைப் பார்ப்பதால், அவரை கடைசி நிமிடத்தில் பிரியப்படுத்திவிட முடியாதென அவரை அறிந்தவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.​—⁠எரேமியா 17:10; எபிரெயர் 4:⁠13.

யெகோவாவை உண்மையிலேயே நேசிப்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் அவருக்கு முதலிடம் கொடுக்கிறார்கள். மற்றவர்களைப் போலவே உண்மை கிறிஸ்தவர்களும் உலகப்பிரகாரமான வேலை செய்யக்கூடும். ஆனால் செல்வந்தராக ஆக வேண்டும் என்பது அவர்களுடைய குறிக்கோள் அல்ல, வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவற்றை பெற வேண்டும், அதேசமயம் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கும் கொஞ்சம் வேண்டும் என்பதுதான் அவர்களுடைய எண்ணம். (எபேசியர் 4:28; 1 தீமோத்தேயு 6:7-12) அவர்களும் ஆரோக்கியமான பொழுதுபோக்கை அனுபவிக்கிறார்கள், சற்று ஓய்வையும் எடுத்துக்கொள்கிறார்கள்; புத்துணர்ச்சி அடைவதே அவர்களுடைய ஆசை, மற்றவர்கள் செய்வதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதல்ல. (மாற்கு 6:31; ரோமர் 12:⁠2) இயேசு கிறிஸ்துவைப் போலவே, கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்.​—⁠சங்கீதம் 37:4; 40:⁠8.

என்றென்றும் வாழவும் யெகோவாவை சேவிக்கவுமே உண்மை கிறிஸ்தவர்கள் விரும்புகிறார்கள். சில ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு எதிர்பார்த்ததைவிட இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருக்க வேண்டும் என்பதால், என்றென்றும் வாழும் நம்பிக்கையின் மதிப்பு குறைந்துவிடாது.

[பக்கம் 15-ன் பெட்டி/படங்கள்]

பேரரசுரிமை பற்றிய விவாதம்

கடவுள் ஏன் இவ்வளவு துன்பத்தை அனுமதிக்கிறார் என்பதை அறிந்துகொள்வதற்கு, பேரரசுரிமை பற்றிய விவாதத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பேரரசுரிமை என்றால் என்ன? முழு அதிகாரத்துடன் அரசாளும் உரிமை.

யெகோவா படைப்பாளராக இருப்பதால் பூமியின் மீதும் அதில் குடியிருக்கும் அனைவர் மீதும் அரசாள அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் மனித சரித்திரத்தின் ஆரம்பத்திலேயே யெகோவாவின் பேரரசுரிமைக்கு எதிராக சவால் விடப்பட்டது என பைபிள் விளக்குகிறது. யெகோவா மிதமீறி கட்டுப்படுத்துகிறார் என்று பிசாசாகிய சாத்தான் வாதாடினான்; அதுமட்டுமல்ல, அவருடைய சட்டத்தைப் புறக்கணித்து சொந்த இஷ்டத்தின்படி செய்தால் என்ன நடக்கும் என்பதைப் பற்றி நமது முதல் பெற்றோரிடம் கடவுள் பொய் சொன்னார் என்றுகூட வாதாடினான். மேலும், கடவுளுடைய உதவியின்றி தன்னிச்சையாக ஆண்டுகொண்டால் உண்மையிலேயே அவர்கள் நன்றாக வாழ்வார்கள் என்றும் சொன்னான்.​—⁠ஆதியாகமம், 2, 3 அதிகாரங்கள்.

கலகக்காரர்களை கடவுள் உடனடியாக அழித்திருந்தால், அது அவருடைய வல்லமையை வெளிப்படுத்திக் காண்பித்திருக்கும். ஆனால் எழுப்பப்பட்ட சவால்களுக்கு பதில் கிடைத்திருக்காது. கலகக்காரர்களை அந்த வினாடியே அழிப்பதற்கு பதிலாக, புத்திக்கூர்மையுள்ள தமது படைப்புகள் அனைத்தும் இந்தக் கலகத்தின் விளைவை பார்ப்பதற்கு யெகோவா அனுமதித்திருக்கிறார். இதனால் துன்பம் ஏற்பட்டிருப்பது உண்மையென்றாலும், நாம் பிறப்பதற்கு இது வாய்ப்பை அளித்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, தமக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்ட போதிலும், யெகோவா தம்முடைய குமாரனையே மனிதருக்காக அளித்திருக்கிறார். தமக்கு கீழ்ப்படிந்து தமது குமாரனுடைய பலியில் விசுவாசம் வைக்கிற மனிதர்கள் பாவத்திலிருந்தும் அதன் விளைவுகளிலிருந்தும் விடுதலை பெற்று பரதீஸிய பூமியில் வாழ அன்புடன் ஏற்பாடுகள் செய்திருக்கிறார். ஏன், மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பவும் ஏற்பாடு செய்திருக்கிறார்.

இந்த விவாதத்தைத் தீர்க்க கடவுள் காலத்தை அனுமதித்திருப்பதால், யெகோவாவின் ஊழியர்கள் அவரது அன்பிற்கு பிரதிபலிக்க முடியும் என்பதையும், எல்லா சூழ்நிலைகளிலும் அவருக்கு உத்தமத்தோடிருக்க முடியும் என்பதையும் நிரூபிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த முழு பிரபஞ்சத்திலும் சட்டத்திற்கு தகுந்த மரியாதை இருக்க வேண்டுமானால், கடவுளுடைய பேரரசுரிமை பற்றிய இந்த விவாதத்தையும், மனிதருடைய உத்தமத்தைப் பற்றிய விவாதத்தையும் தீர்ப்பது இன்றியமையாதது. அப்படி தகுந்த மரியாதை இல்லையென்றால், உண்மையான சமாதானம் ஒருபோதும் கிடைக்காது. a

[அடிக்குறிப்பு]

a இந்த விவாதங்களும் அவற்றின் அர்த்தங்களும் யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகத்தில் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளன; இது யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.

[படம்]

இவ்வுலக அரசியல் அமைப்பு முடிவுக்கு வரும்