Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அவருடைய நியாயத்தீர்ப்புகளுக்காக யாவைத் துதியுங்கள்!

அவருடைய நியாயத்தீர்ப்புகளுக்காக யாவைத் துதியுங்கள்!

அதிகாரம் 38

அவருடைய நியாயத்தீர்ப்புகளுக்காக யாவைத் துதியுங்கள்!

1. “பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவார”மாக யோவான் என்ன வார்த்தைகளைக் கேட்கிறார்?

 மகா பாபிலோன் இனிமேலும் இல்லை! இது உண்மையாகவே மகிழ்ச்சிதரும் செய்தி. பரலோகத்தில் சந்தோஷமான துதியின் ஆர்ப்பரிப்பு சொற்களை யோவான் கேட்பது ஆச்சரியமில்லை! “இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள். தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள். மறுபடியும் அவர்கள்: அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள்.”—வெளிப்படுத்துதல் 19:1-3.

2. (அ)  “அல்லேலூயா” என்ற சொல்லின் பொருள் என்ன, இந்தக் கட்டத்தில் யோவான் இருமுறை அதைக் கேட்பது எதை மெய்ப்பித்துக் காட்டுகிறது? (ஆ) மகா பாபிலோனை அழித்ததற்கு யார் மகிமையைப் பெறுகிறார்? விளக்கவும்.

2 மெய்யாகவே அல்லேலூயா! இந்தச் சொல்லின் பொருள் “ஜனங்களே நீங்கள், யாவைத் துதியுங்கள்,” என்பதாகும்; “யா” என்பது கடவுளுடைய பெயர் யெகோவா என்பதன் சுருக்க முறை. இங்கே சங்கீதக்காரனின் அறிவுரை நமக்கு நினைப்பூட்டப்படுகிறது: “சுவாசமுள்ள யாவும் யெகோவாவைத் துதிப்பதாக; அல்லேலுயா!” (சங்கீதம் 150:6, தி.மொ.) வெளிப்படுத்துதலின் இந்தக் கட்டத்தில் யோவான் இந்த மகிழ்ந்தார்ப்பரிக்கும் பரலோகப் பாடகர்குழு “அல்லேலூயா!” என்று இருமுறை பாடுவதைக் கேட்பது, சத்தியத்தின் தெய்வீக வெளிப்படுத்துதல் தொடர்ந்துகொண்டிருப்பதை மெய்ப்பித்துக் காட்டுகிறது. கிறிஸ்தவ கிரேக்க வேத வார்த்தைகளின் கடவுள் முந்தின எபிரெய வேத வார்த்தைகளின் அதே கடவுளே, யெகோவா என்பது அவர் பெயர். பூர்வ பாபிலோனை வீழ்ச்சியடையச் செய்த இந்தக் கடவுளே இப்பொழுது மகா பாபிலோனை நியாயந்தீர்த்து அழித்தார். இந்தக் குறிப்பிடத்தக்கச் செயலுக்காக அவருக்கு எல்லா மகிமையும் செலுத்துங்கள்! திட்டமிட்டு அதன் வீழ்ச்சியை நிறைவேற்றின அந்த வல்லமை, அவளைப் பாழாக்க அவர் கருவிகளாகப் பயன்படுத்தின தேசங்களுக்கு அல்லாமல் அவருக்கே உரியது. யெகோவா ஒருவரே இரட்சிப்புக்குக் காரணரென நாம் குறிப்பிட வேண்டும்.—ஏசாயா 12:2; வெளிப்படுத்துதல் 4:11; 7:10, 12.

3. இந்த மகா வேசி ஏன் தன் ஆக்கினைத்தீர்ப்புக்கு அவ்வளவு தகுதியுள்ளவளாக இருந்திருக்கிறாள்?

3 இந்த மகா வேசி ஏன் இந்த ஆக்கினைத்தீர்ப்புக்கு அவ்வளவு தகுதியுள்ளவளாக இருந்திருக்கிறாள்? யெகோவா நோவாவுக்கு—அவர்மூலமாய் மனிதவர்க்கம் முழுவதற்கும்—கொடுத்த சட்டத்தின் பிரகாரம் வேண்டுமென்றே இரத்தஞ்சிந்துதல் மரணத்தீர்ப்பைத் தேவைப்படுத்துகிறது. இது இஸ்ரவேலுக்குக் கொடுத்தக் கடவுளின் நியாயப்பிரமாணத்தில் மறுபடியும் கூறப்பட்டது. (ஆதியாகமம் 9:6; எண்ணாகமம் 35:20, 21) மேலும், மோசேயின் அந்த நியாயப்பிரமாணத்தின்கீழ் சரீரப்பிரகாரமான, ஆவிக்குரியபிரகாரமான இரண்டுவகை விபசாரமும் மரணதண்டனைக்குத் தகுதியாயிருந்தன. (லேவியராகமம் 20:10; உபாகமம் 13:1-5) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, மகா பாபிலோன் இரத்தப்பழியுடையதாக இருந்துவந்திருக்கிறது, மேலும் அது படுமோசமான வேசியாக இருந்திருக்கிறது. உதாரணமாக, தன் குருமார் மணம் செய்யக்கூடாதென தடையாணையிட்டிருக்கும் ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் போக்கு, அவர்கள் பலர் படுமோசமான ஒழுக்கக்கேட்டு நடத்தையில் ஈடுபடுவதில் விளைவடைந்துள்ளது, இவர்களில் பலர் இன்று எய்ட்ஸ் நோய் பற்றிக்கொண்டும் இருக்கின்றனர். (1 கொரிந்தியர் 6:9, 10; 1 தீமோத்தேயு 4:1-3) ஆனால் ‘வானமட்டும் குவிந்து நின்றுகொண்டிருக்கும்’ அதன் பெரும்படியான பாவங்கள் ஆவிக்குரிய வேசித்தனத்தின் அதன் திடுக்கிடச்செய்யும் செயல்களாகும்—இந்த ஆவிக்குரிய வேசித்தனம், பொய்களைக் கற்பிப்பதிலும் ஊழல்நிறைந்த அரசியல்வாதிகளுடன் நட்பு நாடுவதிலும் செய்யப்பட்டது. (வெளிப்படுத்துதல் 18:5) அதன் தண்டனை கடைசியாக அதன்மீது திடீரென வந்துவிட்டதால், இந்தப் பரலோகக் கூட்டம் இப்பொழுது இரண்டாவது முறையாக அல்லேலூயாவை எதிரொலிக்கிறது.

4. மகா பாபிலோனிலிருந்து புகை ‘என்றென்றைக்கும் எழும்பிக்கொண்டிருக்கிற’ இந்த உண்மை எதை அடையாளமாகக் குறிப்பிடுகிறது?

4 மகா பாபிலோன் வென்று கைப்பற்றப்பட்ட ஒரு நகரத்தைப்போல் எரிக்கப்படுகிறது, அதிலிருந்து எழும்பும் புகை ‘என்றென்றைக்கும் எழும்பிக்கொண்டிருக்கிறது.’ இயல்பான ஒரு நகரம் அதைக் கைப்பற்றின சேனைகளால் எரிக்கப்படுகையில், அந்தச் சாம்பல்கள் வெப்பமாக இருக்கும் வரையில் அந்தப் புகை தொடர்ந்து எழும்பிக்கொண்டேயிருக்கும். அது இன்னும் புகைந்து கொண்டிருக்கையில் அதைத் திரும்பப் புதுப்பித்துக் கட்டுவதற்கு முயற்சி செய்கிற எவனும் உள்ளூர கனிந்து எரிந்துகொண்டிருக்கும் பாழ்க்கடிப்புகளால் முற்றிலும் எரிக்கப்பட்டுப் போவான். மகா பாபிலோனிலிருந்து எழும்பும் புகை, அதன் ஆக்கினைத்தீர்ப்பின் கடைமுடிவின் அடையாளமாக “என்றென்றைக்கும்” எழும்புமாதலால், நேர்மையற்ற அந்த நகரத்தை ஒருவரும் ஒருபோதும் திரும்பப் புதுப்பிக்க முடியாது. பொய் மதம் என்றென்றுமாக ஒழிந்துபோய்விட்டது. நிச்சயமாகவே, அல்லேலூயா!—ஏசாயா 34:5, 9, 10-ஐ ஒத்துப்பாருங்கள்.

5. (அ)  அந்த 24 மூப்பர்களும் அந்த நான்கு ஜீவன்களும் என்ன செய்கின்றனர் மற்றும் சொல்கின்றனர்? (ஆ) ஏன் இந்த அல்லேலூயா பல்லவி கிறிஸ்தவமண்டலத்தின் சர்ச்சுகளில் பாடின அல்லேலூயா பல்லவிகளைப் பார்க்கிலும் மிக அதிக இன்னிசையோடு ஒலிக்கின்றன?

5 முந்தின ஒரு தரிசனத்தில், சிங்காசனத்தைச் சுற்றி நான்கு ஜீவன்கள், ராஜ்ய சுதந்தரவாளிகள் தங்கள் மகிமையான பரலோகப் பதவியில் இருப்பதைப் படமாகக் குறித்துக் காட்டும் 24 மூப்பர்களுடன்கூட இருப்பதை யோவான் கண்டார். (வெளிப்படுத்துதல் 4:8-11) இப்பொழுது அவர்கள் மகா பாபிலோனின் அழிவின்பேரில் மூன்றாவது அல்லேலூயாவை முழங்குகையில் அவர்களை மறுபடியும் காண்கிறார்: “இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.” (வெளிப்படுத்துதல் 19:4) அப்படியானால், இந்த மகத்தான அல்லேலூயா பல்லவி, ஆட்டுக்குட்டியானவருக்குத் துதிபாடும் அந்தப் “புதிய பாட்டு”க்கு இன்னொரு சேர்க்கையாக இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 5:8, 9) அந்தப் பெரிய வேசியாகிய, மகா பாபிலோனின் பேரில் தீர்வான அவருடைய வெற்றியின் காரணமாக ஈடற்றப் பேரரசரான கர்த்தர் யெகோவாவுக்கு எல்லா மகிமையும் செலுத்தி அவர்கள் இப்பொழுது சிறப்பான வெற்றிப் பல்லவியைப் பாடுகிறார்கள். யெகோவா, அல்லது யா, அவமதிக்கப்பட்டும் இகழ்ச்சி செய்யப்பட்டுமிருக்கிற, கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளில் பாடப்பட்ட எந்த அல்லேலூயா பல்லவிகளைப் பார்க்கிலும் மிக அதிக இன்னிசையோடு இந்த அல்லேலூயாக்கள் முழங்குகின்றன. யெகோவாவின் பெயரை நிந்திக்கும் பாசாங்குத்தனமான அத்தகைய சர்ச் பாடல்கள் இப்பொழுது என்றென்றுமாக மெளனமாக்கப்பட்டன!

6. யாருடைய “சத்தம்” கேட்கப்படுகிறது, அது என்ன செய்யும்படி கட்டளையிடுகிறது, இதற்குக் கீழ்ப்படிதலான பாடலில் யார் பங்குகொள்கின்றனர்?

6 1918-ல் யெகோவா, ‘தமது நாமத்தின்பேரில் பயபக்தியாயிருக்கும் சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கத்’ தொடங்கினார்—இவர்களில் முதல்வர் உண்மையுள்ளவர்களாய் மரித்திருந்த அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாகும், இவர்களை அவர் உயிர்த்தெழுப்பி அந்த 24 மூப்பர்களுக்குரிய பரலோக பதவிநிலைகளில் அமர்த்தினார். (வெளிப்படுத்துதல் 11:18) அல்லேலூயாக்களைப் பாடுவதில் மற்றவர்கள் இவர்களோடு சேர்ந்துகொள்கின்றனர், எவ்வாறெனில் யோவான் பின்வருமாறு அறிவிக்கிறார்: “மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் [நம்முடைய கடவுளைத் துதித்துக்கொண்டிருங்கள், NW] என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது.” (வெளிப்படுத்துதல் 19:5) இது யெகோவாவின் பிரதிநிதி பேச்சாளராகிய, அவருடைய சொந்த குமாரன் இயேசு கிறிஸ்துவின் “சத்தம்” ஆகும், இவர் “சிங்காசனத்திற்கு மத்தியில்” நிற்கிறார். (வெளிப்படுத்துதல் 5:6) பரலோகத்தில் மட்டுமல்ல இங்கே பூமியிலுங்கூட, ‘தேவனுடைய ஊழியக்காரர் யாவரும்,’ பாடுவதில் பங்குகொள்கின்றனர், அபிஷேகஞ்செய்யப்பட்ட யோவான் வகுப்பார் பூமியில் தலைமைவகித்து நடத்துகின்றனர். “நம்முடைய கடவுளைத் துதித்துக்கொண்டிருங்கள்” என்ற கட்டளைக்குக் கீழ்ப்படிவதில் எவ்வளவு மகிழ்ச்சியுடன் இவர்கள் பங்குகொள்கின்றனர்!

7. மகா பாபிலோன் அழிக்கப்பட்ட பின்பு, யெகோவாவை யார் துதித்துக்கொண்டிருப்பர்?

7 ஆம், திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களுங்கூட இந்த ஊழியக்காரர்களைச் சேர்ந்தவர்களாக எண்ணப்படுகின்றனர். 1935 முதற்கொண்டு இவர்கள் மகா பாபிலோனைவிட்டு வெளிவந்து கடவுளுடைய பின்வரும் வாக்கின் நிறைவேற்றத்தை அனுபவித்திருக்கின்றனர்: “யெகோவாவுக்குப் பயப்படுகிறவர்களை, பெரியோரையும் சிறியோரையும், ஆசீர்வதிப்பார்.” (சங்கீதம் 115:13, தி.மொ.) வேசியைப்போன்ற பாபிலோன் அழிக்கப்படுகையில், லட்சக்கணக்கான இவர்கள் ‘நம்முடைய கடவுளைத் துதிப்பதில்’—யோவான் வகுப்பாரோடும் பரலோக சேனைகள் யாவரோடும்—சேர்ந்துகொள்வர். பின்னர் பூமியில் உயிர்த்தெழுப்பப்படுவோர், முன்னால் மேம்பட்டோராக இருந்தவராயினும் இல்லாவிடினும், மகா பாபிலோன் என்றென்றுமாக ஒழிந்துபோய்விட்டதென அறிந்து கொள்ளுகையில் சந்தேகமில்லாமல் மேலுமான அல்லேலூயாக்கள் பாடுவர். (வெளிப்படுத்துதல் 20:12, 15) அந்த நெடுங்கால வேசியை வென்ற இந்த எதிரொலித்து முழங்கும் அவருடைய வெற்றிக்காக யெகோவாவுக்கு எல்லா துதியும் உண்டாவதாக!

8. யோவான் கண்ட பரலோகத் துதிபாடல் பல்லவிகள், மகா பாபிலோன் அழிக்கப்படுவதற்கு முன்னான இப்பொழுது என்ன செய்யும்படி ஊக்கத்தூண்டுதலை நமக்கு அளிக்க வேண்டும்?

8 இன்று கடவுளுடைய வேலையில் முழுமையாகப் பங்குகொள்ள இவை யாவும் எத்தகைய ஊக்கத்தூண்டுதலை நமக்கு அளிக்கின்றன! யாவின் ஊழியர்கள் யாவரும், மகா பாபிலோன் அகற்றப்பட்டு அழிக்கப்படுவதற்கு முன்பாக, இப்பொழுது, மகத்தான ராஜ்ய நம்பிக்கையோடுகூட, கடவுளுடைய நியாயத்தீர்ப்புகளை அறிவிப்பதற்குத் தங்களை முழு ஊக்கத்தோடும் முழுமையாய் ஈடுபடுத்துவார்களாக.—ஏசாயா 61:1-3; 1 கொரிந்தியர் 15:58.

‘அல்லேலூயா—யெகோவா அரசராக இருக்கிறார்!’

9. இந்தக் கடைசி அல்லேலூயா ஏன் அத்தகைய நிறைவான, கம்பீரத் தொனியாக இருக்கிறது?

9 யோவான் மேலுமாகத் தொடர்ந்து நமக்குச் சொல்லுகிறபடி, களிகூருவதற்கு மேலுமான காரணங்கள் இருக்கின்றன: “அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார் [யெகோவா அரசராக ஆளத் தொடங்கிவிட்டார், NW] . . . என்று சொல்லக் கேட்டேன்.” (வெளிப்படுத்துதல் 19:6, 7) இந்தக் கடைசி அல்லேலூயா இந்த வெளிப்படையான அறிவிப்பை முடிவானசதுரமாக அல்லது சரிசீரமைவுள்ளதாக ஆக்குகிறது. இது வல்லமைமிகுந்த பரலோகத் தொனி, எந்த மனித பாடகர் குழுவினுடையதைப் பார்க்கிலும் மிகுந்த சிறப்புவாய்ந்தது, பூமிக்குரிய எந்த நீர்வீழ்ச்சியைப் பார்க்கிலும் மிகுந்த கம்பீர ஆரவாரமுள்ளது, நிலவுலகில் ஏற்படும் எந்த இடிமின்னல் புயலைப் பார்க்கிலும் மிகுந்த பயமூட்டுவதாயுள்ளது. ஆயிரம் பதினாயிரமான பரலோகக் குரல்கள் “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW] ராஜ்யபாரம்பண்ணுகிறார்” என்ற இந்த மெய்ந்நிகழ்ச்சியைக் கொண்டாடுகின்றன.

10. மகா பாபிலோனின் பாழ்க்கடிப்புக்குப் பின் யெகோவா அரசராக ஆளத் தொடங்குகிறார் என்று எந்தக் கருத்தில் சொல்லக்கூடும்?

10 எனினும், எவ்வாறு யெகோவா ஆளத் தொடங்குகிறார்? “தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா” என்று சங்கீதக்காரன் அறிவித்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்துவிட்டனவே. (சங்கீதம் 74:12) அப்போதுங்கூட யெகோவாவின் அரசபதவி பூர்வமானதாக இருந்தது, ஆகவே “யெகோவா அரசராக ஆளத் தொடங்கி விட்டார்” என இந்தச் சர்வலோகப் பல்லவி எவ்வாறு பாடக்கூடும்? மகா பாபிலோன் அழிக்கப்பட்டுப்போகையில், சர்வலோக ஈடற்றப் பேரரசராக யெகோவாவுக்குக் கீழ்ப்படிதலைக் கொடுப்பதிலிருந்து கவனத்தைத் திருப்பச் செய்ய தகாத துணிவுவாய்ந்த போட்டியிடும் எதிரி அவருக்கு இனிமேலும் இருப்பதில்லை என்ற கருத்திலாகும். அவரை எதிர்க்கும்படி பூமியின் பொய் மதம் இனிமேலும் பூமியின் அதிபதிகளைத் தூண்டிவிடாது. பூர்வ பாபிலோன் உலக ஆதிக்கத்திலிருந்து வீழ்ச்சியடைந்தபோது, சீயோன் பின்வரும் வெற்றி அறிவிப்பைக் கேட்டது: “உன் கடவுள் அரசாளுகிறார்”! (ஏசாயா 52:7, தி.மொ.) 1914-ல் ராஜ்யத்தின் பிறப்புக்குப் பின், அந்த 24 மூப்பர்கள் பின்வருமாறு அறிவித்தனர்: “கடவுளாகிய கர்த்தாவே [யெகோவாவே, NW], உமக்கு நன்றி செலுத்துகிறோம்; தேவரீர் உமது மகா வல்லமையை வகித்துக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணத் தொடங்கியிருக்கிறீர்.” (வெளிப்படுத்துதல் 11:17, தி.மொ.) மகா பாபிலோனின் பாழ்க்கடிப்புக்குப் பின்னான, இப்பொழுது, மறுபடியுமாக இந்த அறிவிப்பு கூறப்படுகிறது: “யெகோவா அரசராக ஆளத் தொடங்கிவிட்டார்” உண்மையான கடவுளாகிய யெகோவாவின் பேரரசாட்சியை எதிர்த்துப் போட்டியிட மனிதனால் உண்டாக்கப்பட்ட எந்தக் கடவுளும் மீந்தில்லை!

ஆட்டுக்குட்டியானவரின் கலியாணம் நெருங்கிவிட்டது!

11, 12. (அ)  பூர்வ எருசலேம் பூர்வ பாபிலோனை எவ்வாறு குறிப்பிட்டழைத்தது, இவ்வாறு புதிய எருசலேமையும் மகா பாபிலோனையும் குறித்ததில் என்ன மாதிரியை வைத்தது? (ஆ) மகா பாபிலோனின்மீது வெற்றிப்பெற்றதோடு, பரலோகப் பெருங்கூட்டங்கள் என்ன பாடி அறிவிக்கின்றனர்?

11 “என் பெண் சத்துருவாகிய நீ”! இவ்வாறே யெகோவாவின் வணக்கத்துக்குரிய ஆலயத்தின் இருப்பிடமான, எருசலேம், விக்கிரக வணக்கம் நிறைந்த பாபிலோனைக் குறிப்பிட்டழைத்தது. (மீகா 7:8, NW) அவ்வாறே, 1,44,000 உறுப்பினராலாகிய மணவாட்டியான, “புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம்,” மகா பாபிலோனைத் தன் சத்துருவாக அழைப்பதற்கு எல்லா காரணத்தையும் உடையதாக இருந்திருக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:2) ஆனால் கடைசியாக இந்த மகா வேசி இன்னலையும், இடுக்கணையும், பாழ்க்கடிப்பையும் அனுபவித்துவிட்டாள். அவளுடைய ஆவியுலகத் தொடர்பு பழக்கச் செயல்களும் சோதிடர்களும் அவளைக் காப்பாற்ற முடியவில்லை. (ஏசாயா 47:1, 11-13-ஐ ஒத்துப்பாருங்கள்.) உண்மையான வணக்கத்துக்கு, நிச்சயமாகவே, ஒரு பெரிய வெற்றி!

12 மகா பாபிலோனாகிய இந்த அருவருப்பான வேசி என்றென்றுமாக ஒழிந்துபோய்விட்டதால், ஆட்டுக்குட்டியானவரின், கன்னிமைகெடாத தூய மணவாட்டியின்பேரில் இப்பொழுது கவனத்தை ஒருமிக்கச் செலுத்த முடியும்! ஆகவே, இந்தப் பரலோகப் பெருங்கூட்டங்கள் யெகோவாவுக்குத் துதியாக மகிழ்ந்தாரவாரித்துப் பாடுகின்றன: “நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன். சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே [நீதியுள்ள செயல்களே, NW].”—வெளிப்படுத்துதல் 19:7, 8.

13. ஆட்டுக்குட்டியானவரின் கலியாணத்துக்காக நூற்றாண்டுகளினூடே என்ன ஆயத்தம் நடைபெற்றிருக்கிறது?

13 நூற்றாண்டுகளினூடே, இயேசு இந்தப் பரலோகக் கலியாணத்துக்காக அன்புள்ள ஆயத்தம் செய்திருக்கிறார். (மத்தேயு 28:20; 2 கொரிந்தியர் 11:2) “கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கு,” ஆவிக்குரிய இஸ்ரவேலின் 1,44,000 பேர்களை அவர் சுத்திகரித்துக்கொண்டிருந்தார். (எபேசியர் 5:25-27) “கடவுள் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளை” பெறும் நோக்கத்தோடு, அபிஷேகஞ்செய்யப்பட்ட ஒவ்வொரு கிறிஸ்தவனும் பழைய ஆளுமையை அதன் பழக்கச் செயல்களோடுகூட களைந்துபோட்டு, புதிய கிறிஸ்தவ ஆளுமையைத் தரித்துக்கொண்டு, நீதியுள்ள செயல்களை “யெகோவாவுக்கென்று முழு ஆத்துமாவோடும்” நடப்பிக்க வேண்டியதாக இருந்தது.—பிலிப்பியர் 3:8, 13, 14, தி.மொ.; கொலோசெயர் 3:9, 10, 23, NW.

14. ஆட்டுக்குட்டியானவரின் எதிர்கால மனைவியாகப் போகிறவர்களின் உறுப்பினரைக் கறைப்படுத்த சாத்தான் எவ்வாறு முயற்சி செய்திருக்கிறான்?

14 பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே முதற்கொண்டு, ஆட்டுக்குட்டியானவரின் எதிர்கால மனைவியாகப்போகிறவர்களின் உறுப்பினரைக் கறைப்படுத்துவதற்கு முயற்சி செய்வதில் சாத்தான் மகா பாபிலோனைத் தன் கருவியாகப் பயன்படுத்தி வந்திருக்கிறான். முதல் நூற்றாண்டின் முடிவுக்குள், சபையில் பாபிலோனிய மதத்தின் விதைகளை அவன் விதைத்துவிட்டிருந்தான். (1 கொரிந்தியர் 15:12; 2 தீமோத்தேயு 2:18; வெளிப்படுத்துதல் 2:6, 14, 20) விசுவாசத்தைப் புரட்டிக்கொண்டிருந்தவர்களை அப்போஸ்தலன் பவுல் பின்வரும் இந்த வார்த்தைகளில் விவரிக்கிறார்: “அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவின் அப்போஸ்தலருடைய வேஷம் போட்டுக்கொள்ளுகிறவர்கள். இது ஆச்சரியமல்ல, சாத்தான் தானும் ஒளியின் தூதன் வேஷம் போட்டுக்கொள்ளுகிறானே.” (2 கொரிந்தியர் 11:13, 14, தி.மொ.) பின்தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில், மகா பாபிலோனின் மீதிபாகத்தைப்போல், விசுவாசத்துரோகக் கிறிஸ்தவமண்டலம், ‘இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையும் பொன்னும் இரத்தினங்களும் முத்துக்களும்’ ஆன செல்வம் மற்றும் சிலாக்கியத்துக்குரிய உடையில் தன்னை உடுத்துவித்துக்கொண்டது. (வெளிப்படுத்துதல் 17:4) அதன் குருமாரும் போப்புகளும், கான்ஸ்டன்டீன், சார்லமென் போன்ற இரத்தஞ்சிந்தும் வெறிகொண்ட பேரரசர்களுடன் ஒப்பந்தம் செய்தனர். “பரிசுத்தவான்களுடைய நீதியுள்ள செயல்க”ளில் அது ஒருபோதும் தன்னை உடுத்துவிக்கவில்லை. போலி மணவாட்டியாக, அது உண்மையாகவே சாத்தானிய மோசடியின் தலைசிறந்த படைப்பாக இருந்தது. கடைசியாக, அது என்றென்றுமாக ஒழிந்துபோய்விட்டது!

ஆட்டுக்குட்டியானவரின் மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்

15. இந்த முத்திரைப்போடுதல் எவ்வாறு நடைபெறுகிறது, அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவரின் பங்கில் என்ன தேவைப்படுகிறது?

15 ஆகவே இப்பொழுது, ஏறக்குறைய 2,000 ஆண்டுகளுக்குப் பின், இந்த மணவாட்டி வகுப்பாரின் 1,44,000 பேர் யாவரும் தங்களை ஆயத்தம் செய்திருக்கிறார்கள். ஆனால் எந்தக் குறிப்பான சமயத்தில் ‘ஆட்டுக்குட்டியானவரின் மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்’ என்று சொல்லக்கூடும்? பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தேவிலிருந்து, அபிஷேகஞ்செய்யப்பட்ட விசுவாசிகள் படிப்படியாய்த் தொடர்ந்து, “வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்த ஆவியால் . . . முத்திரைபோடப்பட்”டார்கள், இது வரவிருந்த ‘மீட்கும் கிரயத்தால் விடுதலைசெய்யப்படும் நாளை’ கருத்தில் கொண்டு செய்யப்பட்டது. அப்போஸ்தலன் பவுல் இதை வெளிப்படுத்திக் கூறினபடி, கடவுள் “நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்.” (எபேசியர் 1:13; 4:30; 2 கொரிந்தியர் 1:22) அபிஷேகஞ்செய்யப்பட்ட ஒவ்வொரு கிறிஸ்தவனும் ‘அழைக்கப்பட்டும் தெரிந்துகொள்ளப்பட்டும்’ இருக்கிறான், மேலும் தன்னை ‘உண்மையுள்ளவனாகவும்’ நிரூபித்திருக்கிறான்.—வெளிப்படுத்துதல் 17:14.

16. (அ)  அப்போஸ்தலன் பவுல் முத்திரையிடப்பட்டது எப்பொழுது பூர்த்தியாயிற்று, நமக்கு எவ்வாறு தெரியும்? (ஆ) ஆட்டுக்குட்டியானவரின் மனைவி எப்பொழுது முழுமையாகத் “தன்னை ஆயத்தம்பண்ணி”விட்டிருப்பாள்?

16 பல பத்தாண்டுகளாகப் பரீட்சிக்கப்பட்ட பின்பு, பவுல் தானே பின்வருமாறு அறிவிக்க முடிந்தது: “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். இனி நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது; நீதியுள்ள நியாயாதிபதியாகிய ஆண்டவர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை அன்போடு ஆசித்து வரும் யாவருக்குந் தந்தருளுவார்.” (2 தீமோத்தேயு 4:7, 8, தி.மொ.) இந்த அப்போஸ்தலன் அப்பொழுது மாம்சத்தில் இன்னும் இருந்துகொண்டும் இரத்தச் சாட்சி மரணத்தை இனியும் எதிர்ப்படுவோராக இருந்தபோதிலும் அவர் முத்திரையிடப்பட்டது பூர்த்திநிலையை எட்டிவிட்டதாகத் தோன்றுகிறது. இவ்வாறே, 1,44,000 பேரில் பூமியின்மீது மீந்திருக்கும் யாவரும் யெகோவாவுக்கு உரியோராகத் தனித்தனியே முத்திரைபோடப்பட்டுத் தீரும் அந்தச் சமயம் வரவேண்டும். (2 தீமோத்தேயு 2:19) இது ஆட்டுக்குட்டியானவரின் மனைவி தன்னை முழுமையாய் ஆயத்தஞ் செய்துவிட்டபோது வரும்—இந்த 1,44,000 பேரில் மிகப் பெரும்பான்மையர் ஏற்கெனவே தங்கள் பரலோகப் பரிசைப் பெற்றிருக்கின்றனர், பூமியில் இன்னும் இருப்பவர்கள் முடிவாக அங்கீகரிக்கப்பட்டு, உண்மையுள்ளோராக முத்திரையிடப்பட்டிருப்பர்.

17. ஆட்டுக்குட்டியானவரின் கலியாணம் எப்பொழுது நடைபெறக்கூடும்?

17 யெகோவாவின் கால அட்டவணையின் இந்தக் கட்டத்தில், 1,44,000 பேர் முத்திரையிடப்படுவது பூர்த்தியை எட்டிவிட்டபோது, தூதர்கள் மிகுந்த உபத்திரவத்தின் அந்த நான்கு காற்றுகளை விடுவிக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 7:1-3) முதலாவதாக, வேசியைப்போன்ற மகா பாபிலோனின்மீது ஆக்கினைத் தீர்ப்பு நிறைவேற்றப்படுகிறது. வெற்றிப்பெற்ற கிறிஸ்து அடுத்தபடியாக, பூமியின்மீதுள்ள சாத்தானுடைய அமைப்பின் மீதியானவற்றை அழிப்பதற்கு விரைவில் அர்மகெதோனைத் தொடங்குகிறார், முடிவாக, சாத்தானையும் அவனுடைய பேய்களையும் அபிஸ்ஸுக்குள்ளாகத் தள்ளுகிறார். (வெளிப்படுத்துதல் 19:11–20:3) அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களில் யாராவது அப்போது பூமியில் இன்னும் உயிரோடிருந்தால், அவர்கள், கிறிஸ்து முற்றிலும் ஜெயித்த பிறகு சீக்கிரத்தில் தங்களுடைய பரலோகப் பரிசைப் பெறும்படி அங்கு பிரவேசித்து, மணவாட்டி வகுப்பாரில் தங்கள் சக உறுப்பினர்களைச் சேர்ந்துகொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. பின்பு, கடவுளின் உரிய சமயத்தில், ஆட்டுக்குட்டியானவரின் கலியாணம் நடந்தேறலாம்!

18. ஆட்டுக்குட்டியானவரின் கலியாணம் சம்பந்தமாக தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சிகளின் வரிசைமுறையை சங்கீதம் 45 எவ்வாறு உறுதிசெய்கிறது?

18 சங்கீதம் 45-ல் குறிப்பிட்டுள்ள தீர்க்கதரிசன பதிவு, நிகழ்ச்சிகளின் வரிசைமுறையை விவரிக்கிறது. முதலாவது, சிங்காசனத்திலேற்றப்பட்ட அரசர் தம் சத்துருக்களை வென்று கைப்பற்ற சவாரிசெய்கிறார். (வசனங்கள் 1-7) பின்பு கலியாணம் நடத்தப்படுகிறது, அந்தப் பரலோக மணவாட்டியோடு, பூமியில் திரள் கூட்டத்தாராகிய அவளுடைய கன்னித் தோழிகள் பின்செல்கின்றனர். (வசனங்கள் 8-15) அடுத்தபடியாக, உயிர்த்தெழுப்பப்பட்ட மனிதவர்க்கம் ‘பூமியெங்குமுள்ள பிரபுக்களின்’ கண்காணிப்பின்கீழ் பரிபூரணநிலைக்கு எழுப்பப்படுவதோடு, இந்தக் கலியாணம் பலன்தருவதாகிறது. (வசனங்கள் 16, 17) ஆட்டுக்குட்டியானவரின் இந்தக் கலியாணத்தோடு எத்தகைய மகிமையான ஆசீர்வாதங்கள் சேர்ந்துவருகின்றன!

அழைக்கப்பட்டவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்

19. வெளிப்படுத்துதலில் குறிப்பிட்டுள்ள அந்த ஏழு சந்தோஷங்களில் நான்காவதானது என்ன, இந்தத் தனிப்பட்ட சந்தோஷத்தில் யார் பங்குகொள்கின்றனர்?

19 வெளிப்படுத்துதலில் குறிப்பிட்டுள்ள ஏழு சந்தோஷங்களில் நான்காவதை யோவான் இப்பொழுது பதிவுசெய்கிறார். “பின்னும் அவன் [இந்தக் காரியங்களை யோவானுக்கு வெளிப்படுத்திக்கொண்டிருந்த அந்தத் தூதன்] என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண [மாலை, NW] விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் [சந்தோஷமுள்ளவர்கள், NW] என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.” (வெளிப்படுத்துதல் 19:9) a “ஆட்டுக்குட்டியானவரின் கலியாண மாலை-விருந்துக்கு” அழைக்கப்பட்டவர்கள் மணவாட்டி வகுப்பாரின் உறுப்பினரே. (மத்தேயு 22:1-14-ஐ ஒத்துப்பாருங்கள்.) அபிஷேகஞ்செய்யப்பட்ட மணவாட்டி கூட்டமான யாவரும் இந்த அழைப்பைப் பெற்றதன் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்கின்றனர். அழைக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையர், இந்தக் கலியாண மாலை விருந்துக்குரிய இடமாகிய பரலோகத்துக்கு ஏற்கெனவே சென்றுவிட்டனர். பூமியில் இன்னும் இருப்பவர்களும், தங்களுக்கு அழைப்பு இருக்கிறதென சந்தோஷமாயிருக்கின்றனர். கலியாண மாலை-விருந்தில் அவர்களுக்குரிய இடம் உறுதியாயுள்ளது. (யோவான் 14:1-3; 1 பேதுரு 1:3-9) அவர்கள் பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்படுகையில், அப்பொழுது அந்த முழு, ஒன்றுபட்ட மணவாட்டி அந்த ஒப்பற்ற மேன்மையான முறையில் சந்தோஷமான கலியாணத்தில் ஆட்டுக்குட்டியானவருடன் பங்குகொள்ளத் தொடருவர்.

20. (அ)  “இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள்” என்ற இவ்வார்த்தைகளின் உட்பொருள் என்ன? (ஆ) தூதனின் வார்த்தைகள் யோவானை எவ்வாறு பாதித்தன, தூதனின் பதில்குறிப்பு என்ன?

20 “இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள்” என்று அந்தத் தூதன் மேலும் கூறுகிறார். “சத்தியமான” என்ற இந்தச் சொல் எலிதினாஸ் [a·le·thi·nosʹ] என்ற கிரேக்கச் சொல்லின் மொழிபெயர்ப்பாகும், “மெய்யான” அல்லது “நம்பத்தக்க” என பொருள்படுகிறது. இந்த வசனிப்புகள் மெய்யாக யெகோவாவிடமிருந்தே வருவதால், அவை உண்மையும் நம்பத்தக்கவையுமாக இருக்கின்றன. (ஒத்துப்பாருங்கள்: 1 யோவான் 4:1-3; வெளிப்படுத்துதல் 21:5; 22:6.) அந்தக் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்ட ஒருவராக, யோவான் இதைக் கேட்கையிலும், மணவாட்டி வகுப்பாருக்கு எதிர்காலத்தில் வைக்கப்பட்டுள்ள ஆசீர்வாதங்களின்பேரில் சிந்திக்கையிலும் நிச்சயமாகவே மகிழ்ச்சிநிறைந்தவராக இருந்திருக்க வேண்டும். உண்மையில், தான் அவ்வளவு ஆழமாய் உணர்ச்சிக் கனிவிக்கப்பட்டிருந்ததால், யோவான் பின்வருமாறு கூறுகிறபிரகாரம், அந்தத் தூதன் அவருக்கு அறிவுரை கொடுக்க வேண்டியதாயிற்று: “அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக் குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன் [உடன் அடிமை, NW]; தேவனைத் தொழுதுகொள். . . . என்றான்.”—வெளிப்படுத்துதல் 19:10அ.

21. (அ) தூதர்களைப்பற்றி வெளிப்படுத்துதல் என்ன தெரிவிக்கிறது? (ஆ) தூதர்களிடம் கிறிஸ்தவர்கள் என்ன மனப்பான்மையை உடையோராக இருக்க வேண்டும்?

21 தூதர்களின் உண்மையானத் தன்மையையும் சுறுசுறுப்பான உழைப்பையும் குறித்து வெளிப்படுத்துதல் முழுவதிலும் கவனிக்கத்தக்கச் சாட்சி கொடுக்கப்பட்டுள்ளது. வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தை அறிவிக்கும் வழிமூலத்தில் அவர்கள் உட்பட்டிருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 1:1) நற்செய்தியைப் பிரசங்கிப்பதிலும் அடையாளக் குறிப்பான வாதைகளை ஊற்றுவதிலும் மனிதரோடுகூட அவர்கள் உழைக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 14:6, 7; 16:1) சாத்தானையும் அவனுடைய தூதர்களையும் பரலோகத்திலிருந்து வெளித்தள்ளுவதில் அவர்கள் இயேசுவுடன்கூட போரிட்டனர், மறுபடியும் அர்மகெதோனில் அவரோடுகூட போரிடுவர். (வெளிப்படுத்துதல் 12:7; 19:11-14) நிச்சயமாகவே, நேரில் யெகோவாவின் சமுகத்துக்குத்தானே செல்லும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்கிறது. (மத்தேயு 18:10; வெளிப்படுத்துதல் 15:6) இருப்பினும், அவர்கள், கடவுளுடைய மனத்தாழ்மையுள்ள அடிமைகளைப் பார்க்கிலும் மேலானவர்களல்லர். தூதர்களை வணங்குவதற்கு அல்லது ஏதோ “பரிசுத்தவான்” அல்லது தூதன் மூலமாய்க் கடவுளுக்கு வணக்கத்தைச் செலுத்தும் சம்பந்தப்பட்ட வணக்கத்துக்குங்கூட தூய்மையான வணக்கத்தில் இடங்கிடையாது. (கொலோசெயர் 2:19) கிறிஸ்தவர்கள் யெகோவாவை மாத்திரமே வணங்குகின்றனர், இயேசுவின் பெயரில் அவரிடம் தங்கள் விண்ணப்பங்களைச் செய்கின்றனர்.—யோவான் 14:12, 13.

தீர்க்கதரிசனத்தில் இயேசு வகிக்கும் பாகம்

22. அந்தத் தூதன் யோவானிடம் என்ன சொல்லுகிறார், இந்த வார்த்தைகளின் உட்பொருள் என்ன?

22 பின்பு அந்தத் தூதன் சொல்வதாவது: “ஏனெனில் இயேசுவுக்குச் சாட்சி பகருவதே தீர்க்கதரிசனம் சொல்வதை ஏவுகிறது.” (வெளிப்படுத்துதல் 19:10ஆ, NW) இது எவ்வாறு? ஏவப்பட்ட எல்லா தீர்க்கதரிசனமும் இயேசுவினிமித்தமும் யெகோவாவின் நோக்கங்களில் அவர் வகித்துச் செயல்படும் பாகத்தினிமித்தமுமே வெளிப்பட செய்யப்பட்டதென இது பொருள்படுகிறது. பைபிளிலுள்ள அந்த முதல் தீர்க்கதரிசனம் ஒரு வித்து வருவதை வாக்குக் கொடுத்தது. (ஆதியாகமம் 3:15) இயேசு அந்த வித்தானார். பின்தொடர்ந்த வெளிப்படுத்துதல்கள் இந்த அடிப்படை வாக்கின்பேரில் தீர்க்கதரிசன சத்தியத்தின் ஒரு பெருஞ்செயற் கட்டமைப்பைக் கட்டியமைத்துள்ளன. விசுவாசித்த புறஜாதியானான கொர்நேலியுவினிடம் அப்போஸ்தலன் பேதுரு பின்வருமாறு கூறினார்: “தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே [இயேசுவைக்குறித்தே, NW] சாட்சிகொடுக்கிறார்கள்.” (அப்போஸ்தலர் 10:43) ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பின்னால், அப்போஸ்தலன் பவுல் சொன்னதாவது: “கடவுளின் வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவில் ஆம் என்றும் . . . இருக்கின்றனவே.” (2 கொரிந்தியர் 1:20, தி.மொ.) இன்னும் 43 ஆண்டுகளுக்குப் பின், யோவான்தானே நமக்குப் பின்வருமாறு நினைப்பூட்டுகிறார்: ‘சத்தியம் இயேசு கிறிஸ்து மூலமாய் உண்டானது.’—யோவான் 1:17.

23. ஏன் இயேசுவின் உயர் பதவியும் அதிகாரமும் நாம் யெகோவாவுக்குக் கொடுக்கும் வணக்கத்திலிருந்து குறைவுபட செய்கிறதில்லை?

23 இது யெகோவாவுக்கு நாம் கொடுக்கும் வணக்கத்திலிருந்து எந்த வகையிலாவது குறைவுபடச் செய்கிறதா? இல்லை. “தேவனைத் தொழுதுகொள்ள” என்ற அந்தத் தூதனின் எச்சரிக்கையான அறிவுரையை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இயேசு யெகோவாவை எதிர்த்துப் போட்டியிட ஒருபோதும் முயலவில்லை. (பிலிப்பியர் 2:6) ‘[இயேசுவுக்குத்] தலைவணங்கும்படி’ தூதர்கள் எல்லாரும் சொல்லப்பட்டதும், “இயேசுவின் நாமத்தில் முழங்கால் யாவும் முடங்கும்படிக்கு” எல்லா சிருஷ்டிப்பும் அவருடைய உயர் நிலையை மதித்துணர வேண்டுமென்பதும் மெய்யே. ஆனால் இது “பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக”வும் அவருடைய கட்டளையாலும் செய்யப்படுகிறதென்பதைக் கவனியுங்கள். (எபிரெயர் 1:6, தி.மொ.; பிலிப்பியர் 2:9-11) யெகோவாவே இயேசுவுக்கு அவருடைய உயர் அதிகாரத்தைக் கொடுத்தார், அந்த அதிகாரத்தை ஒப்புக்கொள்வதால், நாம் கடவுளுக்கு மகிமை செலுத்துகிறோம். இயேசுவின் ஆட்சிக்கு நம்மைக் கீழ்ப்படுத்த நாம் மறுத்துவிட்டால், அது யெகோவா தேவனைத்தாமே வேண்டாமென மறுத்துவிடுவதற்குச் சமமாயுள்ளது.—சங்கீதம் 2:11, 12.

24. அதிர்ச்சியூட்டும் எந்த இரண்டு சம்பவங்களை நாம் சிந்தனையில் வைக்கிறோம், ஆகையால் என்ன வார்த்தைகளை நாம் கூறி ஆர்ப்பரிக்க வேண்டும்?

24 ஆகையால், சங்கீதங்கள் 146-லிருந்து 150 (NW) வரையாகவுள்ள பின்வரும் தொடக்க வார்த்தைகளை நாம் ஒருமிக்கக் குரலெழுப்பி ஆர்ப்பரிப்போமாக: “ஜனங்களே, நீங்கள் யாவைத் துதியுங்கள்!” பாபிலோனிய பொய் மத உலகப் பேரரசின்மீது யெகோவாவின் வெற்றியை எதிர்பார்த்து இந்த அல்லேலூயா பல்லவி ஆரவாரத்தோடு முழங்குவதாக! ஆட்டுக்குட்டியானவரின் கலியாணம் நெருங்கிவருகையில், மகிழ்ச்சி மிகுதியாய்ப் பெருகுவதாக!

[அடிக்குறிப்பு]

a வெளிப்படுத்துதல் 1:3; 14:13; 16:15 ஆகியவற்றையும் பாருங்கள்.

[கேள்விகள்]

[பக்கம் 273-ன் பெட்டி]

“சோதோம் கொமாராவுக்கு நிருபம்”

இந்த கவர்ச்சியான தலைப்பின்கீழ், நவம்பர் 12, 1987-க்குரிய லண்டனின் டெய்லி டெலிக்ராஃப், இங்கிலாந்து சர்ச்சுக்குரிய பொது குருமார் பேரவைக்கு முன்னால் செய்யப்பட்ட தீர்மானக் கோரிக்கையின்பேரில் அறிவிப்பு செய்தது. இது ஒத்தப் பாலின புணர்ச்சிக்கார “கிறிஸ்தவர்களைச்” சர்ச்சிலிருந்து வெளியேற்றுவதைத் தேவைப்படுத்தியது. பத்திரிகை பத்தி எழுத்தாளர், காட்ஃப்ரி பார்க்கர் பின்வருமாறு கூறினார்: “கான்டர்பரியின் பேராயர் மனச்சோர்வுடன் நேற்று பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்: ‘புனித பவுல் இங்கிலாந்து சர்ச்சுக்கு ஒரு நிருபத்தை எழுதவேண்டியிருந்தால், அது என்ன வகையான கடிதமாயிருக்குமென நாம் நன்றாய்க் கேட்கலாம்.’” திரு. பேக்கர்தாமே குறிப்பிட்டதாவது: “சோதோம் கொமோராவுக்கு ஒரு நிருபம் என்பதே பதில்,” அவர் மேலும் தொடர்ந்து: “டாக்டர் ருன்சீ [அந்தப் பேராயர்] அது ரோமர், அதி 1-ஐப்போல் வாசிப்பதாயிருக்குமென கற்பனைசெய்தார்” எனக் கூறினார்.

இந்த எழுத்தாளர் ரோமர் 1:26-32-லுள்ள (தி.மொ.) பவுலின் வார்த்தைகளைக் குறிப்பிட்டார்: “கடவுள் அவர்களை வெட்கக்கேடான இச்சைகளுக்கு ஒப்புக்கொடுத்துவிட்டார். . . . ஆண்கள் ஆண்களுடன் இழிவான செயல்களைச் செய்து . . . இப்படியெல்லாம் நடப்பவர்கள் சாவுக்குரியவர்கள் என்னும் கடவுளுடைய நியமத்தை அறிந்திருந்தும் இவ்வாறு நடக்கின்றனர்; தாங்கள் நடப்பதுமட்டுமன்று, அப்படி நடப்பவர்களுக்குப் பாராட்டும் அளிக்கின்றனர்.” அவர் முடிவாகச் சொன்னதாவது: “புனித பவுல் வெறுமனே கோயில் திண்ணையிலிருக்கும் ஆட்களைப்பற்றிக் கவலைப்பட்டார். டாக்டர் ருன்சீயின் பிரச்சினை கோயில் பிரசங்கமேடைகளிலுள்ள ஆட்களே.”

இந்தப் பேராயர் ஏன் இத்தகைய பிரச்சினையுடையவராக இருக்கிறார்? அக்டோபர் 22, 1987-ன் லண்டன் டெய்லி மேய்ல் செய்தித்தாளிலிருந்த பெரும் தலைப்புவரிகள் பின்வருமாறு அறிவித்தது: “‘மூன்று குருமாரில் ஒருவர் ஆண்புணர்ச்சிக்காரர்’ . . . ஒத்தப்பாலின புணர்ச்சிக்காரர்களை வெளி துரத்துவதற்கான போராட்ட ஏற்பாடு ‘இங்கிலாந்து சர்ச்சை மூடிவிடும்.’” இந்த அறிவிப்புகள் பெண்புணர்ச்சி மற்றும் ஆண்புணர்ச்சி கிறிஸ்தவ இயக்கத்தின் “ரெவெரென்ட்” பொதுச் செயலாளர் பின்வருமாறு சொன்னாரென மேற்கோளாக எடுத்துக் குறிப்பிட்டது: “இந்தத் தீர்மானக் கோரிக்கை ஏற்கப்பட்டால் அது சர்ச்சை அழிவடையச் செய்யும், கான்டர்பரியின் பேராயர் இதை அறிந்திருக்கிறார். பொது மதிப்புத்தொகையாக, இங்கிலாந்து சர்ச்சின், 30-க்கும் 40-க்கும் இடையேயுள்ள சதவீத எண்ணிக்கையான பாதிரிமார்கள் ஆண்புணர்ச்சிக்காரர்களென நாங்கள் நம்புகிறோம். மேலும் அவர்களே சர்ச்சின் ஊழியத்துக்குத் தங்கள் பங்கைச் செய்யும் மிக அதிக சுறுசுறுப்பாய்ச் செயல்படும் ஆட்கள்.” சர்ச்சுக்குச் செல்வோரின் குறைந்துகொண்டேவரும் எண்ணிக்கைகள், வளர்ந்துகொண்டிருக்கும் அந்த ஒத்தப்பாலின புணர்ச்சிக்காரர் ஊழியத்தின்பேரில் சந்தேகமில்லாமல் ஓரளவில் வெறுப்புணர்ச்சியின் பிரதிபலிப்பாகும்.

அந்தச் சர்ச் குருமார் பேரவை என்ன தீர்மானித்தது? பேரளவு பெரும்பான்மை எண்ணிக்கையான 388 உறுப்பினர்கள் (பாதிரிமாரின் 95 சதவீதம்) கண்டிப்புத் தளர்ந்த ஒரு தீர்மானக் கோரிக்கையை ஆதரித்து வாக்களித்தனர். இதைக் குறித்து, நவம்பர் 14, 1987-ன் தி எக்கொனாமிஸ்ட் வெளியீடு, பின்வருமாறு அறிவித்தது: “சர்ச் ஆஃப் இங்லண்டின் ஒத்தப்பாலினத்தவர் புணர்ச்சிப் பழக்கங்களை எதிர்க்கிறது, ஆனால் மிக அதிகமாயில்லை. சர்ச்சின் சட்ட மாமன்றமாகிய, இந்தப் பொது குருமார் பேரவை, ஆண்புணர்ச்சிக்காரரான பாதிரிமாரை மனதில் கொண்டு, ஒத்தப் பாலினத்தவர் புணர்ச்சி செயல்கள், வேசித்தனத்தையும் விபசாரத்தையும் போலிராமல், பாவம் அல்ல: அவை வெறுமனே ‘பாலுறவு நிலையான ஒரு மண உறவுக்குள்ளேயே சரியானபடி உரியதாயுள்ள முழுப் பொறுப்பான ஒரு செயல்’ என்ற ‘உயர் இலட்சியத்திலிருந்து குறைவுபடுவதாக உள்ளது.’” கான்டர்பரி பேராயரின் இந்த நிலை ரோமர் 1:26, 27-லுள்ள அப்போஸ்தலன் பவுலின் நேரடியான கூற்றுக்கு எதிர்மாறாயிருப்பதைக் காட்டி, தி எக்கொனாமிஸ்ட் வெளியீடு “தான் கருதினதைப் புனித பவுல் அறிந்திருந்தார்,” என்ற தலைப்புக்கு மேல் பவுலின் வார்த்தைகளின் ஒரு மேற்கோளை முனைப்பாகக் குறிப்பிட்டுக் காட்டியது.

இயேசு கிறிஸ்துவுங்கூட தான் கருதினதை அறிந்திருந்து அதை வெளிப்படையான சொற்களில் கூறினார். தம்முடைய செய்தியை இகழ்ந்து புறக்கணித்த அந்த மதத்தலைவர்களுக்கு நேரிடுவதைப் பார்க்கிலும் “நியாயத்தீர்ப்புநாளிலே சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும்” என்று அவர் சொன்னார் (மத்தேயு 11:23, 24) கடவுளுடைய குமாரனையும் அவருடைய போதகத்தையும் ஏற்க மறுத்துவிட்ட அந்த மதத் தலைவர்கள் சோதோம் நாட்டாரைப் பார்க்கிலுங்கூட அதிகக் குற்றமுள்ளவர்களென்பதைக் காட்ட இயேசு இங்கே மிகைப்படுத்திக்கூறும் ஓர் அணியைப் பயன்படுத்தினார். அந்தச் சோதோம் பட்டணத்தார் “நித்திய அக்கினியின் ஆக்கினையை,” அதாவது நித்திய அழிவை அடைந்தார்கள் என்று யூதா 7 கூறுகிறது. (மத்தேயு 25:41, 46) அவ்வாறெனில், குருடாக்கப்பட்ட தங்கள் மந்தைகளை, கடவுளுடைய ராஜ்யத்தின் உயர்ந்த ஒழுக்கத் தராதரங்களிலிருந்து தூர விலகி, இந்த உலகத்தின் கட்டுப்பாடற்ற, ஒழுக்கக்கேட்டு வழிகளுக்குள் செல்லும்படி குருட்டுத்தனமாய் வழிநடத்தும் கிறிஸ்தவத் தலைவர்களெனப்படுகிறவர்களின் நியாயத்தீர்ப்பு எவ்வளவு கடுமையாயிருக்கும்! (மத்தேயு 15:14) பரலோகத்திலிருந்துவரும் அந்தக் குரல், மகா பாபிலோனாகிய பொய் மதத்தைக் குறித்து, அவசரத் தன்மையுடன் பின்வருமாறு கட்டளையிடுகிறது: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.”—வெளிப்படுத்துதல் 18:2, 4.

[பக்கம் 275-ன் படம்]

மகா பாபிலோனின்மீது தம்முடைய கடைமுடிவான வெற்றிக்காக யா-வைத் துதித்து, பரலோகம் நான்கு அல்லேலூயாக்களைத் திரும்பத் திரும்ப முழங்குகிறது