Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இயேசுவின் நாமத்தைப் பற்றிக்கொண்டிருத்தல்

இயேசுவின் நாமத்தைப் பற்றிக்கொண்டிருத்தல்

அதிகாரம் 9

இயேசுவின் நாமத்தைப் பற்றிக்கொண்டிருத்தல்

பெர்கமு

1. இயேசுவின் அடுத்த செய்தியை எந்தச் சபை பெற்றது, அந்தக் கிறிஸ்தவர்கள் எப்பேர்ப்பட்ட நகரத்தில் வாழ்ந்துவந்தனர்?

 சிமிர்னாவிலிருந்து கரையோர சாலை வழியாக 80 கிலோமீட்டர் வடக்கு நோக்கி சென்று, பிறகு கைகஸ் நதி பள்ளத்தாக்கினூடே 24 கிலோமீட்டர் உள்நாட்டுப்புறமாக பயணஞ்செய்தால் நாம் இப்போது பெர்காமா என்றழைக்கப்படுகிற பெர்கமுவை வந்தடைகிறோம். இந்த நகரம், ஸியஸ் அல்லது ஜூப்பிட்டர் ஆலயத்துக்குப் பெயர்பெற்றதாக இருந்தது. தொல்பொருள் ஆய்வாளர்கள் 1800-களில் அந்த ஆலய பலிபீடத்தை ஜெர்மனிக்கு கொண்டுவந்தனர், இப்போதுங்கூட இதை பெர்லினிலுள்ள பெர்கமான் அருங்காட்சியகத்தில் புறமத கடவுட்களுடைய அநேக சிலைகளோடும் சிற்பங்களோடும் காணலாம். இத்தகைய எல்லா விக்கிரகாராதனையின் மத்தியில் இருக்கும் சபைக்கு கர்த்தராகிய இயேசு என்ன செய்தியை அனுப்புவார்?

2. இயேசு தாம் யார் என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துகிறார்? ‘இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை’ அவர் வைத்திருப்பது எதைக் குறிக்கிறது?

2 முதலில், இயேசு தாம் யார் என்பதை பின்வருமாறு சொல்வதன் மூலம் உறுதிப்படுத்துகிறார்: “பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள [கூர்மையான நீண்ட, NW] பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது.” (வெளிப்படுத்துதல் 2:12) வெளிப்படுத்துதல் 1:16-ல் தம்மைக் குறித்து கொடுக்கப்பட்டுள்ள விவரிப்பை இயேசு இங்கே மறுபடியும் சொல்கிறார். நீதிபதியாகவும் நியாயத்தீர்ப்பு நிறைவேற்றுபவராகவும் தம்முடைய சீஷரைத் துன்புறுத்துபவர்களை நொறுக்கி கீழே தள்ளுவார். அந்த நம்பிக்கை எவ்வளவு ஆறுதலளிக்கிறது! என்றாலும், நியாயத்தீர்ப்பைக் குறித்ததில், யெகோவா, தமது “உடன்படிக்கையின் தூத”னாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக, விக்கிரகாராதனை, ஒழுக்கக்கேடு, பொய் பேசுவது, நேர்மையின்மை போன்ற காரியங்களில் ஈடுபடுகிற, வறுமையிலிருப்பவர்களைக் கவனிக்கத் தவறுகிற, கிறிஸ்தவர்களென உரிமைபாராட்டுகிறவர்களுக்கு எதிராக “தீவிரமான சாட்சியாயிருப்”பார் என்பதைக் குறித்துங்கூட சபைக்கு உள்ளே இருப்பவர்கள் எச்சரிக்கப்பட்டிருப்பார்களாக. (மல்கியா 3:1, 5; எபிரெயர் 13:1-3) கடவுள், இயேசு கொடுக்கும்படி செய்த அறிவுரைக்கும் கடிந்துகொள்ளுதலுக்கும் கட்டாயம் செவிகொடுக்க வேண்டும்!

3. பெர்கமுவில் என்ன பொய் வணக்கம் நடைபெற்றது, ‘சாத்தானுடைய சிங்காசனம்’ அவ்விடத்தில் இருந்தது என்று எப்படி சொல்லப்படலாம்?

3 இயேசு இப்போது இந்தச் சபைக்கு இப்படியாக சொல்கிறார்: “சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதை . . . அறிந்திருக்கிறேன்.” (வெளிப்படுத்துதல் 2:13அ) உண்மையில், அந்தக் கிறிஸ்தவர்கள் சாத்தானிய வணக்கத்தால் சூழப்பட்டிருந்தார்கள். ஸியசுடைய ஆலயம் இருந்ததோடுகூட, சுகப்படுத்தும் கடவுளாகிய அஸ்கலேப்பியசுக்கும் ஒரு கோயில் இருந்தது. பேரரச வழிபாட்டு மரபுக்கு ஒரு மத்திப ஸ்தாபனமாகவும் பெர்கமு பெயர்பெற்றிருந்தது. “சாத்தான்” என்று மொழிபெயர்க்கப்படும் எபிரெய வார்த்தையின் பொருள் “எதிர்ப்பவன்” என்பதாகும், அவனுடைய “சிங்காசனம்” ஒரு சில காலத்துக்குத் தெய்வீக அனுமதியின் கீழுள்ள அவனுடைய உலக ஆட்சியைக் குறிக்கிறது. (யோபு 1:6, துணைக் குறிப்புகளடங்கிய புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள், அடிக்குறிப்பு) பெர்கமுவிலுள்ள ஏராளமான விக்கிரகாராதனை சாத்தானுடைய “சிங்காசனம்” அந்த நகரத்தில் உறுதியாக நிலைப்பட்டிருந்ததைக் காண்பித்தது. அவனுடைய தேசாபிமான வணக்கத்துக்கு அங்குள்ள கிறிஸ்தவர்கள் தலைகுனியவில்லை என்பதைக் குறித்து சாத்தான் எவ்வளவு சினங்கொண்டவனாக இருந்திருக்க வேண்டும்!

4. (அ) பெர்கமுவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு இயேசு என்ன போற்றுதலைக் கொடுத்தார்? (ஆ) ரோம அரசனின் சமயத்தூதுவனான பிலினி கிறிஸ்தவர்களை எவ்வாறு நடத்தவேண்டுமென்பதைப் பற்றி பேரரசனாகிய டிராஜனுக்கு என்ன எழுதினான்? (இ) ஆபத்தின் மத்தியிலும் பெர்கமுவிலுள்ள கிறிஸ்தவர்கள் என்ன போக்கைப் பின்பற்றினர்?

4 ஆம், “சாத்தானுடைய சிங்காசனம்” அங்கே பெர்கமுவிலேயே இருந்தது. “ஆகிலும்,” இயேசு தொடர்ந்து சொல்கிறார்: “நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன்.” (வெளிப்படுத்துதல் 2:13ஆ) எத்தகைய உணர்ச்சியூட்டும் போற்றுதல்! சந்தேகமில்லாமல், பேய்த்தன பழக்கங்களில் ஈடுபடவும் ரோமப் பேரரசனை வணங்கவும் மறுத்ததன் விளைவாக அந்திப்பா கொல்லப்பட்டான். யோவான் இந்தத் தீர்க்கதரிசனத்தைப் பெற்று வெகு காலமாவதற்கு முன்பு, ரோமின் பேரரசனாகிய டிராஜனின் சமயத்தூதுவனான இளையவன் பிலினி, கிறிஸ்தவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் கையாளும் முறையைப் பற்றி விளக்கமாக ஒரு கடிதத்தை டிராஜனுக்கு எழுதினான்—இது பேரரசன் ஏற்றுக்கொண்ட ஒரு முறையாகும். கிறிஸ்தவர்களாக இருப்பதை மறுதலித்தவர்கள், பிலினி இப்படியாகச் சொன்னதை செய்த பின் விடுவிக்கப்பட்டனர், “தேவர்களுக்கு நான் ஏறெடுக்கும் வேண்டுதலை அவர்கள் நான் சொன்ன பின் சொல்லி, உம்முடைய [டிராஜனுடைய] சிலைக்குத் தூபவர்க்கங்காட்டி, மதுபானம் அளித்து, . . . மற்றும் அதோடுகூட கிறிஸ்துவை சபித்த”போது விடுவிக்கப்பட்டனர். கிறிஸ்தவர்களாக கண்டறியப்பட்ட எவரும் கொல்லப்பட்டனர். இப்பேர்ப்பட்ட ஆபத்தை எதிர்ப்பட்டபோதிலும், பெர்கமுவிலுள்ள கிறிஸ்தவர்கள் அவர்களுடைய விசுவாசத்தை மறுதலிக்கவில்லை. அவர்கள் ‘இயேசுவின் நாமத்தைப் பற்றியிருந்தார்கள்.’ எப்படியெனில், யெகோவாவை மகிமைப்படுத்துபவராகவும் அவருடைய நியமிக்கப்பட்ட நியாயாதிபதியாகவும் இருக்கும் அவருடைய மேம்பட்ட ஸ்தானத்தை அவர்கள் விடாது கனப்படுத்தினார்கள். இராஜ்ய சாட்சிகளாக இயேசுவின் அடிச்சுவடுகளில் உண்மைத்தவறாது பின்தொடர்ந்தார்கள்.

5. (அ) பேரரசர் வழிபாடு மரபுக்கு நவீன காலத்தில் இணையாக இருக்கும் எது கிறிஸ்தவர்களுக்கு கடுமையான சோதனைகளை நம் நாளில் உண்டுபண்ணியிருக்கிறது? (ஆ) கிறிஸ்தவர்களுக்கு காவற்கோபுரம் என்ன உதவியை அளித்திருக்கிறது?

5 சாத்தான் தற்போதைய இந்தத் துன்மார்க்கமான உலகத்தை ஆட்சி செய்கிறான் என்பதை இயேசு பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரியப்படுத்தியிருந்தார், ஆனால் இயேசுவுடைய உத்தமத்தன்மையின் காரணமாக, சாத்தானுக்கு அவர் மீது எவ்வித அதிகாரமும் இல்லை. (மத்தேயு 4:8-11; யோவான் 14:30) நம் நாளில், வல்லமைவாய்ந்த தேசங்கள், குறிப்பாக “வடதிசை ராஜா”வும் “தென்றிசை ராஜா”வும் உலக ஆதிக்கத்துக்காக போராடிக்கொண்டிருக்கின்றனர். (தானியேல் 11:40) நாட்டுப்பற்று வெறியார்வம் கிளப்பிவிடப்பட்டிருக்கிறது, மேலும் பேரரசர் வழிபாட்டு மரபு இன்று பூமியைச் சூழ்ந்திருக்கும் தேசாபிமானத்தில் அதன் தற்கால இணையைக் கொண்டிருக்கிறது. நடுநிலைமை சம்பந்தப்பட்டதில் நவம்பர் 1, 1939 ஆங்கில காவற்கோபுர பத்திரிகையில் காணப்பட்ட கட்டுரைகள் மற்றும் நவம்பர் 1, 1979, செப்டம்பர் 1, 1986 பிரதிகளிலுள்ள கட்டுரைகள், இந்தப் பிரச்னையின்பேரில் உள்ள பைபிளின் போதனையைத் தெளிவாக எடுத்துரைத்தன, யெகோவாவின் பெயரில் நடந்து, இவ்வுலகத்தை இயேசு தைரியத்துடன் ஜெயங்கொண்டதுபோல ஜெயங்கொள்ள விரும்பும் கிறிஸ்தவர்களுக்கு வழிநடத்துதல்களை இவை அளித்தன.—மீகா 4:1, 3, 5; யோவான் 16:33; 17:4, 6, 26; 18:36, 37; அப்போஸ்தலர் 5:29.

6. அந்திப்பாவைப் போல், நவீன காலங்களில் யெகோவாவின் சாட்சிகள் எப்படி ஓர் உறுதியான நிலைநிற்கையை எடுத்திருக்கிறார்கள்?

6 இப்பேர்ப்பட்ட ஆலோசனை அவசரமான தேவையாக இருந்திருக்கிறது. நியாயமற்ற நாட்டுப்பற்று வெறிக்கு எதிராக, யெகோவாவின் சாட்சிகள்—அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களும் அவர்களுடைய தோழர்களும்விசுவாசத்தில் உறுதியாக நிலைநிற்க வேண்டியதாய் இருந்திருக்கிறது. ஐக்கிய மாகாணங்களில், தேசிய கொடியை வணங்காததன் காரணமாக நூற்றுக்கணக்கான பிள்ளைகளும் ஆசிரியர்களும் பள்ளிகளிலிருந்து விலக்கப்பட்டனர். ஜெர்மனியில் சாட்சிகள் சுவஸ்த்திக்காவை வணங்க மறுத்ததன் காரணமாக கொடுமையாக துன்புறுத்தப்பட்டனர். ஏற்கெனவே குறிப்பிட்டபடி, ஹிட்லரின் நாஸி ஆட்கள், இத்தகைய தேசப்பற்றுள்ள விக்கிரகாராதனையில் பங்குகொள்ள மறுத்ததன் காரணமாக யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களில் ஆயிரக்கணக்கானோரைக் கொன்று போட்டனர். ஜப்பானில் ஷின்டோ பேரரசு வணக்கம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, 1930-களில், ஜப்பானியர் குடியிருந்த தைவான் தேசத்தில் இரண்டு பயனியர் ஊழியர்கள் அதிக ராஜ்ய விதைகளை விதைத்தனர். இராணுவ அதிகாரிகள் அவர்களை சிறையிலிட்டனர். அவர்களில் ஒருவர் அங்கே கொடூரமாக நடத்தப்பட்டதில் மரித்துப்போனார். மற்றொருவர், வெறுமென முதுகில் சுட்டுக்சொல்லப்படுவதற்கே பிற்பாடு விடுவிக்கப்பட்டார்—ஒரு நவீன நாளைய அந்திப்பா. இன்றுவரை, தேசிய சின்னங்களை வணங்குவதையும் அரசுக்குத் தனிப்பட்ட முழுமையான பக்தியையும் வலுக்கட்டாயப்படுத்தும் அநேக நாடுகள் இருக்கின்றன. கிறிஸ்தவ நடுநிலைமை வகிக்கும் ஆட்களாக இருப்பதில் அவர்கள் கொண்டிருக்கும் தைரியமான நிலைநிற்கையின் காரணமாக அநேக இளைய சாட்சிகள் சிறையிலடைக்கப்படுகின்றனர். பலர் கொல்லப்படுகின்றனர். இத்தகைய பிரச்சினைகளை எதிர்ப்படும் ஓர் இளைஞனாக நீ இருப்பாயானால், நித்திய ஜீவ எதிர்பார்ப்புடன், “ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவ”னாயிருக்கும்படி தினமும் கடவுளுடைய வார்த்தையைப் படிப்பாயாக.—எபிரெயர் 10:33-11:1; மத்தேயு 10:28-31.

7. தேசிய வணக்கம் சம்பந்தமாக இந்தியாவிலுள்ள பள்ளிப்பிள்ளைகள் எப்படி ஒரு பிரச்சினையை எதிர்ப்பட்டார்கள், என்ன விளைவுடன்?

7 பள்ளிப் பிள்ளைகள் இதேபோன்ற பிரச்சினைகளை எதிர்ப்பட்டிருக்கின்றனர். இந்தியாவில் 1985-ல் கேரள மாநிலத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய மூன்று பிள்ளைகள் தேசிய கீதத்தைப் பாட மறுத்து, தங்களுடைய பைபிள் சார்ந்த நம்பிக்கையை விட்டுக்கொடுக்க மறுத்தனர். மற்றவர்கள் தேசிய கீதத்தைப் பாடும்போது அவர்கள் மரியாதையுடன் எழுந்து நின்றார்கள், ஆகிலும் அவர்கள் பள்ளியிலிருந்து விலக்கப்பட்டனர். இவர்களுடைய தந்தை இந்த நடவடிக்கையின் பேரில் தொடுத்த வழக்கை இந்தியாவின் உச்சநீதிமன்றம் வரையாக எடுத்துச்சென்றார், அங்கே இரண்டு நீதிபதிகளும் தைரியமாக பின்வருமாறு கூறி, இந்தப் பிள்ளைகளின் சார்பாக தீர்ப்பு வழங்கினர்: “நமது மரபு சகிப்புத்தன்மையையே போதிக்கிறது; நம்முடைய தத்துவம் சகிப்புத்தன்மையையே போதிக்கிறது; நமது அரசியல் அமைப்பும் சகிப்புத்தன்மையையே அப்பியாசிக்கிறது; அதை நாம் களங்கப்படுத்த வேண்டாம்.” இந்த வழக்கின் பேரில் வெளிவந்த செய்தித்தாள் அறிவிப்புகளும் சாதகமான கட்டுரைகளும், பூமியின் அப்போதைய ஜனத்தொகையில் ஏறக்குறைய ஐந்தில் ஒரு பங்கு ஜனங்களைக்கொண்ட முழு தேசத்துக்கும் உண்மையான கடவுளாகிய யெகோவாவை வணங்கும் கிறிஸ்தவர்கள் அந்நாட்டில் இருக்கிறார்கள் என்பதையும், அவர்கள் பைபிள் நியமங்களின்படி உறுதியாக நிற்கிறார்கள் என்பதையும் தெரிவித்தது.

கெடுதலான செல்வாக்குகள்

8. பெர்கமுவிலுள்ள கிறிஸ்தவர்களைக் கண்டனம் செய்யும் என்ன வார்த்தைகளைக் கூற இயேசு அவசியத்தைக் கண்டார்?

8 ஆம், பெர்கமுவிலுள்ள கிறிஸ்தவர்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்பவர்கள். “ஆகிலும்,” இயேசு கூறுகிறார்: “சில காரியங்களைக் குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு.” அவர்கள் கண்டனம் பெறுவதற்கு என்ன செய்திருந்தார்கள்? இயேசு நமக்குச் சொல்லுகிறார்: “விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம் பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.”—வெளிப்படுத்துதல் 2:14.

9. பிலேயாம் என்பவன் யார், அவனுடைய ஆலோசனை எவ்வாறு “இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாக” வைத்தது?

9 மோசேயின் நாளில், மோவாப் அரசனாகிய பாலாக், யெகோவாவின் வழிகளைப்பற்றி ஓரளவு அறிந்திருந்த பிலேயாம் என்னும் இஸ்ரவேலனல்லாத ஒரு தீர்க்கதரிசியை இஸ்ரவேலை சபிக்கும்படி கூலிக்கு அமர்த்தினான். யெகோவா பிலேயாமை எதிர்த்து, இஸ்ரவேலருக்கு ஆசீர்வாதத்தையும் அவர்களுடைய விரோதிகளுக்கு சாபங்களையும் கூறும்படி வற்புறுத்தினார். பிலேயாம் அதிக சூழ்ச்சியான ஒரு தாக்குதலை உபயோகிக்க ஆலோசனை கூறுவதன் மூலமாக பாலாக்குக்கு இதன் விளைவாக மூண்ட கோபத்தை தணித்தான்: மோவாபின் பெண்கள், இஸ்ரவேலின் ஆண்களை வினைமையான ஒழுக்கக்கேட்டிலும் பொய்த் தேவனாகிய பேயோரின் பாகாலுக்கு விக்கிரகாராதனையிலும் ஈடுபடும்படி வசீகரிக்கட்டும்! இந்தத் தந்திரம் காரியத்தைச் சாதித்தது. அந்த 24,000 இஸ்ரவேல வேசிமார்க்கத்தாரை கொலை செய்ய அவர் வாதையை அனுப்புகையில், யெகோவாவின் நீதியான கோபம் மூண்டது. இஸ்ரவேலிலுள்ள தீமையை ஒழிக்க ஆசாரியனாகிய பினெகாஸ் உடன்பாடான நடவடிக்கை எடுத்தபோது மட்டுமே வாதை நிறுத்தப்பட்டது.—எண்ணாகமம் 24:10, 11; 25:1-3, 6-9; 31:16.

10. பெர்கமுவிலுள்ள கிறிஸ்தவ சபைக்குள் என்ன இடறல்கள் நுழைந்தன, கடவுள் அவர்களுடைய பாவங்களை மன்னித்துவிடுவார் என்று ஏன் அந்தக் கிறிஸ்தவர்கள் நினைத்திருக்கக்கூடும்?

10 இப்போது யோவானின் நாளில், பெர்கமுவில் அதைப்போன்ற இடறல்கள் இருக்கின்றனவா? கட்டாயமாகவே இருக்கின்றன! ஒழுக்கக்கேடு மற்றும் விக்கிரகாராதனை சபைக்குள் நுழைந்திருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுலின் மூலம் கொடுக்கப்பட்ட கடவுளுடைய எச்சரிப்புகளுக்கு அந்தக் கிறிஸ்தவர்கள் செவிகொடுக்கவில்லை. (1 கொரிந்தியர் 10:6-11) அவர்கள் துன்புறுத்தலை சகித்திருப்பதன் காரணமாக, தங்களுடைய ஒழுக்க சம்பந்தமான மீறுதல்களை யெகோவா பொருட்படுத்தாமல் விட்டுவிடுவார் என்று ஒருவேளை எண்ணலாம். ஆகவே இத்தகைய துன்மார்க்கத்தை அவர்கள் கட்டாயம் வெறுக்கவேண்டும் என்று இயேசு அவர்களுக்குத் தெளிவாக கூறுகிறார்.

11. (அ) கிறிஸ்தவர்கள் எதற்கு எதிராக எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும், எத்தகைய சிந்தனையை அவர்கள் தவிர்க்க வேண்டும்? (ஆ) கடந்த ஆண்டுகளினூடே எத்தனைபேர் கிறிஸ்தவ சபையிலிருந்து சபைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள், பெரும்பாலும் எந்தக் காரணங்களுக்காக?

11 அதே விதமாக, இன்று கிறிஸ்தவர்கள் “நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்”டாதபடி அதற்கெதிராக எச்சரிக்கையாயிருக்க வேண்டும். (யூதா 4) நாம் தீமையை வெறுத்து, கிறிஸ்தவ ஒழுக்கத்தை நாடிச்செல்லும்படி ‘நம்முடைய சரீரங்களை ஒடுக்கிக் கீழ்ப்படுத்த’ கடமைப்பட்டிருக்கிறோம். (1 கொரிந்தியர் 9:27; சங்கீதம் 97:10; ரோமர் 8:6) கடவுளுடைய சேவையில் வைராக்கியமும், துன்புறுத்தலின்கீழ் உத்தமத்தன்மையைக் காத்துக்கொள்வதும், ஒழுக்கக்கேட்டில் ஈடுபட நமக்கு அனுமதி அளிக்கிறது என்று நாம் ஒருபோதும் சிந்திக்கக்கூடாது. கடந்த ஆண்டுகளினூடே, உலகளாவிய கிறிஸ்தவ சபையிலிருந்து பத்தாயிரக்கணக்கில் சபைநீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையர் ஒழுக்கக்கேட்டின் காரணமாகவே அவ்வாறு விலக்கப்பட்டிகிறார்கள். சில ஆண்டுகளில் பூர்வீக இஸ்ரவேலில் பேயோரின் பாகால் காரணமாக விழுந்தவர்களைப் பார்க்கிலும் அதிக எண்ணிக்கையினர் இதற்கு ஆளாகியிருக்கிறார்கள். இந்தக் கூட்டத்தாருக்குள் நாம் விழுந்துவிடாதபடி எப்போதுமே எச்சரிக்கையுள்ளவர்களாக இருப்போமாக!—ரோமர் 11:20; 1 கொரிந்தியர் 10:12.

12. பூர்வ காலத்தில் கடவுளுடைய ஊழியர்களுக்கு இருந்ததுபோலவே, இன்று கிறிஸ்தவர்களுக்கு என்ன நியமங்கள் பொருந்துகின்றன?

12 ‘விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசித்ததற்காகவும்’ இயேசு பெர்கமுவிலுள்ள கிறிஸ்தவர்களைக் கண்டனம் செய்தார். இது எதை உட்படுத்தும்? கொரிந்தியருக்கு பவுல் எழுதிய வார்த்தைகளை முன்னிட்டுப் பார்க்கையில், ஒருவேளை சிலர் வேண்டுமென்றே மற்றவர்களின் மனச்சாட்சியைப் புண்படுத்தும் விதத்தில் தங்களுடைய கிறிஸ்தவ சுயாதீனத்தைப் பயன்படுத்தியிருக்கக்கூடும். உண்மையில், விக்கிரக சடங்குகளில் அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் பங்கெடுத்திருப்பார்கள் என்பது அதிக சாத்தியமாக இருக்கிறது. (1 கொரிந்தியர் 8:4-13; 10:25-30) இன்று உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் மற்றவர்களுக்கு இடறலாக இராதபடி ஜாக்கிரதையுள்ளவர்களாக இருப்பதன் மூலம், தங்களுடைய கிறிஸ்தவ சுயாதீனத்தை உபயோகிக்கையில் தன்னலமற்ற அன்பை காட்ட வேண்டும். நிச்சயமாகவே, டிவி, திரைப்படங்கள், போட்டி விளையாட்டுக்கள் ஆகியவற்றின் நட்சத்திரங்களை வணங்குதல், பணத்தை கடவுளாக்குதல் அல்லது தங்களுடைய சொந்த வயிற்றையே கடவுளாக்குதல் போன்ற விக்கிரகாராதனையின் இந்த நவீன கால அம்சங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்!—மத்தேயு 6:24; பிலிப்பியர் 1:9, 10; 3:17-19.

மதப் பிரிவுகளைத் தவிருங்கள்!

13. பெர்கமுவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு அடுத்தபடியாக இயேசு என்ன சிட்சையின் வார்த்தைகளைக் கொடுக்கிறார்? சபைக்கு அது ஏன் தேவையாக இருந்தது?

13 இயேசு பின்வருமாறு சொல்வதன் மூலம் பெர்கமுவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு மேலுமாக சிட்சை கொடுத்தார்: “அப்படியே, நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன்.” (வெளிப்படுத்துதல் 2:15) இந்த மதப் பிரிவினரின் கிரியைகளை வெறுத்ததற்காக எபேசு சபையாருக்கு இயேசு முன்பு பாராட்டுதல் தெரிவித்திருந்தார். ஆனால் பெர்கமுவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு சபையை மதப் பிரிவினைகளிலிருந்து சுத்தமாக காத்துக்கொள்வதன் பேரில் புத்திமதி தேவையாக இருந்தது. யோவான் 17:20-23-ல் இயேசு ஜெபித்த அந்த ஒற்றுமை காக்கப்படத்தக்கதாக கிறிஸ்தவ தராதரங்களைக் கடைப்பிடிக்கும் காரியத்தில் அதிக உறுதி தேவையாக இருக்கிறது. “ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம் பண்”ணுவதும் அவசியமாக இருக்கிறது.—தீத்து 1:9.

14. (அ) பூர்வ காலங்களிலிருந்து கிறிஸ்தவ சபை யாரை எதிர்ப்பட வேண்டியதாக இருந்திருக்கிறது, அப்போஸ்தலன் பவுல் அவர்களை எவ்வாறு விவரித்தார்? (ஆ) பிரிந்துபோகும் ஒரு வகுப்பைப் பின்பற்றும் சாய்வுள்ள எவரும் இயேசுவின் என்ன வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க வேண்டும்?

14 பூர்வ காலங்களிலிருந்து, கிறிஸ்தவ சபை மேட்டிமையுள்ள விசுவாச துரோகிகளை எதிர்ப்பட வேண்டியதாக இருந்திருக்கிறது. அவர்கள் தங்களுடைய மென்மையான, வஞ்சகமான பேச்சைக்கொண்டு, யெகோவா உபயோகிக்கும் வழிமூலத்தின் மூலமாக “கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்கு”கிறவர்களாய் இருந்தனர். (ரோமர் 16:17, 18) ஏறக்குறைய தம்முடைய எல்லா நிரூபங்களிலும் அப்போஸ்தலன் பவுல் இந்த ஆபத்தைக் குறித்து எச்சரித்தார். a இயேசு, கிறிஸ்தவ சபையை அதன் கிறிஸ்தவ தூய்மைக்கும் ஐக்கியத்துக்கும் மீண்டும் நிலைநாட்டியிருக்கும் தற்காலங்களில், மதப்பிரிவினையின் ஆபத்து இன்னமும் இருக்கிறது. ஆகவே, பிரிந்துபோகும் ஒரு வகுப்பைப் பின்பற்றும் மனச்சாய்வுள்ளவர்களாய் இருக்கும் எவரும், இயேசுவின் அடுத்து வரும் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க வேண்டும்: “நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன்.”—வெளிப்படுத்துதல் 2:16.

15. மதப் பிரிவுகள் எவ்வாறு ஆரம்பமாகின்றன?

15 மதப் பிரிவுகள் எவ்வாறு ஆரம்பமாகின்றன? தன்னைத்தான் போதகனாக்கிக்கொள்ளும் ஒருவன் ஏதோ ஒரு பைபிள் சத்தியத்தை எதிர்த்து கேள்வி எழுப்புவதன் மூலம் (உதாரணமாக நாம் கடைசி நாட்களில் இருப்பதைப் பற்றி) சந்தேகங்களை விதைக்கலாம். இப்படியாக பிரிந்துசெல்லும் தொகுதி ஒன்று உண்டாகி அவரைப் பின்பற்றுகிறது. (2 தீமோத்தேயு 3:1; 2 பேதுரு 3:3, 4) அல்லது ஒருவர் யெகோவா தமது வேலையைச் செய்து முடிக்கும் முறையைக் குறித்து குற்றங்கண்டுபிடித்து, ராஜ்ய செய்தியுடன் வீடுவீடாக போவது வேதப்பூர்வமற்றது, மேலும் அது அவசியமற்றது என்று கூறி, சிரமப்படக்கூடாது என்ற சுயநல ஆவியைத் தூண்டிவிடக்கூடும். இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் வைத்த முன்மாதிரியைப் பின்பற்றி இத்தகைய சேவையில் ஈடுபடுவது இவர்களை மனத்தாழ்மையுள்ளவர்களாக வைத்திருக்கும்; ஆகிலும் அவர்கள் தனியே பிரிந்துபோய், காரியங்களைத் தங்களுக்குச் சுலபமாக்கிக்கொண்டு, ஒருவேளை தனித்தொகுதியாக பைபிளை எப்போதாவது ஒருமுறை வாசிக்க தெரிந்துகொள்கிறார்கள். (மத்தேயு 10:7, 11-13; அப்போஸ்தலர் 5:42; 20:20, 21) இப்படிப்பட்டவர்கள் இயேசுவின் நினைவு ஆசரிப்பு, இரத்தத்திலிருந்து விலகியிருக்கும்படி வேதப்பூர்வமான கட்டளை, விடுமுறை நாட்களைக் கொண்டாடுதல், புகையிலை உபயோகித்தல் ஆகியவற்றைப் பற்றி தங்களுடைய சொந்த எண்ணங்களை உருவாக்கித் தெரிவிக்கிறார்கள். அதோடுகூட, அவர்கள் யெகோவாவின் பெயரை மதிப்பு குறைவாக்குகிறார்கள்; சீக்கிரத்தில் மகா பாபிலோனின் கட்டுப்பாடற்ற வழிகளுக்குள் மீண்டும் விழுந்துவிடுகிறார்கள். இதைவிட மோசமாக, சிலர் ஒருசமயம் அவர்களுடைய சகோதரர்களாக இருந்த ‘தங்களுடைய உடன் ஊழியர்களை அடித்து’ அவர்களுக்கு எதிராக திரும்பவும் சாத்தானால் தூண்டப்படுகிறார்கள்.—மத்தேயு 24:49; அப்போஸ்தலர் 15:29; வெளிப்படுத்துதல் 17:5.

16. (அ) விசுவாசதுரோகிகளின் செல்வாக்கின் காரணமாக மனஉறுதியற்றவர்கள் ஏன் விரைவில் மனந்திரும்ப வேண்டும்? (ஆ) மனந்திரும்ப மறுப்பவர்களுக்கு என்ன நேரிடும்?

16 விசுவாச துரோகிகளின் செல்வாக்கின் காரணமாக மனவுறுதியற்றவர்கள் மனந்திரும்பும்படி இயேசு கொடுக்கும் அழைப்புக்கு விரைவில் செவிசாய்க்க வேண்டும்! விசுவாச துரோக பிரச்சாரம், விஷத்தைப்போல் தள்ளிவிடப்பட வேண்டும், உண்மையிலேயே அது விஷம்தான்! இயேசு தம்முடைய சபைக்கு உணவாக அளிக்கும் நீதியுள்ள, கற்புள்ள, அன்புள்ள சத்தியங்களுக்கு நேர் எதிராக இருக்கும் பொறாமையும் விரோதமும் அதன் அடிப்படையாக இருக்கிறது. (லூக்கா 12:42; பிலிப்பியர் 1:15, 16; 4:8, 9) மனந்திரும்ப மறுப்பவர்களைக் குறித்ததில், கர்த்தராகிய இயேசு “[தம்] வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணு”வார். பூமியில் இருக்கையில் தம்முடைய சீஷருடன் அவர் செலவிட்ட கடைசி சாயங்காலம் ஜெபித்தபோது கேட்ட அந்த ஒற்றுமையைக் காத்துக்கொள்ள தம்முடைய ஜனங்களைப் புடமிடுகிறார். (யோவான் 17:20-23, 26) அவருடைய வலது கையிலுள்ள நட்சத்திரங்கள் கொடுக்கும் அன்புள்ள புத்திமதியையும் உதவியையும் விசுவாச துரோகிகள் மறுப்பதன் காரணமாக, இயேசு அவர்களை “கடினமாய் தண்டித்து,” “புறம்பான இருளிலே” தள்ளிப்போடுகிறார். கடவுளுடைய ஜனங்கள் மத்தியில் புளிப்புள்ள மாவாக செயல்பட முடியாதவர்களாக அவர்கள் சபை நீக்கம் செய்யப்படுகிறார்கள்.—மத்தேயு 24:48-51; 25:30; 1 கொரிந்தியர் 5:6, 9, 13; வெளிப்படுத்துதல் 1:16.

‘மறைவான மன்னாவும் வெண்மையான குறிக்கல்லும்’

17. ‘ஜெயங்கொள்ளும்’ அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு என்ன பரிசு காத்திருக்கிறது? பெர்கமுவிலுள்ள கிறிஸ்தவர்கள் எதை மேற்கொள்ள வேண்டியவர்களாக இருந்தனர்?

17 யெகோவாவின் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலின் கீழ் கொடுக்கப்படும் இயேசுவின் புத்திமதிக்குச் செவிசாய்ப்பவர்களுக்கு மகத்தான வெகுமதி காத்திருக்கிறது. கேளுங்கள்! “ஆவியானவர் [ஆவி, NW] சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவை புசிக்கக் கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது.” (வெளிப்படுத்துதல் 2:17) இப்படியாக, சிமிர்னாவிலுள்ள கிறிஸ்தவர்களைப்போலவே, பெர்கமுவிலுள்ள கிறிஸ்தவர்களும் “ஜெயங்கொள்”ளும்படி உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். அவர்கள் வெற்றி காணவேண்டுமென்றால், சாத்தானின் சிங்காசனம் இருக்கும் இடமாகிய பெர்கமுவிலுள்ளவர்கள் விக்கிரகாராதனையை முற்றிலும் வெறுக்கவேண்டும். அவர்கள் பாலாக்கு, பிலேயாம், மற்றும் நிக்கொலாய் ஆகியோரோடு சம்பந்தப்படுத்தப்பட்ட ஒழுக்கக்கேடு, மதப் பிரிவினை மற்றும் விசுவாச துரோகம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்கையில், இந்த அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் “மறைவான மன்னா”வில் சிலவற்றைப் புசிக்க அழைக்கப்படுவார்கள். இதன் அர்த்தம் என்ன?

18, 19. (அ) இஸ்ரவேலருக்கு யெகோவா கொடுத்த மன்னா என்னவாக இருந்தது? (ஆ) என்ன மன்னா மறைத்து வைக்கப்பட்டிருந்தது? (இ) மறைவான மன்னாவைப் புசிப்பது அடையாள அர்த்தமாக எதைக் குறிக்கிறது?

18 மோசேயின் நாட்களில், வனாந்தர யாத்திரையின்போது இஸ்ரவேலர்களைப் போஷிக்க யெகோவா மன்னாவை ஏற்பாடுசெய்தார். அந்த மன்னா மறைவானதாக இல்லை, ஏனெனில் ஓய்வுநாளைத் தவிர ஒவ்வொரு காலையும் அது அற்புதமாக தோன்றிற்று. தரையின் மேல் உறைந்த பனிக்கட்டி பொடியத்தனையாய் மூடிக்கிடந்தது. இஸ்ரவேலர்களை உயிருடன் காப்பதற்கு அது தெய்வீக ஏற்பாடாக இருந்தது. ஞாபகார்த்தமாக இந்த ‘அப்பத்தில்’ சிலவற்றை பரிசுத்த உடன்படிக்கை பெட்டியிலே, பொற்பாத்திரம் ஒன்றில் “[இஸ்ரவேலின்] சந்ததியாருக்காக” வைக்கும்படி யெகோவா மோசேயிக்கு கட்டளையிட்டார்—யாத்திராகமம் 16:14, 15, 23, 26, 33; எபிரெயர் 9:3, 4.

19 என்னே பொருத்தமான சின்னம்! கூடாரத்தின் மகா பரிசுத்த அறையில் இந்த மன்னா மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அங்கே யெகோவாவின் சமூகத்தையே அடையாளப்படுத்தின அற்புதமான ஓர் ஒளி உடன்படிக்கைப் பெட்டியின் மூடிக்குமேலே இருந்தது. (யாத்திராகமம் 26:34) மறைவாக இருந்த அந்த மன்னாவைப் புசிக்க அந்தப் பரிசுத்த இடத்திற்குள் நுழைய ஒருவருக்கும் அனுமதி கிடையாது. ஆகிலும், ஜெயங்கொள்ளும், தம்மைப் பின்பற்றும் அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள் அந்த “மறைவான மன்னா”வைப் புசிப்பார்கள் என்று இயேசு கூறினார். தங்களுக்கு முன் கிறிஸ்து செய்ததுபோலவே, இவர்களும் “மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே . . . பிரவேசியாமல், பரலோகத்தில்தானே” இப்பொழுது பிரவேசிக்க முடிகிறது. (எபிரெயர் 9:12, 24) அவர்களுடைய உயிர்த்தெழுதலின்போது, இவர்கள் யெகோவாவின் ஓர் அற்புதமான ஏற்பாடாகிய அழியாமையையும் சாவாமையையும் தரித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு அழியாமையுள்ள “மறைவான மன்னா” புசிக்கக் கொடுக்கப்படுவதனால் இது அடையாளப்படுத்தப்படுகிறது. ஜெயங்கொள்ளும் அந்தச் சிறு தொகுதியினர் எவ்வளவு சிலாக்கியம் பெற்றவர்கள்!—1 கொரிந்தியர் 15:53-57.

20, 21. (அ) அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு வெண்மையான குறிக்கல்லைக் கொடுப்பதனால் அடையாள அர்த்தமாக எது குறிக்கப்படுகிறது? (ஆ) வெண்மையான குறிக்கற்கள் 1,44,000 மட்டுமே இருப்பதன் காரணமாக, திரள் கூட்டத்தார் என்ன நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்?

20 இவர்கள் “வெண்மையான குறிக்கல்லையும்” பெறுகிறார்கள். ரோம நீதிமன்றங்களில், குறிக்கற்கள் தீர்ப்பு அளிக்க பயன்படுத்தப்பட்டன. b வெண்மையான குறிக்கல் குற்றமற்றவர் என்று தீர்க்கப்படுவதைக் குறித்தது, கருநிறமுள்ள குறிக்கல் பெரும்பாலும் மரணத்தீர்ப்பளிக்கப்படுவதைக் குறித்தது. பெர்கமுவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு இயேசு “வெண்மையான குறிக்கல்லைக்” கொடுத்தது, அவர்களை அவர் குற்றமற்றவர்கள், தூய்மையுள்ளவர்கள், கற்புள்ளவர்கள் என தீர்ப்பளிக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனால் இயேசுவின் வார்த்தைகள் கூடுதலான ஒரு பொருளையும் கொண்டிருக்கக்கூடும். ரோமர் காலத்தில் ஒரு குறிக்கல் முக்கியமான நிகழ்ச்சிகளுக்கு நுழைவு அனுமதி பெறுவதற்குங்கூட பயன்படுத்தப்பட்டது. ஆகையால் ஜெயங்கொள்ளும் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவனுக்கு வெண்மையான குறிக்கல் ஒரு விசேஷித்தக் காரியத்தைக் குறிக்கக்கூடும்—ஆட்டுக்குட்டியானவரின் கல்யாணத்தின்போது பரலோகத்தில் கனம்பொருந்திய ஒரு ஸ்தானத்துக்கு அனுமதி பெறுவதைக் குறிக்கிறது. அத்தகைய வெண்மையான கற்கள் 1,44,000 மட்டுமே ஏற்பாடு செய்யப்படுகின்றன.—வெளிப்படுத்துதல் 14:1; 19:7-9.

21 உடன் வணக்கத்தாரான திரள் கூட்டத்தாரில் ஒருவராக நீங்கள் இருப்பீர்களானால், நீங்கள் சிந்திக்கப்படாமல் விடப்படுகிறீர்கள் என்பதை இது பொருட்படுத்துகிறதா? இல்லவே இல்லை! பரலோகத்துக்குள் நுழைவு பெறுவதற்கு வெண்மையான குறிக்கல்லை பெறாவிட்டாலும், நீங்கள் சகித்திருந்தால், பூமியில் பரதீஸைப் புதுப்பிக்கும் மகிழ்ச்சிக்குரிய வேலையில் பங்குகொள்ள மிகுந்த உபத்திரவத்தினூடே வெளியே வரக்கூடும். கிறிஸ்தவத்துக்கு முன்பான காலங்களில் வாழ்ந்த விசுவாசமுள்ளவர்களும் மற்றும் சமீப காலங்களில் மரித்திருக்கக்கூடிய வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்களும் உயிர்த்தெழுப்பப்பட்டு, இதில் உங்களோடுகூட பங்குகொள்வார்கள். நாளடைவில் மீட்டுக்கொள்ளப்பட்ட மரித்தோர் யாவருமே பரதீஸான பூமியில் ஜீவிப்பதற்கு உயிர்த்தெழுதலைப் பெற சிலாக்கியம் பெற்றவர்களாயிருப்பார்கள்.—சங்கீதம் 45:16; யோவான் 10:16; வெளிப்படுத்துதல் 7:9, 14.

22, 23. அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு கொடுக்கப்படும் குறிக்கற்கள் மீது எழுதப்படுகிற பெயர் அடையாள அர்த்தமாக எதைக் குறிக்கிறது, இது என்ன உற்சாகத்தை அளிக்கவேண்டும்?

22 குறிக்கல்லின்மேல் எழுதப்பட்டிருக்கும் புதிய பெயர் என்ன? பெயர் ஒருவரை அடையாளம் காணவும் அவரை மற்றவர்களிலிருந்து வித்தியாசப்படுத்தவும் உதவுகிறது. அபிஷேகஞ்செய்யப்பட்ட இந்தக் கிறிஸ்தவர்கள் ஜெயங்கொண்டவர்களாக தங்களுடைய பூமிக்குரிய வாழ்க்கையை முடித்தப் பிறகு அந்தக் குறிக்கல்லைப் பெறுகிறார்கள். ஆகவே அந்தக் குறிக்கல்லின் மேல் எழுதப்பட்ட பெயர் பரலோகத்தில் அவர்கள் இயேசுவுடன் ஐக்கியப்படும் சிலாக்கியத்துடன் சம்பந்தப்பட்டதாய் இருக்கிறது—பரலோக ராஜ்யத்தைச் சுதந்தரிப்போரால் மட்டுமே முழுமையாக மதித்துணரப்படும் மற்றும் அனுபவிக்கப்படும் அரச சேவையின் மிக நெருங்கிய ஸ்தானமாக அது இருக்கிறது. ஆகையால், அது “அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தை” அல்லது ஸ்தானத்துக்குரிய பட்டப்பெயரைக் குறிக்கும்.—வெளிப்படுத்துதல் 3:12-ஐ ஒப்பிடவும்.

23 ‘ஆவி சபைகளுக்குச் சொல்வதைக் கேட்டு’ அதன்படி செய்வதற்கு யோவான் வகுப்பாருக்கு எப்பேர்ப்பட்ட உந்தும் சக்தியாக இது இருக்கிறது! தங்களுடைய கூட்டாளிகளாகிய திரள் கூட்டத்தார், பூமியில் அவர்களோடுகூட கூட்டுறவை அனுபவிக்கையில், உண்மையாக அவர்களோடு உழைக்கவும் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிப்பதில் அவர்களோடு சேர்ந்து பங்குகொள்ளவும் எவ்வளவாக இது அவர்களை உற்சாகப்படுத்துகிறது!

[அடிக்குறிப்புகள்]

b துணைக்குறிப்புகளடங்கிய புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் அப்போஸ்தலர் 26:10-ஐயும் அடிக்குறிப்பையும் காண்க.

[கேள்விகள்]

[பக்கம் 43-ன் படம்]

புறமத வழிபாடு மிகுதியாயிருந்தது என்பதற்கான இச்சான்றுகள் பெர்லினிலுள்ள பெர்கமு அருங்காட்சியகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது

[பக்கம் 45-ன் படம்]

உடன்படிக்கைப் பெட்டியில் மன்னாவின் ஒரு பகுதி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. ஜெயங்கொள்ளுகிற அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களுக்கு அடையாளப்பூர்வமான மறைவான மன்னா கொடுக்கப்பட்டிருப்பது அவர்கள் அழியாமையை பெற்றுக்கொள்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது

[பக்கம் 45-ன் படம்]

வெண்மையான குறிக்கல் ஆட்டுக்குட்டியானவருடைய கல்யாணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டவர்களுக்காகும்