இயேசு உற்சாகத்தோடு வருகிறார்
அதிகாரம் 4
இயேசு உற்சாகத்தோடு வருகிறார்
1. இப்போது யோவான் யாருக்கு எழுதுகிறார், மற்றும் இன்று யார் அவருடைய செய்தியை மிகுந்த அக்கறையுடையதாகக் கண்டுணர வேண்டும்?
அடுத்து தொடருவது இன்று கடவுளுடைய மக்களின் சபைகளோடு கூட்டுறவுகொள்ளும் எல்லாருக்கும் மிகுந்த அக்கறைக்குரியதாக இருக்க வேண்டும். இங்கே ஒன்றன்பின் ஒன்றாக செய்திகள் தொடர்கின்றன. “குறிக்கப்பட்ட காலம்” நெருங்கிக்கொண்டிருக்கிறபடியால் அவை விசேஷ பொருத்தத்தைக் கொண்டுள்ளன. (வெளிப்படுத்துதல் 1:3, NW) நம்முடைய நித்திய நன்மைக்காக நாம் இந்த அறிவிப்புகளுக்குக் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் பதிவு வாசிக்கிறது: “யோவான் ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும், . . . இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.”—வெளிப்படுத்துதல் 1:4, 5ஆ.
2. (அ) “ஏழு” என்ற அந்த எண் எதைக் குறிக்கிறது? (ஆ) கர்த்தருடைய நாளில், “ஏழு சபைகளுக்கு” எழுதப்பட்ட செய்திகள் யாருக்குப் பொருந்துகின்றன?
2 இங்கே யோவான் “ஏழு சபைகளுக்கு” எழுதுகிறார். பின்னர், தீர்க்கதரிசனத்தில் அவற்றின் பெயர்கள் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. “ஏழு” என்ற அந்த எண், வெளிப்படுத்துதலில் அடிக்கடி மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. இது முழுமையைக் குறிக்கிறது. விசேஷமாக கடவுளோடும் அவருடைய அபிஷேகஞ்செய்யப்பட்ட சபையோடும் சம்பந்தப்பட்ட காரியங்களில் அப்படி இருக்கிறது. கர்த்தருடைய நாளின்போது உலகம் முழுவதும் கடவுளின் மக்களுடைய சபைகளின் எண்ணிக்கை பல பத்தாயிரங்களாக அதிகரித்திருப்பதால், அபிஷேகஞ்செய்யப்பட்ட “ஏழு சபைகளுக்கு” முக்கியமாகச் சொல்லப்பட்டவை இன்றுள்ள கடவுளுடைய மக்கள் அனைவருக்குங்கூட பொருந்துகின்றன என்பதில் நாம் நிச்சயமாக இருக்கலாம். (வெளிப்படுத்துதல் 1:10) ஆம், இந்தப் பூமி மீதெங்கும் இருக்கிற யெகோவாவின் சாட்சிளுடைய எல்லா சபைகளுக்கும் அவற்றோடு கூட்டுறவுகொண்டுள்ள அனைவருக்கும் யோவான் ஒரு முக்கியமான செய்தியைக் கொண்டிருக்கிறார்.
3. (அ) யோவானின் வாழ்த்துதலில், “கிருபையும் சமாதானமும்” எங்கிருந்து வருகின்றன? (ஆ) அப்போஸ்தலன் பவுலுடைய எந்தக் கூற்று யோவானின் வாழ்த்துதலுக்கு ஒத்திருக்கிறது?
3 “கிருபையும் சமாதானமும்”—இவை எவ்வளவு விரும்பத்தக்கவை, குறிப்பாக இவற்றின் மூலகாரணரையும் நாம் அறிய வரும்போது! “அநாதியாய் என்றென்றைக்கும்” இருக்கிற ‘நித்திய ராஜனும்’ ஈடற்ற உன்னத பேரரசருமாக உள்ள யெகோவாவாகிய ‘அவரிடம்’ இருந்தே அதின் தொடக்கத்தை இவை கொண்டிருக்கின்றன. (1 தீமோத்தேயு 1:17; சங்கீதம் 90:2) ‘ஏழு ஆவிகளுங்கூட’ இங்கே உட்பட்டிருக்கின்றன. இந்தப் பதமானது, கடவுளின் கிரியை நடப்பிக்கும் சக்தி அல்லது பரிசுத்த ஆவி முழு நிறைவாக செயல்படுவதைக் குறிக்கிறது. இது, இந்தத் தீர்க்கதரிசனத்துக்குக் கவனம் செலுத்துகிற யாவருக்கும் புரிந்துகொள்ளுதலையும் ஆசீர்வாதத்தையும் கொண்டு வருகிறது. மேலும் இதில் முக்கிய பங்கு வகிப்பவர் “இயேசு கிறிஸ்து,” இவரைப்பற்றி யோவான் பின்னர் எழுதினார்: “கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவரா”யிருந்தார். (யோவான் 1:14) ஆகவே, அப்போஸ்தலன் பவுல் கொரிந்து சபைக்கு எழுதின தன்னுடைய இரண்டாவது நிரூபத்தில் முடிவாகக்கொண்டுள்ள அதே வார்த்தைகளை யோவானின் வாழ்த்துதல் கொண்டிருக்கிறது: “கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக.” (2 கொரிந்தியர் 13:14) இன்று சத்தியத்தை நேசிக்கும் நம் ஒவ்வொருவருக்குங்கூட அந்த வார்த்தைகள் பொருந்தக்கடவது!—சங்கீதம் 119:97.
“உண்மையுள்ள சாட்சி”
4. இயேசு கிறிஸ்துவை யோவான் எப்படித் தொடர்ந்து விவரிக்கிறார், இந்த விவரிப்புப் பதங்கள் ஏன் வெகு பொருத்தமானதாக இருக்கின்றன?
4 யோவான் அடையாளம் கண்டுகொள்கிற பிரகாரம், இப்பிரபஞ்சத்தில் இயேசுவே யெகோவாவுக்கடுத்து மிக அதிக மகிமைபொருந்திய நபராக இருக்கிறார், அவரை ‘உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற் பிறந்தவரும் பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியும்’ என்று விவரிக்கிறார். (வெளிப்படுத்துதல் 1:5அ) வானங்களில் இருக்கிற சந்திரனைப் போன்று, அவர் யெகோவாவின் தேவத்துவத்துக்கு மிகப் பெரிய சாட்சியாக உறுதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளார். (சங்கீதம் 89:37) பலிக்குரிய மரணம்வரையாக இவர் தம்முடைய உத்தமத்தன்மையைக் காத்துக்கொண்ட பிற்பாடு, மனிதவர்க்கத்தினரில் அழியாமையுள்ள ஆவி வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுவதில் முதன்மையானவரானார். (கொலோசெயர் 1:18) இப்போது யெகோவாவின் முன்னிலையில், பூமியின் எல்லா அரசர்களுக்கும் மேலாக உயர்த்தப்பட்டு, “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்” அளிக்கப்பட்டுள்ளார். (மத்தேயு 28:18; சங்கீதம் 89:27; 1 தீமோத்தேயு 6:15) பூமியில் இருக்கிற தேசத்தார் மத்தியில் ஆட்சி செய்வதற்காக 1914-ல் அரசராக பதவியில் அமர்த்தப்பட்டார்.—சங்கீதம் 2:6-9.
5. (அ) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு யோவான் தொடர்ந்து எவ்வாறு போற்றுதலைத் தெரிவிக்கிறார்? (ஆ) இயேசுவின் பரிசாகிய பரிபூரண மனித ஜீவனிலிருந்து யார் நன்மையடைவர், மற்றும் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் எப்படித் தனிச்சிறப்பான ஆசீர்வாதத்தில் பங்கெடுத்துள்ளனர்?
5 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு தொடர்ந்து போற்றுதலைத் தெரிவிப்பவராய் யோவான் இந்த ஆர்வமிகுந்த வார்த்தைகளைச் சொல்கிறார்: “நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை இராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென்.” (வெளிப்படுத்துதல் 1:6) மனிதவர்க்க உலகில், தம்மில் விசுவாசம் வைக்கிற ஆட்கள் பரிபூரண ஜீவனைத் திரும்பவும் அடையும்படியாக, இயேசு தம்முடைய பரிபூரண மனித ஜீவனைக் கொடுத்தார். அன்பான வாசகராகிய நீங்களும் இதில் சேர்ந்து கொள்ளக்கூடும்! (யோவான் 3:16) ஆனால் யோவானைப் போன்று அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு இயேசுவின் மரண பலி தனிச்சிறப்பான ஆசீர்வாதத்துக்கு வழியைத் திறந்து வைத்தது. இயேசுவின் மீட்கும் பலியின் அடிப்படையில் இவர்கள் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறார்கள். இயேசு செய்தது போலவே பூமி வாழ்க்கைக்குரிய எல்லா எதிர்பார்ப்புகளையும் விட்டுவிட்டு, சிறு மந்தையைச் சேர்ந்தவர்கள், உயிர்த்தெழுப்பப்பட்டு, இயேசு கிறிஸ்துவோடு அவருடைய ராஜ்யத்தில் அரசர்களாகவும் ஆசாரியர்களாகவும் சேவிக்கும் அந்த எதிர்பார்ப்புடன் கடவுளுடைய ஆவியினால் பிறப்பிக்கப்பட்டிருக்கின்றனர். (லூக்கா 12:32; ரோமர் 8:18; 1 பேதுரு 2:5; வெளிப்படுத்துதல் 20:6) என்னே ஒரு மகத்தான சிலாக்கியம்! மகிமையும் வல்லமையும் இயேசுவுக்குரியது என்று அவ்வளவு உறுதியாக யோவான் அறிவித்ததில் ஆச்சரியமேதும் இல்லை!
மேகங்களுடனே வருகிறார்
6. (அ) இயேசு ‘மேகங்களுடனே வருவதைக்’ குறித்து யோவான் என்ன அறிவிக்கிறார், மேலும் இயேசு சொன்ன எந்தத் தீர்க்கதரிசனத்தை யோவான் நினைவுபடுத்தியிருந்திருப்பார்? (ஆ) இயேசு எவ்வாறு ‘வருகிறார்,’ மற்றும் பூமியிலே படுந்துயரத்தை யார் அனுபவிப்பார்கள்?
6 அடுத்து, யோவான் பெரு மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறார்: “இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.” (வெளிப்படுத்துதல் 1:7) சந்தேகமில்லாமல், இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு சம்பந்தமாக இயேசு முன்பு சொன்ன தீர்க்கதரிசனம் யோவானுக்கு இங்கே நினைப்பூட்டப்பட்டது. அங்கு இயேசு சொன்னது இதுவே: “அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள் மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.” (மத்தேயு 24:3, 30) இவ்வாறாக, இயேசு தேசங்கள்மீது யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவதற்கு தம்முடைய கவனத்தை திருப்புவதன் மூலம் ‘வருகிறார்.’ இது பூமியில் பெரும் மாற்றங்கள் உண்டாவதில் விளைவடையும். மேலும் “பூமியின் கோத்திரத்தாரெல்லாரும்” இயேசுவின் ராஜரீகத்தின் உண்மைத்தன்மையை அசட்டை செய்திருப்பதால் “சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரக கோபத்தை” அவர்கள் உண்மையிலேயே அனுபவிப்பார்கள்.—வெளிப்படுத்துதல் 19:11-21; சங்கீதம் 2:2, 3, 8, 9.
7. கீழ்ப்படியாதவர்கள் உட்பட “கண்கள் யாவும்” எப்படி இயேசுவைக் “காணும்”?
7 இயேசு தம்முடைய சீஷர்களோடு இருந்த அந்தக் கடைசி சாயங்கால வேளையின்போது, அவர்களை நோக்கி: “இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் [ஒருபோதும், NW] காணாது,” என்றார். (யோவான் 14:19) அப்படியானால், “கண்கள் யாவும் அவரைக் காணு”வதெப்படி? இயேசுவின் எதிரிகள் மாம்ச கண்களால் அவரைக் காண்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால் இயேசு பரலோகத்துக்கு ஏறிச்சென்ற பின்னர், இப்பொழுது “சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகி”றார் என்றும், “ஒருவரும் கண்டிராதவரும், அல்லது காணக்கூடாதவருமாயிருக்கிறார்,” என்றும் அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (1 தீமோத்தேயு 6:16) தெளிவாகவே, கடவுளுடைய காணக்கூடாத தன்மைகளை அவருடைய சிருஷ்டிப்புகளின் மூலம் நம்மால் எப்படி காண அல்லது பகுத்தறிய முடிகிறதோ அதுபோலவே “காண்பது” என்பதை யோவான் “பகுத்துணர்ந்துக்கொள்”ளும் கருத்தில் அர்த்தப்படுத்தினார். (ரோமர் 1:20) இயேசு “மேகங்களுடனே வரு”வது என்பது சூரியன் மேகங்களுக்கு பின்னால் இருக்கும்போது காணக்கூடாததாக இருப்பதைப் போன்று அவரும் சாதாரண கண்களுக்கு காணக்கூடாதவராக இருப்பார். பகல் நேரத்தில், சூரியன் மேகங்களால் மறைக்கப்பட்டிருந்தாலுங்கூட நம்மைச் சுற்றிலும் வெளிச்சம் இருப்பதால், சூரியன் அங்கே இருக்கிறது என்பதை நாம் அறிந்தவர்களாக இருக்கிறோம். அதேவிதமாகவே, கர்த்தராகிய இயேசு காணக்கூடாதவராக இருக்கிறபோதிலும், ‘அவரைப்பற்றிய நற்செய்திக்கு கீழ்ப்படியாதவர்களின் மேல் அவர் பழிவாங்குதலை கொண்டு வரும்போது ஜுவாலித்து எரிகிற அக்கினியைப்’ போன்று வெளிப்படுவார். “அவரைக் காணும்”படியாக இவர்களுங்கூட கட்டாயப்படுத்தப்படுவார்கள்.—2 தெசலோனிக்கேயர் 1:6-8, 10; 2:8.
8. (அ) பொ.ச. 33-ல் ‘அவரைக் குத்தினவர்கள்’ யார், இன்று அப்படிப்பட்டவர்கள் யார்? (ஆ) இயேசு இப்போது பூமியிலே இல்லாததால், ஜனங்கள் எப்படி ‘அவரைக் குத்தக்கூடும்’?
8 “அவரைக் குத்தினவர்க”ளாலும் இயேசு ‘காணப்படுவார்.’ இவர்கள் யாராக இருக்க முடியும்? பொ.ச. 33-ல் இயேசு கொல்லப்பட்டபோது ரோம படை வீரர்கள் அவரை சொல்லர்த்தமாக உருவக் குத்திப்போட்டார்கள். இந்தக் கொலைக் குற்றத்துக்கு யூதர்ளும் பங்காளிகளாயிருந்தனர், ஏனென்றால் பெந்தெகொஸ்தே நாளின்போது இவர்களில் சிலரிடம் பேதுரு சொன்னார்: “நீங்கள் சிலுவையில் [கழுமரத்தில், NW] அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார்.” (அப்போஸ்தலர் 2:5-11, 36; ஒப்பிடுக: சகரியா 12:10; யோவான் 19:37.) அந்த ரோமர்களும் யூதர்களும் மரித்து இப்போது ஏறக்குறைய 2,000 ஆண்டுகள் ஆகின்றன. எனவே இன்று அவரைக் ‘குத்துகிறவர்கள்’ இயேசுவை கழுமரத்தில் அறைந்தபோது காண்பித்த அதே வெறுப்பு மனப்பான்மையை வெளிக்காட்டுகிற தேசங்களையும் ஜனங்களையுமே பிரதிநிதித்துவம் செய்யவேண்டும். இயேசு இப்போது பூமியில் இல்லை. ஆனால், இயேசுவுக்குச் சாட்சிபகரும் யெகோவாவின் சாட்சிகளை விறுவிறுப்பாக செயல்பட்டு துன்புறுத்தும்போதோ செயல்படாமல் அதுபோன்ற செயல்களுக்கு ஆதரவு கொடுக்கும்போதோ, இவ்விதமான எதிர்ப்பாளர்கள் இயேசுவைதானேயும் “குத்து”வதைப்போன்று இருக்கிறது.—மத்தேயு 25:33, 41-46.
“அல்பாவும் ஓமெகாவும்”
9. (அ) இப்போது யார் பேசுகிறார், அவர் வெளிப்படுத்துதலில் எத்தனை முறைகள் அப்படி பேசியிருக்கிறார்? (ஆ) யெகோவா தம்மை “அல்பாவும் ஓமெகாவும்” மற்றும் ‘சர்வவல்லமையுள்ளவர்’ என்றழைப்பதானது எதை அர்த்தப்படுத்துகிறது?
9 இப்பொழுதோ, ஆச்சரியங்களில் ஆச்சரியம்! ஈடற்ற உன்னத பேரரசராகிய யெகோவாதாமே பேசுகிறார். இவர் நம்முடைய மகத்தான போதகராகவும் வெளிப்படுத்துதலின் மூலகாரணராகவும் இருப்பதால், வெளிப்படுத்தப்பட இருக்கும் தரிசனங்களுக்கு அறிமுகமாக இது இருப்பது எவ்வளவு பொருத்தமானதாக இருக்கிறது! (ஏசாயா 30:20) நம்முடைய தேவன் இவ்வாறு அறிவிக்கிறார்: ‘இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள நான் அல்பாவும் ஓமெகாவுமாயிருக்கிறேன்.’ (வெளிப்படுத்துதல் 1:8) வெளிப்படுத்துதலில் யெகோவாதாமே பரலோகத்திலிருந்து பேசியிருக்கிற மூன்று முறைகளில் இதுவே முதல் முறையாக இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:5-8; 22:12-15 வசனங்களையும் காண்க.) கிரேக்க மொழி எழுத்துக்களில் அல்பாவும் ஓமெகாவும், முதல் மற்றும் கடைசி எழுத்துக்கள் என்று முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் விரைவில் தெரிய வந்திருப்பார்கள். அந்த இரண்டு எழுத்துக்களைக்கொண்டு யெகோவா தம்மைத்தாமே அழைத்துக்கொள்வதானது அவருக்கு முந்தி சர்வவல்லமையுள்ள தேவன் இருந்ததில்லை, அவருக்கு பின்பும் இருப்பதில்லை என்பதை வலியுறுத்துவதாயிருக்கிறது. தேவத்துவம் சம்பந்தப்பட்ட விவாதத்தை, எல்லா நித்தியத்துக்கும் ஒரு வெற்றிகரமான முடிவுக்கு அவர் கொண்டு வருவார். தம்முடைய அனைத்துப் படைப்பின் மேலும் அவர் மட்டுமே உன்னத பேரரசராக, சர்வவல்லமையுள்ள கடவுளாக என்றென்றுமாக நியாயநிரூபணம் செய்யப்படுவார்.—ஒப்பிடுக: ஏசாயா 46:10; 55:10, 11.
10. (அ) அடுத்ததாக யோவான் தன்னை எவ்வாறு விவரிக்கிறார், அவர் எங்கு சிறையிலிடப்பட்டிருந்தார்? (ஆ) யோவானால் எழுதப்பட்ட சுருள் சபைகளுக்கு யாருடைய ஒத்துழைப்புடன் அனுப்பப்பட்டிருக்க வேண்டும்? (இ) ஆவிக்குரிய உணவு இன்று அவ்வப்போது எவ்வாறு கொடுக்கப்படுகிறது?
10 காரியங்களின் விளைவை யெகோவா வழிநடத்துவார் என்பதில் நம்பிக்கையுள்ளவராக, யோவான் தன்னுடைய உடன் அடிமைகளுக்கு இவ்வாறு சொல்கிறார்: “உங்கள் சகோதரனும், இயேசு கிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன் பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவ வசனத்தினிமித்தமும் [கடவுளைக் குறித்து பேசியதினிமித்தமும், NW] இயேசு கிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன்.” (வெளிப்படுத்துதல் 1:9) நற்செய்தியினிமித்தமாக பத்முவிலே ஒரு கைதியாக, தன்னுடைய சகோதரர்களுடன் உபத்திரவங்களை சகித்துக்கொண்டு வரப்போகிற ராஜ்யத்தில் பங்குக்கொள்வதற்கு உறுதியான நம்பிக்கையுடன், வயோதிபராகிய யோவான் வெளிப்படுத்துதலில் உள்ள தரிசனங்களின் முதல் தரிசனத்தை இப்போது காண்கிறார். அந்தத் தரிசனங்களின் நிறைவேற்றத்தைக் காண்பதில் யோவான் வகுப்பார் இன்று எப்படி ஊக்கமூட்டப்படுகின்றனறோ அதேபோல இவரும் சந்தேகமில்லாமல் இந்தத் தரிசனங்களிலிருந்து அதிகமாக உற்சாகப்படுத்தப்பட்டார். அப்போது யோவான் சிறையிருப்பிலிருந்ததால், வெளிப்படுத்துதல் சுருளை எவ்வாறு சபைகளுக்கு அனுப்பினார் என்பது நமக்குத் தெரியாது. (வெளிப்படுத்துதல் 1:11; 22:18, 19) யெகோவாவின் தூதர்கள் இன்று சத்தியத்திற்காக பசிதாகங்கொண்ட சகோதரர்களுக்கு ஏற்ற வேளையிலே ஆவிக்குரிய ஆகாரம் கிடைக்கும்படி செய்வதற்காக தடையுத்தரவுகளின் கீழும் மற்ற கட்டுப்பாடுகளின் கீழும் சேவை செய்யும் உண்மையுள்ள யெகோவாவின் சாட்சிகளைத் தேவதூதர்கள் எப்படி அவ்வப்போது பாதுகாத்தனரோ அப்படியே அவர்கள் அது அனுப்பப்படுவதற்கும் ஒத்துழைப்பு கொடுத்திருப்பார்கள்.—சங்கீதம் 34:6, 7.
11. யோவானால் போற்றுதல் தெரிவிக்கப்பட்ட அதேவிதமான என்ன சிலாக்கியம் இன்று யோவான் வகுப்பாருக்கு பெரிய பொக்கிஷமாயிருக்கிறது?
11 யெகோவா, சபைகளுக்கு செய்தி அறிவிக்க யோவானைத் தம்முடைய வழிமூலமாக பயன்படுத்திக்கொண்டிருந்த சிலாக்கியத்துக்காக அவர் எவ்வளவு ஆழ்ந்த போற்றுதலை காண்பித்திருக்க வேண்டும்! அதே விதமாகவே, யோவான் வகுப்பார், இன்று கடவுளுடைய வீட்டாருக்கு ‘ஏற்ற வேளையிலே ஆவிக்குரிய போஜனங்கொடுப்பதை’ அதிக போற்றுதலோடு பொக்கிஷமாக இந்தச் சிலாக்கியத்தை கருதுகின்றனர். (மத்தேயு 24:45) மகிமையான இலக்காகிய நித்திய ஜீவனை அடைவதற்காக இந்த ஆவிக்குரிய ஏற்பாட்டிலிருந்து பலப்படுகிற ஆட்களில் நீங்களும் ஒருவராக இருப்பீர்களாக!—நீதிமொழிகள் 3:13-18; யோவான் 17:3.
[கேள்விகள்]
[பக்கம் 21-ன் பெட்டி]
கடினமான காலங்களில் ஆவிக்குரிய உணவைப் பெறுதல்
அதிகமான துன்புறுத்தல்களையும் கஷ்டங்களையும் யெகோவாவின் சாட்சிகள் அனுபவித்திருக்கிற இந்தக் கடைசி நாட்களில், விசுவாசத்தில் உறுதியுடன் நிலைத்திருப்பதற்கு ஆவிக்குரிய உணவை பெற்றுக்கொள்வது அவர்களுக்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது. யெகோவா தம்முடைய வல்லமையை சில சமயங்களில் குறிப்பிடத்தக்க விதத்தில் காண்பித்திருப்பதன் காரணமாக பெரும்பாலான சமயங்களில் போதுமான அளவு உணவு அளிக்கப்பட்டிருக்கிறது.
உதாரணமாக, ஹிட்லரின் கீழ், ஜெர்மனியில், கொடூரமான நாசி அதிகாரிகளால் அதிகாரப்பூர்வமாக தடைசெய்யப்பட்டிருந்த காவற்கோபுர பத்திரிகைகளை சாட்சிகள் நகல்கள் எடுத்து பிரதிகளை விநியோகித்தனர். ஹாம்பர்க்கில் அதுபோன்ற நகல் எடுப்பு நடைபெற்ற ஒரு வீட்டை ஜெர்மன் இரகசிய காவல் படையினர் சோதனைச் செய்தனர். அந்த வீடு சிறியதாக இருந்தது. மேலும் எதையும் பாதுகாப்பாக மறைத்து வைக்க இடமே இல்லை. தட்டெழுத்து இயந்திரம் ஒரு அலமாரியில் வைக்கப்பட்டிருந்தது. நகல் எடுக்கும் இந்தப் பெரிய இயந்திரம் அடித்தளத்திலிருந்த ஒரு உருளைக்கிழங்கு தொட்டியில் வைக்கப்பட்டிருந்தது. மேலுமாக தொட்டிக்கு பின்புறத்தில், பயணப்பெட்டி நிறைய பத்திரிகைகள் வைக்கப்பட்டிருந்தன! கண்டுபிடிப்பு தவிர்க்கமுடியாததாக காணப்பட்டது. ஆனால் சம்பவித்தது என்ன? அலமாரியைத் திறந்த அதிகாரி தட்டெழுத்து இயந்திரத்தைக் காணாத விதத்தில் அலமாரியை திறந்தார். அடித்தளத்தைக் குறித்ததில், வீட்டுக்காரர் இவ்வாறு அறிக்கையிடுகிறார்: “பின்புறத்தில் பயணப்பெட்டி நிறைய காவற்கோபுர பத்திரிகைகள் வைக்கப்பட்டு தொட்டி நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு நேராக மூன்று அதிகாரிகள் அறையின் மத்தியில் நின்றுகொண்டிருந்தனர். ஆனால் அவர்களில் ஒருவருமே அதை கவனித்ததாக தெரியவில்லை; இது அவர்கள் குருடர்களாக்கப்பட்டதைப் போன்றிருந்தது.” இந்தக் குறிப்பிடத்தக்க தெய்வச் செயலுக்கு நன்றி, அந்த வீட்டார் கடினமான மற்றும் ஆபத்தான காலங்களிலும் தொடர்ந்து ஆவிக்குரிய உணவைக் கொடுக்க முடிந்தது.
1960-களில், நைஜீரியாவுக்கும் பிரிந்துபோன மாகாணமான பியஃப்ராவுக்கும் இடையே உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. பியஃப்ரா, நைஜீரிய பிராந்தியத்தால் முழுவதும் சூழப்பட்டிருந்ததால், அதற்கும் வெளி உலகத்திற்கும் இடையே இருந்த ஒரே தொடர்பு, நீண்ட குறுகலான விமானப்பாதை ஆகும். இது பியஃப்ராவிலிருந்த சாட்சிகள் அவர்களுடைய ஆவிக்குரிய உணவு கிடைப்பதிலிருந்து துண்டிக்கப்படக்கூடிய ஆபத்திலிருந்தார்கள் என்பதைக் குறித்தது. பின்னர், 1968-ன் தொடக்கத்திலே, பியஃப்ராவின் அதிகாரிகள் அவர்களுடைய அரசு அலுவலர்களில் ஒருவரை ஐரோப்பாவில் ஒரு முக்கியமான பதவிக்கொடுத்து அமர்த்தினர். மற்றொருவரை பியஃப்ராவின் விமானப் பாதையில் அமர்த்தினர். இந்த இருவரும் யெகோவாவின் சாட்சிகளாயிருந்தனர். மேலும் இப்போது பியஃப்ராவிற்கும் வெளியுலகிற்குமிடையே இருந்த ஒரே இணைப்பின் இரு முனைகளிலும் இவர்கள் இருந்தனர். யெகோவாவே இந்த ஏற்பாட்டைக் கட்டாயமாக செய்திருப்பார் என்று இருவரும் உணர்ந்தனர். ஆகவே பியஃப்ராவுக்கு ஆவிக்குரிய உணவை அனுப்புகிற வேலைக்கு, கவனமாக கையாளப்படவேண்டிய மற்றும் ஆபத்தான வேலைக்கு, அவர்கள் மனமுவந்து தங்களை அளித்தனர். மேலும் யுத்த காலத்தின்போது இதை அவர்களால் செய்ய முடிந்தது. அவர்களில் ஒருவர் இவ்வாறு கூறினார்: “இந்த ஏற்பாடு மனிதர்களால் திட்டமிடப்பட்டிருக்க முடியாத ஒரு ஏற்பாடாகும்.”
[பக்கம் 19-ன் அட்டைப்படம்]
வெளிப்படுத்துதலில் உள்ள அடையாள எண்கள்
எண் அடையாள அர்த்தம்
2 ஒரு காரியத்தைத் திடமாக உறுதிப்படுத்துவதைக் குறிக்கிறது.
(வெளிப்படுத்துதல் 11:3, 4; உபாகமம் 17:6-ஐ ஒப்பிடுக.)
3 அழுத்தத்தைக் குறிக்கிறது. மேலும் உச்ச அளவையும் காட்டுகிறது.
(வெளிப்படுத்துதல் 4:8; 8:13; 16:13, 19)
4 செவ்வொழுங்கில் எல்லாவற்றையும் உள்ளடக்கும் தன்மை அல்லது சர்வ வியாபகத்தைக் குறிக்கிறது.
(வெளிப்படுத்துதல் 4:6; 7:1, 2; 9:14; 20:8; 21:16)
6 அபூரணத்தை, சாதாரணமாக இல்லாததை, கொடியதைக் குறிக்கிறது.
(வெளிப்படுத்துதல் 13:18; 2 சாமுவேல் 21:20-ஐ ஒப்பிடுக.)
7 யெகோவாவின் நோக்கத்திற்கோ சாத்தானுடையதற்கோ தெய்வீக முறையில் தீர்மானிக்கப்பட்ட முழுமைத்தன்மையைக் குறிக்கிறது.
(வெளிப்படுத்துதல் 1:4, 12, 16; 4:5; 5:1, 6; 10:3, 4; 12:3)
10 பூமி சம்பந்தப்பட்ட காரியங்களை பொருத்ததில் உலக ரீதியிலான நிறைவை அல்லது முழுமைத்தன்மையைக் குறிக்கிறது.
(வெளிப்படுத்துதல் 2:10; 12:3; 13:1; 17:3, 12, 16)
12 பரலோகங்களிலோ பூமியிலோ தெய்வீக முறையில் நிர்ணயிக்கப்பட்ட அமைப்பைக் குறிக்கிறது.
(வெளிப்படுத்துதல் 7:5-8; 12:1; 21:12, 16; 22:2)
24 யெகோவாவின் அபரிமிதமான (இரட்டிப்பான) அமைப்புச் சார்ந்த ஏற்பாட்டைக் குறிக்கிறது.
வெளிப்படுத்துதலில் குறிப்பிடப்பட்டுள்ள சில எண்கள் சொல்லர்த்தமாக விளங்கிக்கொள்ளப்பட வேண்டும். எப்போதும், சூழமைவு இதைத் தீர்மானிக்க உதவும். (வெளிப்படுத்துதல் 7:4, 9; 11:2, 3; 12:6, 14; 17:3, 9-11; 20:3-5-ஐக் காண்க.)