Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

இரண்டாம் ஆபத்து—குதிரைச்சேனைகளாகிய இராணுவங்கள்

இரண்டாம் ஆபத்து—குதிரைச்சேனைகளாகிய இராணுவங்கள்

அதிகாரம் 23

இரண்டாம் ஆபத்து—குதிரைச்சேனைகளாகிய இராணுவங்கள்

1. வெட்டுக்கிளிகளை முற்றிலும் அழித்துப்போட குருவர்க்கத்தினர் முயற்சிசெய்தபோதிலும், என்ன நடந்திருக்கிறது, இன்னும் வர இருக்கும் இரண்டு ஆபத்துகள் எதை காட்டுகின்றன?

 அ ந்த அடையாளப்பூர்வமான வெட்டுக்கிளிகள் 1919 முதற்கொண்டு கிறிஸ்தவமண்டலத்தை தாக்கினது குருவர்க்கத்தினரை சங்கட நிலைக்குள்ளாக வைத்திருக்கிறது. இவர்கள் இந்த வெட்டுக்கிளிகளை முற்றிலும் அழித்துப்போட முயற்சிசெய்திருக்கின்றனர், ஆனால் இவையோ எக்காலத்திலும் இருந்ததைவிட இன்னும் பலமுள்ளவையாகி வந்திருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 9:7) இதோடு முடிவடைந்துவிடவில்லை! யோவான் எழுதுகிறார்: “முதலாம் ஆபத்து கடந்துபோயிற்று; இவைகளுக்குப்பின்பு இன்னும் இரண்டு ஆபத்துகள், இதோ, வருகிறது.” (வெளிப்படுத்துதல் 9:12) கிறிஸ்தவமண்டலத்துக்கு இன்னும் கொடிய வாதைகள் வரக்காத்திருக்கின்றன.

2. (அ) ஆறாம் தூதன் எக்காளத்தை ஊதுகையில் என்ன நடக்கிறது? (ஆ) “பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தந்தோன்றி”னது எதை குறிக்கிறது? (இ) நான்கு தூதர்கள் ஏன் குறிப்பிடப்பட்டிருக்கிறார்கள்?

2 இந்த இரண்டாம் ஆபத்து எங்கிருந்து வருகிறது? யோவான் எழுதுகிறார்: “ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது தேவனுக்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தந்தோன்றி, எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி: ஐபிராத்தென்னும்பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன்.” (வெளிப்படுத்துதல் 9:13, 14) பொற்பீடத்தின் கொம்புகளிலிருந்து வரும் சத்தத்திற்கு பிரதிபலிப்பாக இந்தத் தூதர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். இது பொற் தூபவர்க்க பீடமாகும்; இதற்கு முன்பு இரண்டு முறைகள் இந்தப் பலிபீடத்திலிருந்த பொற்கலசங்களிலுள்ள தூபவர்க்கமானது பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடு தொடர்புபடுத்தி பேசப்பட்டிருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 5:8; 8:3, 4) ஆகவே இந்த ஒரு சத்தமானது பூமியிலுள்ள பரிசுத்தவான்களுடைய ஒருங்கிணைந்த ஜெபங்களை குறிக்கிறது. யெகோவாவின் “தூதுவர்க”ளாக கூடுதலான பலத்தோடு ஊழியம் செய்ய விடுவிக்கப்படும்படி அவர்கள் வேண்டுதல் செய்கிறார்கள். இதுவே கிரேக்க வார்த்தையிலிருந்து இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ள “தூதர்கள்” என்ற வார்த்தையின் அடிப்படைப் பொருளாகும். ஏன் நான்கு தூதர்கள் அங்கு இருக்கின்றனர்? இந்த அடையாள எண், அவர்கள் பூமியை முழுமையுமாக உள்ளடக்கும் அளவுக்கு ஒழுங்கமைக்கப்பட்டிருப்பார்கள் என்பதை குறிப்பதாக தோன்றுகிறது.வெளிப்படுத்துதல் 7:1; 20:8.

3. “ஐபிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே” நான்கு தூதர்கள் எப்படி கட்டப்பட்டிருந்தனர்?

3 அந்தத் தூதர்கள் எப்படி ‘ஐபிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருந்தனர்’? பூர்வ காலத்தில் ஐப்பிராத்து நதியானது யெகோவா ஆபிரகாமுக்கு வாக்குக்கொடுத்த இடத்தின் வடகிழக்கு எல்லையாக இருந்தது. (ஆதியாகமம் 15:18; உபாகமம் 11:24) தெளிவாகவே, இந்தத் தூதர்கள் தங்களுக்கு கடவுள்-கொடுத்த இடத்தில் அல்லது செயல்நடவடிக்கையின் பூமிப் பகுதியின் எல்லையில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தார்கள். யெகோவா அவர்களுக்கு ஆயத்தஞ்செய்திருந்த சேவையில் முழுமையாக உட்பிரவேசிப்பதிலிருந்து பிடித்துவைக்கப்பட்டிருந்தார்கள். ஐபிராத்து நதி பாபிலோன் நகரத்தோடும் முனைப்பான விதத்தில் தொடர்புபடுத்தப்பட்டிருந்தது, பொ.ச.மு. 607-ல் எருசலேம் வீழ்ந்தபோது மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலர்கள் அங்கு 70 ஆண்டுகள் அடிமைத்தனத்தில் இருந்தார்கள், ‘ஐபிராத்து என்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருந்தார்கள்.’ (சங்கீதம் 137:1) 1919-வது ஆண்டில் ஆவிக்குரிய இஸ்ரவேலர்கள் அப்படிப்பட்ட ஒரு கட்டுப்பாட்டுக்குள் கட்டுண்டவர்களாக, விசாரத்தோடு, யெகோவா தங்களை வழிநடத்தும்படி வேண்டிக்கொண்டார்கள்.

4. நான்கு தூதர்களுக்கு என்ன கட்டளை கொடுக்கப்படுகிறது, இது எப்படி நிறைவேற்றப்பட்டிருக்கிறது?

4 சந்தோஷகரமாகவே, யோவான் இப்படியாக அறிக்கையிடுகிறார்: “அப்பொழுது மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு ஒருமணிநேரத்திற்கும் ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள்.” (வெளிப்படுத்துதல் 9:15) யெகோவா துல்லியமான நேரக்காப்பாளர். அவர் காலஅட்டவணையைக் கொண்டவராய் அதற்கேற்ப செயல்பட்டு வருகிறார். ஆகவே இந்தத் தூதுவர்கள் தாங்கள் செய்வதற்கிருந்ததை நிறைவேற்ற, குறித்த காலத்தில் சரியான நேரத்தில் விடுவிக்கப்படுகிறார்கள். அடிமைத்தனத்திலிருந்து 1919-ல் விடுவிக்கப்பட்டவர்களாய் செயல்பட ஆயத்தமாயிருந்த அவர்களுடைய மகிழ்ச்சியை கற்பனை செய்துபாருங்கள்! அவர்கள் வாதிப்பதற்கு மட்டுமல்ல, ஆனால் இறுதியில் ‘மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கும்’ கட்டளையிடப்பட்டிருந்தார்கள். இது முதல் நான்கு எக்காள சத்தங்களினால் வந்த வாதைகளோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. இவை பூமி, சமுத்திரம் சமுத்திரத்திலிருந்த சிருஷ்டிகள், ஆறுகள் மற்றும் நீரூற்றுகள், ஆகாய ஒளி மூலங்கள் ஆகியவற்றின் மூன்றிலொரு பங்கை ஆபத்திற்குள்ளாக்கின. (வெளிப்படுத்துதல் 8:7-12) இந்த நான்கு தூதர்கள் இன்னும் அதிகத்தை செய்கிறார்கள். அவர்கள் “கொல்லு”கிறார்கள், ஆவிக்குரிய ரீதியில் கிறிஸ்தவமண்டலத்தின் மரித்த நிலையை முழுவதும் அம்பலப்படுத்துகிறார்கள். 1922 முதற்கொண்டும் தற்காலத்திலும் தொடர்ந்து வரும் எக்காள சத்தமிடப்பட்ட தீர்ப்புகள் இதை நிறைவேற்றியிருக்கின்றன.

5. கிறிஸ்தவமண்டலத்தை குறித்ததில், 1927-ல் ஆறாம் எக்காள சத்தத்தின் தொனியானது எப்படி எதிரொலித்தது?

5 பரலோகத்திலுள்ள தூதன் சற்று முன்பே ஆறாவது எக்காளத்தை ஊதினான் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். இதற்கு பிரதிபலித்து, பைபிள் மாணாக்கர்கள் ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்திவரும் சர்வதேச மாநாடுகளில் ஆறாவது மாநாடானது கனடா, ஒன்டேரியோ, டோரான்டோவில் நடைபெற்றது. அங்கு, ஜூலை 24, 1927, ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற நிகழ்ச்சிநிரலானது சங்கிலித்தொடர்பான 53 வானொலி நிலையங்களின் மூலம் ஒலிபரப்பப்பட்டது, இதுவே அக்காலத்துக்கு ஒலிபரப்பு செய்யப்பட்ட மிகப்பரந்த ஒலிபரப்பு இணைப்பாகும். பேசப்பட்ட செய்தியானது, அநேக லட்சக்கணக்கான கேட்போரை எட்டினது. முதலில், ஓர் ஊக்கமிக்க தீர்மானம், ஆவிக்குரிய ரீதியில் மரித்த நிலையிலுள்ளதாக கிறிஸ்தவமண்டலத்தை அம்பலப்படுத்தி, இந்த அழைப்பை விடுத்தது: “குழப்பகரமான இந்தக் காலத்திலே, ‘கிறிஸ்தவமண்டலத்தை’ அல்லது ‘வேரூன்றியிருந்த கிறிஸ்தவத்தை’ ஜனங்கள் ஒரேமுறையாக புறக்கணித்து, அதை அறவேவிட்டு திரும்பிவர கடவுளாகிய யெகோவா அழைக்கிறார், மேலும் அதிலிருந்து முற்றிலுமாக வெளியேறவும் அவர் அழைக்கிறார் . . . ; ஜனங்கள் மனப்பூர்வமான பக்தியையும் பற்றுறுதியையும் கடவுளாகிய யெகோவாவுக்கும் அவருடைய ராஜாவுக்கும், ராஜ்யத்துக்கும் முழுமையாக கொடுப்பார்களாக.” “ஜனங்களுக்கு சுயாதீனம்” என்றத் தலைப்பில் இதைத் தொடர்ந்து வந்தப் பொது பேச்சு இருந்தது. J. F. ரதர்ஃபர்டு எப்போதும் கொடுப்பதுபோல உயிர்ப்பூட்டும் பாணியிலே இப்பேச்சை அளித்தார், இந்தப் பேச்சானது யோவான் அடுத்து தன் காட்சியில் காணும் ‘அக்கினிக்கும் புகைக்கும் கந்தகத்துக்கும்’ ஒப்பானதாக இருந்தது.

6. யோவான் அடுத்து காணும் குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களை எப்படி விவரிக்கிறார்?

6 “குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களின் தொகை இருபது கோடியாயிருந்தது [இரண்டு மிரியடுகளாகிய மிரியடுகளாக இருந்தது, NW]; அவைகளின் தொகையைச் சொல்லக்கேட்டேன். குதிரைகளையும் அவைகளின் மேல் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்டவிதமாவது; அவர்கள் அக்கினிநிறமும் நீலநிறமும் கந்தக நிறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன. அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொருபங்கு கொல்லப்பட்டார்கள்.”வெளிப்படுத்துதல் 9:16-18.

7, 8. (அ) யார் காட்டும் வழிநடத்துதலின்கீழ் அந்தக் குதிரைச்சேனையானது இடிமுழக்கமிடுகிறது? (ஆ) எந்த முறைகளில் அதற்கு முன்பு வந்த வெட்டுக்கிளிகளோடு குதிரைச்சேனையானது ஒத்திருக்கிறது?

7 தெளிவாகவே, இந்தக் குதிரைச்சேனை, அந்த நான்கு தூதர்கள் காட்டும் வழிநடத்துதலின்கீழ் இடிமுழக்கமிடுகிறது. என்னே ஓர் அச்சந்தரும் காட்சி! இப்படிப்பட்ட குதிரைச்சேனையானது உங்களை நோக்கித் தாக்க வருகிறதென்றால், உங்களுடைய பிரதிபலிப்பு என்னவாக இருக்கும் என்பதை கற்பனை செய்துபாருங்கள்! அதனுடைய தோற்றந்தானே உங்களுடைய மனதிற்குள் பீதியைக் கிளப்பிவிடும். இந்தக் குதிரைச்சேனைகளுக்கு முன்வந்த வெட்டுக்கிளிகளோடு எப்படி இது ஒத்திருக்கிறது என்பதை கவனித்தீர்களா? இந்த வெட்டுக்கிளிகள் குதிரைகளைப் போல இருந்தன; சேனையில் குதிரைகள் இருக்கின்றன. ஆகவே, இவ்விரண்டுமே தேவராஜ்ய யுத்தத்தில் ஈடுபட்டிருக்கின்றன. (நீதிமொழிகள் 21:31) வெட்டுக்கிளிகளுடைய பற்கள் சிங்கங்களின் பற்களைப்போலிருந்தன; சேனையிலுள்ள குதிரைகளின் தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன. எனவே, இவ்விரண்டும் அவற்றின் தலைவரும், ஆணை அதிகாரியும், முன்மாதிரியுமாயிருக்கிற தைரியங்கொண்ட யூதா கோத்திரத்து சிங்கத்தோடு இணைத்துப் பேசப்படுகின்றன.வெளிப்படுத்துதல் 5:5; நீதிமொழிகள் 28:1.

8 யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பு வேலையில் வெட்டுக்கிளிகளும் குதிரைச்சேனைகளும் பங்குக்கொள்கின்றன. புகையிலிருந்து புறப்பட்டுவந்த வெட்டுக்கிளிகள் கிறிஸ்தவமண்டலத்துக்கு ஆபத்தையும் அழிவுக்குரிய அக்கினியையும் முன்குறித்தன; குதிரைகளுடைய வாயிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்படுகின்றன. வெட்டுக்கிளிகள் இருப்பு மார்க்கவசங்களை உடையவையாயிருந்தன, இவை நீதியின் சார்பாக அவற்றின் மனங்கள் உறுதியான பக்திகொண்டு காக்கப்பட்டிருப்பதைக் குறித்துக்காட்டின; குதிரைச்சேனை சிவப்புநிறமும் நீலநிறமும் மஞ்சள்நிறமுமான மார்க்கவசங்களை அணிந்துள்ளன, குதிரைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்டு வரும் ஆபத்தான நியாயத்தீர்ப்பு செய்திகளின் அக்கினியையும் புகையையும் கந்தகத்தையும் பிரதிபலிக்கின்றன. (ஒப்பிடவும்: ஆதியாகமம் 19:24, 28-ஐயும் லூக்கா 17:29, 30.) வாதிப்பதற்கு வெட்டுக்கிளிகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களை உடையவைகளாயிருந்தன; குதிரைகளுடைய வால்கள் கொல்லுவதற்கு பாம்புகளுக்கு ஒப்பானவையாயிருந்தன! வெட்டுக்கிளிகள் துவங்கினதை, இன்னும் அதிக தீவிரமாக முற்றுப்பெறும் வரை குதிரைசேனைகள் பின்தொடர வேண்டும் என்று தோன்றுகிறது.

9. குதிரைச்சேனையானது எதை அடையாளப்படுத்துகிறது?

9 ஆகவே, இந்தக் குதிரைச்சேனையானது எதை அடையாளப்படுத்துகிறது? கிறிஸ்தவமண்டலத்துக்கு எதிராக ‘கொட்டி சேதப்படுத்தும்’ அதிகாரத்தோடு யெகோவாவுடைய தெய்வீக கோபாக்கினையாகிய நியாயத்தீர்ப்பை எக்காளம் போன்று பிரகடனப்படுத்த அபிஷேகம் செய்யப்பட்ட யோவான் வகுப்பார் தொடங்கினதுபோல, உயிருடன் வாழும் அதே தொகுதியானது ‘கொல்’லுவதற்குப்’ பயன்படுத்தப்படுவதை நாம் எதிர்பார்க்கலாம், அதாவது, கிறிஸ்தவமண்டலமும் அதனுடைய குருவர்க்கமும் ஆவிக்குரிய ரீதியில் முற்றிலும் மரித்த நிலையிலிருக்கிறது என்பதையும் யெகோவாவால் புறக்கணிக்கப்பட்டு நித்திய அழிவாகிய “அக்கினி சூளை”யில் போடப்பட தயாராயிருக்கிறது என்பதையும் தெரியச்செய்வதாக இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 9:5, 10; 18:2, 8; மத்தேயு 13:41-43) என்றாலும், அவளுடைய அழிவுக்கு முன்பு யோவான் வகுப்பார் கிறிஸ்தவமண்டலத்தின் மரித்துப்போன நிலைமையை அம்பலப்படுத்த “தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தை” பயன்படுத்துகிறார்கள். நான்கு தூதர்களும் குதிரையில் சவாரி செய்பவர்களும் இந்த அடையாள அர்த்தமுள்ள கொல்லுதலுக்கு, “மனுஷரில் மூன்றிலொருபங்கு” கொல்லப்படுவதற்கு உத்தரவிடுகிறார்கள். (எபேசியர் 6:17; வெளிப்படுத்துதல் 9:15, 18) யுத்தத்திற்கு ராஜ்ய பிரசங்கிப்பாளர்களடங்கிய வீறார்ந்த அணி அடியெடுத்து வைக்க, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேற்பார்வையின் கீழ் சரியான ஒழுங்கமைப்பையும் தெய்வீக வழிநடத்துதலையும் இது குறித்துக் காட்டுகிறது.

இரண்டு மிரியடுகளாகிய மிரியடுகள்

10. குதிரைச்சேனையில் இரண்டு மிரியடுகளாகிய மிரியடுகள் எந்தக் கருத்தில் உள்ளன?

10 இந்தக் குதிரைச்சேனையில் இரண்டு மிரியடுகளாகிய மிரியடுகள் எப்படி இருக்க முடியும்? ஒரு மிரியடானது, சொல்லர்த்தத்தில், 10,000-மாக இருக்கிறது. எனவே இரண்டு மிரியடுகளாகிய மிரியடுகள் 20 கோடிக்கு சமமாயிருக்கிறது. a சந்தோஷகரமாக, இப்போது லட்சக்கணக்கான ராஜ்ய பிரசங்கிகள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களுடைய எண்ணிக்கையானது நூற்றுலட்சக்கணக்கான எண்ணிக்கையிலிருந்து மிகவும் குறைவாகவே இருக்கிறது! எனினும், எண்ணாகமம் 10:36-ல் மோசே சொன்ன இவ்வார்த்தைகளை ஞாபகப்படுத்திப் பாருங்கள்: “கர்த்தாவே, [யெகோவாவே, NW] அநேக ஆயிரவர்களாகிய [மிரியடுகளாகிய, NW] இஸ்ரவேலரிடத்தில் திரும்புவீராக.” (ஆதியாகமம் 24:60-ஐ ஒப்பிடவும்.) அது சொல்லர்த்தமாக, ‘அநேக பத்து லட்சக்கணக்கான இஸ்ரவேலரிடத்தில் திரும்புவீராக’ என்று பொருள்படும். என்றாலும், இஸ்ரவேலர் மோசேயின் நாட்களில் சுமார் இரண்டு முதல் மூன்று லட்சமாகவே இருந்தனர். அப்படியானால், மோசே என்ன சொல்லிக்கொண்டிருந்தார்? சந்தேகமில்லாமல், இஸ்ரவேலர்கள் எண்ணப்படுவதற்கு மாறாக “வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும்” எண்ணிக்கையிலடங்காதவர்களாக இருக்கவேண்டும் என்பதை அவர் நினைவில் வைத்திருந்தார். (ஆதியாகமம் 22:17; 1 நாளாகமம் 27:23) ஆகவே அவர் ‘மிரியடுக்கான’ வார்த்தையைப் பயன்படுத்தினான், இது அதிகமான எண்ணிக்கையை, குறிக்கப்படாத எண்ணிக்கையை காட்டியது. எனவே, நியூ இங்லிஷ் பைபிள் இவ்வசனத்தை இப்படியாக வாசிக்கிறது: “கர்த்தாவே, எண்ணிலடங்கா ஆயிரவர்களாகிய இஸ்ரவேலரிடத்தில் தங்குவீராக.” இது கிரேக்க மற்றும் எபிரெய அகராதிகளில் உள்ள “மிரியடு” என்ற வார்த்தைக்கான இரண்டாவது விளக்கத்தோடு ஒத்திருக்கிறது: “ஓர் எண்ணற்ற பேரெண்ணிக்கை,” ஒரு “பேரெண்ணிக்கை.”—தேயருடைய புதிய ஏற்பாட்டின் கிரேக்க-ஆங்கில புதிய அகராதி; எட்வர்டு ராபின்சன் மொழிபெயர்த்த ஜிசினியசுடைய பழைய ஏற்பாட்டின் எபிரெய மற்றும் ஆங்கில அகராதி.

11. யோவான் வகுப்பார் அடையாளப்பூர்வமான கருத்தில் மிரியடுகளாக ஆவதற்குங்கூட என்ன தேவையாயிருக்கும்?

11 என்றாலும், பூமியில் மீதமுள்ள யோவான் வகுப்பார் 10,000-க்கும் குறைந்த எண்ணிக்கையில் இருக்கிறார்கள்ஒரு சொல்லர்த்தமான மிரியடுக்கும் குறைவாக இருக்கிறார்கள். இவர்கள் எப்படி எண்ணிலடங்கா ஆயிரக்கணக்கான குதிரைச்சேனைகளோடு ஒப்பிடப்படக்கூடும்? அவர்கள் அடையாள அர்த்தமுள்ள கருத்தில் மிரியடுகளாக ஆவதற்குங்கூட வலுவூட்டும் துணை அம்சங்கள் அவர்களுக்கு தேவைப்படுகிறதல்லவா? அவையே அவர்களுக்கு தேவையாயிருந்திருக்கின்றன, யெகோவாவுடைய அளவற்ற தயவால் அவற்றையே பெற்றிருக்கிறார்கள்! இவர்கள் எங்கிருந்து வந்திருக்கிறார்கள்?

12, 13. 1918-லிருந்து 1935 வரை நடைபெற்ற என்ன சரித்திரரீதியிலான வளர்ச்சிகள் வலுவூட்டும் துணை அம்சங்களின் மூலத்தை குறித்துக் காட்டுகின்றன?

12 1918-லிருந்து 1922 வரை யோவான் வகுப்பார் துன்பப்படும் மானிடருக்கு, “இப்போது வாழும் கோடிக்கணக்கானோர் இனி ஒருபோதும் மரிப்பதில்லை” என்ற சந்தோஷமான எதிர்பார்ப்பை அளிக்க தொடங்கினர். 1923-ல், மத்தேயு 25:31-34 வசனங்களில் குறிப்பிடப்பட்ட செம்மறியாடுகள் போன்றோர் கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் பூமியில் ஜீவனைச் சுதந்தரிப்பார்கள் என்றும் தெரியப்படுத்தப்பட்டது. 1927-ல் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் வெளியிடப்பட்ட, ஜனங்களுக்கு சுயாதீனம் (ஆங்கிலம்) என்ற சிறு புத்தகத்தில், அதுபோன்ற நம்பிக்கையானது அளிக்கப்பட்டது. 1930-ன் ஆரம்ப ஆண்டுகளில் செவ்வையான யோனதாப் வகுப்பாரும் கிறிஸ்தவமண்டலத்தின் பரிதாபகரமான ஆவிக்குரிய நிலைக்காக ‘பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரும்’ பூமிக்குரிய வாழ்க்கைக்கான எதிர்ப்பார்ப்புகளைக் கொண்டிருக்கும் அடையாளப்பூர்வமான செம்மறியாடுகளோடு ஒத்திருக்கிறார்கள் என்று காட்டப்பட்டனர். (எசேக்கியேல் 9:4; 2 இராஜாக்கள் 10:15, 16) அப்பேர்ப்பட்ட ஆட்களை நவீன நாளைய “அடைக்கலப் பட்டணங்க”ளிடமாக கவனத்தை திருப்புவதாய், ஆகஸ்ட் 15, 1934, ஆங்கில காவற்கோபுரம் இப்படியாக சொன்னது: “யோனதாப் வகுப்பார் கடவுளுடைய அமைப்பிடம் ஓடிப்போய் கடவுளுடைய ஜனங்களோடு கூட்டுறவுகொள்வதன் மூலம் கடவுளுடைய எக்காள சத்தத்தைக் கேட்டு எச்சரிக்கைக்கு செவிகொடுத்திருக்கிறார்கள், அங்கேயே அவர்கள் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும்.”எண்ணாகமம் 35:6.

13 இந்த யோனதாப் வகுப்பார் 1935-ல் அ.ஐ.மா., வாஷிங்டன் D.C.-யில் நடைபெற்ற யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டுக்கு ஆஜராக விசேஷமாக அழைக்கப்பட்டார்கள். அந்த மாநாட்டில், மே 31-ம் தேதி, வெள்ளிக்கிழமையன்று J. F. ரதர்ஃபர்டு “பெரிய திரள் கூட்டம்” என்ற பொருளின் பேரில் தனது சிறப்பான பேச்சைக் கொடுத்தார், இந்தப் பேச்சிலே, வெளிப்படுத்துதல் 7:9-ல் (கிங் ஜேம்ஸ் வர்ஷன்) குறித்துக்காட்டப்பட்டுள்ள தொகுதியானது மத்தேயு 25:33-ல் சொல்லப்பட்டுள்ள செம்மறியாடுகளாகவே இருக்கிறார்கள்பூமிக்குரிய நம்பிக்கையுடைய ஒப்புக்கொடுக்கப்பட்ட தொகுதியாக இருக்கிறார்கள்என்பதை அவர் தெளிவாக காட்டினார். நடக்க இருக்கும் காரியங்களுக்கு எடுத்துக்காட்டாக அந்த மாநாட்டில் 840 புதிய சாட்சிகள் முழுக்காட்டுதல் பெற்றார்கள், இவற்றில் அநேகர் திரள் கூட்டத்தை சேர்ந்தவர்களாயிருந்தனர். b

14. அடையாளப்பூர்வமான குதிரைச்சேனையின் தாக்குதலில் திரள் கூட்டமும் பங்குகொள்ளுமா, 1963-ல் என்ன தீர்மானம் தெரியச் செய்யப்பட்டது?

14 இந்தத் திரள் கூட்டமானது, 1922-ல் தொடங்கின குதிரைச்சேனை தாக்குதலில் பங்குக்கொண்டு 1927-ல் நடைபெற்ற டோரான்டோ மாநாட்டில் விசேஷமாக கவனத்துக்கு கொண்டுவரப்பட்டவர்களின் பாகமாக இருந்திருக்கிறதா? நான்கு தூதர்கள், அபிஷேகம் செய்யப்பட்ட யோவான் வகுப்பார் ஆகியோரின் வழிநடத்துதலின் கீழ், அது நிச்சயமாகவே பங்குக்கொண்டிருக்கிறது! 1963-ல் உலகம் முழுவதிலும் நடைபெற்ற “நித்திய நற்செய்தி” மாநாட்டில் அது யோவான் வகுப்பாரோடு சேர்ந்து ஒரு கிளர்ச்சியூட்டும் தீர்மானத்தை எடுத்தது. இந்தத் தீர்மானம், உலகமானது “உலக பிரச்னைகள்கொண்ட ஒரு பூமியதிர்ச்சியை எதிர்ப்படுகிறது, இப்படிப்பட்ட பூமியதிர்ச்சியை அது முன்னொருபோதும் அறிந்ததில்லை, மேலும் அதனுடைய எல்லா அரசியல் நிறுவனங்களும் அதனுடைய நவீன மதம்சார்ந்த பாபிலோனும் சின்னாபின்னமாக அசைக்கப்பண்ணப்படும்,” என்று அறிவித்தது. “கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தைப் பற்றிய ‘நித்திய நற்செய்தியையும்’ அவருடைய நியாயத்தீர்ப்புகளைப் பற்றியும் நாங்கள் தொடர்ந்து பட்சபாதமில்லாமல் எல்லா ஜனங்களுக்கும் அறிவித்துக்கொண்டிருப்போம், இது அவருடைய சத்துருக்களுக்கு வாதைகள் போன்றிருந்தாலும் சிருஷ்டிகராகிய கடவுளை ஆவியோடும் உண்மையோடும் வணங்க விரும்பும் எல்லா ஆட்களுக்கும் விடுதலைக் கொண்டுவருவதற்காக நிறைவேற்றப்படும்,” என்பதாக அந்தத் தீர்மானம் தெரிவித்தது. இந்தத் தீர்மானம் மிகவும் உற்சாகத்தோடு ஏற்றுக்கொள்ளப்பட்டது, பூகோள முழுவதும் நடைபெற்ற 24 மாநாடுகளில் இப்படியாக செய்யப்பட்டது, கூட்டு மொத்தமாக 4,54,977 பேர் மாநாட்டுக்கு ஆஜராயிருந்தார்கள், இதில் 95 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள், திரள் கூட்டத்தைச் சேர்ந்த ஆட்களாயிருந்தனர்.

15. (அ) யெகோவா 2005-ல், ஊழியத்தில் பயன்படுத்தி வந்தவர்களில் எத்தனை சதவிகிதம் இந்தத் திரள் கூட்டத்தை சேர்ந்தவைகளாயிருந்தனர்? (ஆ) யோவான் 17:20, 21-ல் உள்ள இயேசுவுடைய ஜெபமானது யோவான் வகுப்பாரோடு திரள் கூட்டத்தார் கொண்டுள்ள ஐக்கியத்தை எப்படி காட்டுகிறது?

15 கிறிஸ்தவமண்டலத்தின் மீது வாதைகளை கொட்டுவதில் யோவான் வகுப்பாரோடு முழுமையாக ஐக்கியப்பட்டிருப்பதைத் திரள் கூட்டத்தார் தொடர்ந்து அறிவித்து வருகின்றனர். 2005-ல் யெகோவா ஊழியத்தில் பயன்படுத்திவந்த 99.8 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள் இந்தத் திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தனர். அதனுடைய உறுப்பினர்கள் யோவான் வகுப்பாரோடு மனப்பூர்வமாக இணங்கி நடக்கிறார்கள், இவர்களைக் குறித்து யோவான் 17:20, 21-ல் இயேசு இப்படியாக ஜெபித்தார்: “நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன். அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறது போல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.” அபிஷேகம் செய்யப்பட்ட யோவான் வகுப்பார் இயேசுவின் கீழ் தலைமையேற்று செயல்படும்போது, வைராக்கியமுள்ள திரள் கூட்டத்தார் மனித சரித்திரத்திலேயே நடைபெற்றிராத நாசத்தை உண்டாக்கும் குதிரைச்சேனையோடு அவர்களும் பங்குக்கொள்கிறார்கள்! c

16. (அ) அடையாளப்பூர்வமான குதிரைகளுடைய வாய்களையும் வால்களையும் யோவான் எப்படி விவரிக்கிறார்? (ஆ) யெகோவாவின் ஜனங்களுடைய வாய்கள் எப்படி ஊழியத்துக்காக ஆயத்தமாக்கப்பட்டிருக்கின்றன? (இ) ‘அவற்றின் வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாயிருக்கின்றன’ என்ற உண்மையோடு எது ஒத்திருக்கிறது?

16 யுத்தத்துக்குப் போக அந்தக் குதிரைச்சேனைக்கு கருவிகள் தேவைப்படுகின்றன. இதை எவ்வளவு மகத்தான விதத்தில் யெகோவா ஏற்பாடு செய்திருக்கிறார்! யோவான் இதை விவரிக்கிறார்: “அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலேயும் வால்களிலேயும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாயும், தலைகளுள்ளவைகளாயுமிருக்கிறது, அவைகளாலே சேதப்படுத்துகிறது.” (வெளிப்படுத்துதல் 9:19) இந்தச் சேவையைச் செய்வதற்கு யெகோவா தமது ஒப்புக்கொடுக்கப்பட்ட, முழுக்காட்டுதல் பெற்ற ஊழியர்களை நியமித்திருக்கிறார். அவர்கள் கடவுளுடைய வார்த்தையை ‘கற்போரின் நாவோடு’ அதிகாரப்பூர்வமாக எடுத்துப் பேச, பிரசங்கிக்க தேவராஜ்ய ஊழியப் பள்ளியின் மூலமாகவும் மற்ற சபைக் கூட்டங்களின் மூலமாகவும் பள்ளிகளின் மூலமாகவும் அவர்களுக்குக் கற்பித்திருக்கிறார். தம்முடைய வார்த்தைகளை அவர்களுடைய வாய்களிலே வைத்து அவருடைய நியாயத்தீர்ப்புகளை “வெளியரங்கமாக வீடுகள்தோறும்” அவர்கள் தெரிவிக்க அனுப்பியிருக்கிறார். (2 தீமோத்தேயு 4:2; ஏசாயா 50:4; 61:2; எரேமியா 1:9, 10; அப்போஸ்தலர் 20:20) “வால்க”ளுக்கு ஒப்பாக இருக்கும் கொட்டும் செய்தியை யோவான் வகுப்பாரும் திரள் கூட்டத்தாரும் விட்டு வந்திருக்கிறார்கள், இந்தச் செய்தி, கடந்த ஆண்டுகளினூடே விநியோகிக்கப்பட்ட கோடானுகோடிக்கணக்கான பைபிள்கள், புத்தகங்கள், சிற்றேடுகள், பத்திரிகைகள் ஆகியவற்றில் அடங்கியிருக்கிறது. யெகோவா கொண்டுவரும் “தீங்”கைக் குறித்து எச்சரிப்பு கொடுக்கப்பட்டிருக்கிற அவர்களுடைய சத்துருக்களுக்கு, உண்மையில் இந்தக் குதிரைச்சேனைகளாகிய இராணுவங்கள் இரண்டு மிரியடுகளாகிய மிரியடுகளாக தோன்றுகிறது.யோவேல் 2:4-6-ஐ ஒப்பிட்டுப் பார்க்கவும்.

17. பிரசங்க வேலை தடைசெய்யப்பட்டிருப்பதன் காரணமாக இலக்கியங்கள் விநியோகிக்கப்பட முடியாத நாடுகளில் உள்ள யெகோவாவின் சாட்சிகளுக்கு இந்தக் குதிரைச்சேனையில் ஏதாகிலும் பங்கு உண்டா? விளக்கவும்.

17 இந்தக் குதிரைச்சேனையின் அதிக வைராக்கியங்கொண்ட பிரிவை, யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலை தடைசெய்யப்பட்டுள்ள நாடுகளில் இருக்கிற சகோதரர்கள் உண்டுபண்ணுகிறார்கள். ஓநாய்களுக்குள்ளே இருக்கிற ஆடுகளைப் போல இவர்கள் ‘சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருக்க’ வேண்டும். யெகோவாவுக்கு கீழ்ப்படிந்தவர்களாக, கண்டவற்றையும் கேட்டவற்றையும் குறித்து அவர்கள் பேசாமலிருக்க முடியாது. (மத்தேயு 10:16; அப்போஸ்தலர் 4:19, 20; 5:28, 29, 32) இவர்களிடம் பொது ஜனங்களுக்கு விநியோகிப்பதற்கு அச்சடிக்கப்பட்ட பிரசுரங்கள் இல்லாததால் அல்லது அநேகப் பிரசுரங்கள் இல்லாததால், இந்தக் குதிரைச்சேனையின் தாக்குதலில் இவர்களுக்கு பங்கில்லை என்ற முடிவுக்கு நாம் வர வேண்டுமா? நிச்சயமாகவே இல்லை! பைபிள் சத்தியங்களை எடுத்துச் சொல்ல வாய்களையும் யெகோவாவிடமிருந்து அதிகாரத்தையும் உடையவர்களாயிருக்கின்றனர். இதை இவர்கள் நம்பவைக்கக்கூடிய விதத்தில் சந்தர்ப்பம் வாய்க்கும்போது செய்து வேதப்படிப்புகளை நடத்தி “அநேகரை நீதிக்குட்படுத்துகி”றார்கள். (தானியேல் 12:3) இவர்கள் அதிக கடினமாகத் தாக்கும் இலக்கியங்களை விட்டுவருவதன் கருத்தில் தங்களுடைய வால்களினால் கொட்டவில்லையென்றாலும், நெருங்கிவரும் யெகோவாவுடைய பழிவாங்கும் நாளைக் குறித்து சாதுரியத்தோடும் பகுத்துணர்வோடும் சாட்சிகொடுக்கையில் வாய்களிலிருந்து அடையாளப்பூர்வமான அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்படுகின்றன.

18. எத்தனை மொழிகளிலும் எந்த எண்ணிக்கையிலும் அச்சடிக்கப்பட்ட வாதிக்கும் செய்தியை இந்தக் குதிரைச்சேனை விநியோகித்திருக்கிறது?

18 மற்ற இடங்களில், இந்த ராஜ்யம் சார்ந்த இலக்கியங்கள் தொடர்ந்து கிறிஸ்தவமண்டலத்துடைய பாபிலோனிய கொள்கைகளையும் வழிகளையும் அம்பலப்படுத்தி அடையாள அர்த்தமுள்ள முறையில் அவளுக்கு வரவேண்டிய தீங்கைக் கொண்டுவருகிறது. நவீன நாளைய அச்சு முறைகளைப் பயன்படுத்தி இந்த எண்ணிறந்த குதிரைச்சேனையானது 2005-க்கு முன்புள்ள 68 ஆண்டுகளில் பூமியில் பேசப்படும் 450-க்கும் மேற்பட்ட மொழிகளில் பைபிள்களையும் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் சிற்றேடுகளையும் கோடிக்கணக்கில்சொல்லர்த்தமான இரண்டு மிரியடுகளாகிய மிரியடுகளை விட அநேக மடங்கு அதிகமாகவிநியோகித்திருக்கிறது. இந்த வால்கள் எப்படியாக கொட்டி வேதனையை உண்டாக்கியிருக்கின்றன!

19, 20. (அ) வாதிக்கும் செய்திகள் குறிப்பாக கிறிஸ்தவமண்டலத்தை தாக்குகிறதாயிருந்தாலும், கிறிஸ்தவமண்டலத்திற்கு வெகு அப்பால் உள்ள நாடுகளில் இருக்கிற சிலர் எப்படி பிரதிபலித்துள்ளனர்? (ஆ) பொதுவாக ஜனங்களுடைய பிரதிபலிப்பைக் குறித்து யோவான் எப்படி விவரிக்கிறார்?

19 இந்த வாதிக்கும் செய்தியானது “மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படி” யெகோவா உத்தேசித்திருந்தார். ஆகவே, அது குறிப்பாக கிறிஸ்தவமண்டலத்தையே தாக்கயிருக்கிறது. ஆனால் அது கிறிஸ்தவமண்டலத்துக்கு வெகு அப்பாலுள்ள நாடுகளையும், கிறிஸ்தவமண்டலத்துடைய போலித்தன்மையானது வெளியரங்கமாக்கப்பட்டிருக்கிற அநேக நாடுகளையும் சென்றெட்டியிருக்கிறது. இந்த நாடுகளில் வாழும் ஜனங்கள் கறைப்படுத்தப்பட்ட மதந்சார்ந்த அமைப்பின் மீது வரும் வாதைகளை கண்டு யெகோவாவிடம் நெருங்கிவந்திருக்கிறார்களா? அநேகர் வந்திருக்கின்றனர்! கிறிஸ்தவமண்டலம் நேரடியாக செல்வாக்கு செலுத்தும் வட்டாரத்துக்கு வெளியே இருக்கும் சாந்தகுணமுள்ள, அன்பார்ந்த ஜனங்களிடத்திலிருந்து உடனடியான பிரதிபலிப்பு இருந்திருக்கிறது. ஆனால் பொதுவாக ஜனங்களுடைய பிரதிபலிப்பைக் குறித்து யோவான் விவரிக்கிறார்: “அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல்மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளைவிட்டு மனந்திரும்பவுமில்லை; தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும் விட்டு மனந்திரும்பவுமில்லை.” (வெளிப்படுத்துதல் 9:20, 21) உலகிலுள்ள அப்பேர்ப்பட்ட மனந்திரும்பாத ஆட்களுக்கு மாற்றம் இருக்கப்போவதில்லை. துன்மார்க்கமான வழிகளில் தொடர்ந்து நிலைத்திருக்கிற எல்லாரும் யெகோவாவிடமிருந்து அவருடைய பழிவாங்கும் நாளில் பாதகமான நியாயத்தீர்ப்பை எதிர்ப்பட வேண்டும். ஆனால் “கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்.”யோவேல் 2:32; சங்கீதம் 145:20; அப்போஸ்தலர் 2:20, 21.

20 நாம் இப்போது சிந்தித்தது இரண்டாம் ஆபத்தின் பாகமாக இருக்கிறது. இந்த ஆபத்து முடிவதற்குள்ளாக, இன்னும் அதிகம் வர இருக்கிறது, இவற்றைக் குறித்து நாம் பின்வரும் அதிகாரங்களில் காண்போம்.

[அடிக்குறிப்புகள்]

a ஹென்றி பார்க்லே சுவீட்டு எழுதிய வெளிப்படுத்துதல் புத்தகத்தின் பேரில் விளக்கவுரை (ஆங்கிலம்) “இரண்டு மிரியடுகளாகிய மிரியடுகள்” என்ற எண்ணைப் பற்றி குறிப்பிடுகிறது: “இந்த மிகப் பெரிய எண்கள் ஒரு சொல்லர்த்தமான நிறைவேற்றத்திற்காக நாம் தேடுவதைத் தடைசெய்கின்றன, இதைத் தொடரும் விளக்கமானது இந்த முடிவை ஆதரிக்கிறது.”

b முந்தைய பக்கங்கள் 119-26 பார்க்கவும்; மேலும் வின்டிகேஷன் (ஆங்கிலம்), புத்தகம் மூன்று, 1932-ல் யெகோவாவின் சாட்சிகள் பிரசுரித்தது, பக்கங்கள் 83-4-ஐ பார்க்கவும்.

c வெட்டுக்கிளிகளைப் போலில்லாமல், யோவான் காணும் குதிரைச்சேனைகளாகிய இராணுவங்கள் ‘பொன்மயமான கிரீடம் போன்றவைகளை’ அணிந்துகொண்டில்லை. (வெளிப்படுத்துதல் 9:7) இந்தக் காரியம், இன்று, குதிரைச்சேனையின் பெரும்பாகத்தை உண்டுபண்ணும் திரள் கூட்டம் கடவுளுடைய பரலோக ராஜ்யத்தில் ஆளுகைச் செய்யும் நம்பிக்கையோடு இல்லை என்ற உண்மையோடு ஒத்திசைவாயிருக்கிறது.

[கேள்விகள்]

[பக்கம் 149-ன் படம்]

ஆறாம் எக்காளம் ஊதப்படுவது இரண்டாவது ஆபத்தை அறிமுகப்படுத்துகிறது

[பக்கம் 150, 151-ன் படம்]

சரித்திரத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ள மிகப் பெரிய குதிரைச்சேனை தாக்குதலை நான்கு தூதர்கள் வழிநடத்துகின்றனர்

[பக்கம் 153-ன் படம்]

எண்ணிறந்த குதிரைச்சேனை எண்ணிலடங்கா பைபிள் சார்ந்த பிரசுரங்களை விநியோகித்திருக்கிறது

[பக்கம் 154-ன் படம்]

மீதியான மற்ற மனுஷர்கள் மனந்திரும்பவில்லை