Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு”

“உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு”

அதிகாரம் 12

“உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு”

பிலதெல்பியா

1. இயேசுவின் ஆறாவது செய்தி எந்த நகரத்தில் உள்ள சபைக்கு அளிக்கப்பட்டது? அந்த நகரத்தின் பெயர் எதை அர்த்தப்படுத்துகிறது?

 சகோதர சிநேகம்என்னே ஒரு விரும்பத்தகுந்த குணம்! “சகோதர சிநேகம்” என்ற அர்த்தம் கொண்ட பிலதெல்பியாவிலுள்ள சபைக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் தம்முடைய ஆறாவது செய்தியை அளித்தபோது இயேசு இதை மனதில் கொண்டிருந்தார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. வயது முதிர்ந்த யோவான் அறுபதிற்கும் மேலான ஆண்டுகளுக்கு முன்பு, பேதுரு இயேசுவிடம் மூன்று முறை, தன்னுடைய கர்த்தரின் மேல் தான் கனிவான சிநேகம் கொண்டிருப்பதாக வலியுறுத்தி கூறிய அந்த நிகழ்ச்சியை இன்னும் நினைவுகூருகிறார். (யோவான் 21:15-17) பிலதெல்பியாவிலுள்ள கிறிஸ்தவர்கள், தங்களுடைய பங்கில், சகோதர சிநேகத்தை காண்பிக்கிறார்களா? வெளிப்படையாக அவர்கள் காண்பிக்கிறார்கள்!

2. பிலதெல்பியா எந்த வகையான நகரம், என்ன வகையான சபை அங்கு இருந்தது, மேலும் இந்தச் சபையின் தூதனிடம் இயேசு என்ன சொல்கிறார்?

2 தென்கிழக்காக சர்தைக்கு சுமார் 48 கிலோமீட்டர் தொலைவில் (தற்காலத்து துருக்கி தேசத்து நகரமான அலசேகிர் இருக்கும் இடத்தில்) இருக்கும் யோவானின் காலத்து பிலதெல்பியா பேரளவில் ஒரு செல்வச் செழிப்பான நகரம். எப்படியிருந்தாலும், மிகவும் குறிப்பிடத்தக்கது, அங்குள்ள கிறிஸ்தவ சபையின் செழுமையே ஆகும். பெரும்பாலும் சர்தை வழியாக பயணம் செய்து வந்த ஊழியரை அவர்கள் என்னே மகிழ்ச்சியோடு வரவேற்றிருப்பார்கள்! அவர் கொண்டு சென்ற செய்தி புத்துணர்ச்சியூட்டும் புத்திமதியை அவர்களுக்குக் கொண்டிருந்தது. ஆனால் முதலில் அந்தச் செய்தியை அனுப்பும் சிறப்புவாய்ந்தவருடைய அதிகாரத்தை இது குறிப்பிடுகிறது. அவர் சொல்கிறார்: “பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது.”—வெளிப்படுத்துதல் 3:7.

3. இயேசு ‘பரிசுத்தர்’ என்று அழைக்கப்படுவது ஏன் பொருத்தமாக இருக்கிறது. மேலும் அவர் ‘சத்தியமுள்ளவர்’ என்று எப்படிச் சொல்லப்படலாம்?

3 மனிதனாகிய இயேசு கிறிஸ்துவினிடம் பேதுரு சொன்னதை யோவான் கேட்டிருந்தார்: “நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து [தேவனுடைய பரிசுத்தர், NW] என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம்.” (யோவான் 6:68, 69) யெகோவா தேவன் பரிசுத்தத்தின் ஊற்றுமூலராயிருப்பதால், அவரது ஒரேபேறான குமாரனும் “பரிசுத்த”ராயிருக்கவேண்டும். (வெளிப்படுத்துதல் 4:8) இயேசுவும்கூட “சத்திய”முள்ளவர். இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை அலிதினோஸ் (a·le·thi·nosʹ) மெய்ம்மையை குறிப்பிடுகிறது. இந்த அர்த்தத்தில், இயேசு வானத்திலிருந்து இறங்கி வந்த மெய்யான வெளிச்சமாகவும் மெய்யான அப்பமாகவும் இருக்கிறார். (யோவான் 1:9; 6:32) அவரே மெய்யான திராட்சச்செடி. (யோவான் 15:1) அவர் நம்பகமானவர் என்ற கருத்திலும் இயேசு மெய்யானவராயிருக்கிறார். அவர் எப்பொழுதும் உண்மையையே பேசுகிறார். (யோவான் 8:14, 17, 26-ஐக் காண்க.) தேவனின் இந்தக் குமாரன் ராஜாவாகவும் நியாயாதிபதியாகவும் சேவிக்க நிச்சயமாகவே தகுதிவாய்ந்தவர்.வெளிப்படுத்துதல் 19:11, 16.

‘தாவீதின் திறவுகோல்’

4, 5. ‘தாவீதின் திறவுகோல்’ எந்த உடன்படிக்கையோடு சம்பந்தப்பட்டிருந்தது?

4 ‘தாவீதின் திறவுகோலை’ இயேசு வைத்திருக்கிறார். இதை உபயோகித்து, ‘ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறார், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறார்.’ இந்தத் ‘தாவீதின் திறவுகோல்’ என்ன?

5 இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதினிடத்திலேயே யெகோவா நித்திய ராஜ்யத்திற்கான ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தினார். (சங்கீதம் 89:1-4, 34-37) தாவீதின் குடும்பம் பொ.ச.மு. 1070 முதல் 607 வரை எருசலேமில் யெகோவாவின் சிங்காசனத்திலிருந்து ஆட்சி செய்தது, ஆனால் அது துன்மார்க்கத்திற்குத் திரும்பியதால் கடவுளுடைய நியாயத்தீர்ப்பு அந்த ராஜ்யத்தின் மேல் கொண்டுவரப்பட்டது. இப்படியாக யெகோவா எசேக்கியேல் 21:27-ல் உள்ள தன்னுடைய தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றத் தொடங்கினார். “அதைக் [பூமிக்குரிய எருசலேம்] கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன்; உரிமைக்காரனானவர் வருமட்டும் அது [தாவீதின் வம்சத்து ராஜாதிகாரத்தின் செங்கோல்] இல்லாதிருக்கும்; அவருக்கே அதைக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார்.”

6, 7. எப்பொழுது, எப்படி “உரிமைக்காரனானவர்” தோன்றவிருந்தார்?

6 இந்த “உரிமைக்காரனானவர்” எப்பொழுது, எப்படித் தோன்றுவார்? தாவீதினுடைய ராஜாதிகாரத்தின் செங்கோல் எப்படி அவருக்குக் கொடுக்கப்படும்?

7 சுமார் 600 வருடங்களுக்குப் பின், தாவீது ராஜாவின் வம்சத்தில் வந்த யூத கன்னிப் பெண் மரியாள், பரிசுத்த ஆவியால் கர்ப்பந்தரித்தார்கள். தேவன் மரியாளிடம் அவர்கள் ஒரு குமாரனைப் பெறுவார்கள், அதற்கு இயேசு என்று பெயரிடவேண்டும் என்பதை தெரிவிக்க காபிரியேல் தூதனை அனுப்பினார். காபிரியேல் மேலும் சொன்னார்: “அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது.”லூக்கா 1:31-33.

8. தாவீதின் ராஜாதிகாரத்தை சுதந்தரித்துக்கொள்ள தம்மை எப்படி தகுதிபெற்றிருப்பவராக இயேசு நிரூபித்தார்?

8 பொ.ச. 29-ல் இயேசு யோர்தான் நதியில் முழுக்காட்டப்பட்டு பரிசுத்த ஆவியால் அபிஷேகஞ்செய்யப்பட்டபோது அவர் தாவீதின் வம்சத்தில் நியமனம் செய்யப்பட்ட ராஜாவாக ஆனார். அவர் ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் பின்பற்றத்தக்க முன்மாதிரியான ஆர்வத்தைக் காண்பித்தார், தம்முடைய சீஷர்களுக்கும் அதேபோன்று பிரசங்கிக்கும்படி கட்டளைக் கொடுத்தார். (மத்தேயு 4:23; 10:7, 11) கழுமரத்தில் மரிக்கும் வரையாக இயேசு தம்மைத்தாமே தாழ்த்தி, இப்படியாக தாவீதின் ராஜாதிகாரத்தை சுதந்தரித்துக்கொள்ள முழுமையாக தகுதிபெற்றிருப்பதை நிரூபித்தார். யெகோவா இயேசுவை அழிவில்லா ஆவியாக உயிர்ப்பித்து பரலோகங்களில் தம்முடைய சொந்த வலது பாரிசத்திற்கு உயர்த்தினார். அங்கு அவர் தாவீதினுடைய ராஜ்யத்தின் எல்லா உரிமைகளையும் சுதந்தரித்துக்கொண்டார். காலம் நிறைவேறும்போது இயேசு “[அவருடைய] சத்துருக்களின் மத்தியில் ஆட்சிசெய்யும்” தம்முடைய உரிமையைப் பயன்படுத்துவார்.சங்கீதம் 110:1, 2; பிலிப்பியர் 2:8, 9; எபிரெயர் 10:13, 14.

9. இயேசு எப்படி தாவீதின் திறவுகோலை திறக்கவும், பூட்டவும் பயன்படுத்துகிறார்?

9 இதற்கிடையில் இயேசு தேவனுடைய ராஜ்யம் சார்ந்த வாய்ப்புகளையும் சிலாக்கியங்களையும் திறக்க தாவீதின் திறவுகோலை பயன்படுத்துவார். இயேசு மூலமாக, யெகோவா இப்பொழுது பூமியிலுள்ள அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை “இருளின் அதிகாரத்திலிருந்து விடுதலையாக்கி,” மீட்டு ‘தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்குள்’ கொண்டு செல்கிறார். (கொலோசெயர் 1:13, 14) அந்தத் திறவுகோல், உண்மையற்றவர்களாக நிரூபித்த எவரும் இப்படிப்பட்ட சிலாக்கியங்களை அடைய முடியாதபடிக்குத் தடைசெய்யவும் பயன்படுத்தப்படும். (2 தீமோத்தேயு 2:12, 13) தாவீதின் ராஜ்யத்தினுடைய நிரந்தர சுதந்தரவாளியாகிய இவருக்கு யெகோவாவின் உதவி இருப்பதால், எந்தச் சிருஷ்டியும் இவரை இப்படிப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்து தடுக்க முடியாது.மத்தேயு 28:18-20-ஐ ஒப்பிடுக.

10. பிலதெல்பியாவிலுள்ள சபைக்கு என்ன உற்சாகத்தை இயேசு கொடுக்கிறார்?

10 இப்படிப்பட்ட அதிகாரப்பூர்வமான ஊற்றுமூலத்திலிருந்து பிலதெல்பியாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு வரும் இயேசுவின் வார்த்தைகள் விசேஷமாக ஆறுதலளிப்பதாக இருக்க வேண்டும்! அவர் இவ்வாறு சொல்வதன் மூலம் அவர்களைப் போற்றுகிறார்: “உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.” (வெளிப்படுத்துதல் 3:8) அந்தச் சபை சுறுசுறுப்புள்ளதாயிருந்தது, ஒரு வாசல் அதற்கு முன்பு திறக்கப்பட்டிருக்கிறதுசந்தேகமில்லாமல் ராஜ்ய ஊழியத்திற்கான வாய்ப்பின் வாசல். (ஒப்பிடவும்: 1 கொரிந்தியர் 16:9; 2 கொரிந்தியர் 2:12.) ஆகவே, பிரசங்கிப்பதற்கான வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள இயேசு சபையை உற்சாகப்படுத்துகிறார். தேவனுடைய ஆவியின் உதவியோடு அவர்கள் சகித்துக்கொண்டு யெகோவாவின் சேவையில் மேலுமான “கிரியைகளை” செய்ய தங்களிடம் போதுமான பெலன் இருப்பதைக் காண்பித்திருக்கிறார்கள். (2 கொரிந்தியர் 12:10; சகரியா 4:6) அவர்கள் இயேசுவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்திருக்கிறார்கள், மேலும் வார்த்தையினாலோ அல்லது கிரியையினாலோ கிறிஸ்துவை மறுதலிக்காதிருந்திருக்கிறார்கள்.

“அவர்கள் உனக்குப் பணிவார்கள்”

11. என்ன ஆசீர்வாதத்தை இயேசு கிறிஸ்தவர்களுக்கு வாக்களிக்கிறார், இது எப்படி நிறைவேறியது?

11 ஆகவே, இயேசு அவர்கள் பலன்களை வாக்களிக்கிறார்: “இதோ, யூதனல்லாதிருந்தும் தங்களை யூதனென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன் மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன்.” (வெளிப்படுத்துதல் 3:9) ஒருவேளை சிமிர்னாவிலிருந்ததுபோல் உள்ளூர் யூதர்களிடமிருந்து சபை, பிரச்சினைகளைக் கொண்டிருந்திருக்கலாம். இவர்களைச் ‘சாத்தானின் கூட்டத்தார்’ என்று இயேசு அழைக்கிறார். இருந்தபோதிலும், அந்த யூதர்களில் ஒருசிலராவது இயேசுவைப் பற்றி கிறிஸ்தவர்கள் எதைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்களோ அதுவே சத்தியமென்று உணரும் நிலையிலிருந்தனர். அவர்கள் ‘பணிந்து கொள்ளுதல்’ பவுல் 1 கொரிந்தியர் 14:24, 25-ல் விளக்கும் விதத்தைப் போன்றிருக்கலாம், இப்படியாக அவர்கள் உண்மையில் மனந்திரும்பி கிறிஸ்தவர்களாகி, தம்முடைய சீஷர்களுக்காக தம் ஆத்துமாவையுங்கூட கொடுத்த இயேசுவின் பெரிதான அன்பை முழுமையாக மதித்துணருகிறார்கள்.யோவான் 15:12, 13.

12. பிலதெல்பியாவின் யூத ஜெப ஆலய அங்கத்தினர்கள், அவர்களில் சிலர் உள்ளூர் கிறிஸ்தவ சமூகத்துக்கு ‘பணிய வேண்டும்’ என்பதை அறிய ஏன் அதிர்ச்சியடைந்திருப்பார்கள்?

12 பிலதெல்பியாவிலுள்ள யூத ஜெப ஆலய அங்கத்தினர்கள், அவர்களில் சிலர் உள்ளூர் கிறிஸ்தவ சமூகத்துக்கு ‘பணிய வேண்டும்’ என்பதை அறிய அதிர்ச்சியடைந்திருப்பார்கள். உண்மையில் பார்க்கப்போனால் அந்தச் சபையில் யூதரல்லாத அநேகர் இருக்கிறார்கள், அவர்கள் நேர் எதிரானது நடைபெற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஏன்? ஏனென்றால் ஏசாயா முன்னறிவித்தார்: “[யூதரல்லாத] ராஜாக்கள் உன்னை [இஸ்ரவேலின் மக்களை] வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் கைத்தாய்களுமாயிருப்பார்கள்; தரையில் முகங்குப்புற விழுந்து உன்னைப் பணிந்து” கொள்வார்கள். (ஏசாயா 49:23; 45:14; 60:14) இதே பாணியில் சகரியா இவ்வாறு எழுத தூண்டப்பட்டார்: “அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் [யூதரல்லாரவர்] ஒரு யூதனுடைய வஸ்திரத் தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் வாருங்கள் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள்.” (சகரியா 8:23) ஆம், யூதரல்லாதவர்கள் யூதருக்கு முன்பாக பணிய வேண்டும், எதிர்மாறாக அல்ல!

13. பூர்வ இஸ்ரவேலுக்கு சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தை அனுபவிக்கப்போகிற அந்த யூதர்கள் யார்?

13 அந்தத் தீர்க்கதரிசனங்கள் தேவனின் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனத்திற்கு எழுதப்பட்டது. இவைகள் உரைக்கப்பட்டபோது அந்த மதிப்புவாய்ந்த நிலையை மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலர் எடுத்துக்கொண்டனர். ஆனால் யூத ஜாதி மேசியாவை தள்ளியபோது, யெகோவா அவர்களைப் புறம்பே தள்ளிவிட்டார். (மத்தேயு 15:3-9; 21:42, 43; லூக்கா 12:32; யோவான் 1:10, 11) பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே நாளின்போது, அந்த நிலைக்கு, தேவனுக்கு உண்மையுள்ள இஸ்ரவேலை, கிறிஸ்தவ சபையை தெரிந்தெடுத்தார். அதன் அங்கத்தினர்கள் இருதயத்தில் உண்மையில் விருத்தசேதனஞ் செய்த ஆவிக்குரிய யூதர்கள். (அப்போஸ்தலர் 2:1-4, 41, 42; ரோமர் 2:28, 29; கலாத்தியர் 6:16) அதன் பிறகு, சொல்லர்த்தமான யூதர்கள் யெகோவாவுடன் தயவுபெற்ற உறவிற்குள் வருவதற்கு ஒரே வழியானது அவர்கள் மேசியாவாக இயேசுவில் விசுவாசம் வைப்பதே. (மத்தேயு 23:37-39) தெளிவாக, பிலதெல்பியாவிலுள்ள சில நபர்களிடம் இது இவ்வாறு நடக்கவிருந்தது. a

14. ஏசாயா 49:23-ம் சகரியா 8:23-ம் எவ்வாறு தற்காலத்தில் குறிப்பிடத்தக்க நிறைவேற்றமடைந்திருக்கின்றன?

14 தற்காலத்தில், ஏசாயா 49:23 மற்றும் சகரியா 8:23 போன்ற தீர்க்கதரிசனங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க நிறைவேற்றத்தை அடைந்திருக்கின்றன. யோவான் வகுப்பாரின் பிரசங்கிப்பின் விளைவாக, மக்கள் திரளான எண்ணிக்கையில் திறந்த வாசல் வழியாக ராஜ்ய சேவையில் நுழைந்திருக்கிறார்கள். b இவர்களில் அநேகர் கிறிஸ்தவ மண்டலத்திலிருந்து வெளியே வந்திருக்கிறார்கள், இவர்களின் மதங்கள் தாங்கள் ஆவிக்குரிய இஸ்ரவேலர் என்று பொய்யாக உரிமைபாராட்டுகின்றன. (ரோமர் 9:6-ஐ ஒப்பிடவும்.) இவர்கள், ஒரு திரள்கூட்டமாக, இயேசுவுடைய பலியின் இரத்தத்தின்மேல் விசுவாசம் வைப்பதன் மூலம் தங்கள் அங்கிகளைத் துவைத்து அவற்றை வெண்மையாக ஆக்குகிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9, 10, 14) கிறிஸ்துவின் ராஜ்ய ஆட்சிக்குக் கீழ்ப்படிவதனால், அதன் ஆசீர்வாதங்களை இங்கே பூமியிலே சுதந்தரிக்க நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். ஆவிக்குரிய விதத்தில் சொல்வோமானால், அவர்கள் இயேசுவின் அபிஷேகஞ்செய்யப்பட்ட சகோதரர்களிடம் வந்து “பணிவார்கள்,” ஏனென்றால், ‘தேவன் அவர்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறார்கள்.’ இந்த அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களுக்கு அவர்கள் ஊழியம் செய்கிறார்கள், இவர்களோடு உலகளாவிய சகோதர கூட்டுறவில் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள்.—மத்தேயு 25:34-40; 1 பேதுரு 5:9.

‘சோதனை மணிநேரம்’

15. (அ) பிலதெல்பியாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு எதை இயேசு வாக்களித்தார், அவர்கள் எதைச் செய்யும்படி உற்சாகப்படுத்தப்பட்டனர்? (ஆ) எந்தக் ‘கிரீடத்தைப்’ பெற கிறிஸ்தவர்கள் முன்னோக்கி இருந்தனர்?

15 இயேசு தொடர்ந்து சொல்லுகிறார்: “என் பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக் கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் [சோதனை மணிநேரத்திற்கு, NW] தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.” (வெளிப்படுத்துதல் 3:10, 11) யோவான் காலத்து கிறிஸ்தவர்கள் (1914-ல் ஆரம்பமான) கர்த்தரின் நாள் வரை பிழைத்திராதபோதிலும் இயேசு வருகிறார் என்ற அவர்களின் நம்பிக்கை அவர்களுக்குத் தொடர்ந்து பிரசங்கித்துக்கொண்டிருக்க பெலத்தைக் கொடுக்கும். (வெளிப்படுத்துதல் 1:10; 2 தீமோத்தேயு 4:2) “கிரீடம்” அல்லது நித்தியஜீவ வாழ்க்கையின் பரிசு, அவர்களுக்குப் பரலோகத்தில் காத்துக்கொண்டிருந்தது. (யாக்கோபு 1:12; வெளிப்படுத்துதல் 11:18) மரணம் வரையாக அவர்கள் உண்மையுள்ளவர்களாக இருந்தால், அவர்கள் அந்த வெகுமதியை இழக்கச்செய்ய ஒருவராலும் கூடாது.—வெளிப்படுத்துதல் 2:10.

16, 17. (அ) ‘பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனை மணிநேரம்” எது? (ஆ) ‘சோதனை மணிநேரத்தின்’ துவக்கத்தில் அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களின் நிலை எவ்வாறிருந்தது?

16 ஆனால், அந்தச் ‘சோதனை மணிநேரம்’ என்பது என்ன? சந்தேகமில்லாமல், ஆசியாவிலிருந்த அந்தக் கிறிஸ்தவர்கள் ரோம அரசிடமிருந்து மேலுமாக வந்த கடுமையான துன்புறுத்தலைச் சமாளிக்கவேண்டியதாயிருந்தது. c இருந்தபோதிலும், பெரிய நிறைவேற்றமானது 1918 முதல் உச்சக்கட்டத்தை அடைந்த கர்த்தருடைய நாளில் வந்த சுத்தப்படுத்தும் மற்றும் நியாயந்தீர்க்கும் காலமாயிருந்தது. அந்தச் சோதனையானது ஒருவன் கடவுளுடைய ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்திற்குரியவனா சாத்தானின் உலகுக்குரியவனா என்பதைத் தீர்மானிக்கவே இருந்தது. அது ஒப்பிட்டுப் பார்க்கும்போது ஒரு குறுகிய காலப்பகுதிக்குரியதாகவே இருந்தது, ஒரு “மணிநேரம்.” ஆனால் அது இன்னும் முடிவடையவில்லை. அது முடிவடையும்வரை, நாம் ‘சோதனை மணிநேரத்திலேயே’ வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை ஒருபோதும் மறந்துவிடக்கூடாது.லூக்கா 21:34-36.

17 யோவான் வகுப்பான அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் 1918-ல்பிலதெல்பியாவிலுள்ள அந்த உறுதியான சபையைப் போலஎதிர்ப்பை தற்கால “சாத்தானின் கூட்டத்தா”ரிடமிருந்து எதிர்ப்படவேண்டியிருந்தது. ஆவிக்குரிய யூதர்கள் என்று தங்களை உரிமைபாராட்டின கிறிஸ்தவமண்டலத்தின் மதத் தலைவர்கள், மெய்க் கிறிஸ்தவர்களை ஒடுக்குவதற்காக ஆட்சியாளர்களைத் தந்திரமாக செயல்படுத்தினார்கள். இருந்தபோதிலும், இவர்கள் ‘இயேசுவின் வார்த்தையாகிய சகிப்புத்தன்மையைக் காத்துக்கொள்ள’ கடுமையாக முயற்சி செய்தார்கள்; ஆகவே, ஒரு வெளிப்படையான “கொஞ்ச பெல”னான ஆவிக்குரிய உதவியுடன், அவர்கள் தப்பிப்பிழைத்தார்கள், மேலும் அவர்களுக்கு முன்பு இப்போது திறந்திருந்த வாசலுக்குள் நுழைய தூண்டுவிக்கப்பட்டனர். எந்த விதத்தில்?

“ஒரு திறந்த வாசல்”

18. என்ன நியமிப்பை இயேசு 1919-ல் செய்தார், நியமிக்கப்பட்டவர்கள் எவ்வாறு எசேக்கியாவின் உண்மையுள்ள விசாரணைக்காரனைப்போல் ஆனார்கள்?

18 இயேசு 1919-ல் தன்னுடைய வாக்கை நிறைவேற்றி ஒரு சிறு தொகுதியான மெய்யான அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை அடையாளங்கண்டு அவர்களைத் தன்னுடைய “உண்மையும் விவேகமுமுள்ள அடிமையாக” ஏற்றுக்கொண்டிருக்கிறார். (மத்தேயு 24:45-47) இவர்கள் எசேக்கியா ராஜாவின் காலத்தில் உண்மையுள்ள விசாரணைக்காரனான எலியாக்கீம் அனுபவித்தது போன்ற ஒரு சிலாக்கியத்துக்குள் நுழைந்தார்கள். d எலியாக்கீம் பற்றி யெகோவா சொன்னார்: “தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு அவன் திறப்பான், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு அவன் பூட்டுவான்.” தாவீதின் அரசகுமாரனான எசேக்கியாவுக்காக எலியாக்கீம் பெரிய பொறுப்புகளைத் தாங்கி செய்தான். அதைப்போன்றே இன்று, அபிஷேகஞ்செய்யப்பட்ட யோவான் வகுப்பார் மேசியானிய ராஜ்யத்தின் பூமிக்குரிய அக்கறைகளோடு ஒப்படைக்கப்பட்ட “தாவீதுடைய வீட்டின் திறவுகோலை” வைத்திருக்கிறார்கள், இந்தச் சிலாக்கியத்துக்காக யெகோவா, கொஞ்சப் பெலத்தை பிரமாண்டமான உலகளாவிய சாட்சி கொடுத்தலுக்குப் போதுமான ஆற்றல் வாய்ந்த சக்தியாக அதிகப்படுத்தி, அவரது ஊழியர்களை பலப்படுத்தியிருக்கிறார்.ஏசாயா 22:20, 22; 40:29.

19. யோவான் வகுப்பார் 1919-ல் இயேசு கொடுத்த பொறுப்பை எவ்வாறு கையாண்டார்கள், என்ன விளைவோடு?

19 அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோர், 1919 முதல் இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி, ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை உலகமுழுவதும் பிரசங்கிக்கும் அதிதீவிரமான வேலையில் இறங்கினார்கள். (மத்தேயு 4:17; ரோமர் 10:18) இதன் விளைவாக, சாத்தானின் தற்கால ஜெபாலயமாகிய கிறிஸ்தவமண்டலத்தைச் சேர்ந்த சிலர், இந்த அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதியானோரிடம் வந்து, அடிமையின் அதிகாரத்துவத்தை ஏற்றுக்கொண்டு மனந்திரும்பி, ‘பணிகிறார்கள்.’ அவர்களுங்கூட யோவான் வகுப்பைச் சார்ந்த மூத்தவர்களுடன் ஐக்கியப்பட்டு யெகோவாவைச் சேவிக்க வந்தார்கள். இது இயேசுவின் அபிஷேகஞ்செய்யப்பட்ட சகோதரர்களின் முழு எண்ணிக்கையும் சேர்க்கப்படும் வரையாக தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து, ‘சகல ஜாதிகளிலிருந்தும் ஒரு திரள் கூட்டம்’ அபிஷேகஞ்செய்யப்பட்ட அடிமைக்கு முன்பாக “பணிய” வந்தது. (வெளிப்படுத்துதல் 7:3, 4, 9) ஒன்றாக சேர்ந்து, அடிமையும் இந்தத் திரள்கூட்டமும் யெகோவாவின் சாட்சிகளாக ஒரே மந்தையாக சேவை செய்கிறார்கள்.

20. இன்று யெகோவாவின் சாட்சிகள் முக்கியமாக விசுவாசத்தில் உறுதியுள்ளவர்களாகவும் கடவுளுடைய சேவையில் சுறுசுறுப்புள்ளவர்களாகவும் ஏன் இருக்கவேண்டும்?

20 பிலதெல்பியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் போன்று மெய்யான சகோதர சிநேகம் என்னும் பந்தத்தினால் ஐக்கியப்பட்டு, யெகோவாவின் சாட்சிகள் இன்று அவர்களது பிரசங்கிக்கும் வேலை அவசரமாக செய்யப்படவேண்டும் என்பதை மதித்துணருகிறார்கள். விரைவில், மகா உபத்திரவம் சாத்தானின் பொல்லாத உலகத்தின் மீது ஒரு முடிவைக் கொண்டுவரும். யெகோவாவின் ஜீவ புஸ்தகத்திலிருந்து நம்முடைய பெயர்கள் கிறுக்கப்படாதபடிக்கு, அந்தச் சமயத்தில், நாம் ஒவ்வொருவரும் நம்மை விசுவாசத்தில் உறுதியுள்ளவர்களாகவும் கடவுளுடைய சேவையில் சுறுசுறுப்புள்ளவர்களாகவும் காண்போமாக. (வெளிப்படுத்துதல் 7:14) நாம் நம்முடைய ஊழிய சிலாக்கியங்களைப் பற்றிக்கொண்டிருந்து மேலும் நித்தியஜீவ வாழ்க்கையின் பரிசை அடைய பிலதெல்பியாவிலுள்ள சபைக்கு இயேசு கொடுத்த எச்சரிப்பை நாம் மிகவும் கவனத்துடன் ஏற்போமாக.

ஜெயங்கொள்ளுகிறவர்களின் ஆசீர்வாதங்கள்

21. இன்று அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் எவ்வாறு ‘இயேசுவின் பொறுமையைக் குறித்து சொல்லிய வசனத்தை காத்துக்கொண்டார்கள்,’ என்ன எதிர்காலம் அவர்களுக்குக் காத்துக்கொண்டிருக்கிறது?

21 யோவான் வகுப்பார் இன்று, ‘இயேசுவின் பொறுமையைக் குறித்து சொல்லிய வசனத்தை காத்துக்கொண்டிருக்கிறார்கள்,’ அதாவது, அவர்கள் அவரது உதாரணத்தைப் பின்பற்றியிருக்கிறார்கள் மேலும் சகித்திருக்கிறார்கள். (எபிரெயர் 12:2, 3; 1 பேதுரு 2:21) இப்படியாக அவர்கள் பிலதெல்பியாவிலுள்ள சபைக்குக் கொடுக்கப்பட்ட இயேசுவின் மேலுமான வார்த்தைகளால் மிகவும் அதிகமாக உற்சாகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்: “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை.”—வெளிப்படுத்துதல் 3:12அ.

22. (அ) இயேசுவுடைய தேவனின் ஆலயம் எது? (ஆ) ஜெயங்கொள்ளும் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் இந்த ஆலயத்தில் தூண்களாக எப்படி ஆவார்கள்?

22 யெகோவாவின் ஆலயத்தில் தூணாக இருப்பது ஒருவருக்கு என்னே ஒரு சிலாக்கியம்! பூர்வகால எருசலேமில், சொல்லர்த்தமான ஆலயம் யெகோவாவின் வணக்கத்தின் மையமாக இருந்தது. ஆலயத்திற்குள், “மகா பரிசுத்த ஸ்தலத்தில்” யெகோவாவின் பிரசன்னத்தை பிரதிநிதித்துவம் செய்த ஓர் அற்புதமான ஒளிக்கு முன்பாக பிரதான ஆசாரியன் பலிசெலுத்தப்படும் மிருகங்களின் இரத்தத்தை வருடத்திற்கு ஒரு முறை அளித்தார். (எபிரெயர் 9:1-7) இயேசுவின் முழுக்காட்டுதலின்போது, மற்றொரு ஆலயம் காட்சிக்கு வந்தது, யெகோவாவை வணங்குவதற்கு ஒரு பெரிய ஆவிக்குரிய ஆலயம் போன்ற ஏற்பாடு. இந்த ஆலயத்தின் மகா பரிசுத்த ஸ்தலம் பரலோகத்தில் இருக்கிறது, அங்கு “தேவனுடைய சமூகத்தில்” இயேசு சரியாகவே தோன்றினார். (எபிரெயர் 9:24) இயேசுவே பிரதான ஆசாரியர், பாவங்களை முழுமையாக மூட ஒரே ஒரு பலி கொடுக்கப்பட்டது. அது பரிபூரண மனிதராகிய இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தம் ஆகும். (எபிரெயர் 7:26, 27; 9:25-28; 10:1-5, 12-14) உண்மையுள்ளவர்களாக இருக்கும் வரையில், பூமியிலுள்ள அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் இந்த ஆலயத்தின் பூமிக்குரிய பிரகாரங்களில் உதவி ஆசாரியர்களாக ஊழியம் செய்கிறார்கள். (1 பேதுரு 2:9) ஆனால் ஜெயங்கொண்டுவிட்டால், அவர்களுங்கூட அந்தப் பரலோக மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, வணக்கத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆலயம் போன்றதற்கு தூண்களைப் போன்று, அசைக்கமுடியாத ஆதாரங்களாகிறார்கள். (எபிரெயர் 10:19; வெளிப்படுத்துதல் 20:6) எந்தவித ஆபத்துமில்லை ஏனென்றால் “அதனின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை.”

23. (அ) ஜெயங்கொள்ளும் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு என்ன வாக்குத்தத்தத்தை இயேசு அடுத்து கொடுக்கிறார்? (ஆ) யெகோவாவின் நாமமும், புதிய எருசலேமின் நாமமும் எழுதப்படுவதிலிருந்து ஜெயங்கொள்ளும் கிறிஸ்தவர்கள் மேல் என்ன விளைவு ஏற்படுகிறது?

23 இயேசு இவ்வாறு தொடர்ந்து கூறுகிறார்: “என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன் மேல் எழுதுவேன்.” (வெளிப்படுத்துதல் 3:12ஆ) ஆம், ஜெயங்கொள்பவர்கள் மீது தங்களுடைய தேவனாகிய மற்றும் இயேசுவின் தேவனாகிய யெகோவாவின் நாமம் எழுதப்படுகிறது. இது யெகோவாவும் இயேசுவும் இரண்டு தனிப்பட்ட நபர்கள், திரியேக கடவுளின் அல்லது திரித்துவத்தின் இரண்டு பாகங்கள் அல்ல என்பதைத் தெளிவாக காட்டுகிறது. (யோவான் 14:28; 20:17) இந்த அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள் யெகோவாவுக்குச் சொந்தமானவர்கள் என்பதை அனைத்து சிருஷ்டியும் அறிந்துக்கொள்ள வேண்டும். அவர்கள் அவருடைய சாட்சிகள். பரலோகத்திலிருந்து கீழே இறங்கிவரும் பரலோக நகரமாகிய புதிய எருசலேமின் நாமமும் அவர்கள் மீது எழுதப்படுகிறது. உண்மையுள்ள அனைத்து மனிதவர்க்கத்தின் மீது அதனுடைய நன்மையான ஆட்சியை விரிவாக்குகிறது என்ற அர்த்தத்தில் இது கீழே இறங்கி வருகிறது. (வெளிப்படுத்துதல் 21:9-14) இப்படியாக, பூமிக்குரிய கிறிஸ்தவ செம்மறியாடுகள் யாவும் இந்த ஜெயங்கொள்ளும் அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள் ராஜ்யத்தின், அதாவது பரலோக எருசலேமின் பிரஜைகள் என்பதையும் அறிந்துகொள்வார்கள்.சங்கீதம் 87:5, 6; மத்தேயு 25:33, 34; பிலிப்பியர் 3:20; எபிரெயர் 12:22.

24. இயேசுவின் புதிய நாமம் எதனால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது, உண்மையுள்ள அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் மேல் அது எப்படி எழுதப்பட்டிருக்கிறது?

24 கடைசியாக, ஜெயங்கொண்ட அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள் இயேசுவின் புதிய நாமத்தைத் தங்கள்மீது எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இது இயேசுவின் புதிய அதிகாரப் பதவியையும் யெகோவா தேவன் அவருக்கு கொடுக்கும் தனி சிலாக்கியங்களையும் குறிக்கிறது. (பிலிப்பியர் 2:9-11; வெளிப்படுத்துதல் 19:12) எப்படியெனில் அந்த அனுபவங்கள் வேறொருவருக்கும் இருப்பதில்லை அல்லது அந்தச் சிலாக்கியங்கள் வேறொருவருக்கும் ஒப்படைக்கப்படுவதில்லை என்ற அர்த்தத்தில் வேறு ஒருவரும் அந்த நாமத்தை அறியவருவதில்லை. ஆகிலும், தம்முடைய உண்மையுள்ள சகோதரர்கள் மீது இயேசு தம்முடைய நாமத்தை எழுதுகையில், அவர்கள் அவருடன் பரலோக பிரதேசத்தில் ஒரு நெருங்கிய உறவுக்குள் வருகிறார்கள், அவருடைய சிலாக்கியங்களிலுங்கூட பங்குகொள்கிறார்கள். (லூக்கா 22:29, 30) இப்பேர்ப்பட்ட அபிஷேகம்பண்ணப்பட்டவர்களுக்கு பின்வரும் புத்திமதியை மறுபடியும் எடுத்துரைப்பதன் மூலம் இயேசு தம்முடைய செய்தியை முடிப்பதில் ஆச்சரியமில்லை: “ஆவியானவர் [ஆவி, NW] சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக் கடவன்.”—வெளிப்படுத்துதல் 3:13.

25. பிலதெல்பியாவிலுள்ள சபைக்கு இயேசு கொடுத்த புத்திமதியில் அடங்கியிருக்கும் நியமத்தை இன்று ஒவ்வொரு தனிப்பட்ட கிறிஸ்தவனும் எவ்வாறு பொருத்தலாம்?

25 பிலதெல்பியாவிலுள்ள உண்மையுள்ள கிறிஸ்தவர்களுக்கு இந்தச் செய்தி எப்பேர்ப்பட்ட மகத்தான உற்சாகமாக இருந்திருக்க வேண்டும்! அது நிச்சயமாகவே ஒரு சக்திவாய்ந்த பாடத்தை யோவான் வகுப்பாருக்கு இப்போது, கர்த்தருடைய நாளின்போது கொண்டிருக்கிறது. ஆனால் அதன் நியமங்கள் தனிப்பட்ட ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும், அபிஷேகஞ்செய்யப்பட்டவராயிருந்தாலும் அல்லது வேறே ஆடுகளின் பாகமாக இருந்தாலும் முக்கியமானது. (யோவான் 10:16) பிலதெல்பியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் செய்தது போலவே நாம் ஒவ்வொருவரும் தொடர்ந்து ராஜ்ய கனிகளைப் பிறப்பித்துக்கொண்டிருப்பது நல்லது. நாம் எல்லாரும் கொஞ்சம் பெலத்தையாவது கொண்டிருக்கிறோம். நாம் எல்லாரும் யெகோவாவின் சேவையில் எதையாவது செய்யலாம். இந்தப் பெலத்தை நாம் உபயோகிப்போமாக! அதிகப்படியான ராஜ்ய சிலாக்கியங்களின் சம்பந்தமாக, நாம் எந்த வாசல் திறந்திருக்கிறதோ அதனுள் நுழைய விழிப்புள்ளவர்களாக இருப்போமாக. அப்படிப்பட்ட வாசலைத் திறப்பதற்கு யெகோவாவிடம் நாம் ஜெபிக்கவும் செய்யலாம். (கொலோசெயர் 4:2, 3) நாம் இயேசுவின் சகிப்புத்தன்மையின் மாதிரியைப் பின்பற்றி அவரது பெயருக்கு உண்மையுள்ளவர்களாக நிரூபிப்போமேயானால், நாமும்கூட கடவுளின் பரிசுத்த ஆவி சபைகளுக்கு என்ன சொல்லுகிறது என்பதைக் கேட்க கவனமுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதைக் காட்டுவோம்.

[அடிக்குறிப்புகள்]

a பவுலின் காலத்தில், கொரிந்துவிலிருந்த யூத ஜெப ஆலய தலைவன் சொஸ்தேனே ஒரு கிறிஸ்தவ சகோதரன் ஆனார்.—அப்போஸ்தலர் 18:17; 1 கொரிந்தியர் 1:1.

b யோவான் வகுப்பினரால் பிரசுரிக்கப்படும் காவற்கோபுர பத்திரிகை, பிரசங்க வேலையில் எவ்வளவு கூடுமோ அவ்வளவு பங்குகொள்ள, இந்தச் சந்தர்ப்பத்தை ஆதாயப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசரத்தை தொடர்ந்து உயர்த்திக் காண்பிக்கிறது; உதாரணமாக, ஜனவரி 1, 2004 தேதியிட்ட காவற்கோபுர பத்திரிகையில், “யெகோவாவின் மகிமையை அனைவரும் அறிவிப்பார்களாக!,” “‘அவர்களின் சத்தம் பூமியெங்கும் செல்கிறது’” என்ற கட்டுரைகளைப் பாருங்கள். ஜூன் 1, 2004 தேதியிட்ட காவற்கோபுர பத்திரிகையில், “தேவனை மகிமைப்படுத்துகிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்ற கட்டுரையில், முழுநேர ஊழியத்தில் ‘திறந்த வாசலுக்குள்’ நுழைவதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இப்படி ஊழியம் செய்ததால் 2005-ம் ஆண்டில் ஒரு மாதத்தில் பயனியர்களின் உச்ச எண்ணிக்கை 10,93,552 என அறிக்கை செய்யப்பட்டிருந்தது.

c மக்ளிண்டாக் அண்ட் ஸ்ட்ராங்ஸ் சைக்ளோபீடியா (தொகுதி X, பக்கம் 519) இவ்வாறு அறிக்கை செய்கிறது: “கிறிஸ்தவ விசுவாசத்தின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பயத்தோடு கவனித்து வந்த புறமத தலைவர்கள் பொதுமக்கள் மத்தியில் தூண்டிவிட்ட ஆரவாரத்தால் கிறிஸ்தவம் பேரரசர்களின் கவனத்துக்கு வலுக்கட்டாயமாக கொண்டுவரப்பட்டது. இதற்கேற்ப டிராஜன் [பொ.ச. 98-117] மனிதரை கடவுட்களை விரோதிப்பவர்களாக மாற்றிய புதிய போதனையைப் படிப்படியாக கட்டுப்படுத்த அரச ஆணை ஒன்றைப் பிறப்பிக்க வழிநடத்தப்பட்டான். கிறிஸ்தவத்தின் தீவிரமான வளர்ச்சியும் அதன்விளைவாக தன்னுடைய நாட்டிற்குள் ஏற்பட்ட புறமத ஜனக்கூட்டத்தின் கோப எழுச்சியும் பெத்தானியாவின் [ஆசியாவின் ரோம ஆட்சிப்பகுதியின் வடக்கு எல்லை] ஆளுனரான இளைய பிலினியின் ஆட்சிமுறையில் மிகுந்த குழப்பத்தை உண்டாக்கியது.”

d எசேக்கியா என்ற பெயருக்கு அர்த்தம் “யெகோவா பலப்படுத்துகிறார்” என்பதாகும். 2 இராஜாக்கள் 16:20 அடிக்குறிப்பைக் காண்க, துணைக்குறிப்புகளடங்கிய புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள்.

[கேள்விகள்]

[பக்கம் 63-ன் பெட்டி]

அநேகர் பணிய உதவுதல்

பரலோக ராஜ்யத்தை சுதந்தரிக்கப்போகும் 1,44,000 பேரில், ஒன்பதாயிரத்துக்கும் குறைவான ஒரு மீதியானோர், யோவான் வகுப்பார், இன்னும் அவர்களுடைய பூமிக்குரிய வாழ்க்கையை முடிக்கவேண்டும். அதே சமயத்தில், திரள்கூட்டமானது 66,00,000 அதிகமாக ஒரு பெரும் எண்ணிக்கையாக வளர்ந்திருக்கிறது. (வெளிப்படுத்துதல் 7:4, 9) இந்தப் பெரும் அதிகரிப்பு ஏற்பட எது உதவியது? யெகோவாவின் சாட்சிகளால் நடத்தப்பட்ட பல்வேறு பள்ளிகள் பெரிதும் இதற்கு உதவியிருக்கின்றன. உலக தத்துவங்களைப் போதித்து பைபிளின் தரத்தைக் குறைத்துக்கூறும் கிறிஸ்தவமண்டலத்தின் இறையியல் வகுப்புகளிலிருந்து மிகவும் வித்தியாசப்பட்டதாய், இந்தச் சாட்சிகளின் பள்ளிகள் கடவுளுடைய வார்த்தையில் ஆழமான விசுவாசத்தை மனதில் பதிய வைக்கிறது. சுத்தம், ஒழுக்கமுள்ள வாழ்க்கை, தேவனுக்கு ஒப்புக்கொடுத்த ஊழியம் ஆகியவற்றின் நடைமுறையான பொருத்தங்களைக் காண்பிக்கின்றன. உலகமுழுவதும் 1943 முதல் யெகோவாவின் சாட்சிகளுடைய ஒவ்வொரு சபையும் அதன் ராஜ்ய மன்றத்தில் ஓர் உள்ளூர் தேவராஜ்ய ஊழியப்பள்ளியை நடத்துகிறது. ஒவ்வொரு வாரமும் பல லட்சக்கணக்கானோர் ஒரே மாதிரியான பைபிள் கல்வி நிகழ்ச்சியை பின்பற்றும் இப்பள்ளியில் கலந்துகொள்கிறார்கள்.

யெகோவாவின் சாட்சிகள் 1959 முதல் சபையின் மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் பயிற்றுவிக்க ராஜ்ய ஊழியப் பள்ளிகளையும் நடத்திவந்திருக்கிறார்கள். பயனியர் ஊழியப் பள்ளிகள் 1977 முதல் லட்சக்கணக்கான சகோதரர்களையும் சகோதரிகளையும் பயிற்றுவித்திருக்கிறது, இவர்கள் மெய்யான பிலதெல்பிய ஆவியுடன் பிரசங்கிப்பு வேலையில் முழுநேரமாக யெகோவாவை சேவிக்கிறார்கள். ஆண் சாட்சிகளை 1987-ல் உலகப் பிராந்தியத்தில் விசேஷ நியமனங்களுக்காக பயிற்றுவிப்பதற்கு, ஊழியப் பயிற்சிப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது.

யெகோவாவின் சாட்சிகளால் நடத்தப்பட்ட பள்ளிகளில் மிகவும் முதன்மையானது உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளி ஆகும். நியு யார்க் மாநிலத்திலிருக்கும் இந்த மிஷனரி பள்ளி 1943 முதல் அநேகமாக ஒவ்வொரு வருடமும் இரண்டு தொகுதியான மாணாக்கர்களுக்கு பட்டமளித்திருக்கிறது. மொத்தமாக, அது 7,000-த்திற்கும் மேற்பட்ட யெகோவாவின் ஊழியர்களை வெளிநாட்டு மிஷனரி சேவைக்குப் பயிற்சி அளித்திருக்கிறது. இந்தப் பள்ளியில் பட்டம் பெற்றவர்கள் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் சேவை செய்திருக்கிறார்கள், இவற்றில் அநேக இடங்களில் இவர்களே அங்கு ராஜ்ய வேலை ஆரம்பிக்க கருவியாக இருந்திருக்கிறார்கள். சுமார் 60 வருடங்களுக்குப் பின்பும் பழைய மிஷனரிகளில் அநேகர் இன்னும் சேவை செய்து, புதிய மிஷனரிகளோடு சேர்ந்து யெகோவாவின் அமைப்பு உலகமுழுவதும் விரிவாகி முன்னேறுவதில் பங்குகொள்கிறார்கள். என்னே ஓர் அற்புதமான பெருக்கமாக இது இருந்திருக்கிறது!

[பக்கம் 64-ன் அட்டைபடம்]

அரசாளுகிற அரசர் இயேசு 1919-ல் கிறிஸ்தவ வாய்ப்பு என்ற ஒரு வாசலை திறந்து வைத்தார். எண்ணிக்கையில் வளர்ந்து கொண்டிருக்கிற அர்ப்பணிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தைச் சாதகமாக எடுத்துக் கொண்டுள்ளனர்.

பிரசங்கிப்பு பிரசங்கிப்பில் முழுநேர

சென்றடைந்த பங்குபெற்ற பிரசங்கிப்பாளர்கள் e

ஆண்டு தேசங்கள் கிறிஸ்தவர்கள் f

1918 14 3,868 591

1928 32 23,988 1,883

1938 52 47,143 4,112

1948 96 2,30,532 8,994

1958 175 7,17,088 23,772

1968 200 11,55,826 63,871

1978 205 20,86,698 1,15,389

1988 212 34,30,926 4,55,561

1998 233 55,44,059 6,98,781

2005 235 63,90,022 8,43,234

[அடிக்குறிப்பு]

e மேற்குறிப்பிடப்பட்டுள்ள எண்கள் மாத சராசரிகள்.

f மேற்குறிப்பிடப்பட்டுள்ள எண்கள் மாத சராசரிகள்.

[பக்கம் 65-ன் அட்டைபடம்]

யெகோவாவின் சாட்சிகளுடைய நடவடிக்கையானது முழு இருதயப்பூர்வமானது. உதாரணமாக, பிரசங்கித்தலிலும் போதித்தலிலும் அவர்கள் செலவிட்ட மணிநேரங்களையும், அவர்கள் ஜனங்களுடைய வீடுகளில் நடத்தி வந்த பெரும் எண்ணிக்கையான இலவச பைபிள் படிப்புகளையும் குறித்து எண்ணிப் பாருங்கள்.

பிரசங்கிப்பில் செலவழிக்கப்பட்ட நடத்தப்பட்ட

மணிநேரங்கள் வேதப்படிப்புகள்

ஆண்டு (வருடாந்தர மொத்தம்) (மாத சராசரி)

1918 19,116 பதிவாகியில்லை

1928 28,66,164 பதிவாகியில்லை

1938 1,05,72,086 பதிவாகியில்லை

1948 4,98,32,205 1,30,281

1958 11,03,90,944 5,08,320

1968 20,86,66,762 9,77,503

1978 30,72,72,262 12,57,084

1988 78,55,21,697 32,37,160

1998 118,66,66,708 43,02,852

2005 127,82,35,504 60,61,534

[பக்கம் 59-ன் படம்]

முதல் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு ரோம திறவுகோல்