ஒரு புதிய வானமும் ஒரு புதிய பூமியும்
அதிகாரம் 42
ஒரு புதிய வானமும் ஒரு புதிய பூமியும்
1. அந்தத் தூதன் யோவானை ஆயிர ஆண்டு ஆட்சியின் தொடக்கத்துக்குத் திரும்பக் கொண்டுசெல்கையில் யோவான் எதை விவரிக்கிறார்?
அ ந்தத் தூதன் யோவானை அந்த ஆயிர ஆண்டு ஆட்சியின் தொடக்கத்துக்குத் திரும்பக் கொண்டுசெல்கையில் இந்த மகிமையான தரிசனம் தொடர்ந்து வெளியாகிறது. அவர் விவரிப்பது என்ன? “பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று.” (வெளிப்படுத்துதல் 21:1) கவனத்தைக் கவர்ந்திழுக்கும் பரந்த காட்சி பார்வைக்கு வருகிறது!
2. (அ) புதிய வானங்களையும் ஒரு புதிய பூமியையும் பற்றிய ஏசாயாவின் தீர்க்கதரிசனம், பொ.ச.மு. 537-ல் திரும்பநிலைநாட்டப்பட்ட யூதர்மீது எவ்வாறு நிறைவேறினது? (ஆ) ஏசாயாவின் தீர்க்கதரிசனத்துக்கு மேலுமாக ஒரு நிறைவேற்றப் பொருத்தம் இருக்குமென நாம் எவ்வாறு அறிகிறோம், இந்த வாக்குத்தத்தம் எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது?
2 யோவானுடைய நாளுக்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், யெகோவா ஏசாயாவினிடம் பின்வருமாறு சொல்லியிருந்தார்: “இதோ, நான் புதிய வானத்தையும் [வானங்களையும், NW] புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை.” (ஏசாயா 65:17; 66:22) உண்மையுள்ள யூதர்கள் பாபிலோனில் நாடுகடத்தப்பட்ட தங்கள் 70 ஆண்டு சிறையிருப்புக்குப் பின், பொ.ச.மு. 537-ல் எருசலேமுக்குத் திரும்பிவந்தபோது இந்தத் தீர்க்கதரிசனம் முதலாவதாக நிறைவேறிற்று. திரும்பநிலைநாட்டப்பட்டதில், அவர்கள், ஒரு புதிய அரசாங்க ஒழுங்குறையான, “புதிய வானங்க”ளின்கீழ், சுத்திகரிக்கப்பட்ட சமுதாயமான ஒரு “புதிய பூமி”யாக அமைந்தார்கள். எனினும், அப்போஸ்தலன் பேதுரு, இந்தத் தீர்க்கதரிசனத்தின் மேலுமான நிறைவேற்றப் பொருத்தத்தைக் குறிப்பிட்டு, பின்வருமாறு கூறினார்: “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (2 பேதுரு 3:13) இந்த வாக்குத்தத்தம் கர்த்தருடைய இந்த நாளின்போது நிறைவேற்றமடைவதை யோவான் இப்பொழுது காட்டுகிறார். “முந்தின வானமும் முந்தின பூமியும்” ஆகிய சாத்தானுடைய ஒழுங்குபடுத்தியமைக்கப்பட்ட காரிய ஒழுங்குமுறை, சாத்தானும் அவனுடைய பேய்களும் செல்வாக்குச் செலுத்தும் அதன் அரசாங்க அமைப்போடுகூட ஒழிந்துபோகும். கொந்தளிக்கும் ‘சமுத்திரம்’ ஆகிய பொல்லாத, கலகக்கார மனிதவர்க்கம் இல்லாமற்போகும். அதனிடத்தில் ஒரு “புதிய வானமும் புதிய பூமியும்” ஆகிய—பூமிக்குரிய ஒரு புதிய சமுதாயம் ஒரு புதிய அரசாங்கத்தின், கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் இருக்கும்.—வெளிப்படுத்துதல் 20:11-ஐ ஒத்துப்பாருங்கள்.
3. (அ) யோவான் எதை விவரிக்கிறார், புதிய எருசலேம் என்பது என்ன? (ஆ) புதிய எருசலேம் எவ்வாறு ‘பரலோகத்தைவிட்டு இறங்கிவருகிறது’?
3 யோவான் தொடர்ந்து சொல்வதாவது: “புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.” (வெளிப்படுத்துதல் 21:2) புதிய எருசலேம் கிறிஸ்துவின் மணவாட்டியாகும், இது, மரணபரியந்தம் உண்மையுள்ளோராக நிலைத்திருந்தவர்களும், மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவுடன் அரசர்களும் ஆசாரியர்களுமாகும்படி எழுப்பப்படுபவர்களுமான அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாலாகியது. (வெளிப்படுத்துதல் 3:12; 20:6) பூர்வ இஸ்ரவேலில் பூமிக்குரிய எருசலேம் அரசாங்கத்தின் இருப்பிடமானதுபோல், இந்தச் சிறப்புவாய்ந்த புதிய எருசலேமும் அதன் மணவாளரும் அந்தப் புதிய காரிய ஒழுங்குமுறையின் அரசாங்கமாக அமைகின்றனர். இதுவே அந்தப் புதிய வானம். இந்த ‘மணவாட்டி பரலோகத்தைவிட்டு இறங்கிவருவது’ சொல்லர்த்தமான விதமாக அல்ல, ஆனால் பூமிக்குக் கவனத்தைச் செலுத்தும் கருத்திலாகும். மனிதவர்க்கம் முழுவதன்மீதும் நீதியுள்ள ஓர் அரசாங்கத்தை செயல்படச் செய்வதில், ஆட்டுக்குட்டியானவரின் மணவாட்டி அவருடைய பற்றுறுதியுள்ள பக்கத் துணைவியாக இருக்க வேண்டும். புதிய பூமிக்கு நிச்சயமாகவே ஓர் ஆசீர்வாதம்!
4. புதிதாய் அமைந்த இஸ்ரவேல் தேசத்துக்குத் தாம் கொடுத்ததைப்போன்ற என்ன வாக்குத்தத்தத்தைக் கடவுள் கொடுக்கிறார்?
4 யோவான் மேலுமாக நமக்குச் சொல்வதாவது: “மேலும், சிங்காசனத்திலிருந்து ஒரு பெருஞ்சத்தங் கேட்டேன்: இதோ, கடவுள் தங்கும் கூடாரம் மனுஷரிடத்திலிருக்கிறது; அவர்களிடத்தில் அவர் தங்குவார். அவர்கள் அவர் ஜனங்களாயிருப்பார்கள், கடவுள் தாமே அவர்களோடிருப்பார்.” (வெளிப்படுத்துதல் 21:3, தி.மொ.) அப்பொழுதிருந்த புதிய இஸ்ரவேல் தேசத்துடன் யெகோவா நியாயப்பிரமாண உடன்படிக்கை செய்தபோது, அவர் பின்வருமாறு வாக்குக்கொடுத்தார்: “உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பேன்; என் ஆத்துமா உங்களை அரோசிப்பதில்லை. நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்.” (லேவியராகமம் 26:11, 12) இப்பொழுது உண்மையுள்ள மனிதர்களுக்கு இதைப்போன்ற வாக்கை யெகோவா கொடுக்கிறார். அந்த ஆயிர-ஆண்டு நியாயத்தீர்ப்பு நாளின்போது, அவர்கள் அவருக்கு மிகத் தனிப்பட்ட ஜனமாவார்கள்.
5. (அ) அந்த ஆயிர ஆண்டு ஆட்சியின்போது கடவுள் மனிதவர்க்கத்துடன் எவ்வாறு தங்குவார்? (ஆ) அந்த ஆயிர ஆண்டு ஆட்சிக்குப் பின்பு கடவுள் எவ்வாறு மனிதவர்க்கத்துக்குள் தங்குவார்?
5 அந்த ஆயிர ஆண்டு ஆட்சியின்போது, யெகோவா, தம்முடைய அரச குமாரனாகிய இயேசு கிறிஸ்துவால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டு, தற்காலிகமான ஓர் ஏற்பாட்டில் மனிதவர்க்கத்தின் மத்தியில் “தங்குவார்.” எனினும், அந்த ஆயிர ஆண்டு ஆட்சியின் முடிவில், இயேசு ராஜ்யத்தைத் தம்முடைய பிதாவிடம் ஒப்புக்கொடுக்கையில், அரசப் பிரதிநிதி அல்லது மத்தியஸ்தராகப் பரிந்துபேசுபவருக்குத் தேவையிராது. யெகோவா ‘தம்முடைய ஜனங்களுடன்’ ஆவிக்குரிய பிரகாரம் நிலையான மற்றும் நேரடியான முறையில் தங்குவார். (யோவான் 4:23, 24-ஐ ஒத்துப்பாருங்கள்.) திரும்ப நிலைநாட்டப்பட்ட மனிதவர்க்கத்துக்கு எத்தகைய மேன்மையான சிலாக்கியம்!
6, 7. (அ) என்ன மகத்தான ஆசீர்வாதங்களை யோவான் வெளிப்படுத்துகிறார், இந்த ஆசீர்வாதங்களை யார் அனுபவித்து மகிழ்வர்? (ஆ) ஆவிக்குரியதும் இயற்கையியல்பானதுமான ஒரு பரதீஸை ஏசாயா எவ்வாறு விவரிக்கிறார்?
6 யோவான் மேலும் தொடர்ந்து சொல்லுகிறார்: “அவர்கள் கண்களினின்று கண்ணீர் யாவையும் துடைப்பார்; இனி மரணமிராது, துக்கமும் அலறுதலும் வேதனையும் இனி இரா; முந்தினவை ஒழிந்துபோயின.” (வெளிப்படுத்துதல் 21:4, தி.மொ.) முற்காலத்தில் தேவாவியால் ஏவப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு மறுபடியும் ஒருமுறை நினைப்பூட்டப்படுகின்றன. மரணமும் துக்கமும் இனிமேலும் இராமல், சஞ்சலம் ஆனந்தகளிப்பாக மாற்றப்படும் அந்தக் காலத்துக்கு ஏசாயாவும் ஆவலோடு எதிர்பார்த்தார். (ஏசாயா 25:8; 35:10; 51:11; 65:19) இந்த வாக்குத்தத்தங்கள் அந்த ஆயிர-ஆண்டு நியாயத்தீர்ப்பு நாளின்போது அதிசயமான நிறைவேற்றத்தை அடைகின்றனவென யோவான் இப்பொழுது உறுதிப்படுத்துகிறார். முதலாவது, திரள் கூட்டத்தார் இந்த ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழ்வர். “சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவர்,” தொடர்ந்து இவர்களை மேய்த்து, “இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்.” (வெளிப்படுத்துதல் 7:9, 17) முடிவில், உயிர்த்தெழுப்பப்பட்டு யெகோவாவின் ஏற்பாடுகளில் விசுவாசம் காட்டுவோர் யாவரும் அவர்களோடு அங்கிருந்து, ஆவிக்குரியதும் இயற்கையியல்பானதுமான ஒரு பரதீஸை அனுபவித்து மகிழ்வர்.
7 “அப்பொழுது,” ஏசாயா சொல்கிறார், “குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்.” ஆம், “அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்.” (ஏசாயா 35:5, 6) மேலும் அப்பொழுது, “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல் என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் [முழுமையாக, NW] அநுபவிப்பார்கள்.” (ஏசாயா 65:21, 22) ஆகவே அவர்கள் பூமியிலிருந்து அகற்றப்படுவதில்லை.
8. இந்த மகத்தான வாக்குத்தத்தங்களின் நம்பத்தக்கத் தன்மையைக் குறித்து யெகோவாதாமே என்ன சொல்கிறார்?
8 இந்த வாக்குத்தத்தங்களின்பேரில் நாம் தியானிக்கையில் எத்தகைய சிறப்புவாய்ந்த எதிர்காலத் தோற்றங்கள் நம்முடைய மனதை நிரப்புகின்றன! அன்புள்ள பரலோக அரசாங்கத்தின்கீழ் உண்மையுள்ள மனிதவர்க்கத்துக்கு அதிசயமான ஏற்பாடுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய வாக்குத்தத்தங்கள் உண்மையாயிருப்பதற்கு கடினமானவையாக இருக்கின்றனவா? இவை, பத்மு தீவில் நாடுகடத்தப்பட்டிருந்த முதிர்வயதான ஒரு மனிதனின் வெறும் கனவுகளா? யெகோவாதாமே பதிலளிக்கிறார்: “சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார். அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்.”—வெளிப்படுத்துதல் 21:5, 6அ.
9. இந்த எதிர்கால ஆசீர்வாதங்களை, முழு நிச்சயமாக உண்மையான நிறைவேற்றமடைபவையென ஏன் கருத முடியும்?
9 இது, இந்த எதிர்கால ஆசீர்வாதங்களுக்கு, யெகோவாதாமே, உண்மையுள்ள மனிதவர்க்கத்துக்காக ஒரு பொறுப்புறுதியை, அல்லது உரிமை பத்திரத்தைக் கையெழுத்திடுவதுபோல் இருக்கிறது. இத்தகைய பொறுப்புறுதி தருபவரை சந்தேகிக்க யார் துணிவுகொள்வார்? யெகோவாவின் இந்த வாக்குத்தத்தங்கள் அவ்வளவு நிச்சயமாக இருப்பதால் அவை ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டதுபோல் அவர் பேசுகிறார்: “ஆயிற்று”! யெகோவா “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள . . . அல்பாவும், ஓமெகாவும்” ஆக இருக்கிறாரல்லவா? (வெளிப்படுத்துதல் 1:8) நிச்சயமாகவே அவர் அவ்வாறு இருக்கிறார்! அவர்தாமே அறிவிப்பதாவது: “நானே முதலும் இறுதியுமானவர், என்னைத்தவிர வேறே தெய்வம் இல்லை.” (ஏசாயா 44:6, தி.மொ.) இத்தகையவராக, அவர் தீர்க்கதரிசனங்களை ஏவவும் அவற்றை ஒவ்வொரு நுட்பவிவரத்திலும் நிறைவேற்றவும் முடியும். எவ்வளவாய் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது! ஆகவே அவர் வாக்குக்கொடுப்பதாவது: “இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”! இந்த அதிசயமான காரியங்கள் உண்மையில் சம்பவிக்குமாவென சந்தேகிப்பதற்குப் பதிலாக, ‘இத்தகைய ஆசீர்வாதங்களைச் சுதந்தரிக்க நான் என்ன செய்ய வேண்டும்?’ என்பதையே நாம் நிச்சயமாகச் சிந்திக்க வேண்டும்.
தாகமாயிருப்போருக்குத் ‘தண்ணீர்’
10. என்ன ‘தண்ணீரை’ யெகோவா அளிக்கிறார், அது எதைக் குறிக்கிறது?
10 யெகோவாதாமே பின்வருமாறு அறிவிக்கிறார்: “தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன்.” (வெளிப்படுத்துதல் 21:6ஆ) அந்தத் தாகத்தைத் தீர்ப்பதற்கு, ஒருவன் தன் ஆவிக்குரிய தேவையைக் குறித்து உணர்வுடையவனாகவும் யெகோவா அளிக்கும் ‘தண்ணீரை’ ஏற்பதற்கு மனமுள்ளவனாகவும் இருக்க வேண்டும். (ஏசாயா 55:1; மத்தேயு 5:3) என்ன ‘தண்ணீர்’? சமாரியாவில் ஒரு கிணற்றண்டையிலிருந்த பெண்ணுக்குச் சாட்சி கொடுக்கையில் இயேசுதாமே இந்தக் கேள்விக்குப் பதிலளித்தார். அவளிடம் பின்வருமாறு சொன்னார்: “நான் கொடுக்குந் தண்ணீரில் குடிக்கிறவனோ ஒருகாலும் தாகமடையான். நான் அவனுக்குக் கொடுக்குந் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவனுக்கேதுவாக ஊறுகிற நீரூற்றாகும்.” இந்த ‘ஜீவத்தண்ணீரூற்று’ கடவுளிடமிருந்து கிறிஸ்துவின் மூலம், மனிதவர்க்கத்தைப் பரிபூரண வாழ்க்கைக்குத் திரும்ப நிலைநாட்டுவதற்கான அவருடைய ஏற்பாடாகப் பெருக்கெடுத்தோடுகிறது. அந்தச் சமாரிய பெண்ணைப்போல், அந்த நீரூற்றிலிருந்து உளமார நிறைவாய்க் குடிப்பதற்கு நாம் எவ்வளவு ஆர்வமிகுந்தவர்களாய் இருக்க வேண்டும்! மேலும் அந்தப் பெண்ணைப்போல், மற்றவர்களுக்கு நற்செய்தியைச் சொல்வதை மேம்பட்டதாக விரும்பி இவ்வுலக வாழ்க்கைக்குரிய அக்கறைகளை விட்டுவிட எவ்வளவு ஆயத்தமாய் இருக்க வேண்டும்!—யோவான் 4:14, 15, 28, 29, தி.மொ.
ஜெயங்கொள்வோர்
11. யெகோவா என்ன வாக்குக் கொடுக்கிறார், இந்த வார்த்தைகள் யாருக்கு முதலாவது பொருந்துகின்றன?
11 அந்தப் புத்துயிர்ப்பூட்டும் ‘தண்ணீரைக்’ குடிப்பவர்கள், யெகோவா தொடர்ந்து சொல்வதுபோல், ஜெயங்கொள்ளவும் வேண்டும்: “ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான்.” (வெளிப்படுத்துதல் 21:7) இந்த வாக்குத்தத்தம், அந்த ஏழு சபைகளுக்குக் கொடுக்கப்பட்ட செய்திகளில் காணப்படும் வாக்குத்தத்தங்களுக்கு ஒத்ததாக உள்ளது; ஆகவே, இந்த வார்த்தைகள் அபிஷேகஞ்செய்யப்பட்ட சீஷர்களுக்கே முதலாவதாகப் பொருந்த வேண்டும். (வெளிப்படுத்துதல் 2:7, 11, 17, 26-28; 3:5, 12, 21) எல்லா காலங்களிலும் கிறிஸ்துவின் ஆவிக்குரிய சகோதரர்கள், புதிய எருசலேமின் பாகமாயிருக்கும் இந்த சிலாக்கியத்தை மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். இயேசு ஜெயங்கொண்டதுபோல், இவர்கள் ஜெயங்கொண்டால், தங்கள் நம்பிக்கைகளை உண்மையாய் நிறைவேறப்பெறுவர்.—யோவான் 16:33.
12. வெளிப்படுத்துதல் 21:7-ல் கொடுக்கப்பட்டுள்ள யெகோவாவின் வாக்குத்தத்தம் திரள் கூட்டத்தாரிடமாக எவ்வாறு நிறைவேற்றப்படும்?
12 சகல தேசத்தாரிலுமிருந்து வரும் திரள் கூட்டத்தாரும் இந்த வாக்குத்தத்தத்தை எதிர்நோக்குகின்றனர். அவர்களும், மிகுந்த உபத்திரவத்திலிருந்து வெளிவரும் வரையில் கடவுளை உண்மைத்தவறா பற்றுறுதியுடன் சேவித்து ஜெயங்கொள்ள வேண்டும். அப்போது அவர்கள், ‘உலகம் உண்டானது முதல் அவர்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யமாகிய’ பூமிக்குரிய சுதந்தரத்துக்குள் பிரவேசிப்பார்கள். (மத்தேயு 25:34) அந்த ஆயிர ஆண்டுகளின் முடிவில் சோதனையை வெற்றியோடு தேறும் இவர்களும் கர்த்தரின் பூமிக்குரிய செம்மறியாடுகளான மற்றவர்களும் ‘பரிசுத்தவான்கள்’ என்றழைக்கப்படுகின்றனர். (வெளிப்படுத்துதல் 20:9) இவர்கள் தங்கள் சிருஷ்டிகராகிய யெகோவா தேவனுடன், அவருடைய சர்வலோக அமைப்பின் உறுப்பினர்களாக, பரிசுத்தமானதும் மகன் அல்லது மகளுக்குரியதுமான உறவை அனுபவித்து மகிழ்வார்கள்.—ஏசாயா 66:22; யோவான் 20:31; ரோமர் 8:21.
13, 14. கடவுளுடைய மகத்தான வாக்குத்தத்தங்களைச் சுதந்தரிக்க, எந்தப் பழக்கவழக்கச் செயல்களை நாம் தடுமாற்றமற்று நிலைத்திருந்து தவிர்க்க வேண்டும், ஏன்?
13 இந்த மகத்தான எதிர்நோக்கைக் காட்சியில் கொண்டு, யெகோவாவின் சாட்சிகள், சாத்தானுடைய உலகத்தின் கறைப்படுத்தும் காரியங்களுக்கு விலகி, சுத்தமாய் இப்பொழுது நிலைத்திருப்பது எவ்வளவு முக்கியமானது! நாம் உறுதிவாய்ந்தோராயும், தடுமாற்றமற்று நிலைத்திருப்போராயும் பின்வருமாறு யெகோவாதாமே இங்கே விவரிக்கிற கூட்டத்துக்குள் பிசாசானவன் நம்மை ஒருபோதும் இழுக்க இடமளிக்கக்கூடாதென்று திடமாய்த் தீர்மானித்தவர்களாயும் இருக்க வேண்டும்: “பயங்காளிகள் விசுவாசமற்றவர்கள் அருவருப்பானவர்கள் கொலைபாதகர் விபசாரக்காரர் மாந்திரியக்காரர் விக்கிரகாராதனைக்காரர் சகல பொய்யருமாகிய இவர்களுக்கோவெனில் அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலே கதியாகும்; இதுவே இரண்டாம் மரணம்.” (வெளிப்படுத்துதல் 21:8, தி.மொ.) ஆம், சுதந்தரிக்கப்போகிறவன், இந்தப் பழைய காரிய ஒழுங்குமுறையைக் கெடுத்து தூய்மைக்கேடு செய்த பழக்கவழக்கச் செயல்களைத் தவிர்க்க வேண்டும். எல்லா அழுத்தங்களிலும் சோதனைகளிலும் உண்மையுள்ளவனாய் நிலைத்திருப்பதால் அவன் ஜெயங்கொள்ள வேண்டும்.—ரோமர் 8:35-39.
14 கிறிஸ்தவமண்டலம், தன்னைக் கிறிஸ்துவின் மணவாட்டியென உரிமைபாராட்டிக் கொள்ளுகிறபோதிலும், யோவான் இங்கே விவரிக்கிற அருவருப்பான பழக்கவழக்கச் செயல்கள் தன்னில் அமைந்ததாக உள்ளது. ஆகவே மகா பாபிலோனின் மற்றப் பாகத்தோடுகூட தானும் நித்திய அழிவுக்குள் செல்கிறது. (வெளிப்படுத்துதல் 18:8, 21) இவ்வாறே, அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களிலாயினும் திரள் கூட்டத்தாரிலாயினும் எவராவது இத்தகைய தீயச் செயல்களின் பழக்கத்தை ஏற்போராக அல்லது அதை ஊக்குவிக்கத் தொடங்குவோராக இருந்தால், அவர்களும் நித்திய அழிவை எதிர்ப்படுகிறார்கள். இந்தச் செயல்களில் விடாது தொடர்ந்தால், வாக்குத்தத்தங்களை அவர்கள் சுதந்தரிக்கப் போவதில்லை. மேலும் புதிய பூமியில், இத்தகைய பழக்கவழக்கச் செயல்களை உள்கொண்டுவர முயற்சி செய்வோர் எவரும் உடனடியாக அழிக்கப்பட்டு, உயிர்த்தெழுதலின் நம்பிக்கையில்லாமல் இரண்டாம் மரணத்துக்குள் செல்வர்.—ஏசாயா 65:20.
15. ஜெயங்கொள்வோராக முதன்மையாயிருப்போர் யார், வெளிப்படுத்துதலில் உள்ள எந்தத் தரிசனம் உயர்சிறப்பு வாய்ந்த உச்சக்கட்டத்துக்குக் கொண்டு வரப்படுகிறது?
15 ஜெயங்கொள்வோராக முதன்மையாயிருப்போர் ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்துவும், அவருடைய மணவாட்டியாகிய 1,44,000 பேரான புதிய எருசலேமுமேயாவர். அவ்வாறெனில், புதிய எருசலேமின் கடைசியான, மிக மேம்பட்ட காட்சியால் வெளிப்படுத்துதலை உயர்சிறப்பு வாய்ந்த உச்சக்கட்டத்துக்குக் கொண்டுவருவது எவ்வளவு பொருத்தமாயுள்ளது! யோவான் இப்பொழுது கடைசியான ஒரு தரிசனத்தை விவரிக்கிறார்.
[கேள்விகள்]
[பக்கம் 302-ன் படம்]
புதிய பூமி சமுதாய அமைப்பில், எல்லாருக்கும் மகிழ்ச்சிதரும் வேலையும் கூட்டுறவும் இருக்கும்