Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒரு மிகப் பெரிய திரள் கூட்டம்

ஒரு மிகப் பெரிய திரள் கூட்டம்

அதிகாரம் 20

ஒரு மிகப் பெரிய திரள் கூட்டம்

1. 1,44,000 பேர் முத்திரை போடப்படுவதை விவரித்த பின், வேறு எந்தத் தொகுதியை யோவான் பார்க்கிறார்?

 யோவான் 1,44,000 பேர் முத்திரை போடப்படுவதை விவரித்தப் பின், எல்லா வேதாகமம் முழுவதிலும் மிக அதிகமாக கிளர்ச்சியூட்டும் வெளிப்படுத்தல்களில் ஒன்றை தொடர்ந்து அறிவிக்கிறார். அதை அறிவிக்கையில், அவருடைய இருதயம் மகிழ்ச்சியினால் பூரித்திருக்க வேண்டும்: “இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக் கண்டேன்.” (வெளிப்படுத்துதல் 7:9) ஆம், நான்கு காற்றுகளையும் பிடித்து வைத்திருப்பதானது, 1,44,000 அங்கத்தினர்கள் அடங்கிய ஆவிக்குரிய இஸ்ரவேலரைத் தவிர, இன்னொரு தொகுதியினர் இரட்சிக்கப்படுவதை அனுமதிக்கிறது: பல மொழிகள் பேசும், சர்வதேசிய ஒரு திரள் கூட்டம். aவெளிப்படுத்துதல் 7:1.

2. உலகப்பிரகாரமான உரையாசிரியர்கள் திரள் கூட்டத்தாரை எவ்வாறு விளக்கியிருக்கிறார்கள், மற்றும் பைபிள் மாணாக்கர் கூட கடந்த காலத்தில் இந்த வகுப்பாரை எவ்வாறு கருதினார்கள்?

2 உலகப்பிரகாரமான உரையாசிரியர்கள் இந்தத் திரள் கூட்டத்தினரை கிறிஸ்தவத்துக்கு மதம் மாறின மாம்சப்பிரகாரமான யூதரல்லாதவர்கள் அல்லது பரலோகத்துக்குச் செல்லக்கூடிய கிறிஸ்தவ உயிர்த் தியாகிகள் என்பதாக விளக்கம் கூறியிருக்கிறார்கள். கடந்த காலங்களில் பைபிள் மாணாக்கர்கூட 1886-ல் வேதாகமங்களில் படிப்புகள், புத்தகம் 1, சகாப்தத்தின் தெய்வீக திட்டம் என்பதில் குறிப்பிட்டிருக்கிற பிரகாரம், அவர்களை இரண்டாவது படியான பரலோக வகுப்பார் என்பதாகக் கருதினார்கள்: “அவர்கள் சிங்காசனம் மற்றும் தெய்வீகத் தன்மையான பரிசை இழப்பர், ஆனால் இறுதியில் தெய்வீக தன்மைக்குக் குறைவான ஒரு வகுப்பாரின் ஆவிக்குரிய நபர்களான பிறப்பை அடைவார்கள். அவர்கள் உண்மையிலேயே புனிதமாக்கப்பட்டிருந்தாலும், உலக ஆவியினால் அந்தளவுக்கு மேற்கொள்ளப்பட்டிருப்பதால் அவர்களுடைய வாழ்க்கையைத் தியாகம் செய்வதில் தவறிவிடுகிறார்கள்.” மேலும் 1930 வரையாக, வெளிச்சம் புத்தகம் 1-ல் இவ்விதமான கருத்து வெளியிடப்பட்டது: “இந்தத் திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் கர்த்தருக்காக வைராக்கியமுள்ள சாட்சிகளாக ஆவதற்குரிய அழைப்புக்குப் பிரதிபலிக்கத் தவறுகிறார்கள்.” அவர்கள் சத்தியத்தின் அறிவை உடையவர்களாக இருந்து ஆனால் அதைப் பிரசங்கிப்பதில் ஒன்றும் செய்யாத சுயநீதியுள்ள ஒரு வகுப்பாராக விவரிக்கப்பட்டிருந்தார்கள். கிறிஸ்துவுடன் ஆட்சி செய்வதில் பங்குகொள்ளாத இரண்டாவது படியான வகுப்பாராக பரலோகத்துக்குச் செல்ல இருப்பார்கள்.

3. (அ) பிரசங்க வேலையில் பின்னர் வைராக்கியமுள்ளவர்களாக ஆன சில நேர்மை இருதயமுள்ளோருக்கு என்ன நம்பிக்கை கொடுக்கப்பட்டது? (ஆ) காவற்கோபுரம் (ஆங்கிலம்), 1923-ல் செம்மறியாடுகள், வெள்ளாடுகள் பற்றிய உவமையை எவ்வாறு விளக்கியது?

3 இருப்பினும், பின்னால் பிரசங்க வேலையில் மிக அதிக வைராக்கியமுள்ளவர்களாக ஆன அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் மற்ற கூட்டாளிகள் இருந்தார்கள். அவர்கள் பரலோகத்துக்குப் போவதற்குரிய விருப்பங்களை உடையவர்களாக இல்லை. உண்மையிலேயே, 1918 முதல் 1922 வரையாக யெகோவாவின் ஜனங்களால் முக்கியமாக கொடுக்கப்பட்ட ஒரு பொதுப்பேச்சின் தலைப்புக்கு ஒத்ததாக அவர்களுடைய நம்பிக்கை இருந்தது. ஆரம்பத்திலே, இது “உலகம் முடிவுற்றது—இப்பொழுது உயிரோடிருக்கும் லட்சக்கணக்கானோர் மரிக்கவே மாட்டார்கள்,” என்பதாக இருந்தது. b அதன் பிறகு சீக்கிரத்தில், அக்டோபர் 15, 1923 ஆங்கில காவற்கோபுர பத்திரிகை செம்மறியாடுகள், வெள்ளாடுகள் பற்றிய இயேசுவின் உவமையை (மத்தேயு 25:31-46) இவ்வாறு விளக்கினது: “செம்மறியாடுகள் என்போர் எல்லா தேசத்தின் ஜனங்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்; இவர்கள் ஆவியினால் பிறப்பிக்கப்படாத ஆனால் நீதியினிடமாக மனச்சாய்வு உள்ளவர்கள்; இயேசு கிறிஸ்துவை கர்த்தராக மனதின் பிரகாரம் ஏற்றுக்கொள்ளுகிறவர்கள்; மேலும் அவருடைய ஆட்சியின் கீழ் ஒரு நல்ல காலத்திற்கான எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் கொண்டவர்கள்.”

4. பூமிக்குரிய வகுப்பாரைக் குறித்த வெளிச்சம் எவ்வாறு 1931-ல், 1932-ல், 1934-ல் அதிகமாகப் பிரகாசித்தது?

4 சில வருடங்களுக்குப் பின்னர், 1931-ல் வின்டிகேஷன் புத்தகம் 1, எசேக்கியேல் 9-வது அதிகாரத்தை சிந்தித்து, உலகத்தின் முடிவில் பாதுகாக்கப்படுவதற்காக நெற்றிகளில் குறி போடப்படும் ஆட்களை மேலே சொல்லப்பட்ட உவமையின் செம்மறியாடுகள் என்பதாக அடையாளப்படுத்தினது. வின்டிகேஷன் புத்தகம் 3, 1932-ல் வெளியிடப்பட்டது, இஸ்ரவேலின் அபிஷேகம் செய்யப்பட்ட யெகூ ராஜாவை அவருடைய இரதத்தில் சேர்ந்துகொண்டு, பொய் மதத்தினர்மீது மரண தண்டனை நிறைவேற்றுவதில் யெகூவின் வைராக்கியத்தைப் பார்க்கச் சென்ற இஸ்ரவேலனல்லாத யோனதாபின் நேர்மையான இருதய மனநிலையை விவரித்தது. (2 இராஜாக்கள் 10:15-17) அந்தப் புத்தகம் குறிப்பிட்டது: “யோனதாப் இப்பொழுது பூமியிலுள்ள நல்மனமுள்ள வகுப்பாரை பிரதிநிதித்துவம் செய்தான் அல்லது முன்நிழலாக இருந்தான், யெகூவின் வேலை [யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை அறிவிப்பது] முன்னேறிக் கொண்டிருக்கும் காலத்தில் இருப்பவர்கள், சாத்தானின் அமைப்போடு இணங்காதவர்கள், நீதியின் பக்கத்தில் தங்களுடைய நிலைநிற்கையை எடுக்கிறவர்கள். இவர்களை அர்மகெதோன் காலத்தினூடே கர்த்தர் பாதுகாத்து, அந்தத் தொல்லையினூடே எடுத்துச் சென்று, பூமியிலே, நித்திய ஜீவனைக் கொடுப்பார். இவர்களே ‘செம்மறியாடு’ வகுப்பார் ஆக இருக்கிறார்கள்.” 1934-ல் ஆங்கில காவற்கோபுர பத்திரிகை பூமிக்குரிய நம்பிக்கைகளையுடைய இந்தக் கிறிஸ்தவர்கள் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட வேண்டும் என்பதைத் தெளிவாக்கினது. இந்தப் பூமிக்குரிய வகுப்பாரைப் பற்றிய வெளிச்சம் இன்னும் அதிகமாக பிரகாசித்துக் கொண்டு இருந்தது.—நீதிமொழிகள் 4:18.

5. (அ) 1935-ல் திரள் கூட்டத்தார் பற்றி என்ன அடையாளம் காண்பிக்கப்பட்டது? (ஆ) 1935-ல் J. F. ரதர்ஃபர்டு மாநாடுக்கு வந்திருந்தவர்களில் பூமியில் என்றும் வாழ்வதற்கான நம்பிக்கையுடையவர்கள் எழுந்து நிற்குமாறு சொன்னபோது என்ன நடந்தது?

5 வெளிப்படுத்துதல் 7:9-17-ன் புரிந்துகொள்ளுதல் எல்லா ஒளிவீசும் பிரகாசத்துடன் தோன்றும் நிலையில் இருந்தது! (சங்கீதம் 97:11) ஆங்கில காவற்கோபுர பத்திரிகை, அ.ஐ.மா., வாஷிங்டன், D.C.-யில் 1935 மே 30 முதல் ஜூன் 3 வரை, நடத்தப்படும் மாநாடு, யோனதாபால் படமாகக் காட்டப்படுபவர்களுக்கு “உண்மையிலே ஆறுதலும் நன்மையுமாக” இருக்கும் என்ற நம்பிக்கையை அடிக்கடி வெளியிட்டிருந்தது. அது அவ்வாறே நிரூபித்தது! மாநாடுக்கு வந்திருந்த ஏறக்குறைய 20,000 பேருக்கு கொடுக்கப்பட்ட, “பெரிய திரள் கூட்டம்” என்ற தலைப்புடைய கிளர்ச்சியூட்டும் பேச்சில், அப்போது உலகளாவிய பிரசங்க வேலையை முன்நின்று வழிநடத்திய J. F. ரதர்ஃபர்டு, வெளிப்படுத்துதல் 7:9-ன் திரள் கூட்டமும் நவீன கால வேறே ஆடுகளும் ஒன்றையே குறிக்கின்றன என்பதற்கு வேதப்பூர்வமான நிரூபணத்தைக் கொடுத்தார். இந்தப் பேச்சின் உச்சக்கட்டத்தில், பேச்சாளர் கேட்டார்: “பூமியில் என்றும் வாழ்வதற்கான நம்பிக்கையுடைய எல்லாரும் தயவுசெய்து எழுந்து நிற்பீர்களா?” கூடியிருந்தவர்களின் பெரும் பகுதி எழுந்து நின்றவுடன், பேச்சாளர் கூறினார்: “இதோ பாருங்கள்! பெரிய திரள் கூட்டம்!” ஒரு நிசப்தம், பின்னர் இடிமுழக்கம் போன்ற மகிழ்ச்சி ஆரவாரம். யோவான் வகுப்பார் எவ்வளவு மகிழ்ச்சியுடையவர்களாக இருந்தார்கள்—மேலும் யோனதாப் தொகுதியும் கூட! அடுத்த நாளில், 840 புதிய சாட்சிகள் முழுக்காட்டப்பட்டார்கள், அவர்களில் பெரும்பான்மையர் திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களாக உரிமைபாராட்டினார்கள்.

திரள் கூட்டத்தின் அடையாளத்தை உறுதிப்படுத்துதல்

6. (அ) திரள் கூட்டமானது, பூமியில் என்றும் வாழ்வதற்கான நம்பிக்கையுடைய ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்களின் நவீன காலத்தொகுதி என்பதாக நாம் ஏன் தெளிவாக புரிந்துகொள்ளக்கூடும்? (ஆ) திரள் கூட்டத்தாரின் வெள்ளை அங்கிகள் எதை அடையாளப்படுத்துகின்றன?

6 திரள் கூட்டம், கடவுளுடைய பூமியில் என்றும் வாழ்வதற்கான நம்பிக்கையுடைய ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்களின் நவீன காலத் தொகுதி என்று அவ்வளவு உறுதியாக நாம் எவ்வாறு சொல்லக்கூடும்? முன்னர், யோவான் ‘சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து தேவனுக்கென்று மீட்கப்பட்ட’ பரலோகத்துக்குரிய தொகுதியைக் தரிசனத்தில் பார்த்திருந்தார். (வெளிப்படுத்துதல் 5:9, 10) திரள் கூட்டம் அதே மூலத்தை ஆனால் வித்தியாசமான முடிவை உடையவர்களாக இருக்கிறார்கள். தேவனுடைய இஸ்ரவேலரைப் போலிராமல், அவர்களுடைய எண்ணிக்கை முன் தீர்மானிக்கப்பட்டில்லை. எவ்வளவு பேர் இருப்பார்கள் என்று எந்த மனிதனும் முன்னரே சொல்ல முடியாது. அவர்களுடைய அங்கிகள் ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில் தோய்க்கப்பட்டிருக்கின்றன, இயேசுவின் பலியில் அவர்களுடைய விசுவாசத்தின் மூலம் யெகோவாவுக்கு முன்பாக ஒரு நீதியான நிலைநிற்கையைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அடையாளப்படுத்துகின்றன. (வெளிப்படுத்துதல் 7:14) மேசியாவை அவர்களுடைய ராஜாவாக ஆர்ப்பரித்து, கைகளில் குருத்தோலைகளை அசைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

7, 8. (அ) குருத்தோலைகளைப் பிடித்திருப்பதானது சந்தேகமில்லாமல் அப்போஸ்தலனாகிய யோவானுக்கு என்ன சம்பவங்களை நினைவுபடுத்தினது? (ஆ) திரள் கூட்டத்தார் குருத்தோலைகளைப் பிடித்திருக்கும் உண்மையின் உட்கருத்து என்ன?

7 இந்தத் தரிசனத்தை அவர் பார்த்துக் கொண்டிருக்கையில், யோவானுடைய நினைவுகள் 60-க்கு மேலான வருடங்களுக்கு முன்பு இயேசு பூமியின் மீது இருந்த கடைசி வாரத்திற்கு அவரைக் கொண்டு சென்றிருக்க வேண்டும். பொ.ச. 33, நிசான் 9-ல் திரளான ஜனங்கள் இயேசுவை எருசலேமுக்குள் வரவேற்பதற்கு கூடியபோது, அவர்கள் “குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டு போகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர்” என்று ஆர்ப்பரிக்க ஆரம்பித்தார்கள். (யோவான் 12:12, 13) அதே விதமாக, திரள் கூட்டத்தாரின் பங்கில் குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு ஆர்ப்பரிப்பது, இயேசுவை யெகோவாவின் நியமிக்கப்பட்ட ராஜாவாக ஏற்றுக்கொள்ளுவதில் இருக்கும் கட்டுக்கடங்காத மகிழ்ச்சியைக் காண்பிக்கிறது.

8 சந்தேகமில்லாமல், குருத்தோலைகளும் களிகூரும் சத்தங்களும் யோவானைப் பூர்வ இஸ்ரவேலரின் கூடாரப் பண்டிகையையும்கூட நினைவுகூரும்படி செய்கின்றன. இந்தப் பண்டிகைக்காக யெகோவா இவ்வாறு கட்டளை கொடுத்தார்: “முதல் நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டு வந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] சந்நிதியில் ஏழு நாளும் மகிழ்ச்சியாயிருங்கள்.” குருத்தோலைகள் களிகூருதலின் ஓர் அடையாளமாக பயன்படுத்தப்பட்டன. தற்காலிகமான கூடாரங்கள், யெகோவா தம்முடைய ஜனங்களை எகிப்திலிருந்து மீட்டு, வனாந்தரத்தில் கூடாரங்களில் வாழும்படி செய்ததற்கு நினைப்பூட்டுதலாக இருந்தன. இந்தப் பண்டிகையில் “பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும்” பங்குகொண்டார்கள். இஸ்ரவேலர் எல்லாரும் “சந்தோஷமாயிருக்க” வேண்டும்.—லேவியராகமம் 23:40; உபாகமம் 16:13-15.

9. எந்தக் களிகூருதலில் திரள் கூட்டத்தார் சேர்ந்து கொள்ளுகிறார்கள்?

9 அப்படியானால், திரள் கூட்டத்தார் ஆவிக்குரிய இஸ்ரவேலரின் பாகமாக இல்லாதிருந்தபோதிலும், குருத்தோலைகளைப் பிடித்திருப்பது பொருத்தமாக இருக்கிறது, ஏனென்றால், யோவான் இங்கே காண்கிற பிரகாரம், அவர்கள் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் வெற்றியும் இரட்சிப்பும் கடவுளுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உரியது என்று சொல்லுகிறார்கள்: “அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள்.” (வெளிப்படுத்துதல் 7:10) எல்லா மனித இனங்களின் தொகுதிகளிலிருந்தும் பிரித்து எடுக்கப்பட்டாலும், திரள் கூட்டத்தார் அந்த ஒரே “உரத்த குரலில்” சத்தமிடுகிறார்கள். அவர்களுடைய தேசங்களும் பாஷைகளும் வித்தியாசமாக இருந்தபோதிலும், இதை எவ்வாறு செய்ய முடியும்?

10. பல வகைப்பட்ட தேசங்களையும் மொழிகளையும் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், திரள் கூட்டத்தார் எவ்வாறு ஒரே “உரத்த குரலில்” ஐக்கியப்பட்ட விதத்தில் சத்தமிட முடியும்?

10 இந்தத் திரள் கூட்டம் இன்றைக்குப் பூமியின் மீதுள்ள உண்மையிலே ஒன்றுபட்ட ஒரே பன்னாட்டு அமைப்பின் பாகமாக இருக்கிறது. வித்தியாசமான தேசங்களுக்கு வித்தியாசமான தராதரங்களை உடையவர்களாயில்லை, ஆனால் அவர்கள் எங்கே வாழ்ந்தாலும் பைபிளின் சரியான நியமங்களை எப்பொழுதும் பொருத்துகிறார்கள். நாட்டுணர்ச்சியுள்ள, புரட்சிகரமான இயக்கங்களில் தங்களை உட்படுத்துவதில்லை, ஆனால் உண்மையிலேயே ‘ஈட்டிகளை அரிவாள்களாக’ அடித்திருக்கிறார்கள். (ஏசாயா 2:4) அவர்கள் பிரிவுகளாக அல்லது உட்பிரிவுகளாக பிளவுபட்டு, கிறிஸ்தவமண்டலத்தின் மதங்கள் செய்கிறதுபோல, குழப்பமான அல்லது ஒன்றுக்கொன்று முரண்பாடுள்ள செய்திகளை கூச்சலிட்டுக்கொண்டு இல்லை. அவர்களுக்காக துதித்தலைச் செய்வதை, அதையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டுள்ள குருவர்க்கத்திடம் விட்டுவிடுவதில்லை. இரட்சிப்பு பரிசுத்த ஆவிக்குரியது என்று சத்தமிடுவதில்லை, ஏனென்றால் அவர்கள் ஒரு திரித்துவ கடவுளின் ஊழியர்களாக இல்லை. பூமி முழுவதும் சுமார் 200 பூகோள பிராந்தியங்களில், சத்தியத்தின் ஒரே சுத்தமான மொழியைப் பேசுகையில், யெகோவாவின் நாமத்தைத் தொழுதுகொள்ளுவதில் ஐக்கியப்பட்டிருக்கிறார்கள். (செப்பனியா 3:9) சரியாகவே, அவர்களுடைய இரட்சிப்பு, இரட்சிப்பின் தேவனாகிய யெகோவாவிடமிருந்து அவருடைய இரட்சிப்பின் பிரதான செயலாளர் இயேசு கிறிஸ்துவின் மூலமாக வருகிறது என்பதைப் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளுகிறார்கள்.—சங்கீதம் 3:8; எபிரெயர் 2:10.

11. நவீன தொழில்நுட்பம் திரள் கூட்டத்தார் தங்களுடைய உரத்த குரலை இன்னும் அதிகரிப்பதற்கு எவ்வாறு உதவியிருக்கிறது?

11 நவீன தொழில்நுட்பமானது ஐக்கியப்பட்ட திரள் கூட்டத்தார் தங்களுடைய உரத்த குரலை இன்னும் அதிகரிப்பதற்கு உதவியிருக்கிறது. உலகிலுள்ள வேறு எந்த மதத் தொகுதியினருக்கும் பைபிள் படிப்பு பிரசுரங்களை 400-க்கும் அதிகமான மொழிகளில் வெளியிடுவதற்கு தேவையில்லை, ஏனென்றால் வேறு எந்தத் தொகுதியும், அதே ஒன்றுபட்ட செய்தியைக் கொண்டு பூமியில் உள்ள எல்லா ஜனங்களையும் சென்றெட்டுவதில் அக்கறையுள்ளதாயில்லை. இதற்கு இன்னும் உதவியாயிருக்க, யெகோவாவின் சாட்சிகளினுடைய நிர்வாக குழுவின் மேற்பார்வையின் கீழ், ஒரு பன்மொழி மின்னணு இயக்க ஒளிப்பட அச்சுக்கோப்பு முறை (Multilanguage Electronic Phototypesetting System), மெப்ஸ் (MEPS) உருவாக்கப்பட்டது. இதை அச்சிடும் சமயத்தில், மெப்ஸ் புரோகிராமின் பல்வேறு வகைகள் உலக முழுவதிலும் 125-க்கும் அதிகமான இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் மாதம் இருமுறை வெளியிடப்படுகிற காவற்கோபுர பத்திரிகையை 130-க்கும் அதிக மொழிகளில் ஒரே சமயத்தில் பிரசுரிக்க முடிகிறது. யெகோவாவின் ஜனங்கள், இந்தப் புத்தகத்தைப் போன்று, ஒரே சமயத்தில் அநேக மொழிகளில் புத்தகங்களை வெளியிடுகிறார்கள். இவ்வாறாக, யெகோவாவின் சாட்சிகள், அவர்களில் பெரும்பான்மையர் திரள் கூட்டத்தார், கோடிக்கணக்கான பிரசுரங்களை நன்றாக அறியப்பட்ட அனைத்து மொழிகளிலும், ஒவ்வொரு வருடமும் விநியோகிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள், அதோடு சகல கோத்திரங்கள் பாஷைக்காரர் கடவுளுடைய வார்த்தையைப் படித்து திரள் கூட்டத்தாரின் உரத்த குரலோடு அவர்களுடைய குரல்களையும் சேர்ப்பதற்கு உதவுகிறார்கள்.—ஏசாயா 42:10, 12.

பரலோகத்திலா பூமியின் மீதா?

12, 13. திரள் கூட்டத்தார் என்ன விதத்தில் “சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும்” நிற்கிறார்கள்?

12 “சிங்காசனத்திற்கு முன்பாக நிற்பது,” திரள் கூட்டத்தார் பரலோகத்தில் இருப்பதாக அர்த்தப்படுத்துவதில்லை என்று நமக்கு எப்படித் தெரியும்? இந்தக் குறிப்பின் பேரில் அதிகத் தெளிவான அத்தாட்சி இருக்கிறது. உதாரணமாக, “முன்பாக” என்று இங்கே மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தை (e·noʹpion, இனோப்பியான்) சொல்லர்த்தமாக “பார்வையில்” என்று அர்த்தங்கொள்ளுகிறது, பூமியில் உள்ள மனிதர் யெகோவாவுக்கு “முன்பாக” அல்லது அவருடைய “பார்வையில்” இருப்பதாக பல முறைகள் பயன்படுத்தப்படுகிறது. (1 தீமோத்தேயு 5:21; 2 தீமோத்தேயு 2:14; ரோமர் 14:22; கலாத்தியர் 1:20) இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் இருந்த ஒரு சமயத்தில், மோசே ஆரோனிடம் இவ்வாறு சொன்னார்: “நீ இஸ்ரவேல் புத்திரர் ஆகிய சபையார் எல்லாரையும் நோக்கி: கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] சந்நிதியில் சேருங்கள், அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டார் என்று சொல்.” (யாத்திராகமம் 16:9) அந்தச் சமயத்தில் யெகோவாவுக்கு முன்பாக நிற்பதற்கு இஸ்ரவேலர்கள் பரலோகத்துக்கு எடுத்துச் செல்லப்படவேண்டியவர்களாயில்லை. (லேவியராகமம் 24:8-ஐ ஒப்பிடவும்.) மாறாக, வனாந்தரத்தில்தானே யெகோவாவின் பார்வையில் நின்றார்கள், அவருடைய கவனம் அவர்கள் மேல் இருந்தது.

13 கூடுதலாக, நாம் வாசிக்கிறோம்: “மனுஷகுமாரன் தமது மகிமை பொருந்தினவராய் வரும்போது . . . சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள்.” c இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறுகையில், முழு மனித இனமும் பரலோகத்தில் இருக்க மாட்டார்கள். நிச்சயமாகவே, “நித்திய ஆக்கினையை அடை”கிறவர்கள் பரலோகத்தில் இருக்க மாட்டார்கள். (மத்தேயு 25: 31-33, 41, 46) பதிலாக, மனிதவர்க்கம் இயேசுவின் பார்வையில் பூமியில் நிற்கிறார்கள், அவர்களை நியாயந்தீர்ப்பதற்கு அவருடைய கவனத்தை அவர் திருப்புகிறார். இதே விதமாகவே, திரள் கூட்டத்தினர் “சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும்” இருக்கிறார்கள், யெகோவா மற்றும் அவருடைய ராஜா, கிறிஸ்து இயேசுவின் பார்வையில் நிற்கிறார்கள், அவர்களிடமிருந்து ஒரு சாதகமான நியாயத்தீர்ப்பைப் பெறுகிறார்கள்.

14. (அ) “சிங்காசனத்தைச் சுற்றிலும்” மற்றும் “[பரலோக] சீயோன் மலையின் மேல்” இருப்பதாக யார் விவரிக்கப்பட்டிருக்கிறார்கள்? (ஆ) திரள் கூட்டம் கடவுளை “அவருடைய ஆலயத்தில்” சேவித்தபோதிலும், இது அவர்களை ஏன் ஓர் ஆசாரியத்துவ வகுப்பாராக ஆக்குவதில்லை?

14 24 மூப்பர்களும் அபிஷேகம் செய்யப்பட்ட தொகுதியைச் சேர்ந்த 1,44,000 பேரும் “சிங்காசனத்தைச் சுற்றிலும்” மற்றும் “(பரலோக) சீயோன் மலையின் மேல்” இருப்பதாகவும் விவரிக்கப்பட்டிருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 4:4; 14:1) திரள் கூட்டத்தினர் ஓர் ஆசாரியத்துவ வகுப்பார் அல்ல, அந்த உயர்த்தப்பட்ட நிலையை அடைவதில்லை. உண்மைதான், கடவுளை “அவருடைய ஆலயத்தில்” சேவிப்பதாக வெளிப்படுத்துதல் 7:15-ல் பின்னர் அது விவரிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த ஆலயம் மகா பரிசுத்த ஸ்தலத்தைக் குறிப்பதில்லை. மாறாக, அது கடவுளுடைய ஆவிக்குரிய ஆலயத்தின் பூமிக்குரிய பிரகாரமாயிருக்கிறது. “ஆலயம்” என்று இங்கே மொழிபெயர்க்கப்பட்டிருக்கிற நாஒஸ் (na·osʹ) என்ற கிரேக்க சொல், அடிக்கடி யெகோவாவின் வணக்கத்திற்காக எழுப்பப்பட்ட முழுகட்டடம் என்ற பரந்த கருத்தைத் தெரிவிக்கிறது. இன்று, இது வானம், பூமி இரண்டையும் உட்படுத்தும் ஆவிக்குரிய கட்டடமாக இருக்கிறது.—ஒப்பிடவும்: மத்தேயு 26:61; 27:5, 39, 40; மாற்கு 15:29, 30; யோவான் 2:19-21, துணைக்குறிப்புகளடங்கிய புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள், அடிக்குறிப்பு.

ஏகமாய் ஆர்ப்பரிக்கும் ஒரு துதிப்பாடல்

15, 16. (அ) திரள் கூட்டம் தோற்றத்துக்குப் பரலோகத்தில் என்ன பிரதிபலிப்பு இருக்கிறது? (ஆ) யெகோவாவின் ஆவி சிருஷ்டிப்பு அவருடைய நோக்கத்தின் ஒவ்வொரு புதிய வெளிப்படுத்துதலுக்கும் எவ்வாறு பிரதிபலிக்கிறது? (இ) பூமியிலுள்ள நாம் எவ்வாறு துதிப்பாடலில் சேர்ந்துகொள்ளக்கூடும்?

15 திரள் கூட்டம் யெகோவாவைத் துதித்துக் கொண்டிருக்கிறது, ஆனால் மற்றவர்களும் கூட அவருடைய துதிகளைப் பாடிக்கொண்டிருக்கிறார்கள். யோவான் அறிவிக்கிறார்: “தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று சிங்காசனத்திற்கு முன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு: ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென் என்றார்கள்.”—வெளிப்படுத்துதல் 7:11, 12.

16 யெகோவா பூமியை சிருஷ்டித்தபோது, அவருடைய எல்லா பரிசுத்த தூதர்களும் “ஏகமாய்ப் பாடி, தேவ புத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்கள்.” (யோபு 38:7) யெகோவாவின் நோக்கத்தின் ஒவ்வொரு புதிய வெளிப்படுத்துதலும் இதே விதமான தேவதூதர்களின் துதியின் சத்தத்தைக் கொண்டு வந்திருக்க வேண்டும். 24 மூப்பர்கள்—அவர்களுடைய பரலோக மகிமையில் 1,44,000 பேர்—ஆட்டுக்குட்டியானவரை ஏற்றுக்கொள்ளும் வகையில் சத்தமிடுகையில், கடவுளுடைய மற்ற எல்லா பரலோக சிருஷ்டிகள் இயேசுவுக்கும் யெகோவா தேவனுக்கும் துதியை ஒலிக்கச் செய்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 5:9-14) ஏற்கெனவே, இந்தச் சிருஷ்டிகள், உண்மையுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட மனிதர்கள் பரலோகப் பகுதியில் ஒரு மகிமையான இடத்துக்கு உயிர்த்தெழுப்பப்படுவதில் யெகோவாவின் நோக்கம் நிறைவேற்றம் அடைவதைப் பார்ப்பதற்கு அதிக மகிழ்ச்சியுடையவர்களாக இருந்திருக்கிறார்கள். இப்போது, திரள் கூட்டம் தோன்றுகையில், எல்லா யெகோவாவின் உண்மையுள்ள பரலோக சிருஷ்டிகள் இனியத் துதிகளை ஏறெடுக்கிறார்கள். உண்மையிலேயே, எல்லா யெகோவாவின் ஊழியர்களுக்கும், கர்த்தருடைய நாளில் வாழ்ந்திருப்பது ஒரு கிளர்ச்சியூட்டும் காலமாக இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 1:10) இங்கே பூமியிலே, யெகோவாவின் ராஜ்யத்துக்கு சாட்சி கொடுப்பதன் மூலம் துதிப் பாடலில் பங்குகொள்வதற்கு நாம் எவ்வளவு சிலாக்கியமுள்ளவர்களாக இருக்கிறோம்!

திரள் கூட்டம் தோன்றுகிறது

17. (அ) 24 மூப்பர்களில் ஒருவரால் என்ன கேள்வி எழுப்பப்படுகிறது மேலும் அந்த மூப்பர் பதிலைக் கண்டுபிடிக்க முடிகிறது என்ற உண்மை எதைக் காண்பிக்கிறது? (ஆ) அந்த மூப்பரின் கேள்வி எப்போது பதிலளிக்கப்பட்டது?

17 அப்போஸ்தலனாகிய யோவானின் காலத்திலிருந்து கர்த்தருடைய நாளினூடேயும், அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் திரள் கூட்டத்தாரின் அடையாளத்தைக் குறித்து புரியாமல் இருந்தார்கள். அப்படியானால், 24 மூப்பர்களில் ஒருவர், பரலோகத்தில் ஏற்கெனவே இருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டவர்களைப் பிரதிநிதித்துவம் செய்பவர், ஒரு பொருத்தமான கேள்வியை எழுப்புவதன் மூலம் யோவானுடைய சிந்தனையைத் தூண்டுவது தகுதியாயிருக்கிறது. “அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். அதற்கு நான்: என் ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன்.” (வெளிப்படுத்துதல் 7:13, 14அ) ஆம், அந்த மூப்பர் பதிலைக் கண்டுபிடித்து யோவானுக்குக் கொடுக்க முடியும். இது, 24 மூப்பர்களின் தொகுதியில் உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் இன்றைக்கு தெய்வீக சத்தியங்களை அறிவிப்பதில் உட்பட்டிருக்கக்கூடும் என்பதைக் காண்பிக்கிறது. அவர்களுடைய பங்கில், பூமியிலிருக்கும் யோவான் வகுப்பாரைச் சேர்ந்தவர்கள் யெகோவா அவர்கள் மத்தியில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதைக் கூர்ந்து கவனிப்பதன் மூலம் திரள் கூட்டத்தாரின் அடையாளத்தைக் கற்றுக்கொண்டார்கள். யெகோவாவின் ஏற்ற காலத்தில், 1935-ல் தேவாட்சிக்குரிய வானமண்டலத்தை ஒளி வீசிப் பிரகாசிக்கச் செய்த தெய்வீக வெளிச்சத்தின் மின்னொளியைத் தாமதமில்லாமல் விரைவாக மதித்துணரக்கூடியவர்களாக இருந்தார்கள்.

18, 19. (அ) 1920-களிலும் 1930-களிலும் யோவான் வகுப்பாரால் என்ன நம்பிக்கை வலியுறுத்திக் கூறப்பட்டது, ஆனால் அதிகரிக்கும் எண்ணிக்கைகளில் யார் செய்திக்கு பிரதிபலித்தார்கள்? (ஆ) 1935-ல் திரள் கூட்டத்தார் அடையாளம் காண்பிக்கப்பட்டதானது, 1,44,000 பேரைக் குறித்ததில் எதைத் தெரிவித்தது? (இ) நினைவு ஆசரிப்புப் புள்ளி விவரங்கள் எதை வெளிப்படுத்துகின்றன?

18 1920-களின் மற்றும் ஆரம்ப 1930-களில், யோவான் வகுப்பார், பிரசுரங்களிலும் பிரசங்க வேலையிலும், பரலோக நம்பிக்கையை வலியுறுத்திக் கூறிக்கொண்டிருந்தனர். தெளிவாகவே, 1,44,000 பேர் என்ற முழு எண்ணிக்கை இன்னும் பூர்த்தியாக வேண்டியதாயிருந்தது. ஆனால் செய்திக்கு கவனம் செலுத்தினவர்கள் மற்றும் சாட்சி கொடுக்கும் வேலையில் வைராக்கியம் காண்பித்தவர்களின் அதிகரித்து வரும் எண்ணிக்கையினர் பரதீஸிய பூமியில் என்றும் வாழ்வதில் அக்கறையை வெளிப்படக் கூறினார்கள். அவர்களுக்குப் பரலோகத்திற்கு போவதற்குரிய விருப்பம் இல்லை. அது அவர்களுக்கான அழைப்பாக இல்லை. அவர்கள் சிறு மந்தையின் பாகமாக இல்லை, ஆனால் மாறாக வேறே ஆடுகளின் பாகமாக இருந்தார்கள். (லூக்கா 12:32; யோவான் 10:16) 1935-ல் அவர்கள் வேறே ஆடுகளின் திரள் கூட்டத்தார் என்பதாக அடையாளம் காண்பிக்கப்பட்டது, 1,44,000 பேரின் தேர்ந்தெடுத்தல் அப்பொழுது ஏறக்குறைய முடிவுற்றது என்று காண்பித்தது.

19 இந்த முடிவை புள்ளி விவரங்கள் ஆதரிக்கின்றனவா? ஆம், ஆதரிக்கின்றன. 1938-ல், உலகம் முழுவதும், 59,047 யெகோவாவின் சாட்சிகள் ஊழியத்தில் பங்குகொண்டார்கள். இவர்களில், 36,732 பேர் இயேசுவின் மரண ஞாபகார்த்தத்தின் வருடாந்தர ஆசரிப்பில் சின்னங்களில் பங்கெடுத்தார்கள், இவ்வாறு தங்களுக்கு பரலோக அழைப்பு இருந்தது என்பதைக் காண்பித்தார்கள். அதற்குப் பின் வந்த வருடங்களில், முக்கியமாக உண்மையுள்ள யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய பூமிக்குரிய வாழ்க்கையை மரணத்தில் முடித்ததன் காரணத்தினால் பங்கெடுத்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவிட்டது. 2005-ல், 8,524 பேர் மட்டுமே நினைவு ஆசரிப்பு சின்னங்களில் பங்கெடுத்தார்கள்—அந்த ஆசரிப்பில் ஆஜராயிருந்த 1,63,90,116 பேரின் 0.05 சதவிகிதம்.

20. (அ) இரண்டாவது உலக யுத்தத்தின்போது, J. F. ரதர்ஃபர்டு திரள் கூட்டத்தாரைப் பற்றி தனிப்பட்ட விதத்தில் என்ன குறிப்பு சொன்னார்? (ஆ) திரள் கூட்டம் உண்மையிலேயே ஒரு பெரிய கூட்டம் என்று என்ன உண்மைகள் இப்போது காண்பிக்கின்றன?

20 இரண்டாவது உலக யுத்தம் ஆரம்பித்தபோது, திரள்கூட்டத்தாரின் அறுவடையை நிறுத்துவதற்கு சாத்தான் கடுமையாக முயற்சி செய்தான். அநேக தேசங்களில் யெகோவாவின் வேலை கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அந்த இருண்ட நாட்களில், 1942 ஜனவரி மாதத்தில் அவருடைய மரணத்திற்கு சற்று முன்பு, J. F. ரதர்ஃபர்டு இவ்வாறு சொல்வதைக் கேட்டார்கள்: “சரி, . . . திரள் கூட்டம் கடைசியில் அவ்வளவு பெரியதாக இருக்காது போல் தோன்றுகிறது.” ஆனால் தெய்வீக ஆசீர்வாதம் வேறு முறையில் வழிநடத்தினது! 1946-க்குள் உலகம் முழுவதும் ஊழியம் செய்யும் சாட்சிகளின் எண்ணிக்கை 1,76,456-க்கு தாண்டினது—இவர்களில் பெரும்பான்மையோர் திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். 2005-ல் 235 வித்தியாசமான நாடுகளில் 63,90,022 சாட்சிகள் யெகோவாவை உண்மையுடன் சேவித்துக் கொண்டிருந்தனர்—உண்மையிலேயே ஒரு திரள் கூட்டம்! மேலும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகிறது.

21. (அ) கர்த்தரின் நாளில் கடவுளுடைய ஜனங்களின் அறுவடையானது எவ்வாறு யோவானின் தரிசனத்தோடு முழு இசைவாக இருந்திருக்கிறது? (ஆ) எவ்வாறு சில முக்கியமான தீர்க்கதரிசனங்கள் நிறைவேற ஆரம்பித்தன?

21 கர்த்தருடைய நாளின்போது கடவுளுடைய ஜனங்களின் அறுவடையானது யோவானின் தரிசனத்தோடு முழு இசைவுடன் இருந்திருக்கிறது: முதலாவது 1,44,000 பேரில் மீந்திருந்தவர்களை கூட்டிச் சேர்த்தல்; பின்னர் திரள் கூட்டத்தாரைக் கூட்டிச் சேர்த்தல். ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்த வண்ணம், இப்பொழுது “கடைசி நாட்களில்,” எல்லா தேசங்களின் ஜனங்களும் யெகோவாவின் தூய்மையான வணக்கத்தில் பங்குகொள்ள ஓடி வந்துகொண்டிருக்கிறார்கள். மேலும், உண்மையிலேயே, ‘புதிய வானமும் புதிய பூமியுமாகிய’ யெகோவாவின் சிருஷ்டிப்பை போற்றுவதில் நாம் களிகூருகிறோம். (ஏசாயா 2:2-4; 65:17, 18) கடவுள், ‘பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலத்தையும் கிறிஸ்துவுக்குள் மீண்டும் கூட்டிச் சேர்த்துக்’ கொண்டிருக்கிறார். (எபேசியர் 1:9) பரலோக ராஜ்யத்துக்குரிய அபிஷேகம் செய்யப்பட்ட சுதந்திரவாளிகள்—இயேசுவின் காலத்திலிருந்து நூற்றாண்டுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்—“பரலோகத்திலிருக்கிறவைகள்.” மேலும் இப்பொழுது, வேறே ஆடுகளின் திரள் கூட்டத்தினர் “பூலோகத்திலிருக்கிறவைகளின்” முதலானவர்களாக தோன்றுகிறார்கள். அந்த ஏற்பாட்டுக்கு இசைவாக நீங்கள் சேவிப்பதானது உங்களுக்கு நித்திய சந்தோஷத்தை அர்த்தப்படுத்தக்கூடும்.

திரள் கூட்டத்தாரின் ஆசீர்வாதங்கள்

22. திரள் கூட்டத்தாரைப் பற்றி யோவான் மேலுமான என்ன தகவலைப் பெறுகிறார்?

22 தெய்வீக வழிமூலத்தின் மூலமாக, யோவான் இந்தத் திரள் கூட்டத்தைப் பற்றி மேலுமானத் தகவலைப் பெறுகிறார்: “அப்பொழுது அவன் [மூப்பர்]: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரை சேவிக்கிறார்கள் [அவருக்குப் பரிசுத்த சேவை செய்கிறார்கள், NW]; சிங்காசனத்தில் மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார் [அவருடைய கூடாரத்தை அவர்கள்மேல் விரிக்கிறார், NW].”—வெளிப்படுத்துதல் 7:14ஆ, 15.

23. திரள் கூட்டத்தார் ‘வெளிவரக்கூடிய’ அந்த மிகுந்த உபத்திரவம் என்ன?

23 முன்பு ஒரு சமயத்தில், இயேசு, ராஜ்ய மகிமையில் தம்முடைய வந்திருத்தல் “உலகமுண்டானது முதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனி மேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவத்தில்” உச்சக்கட்டத்தை அடையும் என்பதாக சொல்லியிருந்தார். (மத்தேயு 24:21, 22) அந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, தேவதூதர்கள் பூமியின் நான்கு காற்றுகளைச் சாத்தானின் உலக ஒழுங்குமுறையைப் பாழாக்குவதற்கு அவிழ்த்துவிடுவார்கள். முதலாவது பொய் மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோன் அழிந்துவிடும். பின்னர், உபத்திரவத்தின் உச்சக்கட்டத்தில், இயேசு, 1,44,000 பேரில் மீந்திருப்பவர்களை, ஒரு மிகப்பெரிய திரள் கூட்டத்தாரோடு காப்பாற்றுவார்.—வெளிப்படுத்துதல் 7:1; 18:2.

24. திரள் கூட்டத்தாரின் தனிப்பட்ட நபர்கள் தப்பிப்பிழைப்பதற்கு எவ்வாறு தகுதிபெறுகிறார்கள்?

24 திரள் கூட்டத்தாரின் தனிப்பட்ட நபர்கள் தப்பிப்பிழைப்பதற்கு எவ்வாறு தகுதிபெறுகிறார்கள்? மூப்பர் யோவானிடம், அவர்கள் “தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில் தோய்த்து வெளுத்தவர்கள்” என்று சொல்லுகிறார். வேறு வார்த்தைகளில், அவர்களுடைய மீட்பராக இயேசுவில் விசுவாசம் வைத்திருக்கிறார்கள், யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள், ஒப்புக்கொடுத்தலை முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள், மேலும் அவர்களுடைய நேர்மையான நடத்தையின் மூலம் ‘நல்மனச்சாட்சியைக் கொண்டிருக்கிறார்கள்.’ (1 பேதுரு 3:16, 21; மத்தேயு 20:28) இவ்வாறு, யெகோவாவின் கண்களில், அவர்கள் சுத்தமுள்ளவர்களாகவும் நீதியுள்ள ஆட்களாகவும் இருக்கிறார்கள். மேலும், “உலகத்தால் கறைப்படுத்தப்படாதபடி” தங்களை வைத்துக்கொள்ளுகிறார்கள்.—யாக்கோபு 1:27.

25. (அ) திரள் கூட்டத்தார் யெகோவாவுக்கு எவ்வாறு ‘அவருடைய ஆலயத்தில் இரவும் பகலும் பரிசுத்த சேவை’ செய்து கொண்டிருக்கிறார்கள்? (ஆ) யெகோவா எவ்வாறு திரள் கூட்டத்தின் மேல் “அவருடைய கூடாரத்தை விரிக்கிறார்”?

25 கூடுதலாக, அவர்கள் யெகோவாவின் வைராக்கியமுள்ள சாட்சிகளாக ஆகியிருக்கிறார்கள்—“அவருடைய ஆலயத்திலே இரவும் பகலும் பரிசுத்த சேவை செய்கிறார்கள்.” நீங்களும் இந்த ஒப்புக்கொடுத்த திரள் கூட்டத்தாரில் ஒருவரா? அப்படியானால், அவருடைய பெரிய ஆவிக்குரிய ஆலயத்தின் பூமிக்குரிய பிரகாரத்தில் யெகோவாவை தொடர்ந்து சேவிப்பது உங்களுடைய சிலாக்கியமாக இருக்கிறது. இன்று, அபிஷேகம் பண்ணப்பட்டவர்களின் வழிநடத்துதலின் கீழ், திரள் கூட்டத்தார் சாட்சிகொடுக்கும் வேலையின் அதிகமான பாகத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள், உலகப்பிரகாரமான உத்தரவாதங்கள் இருந்தபோதிலும், பயனியர்களாக முழுநேர ஊழியத்துக்கு நூறாயிரக்கணக்கானோர் இடமளித்திருக்கிறார்கள். ஆனால், நீங்கள் அந்தத் தொகுதியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி, அந்தத் திரள் கூட்டத்தாரின் ஓர் ஒப்புக்கொடுத்த அங்கத்தினராக, உங்களுடைய விசுவாசம் மற்றும் கிரியைகளின் காரணமாக, கடவுளுடைய நண்பனாக நீதிமானாக்கப்பட்டு, அவருடைய கூடாரத்தில் ஒரு விருந்தாளியாக வரவேற்கப்படுகிறீர்கள் என்பதில் நீங்கள் மகிழ்ச்சியடையலாம். (சங்கீதம் 15:1-5; யாக்கோபு 2:21-26) யெகோவா இவ்வாறு அவரை நேசிக்கிறவர்கள் மேல் ‘அவருடைய கூடாரத்தை விரிக்கிறார்’ மேலும் ஒரு நல்ல விருந்தளிப்பவராக, அவர்களை பாதுகாக்கிறார்.—நீதிமொழிகள் 18:10.

26. திரள் கூட்டத்தார் வேறு என்ன ஆசீர்வாதங்களை அனுபவிப்பர்?

26 மூப்பர் தொடருகிறார்: “இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள் மேல் படுவதுமில்லை. சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன் தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார்.” (வெளிப்படுத்துதல் 7:16, 17) ஆம், யெகோவா உண்மையிலே விருந்தோம்பும் பண்புடையவராயிருக்கிறார்! ஆனால் இந்த வார்த்தைகளுக்கு என்ன ஆழ்ந்த கருத்து இருக்கிறது?

27. (அ) மூப்பரின் அதே மாதிரியான வார்த்தைகளைக் கொண்டு ஏசாயா எவ்வாறு தீர்க்கதரிசனம் உரைத்தார்? (ஆ) பவுலின் நாளில் கிறிஸ்தவ சபையின் மீது ஏசாயாவின் தீர்க்கதரிசனம் நிறைவேற ஆரம்பித்தது என்பதை எது காட்டுகிறது?

27 அதே மாதிரியான வார்த்தைகள் அடங்கிய ஒரு தீர்க்கதரிசனத்தை சிந்திப்போம்: “யெகோவா இவ்வாறு சொல்லியிருக்கிறார்: அநுக்கிரக காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணிய நாளிலே உமக்கு உதவி செய்தேன்; . . . அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை, உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள் மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டு போய்விடுவார்.” (ஏசாயா 49:8, 10, NW; சங்கீதம் 121:5, 6-ஐயும் பார்க்கவும்.) அப்போஸ்தலனாகிய பவுல் இந்தத் தீர்க்கதரிசனத்தின் ஒரு பாகத்தை மேற்கோள் காண்பித்து, பொ.ச. 33, பெந்தெகொஸ்தேவில் ஆரம்பித்த “இரட்சணிய நாளுக்கு”ப் பொருத்தினார். அவர் எழுதினார்: “அவர் (யெகோவா) சொல்லியிருக்கிறார்: அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணிய நாளிலே உனக்கு உதவி செய்தேன். இதோ, இப்பொழுதே அநுக்கிரக காலம், இப்பொழுதே இரட்சணிய நாள்.”—2 கொரிந்தியர் 6:2, NW.

28, 29. (அ) ஏசாயாவின் வார்த்தைகள் முதல் நூற்றாண்டில் எவ்வாறு நிறைவேறின? (ஆ) வெளிப்படுத்துதல் 7:16-ன் வார்த்தைகள் திரள் கூட்டத்தாரைக் குறித்ததில் எவ்வாறு நிறைவேறியிருக்கின்றன? (இ) திரள் கூட்டத்தார் ‘ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளிடத்திற்கு’ நடத்திச் செல்லப்படுவதிலிருந்து என்ன விளைவடையும்? (ஈ) மனிதவர்க்கத்தின் மத்தியில் திரள் கூட்டத்தார் ஏன் தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருப்பார்கள்?

28 பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை, உஷ்ணம் படுவதுமில்லை என்ற வாக்குறுதி அப்பொழுது என்ன பொருத்தத்தையுடையதாயிருந்தது? நிச்சயமாகவே, முதல் நூற்றாண்டுக் கிறிஸ்தவர்கள் சில சமயங்களில் சொல்லர்த்தமான பசியினாலும் தாகத்தினாலும் துன்பப்பட்டார்கள். (2 கொரிந்தியர் 11:23-27) ஆனால், ஆவிக்குரியவிதத்தில், அவர்களுக்கு அபரிமிதமாக இருந்தது. ஆவிக்குரிய காரியங்களுக்குப் பசியாகவோ தாகமாகவோ இல்லாதபடி, அவர்களுக்குத் தாராளமாக கொடுக்கப்பட்டிருந்தது. மேலுமாக, பொ.ச. 70-ல் யூத ஒழுங்குமுறையை அவர் அழித்தபோது, அவருடைய கோபத்தின் உஷ்ணம் அவர்களுக்கு எதிராக வீச யெகோவா அனுமதிக்கவில்லை. வெளிப்படுத்துதல் 7:16-ன் வார்த்தைகள் இன்று திரள் கூட்டத்தாருக்கு அதே விதமான ஆவிக்குரிய நிறைவேற்றத்தை உடையதாயிருக்கிறது. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களோடு கூட, அவர்கள் வளமான ஆவிக்குரிய ஏற்பாடுகளை அனுபவிக்கின்றனர்.—ஏசாயா 65:13; நாகூம் 1:6, 7.

29 நீங்கள் அந்தத் திரள் கூட்டத்தாரில் ஒருவராக இருந்தால், சாத்தானுடைய ஒழுங்குமுறையின் அந்திம வருடங்களிலே வறுமைகள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக என்ன காரியங்களைச் சகிக்க வேண்டியிருந்தாலும் சரி, உங்களுடைய இருதயத்தின் நல்ல நிலை “மனமகிழ்ச்சியிலே கெம்பீரிக்கும்படி” செய்யும். (ஏசாயா 65:14) அந்தக் கருத்தில், இப்பொழுதுங்கூட, யெகோவா ‘உங்களுடைய கண்களிலிருந்து கண்ணீர் அனைத்தையும் துடைக்கக்கூடும்.’ பாதகமான நியாயத்தீர்ப்பின் கடவுளுடைய வெப்பமான “சூரியன்” இனிமேலும் உங்களை அச்சுறுத்துவதில்லை, மேலும் அழிவுக்குரிய நான்கு காற்றுகள் அவிழ்த்துவிடப்படும்போது, யெகோவாவின் வெறுப்பாகிய “எரிக்கும் உஷ்ணத்திலிருந்து” காப்பாற்றப்படலாம். அழிவு முடிந்த பின், புத்துயிர் கொடுக்கும் ஜீவத் ‘தண்ணீர்களுள்ள ஊற்றுகளிலிருந்து’ முழுமையான நன்மையடைவதற்கு ஆட்டுக்குட்டியானவர் உங்களை வழிநடத்துவார், நீங்கள் நித்திய ஜீவனை அடைவதற்காக யெகோவா செய்யும் எல்லா ஏற்பாடுகளையும் இவை பிரதிநிதித்துவம் செய்கின்றன. மனித பரிபூரணத்திற்கு நீங்கள் படிப்படியாக உயர்த்தப்படுவதில், ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் உள்ள உங்கள் விசுவாசம் மெய்ப்பித்துக் காட்டப்படும். மரிக்கவும்கூட வேண்டியிராத ‘லட்சக்கணக்கானோராக,’ திரள் கூட்டத்தாராகிய நீங்கள் மனிதவர்க்கத்தின் மத்தியிலே தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருப்பீர்கள்! மிக அதிக முழுமையான கருத்தில், உங்களுடைய கண்களிலிருந்து கண்ணீர் அனைத்தும் துடைக்கப்பட்டிருக்கும்.—வெளிப்படுத்துதல் 21:4.

அழைப்பை நிச்சயப்படுத்திக்கொள்ளுதல்

30. யோவானின் தரிசனத்தில் நமக்கு என்ன சிறந்த மனக்காட்சி திறக்கிறது, மேலும் யார் “நிலைநிற்கக்கூடும்”?

30 என்னே ஒரு சிறந்த மனக்காட்சியை இந்த வார்த்தைகள் நமக்கு திறந்து வைக்கின்றன! யெகோவாதாமேயும் அவருடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார், மேலும் அவருடைய எல்லா ஊழியர்களும், பரலோக மற்றும் பூமிக்குரிய ஊழியர்கள், அவரைத் துதிப்பதில் சேர்ந்துகொள்ளுகிறார்கள். அவருடைய பூமிக்குரிய ஊழியர்கள் இந்த அதிகரித்து வரும் துதிப்பாடலில் பங்குகொள்வது என்ன ஒரு வியக்கத்தகுந்த சிலாக்கியம் என்பதைப் போற்றுகிறார்கள். வெகு சீக்கிரத்தில், யெகோவாவும் கிறிஸ்து இயேசுவும் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவார்கள், அப்போது இந்தக் கூச்சல் கேட்கும்: “அவர்களுடைய கோபாக்கினையின் மகா நாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும்.” (வெளிப்படுத்துதல் 6:17) பதில்? முத்திரை போடப்பட்ட 1,44,000 பேரில் யாராவது இன்னும் மீந்திருந்தால் அவர்கள் மற்றும் வேறே ஆடுகளாகிய திரள் கூட்டம் உட்பட, மனிதவர்க்கத்தின் ஒரு சிறுபான்மையோர் மட்டுமே ‘நிலைநிற்பார்கள்,’ அதாவது, அவர்களோடு தப்பிப்பிழைப்பார்கள்.—எரேமியா 35:19; 1 கொரிந்தியர் 16:13.

31. யோவானின் தரிசனத்தினுடைய நிறைவேற்றம் கிறிஸ்தவர்களை, அபிஷேகம் செய்யப்பட்டவர்களையும் திரள் கூட்டத்தாரையும் எவ்வாறு பாதிக்க வேண்டும்?

31 இந்த உண்மையின் காரணமாக, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களாகிய யோவான் வகுப்பார் “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருவதில்” முழு ஆற்றலுடன் கடினமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். (பிலிப்பியர் 3:14) இந்த நாட்களின் நிகழ்ச்சிகள் அவர்களுடைய பங்கில் விசேஷித்த சகிப்புத்தன்மையைத் தேவைப்படுத்துகிறது என்பதை முழுமையாக அறிந்திருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 13:10) அநேக ஆண்டுகள் யெகோவாவை உண்மைதவறாமல் சேவித்த பின்னர், விசுவாசத்தை உறுதியாகப் பிடித்துக்கொண்டு, அவர்களுடைய பெயர்கள் ‘பரலோகத்தில் எழுதப்பட்டிருப்பதற்காகச்’ சந்தோஷப்படுகிறார்கள். (லூக்கா 10:20; வெளிப்படுத்துதல் 3:5) திரள் கூட்டத்தாரைச் சேர்ந்தவர்களும்கூட ‘முடிவு பரியந்தம் நிலைத்திருப்பவன் மட்டுமே இரட்சிக்கப்படுவான்’ என்பதை அறிந்திருக்கிறார்கள். (மத்தேயு 24:13) திரள் கூட்டம் ஒரு தொகுதியாக மிகுந்த உபத்திரவத்திலிருந்து வெளியே வருவதாக குறிக்கப்பட்டிருக்கையில், அதைச் சேர்ந்த தனி நபர்கள் சுத்தமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கு கடினமாக முயற்சி செய்யவேண்டும்.

32. யெகோவாவின் கோபாக்கினையின் நாளில் இரண்டு தொகுதிகள் மட்டுமே ‘நிலைநிற்பார்கள்’ என்ற உண்மையினால் என்ன அவசர நிலைமை உயர்த்திக் காட்டப்படுகிறது?

32 யெகோவாவின் கோபாக்கினையின் நாளில், இந்த இரண்டு தொகுதிகளைத் தவிர வேறு எவரும் ‘நிலைநிற்பார்கள்’ என்பதற்கு அத்தாட்சி எதுவும் இல்லை. இயேசுவின் மரண நினைவு ஆசரிப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆஜராயிருப்பதன் மூலம் அவருடைய பலிக்கு ஏதோ ஒரு மரியாதையை காண்பித்து, ஆனால் ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டப்பட்டு, அவருடைய ஊழியத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் யெகோவாவின் ஊழியர்களாக ஆகும் அளவுக்கு, இன்னும் இயேசுவின் பலியில் விசுவாசம் வைக்காத லட்சக்கணக்கானோருக்கு இது எதை அர்த்தப்படுத்துகிறது? மேலும், ஒரு காலத்தில் சுறுசுறுப்பாக இருந்து ஆனால் தங்களுடைய இருதயங்களை ‘லவுகீக கவலைகளினால் பாரமடையும்படிக்கு’ அனுமதித்திருப்பவர்களைப் பற்றியதென்ன? இப்படிப்பட்டவர்கள் எல்லாரும் “இனிச் சம்பவிக்கப் போகிற இவைகளுக்கெல்லாம் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு” விழித்துக்கொண்டு மற்றும் விழிப்புள்ளவர்களாக வைத்துக் கொள்வார்களாக. காலம் குறுகியது!—லூக்கா 21:34-36.

[அடிக்குறிப்புகள்]

a துணைக்குறிப்புகளடங்கிய புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள், அடிக்குறிப்பைப் பார்க்கவும்.

b ஆங்கில காவற்கோபுரம், ஏப்ரல் 1, 1918, பக்கம் 98.

c சொல்லர்த்தமாக, “அவருக்கு முன்,” கிரேக்க வேதாகமத்தின் கிங்டம் இன்டர்லீனியர் மொழிபெயர்ப்பு, (ஆங்கிலம்).

[கேள்விகள்]

[பக்கம் 119-ன் பெட்டி]

அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியது

அநேக பத்தாண்டுகளாக திரள் கூட்டத்தின் அடையாளத்தைக் குறித்து யோவான் வகுப்பார் ஆய்வு செய்தார்கள், ஆனால் ஒரு திருப்திகரமான விளக்கத்தைக் கண்டுபிடிக்கவில்லை. ஏன்? நாம் பதிலை உண்மையுள்ள யோசேப்பின் வார்த்தைகளில் காண்கிறோம், அவன் சொன்னான்: “அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா?” (ஆதியாகமம் 40:8) எப்போது, எவ்வாறு, கடவுள் அவருடைய தீர்க்கதரிசனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார்? பொதுவாக, அவைகள் நிறைவேற்றம் அடையப் போகும்போது அல்லது நிறைவேறிக் கொண்டிருக்கும்போது, தேடிக்கொண்டிருக்கும் அவருடைய ஊழியர்கள் அவற்றின் செய்தியைத் தெளிவாகப் பார்க்கும்படியாக செய்கிறார். இந்தப் புரிந்துகொள்ளுதல், “தேவ வசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, . . . நமக்குப் போதனையாக,” கொடுக்கப்பட்டிருக்கிறது.—ரோமர் 15:4.

[பக்கம் 124-ன் பெட்டி]

திரள் கூட்டத்தின் அங்கத்தினர்கள்

▪ சகல தேசங்களிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலும் இருந்து வருகிறார்கள்

▪ யெகோவாவின் சிங்காசனத்திற்கு முன்பாக நிற்கிறார்கள்

▪ அவர்களுடைய அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில் தோய்த்து வெளுத்திருக்கிறார்கள்

▪ யெகோவாவுக்கும் இயேசுவுக்கும் இரட்சிப்பின் மகிமையை கொடுக்கிறார்கள்

▪ மிகுந்த உபத்திரவத்திலிருந்து வருகிறார்கள்

▪ யெகோவாவை அவருடைய ஆலயத்தில் இரவும் பகலும் சேவிக்கிறார்கள்

▪ யெகோவாவின் அன்பான பாதுகாப்பையும் கவனிப்பையும் பெறுகிறார்கள்

▪ ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு இயேசுவால் மேய்த்து நடத்தப்படுகிறார்கள்

[பக்கம் 121-ன் முழுபடம்]

[பக்கம் 127-ன் படம்]

இரட்சிப்பின் மகிமையை கடவுளுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் திரள் கூட்டத்தார் கொடுக்கின்றனர்

[பக்கம் 128-ன் படம்]

ஆட்டுக்குட்டியானவர் ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்குத் திரள் கூட்டத்தாரை நடத்துவார்