Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய பரிசுத்த இரகசியம் ​—அதன் மகிமையான உச்சக்கட்டம்!

கடவுளுடைய பரிசுத்த இரகசியம் ​—அதன் மகிமையான உச்சக்கட்டம்!

அதிகாரம் 26

கடவுளுடைய பரிசுத்த இரகசியம்—அதன் மகிமையான உச்சக்கட்டம்!

1. (அ) யோவான் பரிசுத்த இரகசியம் நிறைவேறியதைக் குறித்து எப்படி நமக்கு தெரிவிக்கிறார்? (ஆ) பெருந்திரளான தூதர்கள் ஏன் கெம்பீர சத்தமாக பேசுகின்றனர்?

 வெளிப்படுத்துதல் 10:1, 6, 7-ல் பதிவுசெய்துள்ளபடி அந்தப் பலமுள்ள தூதன் ஆணையிட்டு சொன்ன அறிவிப்பை நீங்கள் ஞாபகம் வைத்திருக்கிறீர்களா? அவர் சொன்னார்: “இனி காலம் செல்லாது [தாமதமிராது, NW]; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் [அவருடைய பரிசுத்த இரகசியம், NW] நிறைவேறும்.” அந்தக் கடைசி எக்காளம் ஊதப்படுவதற்கான யெகோவாவுடைய உரிய காலம் வந்துவிட்டது! அப்படியானால், இந்தப் பரிசுத்த இரகசியம் எப்படி நிறைவேறியது? இதைக் குறித்து நமக்கு தெரியப்படுத்த யோவான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்! அவர் எழுதுகிறார்: “ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.” (வெளிப்படுத்துதல் 11:15) அந்தப் பெருந்திரளான தேவதூதர்கள் கெம்பீர சத்தத்தோடு பேசுவதற்கு, இடிமுழக்க தொனிகளோடுங்கூட பேசுவதற்கு காரணமிருக்கிறது! இந்தக் குறிப்பிடத்தக்க அறிவிப்பு எல்லாக் காலத்துக்குமுரிய முக்கியத்துவத்தை உடையதாயிருக்கிறது. அனைத்து உயிருள்ள சிருஷ்டிக்கும் இது இன்றியமையாத அக்கறைக்குரிய ஒரு காரியமாகும்.

2. எப்போது மற்றும் எந்தச் சம்பவத்தோடு பரிசுத்த இரகசியம் வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவரப்படுகிறது?

2 அந்தப் பரிசுத்த இரகசியம் அதன் சந்தோஷகரமான உச்சக்கட்டத்தை அடைகிறது! மகிமையாகவும், சிறப்புவாய்ந்த விதத்திலும் அது 1914-ல் ஒரு வெற்றிகரமான முடிவுக்கு கொண்டுவரப்படுகிறது, கர்த்தராகிய யெகோவா அவருடைய கிறிஸ்துவை துணை அரசராக அப்போது சிங்காசனத்திலேற்றினார். இயேசு கிறிஸ்து தம்முடைய பிதாவின் இடத்தில் செயல்புரிபவராக, மனிதவர்க்க உலகிலுள்ள சத்துருக்களின் மத்தியில் சுறுசுறுப்பாக ஆட்சிசெய்ய தொடங்குகிறார். வாக்குப்பண்ணப்பட்ட வித்தாக, சாத்தானையும் அவனுடைய சந்ததியையும் ஒன்றுமில்லாமற்போகச் செய்து, பூமியில் பரதீஸிய சமாதானத்தை திரும்ப நிலைநாட்டவும் அவர் ராஜ்ய அதிகாரத்தை பெறுகிறார். (ஆதியாகமம் 3:15; சங்கீதம் 72:1, 7) இப்படியாக, அவர் மேசியானிய அரசராக யெகோவா சொன்ன வார்த்தையை நிறைவேற்றுவதோடு, “நித்திய ராஜா”வாகிய தம்முடைய பிதாவை மகிமைப்படுத்துவார், இவரே “சதாகாலங்க”ளுக்கும் ஈடற்ற உன்னத பேரரசராக அரசாளுவார்.—1 தீமோத்தேயு 1:17.

3. யெகோவா தேவன் எப்போதும் அரசராகயிருந்தபோதிலும் ஏன் பூமியில் மற்ற ஆட்சிகளை இருக்க அனுமதித்திருக்கிறார்?

3 ஆனால் எப்படி “உலகத்தின் ராஜ்யங்கள் . . . நம்முடைய கர்த்தருக்கு”ரிய, யெகோவாவுக்குரிய, “ராஜ்யங்களாயின”? யெகோவா தேவன் எப்போதும் அரசராகவே இருக்கிறாரல்லவா? அது உண்மைத்தான், லேவியனாகிய ஆசாப்புங்கூட இப்படியாக பாடினான்: “தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா.” மற்றொரு சங்கீதக்காரனும் இப்படியாக அறிவித்தான்: “கர்த்தர் [யெகோவா, NW] ராஜரிகம்பண்ணுகிறார். . . . உமது சிங்காசனம் பூர்வமுதல் உறுதியானது; நீர் அநாதியாயிருக்கிறீர்.” (சங்கீதம் 74:12; 93:1, 2)என்றாலும், யெகோவா ஞானமுடையவராக பூமியில் வேறே ஆட்சிகளை அனுமதித்திருக்கிறார். இப்படியாக கடவுளுடைய உதவியில்லாமல் மனிதன் தானாகவே ஆட்சிசெய்வதன்பேரில் ஏதேனில் எழும்பிய விவாதம் முற்றிலும் சோதிக்கப்பட்டுவிட்டது. மனித ஆட்சி மிக மோசமாக தோல்வியடைந்திருக்கிறது. கடவுளுடைய தீர்க்கதரிசி சொன்ன இந்த வார்த்தைகள் மிகவும் உண்மையாயிருக்கின்றன: “கர்த்தாவே [யெகோவாவே, NW], மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.” (எரேமியா 10:23) நம்முடைய முதல் பெற்றோர் தவறிழைத்த காலமுதற்கொண்டு, குடியிருக்கப்பட்ட பூமி முழுவதும் “பழைய பாம்பாகிய” சாத்தானுடைய ஆதிக்கத்தின் கீழ் இருந்துவருகிறது. (வெளிப்படுத்துதல் 12:9; லூக்கா 4:6) இப்போது, பெரிய ஒரு மாற்றத்துக்கான காலம் வந்துவிட்டது! யெகோவா தம்முடைய நியமிக்கப்பட்ட மேசியானிய ராஜ்யத்தின் மூலம் அவருடைய உரிமையுள்ள ஸ்தானத்தை நியாயநிரூபணம் செய்ய பூமியின் மீது அவருடைய அரசுரிமையை புதிய ஒரு முறையில் செலுத்த ஆரம்பிக்கிறார்.

4. எக்காளங்கள் 1922-ல் தொனிக்க ஆரம்பித்தபோது, எது முன்னிலைக்குக் கொண்டுவரப்பட்டது? விளக்கவும்.

4 அந்த ஏழு எக்காளங்கள் 1922-ல் தொனிக்க ஆரம்பித்தப் பிறகு, சீடர் பாய்ன்ட், ஒஹையோவில் நடந்த பைபிள் மாணாக்கரது மாநாட்டிலே, J. F. ரதர்ஃபர்டு “பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்ற வசனத்தின் பேரில் ஒரு பேச்சை கொடுத்தார். (மத்தேயு 4:17, கிங் ஜேம்ஸ் வர்ஷன்) அவர் இவ்வார்த்தைகளோடு அப்பேச்சை முடித்தார்: “மகா உன்னதமான கடவுளுடைய குமாரரே, களத்துக்கு திரும்புங்கள்! போராயுதத்தைத் தரித்துக்கொள்ளுங்கள்! ஊக்கமுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள், சுறுசுறுப்புள்ளவர்களாயிருங்கள், தைரியங்கொண்டிருங்கள். ஆண்டவருக்கு உத்தமமுள்ள உண்மையான சாட்சிகளாயிருங்கள். பாபிலோனுடைய எல்லா எஞ்சிய பாகங்களும் அழிக்கப்பட்டுப்போகும் வரை போரில் முன்னேறுங்கள். இச்செய்தியை எங்கும் அறிவியுங்கள். யெகோவாவே கடவுளென்றும் இயேசு ராஜாதி ராஜாவாகவும் கர்த்தாதி கர்த்தாவாகவும் இருக்கிறார் என்றும் உலகம் அறியட்டும். இதுவே ஒரு மகத்தான நாள். இதோ, ராஜா அரசாளுகிறார்! நீங்களே அவருடைய விளம்பரதாரர்கள். எனவே ராஜாவையும் அவருடைய ராஜ்யத்தையும் விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள், விளம்பரப்படுத்துங்கள்.” கிறிஸ்து இயேசுவின் மூலம் வரும் கடவுளுடைய ராஜ்யம், முன்னிலைக்குக் கொண்டுவரப்பட்டது, அதுவே ராஜ்ய பிரசங்கிப்புக்குப் பெரிய அலைகளை எழுப்பியிருக்கிறது, இது அந்த எல்லா ஏழு தூதருடைய எக்காள சத்தங்கள் மூலம் அறிவிக்கப்பட்ட நியாயத்தீர்ப்புகளையும் உட்படுத்துகிறது.

5. 1928-ல், ஏழாவது எக்காள சத்தத்தை முக்கியப்படுத்திக் காட்டுவதற்கு பைபிள் மாணாக்கர்களின் மாநாட்டிலே என்ன நடந்தது?

5 அந்த ஏழாம் தூதனுடைய எக்காள சத்தம் ஜுலை 30-ஆகஸ்ட் 6, 1928 வரை, மிச்சிகன், டெட்ராய்ட்டில் நடைபெற்ற பைபிள் மாணாக்கர்களது மாநாட்டில் சொல்லப்பட்ட முக்கிய குறிப்புகளில் பிரதிபலிக்கப்பட்டது. அப்போது, தி நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை விவரித்ததுபோல, ‘சரித்திரத்திலேயே, மிகவும் பரந்த மற்றும் அதிக விலையுயர்ந்த வானொலி தொடர்’போடு 107 ஒலிபரப்பு நிலையங்களும் இணைக்கப்பட்டன. மாநாடு “சாத்தானுக்கு எதிராகவும் யெகோவாவின் சார்பாகவும் தீர்மானம்” என்ற இந்தச் சக்திவாய்ந்த அறிவிப்பை உற்சாகத்தோடு ஏற்றுக்கொண்டது, இது அர்மகெதோனில் சாத்தானும் அவனுடைய பொல்லாத அமைப்பும் கவிழ்க்கப்படுவதையும் நீதியை நேசிக்கும் ஆட்களனைவருக்கும் விடுதலையையும் குறிப்பிட்டுக் காட்டினது. இம்மாநாட்டில் அரசாங்கம் (ஆங்கிலம்) என்ற இந்த 368 பக்கங்கொண்ட பிரசுரத்தைப் பெறுவதில் கடவுளுடைய ராஜ்யத்தின் உத்தமமுள்ள பிரஜைகள் களிகூர்ந்தனர். இது “கடவுள் தாம் அபிஷேகம் செய்த அரசரை 1914-ல் சிங்காசனத்தில் அமர்த்தினார்” என்பதற்கான மிகத் தெளிவான அத்தாட்சியை அளித்தது.

யெகோவா அதிகாரத்தை ஏற்கிறார்

6. கிறிஸ்து கடவுளுடைய ராஜ்யத்தில் அரசராக அமர்த்தப்பட்ட அறிவிப்பை யோவான் எப்படி தெரிவிக்கிறார்?

6 கடவுளுடைய ராஜ்யத்தில் கிறிஸ்து அரசராக அமர்த்தப்பட்டார்—இந்த அறிவிப்பு என்னே ஒரு சந்தோஷத்தை உண்டுபண்ணுகிறது! யோவான் அறிக்கை செய்கிறான்:“அப்பொழுது தேவனுக்கு முன்பாகத் தங்கள் சிங்காசனங்கள்மேல் உட்கார்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய [யெகோவாவாகிய, NW] தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்; தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர்.”—வெளிப்படுத்துதல் 11:16, 17.

7. யெகோவா தேவனுக்கு நன்றியை எவ்வாறு இவர்கள் செலுத்தினார்கள்: (அ) பூமியிலுள்ள அடையாளப்பூர்வமான 24 மூப்பர்களில் மீந்தவர்கள்? (ஆ) உயிர்த்தெழுப்பப்பட்டு பரலோகத்தில் தங்களுடைய ஸ்தானத்தை ஏற்ற அடையாளப்பூர்வமான 24 மூப்பர்கள்?

7 யெகோவா தேவனுக்கு இப்பேர்ப்பட்ட நன்றியைச் செலுத்தும் ஆட்கள் 24 மூப்பர்கள் ஆவர், பரலோக ஸ்தானத்தில் இருக்கிற கிறிஸ்துவின் அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்களை இவர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். 1922 முதற்கொண்டு இந்த 1,44,000 அபிஷேகம் செய்யப்பட்ட ஆட்களில் பூமியிலுள்ள மீதியானோர், அந்த எக்காள சத்தங்கள் தொடங்கிவைத்த வேலையில் சுறுசுறுப்பாக செயற்பட இறங்கினார்கள். அவர்கள் மத்தேயு 24:3–25:46-ல் சொல்லப்பட்டுள்ள அடையாளத்தின் முழு உட்பொருளையும் விளங்கிக்கொண்டனர். என்றபோதிலும், ‘மரணபரியந்தம் உண்மையாயிருந்து’ மரித்துப்போன அவர்களுடைய உடன் சாட்சிகள், இப்போது, முகங்குப்புற விழுந்து யெகோவாவுக்கு வணக்கத்தைச் செலுத்தும் அந்த 1,44,000 பேர்கொண்ட முழு தொகுதியைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கு கர்த்தருடைய நாளின் முற்பகுதியிலேயே உயிர்த்தெழுப்பப்பட்டு பரலோகத்தில் தங்களுடைய ஸ்தானத்தை ஏற்கலானார்கள். (வெளிப்படுத்துதல் 1:10; 2:10) அவர்களுடைய ஈடற்ற உன்னத பேரரசராகிய ஆண்டவர் தம்முடைய பரிசுத்த இரகசியத்தை முடிவான உச்சக்கட்டத்துக்கு கொண்டுவருவதில் தாமதிக்கவில்லை என்பதற்கு இவர்களெல்லாரும் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறார்கள்!

8. (அ) ஏழாவது எக்காளம் ஊதப்படுவது தேசத்தாரிடமிருந்து என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது? (ஆ) யாருக்கு விரோதமாக தேசத்தார் தங்களுடைய எரிச்சலை வெளிக்காட்டியிருக்கிறார்கள்?

8 மறுபட்சத்தில், தேசத்தாருக்கு இந்த ஏழாம் எக்காளம் ஊதப்படுவது எந்தவித சந்தோஷத்தையும் கொண்டுவரவில்லை. அவர்கள் யெகோவாவுடைய கோபத்தை எதிர்ப்படுவதற்கான காலம் வந்துவிட்டது. யோவான் சொல்கிற பிரகாரம்: “ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள்.” (வெளிப்படுத்துதல் 11:18) உலக தேசத்தார் 1914-லிருந்து ஒருவருக்கொருவர் விரோதமாகவும், கடவுளுடைய ராஜ்யத்துக்கு விரோதமாகவும் மேலும் விசேஷமாக யெகோவாவுடைய இரண்டு சாட்சிகளுக்கு விரோதமாகவும் தங்களுடைய எரிச்சலைக் கடுமையாக வெளிக்காட்டியிருக்கின்றனர்.—வெளிப்படுத்துதல் 11:3.

9. தேசத்தார் எப்படி பூமியை நாசப்படுத்தி வந்திருக்கிறார்கள், அதைக் குறித்து என்ன செய்ய கடவுள் முடிவுசெய்துள்ளார்?

9 சரித்திரம் முழுவதிலுமாக தேசத்தார் தொடர்ந்து யுத்தத்தில் ஈடுபடுவதினாலும் தவறான நிர்வாகத்தினாலும் பூமியை நாசப்படுத்தி வந்திருக்கின்றனர். என்றபோதிலும், இந்த நாசகரமான வேலை 1914 முதற்கொண்டு அபாயகரமான அளவில் பரவியிருக்கிறது. பேராசையும் ஊழலும் பாலைவனங்களை விரிவாக்குவதிலும் அநேக வளமிக்க நிலங்களை இழந்துவிடுவதிலும் விளைவடைந்திருக்கின்றன. அமில மழையும் கதிரியக்க மேகங்களும் அநேக இடங்களைப் பாழாக்கியிருக்கின்றன. உணவு மூலங்கள் அசுத்தமாக்கப்பட்டிருக்கின்றன. நாம் சுவாசிக்கிற காற்றும் குடிக்கிற தண்ணீரும் அசுத்தமாக்கப்பட்டிருக்கின்றன. தொழில்வள கழிவுப்பொருட்கள், நிலத்திலும் சமுத்திரத்திலும் உயிர்களை அச்சுறுத்துகின்றன. ஒரு சமயம், அனைத்து மனிதவர்க்கத்தையும் அணு ஆயுதங்கள் மூலம் நிர்மூலமாக்க வல்லரசுகள் முழு அழிவைக்கொண்டு பயமுறுத்தின. சந்தோஷகரமாக, யெகோவா ‘பூமியை அழிப்பவர்களை அழித்துப்போடுவார்’ (NW); பூமியிருக்கும் இந்த மோசமான நிலைக்கு உத்தரவாதமுள்ள அகந்தைக்கொண்ட, கடவுள்பயமற்ற ஆட்கள் மீது அவர் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவார். (உபாகமம் 32:5, 6; சங்கீதம் 14:1-3) ஆகையால், இந்தப் பொல்லாப்பான ஆட்களை கணக்கு ஒப்புவிக்கச்செய்ய அவர் இந்த மூன்றாம் ஆபத்துக்கு ஏற்பாடு செய்கிறார்.—வெளிப்படுத்துதல் 11:14.

அழித்துப்போடுபவர்களுக்கு ஆபத்து!

10. (அ) மூன்றாம் ஆபத்து என்ன? (ஆ) எவ்விதத்தில் மூன்றாம் ஆபத்து வாதனையை விட அதிகத்தை கொண்டுவருகிறது?

10 இதோ, மூன்றாம் ஆபத்து. அது விரைந்து வருகிறது! நாம் வாழ்ந்துவரும் அழகிய பூமியாகிய அவருடைய ‘பாதபடியை’ கெடுப்பவர்களுக்கு அழிவைக் கொண்டுவரும் யெகோவாவுடைய வழிமூலமாக இது இருக்கிறது. (ஏசாயா 66:1) அது மேசியானிய ராஜ்யத்தின் மூலம் செயல்பட இருக்கிறது—கடவுளுடைய பரிசுத்த இரகசியம். கடவுளுடைய சத்துருக்களும் விசேஷமாக கிறிஸ்தவமண்டல தலைவர்களும், இந்த முதல் இரண்டு ஆபத்துகளைக்கொண்டு வாதிக்கப்பட்டார்கள்—இவை முக்கியமாக வெட்டுக்கிளிகளுடைய வாதையின் மூலமாகவும் குதிரைச்சேனைகளுடைய இராணுவங்களின் மூலமாகவும் விளைவடைந்தன; ஆனால், மூன்றாம் ஆபத்து யெகோவாவுடைய ராஜ்யம்தானே கவனித்து நடத்தும் ஆபத்தாக இருக்கிறது, வேதனையைக் காட்டிலும் அதிகத்தைக் கொண்டுவருகிறது. (வெளிப்படுத்துதல் 9:3-19) கெடுத்துப்போடும் மனித சமுதாயத்தையும் அதன் ஆட்சியாளர்களையும் அகற்றிப்போடுவதற்குரிய மரண அடியை இது கொடுக்கிறது. இந்த மரண அடி அர்மகெதோனில் யெகோவாவுடைய நியாயத்தீர்ப்பின் உச்சக்கட்டமாக வரும். இது தானியேல் முன்னுரைத்ததுப்போலவே இருக்கிறது: “அந்த ராஜாக்களின் [பூமியை அழித்துப்போடும் ஆட்சியாளர்களின்] நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.” கடவுளுடைய ராஜ்யம், கவர்ச்சிகரமான ஒரு மலையைப்போன்று, மகிமைநிறைந்த ஒரு பூமியின் மீது ஆட்சிசெய்து, யெகோவாவுடைய ஈடற்ற உன்னத அரசாட்சியை நியாயநிரூபணம் செய்வதாய் மனிதவர்க்கத்துக்கு நித்திய சந்தோஷத்தை கொண்டுவரும்.—தானியேல் 2:35, 44; ஏசாயா 11:9; 60:13.

11. (அ) இந்தத் தீர்க்கதரிசனம் அடுத்தடுத்து தொடர்ந்து பின்வரும் என்ன மகிழ்ச்சியூட்டும் சம்பவங்களை விவரிக்கிறது? (ஆ) எந்த தகுதியற்ற தயவு கண்டுணரப்படுகிறது, எப்படி, யார் மூலம்?

11 அந்த மூன்றாம் ஆபத்து கர்த்தருடைய நாளினூடே படிப்படியாக விடாது தொடர்ந்துவரும் மகிழ்ச்சியூட்டும் சம்பவங்களோடு வரும். ‘மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் தமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருக்கிறவர்களுக்கு கடவுள் பலனளிக்கிறதற்குமான’ காலமாக இது இருக்கும். மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைக் குறிப்பிடுகிறது! முன்பே மரித்துப்போன அபிஷேகம் செய்யப்பட்ட பரிசுத்தவான்களுக்கு இது கர்த்தருடைய நாளின் முற்பகுதியில் நடந்தேறுகிறது. (1 தெசலோனிக்கேயர் 4:15-17) காலப்போக்கில், மீதியானோரான பரிசுத்தவான்கள் உடனடியான உயிர்த்தெழுதல் மூலமாக இவர்களைச் சேர்ந்துகொள்கிறார்கள். மற்றவர்களுக்குங்கூட பரிசளிக்கப்பட வேண்டும், அவர்கள் மகா உபத்திரவத்தை தப்பிப்பிழைக்கும் திரள் கூட்டத்தாராயிருந்தாலுஞ்சரி அல்லது கிறிஸ்துவுடைய ஆயிர-வருட ஆட்சியில் உயிருக்கு கொண்டுவரப்படும் ‘மரித்தோராகிய சிறியோராகவும் பெரியோராகவும்’ இருந்தாலுஞ்சரி பூர்வ காலங்களில் வாழ்ந்த தீர்க்கதரிசிகளாகிய கடவுளுடைய ஊழியர்கள் உட்பட, மனிதவர்க்கத்தில் யெகோவாவுடைய நாமத்துக்குப் பயப்படும் மற்ற ஆட்களும் இதில் உள்ளடங்குவர். கடவுளுடைய மேசியானிய அரசர் மரணத்தின் திறவுகோலையும் ஹேடீஸின் திறவுகோலையும் கொண்டிருப்பதன் காரணமாக, அவருடைய ராஜ்ய ஆட்சி நித்திய ஜீவனாகிய அருமையான ஏற்பாட்டை அடைய நாடுகிற யாவருக்கும் அதை அவர் கொடுப்பதற்கு வழியைத் திறந்து வைக்கும். (வெளிப்படுத்துதல் 1:18; 7:9, 14; 20:12, 13; ரோமர் 6:22; யோவான் 5:28, 29) அது பரலோகத்திலே அழியாமையுள்ள வாழ்க்கை அனுபவிப்பதாயிருந்தாலுஞ்சரி பூமியில் நித்திய வாழ்க்கை அனுபவிப்பதாயிருந்தாலுஞ்சரி, இந்த உயிராகிய பரிசு யெகோவாவுடைய தகுதியற்ற தயவாக இருக்கிறது, இதை பெற்றுக்கொள்கிற ஒவ்வொருவரும் எப்போதும் நன்றியுள்ளவர்களாயிருக்க வேண்டும்!—எபிரெயர் 2:9.

இதோ, பாருங்கள், அவருடைய உடன்படிக்கைப் பெட்டி!

12. (அ) வெளிப்படுத்துதல் 11:19-ன் பிரகாரம், பரலோகத்தில் யோவான் எதைக் காண்கிறார்? (ஆ) உடன்படிக்கைப் பெட்டி எதன் அடையாளமாக இருந்தது, பாபிலோனுக்கு அடிமைத்தனத்தில் இஸ்ரவேலர் சென்றபிறகு அது என்ன ஆனது?

12 யெகோவா அரசாளுகிறார்! அவருடைய மேசியானிய ராஜ்யத்தின் மூலம் அவர் மகத்தான விதத்தில் மனிதவர்க்கத்தினிடம் தம்முடைய அரசுரிமையை செலுத்துகிறார். யோவான் அடுத்துக் காண்பதில் இது உறுதிப்படுத்தப்படுகிறது: “அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.” (வெளிப்படுத்துதல் 11:19) வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இங்கு மட்டும் தானே கடவுளுடைய உடன்படிக்கைப் பெட்டி குறிப்பிடப்படுகிறது. யெகோவா தம்முடைய ஜனங்களாகிய இஸ்ரவேலரோடு இருந்ததற்கான காணக்கூடிய அடையாளமாக அந்தப் பெட்டி இருந்தது. கூடாரத்திலும், பின்னர் சாலொமோன் கட்டிய ஆலயத்திலும் அது மகா பரிசுத்த ஸ்தலத்தில் வைக்கப்பட்டது. ஆனால், இஸ்ரவேலர் பொ.ச.மு. 607-ல் பாபிலோனில் அடிமைத்தனத்திற்குள் சென்றபோது எருசலேம் பாழாக்கப்பட்டு உடன்படிக்கைப் பெட்டி மறைந்துபோனது. தாவீதின் வீட்டாருடைய பிரதிநிதிகள் “கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] சிங்காசனத்தில் ராஜாவாய் வீற்றி”ராமல் போனபோது இது நடந்தது​.—1 நாளாகமம் 29:23. a

13. கடவுளுடைய பரலோக ஆலயத்தில் கடவுளுடைய உடன்படிக்கைப் பெட்டி காணப்படுவது எதைக் குறித்துக் காட்டுகிறது?

13 இப்போது 2,600-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பிறகு, அந்தப் பெட்டி மறுபடியும் காணப்படுகிறது. ஆனால் யோவானுடைய தரிசனத்திலே, இந்தப் பெட்டி ஒரு பூமிக்குரிய ஆலயத்தில் காணப்படவில்லை. கடவுளுடைய பரலோக ஆலயத்தில் காணப்படுகிறது. தாவீதின் ராஜரீக வம்சாவளியில் வந்த ஓர் அரசரின் மூலமாக யெகோவா மறுபடியும் ஆட்சிசெய்கிறார். என்றாலும், இந்த முறை அரசராகிய கிறிஸ்து இயேசு பரலோக எருசலேமில் சிங்காசனத்தில் அமர்த்தப்படுகிறார்—யெகோவாவுடைய நியாயத்தீர்ப்புகளை அவர் நிறைவேற்றுவதற்கு உயர உள்ள அனுகூலநிலையாக இது இருக்கிறது. (எபிரெயர் 12:22) வெளிப்படுத்துதலில் உள்ள பின்வரும் அதிகாரங்கள் இவற்றை நமக்கு வெளிப்படுத்தும்.

14, 15. (அ) பூர்வ எருசலேமில் யார் மட்டும் அந்த உடன்படிக்கைப் பெட்டியை பார்க்க முடியும், ஏன்? (ஆ) பரலோகத்தில் உள்ள கடவுளுடைய ஆலயத்தில் அவருடைய உடன்படிக்கைப் பெட்டியை யார் காண்பார்கள்?

14 பூமிக்குரிய பூர்வ எருசலேமில், பொதுவாக இஸ்ரவேலர்கள் அந்தப் பெட்டியைக் காணமுடியாது, ஆலயத்தில் சேவிக்கும் ஆசாரியர்களுங்கூட அதை காணமுடியாது, இதேனெனில், அது திரையினால் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து மறைக்கப்பட்டிருந்த மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் இருந்தது. (எண்ணாகமம் 4:20; எபிரெயர் 9:2, 3) பிரதான ஆசாரியன் மட்டுமே ஆண்டுதோறும் பாவநிவிர்த்தி நாளன்று மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கையில் அதைக் காண முடியும். எனினும், பரலோகத்திலுள்ள ஆலயம் திறக்கப்படுகையில், அந்த அடையாளப்பூர்வமான பெட்டி, யெகோவாவுடைய பிரதான ஆசாரியராகிய இயேசு கிறிஸ்துவுக்கு மட்டுமல்லாமல், யோவான் உட்பட அவருடைய துணைஆசாரியர்களாயிருக்கும் அந்த 1,44,000 ஆட்களுக்கும் காணப்படுகிறது.

15 பரலோகத்திற்கு முதலில் உயிர்த்தெழுப்பப்பட்ட இந்த ஆட்கள் இந்த அடையாளப்பூர்வமான பெட்டியை நெருங்க காண்கிறார்கள், ஏனெனில், அவர்கள் 24 மூப்பர்களின் பாகமாக யெகோவாவுடைய சிங்காசனத்தைச் சுற்றி தங்களுடைய இடத்தைப் பெற்றுள்ளனர். மேலும் பூமியிலுள்ள யோவான் வகுப்பார் யெகோவாவின் ஆவியைக்கொண்டு அவருடைய ஆவிக்குரிய ஆலயத்தில் அவருடைய பிரசன்னத்தைப் பகுத்துணர அறிவொளியூட்டப்பட்டிருக்கிறார்கள். இந்த அதிசயமான வளர்ச்சியைக் குறித்து பொதுவாக மனிதவர்க்கத்தின் கவனத்துக்கு கொண்டுவர அடையாளங்களும் நிகழ்ந்திருக்கின்றன. யோவானுடைய தரிசனம் மின்னல்களும் சத்தங்களும் இடிமுழக்கங்களும் பூமியதிர்ச்சியும் கல்மழையும் உண்டானதாக பேசுகிறது. (வெளிப்படுத்துதல் 8:5-ஐ ஒப்பிட்டுப் பார்கவும்.) இவை எதை அடையாளப்படுத்துகின்றன?

16. மின்னல்களும் சத்தங்களும் இடிமுழக்கங்களும் பூமியதிர்ச்சியும் பெரிய கல்மழையும் எப்படி இருந்திருக்கின்றன?

16 மத வட்டாரத்தில் 1914 முதற்கொண்டு அதிக கிளர்ச்சி இருந்து வருகிறது. ஆகிலும், சந்தோஷகரமாக, இந்தப் “பூமியதிர்ச்சி” கடவுளுடைய ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தைப் பற்றிய தெளிவான செய்தியை எடுத்துச்சொல்லும் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஆட்களுடைய குரல்களுடன் உண்டாகிறது. பைபிளிலிருந்து இடிமுழக்கத்துடன்கூடிய ‘புயல் எச்சரிக்கைகள்’ தொனிக்கப்பட்டன. மின்னலைப்போல, கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தை சம்பந்தப்பட்ட உட்பார்வை அவ்வப்போது காணப்பட்டும் வெளிப்படுத்தப்பட்டும் இருந்திருக்கின்றன. பொதுவாக கிறிஸ்தவமண்டலத்துக்கும் பொய் மதத்துக்கும் எதிராக கடினமாக ஒடுக்கக்கூடிய “கல்மழை”யாகிய தெய்வீக நியாயத்தீர்ப்புகள் அவிழ்த்துவிடப்பட்டிருக்கின்றன. இவை யாவுமே ஜனங்களுடைய கவனத்தைக் கவர்ந்திருக்க வேண்டும். என்றாலும், பரிதாபகரமாக, அநேகர்—இயேசுவின் காலத்தில் வாழ்ந்த எருசலேமின் ஜனங்களைப் போல—இந்த வெளிப்படுத்துதலிலுள்ள அடையாளங்களின் நிறைவேற்றத்தைப் பகுத்துணர்ந்து கொள்ளவில்லை.—லூக்கா 19:41-44.

17, 18. (அ) ஏழு தூதர்களுடைய எக்காளங்களைத் தொனிக்கச் செய்வது ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் மீது என்ன உத்தரவாதத்தைக் கொண்டுவந்திருக்கிறது? (ஆ) கிறிஸ்தவர்கள் எப்படி தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள கட்டளையை நிறைவேற்றி வருகிறார்கள்?

17 அந்த ஏழு தூதர்கள் தொடர்ந்து எக்காளங்களை தொனிக்கிறார்கள், பூமியில் நடக்கப்போகும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகளின் அடையாளமாக செய்கிறார்கள். உலகிற்கு இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து தெரிவிக்க ஒப்புக்கொடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு பெரிய ஓர் உத்தரவாதமிருக்கிறது. என்னே ஒரு சந்தோஷத்தோடு அவர்கள் இந்தக் கட்டளையை நிறைவேற்றி வருகிறார்கள்! 20 ஆண்டுகளில், 1986-2005 ஆண்டுகளில், ஒரு வருடத்திற்கு ஊழியத்தில் அவர்கள் செலவிட்ட மணிநேரம் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு ஆகியிருப்பது இதைக் குறித்துக்காட்டுகிறது—68,08,37,042-லிருந்து 127,82,35,504 மணிநேரங்கள். உண்மையிலேயே, ‘சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்ட கடவுளுடைய பரிசுத்த இரகசியம்,’ “பூச்சக்கரத்துக் [குடியிருக்கப்பட்ட பூமியின், NW] கடைசிவரைக்கும்” அறிவிக்கப்பட்டு வருகிறது.—வெளிப்படுத்துதல் 10:6; ரோமர் 10:18.

18 கடவுளுடைய ராஜ்ய நோக்கங்கள் தொடர்ந்து வெளிப்படுத்தப்படுகையில் மற்ற தரிசனங்களும் இப்போது நமக்கு காத்திருக்கின்றன.

[அடிக்குறிப்பு]

a எருசலேமானது பொ.ச.மு. 63-ல் கைப்பற்றப்பட்டு ஆலயத்திலுள்ள பரிசுத்த ஸ்தலத்தினுள் கினீயஸ் பாம்பெயஸ் பிரவேசித்தபோது அது வெறுமையாயிருக்க அவர் கண்டார் என்று ரோம சரித்திராசிரியர், டேசிடஸ் அறிக்கையிடுகிறார். அதற்குள் உடன்படிக்கைப் பெட்டி காணப்படவில்லை.—டேசிடஸின் சரித்திரம், (ஆங்கிலம்) 5.9.

[கேள்விகள்]

[பக்கம் 173-ன் பெட்டி]

யெகோவாவுடைய எக்காளம்போன்ற நியாயத்தீர்ப்பு அறிவிப்புகளின் முக்கிய குறிப்புகள்

1. 1922 சீடர் பாய்ன்ட், ஒஹையோ: சமாதானம், செழுமை மற்றும் சந்தோஷத்தை கொண்டுவருவதில் அவர்கள் தோல்வியடைந்ததை நியாயப்படுத்த, மதம், அரசியல், மற்றும் பெரிய வியாபாரத்தில் உள்ள கிறிஸ்தவமண்டல தலைவர்களுக்கு ஒரு சவால். மேசியானிய ராஜ்யமே இதற்கு பரிகாரம்.

2. 1923 லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா: “எல்லா தேசத்தாரும் அர்மகெதோனுக்கு அணிவகுத்து செல்கின்றனர், ஆனால் இப்போது வாழும் கோடிக்கணக்கானோர் இனிஒருபோதும் மரிப்பதில்லை,” என்ற இந்தப் பொதுப் பேச்சு மரணத்தை விளைவிக்கும் சமுத்திரமாகிய மானிடத்தை விட்டுவர சமாதானத்தை விரும்பும் “செம்மறியாடுகளை” அழைத்தது.

3. 1924 கொலம்பஸ், ஒஹையோ: மதகுருமார் சுய-மேன்மைக்காகவும் மேசியானிய ராஜ்யத்தை பிரசங்கிக்க மறுப்பதற்கும் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள். உண்மைக் கிறிஸ்தவர்கள் கடவுள் பழிவாங்க இருப்பதைக் குறித்துப் பிரசங்கித்து துயரத்தில் ஆழ்ந்திருக்கிற மானிடருக்கு ஆறுதலையும் கொடுக்க வேண்டும்.

4. 1925 இந்தியானாபோலிஸ், இந்தியானா: கிறிஸ்தவமண்டலத்திலுள்ள ஆவிக்குரிய இருளுக்கு மாறாக சமாதானம், செழுமை, ஆரோக்கியம், ஜீவன், விடுதலை மற்றும் நித்திய சந்தோஷத்தைக் கொடுக்கும் ராஜ்ய வாக்குறுதியினால் வேறுபடுத்திக் காட்டப்படும் நம்பிக்கையான ஒரு செய்தி.

5. 1926 லண்டன், இங்கிலாந்து: கிறிஸ்தவமண்டலத்துக்கும் அதனுடைய குருவர்க்கத்துக்கும் வெட்டுக்கிளிபோன்ற வாதை, கடவுளுடைய ராஜ்யம் நிராகரிக்கப்பட்டதை அம்பலப்படுத்தி அந்தப் பரலோக அரசாட்சியின் பிறப்பைப் புகழ்ந்துபோற்றுதல்.

6. 1927 டோரான்டோ, கனடா: ஜனங்கள் ‘வேரூன்றியிருந்த கிறிஸ்தவத்தை’ விட்டுவிட்டு தங்களுடைய மனப்பூர்வமான பக்தியை யெகோவா தேவனுக்கும் அவருடைய அரசருக்கும் ராஜ்யத்துக்கும் கொடுக்க குதிரைச்சேனைகளாகிய இராணுவங்கள் அளிக்கும் அழைப்பு.

7. 1928 டெட்ராய்ட், மிச்சிகன்: 1914-ல் சிங்காசனத்திலேற்றப்பட்ட கடவுளுடைய அபிஷேகம் செய்யப்பட்ட அரசர் சாத்தானுடைய பொல்லாத அமைப்பை அழித்து மனிதவர்க்கத்தை விடுதலை செய்வார் என்று சாத்தானுக்கு விரோதமாகவும் யெகோவாவின் சார்பாகவும் செய்யப்பட்ட அறிவிப்பு.

[பக்கம் 175-ன் பெட்டி]

பூமியை அழிப்பது

“ஒவ்வொரு மூன்று நொடிகளுக்கும் கால்பந்தாட்ட இட அளவுள்ள மூலாதார மழைக்காட்டின் ஒரு பகுதி மறைந்துவிடுகிறது. . . . ஆதாரமூல காடு இழக்கப்படுவது ஆயிரக்கணக்கான செடிகொடிகளையும் மிருக உயிரினங்களையும் அழித்துப்போடுகிறது.”—விளக்கப்படங்கள் கொண்ட உலக நிலப்படம் (ஆங்கிலம்) (ரான்டு மெக்நால்லி).

“குடியேறிய இரண்டே நூற்றாண்டுகளில் [மிகப் பெரிய ஏரிகளும்] உலகத்திலுள்ள பெரிய சாக்கடையாக ஆகியிருக்கின்றன.”—பூகோளமும் தபாலும் (ஆங்கிலம்) (கனடா).

ஏப்ரல் 1986-ல், ரஷ்யா செர்னோபலிலுள்ள அணுசக்தி ஆலையில் ஏற்பட்ட அணுகுண்டுவெடிப்பும் தீயும் “ஹிரோஷிமா, நாகசாகியில் ஏற்பட்ட அணுகுண்டு வெடிப்புக்கு பிறகு . . . இதுவே ஒரு குறிப்பிடத்தக்க அணுகுண்டு வெடிப்பு சம்பவமாகும், இதுவரை வெடித்துள்ள எல்லா அணுசக்தி சோதனைகளிலும் அணுகுண்டு வெடிப்புகளிலும் இதுவே நீண்ட காலத்துக்கு உலகின் காற்றிலும் நிலத்தின் மேற்பரப்பிலும் தண்ணீரிலும் அதிக வெப்பக் கதிர்களைப்” பரவச்செய்திருக்கிறது.—ஜாமா, தி நியூ யார்க் டைம்ஸ்.

ஜப்பான், மினாமடாவில் உள்ள விரிகுடாவில் ஒரு வேதியியல் தொழிற்சாலையானது மீதைல்மெர்குரியை வெளியேற்றியது. இதனால் மாசுபட்ட மீன்களையும் சிப்பி நண்டுகளையும் உட்கொண்டது, மினாமடா நோய் (MD) என்கிற நோய் தொற்றச்செய்தது, “நாட்பட இருக்கும் நரம்பு சம்பந்தப்பட்ட நோயாகும். . . . இந்நாள்வரை [1985-ல்] ஜப்பான் முழுவதிலும் 2,578 பேர் உண்மையில் அந்த மினாமடா நோயைக் (MD) கொண்டிருந்ததாக அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்டிருக்கிறது.”—இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் எப்பிடமியாலஜி.

[பக்கம் 176-ன் பெட்டி]

வெளிப்படுத்துதல் 11:15-19-ல் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த நியாயத்தீர்ப்புச் செய்திகள் பின்வரும் தரிசனங்களுக்கு ஓர் அறிமுகமாக இருக்கின்றன. வெளிப்படுத்துதல் 12-ம் அதிகாரமானது, வெளிப்படுத்துதல் 11:15, 17-ல் சொல்லப்பட்ட மகத்தான அறிவிப்புகளை நுணுக்க விவரங்களோடு விரிவாக விளக்கிச்சொல்லும் இடைப்பதிவை கொண்டிருக்கிறது. 13-ம் அதிகாரம், 11:18-க்கான பின்னணியைக் கொடுக்கிறது, பூமிக்கு அழிவைக் கொண்டுவந்திருக்கும் சாத்தானுடைய அரசியல் அமைப்பின் ஆரம்பத்தையும் வளர்ச்சியையும் அது விவரிக்கிறது. . 14 மற்றும் 15 அதிகாரங்கள் ஏழாவது எக்காளம் தொனிக்கப்படுவதோடும் மூன்றாவது ஆபத்தோடும் சம்பந்தப்பட்ட கூடுதலான ராஜ்ய நியாயத்தீர்ப்புகளை விவரமாக விளக்குகிறது.

[பக்கம் 174-ன் படம்]

யெகோவா ‘பூமியை அழிப்பவர்களை அழிவுக்குக் கொண்டுவருவார்’