Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடவுளுடைய ராஜ்யம் பிறக்கிறது!

கடவுளுடைய ராஜ்யம் பிறக்கிறது!

அதிகாரம் 27

கடவுளுடைய ராஜ்யம் பிறக்கிறது!

தரிசனம் 7​—வெளிப்படுத்துதல் 12:1-17

பொருள்: பரலோக ஸ்திரீ பிள்ளைப்பெறுகிறாள், மிகாவேல் சாத்தானோடு யுத்தம்செய்து பூமிக்கு அவனைத் தள்ளிப்போடுகிறார்

நிறைவேற்றத்தின் காலம்: கிறிஸ்து இயேசு 1914-ல் சிங்காசனத்திலேற்றப்பட்டது முதல் மிகுந்த உபத்திரவம் வரையாக

1. வெளிப்படுத்துதல் 12 முதல் 14 அதிகாரங்களில் விவரிக்கப்பட்டிருக்கிற அடையாளங்களை புரிந்துகொள்வது நமக்கு எவ்வாறு உதவும்?

 க டவுளுடைய பரிசுத்த இரகசியம் வெளிப்படுத்தப்பட்டது. (வெளிப்படுத்துதல் 10:6) யெகோவாவுடைய ராஜ்யம் அவருடைய மேசியாவின் மூலம் இப்போது சக்திவாய்ந்த விதத்தில் மெய்ம்மையாக உள்ளது. அது ஆட்சிசெய்கிறது! அதன் வந்திருத்தல், சாத்தானுக்கும் அவனுடைய வித்துக்கும் அழிவையும் கடவுளுடைய பரலோக அமைப்பின் வித்துக்கு மகிமையான வெற்றியையும் கொண்டு வருகிறது. என்றாலும், ஏழாம் தூதனுடைய எக்காளம் ஊதப்பட்டு முடிக்கப்படவில்லை, ஏனெனில் மூன்றாம் ஆபத்தைக் குறித்து இன்னும் அநேக காரியங்களை அவன் வெளிப்படுத்த இருக்கிறான். (வெளிப்படுத்துதல் 11:14) வெளிப்படுத்துதல் 12 முதல் 14 அதிகாரங்களில் விவரிக்கப்பட்டிருக்கிற அடையாளங்கள் அந்த ஆபத்தில் உள்ளடங்கியிருக்கிற அனைத்து காரியங்களுக்கும் நம்முடைய போற்றுதலை விரிவாக்குவதிலும் கடவுளுடைய பரிசுத்த இரகசியத்தை முடிவுக்கு கொண்டுவருவதிலும் நமக்கு உதவியாயிருக்கும்.

2. (அ) யோவான் என்ன ஒரு பெரிய அடையாளத்தை காண்கிறார்? (ஆ) அந்தப் பெரிய அடையாளத்தின் பொருள் எப்போது வெளிப்படுத்தப்பட்டது?

2 இப்போது யோவான் ஒரு பெரிய அடையாளத்தைப் பார்க்கிறார்—கடவுளுடைய ஜனங்களுக்கு முனைப்பான விதத்தில் அக்கறையூட்டுவதாய் இருக்கிறது. இது கிளர்ச்சியூட்டும் தீர்க்கதரிசன தரிசனத்தை அறிமுகப்படுத்தி வைக்கிறது, இதனுடைய பொருள் முதலில் மார்ச் 1, 1925 ஆங்கில காவற்கோபுர பத்திரிகையில் “தேசத்தின் பிறப்பு” என்ற தலைப்புக்கொண்ட ஒரு கட்டுரையில் வெளிவந்தது, பின்னர் 1926-ல் விடுதலை என்ற புத்தகத்தில் மறுபடியும் வெளியிடப்பட்டது. பைபிள் அறிவைப் பற்றிய இந்தப் பிரகாசமான ஒளி யெகோவாவுடைய வேலையின் முன்னேற்றத்துக்கு ஒரு முனைப்பான குறியாக ஆனது. ஆகையால், அந்த நாடகம் வெளிப்பட ஆரம்பிக்கையில் யோவான் அதை விவரிக்கட்டும்: “அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின் மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன. அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவவேதனையடைந்து, பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறினாள்.”​—வெளிப்படுத்துதல் 12:1,  2.

3. பரலோகத்தில் காணப்படும் ஸ்திரீயின் அடையாளம் என்ன?

3 முதல் முறையாக, யோவான் ஒரு ஸ்திரீயை பரலோகத்தில் பார்க்கிறார். அவள் உண்மையில் ஒரு சொல்லர்த்தமான ஸ்திரீ அல்ல. மாறாக, அவள் ஒரு குறிப்படையாளமாக அல்லது அடையாளமாக இருக்கிறாள். (வெளிப்படுத்துதல் 1:1) அவள் எதை அடையாளப்படுத்திக் காட்டுகிறாள்? சில சமயங்களில், பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டெழுதப்பட்ட தீர்க்கதரிசனங்களில், ஸ்திரீகள் பிரபலமான ஆட்களோடு “விவாகம்பண்ணப்பட்”டிருக்கும் அமைப்புகளைக் குறிக்கின்றனர். எபிரெய வேதாகமத்தில், இஸ்ரவேல் யெகோவா தேவனுடைய மனைவியாக பேசப்பட்டிருக்கிறது. (எரேமியா 3:14) கிரேக்க வேதாகமத்தில், அபிஷேகம் பண்ணப்பட்டவர்களைக்கொண்ட சபை கிறிஸ்துவுடைய மணவாட்டியாக பேசப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 21:9-14) இங்கு யோவான் காண்கிற ஸ்திரீயானவளுங்கூட ஒருவரை மணஞ்செய்திருக்கிறாள், அவள் ஒரு பிள்ளையைப் பெறப்போகிறாள். அவளுடைய கணவர் யார்? பிற்பாடு, அவளுடைய பிள்ளை “தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது.” (வெளிப்படுத்துதல் 12:5) இப்படியாக யெகோவா தம்முடைய சொந்த பிள்ளையாக அந்தப் பிள்ளையை உரிமைகொள்கிறார். ஆகையால், யோவான் காண்கிற ஸ்திரீயானவள் யெகோவாவுடைய அடையாளப்பூர்வ மனைவியாகவே இருக்க வேண்டும்.

4. கடவுளுடைய அடையாளப்பூர்வமான மனைவியின் குமாரர்கள் யார், யோவான் காண்கிற ஸ்திரீயை அப்போஸ்தலனாகிய பவுல் என்னவென்று அழைக்கிறார்?

4 சுமார் எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர், யெகோவா இந்த அடையாளப்பூர்வ மனைவியை நோக்கி: “உன் குமாரரெல்லாரும் யெகோவாவால் கற்பிக்கப்பட்டிருப்பார்கள்,” என்று சொன்னார். (ஏசாயா 54:5, 13, NW) இயேசு இந்தத் தீர்க்கதரிசனத்தை மேற்கோளாக எடுத்துக்காண்பித்து இந்தக் குமாரர்கள் தம்முடைய உண்மையுள்ள சீஷர்களாய் இருப்பதாக சொன்னார், இவர்களே பின்னர் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களைக்கொண்ட சபையை உண்டுபண்ணினர். (யோவான் 6:44, 45) ஆகவே, கடவுளுடைய குமாரர்களாக பேசப்பட்டிருக்கும் இந்தச் சபையின் அங்கத்தினர்கள் கடவுளுடைய அடையாளப்பூர்வமான மனைவியின் பிள்ளைகளாக இருக்கிறார்கள். (ரோமர் 8:14) அப்போஸ்தலனாகிய பவுல் கூடுதலாக இறுதியில், இந்தச் சிறு குறிப்பை சொல்லுகிறார்: “மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்.” (கலாத்தியர் 4:26) அப்படியானால், யோவான் கண்ட அந்த “ஸ்திரீ”யானவள், “மேலான எருசலே”மாக இருக்கிறாள்.

5. யெகோவாவுடைய அடையாளப்பூர்வமான மனைவியானவள் 12 நட்சத்திரங்களை சூடியிருப்பதால் மேலான எருசலேம் மெய்ம்மையில் என்ன?

5 என்றாலும், குறிப்பாகச் சொன்னால், மேலான எருசலேம் என்றால் என்ன? பவுல் அவளை “மேலான” என்று பேசினதினிமித்தமும் யோவான் அவளை பரலோகத்திலே காண்கிறதினிமித்தமும் தெளிவாகவே அவள் ஒரு பூமிக்குரிய நகரமாக இல்லை; அவள் “புதிய எருசலே”மாகவுங்கூட இல்லை, ஏனெனில் அந்த அமைப்பு யெகோவாவின் மனைவியாக இல்லாமல் கிறிஸ்துவின் மணவாட்டியாக இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:2) அவள் 12 நட்சத்திரங்கள் சூடியிருப்பதை கவனியுங்கள். 12 என்ற அந்த எண் அமைப்புச் சூழலில் முழுமையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. a எனவே, இந்த 12 நட்சத்திரங்களும், பூமியில் பூர்வ எருசலேம் இருந்ததுபோலவே அவளும் பரலோகத்தில் இருக்கிற ஓர் அமைப்புச்சார்ந்த ஏற்பாட்டைக் குறித்துக்காட்டுவதாக தோன்றுகிறது. மேலான எருசலேம் அவருடைய மனைவியாக செயல்படும் ஆவிக்குரிய சிருஷ்டிகளைக்கொண்ட யெகோவாவுடைய சர்வலோக அமைப்பாக இருக்கிறது, அவரை சேவிப்பதிலும் சந்ததியை உண்டாக்குவதிலும் அவ்வாறு இருக்கிறது.

6. (அ) யோவான் காண்கிற ஸ்திரீயானவள் சூரியனை அணிந்திருப்பதாலும், பாதங்களின் கீழே சந்திரனை உடையவளாயிருப்பதாலும், நட்சத்திரங்களிலுள்ள கிரீடத்தைக் கொண்டிருப்பதாலும் என்ன குறித்துக் காட்டப்படுகிறது? (ஆ) கர்ப்பவதியாயிருந்த ஸ்திரீ பிரசவவேதனையடைவது எதை அடையாளப்படுத்துகிறது?

6 இந்த ஸ்திரீ சூரியனை அணிந்திருப்பதாகவும் அவள் பாதங்களுக்குக் கீழே சந்திரனை உடையவளாகவும் இருப்பதாக யோவான் காண்கிறார். நாம் அவளுடைய நட்சத்திரங்களுள்ள கிரீடத்தைச் சேர்ப்போமேயானால், அவள் முற்றிலும் பரலோகத்திலிருந்து வரும் ஒளிகளால் சூழப்பட்டிருக்கிறாள். கடவுளுடைய கிருபையொளி அவள் மீது இரவும் பகலும் பிரகாசிக்கிறது. யெகோவாவுடைய சிறப்புவாய்ந்த பரலோக அமைப்புக்கு என்னே ஒரு பொருத்தமான அடையாளம்! அவள் பிரசவவேதனைப்படுகிற கர்ப்பவதியாகவும்கூட இருக்கிறாள். தெய்வீக உதவியை நாடி அவள் அலறுவது பிள்ளைபெறுவதற்கான நேரம் வந்துவிட்டதைக் காட்டுகிறது. பைபிளிலே, கர்ப்பவேதனைப்படுவது ஒரு முக்கியமான விளைபயனை உண்டாக்குவதற்கு அவசியப்படுத்தும் கடின உழைப்பை குறிப்பதற்கு எப்போதும் பயன்படுத்தப்படுகிறது. (ஒப்பிடவும்: சங்கீதம் 90:2; நீதிமொழிகள் 25:23; ஏசாயா 66:7, 8.) சந்தேகமில்லாமல், யெகோவாவுடைய பரலோக அமைப்பு இந்தக் குறிப்பிடத்தக்க பிறப்புக்காக ஆயத்தப்படும்போது இந்த வகையான கர்ப்பவேதனையை அனுபவித்தது.

சிவப்பான பெரிய வலுசர்ப்பம்

7. பரலோகத்தில் யோவான் காண்கிற மற்றொரு அடையாளம் என்ன?

7 அடுத்து யோவான் எதைக் காண்கிறார்? “அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது. அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று; பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளைபெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது.”​—வெளிப்படுத்துதல் 12:3,  4.

8. (அ) அந்தச் சிவப்பான பெரிய வலுசர்ப்பத்தின் அடையாளம் என்ன? (ஆ) அந்த வலுசர்ப்பம் ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகள் ஒவ்வொன்றிலும் ஒரு முடியுமுடையது எதைக் குறித்துக்காட்டுகிறது?

8 இந்த வலுசர்ப்பம் “பழைய பாம்பாகிய” சாத்தானே. (வெளிப்படுத்துதல் 12:9; ஆதியாகமம் 3:15) அவன் கொடிய கொன்றழிப்பவனாக இருக்கிறான்​—ஏழு தலையுள்ள வலுசர்ப்பம் அல்லது பட்சித்துப்போடுபவன், இரையை முற்றிலுமாக விழுங்கிவிடுவான். பார்ப்பதற்கு எப்படி வினோதமாக அவன் இருக்கிறான்! அந்த ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் வெளிப்படுத்துதல் 13-ம் அதிகாரத்தில் விரைவில் விவரிக்கப்பட இருக்கும் அரசியல்சார்ந்த மிருகத்தை தோற்றுவித்தவனாக இருக்கிறான் என்பதை குறிப்பிட்டுக் காட்டுகிறது. இந்த மிருகமுங்கூட ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதாயிருக்கிறது. சாத்தான் தன்னுடைய தலைகள் ஒவ்வொன்றிலும் ஒரு முடியைக்கொண்டிருக்கிறதன் காரணமாக—மொத்தமாக ஏழு முடிகளையுமுடையவனாயிருப்பதன் காரணமாக—அந்த மிருகம் பிரதிநிதித்துவப்படுத்துகிற உலக வல்லரசுகள் அவனுடைய ஆளுகையின் கீழ் இருக்கின்றன என்பதைக் குறித்து நாம் நிச்சயமாக இருக்கலாம். (யோவான் 16:11) இந்த உலகில் அவன் செலுத்திவந்திருக்கும் மொத்த அதிகாரத்துக்கான ஒரு பொருத்தமான அடையாளமாக அந்தப் பத்துக் கொம்புகள் இருக்கின்றன.

9. வலுசர்ப்பத்தின் வால், “வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை” பூமியிடம் ‘இழுப்பது’ எதைச் சுட்டிக்காட்டுகிறது?

9 அந்த வலுசர்ப்பம் ஆவிப் பகுதியிலும் அதன் அதிகாரத்தை செலுத்துகிறது. அவன் தன் வாலைக்கொண்டு, ‘வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்துக்கொள்கிறான்.’ நட்சத்திரங்கள் தேவதூதர்களை குறிக்கலாம். (யோபு 38:7) “மூன்றிலொருபங்கு” என்று குறிக்கப்படுவது சாத்தான் ஒரு கணிசமான எண்ணிக்கையான தேவதூதர்களை மோசம்போக்கியிருக்கிறான் என்பதை வலியுறுத்திக் காட்டுகிறது. இவர்கள் அவனுடைய கட்டுப்பாட்டின் கீழ் வந்தபிறகு, தப்பித்துக்கொள்ள வழியில்லை. கடவுளுடைய பரிசுத்த அமைப்புக்கு திரும்பிப்போக முடியாது. அவர்கள் சொல்லப்போனால் தங்களுடைய அரசனாகிய அல்லது ஆட்சியாளனாகிய சாத்தானால் இழுத்துக்கொள்ளப்பட்டு பேய்களாக மாறினார்கள். (மத்தேயு 12:24) சாத்தான் அவர்களையும் பூமிக்கு விழத் தள்ளினான். இது உண்மையில் ஜலப்பிரளயத்துக்கு முன்னான நோவாவின் நாளைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது, அப்போது சாத்தான் கீழ்ப்படியாத கடவுளுடைய குமாரர்களை பூமிக்கு செல்லும்படிச் செய்து மனுஷகுமாரத்திகளோடு கூடிவாழும்படியாக தூண்டுவித்தான். ஒரு தண்டனைத்தீர்ப்பாக, இந்தப் “பாவஞ்செய்த தூதர்களை” கடவுள், சிறையிருப்பில் இருப்பது போன்ற நிலைமையில், டார்ட்டரஸில் தள்ளி அடைத்தார்.—ஆதியாகமம் 6:4; 2 பேதுரு 2:4; யூதா 6.

10. எதிரெதிரான என்ன அமைப்புகள் காட்சிக்கு வருகின்றன, அந்த ஸ்திரீ பிள்ளைபெற்றவுடனே, வலுசர்ப்பம் ஏன் அந்தப் பிள்ளையை பட்சித்துப்போடும்படி நாடுகிறது?

10 இப்படியாக, இரண்டு நேரெதிரான அமைப்புகள், தெளிவாகக் காட்சிக்கு வந்திருக்கின்றன—ஸ்திரீ படமாகக் குறிப்பிடுகிற யெகோவாவுடைய பரலோக அமைப்பு மற்றும் கடவுளுடைய ஈடற்ற உன்னத அரசாட்சிக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கும் சாத்தானுடைய பேய்த்தன அமைப்பாகும். அரசுரிமையைப் பற்றிய இந்தப் பெரிய விவாதம் தீர்வுக்கு கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் எப்படி? சாத்தான் இன்னும் தன்னோடுகூட பேய்களை இழுத்துச்செல்பவனாக, இரையைத் தேடிச்செல்லும் ஒரு கொடிய மிருகமாக இருக்கிறான், இரையாள் யாராவது கிடைப்பார்களா என்ற கண்ணோட்டங்கொண்டு இருக்கிறான். அந்த ஸ்திரீ பிள்ளைபெறுவதற்காக காத்துக் கிடக்கிறான். வரவிருக்கும் அந்தப் பிள்ளையைப் பட்சித்துப்போட அவன் ஆசையாக இருக்கிறான், ஏனெனில் அவன் தொடர்ந்து நிலைத்திருப்பதற்கும் அவன் ஆட்சிசெய்யும் உலகம் தொடர்ந்து நீடித்திருப்பதற்கும் அது ஓர் அழிவுக்குரிய அச்சுறுத்தலை உண்டுபண்ணும் என்பதை அறிந்து அப்படி விரும்புகிறான்.—யோவான் 14:30.

ஒரு குமாரன், ஓர் ஆண்பிள்ளை

11. அந்த ஸ்திரீயுடைய பிள்ளைப்பிறப்பை யோவான் எவ்வாறு விவரித்துக் காட்டுகிறார், அந்தப் பிள்ளை ஏன் ‘ஒரு குமாரன், ஓர் ஆண்பிள்ளை’ என்றழைக்கப்படுகிறது?

11 கடவுள் தலையிடாது ஆட்சிபுரிய தேசங்களுக்குக் குறிக்கப்பட்டிருந்த காலம் 1914-ல் முடிவுக்கு வந்தது. (லூக்கா 21:24) பிற்பாடு, தக்க நேரத்தில் அந்த ஸ்திரீ பிள்ளையை பெற்றாள்: “சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் [ஒரு குமாரனை, NW] ஆண்பிள்ளையை அவள் பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்; அங்கே ஆயிரத்திருநூற்றறுபதுநாளளவும் அவளைப் போஷிப்பதற்காகத் தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது.” (வெளிப்படுத்துதல் 12:5, 6) இந்தப் பிள்ளை, ‘ஒரு குமாரன், ஓர் ஆண்பிள்ளை’யாக இருக்கிறார். யோவான் ஏன் இந்த இரட்டக சொற்றொடரை பயன்படுத்துகிறார்? அந்தப் பிள்ளையின் தகுதியையும், போதிய பலத்தைக்கொண்டு அவர் தேசங்களை ஆளுவதற்கு கொண்டிருக்கும் திறமையையும் எடுத்துக்காட்டுவதற்கே யோவான் அவ்வாறு செய்கிறார். மேலும், இந்தப் பிறப்பு, எவ்வளவு முக்கியமானதென்றும் எவ்வளவு சந்தோஷத்தை கொண்டுவருகிறதென்றும் இது வலியுறுத்திக்காட்டுகிறது! கடவுளுடைய பரிசுத்த இரகசியத்தை முடிவுக்கு கொண்டுவருவதில் இது ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது. ஏன், இந்த ஆண்பிள்ளை “சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்”யவும் போகிறது!

12. (அ) சங்கீதத்தில், இயேசுவைக்குறித்து யெகோவா எதை தீர்க்கதரிசனமாக வாக்களித்தார்? (ஆ) “சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும்” ஒரு குமாரனை அந்த ஸ்திரீ பெற்றெடுப்பது எதை அடையாளப்படுத்துகிறது?

12 இப்போது, அந்தக் கூற்று நன்றாக தெரிந்த ஒரு கூற்றாக இருக்கிறதா? ஆம், இயேசுவைக் குறித்து யெகோவா தீர்க்கதரிசனமாக வாக்களித்தார்: “இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர்.” (சங்கீதம் 2:9) அவரைப் பற்றி இப்படியாகவும் தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டிருந்தது: “கர்த்தர் [யெகோவா, NW] சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்; நீர் உம்முடைய சத்துருக்களின் நடுவே ஆளுகைசெய்யும்.” (சங்கீதம் 110:2) ஆகவே, யோவான் காண்கிற பிறப்பு மிக நெருக்கமாக இயேசு கிறிஸ்துவை உட்படுத்துகிறது. நம்முடைய பொது சகாப்தம் முதல் நூற்றாண்டில் ஒரு கன்னிகையின் மூலம் இயேசு பிறந்ததை அது குறிக்கவில்லை; பொ.ச. 33-ல் இயேசு மறுபடியும் ஆவி வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்பட்டதையும் அது குறிக்கவில்லை. மேலும், மறுபிறப்பாகவுங்கூட இது இல்லை. மாறாக, 1914-ல் கடவுளுடைய ராஜ்யம் அதனுடைய மெய்ம்மையில் பிறப்பதாகும், இயேசு—கிட்டத்தட்ட 20 நூற்றாண்டுகளாக இப்போது பரலோகத்தில் இருப்பவர்—அரசராக சிங்காசனத்திலமர்த்தப்பட்டுள்ளார்.—வெளிப்படுத்துதல் 12:10.

13. அந்த ஆண் பிள்ளை “தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்ப”டுவது எதை குறித்துக்காட்டுகிறது?

13 யெகோவா தம்முடைய மனைவியையோ அல்லது தம்முடைய புதிதாக பிறந்த குமாரனையோ சாத்தான் பட்சித்துப்போடுவதற்கு ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்! பிறப்பின்போது, அந்த ஆண்பிள்ளை, “தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது.” எனவே, அவர் முழுமையாக யெகோவாவுடைய பாதுகாப்பின் கீழ் வருகிறார், இந்தப் புதிதாக பிறந்த ராஜ்யத்தை, அவருடைய பரிசுத்த நாமத்தை பரிசுத்தப்படுத்துவதற்கு கருவியாக பயன்படுத்தப்படும் இந்த ராஜ்யத்தை, அவர் முற்றிலும் கவனித்துக்கொள்வார். அதே சமயத்தில், அந்த ஸ்திரீயானவள் தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடமாகிய வனாந்தரத்திற்கு ஓடிப்போகிறாள். இதைப் பற்றிய விவரமான விளக்கம் பிற்பாடு வரும்! சாத்தான் சம்பந்தப்பட்ட காரியத்தில், இப்போது ஓர் அதிமுக்கியமான நிகழ்ச்சிக்காக காட்சி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது, இது இனிமேலும் அவன் முற்றிலும் பரலோக ராஜ்யத்துக்கு அச்சுறுத்தலாக இல்லாமலிருப்பதை கூடியதாக்க உதவுகிறது. அந்த நிகழ்ச்சி என்ன?

பரலோகத்திலே யுத்தம்!

14. (அ) யோவான் சொல்வது போல, எந்தச் சம்பவம் சாத்தான், அந்த ராஜ்யத்தை இனிவொருபோதும் அச்சுறுத்தமுடியாதபடிச் செய்கிறது? (ஆ) சாத்தானும் அவனைச்சேர்ந்த பேய்களும் எவ்விடத்துக்குக் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றனர்?

14  யோவான் நமக்கு சொல்லுகிறார்: “வானத்திலே யுத்தமுண்டாயிற்று, மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று. உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள்.” (வெளிப்படுத்துதல் 12:7-9) ஆகவே கடவுளுடைய பரிசுத்த இரகசியம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் தெளிவான முன்னேற்றமாக, சாத்தானானவன் புறம்பே தள்ளப்பட்டு, பரலோகத்திலிருந்து தூக்கியெறியப்பட்டவனாக, அவனோடேகூட அவனுடைய பேய்களும் பூமியிலே விழத்தள்ளப்பட்டுப்போனார்கள். குடியிருக்கப்பட்ட பூமி முழுவதற்கும் கடவுளாக ஆகும் அளவுக்கு மோசம்போக்கினவன், இந்தக் கிரகத்தின் சுற்றுவட்டாரத்தில் இருப்பதற்கு முடிவில் கட்டுப்படுத்தப்பட்டான், இங்கேயே அவனுடைய கலகத்தனம் முதலில் ஆரம்பமானது.—2 கொரிந்தியர் 4:3, 4.

15, 16. (அ) மிகாவேல் யார், நமக்கு எப்படி தெரியும்? (ஆ) மிகாவேல்தானே பரலோகத்திலிருந்து சாத்தானை கீழே விழத்தள்ளுவது ஏன் பொருத்தமாயிருக்கிறது?

15 இந்த மகத்தான வெற்றியை யெகோவாவுடைய நாமத்தில் நிறைவேற்றப்போவது யார்? பைபிள் மிகாவேலும் அவரைச்சேர்ந்த தூதர்களும் என்று சொல்லுகிறது. ஆனால் மிகாவேல் யார்? “மிகாவேல்” என்ற பெயரின் பொருள், “கடவுளைப் போலிருப்பவர் யார்?” என்பதே. ஆகையால், மிகாவேல் யெகோவாவைப்போல யாரும் இருக்கமுடியாது என்பதை நிரூபிப்பதன் மூலம் அவருடைய ஈடற்ற உன்னத அரசாட்சியை நியாயநிரூபணம் செய்வதில் அக்கறைகொண்டவராக இருப்பார். யூதா 9-ம் வசனத்தில், “பிரதான தூதனாகிய மிகாவேல்” என்று அவர் அழைக்கப்படுகிறார். அக்கறையூட்டும் விதமாய், ‘பிரதான தூதன்’ என்ற இந்தப் பட்டப்பெயரை பைபிள் இந்த ஒரு நபரை குறிப்பிட்டு மட்டுமே மற்ற இடங்களிலும் பயன்படுத்துகிறது: அவர் இயேசு கிறிஸ்துவே. b பவுல் அவரைக் குறித்து சொல்லுகிறார்: “கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்.” (1 தெசலோனிக்கேயர் 4:16 ‘பிரதான தூதன்’ என்ற பட்டப்பெயர் “தூதர்களுக்கு தலையானவர்” என்று பொருள்கொள்ளுகிறது. ஆகவே வெளிப்படுத்துதல் “மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும்” என்று பேசும்போது அது ஆச்சரியத்தை தருவதில்லை. பைபிள், தூதர்கள் கடவுளுடைய நீதியான ஊழியருக்கு கீழ்ப்படிந்திருப்பதைப் பற்றி மற்ற இடங்களில் சொல்லும்போது அது இயேசுவையே குறித்துக்காட்டுகிறது. எனவே, பவுல், “கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், . . . வானத்திலிருந்து வெளிப்படு”வதைப் பற்றி பேசுகிறான்.—2 தெசலோனிக்கேயர் 1:8; இவ்வசனங்களையும் பார்க்கவும்: மத்தேயு 24:30, 31; 25:31.

16 இந்த வசனங்களும் மற்ற வசனங்களும், மிகாவேல், தம்முடைய பரலோக ஸ்தானத்தில் வீற்றிருக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அல்லாமல் வேறு எவரையுமே குறிப்பதில்லை என்ற தவிர்க்கமுடியாத முடிவுக்கு நம்மை கொண்டுவருகிறது. இப்போது கர்த்தருடைய நாளில் அவர் சாத்தானிடம், “கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வராக,” என்று மட்டும் இனி சொல்லமாட்டார். இது நியாயத்தீர்ப்பின் காலமாக இருப்பதால், இயேசு மிகாவேலாக சாத்தானையும் அவனுடைய பேய்த்தன தூதர்களையும் பரலோகத்திலிருந்து கீழே தள்ளிப்போடுகிறார். (யூதா 9; வெளிப்படுத்துதல் 1:10) புதிதாக சிங்காசனத்திலேற்றப்பட்ட அரசராக இருப்பதன் காரணமாக, இதை செய்கிறவர் அவராகவே இருக்கிறார் என்பது மிகவும் பொருத்தமாயிருக்கிறது. இயேசு ஏதேனில் வாக்களிக்கப்பட்ட அந்த வித்தாகவுங்கூட இருக்கிறார், பாம்பின் தலையை முடிவாக நசுக்கிப்போடுவதன் மூலம் எல்லா காலத்திற்கும் அவனை இல்லாமற்போகும்படியாக செய்வார். (ஆதியாகமம் 3:15) பரலோகத்திலிருந்து சாத்தானை வெளித்தள்ளுவதன் மூலம் இயேசு இறுதியாக அவனை நசுக்கிப்போடுவதில் ஈடுபட்டிருக்கிறார்.

‘பரலோகங்களே களிகூருங்கள்’

17, 18. (அ) பரலோகத்திலிருந்து சாத்தான் வீழ்ச்சியடைவது என்ன பிரதிபலிப்பை பரலோகத்தில் உண்டாக்கியதாக யோவான் அறிவிக்கிறார்? (ஆ) யோவான் கேட்கும் அந்தப் பெரிய சத்தம் எந்த மூலத்திலிருந்து ஒருவேளை வந்திருக்கக்கூடும்?

17 சாத்தானுடைய இந்த மிகப் பெரிய வீழ்ச்சி பரலோகத்தில் மகிழ்ச்சியான பிரதிபலிப்பை உண்டாக்கியதாக யோவான் அறிவிக்கிறார்: “அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள் மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான். மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள்.”—வெளிப்படுத்துதல் 12:10-12அ.

18 யோவான் யாருடைய பெரிய சத்தத்தை கேட்கிறார்? பைபிள் சொல்வதில்லை. ஆனால் வெளிப்படுத்துதல் 11:17-ல் சொல்லப்பட்டுள்ள இதுபோன்ற ஆர்ப்பரிப்பு தங்களுடைய பரலோக நிலைகளிலிருக்கிற உயிர்த்தெழுப்பப்பட்ட 24 மூப்பர்களிடமிருந்து வந்தது, அங்கேயே அவர்கள் இப்போது பரிசுத்தவான்களாகிய 1,44,000 பேரை பிரதிநிதித்துவம் செய்யமுடியும். (வெளிப்படுத்துதல் 11:18) மேலும் இன்னும் பூமியிலிருக்கிற துன்புறுத்தப்பட்ட அபிஷேகம் செய்யப்பட்ட கடவுளுடைய ஊழியர்களை, “நம்முடைய சகோதரர்” என்று சொல்வதால் இந்தக் கூற்றும் அதே மூலத்திலிருந்தே வர வேண்டும். சந்தேகமில்லாமல், இந்த உண்மையுள்ளவர்களுங்கூட அவர்களோடு சேர்ந்து சத்தமிட முடியும், ஏனெனில் அவர்களுடைய உயிர்த்தெழுதல் சாத்தானும் அவனுடைய பேய்த்தன பெருங்கூட்டமும் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டவுடனேயே பின்தொடருகிறது.

19. (அ) கடவுளுடைய பரிசுத்த இரகசியம் முடிவுக்கு கொண்டுவரப்படுவது, இயேசு எதைச் செய்ய வழியைத் திறந்துவைக்கிறது? (ஆ) சாத்தானை “நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்து”பவன் என்றழைப்பது எதை குறித்துக்காட்டுகிறது?

19 கடவுளுடைய பரிசுத்த இரகசியம் முடிவடைவது யெகோவாவுடைய ராஜ்யத்தில் இயேசு அதிகாரமேற்பதைக் கேட்கிறது. இப்படியாக விசுவாசமுள்ள மனிதவர்க்கத்தை விடுதலைசெய்வதற்கான அவருடைய மகத்தான நோக்கத்தை நிறைவேற்ற கடவுளுக்கு வழியைத் திறந்து வைக்கிறது.இயேசு இப்போது பூமியிலிருக்கும் தேவபயமுள்ள சீஷர்களுக்கு மட்டும் இரட்சிப்பை கொண்டுவராமல் கடவுளுடைய நினைவில் உள்ள எண்ணிலடங்கா கோடிக்கணக்கான மரித்தவர்களுக்கும் இரட்சிப்பைக் கொண்டுவருகிறார். (லூக்கா 21:27, 28) “நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்து”கிறவன் என்று சாத்தான் அழைக்கப்படுவது அவன் யோபுக்கு விரோதமாக குற்றஞ்சாட்டியவை தவறாக நிரூபிக்கப்பட்டபோதிலும், கடவுளுடைய பூமிக்குரிய ஊழியர்களுடைய உத்தமத்தன்மையை தொடர்ந்து அவன் சவால்விட்டுக்கொண்டிருப்பதைக் காட்டுகிறது. மனிதன் தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும் கொடுத்துவிடுவான் என்ற குற்றச்சாட்டை அவன் அநேக சந்தர்ப்பங்களில் திரும்பத்திரும்ப சொல்லியிருக்கிறான். சாத்தான் எப்படி விசனகரமாக இதில் தோல்வியடைந்திருக்கிறான்!—யோபு 1:9-11; 2:4, 5.

20. சாத்தானை எப்படி உண்மைக் கிறிஸ்தவர்கள் வென்றிருக்கின்றனர்?

20 “ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்” நீதிமான்களாக்கப்பட்டிருக்கிற அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் துன்புறுத்தல்கள் மத்தியிலும் தொடர்ந்து கடவுளுக்கும் இயேசுவுக்கும் சாட்சிபகர்ந்து வருகிறார்கள். 120 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த யோவான் வகுப்பார், 1914-ல் புறஜாதியாருடைய காலங்கள் முடிவதோடு சம்பந்தப்பட்ட பெரிய விவாதங்களை எடுத்துக்காட்டி வந்திருக்கின்றனர். (லூக்கா 21:24, கிங் ஜேம்ஸ் வர்ஷன்) அவர்கள் பக்கமாக இப்போது திரள் கூட்டத்தினர் உண்மையோடு சேவித்துவருகின்றனர். இவர்களில் எவரும் “ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு” பயப்படுகிறதில்லை, இதையே நம் நாட்களில் யெகோவாவின் சாட்சிகளுடைய மெய்-வாழ்க்கை அனுபவங்கள் திரும்பவும் திரும்பவும் மெய்ப்பித்துக் காட்டியிருக்கின்றன. வாயிலிருந்து வரும் பேச்சின் மூலமாகவும் சரியான கிறிஸ்தவ நடத்தையின் மூலமாகவும் அவர்கள் சாத்தானை வென்று அவனை எப்போதும் ஒரு பொய்யனாக நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர். (மத்தேயு 10:28; நீதிமொழிகள் 27:11; வெளிப்படுத்துதல் 7:9) பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்படுகையில், சாத்தான் அவர்களுடைய சகோதரர்களை குற்றஞ்சுமத்த ஒருபோதும் அங்கில்லை என்பது அந்த அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு என்னே ஆனந்தத்தைக் கொடுக்க வேண்டும்! நிச்சயமாகவே, பின்வரும் இந்த அழைப்புக்குச் சந்தோஷத்தோடு தேவதூத சைனியத்திலுள்ள எல்லாரும் பிரதிபலிப்பதற்கு இது காலமாக இருக்கிறது: “பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள்.”

ஒரு போட்டி ஆபத்து!

21. பூமிக்கும் சமுத்திரத்துக்கும் சாத்தான் எப்படி ஆபத்தை கொண்டுவந்திருக்கிறான்?

21 மூன்றாம் ஆபத்தினால் எரிச்சலடைந்தவனாக, சாத்தான் மனிதவர்க்கத்தைத் தனக்குச் சொந்தமான ஓர் ஆபத்தைக்கொண்டு துன்புறுத்த நாட்டங்கொண்டிருக்கிறான். இதுவே அந்த ஆபத்து: “பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்.” (வெளிப்படுத்துதல் 12:12ஆ) சாத்தான் பரலோகத்திலிருந்து வெளித்தள்ளப்படுவது இந்தச் சொல்லர்த்தமான பூமிக்கு ஆபத்தையே உண்மையில் குறிக்கிறது, அவனுடைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தன்னல மானிடர்களால் இது நாசப்படுத்தப்பட்டு வருகிறது. (உபாகமம் 32:5) இன்னுமதிகமாக, ‘ஆட்சிசெய் அல்லது அழித்துப்போடு’ என்கிற சாத்தானுடைய செயற்திட்டம் அடையாளப்பூர்வமான பூமியாகிய மனித சமுதாய அமைப்புக்கு ஆபத்தைக் கொண்டுவருகிறது, மேலும் அடையாளப்பூர்வமான சமுத்திரமாகிய கொந்தளிக்கும் மனிதவர்க்க தொகுதிக்குத்தானே ஆபத்தை கொண்டுவருகிறது. இரண்டு உலக யுத்தங்களின்போது அவனுடைய கோபாவேசம் அவனுக்குக் கீழ்ப்பட்டிருந்த தேசத்தார் காட்டிய எரிச்சலில் பிரதிபலிக்கப்பட்டது, அதுபோன்ற பேய்த்தன சீற்ற உணர்ச்சிகொண்ட எழுச்சிகள் இந்நாள் வரையாக இருந்துவருகின்றன—என்றாலும் இவை அதிக காலம் நீடிக்காது! (மாற்கு 13:7, 8) சாத்தானுடைய உபாயங்கள் எவ்வளவு பயங்கரமாக இருந்தபோதிலும், அவை அவனுடைய காணக்கூடிய அமைப்பின் மீது அந்த மூன்றாம் ஆபத்து உண்டுபண்ணும் ஆபத்தான விளைபயனை—கடவுளுடைய ராஜ்ய நடவடிக்கையை—நெருங்கவே முடியாது!

22, 23. (அ) அந்த வலுசர்ப்பம் பூமியிலே தள்ளப்பட்டப் பிறகு என்ன நடைபெறுவதாக யோவான் சொல்கிறார்? (ஆ) அந்த வலுசர்ப்பம், எப்படி ‘அந்த ஆண்பிள்ளையைப்பெற்ற ஸ்திரீயைத் துன்புறுத்த’ முடியும்?

22 சாத்தான் அழிவுக்காக தாழத்தள்ளப்பட்டதிலிருந்து, பூமியில் இப்போதும் இருக்கிற கிறிஸ்துவின் சகோதரர்கள் அவனுடைய உக்கிரமான தாக்குதலைச் சகித்து வருகிறார்கள். யோவான் அறிவிக்கிறார்: “வலுசர்ப்பமானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண்பிள்ளையைப்பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தினது. ஸ்திரீயானவள் அந்தப் பாம்பின் முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.”—வெளிப்படுத்துதல் 12:13 , 14.

23 இங்கு தரிசனம் வசனம் 6-ல் சொல்லப்பட்ட கருத்தையே கொண்டிருக்கிறது, அங்கு பிள்ளையைப் பெற்றப் பின்னர், அந்த ஸ்திரீயானவள் வலுசர்ப்பத்தை விட்டு விலகி வனாந்தரத்திற்கு ஓடிப்போவதைக் குறித்து நமக்கு சொல்லப்படுகிறது. அந்த ஸ்திரீ பரலோகத்திலிருக்க வலுசர்ப்பம் பூமியில் இப்போது தள்ளிப்போடப்பட்டிருக்க எப்படி வலுசர்ப்பம் அந்த ஸ்திரீயை துன்பப்படுத்த முடியும் என்று நாம் ஒருவேளை யோசிக்கக்கூடும். அந்த ஸ்திரீ பூமியில் தன் பிள்ளைகளை, தன் வித்தை உடையவளாயிருக்கிறாள் என்பதை நினைவுப்படுத்திக்கொள்ளுங்கள். பிற்பாடு, இந்தத் தரிசனத்திலே, சாத்தான் ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டவனாக அவளுடைய வித்தை துன்பப்படுத்துகிறான் என்று நாம் சொல்லப்படுகிறோம். (வெளிப்படுத்துதல் 12:17) இங்கு பூமியில் இருக்கிற ஸ்திரீயின் வித்துக்கு என்ன ஏற்படுகிறதோ, அதுவே அந்த ஸ்திரீக்குத்தானேயும் ஏற்படுவதாக கருதப்பட வேண்டும். (மத்தேயு 25:40-ஐ ஒப்பிட்டுப் பார்க்கவும்.) இங்கு பூமியிலுள்ள வித்தின் வளர்ந்துவரும் எண்ணிக்கைக்கொண்ட கூட்டாளிகளும்கூட இவ்வித துன்புறுத்தல்களை அனுபவிப்பர்.

ஒரு புதிய தேசம்

24. எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் விடுவிக்கப்பட்டபோது கொண்டிருந்ததைப்போன்ற என்ன ஓர் அனுபவத்தை பைபிள் மாணாக்கர்கள் உடையவர்களாயிருந்தனர்?

24 முதல் உலக யுத்தம் நடந்துகொண்டிருந்தபோது, இயேசுவின் சகோதரர்கள் உண்மையுடன் சாட்சிபகரும் வேலையை கூடுமானவரை செய்துவந்தார்கள். இந்த வேலை சாத்தானிடமிருந்தும் அவனுடைய துன்மார்க்கமான ஆதரவாளர்களிடமிருந்தும் வந்த கடுந்துன்புறுத்தல் மத்தியிலும் செய்யப்பட்டு வந்தது. இறுதியில், பைபிள் மாணாக்கர்கள் வெளியரங்கமாக செய்யும் சாட்சிப்பகரும் வேலை உண்மையிலேயே நின்றுபோனது. (வெளிப்படுத்துதல் 11:7-10) எகிப்திலிருந்த இஸ்ரவேலர்களுடையதைப் போன்ற ஓர் அனுபவத்தை அவர்கள் எதிர்ப்பட்டபோதுதானே இது நடந்தது, இந்த இஸ்ரவேலர்களும் மிகவும் ஒடுக்கப்பட்டபோது சகித்துநிலைத்திருந்தனர். அப்போதுதானே யெகோவா அவர்களை சீக்கிரத்தில் பெருங்கழுகின் சிறகுகளில் கொண்டுவருவது போல பாதுகாப்பான இடத்துக்கு சீனாய் வனாந்தரத்துக்கு கொண்டுவந்து சேர்த்தார். (யாத்திராகமம் 19:1-4) இதேவிதமாகவே, 1918-19-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடுந்துன்புறுத்தலுக்கு பிறகு, யெகோவா அவருடைய ஸ்திரீயை பிரதிநிதித்துவஞ்செய்யும் அவருடைய சாட்சிகளை விடுவித்தார், இஸ்ரவேலர்களுக்கு வனாந்தரம் பாதுகாப்பான இடமாக இருந்ததுபோலவே அதேவிதமான ஓர் ஆவிக்குரிய நிலைமைக்குள் அவர்களைக் கொண்டுவந்து சேர்த்தார். அவர்கள் ஏறெடுத்த ஜெபங்களுக்கான பதிலாக இது இருந்தது.—சங்கீதம் 55:6-9-ஐ ஒப்பிடவும்.

25. (அ) வனாந்தரத்திலே ஒரு தேசமாக இஸ்ரவேலர்களை கொண்டுவந்ததுபோல யெகோவா 1919-ல் எதைக் கொண்டுவந்தார்? (ஆ) இந்தத் தேசத்தை உண்டுபண்ணுவது யார், எதற்குள் அவர்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றனர்?

25 வனாந்தரத்திலே, ஆவிக்குரியப்பிரகாரமாகவும் சரீரப்பிரகாரமாகவும் தேவையானதைக் கொடுத்துவந்து இஸ்ரவேலர்களை யெகோவா ஒரு தேசமாக கொண்டுவந்தார். அப்படியே, 1919 தொடங்கி, யெகோவா அந்த ஸ்திரீயின் வித்தை ஓர் ஆவிக்குரிய தேசமாக கொண்டுவந்திருக்கிறார். இதை, 1914 முதல் பரலோகத்திலிருந்து ஆட்சிசெய்யும் மேசியானிய ராஜ்யத்தோடு குழப்பிக்கொள்ளக்கூடாது. மாறாக, இந்தப் புதிய தேசம் பூமியிலுள்ள அபிஷேகம் செய்யப்பட்ட மீதியானோரால் உண்டுபண்ணப்படுகிறது, 1919-ல் மகிமையான ஆவிக்குரிய நிலைக்கு இவர்கள் கொண்டுவரப்பட்டனர். இப்போது ‘தகுதியான காலத்திலே படிகொடுக்கப்பட்டவர்களாக’ இவர்கள் செய்யவேண்டி இருந்த முன்னிருந்த வேலைக்குப் பலப்படுத்தப்பட்டார்கள்.—லூக்கா 12:42; ஏசாயா 66:8.

26. (அ) வெளிப்படுத்துதல் 12:6, 14 குறிப்பிடும் அந்தக் காலப்பகுதி எவ்வளவு நீண்ட ஒரு காலப்பகுதியாகும்? (ஆ) மூன்றரை காலங்களடங்கிய காலப்பகுதியின் நோக்கம் என்ன, எப்போது ஆரம்பித்து எப்போது அது முடிவடைந்தது?

26 கடவுளுடைய ஸ்திரீயாகிய வித்துக்கு இந்த இடை ஓய்வு எவ்வளவு காலம் நீடித்தது? 1,260 நாட்கள் என்று வெளிப்படுத்துதல் 12:6 சொல்லுகிறது. வெளிப்படுத்துதல் 12:14-னது அந்தக் காலப்பகுதியை ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாக அழைக்கிறது; வேறு வார்த்தைகளில், மூன்றரை காலங்களாக அது இருக்கிறது. உண்மையில், இந்த இரண்டு கூற்றுகளும் 1919 இளவேனிற்காலம் தொடங்கி 1922 இலையுதிர் காலம் வரையாக நீடித்திருக்கிற மூன்றரையாண்டுகளையே குறித்து நிற்கின்றன. இந்தக் காலப்பகுதி, திரும்பவும் பழைய நிலைக்கு வந்த யோவான் வகுப்பாருக்குப் புதுப்பெலனடைவதற்கும் மறுசீரமைவதற்குமான காலமாகவும் இருந்தது.

27. (அ) யோவான் அறிவிக்கிற பிரகாரம் 1922-க்குப் பிறகு அந்த வலுசர்ப்பம் என்ன செய்தது? (ஆ) சாட்சிகளுக்கெதிராக துன்புறுத்தல் வெள்ளத்தை வெளிவிடுவதில் சாத்தானுடைய நோக்கம் என்னவாக இருந்தது?

27 அந்த வலுசர்ப்பம் விட்டுக்கொடுக்கவில்லை! “அப்பொழுது அந்த ஸ்திரீயை வெள்ளங்கொண்டுபோகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றிவிட்டது.” (வெளிப்படுத்துதல் 12:15) ‘நதிபோன்ற வெள்ளம்’ அல்லது “பெருவெள்ளம்” என்பதன் பொருள் என்ன? (புதிய ஆங்கில பைபிள்) பூர்வ அரசனாகிய தாவீது தன்னை எதிர்த்துவந்தவர்களை “[ஒன்றுக்கும் உதவாதவருடைய, NW] துர்ச்சனப் பிரவாக”மாக [“யோக்கியதையற்றவர்களின் ஓடையாக,” யங்] சொன்னார். (சங்கீதம் 18:4, 5, 16, 17) இப்போது சாத்தான் கொண்டுவருவதும் யோக்கியதையற்ற அல்லது “ஒன்றுக்கும் உதவாதவ”ரிடத்திலிருந்து வரும் துன்புறுத்தலாகவே இருக்கிறது. 1922-க்குப் பின்னர் சாட்சிகளுக்கெதிராக சாத்தான் துன்புறுத்தல் வெள்ளத்தை வெளிவிட்டான். (மத்தேயு 24:9-13) சரீரப்பிரகாரமான வன்முறையையும், “தீமையைக் கட்டளையினால் பிறப்பிப்”பதையும், சிறையிலிடுவதையும் மற்றும் தூக்கிலிடுவதனாலும், சுடுவதனாலும், தலைவாங்கலினாலும் செய்யப்பட்ட கொலைகளையுங்கூட இது உட்படுத்தினது. (சங்கீதம் 94:20) தாழ்நிலைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தச் சாத்தான், கடவுளுடைய பரலோக ஸ்திரீயை நேரடியாக அணுகுவதிலிருந்து தடை செய்யப்பட்டவனாக, பூமியிலுள்ள அவளுடைய மீதியான வித்தைத் தாக்கி அவர்களை அழித்துப்போட வெகு கோபங்கொண்டு புறப்பட்டான், இதை நேரடியாகவோ அவர்களுடைய உத்தமத்தன்மையை குலைத்துவிடுவதன் மூலம் கடவுளுடைய தயவை இழந்துபோகச்செய்வதன் மூலமாகவோ அவன் செய்துவருகிறான். ஆனால் அவர்கள் எடுத்த முடிவு யோபு எடுத்த முடிவைப்போன்றே இருந்தது: “என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னை விட்டு விலக்கேன்.”—யோபு 27:5.

28. அந்தத் துன்புறுத்தல் வெள்ளம் இரண்டாம் உலக யுத்தத்தின்போது எப்படி உச்சநிலையை அடைந்தது?

28 இந்தக் கொடிய துன்புறுத்தல் வெள்ளம் இரண்டாம் உலக யுத்தத்தின்போது அதனுடைய உச்சநிலையை எட்டினது. ஐரோப்பாவில் சுமார் 12,000 சாட்சிகள் நாசி கான்சன்ட்ரேஷன் முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் காவலில் வைக்கப்பட்டனர், மேலும் சுமார் 2,000 பேர் மரித்தனர். இத்தாலி, ஜப்பான், கொரியா, தைவான் போன்ற நாடுகளை அரசாண்ட படைத்தளபதிகளின் கீழ் இருந்த உண்மையுள்ள சாட்சிகள் அதே விதம் கொடுமையாக நடத்தப்பட்டனர். ஜனநாயக நாடுகள் என்று அழைக்கப்பட்ட நாடுகளிலுங்கூட சாட்சிகள் கத்தோலிக்க நேரடி நடவடிக்கை குழுக்களால் முரட்டுத்தனமாகத் தாக்கப்பட்டு, தண்டனையாக கீல் பூசி, மேலே இறகுகளை ஒட்டி அவர்களை மூடி, ஊரை விட்டு துரத்திவிட்டனர். கிறிஸ்தவ மாநாடுகள் நடத்தப்பட முடியாதபடி செய்யப்பட்டு சாட்சிப் பிள்ளைகள் பள்ளியிலிருந்து விலக்கப்பட்டனர்.

29. (அ) ஓர் எதிர்பாரா மூலத்திலிருந்து வரும் விடுதலையைப் பற்றி யோவான் எப்படி விவரிக்கிறார்? (ஆ) “பூமியானது ஸ்திரீக்கு உதவியாக” எப்படி வந்தது? (இ) அந்த வலுசர்ப்பம் எதைத் தொடர்ந்து செய்துவந்திருக்கிறது?

29 ஓர் எதிர்பாரா மூலத்திலிருந்து விடுதலை வந்தது: “பூமியானது ஸ்திரீக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து ஊற்றின வெள்ளத்தை விழுங்கினது. அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று.” (வெளிப்படுத்துதல் 12:16,  17) “பூமி”—சாத்தானுடைய சொந்த காரிய ஒழுங்குமுறைக்குள் உள்ள ஆதாரப்பொருட்கள்—‘நதியை’ அல்லது ‘வெள்ளத்தை’ விழுங்கத் தொடங்கியது. 1940-களில் ஐக்கிய மாகாணங்களின் உச்ச நீதிமன்றத்திலும் மத சுயாதீனத்துக்கு ஆதரவு கொடுத்துவந்த வேறு சில நாடுகளில் இருந்த ஆட்சியாளர்களிடத்திலிருந்தும் சாட்சிகள் தொடர்ந்து சாதகமான தீர்ப்புகளைப் பெற்றுவந்தனர். முடிவில், நேச நாடுகள் நாஸி-ஃபாஸிச பயங்கர சக்தியை விழுங்கிப்போட்டது, கொடூரமான சர்வாதிகார அரசாட்சிகளின் கீழ் துன்பம் அனுபவித்த சாட்சிகளுக்கு இது விடுதலையை அளித்தது. துன்புறுத்தல்கள் இதோடு முற்றிலுமாக முடிவுக்குவந்துவிடவில்லை, அந்த வலுசர்ப்பம் இப்போது வரையாக தொடர்ந்து கோபங்கொண்டிருக்கிறது, அவன் ‘இயேசுவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களோடு’ விடாது யுத்தஞ்செய்து வருகிறான். அநேக நாடுகளில், உண்மையுள்ள சாட்சிகள் இன்னும்கூட சிறையிலிருக்கிறார்கள், தங்களுடைய உத்தமத்தன்மையின் காரணமாக சிலர் இன்னும் மரிக்கவுங்கூட செய்கிறார்கள். ஆனால் இப்பேர்ப்பட்ட சில நாடுகளில், அதிகாரிகள் அவ்வப்போது அழுத்தங்களை சிறிது குறைப்பதன் மூலம் சாட்சிகள் பெருமளவு சுயாதீனத்தை அனுபவிக்கிறார்கள். c இப்படியாக, பூமி தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக தொடர்ந்து துன்புறுத்தலாகிய நதியை விழுங்கிவருகிறது.

30. (அ) எது நடைபெறுவதற்காக பூமி போதுமான விடுதலையைக் கொடுத்திருக்கிறது? (ஆ) கடவுளுடைய ஜனங்கள் உத்தமத்தோடு இருப்பது எதில் விளைவடைந்திருக்கிறது?

30 இவ்விதத்தில், கடவுளுடைய வேலை சுமார் 235 நாடுகளுக்கு பரவவும் 60 லட்சத்துக்கும் அதிகமான உண்மையுள்ள சுவிசேஷக பிரசங்கிப்பாளர்களை உண்டுபண்ணுவதற்கும் பூமி போதுமான விடுவிப்பை தந்திருக்கிறது. அந்த ஸ்திரீயின் வித்துடைய மீதியானோரோடுகூட புதிய விசுவாசிகளடங்கிய ஓர் உலகளாவிய திரள் கூட்டம் உலகத்திலிருந்து தங்களை பிரித்துவைத்துக்கொள்வதன் மூலமும் சுத்தமான ஒழுக்கத்தைக் கொண்டிருப்பதன் மூலமும் சகோதரர்களை அன்புகூருவதன் மூலமும் அவர்கள் மேசியானிய ராஜ்யத்தைக் குறித்து சாட்சிபகருவதன் மூலமும் கடவுளுடைய கட்டளைகளை கைக்கொண்டுவருகிறது. அவர்கள் உத்தமத்தோடு இருப்பதுதானே சாத்தானுடைய நிந்தனையான சவாலுக்கு ஒரு பதிலைக் கொடுக்கிறது, இப்படியாக சாத்தான் மற்றும் அவனுடைய காரிய ஒழுங்குமுறையும் வீழ்ச்சியடைவதை அது குறிக்கிறது.—நீதிமொழிகள் 27:11.

[அடிக்குறிப்புகள்]

a மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலருடைய 12 கோத்திரங்கள், 12 அப்போஸ்தலர், ஆவிக்குரிய இஸ்ரவேலருடைய 12 கோத்திரங்கள், மேலும் 12 வாசல்கள், 12 தேவதூதர்கள், மற்றும் புதிய எருசலேமின் 12 அஸ்திபாரக் கற்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்க்கவும்.—வெளிப்படுத்துதல் 21:12-14.

b என்றபோதிலும், வெளிப்படுத்துதல் 12:9-னது “பெரிய வலுசர்ப்பம் . . . அதைச்சேர்ந்த தூத”ரைப் பற்றி சொல்லுவதை கவனியுங்கள். ஆகவே, பைபிளானது பிரதான தூதன் என்ற அந்தப் பட்டப்பெயரை பிசாசானவனுக்கு அளிக்கவில்லையென்றாலும் அவனே தன்னை போலிக் கடவுளாக ஆக்கிக்கொள்வதோடு ஒரு பிரதான தூதனாகவும் தன்னை ஆக்கிக்கொள்ள முயற்சிசெய்கிறான்.

c அநேக நாடுகளில் உள்ள மிகப் பெரிய நீதிமன்றங்கள் யெகோவாவின் சாட்சிகளுக்கு விடுதலையை அளித்திருக்கின்றன; இதன் ஒருசில தீர்மானங்கள் பக்கம் 92-ல் உள்ள பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ளன.

[கேள்விகள்]

ந[பக்கம் 185-ன் பெட்டி]

‘பூமி தன் வாயைத் திறந்தது’

அநேக நாடுகளில் உள்ள அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும் அவர்களுடைய தோழர்களுக்கும் எதிராக சாத்தான் துன்புறுத்தல் வெள்ளத்தைத் திறந்துவிட்டிருக்கிறான். என்றாலும், எப்போதும், சாத்தானுடைய சொந்த காரிய ஒழுங்குமுறைக்குள் ஏற்படும் வளர்ச்சிகள்தாமே அந்த வெள்ளம் விழுங்கிப்போடப்படுவதில் விளைவடைந்திருக்கிறது.

ஐக்கிய மாகாணங்களில் நடைபெற்ற கும்பல் தாக்குதல்கள் மற்றும் சிறையிருப்புகள் கொண்ட வெள்ளம் 1940-களின்போது உச்ச நீதிமன்றத்தின் சாதகமான தீர்ப்புகளின் மூலம் பெருமளவு விழுங்கப்பட்டது.

1945: ஜெர்மனி மற்றும் ஜப்பானின் கட்டுப்பாட்டுக்குள் இருந்துவந்த நாடுகளில் உண்டான கடுமையான துன்புறுத்தல் இரண்டாம் உலக யுத்தத்தில் நேச நாடுகள் பெற்ற வெற்றிகளின் காரணமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

டோமினிகன் குடியரசு நாட்டில் யெகோவாவின் சாட்சிகள் மீது தடையுத்தரவு விதிக்கப்பட்டபோது சாட்சிகள் சிறையிலடைக்கப்பட்டு, உதைக்கப்பட்டு, துப்பாக்கியின் தடித்த முனையினால் அடிக்கப்பட்டனர். 1960-ல் சர்வாதிகாரியாகிய ரஃபேல் டுருஜில்லோவுக்கும் ரோம கத்தோலிக்க சர்ச்சுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை யெகோவாவின் சாட்சிகள் மீது போடப்பட்டிருந்த தடையுத்தரவு நீக்கிப்போடப்படுவதில் விளைவடைந்தது.

நைஜீரியாவில் நடந்த ஓர் உள்நாட்டுப் போரின்போது சாட்சிகளைச் சுட்டுக்கொல்லுவது, எரித்தழிப்பது, கற்பழிப்பது, அடித்துக்கொல்லுவது, சித்திரவதை செய்வது, கொலைசெய்வது போன்ற காரியங்கள் நடைபெற்று வந்தன, 1970-ல் இப்பேர்ப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றுவந்த இந்தப் பிரிந்துகிடந்த மாகாணத்தை அரசாங்க படைகள் கைப்பற்றியபோது இவை ஒரு முடிவுக்கு வந்தன.

ஸ்பெய்னில் கடவுளைக் குறித்து பேசியதற்காகவும் கிறிஸ்தவ கூட்டங்களை நடத்திய “குற்றச்செய”லுக்காகவும் அவர்களுடைய வீடுகள் கைப்பற்றப்பட்டு, கிறிஸ்தவர்கள் அபராதம் விதிக்கப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டனர். இந்தத் துன்புறுத்தல் இறுதியில், 1970-ல் முடிவுக்கு வந்தது. கத்தோலிக்கரல்லாத மதங்களிடமாக அரசாங்கத்தின் கொள்கையில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தின் விளைவாக யெகோவாவின் சாட்சிகள் சட்டப்படி பதிவுசெய்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

போர்த்துகலில் நூற்றுக்கணக்கான வீடுகளில் ஆணையின்றி ஆய்வுநடத்தப்பட்டது. சாட்சிகளை சரீரப்பிரகாரமாக காயப்படுத்தி சிறையிலடைத்தனர், மேலும் அவர்களுடைய பைபிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 1974-ல் ஏற்பட்ட ஓர் இராணுவப் புரட்சி அரசாங்க மாற்றத்தில் விளைவடைந்தது, கூட்டம் நடத்துவதற்கு சுயாதீனம் வழங்கப்பட்டது, இப்படியாக இந்தப் பயங்கரவாதம் ‘விழுங்கிப்போடப்பட்டது.’

அர்ஜென்டினாவில் ஓர் இராணுவ அரசாங்கத்தின் கீழ், யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டனர், தேசமுழுவதிலுமுள்ள சாட்சிகள் நற்செய்தியைப் பிரசங்கித்ததன் காரணமாக, சிறையிலடைக்கப்பட்டனர். அப்போது ஆட்சி செய்துவந்த அரசாங்கம் யெகோவாவின் சாட்சிகளுடைய சொஸையிட்டியை சட்டப்பூர்வமாக அங்கீகரித்தபோது இந்தத் துன்புறுத்தல் இறுதியில் 1984-ல் ஒரு முடிவுக்கு வந்தது.

[பக்கம் 183-ன் அட்டவனை]

ராஜ்ய பிறப்பு

புதிய தேசத்தின் பிறப்பு

புதுப்பெலனடைவதற்கான காலப்பகுதி

துன்புறுத்தல் வெள்ளம்

1914

1919

1919-1922

1922

[பக்கம் 182-ன் படம்]

பூமிக்கு ஆபத்து