Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கடும் மூர்க்கத்தனமான இரண்டு மிருகங்களுடன் போராடுதல்

கடும் மூர்க்கத்தனமான இரண்டு மிருகங்களுடன் போராடுதல்

அதிகாரம் 28

கடும் மூர்க்கத்தனமான இரண்டு மிருகங்களுடன் போராடுதல்

தரிசனம் 8​வெளிப்படுத்துதல் 13:1-18

பொருள்: ஏழு தலைகளையுடைய மூர்க்க மிருகம், இரண்டு கொம்புகளுடைய மூர்க்க மிருகம், மற்றும் அந்த மூர்க்க மிருகத்தின் சொரூபம்

நிறைவேற்றத்தின் காலம்: நிம்ரோதுவின் நாளிலிருந்து மிகுந்த உபத்திரவம் வரை

1, 2. (அ) அந்த வலுசர்ப்பத்தைப்பற்றி யோவான் என்ன சொல்லுகிறார்? (ஆ) இந்த வலுசர்ப்பம் பயன்படுத்தும் காணக்கூடிய ஓர் அமைப்பை, யோவான் அடையாளக் குறிப்பான மொழியில் எவ்வாறு விவரிக்கிறார்?

 அந்தப் பெரிய வலுசர்ப்பம் கீழே பூமியில் விழத் தள்ளப்பட்டது! இந்தப் பாம்பாயினும் அல்லது அவனைப் பின்பற்றும் பேய்களாயினும் மறுபடியும் ஒருபோதும் பரலோகத்துக்குள் திரும்பிவர அனுமதிக்கப்படுவதில்லையென வெளிப்படுத்துதலைப் பற்றிய நம்முடைய படிப்பு தெளிவாக்குகிறது. ஆனால் “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட”வனைப் பற்றி நாம் இன்னும் படித்து முடிக்கவில்லை. அடுத்தப்படியாக இந்த விவரம், ‘ஸ்திரீக்கும் அவளுடைய வித்துக்கும்’ எதிராகப் போரிட சாத்தான் பயன்படுத்தின வழிவகைகளைப் பெரும் நுட்பவிவரமாக அடையாளப்படுத்திக் காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 12:9, 17) அந்தப் பாம்பாகிய வலுசர்ப்பத்தைப்பற்றி யோவான் பின்வருமாறு கூறுகிறார்: “அது கடற்கரை மணலின்மேல் நின்றது.” (வெளிப்படுத்துதல் 12:18, தி.மொ.) ஆகையால் இந்த வலுசர்ப்பம் செயல்படும் வழிவகைகளைக் கவனிக்க நாம் சற்று நிற்போம்.

2 சாத்தானும் அவனுடைய பேய்களும் இருந்ததன் தொல்லையால் இனிமேலும் பரிசுத்தப் பரலோகங்கள் பாதிக்கப்படுகிறதில்லை. அந்தப் பொல்லாத ஆவியாட்கள் பரலோகத்திலிருந்து வெளியே தள்ளப்பட்டு இந்தப் பூமிக்கு அருகில் கட்டுப்படுத்தப்பட்டிருந்தனர். இது தற்காலத்தில் ஆவியுலகத்தொடர்பு நடவடிக்கைகளின் பெரும்படியான வளர்ச்சிக்குச் சந்தேகமில்லாமல் காரணமாக உள்ளது. வஞ்சகச் சூழ்ச்சிநிறைந்த இந்தச் சர்ப்பம், கறைப்பட்ட ஆவி அமைப்பு ஒன்றை இன்னும் வைத்து நடத்துகிறது. ஆனால் மனிதவர்க்கத்தை மோசம்போக்கும்படிக்குக் காணக்கூடிய ஓர் அமைப்பையுங்கூட அவன் பயன்படுத்துகிறானா? யோவான் நமக்குச் சொல்வதாவது: “சமுத்திரத்திலிருந்து ஒரு [மூர்க்க, NW] மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன. நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போலிருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; வலுசர்ப்பமானது [தன் வல்லமையையும் தன் சிங்காசனத்தையும் பெரிய அதிகாரத்தையும் கொடுத்தது, தி.மொ.].”—வெளிப்படுத்துதல் 13:1ஆ, 2.

3. (அ) தீர்க்கதரிசனங்களில் கடும் மூர்க்கமான என்ன மிருகங்களைத் தானியேல் தீர்க்கதரிசி கண்டார்? (ஆ) தானியேல் 7-ல் உள்ள அந்த மிகப் பெரிய மிருகங்கள் எதை அடையாளமாகக் குறித்தன?

3 இயற்கைக்கு மாறான இது என்ன மிருகம்? பைபிள்தானே பதிலளிக்கிறது. பொ.ச.மு. 539-ல் பாபிலோனின் வீழ்ச்சிக்கு முன்னால், யூதத் தீர்க்கதரிசியாகிய தானியேல் கடும் மூர்க்க மிருகங்கள் உட்பட்ட தரிசனங்களைக் கண்டார். தானியேல் 7:2-8-ல் (தி.மொ.) நான்கு மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து வெளிவருவதை அவர் விவரிக்கிறார், முதலாவது சிங்கத்தைப்போன்றும், இரண்டாவது கரடியைப்போன்றும், மூன்றாவது சிறுத்தையைப் போன்றும் இருந்தது. மேலும் “இதோ, நாலாம் மிருகம் காணப்பட்டது; அது பயமும் திகிலும் விளைவிக்கும் மிகவும் பலத்த மிருகம்; . . . அதற்குப் பத்துக் கொம்புகளிருந்தன.” கவனிக்கத்தக்கதாய் இது பெரும்பாலும் பொ.ச. 96-ம் ஆண்டில் யோவான் கண்ட அந்த மூர்க்க மிருகத்துக்கு ஒத்திருக்கிறது. அந்த மிருகமும் ஒரு சிங்கத்தின், ஒரு கரடியின், மற்றும் ஒரு சிறுத்தையின் இயல்புகளை உடையதாக இருக்கிறது, பத்துக் கொம்புகளை உடையதாகவும் இருக்கிறது. தானியேல் கண்ட அந்த மிகப் பெரிய மிருகங்கள் எதை அடையாளமாகக் குறித்தன? அவர் நமக்குப் பின்வருமாறு தெரிவிக்கிறார்: “அந்த நாலு பெரிய மிருகங்களும் பூமியிலிருந்து எழும்புகிற நாலு ராஜாக்கள்.” (தானியேல் 7:17) ஆம், அந்த மிருகங்கள் “ராஜாக்கள்,” அல்லது பூமியின் அரசியல் வல்லரசுகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன.

4. (அ) தானியேல் 8-ல், அந்த ஆட்டுக்கடாவும் வெள்ளாட்டுக்கடாவும் எவற்றைப் படமாகக் குறித்தன? (ஆ) அந்த வெள்ளாட்டுக்கடாவின் அந்தப் பெரிய கொம்பு முறிக்கப்பட்டு அதைப் பின்தொடர்ந்து நான்கு கொம்புகள் வளர்ந்தது எதைக் குறிப்பாகத் தெரிவித்தது?

4 மற்றொரு தரிசனத்தில், இரண்டு கொம்புகளையுடைய ஓர் ஆட்டுக்கடா ஒரு பெரிய கொம்பையுடைய வெள்ளாட்டுக்கடாவால் முட்டி வீழ்த்தப்படுவதைத் தானியேல் காண்கிறார். அதன் உட்பொருளை காபிரியேல் தூதன் அவருக்கு விளக்கி: “ஆட்டுக்கடா மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்கள்; ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா” என்று கூறுகிறார். மேலும் அந்த ஆட்டுக்கடாவின் அந்தப் பெரிய கொம்பு முறிக்கப்பட்டு, பின் அதனிடத்தில் நான்கு கொம்புகள் வளருமென காபிரியேல் மேலும் தொடர்ந்து தீர்க்கதரிசனம் சொல்லுகிறார். இது, 200-க்கு மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின் மகா அலெக்ஸாண்டர் மரித்து அவனுடைய ராஜ்யம் நான்கு ராஜ்யங்களாகப் பிளவுற்று அவனுடைய நான்கு படைப்பெருந்தலைவர்களால் ஆளப்பட்டபோது உண்மையில் நடந்தேறியது.—தானியேல் 8:3-8, 20-25. a

5. (அ) மிருகம் என்பதற்கான கிரேக்கச் சொல் குறிக்கும் பண்புகள் யாவை? (ஆ) வெளிப்படுத்துதல் 13:1, 2-ன் மூர்க்க மிருகம், அதன் ஏழு தலைகளோடுகூட எதை அடையாளமாகக் குறித்துக் காட்டுகிறது?

5 ஆகவே, தேவாவியால் ஏவப்பட்ட பைபிளின் நூலாசிரியர், பூமியின் இந்த அரசியல் வல்லரசுகளை மிருகங்களாகக் கருதுகிறாரென்பது தெளிவாயிருக்கிறது. என்ன வகையான மிருகங்கள்? வெளிப்படுத்துதல் 13:1, 2-ன் மிருகத்தை ஒரு “மூர்க்க” மிருகமென ஒரு கருத்துரையாளர் அழைத்து, “θηριου [“மிருகம்” என்பதற்கான கிரேக்கச் சொல்லாகிய தெரீயன்] குறிக்கும் கொடுமையான, அழிவு செய்யும், பயமுறுத்தும், பெருந்தீனி கொள்ளுகிறது போன்ற கொடிய விலங்கு என்ற எல்லா பண்புகளையும் நாங்கள் ஏற்கிறோம்,” என மேலும் சொல்கிறார். b சாத்தான் அதைக் கொண்டு மனிதவர்க்கத்தை அடக்கியாண்டு வந்திருக்கிற அந்த இரத்தக்கறையுற்ற அரசியல் ஒழுங்குமுறையை இது எவ்வளவு நன்றாய் விவரிக்கிறது! இந்த மூர்க்க மிருகத்தின் ஏழு தலைகள், யோவானின் நாள்வரை பைபிள் சரித்திரத்தில் முனைப்பாகக் காட்டப்பட்ட—எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதிய-பெர்சியா, கிரீஸ், ரோம் ஆகிய—ஆறு பெரும் உலக வல்லரசுகளையும், பின்னால் தோன்றுமென தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்ட ஓர் ஏழாவது உலக வல்லரசையும், அடையாளமாகக் குறித்துக் காட்டுகின்றன.—வெளிப்படுத்துதல் 17:9, 10-ஐ ஒப்பிடுங்கள்.

6. (அ) இந்த மூர்க்க மிருகத்தின் ஏழு தலைகள் எதில் தலைமை வகித்திருக்கின்றன? (ஆ) யூதக் காரிய ஒழுங்குமுறையின்மீது தாம் கூறிய ஆக்கினைத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கு யெகோவா ரோமை எவ்வாறு பயன்படுத்தினார், எருசலேமிலிருந்த கிறிஸ்தவர்கள் எப்படிப் பிரதிபலித்தார்கள்?

6 யோவான் கண்ட அந்த மூர்க்க மிருகம் ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் மட்டுமல்லாமல் ஓர் உடலையும் உடையதாக இருந்ததுபோல்—இந்த ஏழு வல்லரசுகளைத் தவிர வேறு உலக வல்லரசுகளும் சரித்திரத்தில் இருந்திருக்கின்றனவென்பது உண்மையே. ஆனால் இந்த ஏழு தலைகளும், கடவுளுடைய ஜனங்களை ஒடுக்குவதில், ஒவ்வொன்றும் அதனதன் வரிசைமுறையில் தலைமை வகித்திருக்கும் அந்த ஏழு பெரிய வல்லரசுகளை அடையாளமாகக் குறித்து நிற்கின்றன. பொ.ச. 33-ல் ரோம் ஆதிக்கம் செலுத்துகையில், கடவுளுடைய குமாரனைக் கொல்வதற்குச் சாத்தான், மூர்க்க மிருகத்தின் அந்தத் தலையைப் பயன்படுத்தினான். அந்தச் சமயத்தில், உண்மையற்ற யூதக் காரிய ஒழுங்குமுறையைக் கடவுள் கைவிட்டு, பின்னால், பொ.ச. 70-ல் அந்த ஜனத்தின்மீது தம்முடைய ஆக்கினைத்தீர்ப்பை நிறைவேற்றும்படி ரோமை அனுமதித்தார். சந்தோஷத்துக்கேதுவாக, கடவுளின் உண்மையான இஸ்ரவேலான, அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபை, முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது, எருசலேமிலும் யூதேயாவிலும் இருந்தவர்கள் யோர்தான் நதிக்கு அப்பால் பாதுகாப்புக்குத் தப்பியோடிவிட்டிருந்தனர்.—மத்தேயு 24:15, 16; கலாத்தியர் 6:16.

7. (அ) இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுகாலம் வந்து கர்த்தருடைய நாள் தொடங்கினபோது என்ன நடைபெற வேண்டியதாயிருந்தது? (ஆ) எது வெளிப்படுத்துதல் 13:1, 2-ன் மூர்க்க மிருகத்தினுடைய ஏழாவது தலையாக நிரூபித்தது?

7 எனினும், பொ.ச. முதல் நூற்றாண்டின் முடிவுக்குள், இந்த ஆதி சபையிலிருந்த பலர் சத்தியத்திலிருந்து விலகிச் சென்றுவிட்டிருந்தனர், உண்மையான கிறிஸ்தவ கோதுமையாக இருந்த, “ராஜ்யத்தின் புத்திரர்,” களைகளாகிய ‘பொல்லாங்கனுடைய புத்திரரால்’ பேரளவாக நெருக்கி வெளியே தள்ளப்பட்டிருந்தனர். ஆனால் இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுகாலம் வந்தபோது, அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்ட ஒரு தொகுதியாக மறுபடியும் தோன்றினர். கர்த்தருடைய நாளின்போது, இந்த நீதிமான்கள் “சூரியனைப்போலப் பிரகாசிக்க” வேண்டிய காலமாயிருந்தது. ஆகையால், இந்தக் கிறிஸ்தவ சபை ஊழியத்துக்காக ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்டது. (மத்தேயு 13:24-30, 36-43) அதற்குள், ரோமப் பேரரசு வீழ்ந்துபோய்விட்டது. இந்தப் பெரும் பிரிட்டிஷ் பேரரசு, வல்லமைவாய்ந்த அமெரிக்க ஐக்கிய மாகாணங்களோடுகூட, உலக மேடையில் முதன்மையான மத்திப இடத்தை வகித்தது. இந்த இருவரிணைந்த உலக வல்லரசு அந்த மூர்க்க மிருகத்தின் ஏழாவது தலையாக நிரூபித்தது.

8. ஆங்கில-அமெரிக்க இரட்டை உலக வல்லரசை ஒரு மிருகத்துக்கு ஒப்பிட்டிருப்பது ஏன் திடுக்கிடச் செய்ய வேண்டியதில்லை?

8 ஆளும் அரசியல் வல்லரசுகளை மூர்க்க மிருகங்களாக அடையாளப்படுத்திக் குறிப்பிடுவது திடுக்கிடச் செய்கிறதல்லவா? இரண்டாம் உலகப் யுத்தத்தின்போது, ஓர் அமைப்பாகவும் தனியாட்களாகவும் யெகோவாவின் சாட்சிகளின் தகுநிலை பூமியெங்கும் நீதிமன்றங்களில் மறுத்துக் குற்றஞ்சாட்டப்பட்டபோது எதிரிகளில் சிலர் இவ்வாறே வாதாடினர். ஆனால் சற்று நின்று சிந்தித்துப் பாருங்கள்! அந்த ராஜ்யங்கள்தாமே மிருகங்களை அல்லது மூர்க்க உயிரினங்களைத் தங்கள் தேசீய சின்னங்களாக ஏற்கின்றனவல்லவா? உதாரணமாக, பிரிட்டிஷுக்கு சிங்கம், அமெரிக்காவுக்கு கழுகு, சீனாவுக்கு வலுசர்ப்பம். ஆகவே, பரிசுத்த பைபிளின் தெய்வீக நூலாசிரியரும், உலக வல்லரசுகளை அடையாளப்படுத்த மிருகங்களைப் பயன்படுத்தினால் எவராவது ஏன் அதற்கு மறுப்புக் கூறவேண்டும்?

9. (அ) சாத்தானே அந்த மூர்க்க மிருகத்துக்கு அதன் மிகுந்த அதிகாரத்தைக் கொடுக்கிறானென்று பைபிள் சொல்வதை ஒருவர் ஏன் மறுத்துக்கூறக்கூடாது? (ஆ) பைபிளில் சாத்தான் எவ்வாறு விவரிக்கப்பட்டிருக்கிறான், அரசாங்கங்களின்மீது அவன் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகிறான்?

9 மேலும், அந்த மூர்க்க மிருகத்துக்கு அதன் மிகுந்த அதிகாரத்தைக் கொடுப்பவன் சாத்தானேயென பைபிள் சொல்வதற்கு எவராவது ஏன் மறுப்புக்கூற வேண்டும்? அந்தக் கூற்றுக்கு ஊற்றுமூலர் கடவுளே, அவருக்கு முன்பாக ‘ராஜ்யங்கள் ஏற்றச்சாலில் தொங்கும் துளிபோலும், படியும் மென்மையான தூசிபோலவும் இருக்கின்றனர்.’ அந்த ராஜ்யங்கள், கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தை அவற்றை விவரிக்கிற முறையின்பேரில் சினங்கொண்டு எதிர்ப்பதைப் பார்க்கிலும் அவருடைய தயவுக்காக நாடித்தேடுவது மேம்பட்டதாயிருக்கும். (ஏசாயா 40:15, 17, NW; சங்கீதம் 2:10-12) சாத்தான் கொழுந்துவிட்டெரியும் நரகத்திலுள்ள, உடலை விட்டுச் சென்ற ஆத்துமாக்களை வாதிக்கும்படி நியமிக்கப்பட்ட புராணக்கதை ஆளல்ல. அத்தகைய இடம் எதுவும் இல்லை. மாறாக, சாத்தான், ‘ஒளியின் தூதன்’ போல் இருந்து, பொதுவான அரசியல் விவகாரங்களில் வல்லமைவாய்ந்த செல்வாக்கைச் செலுத்துகிறவன், வஞ்சகத்தில் நிபுணன் என வேதவார்த்தையில் விவரிக்கப்பட்டிருக்கிறான்.—2 கொரிந்தியர் 11:3, 14, 15; எபேசியர் 6:11-18.

10. (அ) இந்தப் பத்துக் கொம்புகள் ஒவ்வொன்றின்மீதும் ஒவ்வொரு முடி இருப்பது எதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது? (ஆ) அந்தப் பத்துக் கொம்புகளும் அந்தப் பத்து முடிகளும் எதைச் சின்னமாகக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன?

10 அந்த மூர்க்க மிருகம் அதன் ஏழு தலைகளில் பத்துக் கொம்புகளை உடையதாக இருக்கிறது. ஒருவேளை நான்கு தலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கொம்பையும் மூன்று தலைகள் ஒவ்வொன்றும் இரண்டு கொம்புகளையும் கொண்டிருக்கலாம். மேலும், அதன் கொம்புகளில் அது பத்து முடிகளையும் உடையதாக இருந்தது. தானியேலின் புத்தகத்தில், பயங்கரமான மிருகங்கள் விவரிக்கப்பட்டிருக்கின்றன, அவற்றின் கொம்புகளின் எண்ணிக்கை சொல்லர்த்தமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டியுள்ளது. உதாரணமாக, ஓர் ஆட்டுக்கடாவின் அந்த இரண்டு கொம்புகள் இரண்டு பங்காளிகளாலாகிய ஓர் உலகப் பேரரசான, மேதியாவையும் பெர்சியாவையும் பிரதிநிதித்துவம் செய்தன. அதேசமயத்தில் ஒரு வெள்ளாட்டுக்கடாவின் தலையிலிருந்த நான்கு கொம்புகள் மகா அலெக்ஸாண்டரின் கிரேக்கப் பேரரசுவிலிருந்து தோன்றி வளர்ந்து ஒரேகாலத்தில் ஆட்சிபுரிந்துகொண்டிருந்த நான்கு பேரரசுகளைக் பிரதிநிதித்துவம் செய்தன. (தானியேல் 8:3, 8, 20-22) எனினும், யோவான் கண்ட, அந்த மிருகத்தின் தலையிலிருந்த அந்தப் பத்துக் கொம்புகளின் எண்ணிக்கை அடையாளக் குறிப்பாக இருப்பதாய்த் தோன்றுகிறது. (ஒப்பிடுங்கள்: தானியேல் 7:24; வெளிப்படுத்துதல் 17:12.) அவை சாத்தானின் முழு அரசியல் அமைப்பையும் உண்டுபண்ணும் ஆளும் அரசாங்கங்கள் அனைத்தையும் முழுமையாகக் குறித்துக் காட்டுகின்றன. இந்தக் கொம்புகள் யாவும் வன்முறையானவையாகவும் வலியத்தாக்கும் தன்மைவாய்ந்தவையாகவும் இருக்கின்றன, ஆனால் ஏழு தலைகள் குறிப்பிட்டபடி தலைமைதாங்குதல் ஒரு சமயத்துக்கு ஒரே ஓர் உலக வல்லரசில் தங்குகிறது. அவ்வாறே, அந்தப் பத்து முடிகளும், ஆட்சிசெய்யும் எல்லா அரசாங்கங்களும் அதனதன் காலத்தில் முதன்மையாக ஆதிக்கம் வகிக்கிற அரசாங்கத்துடன் அல்லது உலக வல்லரசுடன் ஆட்சி வல்லமையைச் செலுத்தும் எனக் குறிப்பிடுகின்றன.

11. அந்த மூர்க்க மிருகம் ‘அதின் தலைகள்மேல் தூஷண நாமங்களை’ உடையதாக இருப்பது எதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது?

11 இந்த மூர்க்க மிருகம் ‘அதின் தலைகள்மேல் தூஷண நாமங்களை’ உடையதாக, யெகோவா தேவனுக்கும் கிறிஸ்து இயேசுவுக்கும் மிகுந்த அவமதிப்பைக் காட்டும் உரிமைபாராட்டுதல்களைத் தனக்குச் செய்துகொண்டிருக்கிறது. இது தன் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ளும்படி கடவுளுடைய பெயரையும் கிறிஸ்துவின் பெயரையும் பாசாங்குத்தனமாகப் பயன்படுத்தியிருக்கிறது; மேலும் பொய்மதத்தோடு ஒன்றிணைந்து காரியம் நடப்பித்து, மதகுருமார்களை அதன் அரசியல் நடவடிக்கைகளில் பங்கெடுக்கும்படியுங்கூட அனுமதித்திருக்கிறது. உதாரணமாக, இங்கிலாந்து மாமன்றத்தின் மேன்மக்கள் சபை பிஷப்புகளையும் கொண்டுள்ளது. கத்தோலிக்க மதகுருமார் ஃபிரான்ஸிலும் இத்தாலியிலும் முதன்மையான அரசியல் பதவிகளை வகித்திருக்கின்றனர், மேலும் மிக சமீபத்தில், லத்தீன் அமெரிக்காவில் குருக்கள் அரசியல் அதிகாரப் பொறுப்பை ஏற்றியிருக்கின்றனர். “கடவுளில் நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம்,” போன்ற மத விளம்பர கவர்ச்சி வாசகங்களை அரசாங்கங்கள் தங்கள் வங்கி பணத் தாள்களில் அச்சடிக்கின்றனர், தங்கள் நாணயங்களில் தங்கள் அரசர்களுக்குத் தெய்வீக அங்கீகாரத்தை உரிமைபாராட்டி, உதாரணமாக, இவர்கள் “கடவுளுடைய கிருபையால்” நியமிக்கப்பட்டனரெனக் கூறுகின்றனர். இதெல்லாம் உண்மையில் தேவதூஷணமே, ஏனெனில் இது, கறைப்பட்ட தேசிய அரசியல் செயற்களத்தில், கடவுளை உட்படுத்த முயற்சி செய்கிறது.

12. (அ) இந்த மூர்க்க மிருகம் “சமுத்திரத்திலிருந்து” எழும்பிவருவது எதை அடையாளமாகக் குறித்துக் காட்டுகிறது, அது எப்பொழுது வெளிவரத் தொடங்கினது? (ஆ) இந்த அடையாளக் குறிப்பான மிருகத்துக்கு வலுசர்ப்பம் பெரிய அதிகாரத்தைக் கொடுக்கும் இந்தச் செயல் எதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது?

12 அந்த மூர்க்க மிருகம் “சமுத்திரத்திலிருந்து” எழும்பி வருகிறது, இந்தச் சமுத்திரம் மனித அரசாங்கம் தோன்றி எழும்பும் கொந்தளிக்கும் ஜனத்திரள்களுக்குப் பொருத்தமான அடையாளமாக இருக்கிறது. (ஏசாயா 17:12, 13) இந்த மூர்க்க மிருகம், பூர்வத்தில் நிம்ரோதின் நாட்களில் (ஏறக்குறைய பொ.ச.மு. 21-ம் நூற்றாண்டில்), ஜலப்பிரளயத்துக்கு முன்னால், யெகோவாவுக்கு எதிராகச் செயல்பட்ட ஒரு காரிய ஒழுங்குமுறை, முதன்முதல் தன்னை வெளிப்படுத்தினபோது, கொந்தளித்த மனிதவர்க்க சமுத்திரத்திலிருந்து வெளிவரத் தொடங்கினது. (ஆதியாகமம் 10:8-12; 11:1-9) ஆனால் கர்த்தருடைய நாளின்போதே அதன் ஏழு தலைகளில் கடைசியானது தன்னை முழுமையாய் வெளிப்படுத்தியிருக்கிறது. மேலும், அந்த வலுசர்ப்பமே இந்த மிருகத்துக்குத் “தன் வல்லமையையும் தன் சிங்காசனத்தையும் பெரிய அதிகாரத்தையும் கொடுத்தது” என்பதையும் கவனியுங்கள். (லூக்கா 4:6-ஐ ஒப்பிடுங்கள்.) இந்த மிருகம், மனிதவர்க்க ஜனத்திரள்களுக்குள் உண்டாக்கப்பட்ட சாத்தானின் அரசியல் சிருஷ்டிப்பாகும். சாத்தான் உண்மையாகவே “இந்த உலகத்தின் அதிபதி.”—யோவான் 12:31.

அந்த மரணகாய அடி

13. (அ) கர்த்தரின் நாளின் தொடக்கத்தில் இந்த மூர்க்க மிருகத்தை என்ன பெரும் இடுக்கண் தாக்குகிறது? (ஆ) ஒரு தலை மரணகாய அடிபட்டபோது அந்த முழு மிருகமும் வேதனைப்பட்டது எவ்வாறு?

13 கர்த்தருடைய நாளின் தொடக்கத்தில், இந்த மூர்க்க மிருகத்தைப் பெரும் இடுக்கண் தாக்குகிறது. யோவான் அறிவிக்கிறதாவது: “அதின் தலைகளிலொன்று மரணகாயமான அடிபட்டிருக்கக் கண்டேன். அந்த மரணகாயமோ ஆறிவிட்டது. உலகமுழுதுமே ஆச்சரியத்தோடு அம்மிருகத்தின் பின் சென்றது.” (வெளிப்படுத்துதல் 13:3, தி.மொ.) அந்த மூர்க்க மிருகத்தின் ஒரு தலை மரணகாய அடிபட்டிருந்ததாக இந்த வசனம் சொல்லுகிறது, ஆனால் 12-ம் வசனமோ அந்த முழு மிருகமும் காயப்பட்டிருந்ததுபோல் பேசுகிறது. ஏன் அவ்வாறுள்ளது? இந்த மிருகத்தின் தலைகள் எல்லாம் ஒன்றாக ஆதிக்கம் செலுத்தவில்லை. ஒவ்வொன்றும் அதனதன் வரிசைமுறையில் மனிதவர்க்கத்தின்மீது, முக்கியமாய்க் கடவுளுடைய ஜனங்களின்மீது இறுமாப்பாய் ஆண்டிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 17:10) இவ்வாறு, கர்த்தருடைய நாள் தொடங்குகையில், ஏழாவதான ஒரு தலை மட்டுமே முதன்மையான உலக வல்லரசாக செயல்பட்டுக்கொண்டிருந்தது. அந்தத் தலையில் பட்ட ஒரு மரணகாய அடி அந்த முழு மிருகத்துக்கும் மிகுந்த வேதனையைக் கொண்டுவருகிறது.

14. அந்த மரணகாய அடி எப்பொழுது கொடுக்கப்பட்டது, சாத்தானின் மூர்க்க மிருகத்தின்மீது அதன் பாதிப்பை ஓர் இராணுவ அதிகாரி எவ்வாறு விவரித்தார்?

14 அந்த மரணகாய அடி என்ன? பின்னால், அது பட்டயக்காயம் என அழைக்கப்படுகிறது, பட்டயம் போருக்கு ஓர் அடையாளம். கர்த்தருடைய நாளின் தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட இந்தப் பட்டயக்காயம், சாத்தானின் அரசியல் மூர்க்க மிருகத்தைப் பாழாக்கி, வலிமை இழக்கச் செய்த, முதல் உலக யுத்தம் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும். (வெளிப்படுத்துதல் 6:4, 8; 13:14) அந்தப் போரின்போது இராணுவ அதிகாரியாக இருந்த, நூலாசிரியர் மாரிஸ் ஜெனீவாய், இதைக் குறித்துப் பின்வருமாறு கூறினார்: “மனிதவர்க்கத்தின் முழு சரித்திரத்திலும் ஆகஸ்ட் 2, 1914-ன் முக்கியத்துவம் ஒருசிலவே தேதிகளுக்கே இருந்திருக்கின்றன என்பதை அனைவருமே ஒப்புக்கொள்கின்றனர். முதலில், ஐரோப்பாவும் அதன்பின் வெகுசீக்கிரத்தில் பெரும்பாலும் மனிதவர்க்கம் முழுவதுமே ஒரு பயங்கர நிகழ்ச்சிக்குள் மூழ்கடிக்கப்பட்டிருப்பதாகத் தன்னைக் கண்டது. உடன்படிக்கைகளும், ஒப்பந்தங்களும், ஒழுக்கநெறிச் சட்டங்களும், எல்லா அஸ்திபாரங்களும் அதிர்ச்சியுற்றன; ஒருநாளிலிருந்து மறுநாளாக, எல்லாம் சந்தேகத்துக்குள்ளாயின. அந்த நிகழ்ச்சி இயல்புணர்ச்சியான தீமை முன்னுணர்வையும் நியாயமான எதிர்பார்ப்புகளையும் மிஞ்சிவிடுவதாக இருந்தது. மாபேரளவுடையதாக, பெருங்குழப்பமானதாக, இயல்புமீறிய அளவானதாக, அது தன் தீங்கான பின்விளைவுகளில் இன்னும் நம்மை வலிய இழுத்துத் தாக்குவதாக இருக்கிறது.”—மாரிஸ் ஜெனிவாய், ஃப்ரான்க்காய்ஸ் பல்கலைக்கழக உறுப்பினர், மேன்மைக்குரிய வாக்கு (ஆங்கிலம்) (1968) என்ற புத்தகத்தில் மேற்கோளாகக் குறிப்பிட்டார்.

15. அந்த மூர்க்க மிருகத்தின் ஏழாவது தலை எவ்வாறு அதன் மரணகாய அடியைப் பெற்றது?

15 அந்த மூர்க்க மிருகத்தின் முதன்மையான ஏழாவது தலைக்கு, அந்தப் போர் ஒரு பெரும் நாசகரமான நிகழ்ச்சியாக இருந்தது. மற்ற ஐரோப்பிய தேசங்களோடுகூட, பிரிட்டன், திடுக்கிடச் செய்யும் எண்ணிக்கைகளில் அதன் வாலிபர்களை இழந்தது. 1916-ல் சாம் நதிப் போரான, அந்த ஒரே போரில் மட்டுமே, 4,20,000 பிரிட்டிஷ் போர்ச்சேவகர்கள் மாண்டனர், அவர்களோடுகூட சுமார் 1,94,000 ஃபிரென்ச் மற்றும் 4,40,000 ஜெர்மன் போர்ச்சேவகர்களும் மாண்டனர்—10,00,000-க்கு மேற்பட்ட உயிரிழப்புகள்! பொருளாதார வகையிலும், பிரிட்டன்—ஐரோப்பாவின் மற்றப் பாகங்களோடுகூட—தகர்த்துப்போடப்பட்டது. இந்த மாபெரும் பிரிட்டிஷ் பேரரசு இந்த அடியின்கீழ் தள்ளாடியது, திரும்ப ஒருபோதும் முழுமையாக முன்னிலையை அடையவில்லை. ஆம், முதன்மையான 28 தேசங்கள் கலந்துகொண்ட, அந்தப் போர், நிச்சயமாகவே, இந்த முழு உலகத்தையும் மரணகாய அடிபட்டதுபோல் உருண்டு தள்ளாட வைத்தது. முதல் உலக யுத்தம் உண்டாகி 65 ஆண்டுகளே ஆனபின்பான ஆகஸ்ட் 4, 1979-ல், இங்கிலாந்திலுள்ள லண்டனின் பொருளியில் ஆய்வாளர் (ஆங்கிலம்) என்ற செய்தித்தாள் பின்வருமாறு குறிப்பிட்டது: “1914-ல் இந்த உலகம் ஒரு கூட்டுப்பொருத்தத்தை இழந்தது, அதை அது இதுவரையாகத் திரும்பப்பெற முடியாமற்போய்விட்டது.”

16. முதல் உலக யுத்தத்தின்போது, ஐக்கிய மாகாணங்கள், இரட்டை உலக வல்லரசுவின் பாகமாகத் தன்னை எவ்வாறு காட்டினது?

16 அதேசமயத்தில், அப்பொழுது அது அழைக்கப்பட்டபடி, அந்த மகா போர், ஐக்கிய மாகாணங்கள் ஆங்கில-அமெரிக்க உலக வல்லரசின் பாகமாகத் தெளிவாய் வெளிப்பட்டுத் தோன்றுவதற்கு வழியைத் திறந்தது. அந்தப் போரின் முதல் ஆண்டுகளில், பொது அபிப்பிராயமானது ஐக்கிய மாகாணங்களைப் போருக்குட்படாதபடி தடுத்துவைத்தது. ஆனால் சரித்திராசிரியை எஸ்மி உவிங்ஃபீல்ட்-ஸ்ட்ராட்ஃபோர்ட் எழுதினபடி, “உச்சநிலை நெருக்கடி கட்டத்தின் இந்த மணி நேரத்தில், பிரிட்டனும் ஐக்கிய மாகாணங்களும் [தங்கள்] மேம்பட்ட ஐக்கியத்தையும் பொது பொறுப்பாண்மையையும் கைகூடச்செய்வதில் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கிவைப்பார்களா இல்லையா என்பதே கேள்வியாக இருந்தது.” நிகழ்ச்சிகள் விளைவுற்றபடி அவர்கள் அவ்வாறே செய்தார்கள். தடுமாறிக்கொண்டிருந்த நேசநாடுகளின் போர் முயற்சியை ஆதரித்துத் தாங்க, 1917-ல் ஐக்கிய மாகாணங்கள் தன் பொருளாதாரங்களையும் படைகளையும் அளித்தது. இவ்வாறு, பிரிட்டனும் ஐக்கிய மாகாணங்களும் ஒன்றிணைந்த அந்த ஏழாவது தலை, வெற்றிபெறும் பக்கமாக வெளிவந்தது.

17. போருக்குப்பின் சாத்தானின் பூமிக்குரிய ஒழுங்குமுறைக்கு என்ன நேரிட்டது?

17 அந்தப் போருக்குப் பின் இந்த உலகம் மிகப் பேரளவில் வேறுபட்டது. சாத்தானின் பூமிக்குரிய ஒழுங்குமுறை, மரணகாயத்தால் பாழாக்கப்பட்டபோதிலும், மீண்டும் பிழைத்தெழுந்து முன்னொருபோதும் இராத வகையில் அதிக வல்லமைவாய்ந்ததாயிற்று; இவ்வாறு அதன் இழந்த வலிமையை மீண்டும் பெற அதற்கிருந்த அதன் வல்லமையினிமித்தம் மனிதரின் பாராட்டைப் பெற்றது.

18. பொதுவில் மனிதவர்க்கம் “ஆச்சரியத்தோடு அம்மிருகத்தின் பின் சென்ற”தென எவ்வாறு சொல்லக்கூடும்?

18 சரித்திராசிரியர் சார்ல்ஸ் L. மீ, இளையவர், எழுதுகிறபடி: பழைய ஒழுங்கின் வீழ்ச்சி “[முதல் உலக யுத்தத்தால் உண்டுபண்ணப்பட்டது], சுய-ஆட்சி பரவுவதற்கும், புதிய நாடுகளின் மற்றும் வகுப்புகளின் விடுதலைக்கும், புதிய சுயாதீனத்தின் மற்றும் சுதந்தரத்தின் உரிமையளிப்புக்கும் வழிதிறக்கும் அவசியமான முன் சம்பவமாக இருந்தது.” போருக்குப் பிற்பட்ட இந்தச் சகாப்தத்தின் முன்னேற்றத்துக்கு வழிநடத்துவதாய், மூர்க்க மிருகத்தின் இப்பொழுது சுகமாகியிருந்த, இந்த ஏழாவது தலை, அமெரிக்க ஐக்கிய மாகாணங்களுடன் முதன்மையான ஆதிக்கம் வகிப்பதை நோக்கி முன்னேறியது. இந்தக் கூட்டு உலக வல்லரசு, சர்வதேச சங்கத்தையும் ஐக்கிய நாட்டுச் சங்கத்தையும் சிபாரிசு செய்து நிலைநாட்டுவதில் தலைமை தாங்கியது. ஐ.நா., அரசியல் வல்லரசு 2005-ல், உயர்ந்த வாழ்க்கை தராதரத்தை உண்டுபண்ணுவதிலும், நோயை எதிர்த்து போராடுவதிலும், தொழில்துறை விஞ்ஞானத்தை முன்னேற்றுவிப்பதிலும் அதிக சிலாக்கியம் பெற்ற நாடுகளை வழிநடத்தியிருந்தது. சந்திரனில் 12 ஆட்கள் இறங்க வைப்பதையும் அது சாதித்தது. ஆகையால், பொதுவில் மனிதவர்க்கம் “ஆச்சரியத்தோடு அம்மிருகத்தின் பின் சென்றது” வியப்பாக இல்லை.

19. (அ) எவ்வாறு மனிதவர்க்கம் அந்த மூர்க்க மிருகத்தை வியந்துபாராட்டுவதற்கும் மேலாகச் சென்றுவிட்டது? (ஆ) பூமியின் எல்லா ராஜ்யங்களின்மீதும் விவாதத்துக்கு இடமற்ற அதிகாரத்தை உடையவன் யார், இது நமக்கு எவ்வாறு தெரியும்? (இ) சாத்தான் எவ்வாறு மூர்க்க மிருகத்துக்கு அதிகாரம் கொடுக்கிறான், மக்கள் பெரும்பான்மையரின்பேரில் இது என்ன பாதிப்பைக் கொண்டிருக்கிறது?

19 யோவான் அடுத்தப்படியாகச் சொல்வதன்பிரகாரம், மனிதவர்க்கம் வியந்து பாராட்டுவதற்கு மேலாகவும் சென்றது: “[மூர்க்க, NW] மிருகத்திற்கு அதிகாரத்தைக் கொடுத்ததினிமித்தம் வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். [மூர்க்க, NW] மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடு யுத்தம்பண்ண வல்லவன் யார் என்று சொல்லி [மூர்க்க, NW] மிருகத்தையும் வணங்கினார்கள்.” (வெளிப்படுத்துதல் 13:4, தி.மொ.) இயேசு இங்கே பூமியில் இருந்தபோது, சாத்தான் பூமியின் ராஜ்யங்கள் முழுவதன்மீதும் தனக்கு அதிகாரம் இருப்பதாக உரிமைபாராட்டினான். இயேசு இதை மறுத்து விவாதிக்கவில்லை; உண்மையில், அவர்தாமே சாத்தானை இந்த உலகத்தின் அதிபதியெனக் குறிப்பிட்டுக் கூறினார், அந்நாளின் அரசியலில் பங்குகொள்ளவும் மறுத்துவிட்டார். பின்னால் உண்மையான கிறிஸ்தவர்களைக் குறித்து யோவான் பின்வருமாறு எழுதினார்: “நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம்.” (1 யோவான் 5:19; லூக்கா 4:5-8; யோவான் 6:15; 14:30) சாத்தான் அந்த மூர்க்க மிருகத்துக்கு அதிகாரம் கொடுக்கிறான், இதை அவன் தேசிய ஆதாரத்தின்பேரில் செய்கிறான். இவ்வாறு, தெய்வீக அன்பின் கட்டுகளால் ஒற்றுமைப்பட்டிருப்பதற்குப் பதிலாக, கோத்திரம், ஜாதி மற்றும் தேசிய பெருமையால் மனிதவர்க்கம் பிரிந்துள்ளதாயிற்று. மக்கள் பெரும்பான்மையர், தாங்கள் வாழ நேரிட்ட அந்த நாட்டில் அதிகாரத்தைக் கொண்டுள்ள மூர்க்க மிருகத்தின் அந்தப் பாகத்தை உண்மையில் வணங்குகின்றனர். இவ்வாறு அந்த முழு மிருகமும் பாராட்டுதலையும் வணக்கத்தையும் பெறுகிறது.

20. (அ) என்ன கருத்தில் ஜனங்கள் இந்த மூர்க்க மிருகத்தை வணங்குகின்றனர்? (ஆ) யெகோவா தேவனை வணங்கும் கிறிஸ்தவர்கள் ஏன் மூர்க்க மிருகத்தை வணங்கும் அத்தகைய வணக்கத்தில் பங்குகொள்கிறதில்லை, யாருடைய முன்மாதிரியை அவர்கள் பின்பற்றுகிறார்கள்?

20 எந்தக் கருத்தில் வணங்குகின்றனர்? நாட்டை நேசிப்பதை யெகோவாவை நேசிப்பதற்கும் மேலாக வைக்கும் அந்தக் கருத்தில் ஆகும். மக்கள் பெரும்பான்மையர் தங்கள் பிறப்பிடமான அந்த நாட்டை நேசிக்கின்றனர். நல்ல பிரஜைகளாக, உண்மையான கிறிஸ்தவர்களுங்கூட தாங்கள் குடியிருக்கும் அந்த நாட்டின் ஆட்சியாளர்களையும் சின்னங்களையும் மதிக்கின்றனர், சட்டங்களுக்குக் கீழ்ப்படிகின்றனர், தங்கள் சமுதாயத்தின் மற்றும் தங்கள் அயலாரின் நலனுக்கேதுவான நன்மைகளைச் செய்கின்றனர். (ரோமர் 13:1-7; 1 பேதுரு 2:13-17) எனினும், அவர்கள், மற்ற எல்லா நாடுகளுக்கும் எதிராக ஒரு நாட்டுக்குக் குருட்டுப்பக்தியைக் கொடுக்க முடியாது. “சரியாயினும் தவறாயினும், நம்முடைய நாடு” என்பது கிறிஸ்தவ போதகமல்ல. ஆகையால் யெகோவா தேவனை வணங்கும் கிறிஸ்தவர்கள், இந்த மூர்க்க மிருகத்தின் எந்தப் பாகத்துக்கும் பெருமையான நாட்டுப்பற்று வணக்கத்தைக் கொடுப்பதில் பங்குகொள்ள முடியாது, ஏனெனில் இது—அந்த மிருகத்தின் அதிகாரத்திற்கு மூலகாரணனாகிய—வலுசர்ப்பத்தை வணங்குவதற்கு ஈடாகும். அவர்கள் ஆர்வப்பாராட்டுதலுடன்: “[மூர்க்க, NW] மிருகத்துக்கு ஒப்பானவன் யார்?” என்று கேட்க முடியாது. அதற்கு மாறாக, “கடவுளைப் போன்றவர் யார்?” எனப் பொருள்கொண்ட பெயரையுடைய—மிகாவேலின் முன்மாதிரியைப் பின்பற்றி, யெகோவாவின் சர்வலோக அரசாட்சியை உயர்த்திப் பிடிக்கின்றனர். கடவுள் குறித்திருக்கும் காலத்தில், இந்த மிகாவேலாகிய கிறிஸ்து இயேசு, பரலோகத்திலிருந்து சாத்தானை வெளித்தள்ளுவதில் தாம் வெற்றிப் பெற்றதுபோலவே, இந்த மூர்க்க மிருகத்துக்கு எதிராகப் போர்செய்து வெற்றிப்பெறுவார்.—வெளிப்படுத்துதல் 12:7-9; 19:11; 19-21.

பரிசுத்தவான்களுக்கு எதிராகப் போர்செய்தல்

21. சாத்தான் இந்த மூர்க்க மிருகத்தைச் சூழ்ச்சித்திறமையுடன் பயன்படுத்திக்கொள்வதை யோவான் எவ்வாறு விவரிக்கிறார்?

21 தந்திரமுள்ள சாத்தான் தன் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு அந்த மூர்க்க மிருகத்தைச் சூழ்ச்சித்திறமையுடன் பயன்படுத்திக்கொள்ள திட்டங்கள் வைத்திருந்தான். யோவான் இதைப் பின்வருமாறு விளக்குகிறார்: “பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் [ஏழு தலையுள்ள மிருகத்துக்குக்] கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதமளவும் செயல்புரிய அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது. அது கடவுளுக்கு விரோதமாய்த் தூஷணங்களைச் சொல்லவும் அவர் நாமத்தையும் அவர் கூடாரத்தையும், அதாவது, பரலோகக் கூடாரத்திலிருக்கிறவர்களையும், தூஷிக்கவும் தன் வாயைத் திறந்தது. மேலும், பரிசுத்தவான்களோடு யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்க இடம்பெற்றதுமல்லாமல் சகல கோத்திரங்கள் ஜனங்கள் பாஷைக்காரர் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது. பூமியில் குடியிருக்கிறவர்கள் யாவரும், உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராதவர்கள் எவர்களோ அவர்களே அதை வணங்குவார்கள்.”—வெளிப்படுத்துதல் 13:5-8, தி.மொ.

22. (அ) அந்த 42 மாதங்கள் என்ன காலப்பகுதியைக் குறிப்பிடுகின்றன? (ஆ) அந்த 42 மாதங்களின்போது, அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் எவ்வாறு ‘ஜெயித்துக்’ கைப்பற்றப்பட்டனர்?

22 இங்கே குறிப்பிடப்பட்ட 42 மாதங்கள், தானியேலின் தீர்க்கதரிசனத்தில் கண்ட அந்த மிருகங்களில் ஒன்றிலிருந்து எழும்பின கொம்பு பரிசுத்தவான்களைத் தொல்லைப்படுத்தின மூன்றரை ஆண்டுகளான அதேகாலமெனத் தோன்றுகிறது. (தானியேல் 7:23-25; வெளிப்படுத்துதல் 11:1-4-ஐயும் பாருங்கள்.) இவ்வாறு, 1914-ன் முடிவிலிருந்து 1918 வரையில், போரிட்டுக்கொண்டிருந்த தேசங்கள் சொல்லர்த்தமாகவே மூர்க்க மிருகங்களைப்போல் ஒருவரையொருவர் பிய்த்தழித்துக்கொண்டிருக்கையில், அந்தத் தேசங்களின் குடிமக்கள் அந்த மூர்க்க மிருகத்தை வணங்கும்படியும், தேசாபிமான மதத்தில் ஈடுபடும்படியும், தங்கள் நாட்டுக்காக மரிக்கவுங்கூட தயாராக இருக்கவும் வற்புறுத்தப்பட்டனர். இத்தகைய வற்புறுத்தல், அபிஷேகம் செய்யப்பட்ட பலரின் காரியத்தில் கடுமையாய்த் துன்பப்படுவதற்கு வழிநடத்தினது, இவர்கள் தங்கள் முதன்மையான கீழ்ப்படிதல் யெகோவா தேவனுக்கும் அவருடைய குமாரனாகிய, கிறிஸ்து இயேசுவுக்குமே உரியதென உணர்ந்தார்கள். (அப்போஸ்தலர் 5:29) ஜூன் 1918-ல், இவர்களை ‘ஜெயிக்கப்பட்ட’போது, இவர்களுடைய இக்கட்டுகள் உச்சநிலையை அடைந்தன. ஐக்கிய மாகாணங்களில், உவாட்ச் டவர் சொஸையிட்டியின் முக்கிய தலைமை பொறுப்பாளர்களும் மற்ற பிரதிநிதிகளும் தவறாகச் சிறைப்படுத்தப்பட்டனர், அவர்களுடைய கிறிஸ்தவ சகோதரரின் ஒழுங்குபடுத்தப்பட்ட பிரசங்கவேலை பேரளவாய்த் தடைசெய்யப்பட்டது. “சகல கோத்திரங்கள் ஜனங்கள் பாஷைக்காரர் ஜாதிகள்மேலும்” அதிகாரத்தையுடையதாய், அந்த மூர்க்க மிருகம், உலகமெங்கும் செய்யப்பட்ட கடவுளுடைய வேலையைத் தாக்கிக் கட்டுப்படுத்தியது.

23. (அ) ‘ஆட்டுக்குட்டியின் ஜீவபுஸ்தகம்’ என்பது என்ன, 1918 முதற்கொண்டு எது முடிந்து தீர்வதை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது? (ஆ) ‘பரிசுத்தவான்களின்’மீது சாத்தானின் அமைப்பு வெற்றிப்பெற்றதுபோல் தோன்றின எதுவும் ஏன் வெறுமையானதாகவே இருந்தது?

23 இது சாத்தானுக்கும் அவனுடைய அமைப்புக்கும் வெற்றி என்பதுபோல் தோன்றினது. ஆனால் இது அவர்களுக்கு நீடித்தக் கால நன்மைகளைக் கொண்டுவர முடியாது, ஏனெனில் சாத்தானின் காணக்கூடிய அமைப்பிலிருந்த ஒருவரின் பெயரும் “ஆட்டுக்குட்டியின் ஜீவபுஸ்தகத்தில்” எழுதப்பட்டில்லை. அடையாளக் குறிப்பாய், இந்தப் புஸ்தகம் இயேசுவுடன் அவருடைய பரலோக ராஜ்யத்தில் ஆளப்போகிறவர்களின் பெயர்கள் அடங்கியதாக உள்ளது. அந்த முதல் பெயர்கள் பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளன்று அதில் எழுதப்பட்டன. அதுமுதற்கொண்டு தொடர்ந்துவந்த ஆண்டுகளில் மேலும் மேலும் அதிகமான பெயர்கள் கூட்டப்பட்டன. 1918-ம் ஆண்டிலிருந்து, 1,44,000 ராஜ்ய சுதந்தரவாளிகள் முத்திரையிடப்படுவது முடிந்து தீர்வதை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது. சீக்கிரத்தில் அவர்களுடைய எல்லா பெயர்களும் அழிக்கப்பட முடியாமல் ஆட்டுக்குட்டியின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கும். மூர்க்க மிருகத்தை வணங்கும் எதிரிகளைக் குறித்ததில், அவர்களில் ஒருவருடைய பெயரும் இந்தப் புத்தகத்தில் எழுதப்படாது. ஆகையால் இந்தப் ‘பரிசுத்தவான்கள்’மீது இவர்களுக்கு உண்டான வெற்றிபெற்றதுபோல் தோன்றும் எதுவும் வெறுமையானதும் தற்காலிகமானதுமே.

24. எதைக் கேட்கும்படி பகுத்துணர்வுடையோரை யோவான் அழைக்கிறார், கேட்கப்பட்ட வார்த்தைகள் கடவுளுடைய ஜனங்களுக்கு எதைக் குறிக்கின்றன?

24 வெகு கவனமாய்ச் செவிகொடுத்துக் கேட்கும்படி பகுத்துணர்வுடையோரை யோவான் இப்பொழுது அழைக்கிறார்: “ஒருவனுக்குக் காதிருந்தால் அவன் கேட்கக்கடவன்.” பின்பு அவர் தொடர்ந்து சொல்லுகிறார்: “ஒருவன் சிறையிருப்புக்குரியவனானால் சிறைப்பட்டே போவான்; ஒருவன் பட்டயத்தினால் கொல்லுவானானால் அவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களின் சகிப்பும் விசுவாசமும் இதிலேதான்.” (வெளிப்படுத்துதல் 13:9, 10, தி.மொ.) உண்மையற்ற எருசலேம் நகரத்துக்கு யெகோவாவின் ஆக்கினைத்தீர்ப்பு மாற்றப்படாதென்று காட்டுவதற்கு பொ.ச.மு. 607-க்கு முந்தின ஆண்டுகளில், இவற்றைப்போன்ற வார்த்தைகளை எரேமியா எழுதினார். (எரேமியா 15:2; எரேமியா 43:11-ஐயும் சகரியா 11:9-ஐயும் பாருங்கள்.) இயேசு, தம்மைப் பின்பற்றினவர்கள் இணங்கி விட்டுக்கொடுத்துவிடக்கூடாதென்பதைத் தம்முடைய பெரும் இக்கட்டான சமயத்தில் பின்வருமாறு கூறினபோது தெளிவாகக் காட்டினார்: “பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்துபோவார்கள்.” (மத்தேயு 26:52) அவ்வாறே, இப்பொழுது கர்த்தருடைய நாளில் கடவுளுடைய ஜனங்கள் பைபிள் நியமங்களை உறுதியாய்க் கடைப்பிடிக்க வேண்டும். மூர்க்க மிருகத்தை வணங்குகிற மனந்திரும்பாதவர்களுக்குக் கடைசியாகத் தப்பிப் பிழைத்தல் இராது. எதிர்காலத்தில் வரவிருக்கும் துன்புறுத்தல்களையும் இக்கட்டுகளையும் தப்பிப் பிழைத்திருப்பதற்கு, நம்மெல்லாருக்கும் சகிப்புத்தன்மையும், அதோடுகூட அசைக்கமுடியாத விசுவாசமும் தேவையாயிருக்கும்.—எபிரெயர் 10:36-39; 11:6.

இரண்டு கொம்புகளுள்ள மூர்க்க மிருகம்

25. (அ) உலகக் காட்சிக்குள் வருகிற அடையாளக் குறிப்பான மற்றொரு மூர்க்க மிருகத்தை யோவான் எவ்வாறு விவரிக்கிறார்? (ஆ) இந்தப் புதிய மூர்க்க மிருகத்தின் இரண்டு கொம்புகளும், அது பூமியிலிருந்து வெளிவருவதும் குறிப்பிடுவது என்ன?

25 ஆனால் இப்பொழுது மற்றொரு மூர்க்க மிருகம் உலகக் காட்சிக்குள் வருகிறது. யோவான் அறிவிப்பதாவது: “பின்பு, வேறொரு [மூர்க்க, NW] மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது. அது முந்தின [மூர்க்க, NW] மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச் சொஸ்தமடைந்த முந்தின [மூர்க்க, NW] மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது. அன்றியும், அது மனுஷருக்குமுன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்[தது].” (வெளிப்படுத்துதல் 13:11-13) இந்த மூர்க்க மிருகத்துக்கு இரண்டு கொம்புகள் இருக்கின்றன, இது இரண்டு அரசியல் வல்லரசுகளின் கூட்டிணைவைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. இது சமுத்திரத்திலிருந்து அல்ல, பூமியிலிருந்து வெளிவருவதாக விவரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, இது சாத்தானின் ஏற்கெனவே ஸ்தாபிக்கப்பட்ட பூமிக்குரிய காரிய ஒழுங்குமுறையிலிருந்து வெளிவருகிறது. இது, கர்த்தருடைய நாளின்போது குறிப்பிடத்தக்கப் பாகத்தை வகிக்கிற, ஏற்கெனவே இருக்கும் ஓர் உலக வல்லரசாக இருக்க வேண்டும்.

26. (அ) இரண்டு கொம்புகளையுடைய அந்த மூர்க்க மிருகம் என்ன, அந்த முதல் மூர்க்க மிருகத்தோடு அது எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது? (ஆ) எந்தக் கருத்தில் இந்த இரண்டு கொம்புகளையுடைய மிருகத்தின் கொம்புகள் ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இருக்கின்றன, அது பேசுகையில் எவ்வாறு “வலுசர்ப்பத்தைப்போல” இருக்கிறது? (இ) தேசாபிமானமுள்ள ஜனங்கள் எதை உண்மையில் வணங்குகிறார்கள், தேசாபிமானம் எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது? (அடிக்குறிப்பைப் பார்க்கவும்.)

26 இது என்னவாக இருக்கலாம்? இது ஆங்கில-அமெரிக்க உலக வல்லரசு—முதல் மூர்க்க மிருகத்தின் ஏழாவது தலையைப்போன்றதே, ஆனால் ஒரு விசேஷித்த பாகம் வகிக்கும் நிலையிலுள்ளது! தரிசனத்தில் இதை ஒரு தனி மூர்க்க மிருகமாகப் பிரித்துக் காட்டுவது, உலக மேடையில் இது தனித்தியங்கி எவ்வாறு செயல்படுகிறதென்பதை மேலும் தெளிவாகக் காண நமக்கு உதவிசெய்கிறது. இரண்டு கொம்புகளையுடைய இந்த அடையாளக் குறிப்பான மூர்க்க மிருகம், ஒரேசமயத்தில் வாழ்பவையும், தனித்தியங்குபவையும், ஆனால் ஒத்துழைப்பவையுமான இரண்டு அரசியல் வல்லரசுகளால் ஆகியது. “ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக”வுள்ள அதன் இரண்டு கொம்புகள், உலகம் முழுவதும் அதனிடம் திரும்பவேண்டிய சாந்தமும் தீங்குசெய்யாததும், அறிவொளியூட்டப்பட்ட வகையான அரசாங்கத்தைக் கொண்டிருப்பதுமாகத் தன்னைத் தோன்றச் செய்கிறதெனத் தெரிகிறது. ஆனால், அதன் ஆட்சிமுறை ஏற்கப்படாத இடங்களில் அது வற்புறுத்தலையும் பயமுறுத்தல்களையும் நேரடியான வன்முறையையுங்கூட பயன்படுத்துவதில் “வலுசர்ப்பத்தைப்போலப்” பேசுகிறது. கடவுளுடைய ஆட்டுக்குட்டியானவரின் அதிகாரத்திலுள்ள கடவுளுடைய ராஜ்யத்துக்குக் கீழ்ப்படிவதை அல்ல, ஆனால் அதற்கு மாறாக, அந்தப் பெரிய வலுசர்ப்பமாகிய சாத்தானின் அக்கறைகளுக்கே கீழ்ப்படியும்படி ஊக்குவிக்கிறது. முதல் மூர்க்க மிருகத்தை வணங்குவதோடு மேலும் கூட்டும் தேசிய பிரிவினைகளையும் பகைமைகளையும் அது முன்னேற்றுவித்திருக்கிறது. c

27. (அ) இரண்டு கொம்புகளையுடைய இந்த மூர்க்க மிருகம் வானத்திலிருந்து அக்கினியை வரச் செய்யும் இந்தக் காரியத்தால் அதன் என்ன மனப்பான்மை குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது? (ஆ) இந்த இரண்டு கொம்புகளையுடைய மூர்க்க மிருகத்தின் தற்கால இணையைப் பலர் எவ்வாறு கருதுகின்றனர்?

27 இந்த இரண்டு-கொம்புகளையுடைய மூர்க்க மிருகம் பெரும் அடையாளங்களை நடப்பிக்கிறது, வானத்திலிருந்து அக்கினி கீழிறங்கி வரும்படியும் செய்கிறது. (மத்தேயு 7:21-23-ஐ ஒப்பிடுங்கள்.) இந்தப் பிற்பட்ட அடையாளம், பாகாலின் தீர்க்கதரிசிகளோடு ஒரு போராட்டத்தில் ஈடுபட்ட, கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய, எலியாவை நமக்கு நினைப்பூட்டுகிறது. அவர் யெகோவாவின் பெயரில் கூப்பிட்டு, வெற்றிகரமாய், வானத்திலிருந்து அக்கினி கீழிறங்கும்படி செய்தபோது, அவரே உண்மையான தீர்க்கதரிசி, பாகாலின் தீர்க்கதரிசிகள் பொய்யரென அது சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபித்தது. (1 இராஜாக்கள் 18:21-40) அந்தப் பாகால் தீர்க்கதரிசிகளைப்போல், இந்த இரண்டு கொம்புகளையுடைய மூர்க்க மிருகம் ஒரு தீர்க்கதரிசியாகத் தனக்குப் போதிய ஆதாரச் சான்றுகள் இருக்கின்றனவென உணருகிறது. (வெளிப்படுத்துதல் 13:14, 15; 19:20) இரண்டு உலக யுத்தங்களில் தீயப் படைகளை வென்றடக்கியதாகவும் கடவுள்பற்றில்லை என சொல்லிக்கொள்கிற கம்யூனிஸத்தின்மீது வெற்றிசிறந்ததாகவும் இது உரிமைபாராட்டுகிறது! இந்த இரண்டு கொம்புகளையுடைய மூர்க்க மிருகத்தின் தற்கால இணையை விடுதலைக் காப்பவனாகவும் பொருளியலான நல்ல காரியங்களுக்கு ஊற்றுமூலமாகவும் பலர் நிச்சயமாகவே கருதுகின்றனர்.

மூர்க்க மிருகத்தின் சொரூபம்

28. இந்த இரண்டு கொம்புகளையுடைய மூர்க்க மிருகம், ஆட்டுக்குட்டியினுடையதைப்போன்ற அதன் கொம்புகள் காட்டக்கூடியபடி அவ்வளவு தீங்கற்றதாக இல்லையென யோவான் எவ்வாறு காட்டுகிறார்?

28 ஆட்டுக்குட்டியினுடையதைப் போன்ற அதன் கொம்புகள் குறிப்பிடக்கூடியபடி, இந்த இரண்டு கொம்புகளையுடைய மூர்க்க மிருகம் அவ்வளவு தீங்கற்றதாக இருக்கிறதா? யோவான் மேலும் தொடர்ந்து சொல்வதாவது: “பட்டயத்தினால் காயப்பட்டும் பிழைத்திருந்த மிருகத்திற்கு ஒப்பான ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியில் குடியிருக்கிறவர்களுக்குச் சொல்லி [மூர்க்க, NW] மிருகத்தின்முன் செய்யும்படி தனக்கு அளிக்கப்பட்ட அடையாளங்களைக்கொண்டு பூமியில் குடியிருக்கிறவர்களை வஞ்சிக்கிறது. [அந்த மூர்க்க, NW] மிருகத்தின் சொரூபத்திற்கு உயிர்கொடுக்கும்படி அதற்கு அளிக்கப்பட்டது. அதினால் [அந்த மூர்க்க, NW] மிருகத்தின் சொரூபம் பேசவும் [மூர்க்க, NW] மிருகத்தின் சொரூபத்தை வணங்காத எவரையுங் கொல்லும்படி செய்யவுமாயிற்று.”—வெளிப்படுத்துதல் 13:14, 15, தி.மொ.

29. (அ) அந்த மூர்க்க மிருகத்தினுடைய சொரூபத்தின் நோக்கம் என்ன, இந்தச் சொரூபம் எப்பொழுது உருவாக்கி அமைக்கப்பட்டது? (ஆ) அந்த மூர்க்க மிருகத்தின் சொரூபம் ஏன் உயிரற்றச் சிலை அல்ல?

29 இந்த மூர்க்க ‘மிருகத்தின் சொரூபம்’ என்ன, அதன் நோக்கம் என்ன? தான் அதன் சொரூபமாயிருக்கிற அந்த ஏழு தலைகளையுடைய மூர்க்க மிருகத்தை வணங்குவதை முன்னேற்றுவித்து, இவ்வாறு, உண்மையில், அந்த மூர்க்க மிருகத்தின் வாழ்க்கையை நீடிக்கச் செய்வதே அந்த நோக்கமாகும். அந்த ஏழு தலைகளையுடைய மூர்க்க மிருகம் அதன் பட்டயக் காயத்திலிருந்து சுகமடைந்து பிழைத்தப் பின்பே, அதாவது முதல் உலக யுத்தத்தின் முடிவுக்குப் பின்பே, இந்தச் சொரூபம் உருவாக்கி அமைக்கப்பட்டிருக்கிறது. இது, நேபுகாத்நேச்சார் தூரா சமபூமியிலே நிறுத்தினதைப்போன்ற, உயிரற்ற சிலையல்ல. (தானியேல் 3:1) இந்தச் சொரூபம் உயிர் வாழ்ந்து உலக சரித்திரத்தில் ஒரு பாகம் வகிக்கும்படி அந்த இரண்டு கொம்புகளையுடைய மூர்க்க மிருகம் இந்தச் சொரூபத்துக்கு உயிர் கொடுக்கிறது.

30, 31. (அ) இந்தச் சொரூபம் என்னவாக இருப்பதாய்ச் சரித்திர நிகழ்ச்சிகள் அடையாளங்காட்டுகின்றன? (ஆ) இந்தச் சொரூபத்தை வணங்க மறுத்ததற்காக எவராவது கொல்லப்பட்டனரா? விளக்குங்கள்.

30 சரித்திரத்தின் இந்த நிறைவேற்றம் இந்தச் சொரூபத்தை, பிரிட்டனாலும் ஐக்கிய மாகாணங்களாலும் முன்மொழியப்பட்டு முன்னேற்றுவிக்கப்பட்டு, ஆதரிக்கப்பட்ட அமைப்பெனவும், தொடக்கத்தில் சர்வதேச சங்கம் என அறியப்பட்டதெனவும் அடையாளங்காட்டுகிறது. பின்னால், வெளிப்படுத்துதல் 17-ம் அதிகாரத்தில், இது, உயிருள்ள, சுவாசிக்கும் சிவப்பு நிறமுள்ள தனித்தியங்கும் மூர்க்க மிருகமாக வேறுபட்ட சின்னத்தின்கீழ் தோன்றும். தானே மனிதவர்க்கத்துக்குச் சமாதானமும் பாதுகாப்பும் கொண்டுவரக்கூடிய ஒரேவொரு ஏதுவென அகந்தையான உரிமைபாராட்டுதல்களைச் செய்வதில் இந்தச் சர்வதேசக் குழு ‘பேசுகிறது.’ ஆனால் உண்மையில் அது, அதன் உறுப்பினராயுள்ள தேசங்கள் வீராவேச வசைப் பேச்சுகளையும் நிந்தைமொழிகளையும் பரிமாற்றம் செய்துகொள்வதற்கான பொதுவிடமாகிவிட்டிருக்கிறது. அதன் அதிகாரத்துக்குப் பணியாத எந்தத் தேசத்தையும் அல்லது ஜனத்தையும், சமுதாயத்திலிருந்து ஒதுக்கிவைப்பதாக அல்லது நடைப்பிணமாக்குவதாக அது பயமுறுத்தியிருக்கிறது. அதன் கருத்துப்பாங்குகளுக்கு ஒத்துப்போகாதத் தேசங்களை சர்வதேச சங்கம் உண்மையிலேயே வெளியேற்றிவிட்டது. மிகுந்த உபத்திரவத்தின் தொடக்கத்தில், மூர்க்க மிருகத்தினுடைய இந்தச் சொரூபத்தின் இராணுவக் ‘கொம்புகள்’ பாழாக்கும் ஒரு பாகத்தை நிறைவேற்றும்.—வெளிப்படுத்துதல் 7:14; 17:8, 16.

31 இரண்டாம் உலக யுத்தம் முதற்கொண்டு, மூர்க்க மிருகத்தின் இந்தச் சொரூபம்—இப்பொழுது ஐக்கிய நாட்டுச் சங்கமாக வெளிப்பட்டிருப்பது—சொல்லர்த்தமான முறையில் ஏற்கெனவே கொன்றிருக்கிறது. உதாரணமாக, 1950-ல் ஐநா படை ஒன்று, வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்குமிடையில் உண்டான போரில் பங்குகொண்டது. இந்த ஐநா படை, தென் கொரியர்களோடுசேர்ந்து, வட கொரியர்களும் சீன மக்களுமான 14,20,000 ஆட்களைக் கொன்றதாக மதிப்பிடப்பட்டது. அவ்வாறே, 1960-லிருந்து 1964 வரை, ஐக்கிய நாட்டு சேனைகள் காங்கோவில் (கின்ஷாசாவில்) செயல்பட்டன. மேலும், போப் பால் VI மற்றும் போப் ஜான் பால் II உட்பட, உலகத் தலைவர்கள், இந்தச் சொரூபமே சமாதானத்துக்கான மனிதனின் கடைசியும் மிகச் சிறந்ததுமான நம்பிக்கையெனத் தொடர்ந்து உறுதிக்கூறிக்கொண்டிருக்கின்றனர். மனிதவர்க்கம் அதைச் சேவிக்கத் தவறினால், மனித குலம் தன்னைத்தானே அழித்துக்கொள்ளுமென அவர்கள் வற்புறுத்திக் கூறுகின்றனர். இவ்வாறு அவர்கள் அந்தச் சொரூபத்தோடு உடன்பட்டுச் சென்று அதை வணங்க மறுக்கும் மனிதர் யாவரும் அடையாளக் குறிப்பாய்க் கொல்லப்படும்படி செய்கின்றனர்.—உபாகமம் 5:8, 9.

இந்த மூர்க்க மிருகத்தின் முத்திரை

32. சாத்தான், கடவுளுடைய ஸ்திரீயின் வித்தின் மீதிபேருக்குத் துன்பத்தை உண்டாக்கும்படி, தன் காணக்கூடிய அரசியல் பகுதிகளைப் பயன்படுத்துவதை யோவான் எவ்வாறு விவரிக்கிறார்?

32 கடவுளுடைய ஸ்திரீயின் வித்தின் மீதிபேருக்கு உச்ச அளவான துன்பத்தை உண்டாக்கும்படி சாத்தான் தன் காணக்கூடிய அமைப்பின் அரசியல் பகுதிகளை எவ்வாறு சூழ்ச்சியாக கையாண்டிருக்கிறான் என்பதை யோவான் இப்பொழுது காண்கிறார். (ஆதியாகமம் 3:15) அந்த மூர்க்க ‘மிருகத்தைத்’தானே விவரிப்பதற்கு அவர் திரும்புகிறார்: “அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த [மூர்க்க, NW] மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங்கூடாதபடிக்கும் செய்தது. இதிலே ஞானம் விளங்கும்; அந்த [மூர்க்க, NW] மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப் பார்க்கக்கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.”—வெளிப்படுத்துதல் 13:16-18.

33. (அ) அந்த மூர்க்க மிருகத்தின் பெயர் என்ன? (ஆ) இலக்கம் ஆறு, எதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது? விளக்குங்கள்.

33 இந்த மூர்க்க மிருகத்துக்கு ஒரு பெயர் உள்ளது, இந்தப் பெயர் ஓர் இலக்கம்: 666. ஓர் இலக்கமாக, ஆறு, யெகோவாவின் சத்துருக்களோடு சம்பந்தப்பட்டுள்ளது. ரெப்பாவியரில் ஒருவனான ஒரு பெலிஸ்தன் “வளர்ந்துயர்ந்த”வனாக இருந்தான், “அவனுக்கு அவ்வாறு விரல்களாக இருபத்துநாலு விரல்கள் இருந்தன.” (1 நாளாகமம் 20:6, தி.மொ.) அரசன் நேபுகாத்நேச்சார், தன்னுடைய அரசியல் அதிகாரிகளை ஒரே வணக்கத்தில் ஒன்றுபட செய்வதற்கு, 6 முழங்கள் அகலமும் 60 முழங்கள் உயரமுமான ஒரு பொற்சிலையை நிறுத்தினான். அந்தப் பொற்சிலையை வணங்க கடவுளுடைய ஊழியர்கள் மறுத்துவிட்டபோது, அவர்களை எரியும் அக்கினிச் சூளைக்குள் போடும்படி செய்வித்தான். (தானியேல் 3:1-23, தி.மொ.) இந்த இலக்கம் ஆறு, கடவுளுடைய நோக்குநிலையில் பூரணத்தைக் குறித்து நிற்கும் ஏழுக்குக் குறைவுபடுகிறது. ஆகையால், மும்மடங்கான ஆறு முழுமொத்தமான அபூரணத்தைக் குறித்துக் காட்டுகிறது.

34. (அ) அந்த மூர்க்க மிருகத்தின் இலக்கம் “மனுஷனுடைய இலக்கமாயிருக்கிற” இந்த உண்மை எதைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது? (ஆ) சாத்தானின் உலக அரசியல் ஒழுங்குமுறைக்கு 666 ஏன் பொருத்தமான பெயராயுள்ளது?

34 ஒரு பெயர் ஓர் ஆளை அடையாளங்காட்டுகிறது. ஆகவே, இந்த இலக்கம் அந்த மிருகத்தை எவ்வாறு அடையாளங்காட்டுகிறது? அது ஓர் ஆவி ஆளின் இலக்கமென்றல்ல, “மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது” என்றே யோவான் சொல்லுகிறார். ஆகையால் அந்த மூர்க்க மிருகம் பூமிக்குரியதாக, மனித அரசாங்கத்தை அடையாளமாகக் குறித்துக் காட்டுகிறதென்று உறுதிப்படுத்திக்கொள்ள அந்தப் பெயர் உதவிசெய்கிறது. ஆறு ஏழுக்குக் குறைவுபடுவதைப்போல், 666—மூன்றாவது நிலையளவை எட்டும் ஆறு—கடவுளுடைய பரிபூரண தராதரத்தை எட்ட அவ்வளவு படுமோசமாய்த் தவறும் இந்த உலகத்தின் மாபெரும் அரசியல் ஒழுங்குமுறைக்குப் பொருத்தமான பெயராக உள்ளது. இந்த உலகத்தின் அரசியல் மூர்க்க மிருகம் 666 என்ற இலக்கப் பெயரின்கீழ் உச்ச உயர்நிலையில் ஆளுகிறது, அதேசமயத்தில் பெரிய அரசியல்கள், பெரிய மதம் மற்றும் பெரிய வியாபாரங்கள் இந்த மூர்க்க மிருகத்தை, மனிதவர்க்கத்தை ஒடுக்கும் மற்றும் கடவுளுடைய ஜனங்களைத் துன்புறுத்தும் ஒன்றாகச் செயற்படும்படி வைத்து வருகின்றன.

35. நெற்றியில் அல்லது வலதுகையில் இந்த மூர்க்க மிருகத்தின் பெயரைக் கொண்ட முத்திரையைப் பெறுவது குறிப்பதென்ன?

35 நெற்றியில் அல்லது வலது கையில் இந்த மூர்க்க மிருகத்தின் பெயரைக் கொண்ட முத்திரையைப் பெறுவது குறிப்பதென்ன? யெகோவா இஸ்ரவேலுக்கு நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தபோது, அவர்களுக்குப் பின்வருமாறு கூறினார்: “நான் உங்களுக்குச் சொல்லுகிற இவ்வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து வைக்கவேண்டும்; அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்ளுங்கள்; அவைகள் உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாய் இருக்கவேண்டும்.” (உபாகமம் 11:18, தி.மொ.) அந்த நியாயப்பிரமாணம் தங்கள் எல்லா செயல்களையும் சிந்தனைகளையும் பாதிக்கும்படி அதை இஸ்ரவேலர் தங்கள் முன் இடைவிடாமல் வைத்துவரவேண்டியதென்று இது குறித்தது. அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களான 1,44,000 பேர், பிதாவின் பெயரையும் இயேசுவின் பெயரையும் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டவர்களாகச் சொல்லப்படுகிறது. இது அவர்களை யெகோவா தேவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் உரியவர்களென அடையாளங்காட்டுகிறது. (வெளிப்படுத்துதல் 14:1) இதைப்போலவே, சாத்தான் அந்த மூர்க்க மிருகத்தின் பேய்த்தன முத்திரையைப் பயன்படுத்துகிறான். கொள்வதும் விற்பதும் போன்ற அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடும் எவரும் அந்த மூர்க்க மிருகம் செய்கிற முறையில், உதாரணமாக, பரிசுத்த நாட்கள் கொண்டாடுதல் போன்றவற்றைச் செய்யும்படி வற்புறுத்தப்படுகின்றனர். அந்த மூர்க்க மிருகத்தின் முத்திரையைப் பெறும்படி, அது தங்கள் வாழ்க்கையை ஆளும்படி அனுமதித்து, அதை வணங்கும்படி அவர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

36. அந்த மூர்க்க மிருகத்தின் முத்திரையை ஏற்க மறுப்போருக்கு என்ன பிரச்னைகள் உண்டாகியிருக்கின்றன?

36 இந்த மூர்க்க மிருகத்தின் முத்திரையை ஏற்க மறுப்பவர்கள் இடைவிடாதப் பிரச்சினைகளை உடையோராக இருந்திருக்கின்றனர். உதாரணமாக, 1930-ல் தொடங்கி, அவர்கள் பல நீதிமன்ற போராட்டங்களில் போராடவும் கலகக்கூட்டங்களின் வன்முறைத் தாக்குதல்களையும் மற்றத் துன்புறுத்தல்களையும் சகிக்கவும் வேண்டியிருந்தது. சர்வாதிபத்திய நாடுகளில், அவர்கள் சித்திரவதை முகாமுக்குள் தள்ளப்பட்டனர், அங்கே பலர் மாண்டனர். இரண்டாம் உலக யுத்தம் முதற்கொண்டு, எண்ணற்ற வாலிபர்கள், தங்கள் கிறிஸ்தவ நடுநிலைவகிப்பை விட்டுக்கொடுத்து இணங்க மறுத்துவிட்டதனிமித்தம், நீடித்த சிறையிருப்புகளை அனுபவித்தனர், சிலர் வதைத்தும் கொல்லப்பட்டனர். மற்ற நாடுகளில் கிறிஸ்தவர்கள் சொல்லர்த்தமாய் வாங்கவும் விற்கவும் கூடாமல் இருக்கின்றனர்; சிலர் சொத்தைச் சொந்தமாகக் கொண்டிருக்கக்கூடாமல் இருக்கின்றனர்; மற்றவர்கள் கற்பழிக்கப்படுகின்றனர், கொலைசெய்யப்படுகின்றனர், அல்லது தங்கள் பிறப்பிடத்திலிருந்து துரத்தியடிக்கப்படுகின்றனர். ஏன்? ஏனெனில் அரசியல் கட்சி அட்டை வாங்க அவர்கள் நல்மனச்சாட்சியுடன் மறுப்பதனிமித்தமே. dயோவான் 17:16.

37, 38. (அ) அந்த மூர்க்க மிருகத்தின் முத்திரையைப் பெற மறுப்போருக்கு இந்த உலகம் ஏன் கடினமான இடமாயுள்ளது? (ஆ) உத்தமத்தைக் காத்துவருவோர் யார், இவர்கள் என்ன செய்யத் திடமாய்த் தீர்மானித்துள்ளனர்?

37 பூமியின் சில பகுதிகளில், மதம் சமுதாய வாழ்க்கையில் அவ்வளவு ஆழமாகப் பதிந்துள்ளதால், பைபிள் சத்தியத்துக்காக நிலைநிற்கை எடுக்கும் எவரும் குடும்பத்தாலும் முந்தின நண்பர்களாலும் விலக்கிவைக்கப்படுகின்றனர். இதைச் சகித்துநிலைத்திருக்க மிகுந்த விசுவாசம் தேவைப்படுகிறது. (மத்தேயு 10:36-38; 17:22) பெரும்பான்மையர் பொருளாதார செல்வத்தை வணங்குவதும், நேர்மையில்லாமை மட்டுக்குமீறி பெருகியுள்ளதுமான ஓர் உலகத்தில், உண்மையான கிறிஸ்தவன், நேர்மையான வழியில் தொடர்ந்து நடப்பதில் தன்னை யெகோவா ஆதரித்துத் தாங்குவாரென்று பெரும்பாலும் யெகோவாவில் மட்டற்ற முழு நம்பிக்கை வைத்திருக்க வேண்டியிருக்கிறது. (சங்கீதம் 11:7; எபிரெயர் 13:18) ஒழுக்கக்கேட்டில் மூழ்கியுள்ள ஓர் உலகத்தில், சுத்தமாயும் தூய்மையாயும் நிலைத்திருப்பதற்குப் பெரும் உறுதியான தீர்மானம் தேவை. நோய்வாய்படும் கிறிஸ்தவர்கள், இரத்தத்தின் பரிசுத்தத் தன்மையின்பேரிலுள்ள கடவுளுடைய சட்டத்தை மீறும்படி மருத்துவர்களாலும் நர்சுகளாலும் அடிக்கடி வற்புறுத்தப்படுகின்றனர்; தங்கள் விசுவாசத்துக்கு முரணாயுள்ள நீதிமன்ற கட்டளைகளையும் அவர்கள் எதிர்க்க வேண்டியிருக்கிறது. (அப்போஸ்தலர் 15:28, 29; 1 பேதுரு 4:3, 4) வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிக்கொண்டேயிருக்கும் இந்நாட்களில், கடவுளுக்கு முன்பாகக் காக்கவேண்டிய தன் உத்தமத்தை விட்டுக்கொடுப்பதைக் குறிக்கும் வேலையைத் தவிர்ப்பது உண்மைக் கிறிஸ்தவனுக்கு மிகுதியாகக் கடினமாகிக்கொண்டே வருகிறது.—மீகா 4:3, 5.

38 ஆம், இந்த மூர்க்க மிருகத்தின் முத்திரையைக் கொண்டிராதவர்களுக்கு இந்த உலகம் கடினமான இடமாய் உள்ளது. ஸ்திரீயின் வித்தின் மீதிபேரும், அவர்களோடுகூட அறுபது லட்சத்துக்கும் மேற்பட்ட திரள் கூட்டத்தாரும், கடவுளுடைய சட்டங்களை மீறும்படி வற்புறுத்தும் எல்லா நெருக்கடிகளுக்கு மத்தியிலும் உத்தமத்தைக் காத்துவருவது, யெகோவாவின் வல்லமையும் ஆசீர்வாதமும் அவர்களுக்கு அருளப்பட்டிருப்பதன் முனைப்பாய்த் தோன்றும் கண்கூடான நிரூபணமாகும். (வெளிப்படுத்துதல் 7:9) இந்த மூர்க்க மிருகத்தின் முத்திரையைப் பெறுவதற்கு நாம் மறுத்து வருகையில், பூமி முழுவதிலும், நாம் எல்லாரும் ஒருமிக்க யெகோவாவையும் அவருடைய நீதியுள்ள வழிகளையும் தொடர்ந்து மகிமைப்படுத்திக் கொண்டிருப்போமாக.—சங்கீதம் 34:1-3.

[அடிக்குறிப்புகள்]

a மேலுமான விவரங்களுக்கு, யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! புத்தகத்தில் பக்கங்கள் 165-79-ஐக் காண்க.

b புனித யோவானின் வெளிப்படுத்துதலின் பொருள்விளக்கம் (ஆங்கிலம்), R. C. H. லென்ஸ்கி எழுதியது, பக்கங்கள் 390-1.

c தேசாபிமானம், உண்மையில், ஒரு மதமே என உரையாசிரியர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். ஆகவே தேசாபிமானிகளாக இருக்கும் ஆட்கள், தாங்கள் வாழும் நாடு பிரதிநிதித்துவம் செய்யும் மூர்க்க மிருகத்தின் அந்தப் பாகத்தை உண்மையில் வணங்குகின்றனர். ஐக்கிய மாகாணங்களிலுள்ள தேசாபிமானத்தைக் குறித்து, நாம் வாசிப்பதாவது: “மதமாகக் கருதப்படுகிற தேசாபிமானம், கடந்தகால மற்ற பெரிய மத ஒழுங்குமுறைகளோடு பேரளவானதைப் பொதுவாகக் கொண்டிருக்கிறது . . . தற்கால மத தேசாபிமானி தன் சொந்த தேசீய கடவுளின்பேரில் சார்ந்திருக்கும் உணர்வுடையவனாக இருக்கிறான். அவருடைய வல்லமைவாய்ந்த உதவி தேவையென அவன் உணருகிறான். அவரில் தன் சொந்த பரிபூரணத்தின் மற்றும் சந்தோஷத்தின் ஊற்றுமூலத்தை அவன் கண்டுணருகிறான். கண்டிப்பான மதக் கருத்தில், அவருக்கே அவன் தன்னைக் கீழ்ப்படுத்துகிறான். . . . அந்தத் தேசம் நித்தியமானதாகக் கருதப்படுகிறது, அதன் ராஜபக்தியுள்ள மைந்தர்களின் மரணங்கள் அதன் அழிவற்ற கீர்த்தியோடும் புகழோடும் மேலும் கூட்டுகிறது.”—கார்ல்டன் J. F. ஹேய்ஸ், அமெரிக்கர்கள் நம்புவதும் அவர்கள் வணங்கும் முறையும் (ஆங்கிலம்) என்ற, J. பால் உவில்லியம்ஸ் எழுதிய புத்தகத்தின் 359-ம் பக்கத்தில் மேற்கோளாகக் குறிப்பிட்டிருக்கிறபடி.

d உதாரணமாக, பின்வரும் உவாட்ச்டவர் வெளியீடுகளைப் பாருங்கள்: செப்டம்பர் 1, 1971, பக்கம் 520; ஜூன் 15, 1974, பக்கம் 373; ஜூன் 1, 1975, பக்கம் 341; பிப்ரவரி 1, 1979, பக்கம் 23; ஜூன் 1, 1979, பக்கம் 20; மே 15, 1980, பக்கம் 10.

[கேள்விகள்]

[பக்கம் 195-ன் படம்]

அந்த மூர்க்க மிருகத்தின் சொரூபத்திற்கு உயிர் கொடுக்கும்படி அதற்கு அளிக்கப்பட்டது