கிறிஸ்தவமண்டலத்தின் மீது யெகோவாவின் வாதைகள்
அதிகாரம் 21
கிறிஸ்தவமண்டலத்தின் மீது யெகோவாவின் வாதைகள்
தரிசனம் 5—வெளிப்படுத்துதல் 8:1–9:21
பொருள்: ஏழு எக்காளங்களில் ஆறு ஊதப்படுதல்
நிறைவேற்றத்தின் காலம்: கிறிஸ்து இயேசு சிங்காசனத்தில் ஏற்றப்பட்ட வருடமாகிய 1914-லிருந்து மிகுந்த உபத்திரவம் வரையாக
1. ஆட்டுக்குட்டியானவர் ஏழாவது முத்திரையை உடைக்கையில் என்ன சம்பவிக்கிறது?
ஆ விக்குரிய இஸ்ரவேலராகிய 1,44,000 முத்திரையிடப்பட்டு மற்றும் திரள் கூட்டம் தப்பிப்பிழைப்பதற்காக அங்கீகரிக்கப்படும் வரையாக ‘நான்கு காற்றுகள்’ பிடித்து வைக்கப்பட்டிருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 7:1-4, 9) இருந்தபோதிலும், பூமியின் மேல் அந்தக் கடும்புயல் வீசும் முன், சாத்தானின் உலகத்திற்கு எதிரான யெகோவாவின் பாதகமான நியாயத்தீர்ப்புகளும் தெரியப்படுத்தப்பட வேண்டும்! ஆட்டுக்குட்டியானவர் ஏழாவதும் கடைசியானதுமான முத்திரையை உடைக்கப்போகையில், யோவான் என்ன வெளிப்படும் என்பதைக் காண்பதற்கு கவனமாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது அவர் தன்னுடைய அனுபவத்தை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்: “அவர் [ஆட்டுக்குட்டியானவர்] ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று. பின்பு, தேவனுக்கு முன்பாக நிற்கிற ஏழு தூதர்களையுங் கண்டேன்; அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது.”—வெளிப்படுத்துதல் 8:1, 2.
ஊக்கமான ஜெபத்திற்கான ஒரு காலம்
2. பரலோகத்தில் அடையாள அர்த்தமுள்ள அரை மணிநேர அமைதலின்போது என்ன நடக்கிறது?
2 இது ஒரு குறிப்பிடத்தக்க அமைதல்! ஏதோ ஒன்று சம்பவிப்பதற்கு நீங்கள் காத்திருக்கையில் அரை மணிநேரம் ஒரு நீண்ட காலமாக தோன்றக்கூடும். இப்போது, இடைவிடாத பரலோக துதிப்பாடலின் சேர்ந்திசையும்கூட கேட்கப்படுவதில்லை. (வெளிப்படுத்துதல் 4:8) ஏன்? யோவான் தரிசனத்தில் காரணத்தைப் பார்க்கிறார்: “வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று.”—வெளிப்படுத்துதல் 8:3, 4.
3. (அ) தூபங்காட்டுதல் நமக்கு எதை நினைவுபடுத்துகிறது? (ஆ) பரலோகத்தில் அரை மணிநேர அமைதலின் நோக்கம் என்ன?
3 இது, யூத ஒழுங்குமுறையின் கீழ், வாசஸ்தலத்தில் மற்றும், பிற்பட்ட வருடங்களில் எருசலேமிலுள்ள ஆலயத்தில், தினந்தோறும் தூபங்காட்டப்பட்டது என்பதை நமக்கு நினைவுபடுத்துகிறது. (யாத்திராகமம் 30:1-8) இவ்விதமான தூபங்காட்டுதலின்போது, ஆசாரியரல்லாத இஸ்ரவேலர்கள் புனிதமான பகுதிக்கு வெளியே காத்திருந்து, சந்தேகமின்றி அவர்களுடைய இருதயங்களில், தூபவர்க்கத்தின் புகையானது எழும்பிக் கொண்டிருந்த அவரிடம் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள். (லூக்கா 1:10) யோவான் இப்போது இதே விதமாக, பரலோகத்தில் நடக்கிறதைப் பார்க்கிறார். தூதன் செலுத்தின தூபவர்க்கம் “பரிசுத்தவான்களின் ஜெபங்களோடு” சம்பந்தப்பட்டிருக்கிறது. உண்மையில், ஒரு முந்தின தரிசனத்தில், தூபவர்க்கம் இவ்விதமான ஜெபங்களைப் பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லப்பட்டிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 5:8; சங்கீதம் 141:1, 2) அப்படியானால், தெளிவாகவே, பரலோகத்தில் இருந்த அடையாள அர்த்தமுள்ள அமைதல் பூமியிலுள்ள பரிசுத்தவான்களின் ஜெபங்கள் கேட்கப்படுவதை அனுமதிப்பதற்காக இருக்கிறது.
4, 5. அடையாள அர்த்தமுள்ள அரை மணிநேர அமைதலுக்கு ஒத்த காலப்பகுதியை தீர்மானிப்பதற்கு எந்தச் சரித்திரப்பூர்வமான நிகழ்ச்சிகள் நமக்கு உதவுகின்றன?
4 இது எப்போது நடந்தது என்பதை நாம் தீர்மானிக்க முடியுமா? ஆம், சூழமைவை, கர்த்தருடைய நாளின் ஆரம்ப காலத்தின் சரித்திரப்பூர்வமான நிகழ்ச்சிகளோடு ஆராய்ந்து பார்ப்பதன் மூலம் நம்மால் தீர்மானிக்க முடியும். (வெளிப்படுத்துதல் 1:10) 1918 மற்றும் 1919-ன்போது, பூமியில் நடந்த சம்பவங்கள், வெளிப்படுத்துதல் 8:1-4-ல் விவரிக்கப்பட்டிருக்கும் காட்சியோடு குறிப்பிடத்தக்க விதத்தில் ஒத்திசைவாயிருந்தது. 1914-க்கு முன்பு 40 வருடங்களாக, பைபிள் மாணாக்கர்கள்—யெகோவாவின் சாட்சிகள் அப்போது அழைக்கப்பட்ட பிரகாரம்—புறஜாதிகளின் காலங்கள் அந்த வருடத்தில் முடிவடையும் என்பதாக தைரியமாக அறிவித்துக் கொண்டிருந்தார்கள். 1914-ன் கடுந்துயரார்ந்த நிகழ்ச்சிகள் அவர்கள் அறிவித்தது சரியென நிரூபித்தது. (லூக்கா 21:24, கிங் ஜேம்ஸ் வர்ஷன்; மத்தேயு 24:3, 7, 8) ஆனால் அவர்களில் அநேகர் தங்கள் இந்தப் பூமியிலிருந்து தங்களுடைய பரலோகச் சுதந்திரத்திற்கு 1914-ல் எடுத்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் நம்பினார்கள். அது நடக்கவில்லை. மாறாக, முதல் உலக யுத்தத்தின்போது ஏற்பட்ட கடுந் துன்புறுத்தலான சமயத்தில் அவர்கள் சகித்துநிலைத்திருந்தனர். அக்டோபர் 31, 1916-ல் உவாட்ச் டவர் சொஸையிட்டியின் முதல் பிரெஸிடென்ட், சார்ல்ஸ் T. ரஸல், காலமானார். பின்னர் ஜுலை 4, 1918-ல், புதிய பிரெஸிடென்ட் ஜோசஃப் F. ரதர்ஃபர்டு மற்றும் சொஸையிட்டியின் வேறு ஏழு பிரதிநிதிகள், சிறைச்சாலையில் நீண்ட வருடங்கள் தவறாக தண்டனைத் தீர்ப்பு அளிக்கப்பட்டு, ஜார்ஜியா அட்லாண்டாவில் உள்ள சிறைச்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்கள்.
5 யோவான் வகுப்பாரைச் சேர்ந்த உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் குழப்பமடைந்திருந்தார்கள். அவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று கடவுள் விரும்பினார்? அவர்கள் எப்போது பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவார்கள்? மே 1, 1919, ஆங்கில காவற்கோபுரத்தில் “அறுவடை முடிந்தது—என்ன தொடரும்?” என்ற தலைப்பையுடைய ஒரு கட்டுரை வெளிவந்தது. அது அநிச்சயமான இந்த நிலையை பிரதிபலித்து உண்மையுள்ளவர்களைத் தொடர்ந்து சகித்திருக்கும்படி உற்சாகப்படுத்தினது, மேலும் இப்படியாக சொன்னது: “ராஜ்ய வகுப்பாரின் அறுவடை, நிறைவேற்றம் அடைந்த உண்மை இப்போது ஓர் உண்மையான பேச்சு, இப்படிப்பட்டவர்களனைவரும் சரியாக முத்திரையிடப்பட்டுவிட்டார்கள், மற்றும் கதவு மூடப்பட்டுவிட்டது என்று நாங்கள் நம்புகிறோம்.” இந்தக் கடினமான காலப்பகுதியினூடே, ஒரு பெரிய அளவு தூபவர்க்கத்தின் புகையைப் போன்று, யோவான் வகுப்பாரின் ஊக்கமான ஜெபங்கள் எழும்பிக்கொண்டிருந்தன. மேலும் அவர்களுடைய ஜெபங்கள் கேட்கப்பட்டுக் கொண்டு இருந்தன!
நெருப்பை பூமியில் கொட்டுதல்
6. பரலோகத்தில் அமைதலுக்குப் பின் என்ன சம்பவிக்கிறது, மற்றும் இது எதற்குப் பிரதிபலிப்பாக?
6 யோவான் நமக்கு சொல்லுகிறார்: “பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின.” (வெளிப்படுத்துதல் 8:5) அமைதலுக்குப் பின்பு, அங்கே திடீரென நிகழ்கிற உணர்ச்சியைத் தூண்டும் நடவடிக்கை இருக்கிறது! இது தெளிவாகவே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களுக்கு பிரதிபலிப்பாக இருக்கிறது, ஏனென்றால், இது தூபவர்க்க பலிபீடத்திலிருந்து எடுக்கப்பட்ட நெருப்பினால் பற்ற வைக்கப்பட்டது. பொ.ச.மு. 1513-ல், சீனாய் மலையில், யெகோவா அவருடைய கவனத்தை தம்முடைய ஜனங்களிடமாக திருப்பினதை இடிமுழக்கங்கள், மின்னல்கள், மகா பலத்த சத்தம், நெருப்பு மற்றும் மலையின் அதிர்வு அடையாளப்படுத்தின. (யாத்திராகமம் 19:16-20) இவ்வாறே யோவானால் அறிக்கை பண்ணப்பட்ட வெளிப்படுத்துதல்கள் இத்தகைய யெகோவா பூமியில் உள்ள அவருடைய ஊழியர்களுக்கு கவனம் செலுத்துவதைக் குறிக்கிறது. ஆனால் யோவான் காண்பது அடையாளங்களில் அளிக்கப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 1:1) ஆகவே அடையாள அர்த்தமுள்ள நெருப்பு, இடிமுழக்கங்கள், சத்தங்கள், மின்னல்கள், மற்றும் பூமியதிர்ச்சி இன்று எவ்வாறு விளக்கிப் பொருள் கூறப்பட வேண்டும்?
7. (அ) பூமியில் அவருடைய ஊழியத்தின்போது இயேசு என்ன அடையாள அர்த்தமுள்ள நெருப்பைக் கொளுத்தினார்? (ஆ) இயேசுவின் ஆவிக்குரிய சகோதரர்கள் எவ்வாறு கிறிஸ்தவமண்டலத்தில் ஒரு நெருப்பைக் கொளுத்தினார்கள்?
7 ஒரு சமயத்தில், இயேசு அவருடைய சீஷர்களிடம் சொன்னார்: “பூமியின் மேல் அக்கினியைப் போட வந்தேன்.” (லூக்கா 12:49) உண்மையிலே, அவர் ஒரு நெருப்பைக் கொளுத்தினார். அவருடைய வைராக்கியமுள்ள பிரசங்கிப்பின் மூலம், இயேசு யூத ஜனங்களுக்கு முன்பாக கடவுளுடைய ராஜ்யத்தை முதன்மையான விவாதமாக ஆக்கினார், இது அந்தத் தேசம் முழுவதுமாக தீவிரமான வாக்குவாதத்தை உண்டாக்கினது. (மத்தேயு 4:17, 25; 10:5-7, 17, 18) 1919-ல் பூமியில் உள்ள இயேசுவின் ஆவிக்குரிய சகோதரர்கள், முதல் உலக யுத்தத்தின் துன்பம் நிறைந்த நாட்களைத் தப்பிப்பிழைத்த அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களாலான சிறு குழு, அதே போன்ற நெருப்பை கிறிஸ்தவமண்டலத்தில் கொளுத்தினார்கள். அந்த வருடம் செப்டம்பர் மாதத்தில், அ.ஐ. மா., ஒஹாயோ, சீடர் பாய்ன்ட் என்ற இடத்தில், அருகாமையிலும் தூரத்திலுமிருந்து, அவருடைய உண்மைதவறாத சாட்சிகள் கூடி வந்த சமயத்தில் யெகோவாவின் ஆவி தெளிவாக காணப்பட்டது. ஜோசஃப் F. ரதர்ஃபர்டு சமீபத்தில் சிறையிலிருந்து விடுதலையாகி, சீக்கிரத்தில் முழுமையாக குற்றமற்றவராக தீர்க்கப்பட இருந்தவர், அந்த மாநாட்டில் இவ்வாறு தைரியமாக பேசினார்: “நம்முடைய எஜமானுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, ஜனங்களை இவ்வளவு காலமாக அடிமைத்தனத்தில் வைத்திருந்த தவற்றிற்கு எதிராக யுத்தம் செய்ய வேண்டிய நம்முடைய சிலாக்கியத்தையும் கடமையையும் ஏற்றுக்கொண்டு, நம்முடைய வேலையானது வர இருக்கும் மேசியாவின் மகிமையான ராஜ்யத்தை அறிவிப்பதாக இருந்தது, மேலும் அறிவிக்க வேண்டியதாக இருக்கிறது.” அதுதான் முதன்மையான விவாதம்—கடவுளுடைய ராஜ்யம்!
8, 9. (அ) கடினமான யுத்த வருடங்களின்போது கடவுளுடைய ஜனங்களின் மனப்பான்மையையும் விருப்பத்தையும் J. F. ரதர்ஃபர்டு எவ்வாறு விவரித்தார்? (ஆ) எவ்வாறு நெருப்பு பூமியில் கொட்டப்பட்டது? (இ) எவ்வாறு இடிமுழக்கங்கள், குரல்கள், மின்னல்கள் மற்றும் பூமியதிர்ச்சி நிகழ்ந்தன?
8 கடவுளுடைய ஜனங்களின் சமீப காலத்து இக்கட்டான அனுபவங்களைக் குறிப்பிட்டு, பேச்சாளர் சொன்னார்: “எதிரியின் தாக்குதல் அவ்வளவு இரக்கமற்றதாக இருந்ததன் காரணமாக, கர்த்தருடைய அருமையான மந்தையில் அநேகர் ஸ்தம்பித்து திகைப்பில் அசைவற்ற நிலையில், கர்த்தர் அவருடைய சித்தத்தை தெரிவிப்பதற்காக ஜெபித்துக் கொண்டும் காத்துக்கொண்டும் இருந்தனர். . . . ஆனால் கணநேரமே உற்சாகத்தை இழந்தபோதிலும், ராஜ்யத்தின் செய்தியை விளம்பரப்படுத்துவதற்கு ஊக்கமான ஆவல் இருந்தது.”—காவற்கோபுரம் (ஆங்கிலம்), செப்டம்பர் 15, 1919 இதழ் பக்கம் 280-ஐ பார்க்கவும்.
9 அந்த ஆவல் 1919-ல் நிறைவேறினது. ஆவிக்குரிய விதத்தில் பேசுகையில், இந்தச் சிறிய ஆனால் சுறுசுறுப்புள்ள கிறிஸ்தவர்களின் தொகுதி ஓர் உலகளாவிய பிரசங்கிப்பு வேலையை ஆரம்பிப்பதற்கு கொளுத்திவிடப்பட்டது. (1 தெசலோனிக்கேயர் 5:19-ஐ ஒப்பிடவும்.) நெருப்பு பூமியில் கொட்டப்பட்டது, எப்படியெனில் கடவுளுடைய ராஜ்யம் முக்கிய விவாதமாக ஆக்கப்பட்டது, மேலும் அது தொடர்ந்து அவ்வாறே இருந்துகொண்டிருக்கிறது! அமைதலுக்குப் பதிலாக பலமான குரல்கள் எழும்பி ராஜ்ய செய்தியை தெளிவுடன் ஒலித்தன. பைபிளிலிருந்து இடிமுழக்கம் போன்ற புயல் எச்சரிக்கைகள் முழங்கின. மின்னலின் திடீர் வெளிச்சம் போன்று, யெகோவாவின் தீர்க்கதரிசன வார்த்தையிலிருந்து பிரகாசமான சத்தியத்தின் ஒளிக்கதிர்கள் எழும்பின. ஒரு மிகப்பெரிய பூமியதிர்ச்சியைப் போன்று, மதப்பகுதி அதன் அடித்தளம் வரை அசைக்கப்பட்டது. செய்வதற்கு வேலை இருப்பதாக யோவான் வகுப்பார் கண்டார்கள். இந்நாள் வரையாக, அந்த வேலை குடியிருக்கப்பட்ட பூமி முழுவதும் மகிமையாக தொடர்ந்து விரிவாகிக் கொண்டிருக்கிறது!—ரோமர் 10:18.
எக்காளங்களின் ஓசைகளுக்காக ஆயத்தம் செய்தல்
10. ஏழு தூதர்கள் என்ன செய்வதற்கு ஆயத்தமாகிறார்கள், ஏன்?
10 யோவான் தொடர்ந்து பேசுகிறார்: “அப்பொழுது, ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள்.” (வெளிப்படுத்துதல் 8:6) அந்த எக்காளங்களை ஊதுவது எதை அர்த்தப்படுத்துகிறது? இஸ்ரவேலரின் நாட்களில், முக்கியமான நாட்களை அல்லது குறிப்பிடத்தக்க சம்பவங்களைத் தெரிவிப்பதற்காக எக்காள சத்தங்கள் பயன்படுத்தப்பட்டன. (லேவியராகமம் 23:24; 2 இராஜாக்கள் 11:14) அதே விதமாக, யோவான் கேட்க இருக்கும் எக்காள சத்தங்கள் ஜீவன்-மற்றும்-மரணம் முக்கியத்துவமுடைய காரியங்களுக்குக் கவனத்தை ஈர்க்கும்.
11. 1919 முதல் 1922 வரை பூமியில் என்ன ஆயத்த வேலையில் யோவான் வகுப்பார் சுறுசுறுப்பாக இருந்தனர்?
11 தூதர்கள் அந்த எக்காளங்களை ஊதுவதற்கு ஆயத்தம் செய்தபோது, சந்தேகமில்லாமல் பூமியில் ஓர் ஆயத்த வேலைக்கு வழிநடத்துதலைக் கொடுத்துக் கொண்டும் இருந்தார்கள். 1919 முதல் 1922 வரை, புத்துயிர் பெற்ற யோவான் வகுப்பார் பொதுவான ஊழியத்தை மறுபடியும் ஒழுங்கு செய்வதிலும் பிரசுரிக்கும் வசதிகளைக் கட்டுவதிலும் சுறுசுறுப்பாக இருந்தார்கள். 1919-ல் பொற்காலம் (golden age), இன்றைக்கு விழித்தெழு! என்று அறியப்பட்டிருக்கும், பத்திரிகை “உண்மை, நம்பிக்கை மற்றும் திட நம்பிக்கையின் பத்திரிகை” என்பதாக வெளிவந்து கொண்டிருந்தது—பொய் மதத்தின் அரசியல் ஈடுபாடுகளை வெளிப்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கை வகிக்கும் எக்காளத்தைப் போன்ற ஒரு கருவி.
12. ஒவ்வொரு எக்காள ஊதலின் மூலம் என்ன முன்னறிவிக்கப்படுகிறது, மோசேயின் நாளில் நடந்த என்ன காரியத்தைப் பற்றி நமக்கு நினைப்பூட்டுகிறது?
12 நாம் இப்போது பார்க்கப் போகிற பிரகாரம், எக்காள சத்தங்கள் ஒவ்வொன்றும் பூமியின் பகுதிகளைப் பாதிக்கும் பயங்கரமான வாதைகளின் ஓர் உணர்ச்சியைத் தூண்டும் காட்சியை முன்னறிவிக்கிறது. இவற்றில் சில மோசேயின் நாளில் எகிப்தியரை தண்டிப்பதற்காக யெகோவா அனுப்பிய வாதைகளை நமக்கு நினைப்பூட்டுகின்றன. (யாத்திராகமம் 7:19–12:32) இவை அந்தத் தேசத்தின் மீது யெகோவாவின் நியாயத்தீர்ப்பு வெளிக்காட்டுதல்களாக இருந்தன, மற்றும் கடவுளுடைய ஜனங்கள் அடிமைத்தனத்திலிருந்து தப்புவதற்கு வழியைத் திறந்தன. யோவான் கண்ட வாதைகள் அதே போன்ற காரியத்தைச் செய்து முடிக்கின்றன. இருந்தபோதிலும், அவை சொல்லர்த்தமான வாதைகள் அல்ல. அவை யெகோவாவின் நீதியான நியாயத்தீர்ப்புகளை அடையாளப்படுத்தும் அறிகுறிகள்.—வெளிப்படுத்துதல் 1:1.
‘மூன்றிலொருபங்கை’ அடையாளங்காணுதல்
13. முதல் நான்கு எக்காளங்கள் ஊதப்படுகையில் என்ன சம்பவிக்கிறது, மேலும் இது என்ன கேள்வியை எழுப்புகிறது?
13 நாம் பார்க்கப்போகிற பிரகாரம், முதல் நான்கு எக்காளங்கள் ஊதப்படுகையில், பூமி, சமுத்திரம், ஆறுகள் மேலும் நீரூற்றுகள், மற்றும் பூமியின் ஒளிமூலங்கள் ஆகியவற்றின் “மூன்றிலொருபங்”கின் மீது வாதைகள் சுமத்தப்படுகின்றன. (வெளிப்படுத்துதல் 8:7-12) மூன்றிலொன்று ஏதோ ஒன்றின் மிகுதியான பகுதியாக இருக்கிறது, ஆனால் முழுமையும் அல்ல. (ஒப்பிடவும்: ஏசாயா 19:24; எசேக்கியேல் 5:2; சகரியா 13:8, 9.) ஆகவே இந்த வாதைகளுக்கு எந்த ‘மூன்றிலொன்று’ மிக அதிகம் தகுதியுள்ளதாக இருக்கும்? மனிதவர்க்கத்தின் பெரும்பான்மையர் சாத்தானாலும் அவனுடைய வித்தினாலும் குருடாக்கப்பட்டு கறைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். (ஆதியாகமம் 3:15; 2 கொரிந்தியர் 4:4) நிலைமை தாவீது விவரித்திருக்கிற பிரகாரமே இருக்கிறது: “எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.” (சங்கீதம் 14:3) ஆம், மனிதவர்க்கம் முழுவதும், ஒரு பாதகமான நியாயத்தீர்ப்பைப் பெறும் அபாயத்தில் இருக்கிறது. ஆனால் அதின் ஒரு பகுதி குறிப்பாக குற்றமுள்ளதாக இருக்கிறது. ஒரு பகுதி—“மூன்றிலொரு பங்கு”—நன்றாக அறிந்திருக்க வேண்டும்! அந்த ‘மூன்றிலொன்று’ என்ன?
14. யெகோவாவிடமிருந்து வாதிக்கும் செய்திகளைப் பெறும் அந்த அடையாள அர்த்தமுள்ள மூன்றிலொன்று எது?
14 அதுவே கிறிஸ்தவமண்டலம்! 1920-களில், அவளுடைய பகுதி மனிதவர்க்கத்தின் ஏறக்குறைய மூன்றிலொரு பங்கை உள்ளடக்கியது. அவளுடைய மதம் உண்மையான கிறிஸ்தவத்திலிருந்து விலகிய அந்தப் பெரிய விசுவாசதுரோகத்தின் கனி—இயேசுவும் அவருடைய சீஷர்களும் முன்னறிவித்த விசுவாசதுரோகம். (மத்தேயு 13:24-30; அப்போஸ்தலர் 20:29, 30; 2 தெசலோனிக்கேயர் 2:3; 2 பேதுரு 2:1-3) கிறிஸ்தவமண்டலத்தின் குருமார் கடவுளுடைய ஆலயத்தில் இருப்பதாக உரிமைபாராட்டித் தங்களை கிறிஸ்தவத்தின் போதகர்களாக பிரதிநிதித்துவம் செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய கொள்கைகள் பைபிள் சத்தியத்திலிருந்து வெகு தூரத்திலிருக்கிறது, மேலும் கடவுளுடைய நாமத்தை தொடர்ந்து இகழ்ச்சிக்கு கொண்டு வருகிறார்கள். அடையாள அர்த்தத்தில் மூன்றிலொன்றாக பொருத்தமாக பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட கிறிஸ்தவமண்டலம் யெகோவாவிடமிருந்து சக்திவாய்ந்த, வாதிக்கும் செய்திகளைப் பெறுகிறது. அந்த மனிதவர்க்கத்தின் மூன்றிலொன்று எந்தவிதத்திலும் தெய்வீக தயவைப் பெறுவதற்குத் தகுதியற்றதாயிருக்கிறது!
15. (அ) எக்காள சத்தங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட வருடத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறதா? விளக்கவும். (ஆ) யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை அறிவிப்பதில் யோவான் வகுப்பாரோடு யாருடைய குரலும் சேர்க்கப்பட்டிருக்கிறது?
15 வரிசையாக எக்காள சத்தங்கள் இருப்பதற்கு இசைவாக, 1922 முதல் 1928 வரையாக நடந்த ஏழு மாநாடுகளில் விசேஷமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. ஆனால் எக்காளம் ஊதுவதானது அந்த வருடங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதாயில்லை. கர்த்தருடைய நாள் முன்னேறுகையில், கிறிஸ்தவமண்டலத்தின் பொல்லாத வழிகளை சக்திவாய்ந்த விதத்தில் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருப்பது நடந்தேறிவருகிறது. சர்வதேச பகை மற்றும் துன்புறுத்தல்கள் இருந்தபோதிலும், யெகோவாவின் நியாயத்தீர்ப்புகள் உலகம் முழுவதும், எல்லா தேசங்களுக்கும் அறிவிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் மட்டுமே சாத்தானுடைய ஒழுங்குமுறையின் முடிவு வரும். (மாற்கு 13:10, 13) மகிழ்ச்சிகரமாக, உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த இடிமுழக்கம் போன்ற அறிவிப்புகளை செய்வதில், திரள் கூட்டம் அதனுடைய குரலை யோவான் வகுப்பாரோடு இப்போது சேர்த்திருக்கிறது.
பூமியின் மூன்றிலொரு பங்கு எரிந்து போயிற்று
16. முதல் தூதன் எக்காளம் ஊதுகையில் என்ன தொடர்கிறது?
16 தூதர்களின் பேரில் அறிவிப்பு செய்கிறவராய், யோவான் எழுதுகிறார்: “முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; [பூமியில் மூன்றிலொரு பங்கு எரிந்து போயிற்று, NW], அதினால் மரங்களில் மூன்றிலொரு பங்கு வெந்து போயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்து போயிற்று.” (வெளிப்படுத்துதல் 8:7) இது எகிப்தின் மேல் வந்த ஏழாவது வாதை போலிருக்கிறது, ஆனால் இது நம்முடைய நாட்களில் எதை அர்த்தப்படுத்துகிறது?—யாத்திராகமம் 9:24.
17. (அ) வெளிப்படுத்துதல் 8:7-ல் உள்ள “பூமி” என்ற வார்த்தையால் என்ன பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது? (ஆ) கிறிஸ்தவமண்டலத்தின் பூமியில் மூன்றிலொரு பங்கு எவ்வாறு எரிக்கப்படுகிறது?
17 பைபிளில், “பூமி” என்ற வார்த்தை அடிக்கடி மனிதவர்க்கத்தைக் குறிக்கிறது. (ஆதியாகமம் 11:1; சங்கீதம் 96:1) இரண்டாவது வாதை சமுத்திரத்தின் மேல் இருப்பதால், அதுவும் மனிதவர்க்கத்தோடு தொடர்புடையதால், “பூமி” சாத்தான் கட்டியிருக்கும் மற்றும் அழிக்கப்பட இருக்கும் நிலைத்திருப்பதாகத் தோன்றும் மனித சமுதாயத்தை குறிக்க வேண்டும். (2 பேதுரு 3:7; வெளிப்படுத்துதல் 21:1) வாதை காட்சி, பூமியில் கிறிஸ்தவமண்டலத்தின் பூமியில் மூன்றிலொரு பங்கு யெகோவாவின் அங்கீகாரமின்மையின் வாட்டும் வெப்பத்தால் எரிக்கப்படுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. அவளுடைய பிரபலமானவர்கள்—அவள் மத்தியில் மரங்களைப் போல் நிற்கிறவர்கள்—யெகோவாவின் பாதகமான நியாயத்தீர்ப்பு வெளிப்படையாக அறிவிக்கப்படுவதால் எரிந்து போகிறார்கள். அவளுடைய எல்லா பல லட்சக்கணக்கான சர்ச் அங்கத்தினர்களும் கிறிஸ்தவமண்டல மதத்தை தொடர்ந்து ஆதரித்தால், எரிக்கப்பட்ட புல்லைப்போல், கடவுளுடைய பார்வையில் ஆவிக்குரிய விதத்தில் வாடினவர்களாக ஆவார்கள்.—சங்கீதம் 37:1, 2-ஐ ஒப்பிடவும். a
18. 1922 சீடர் பாய்ன்ட் மாநாட்டில் யெகோவாவின் நியாயத்தீர்ப்பு செய்தி எவ்வாறு அறிவிக்கப்பட்டது?
18 இந்த நியாயத்தீர்ப்பு செய்தி எவ்வாறு கொடுக்கப்படுகிறது? பொதுவாக, உலகத்தின் செய்தித்தொடர்புகளின் மூலமாக அல்ல, அவைகள் உலகத்தின் பாகமாகவும் மற்றும் அடிக்கடி கடவுளுடைய ‘ஊழியக்காரரை’ நிந்திக்கிறவையாகவும் இருக்கின்றன. (மத்தேயு 24:45) செப்டம்பர் 10, 1922, ஒஹாயோ, சீடர் பாய்ன்ட், என்ற இடத்தில் நடந்த கடவுளுடைய ஜனங்களின் இரண்டாவது வரலாற்று சிறப்புவாய்ந்த கூட்டத்தில் குறிப்பிடத்தக்க விதத்தில் அது அறிவிக்கப்பட்டது. இவர்கள், “உலகத் தலைவர்களுக்கு ஒரு சவால்” என்ற தலைப்புடைய தீர்மானத்தை ஏகமனதாய் ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டார்கள். வெளிப்படையாகப் பேசுகிற வார்த்தைகளில், அது நவீன-கால அடையாள அர்த்தமுள்ள பூமிக்கு, பின்வருமாறு எச்சரிக்கை கொடுத்தது: “ஆகையால் நாங்கள் பூமியில் உள்ள தேசங்களை, அவற்றின் அதிபதிகளையும் தலைவர்களையும், பூமியில் உள்ள எல்லா மதப் பிரிவு சர்ச்சுகளின் எல்லா குருமாரையும், அவர்களைப் பின்பற்றுகிறவர்கள் மற்றும் கூட்டாளிகள், பெரிய தொழில் அதிபர்கள் மற்றும் பெரிய அரசியல்வாதிகளாகிய இவர்கள் பூமியின் மீது சமாதானத்தையும் செழுமையையும் நிலைநாட்டி ஜனங்களுக்கு மகிழ்ச்சியைக் கொண்டு வர முடியும் என்று தாங்கள் எடுத்திருக்கும் நிலையை சரி என்று நிரூபிக்க அவர்களுடைய அத்தாட்சியைக் கொண்டு வரட்டும், என்று கேட்கிறோம்; அவர்கள் இதில் தவறுவார்கள் என்றால், கர்த்தருக்கு சாட்சிகளாக நாங்கள் கொடுக்கும் அத்தாட்சிக்கு செவிசாய்க்கும்படி கேட்கிறோம், அதன் பிறகு எங்களுடைய அத்தாட்சி உண்மையா இல்லையா என்று சொல்லட்டும்.”
19. கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து கடவுளுடைய ஜனங்கள் கிறிஸ்தவமண்டலத்திற்கு என்ன அத்தாட்சியை கொடுத்தார்கள்?
19 என்ன அத்தாட்சியை இந்தக் கிறிஸ்தவர்கள் கொடுத்தார்கள்? இதுவே: “மேசியாவின் ராஜ்யம் மனிதவர்க்கத்தின் எல்லா நோய்களுக்கும் முழுமையான நிவாரணம், மேலும் எல்லா தேசங்களின் விருப்பமாகிய பூமியின் மீது சமாதானத்தையும் மனிதருக்கு நற்பிரியத்தையும் கொண்டு வரும் என்பதாக நாங்கள் கருதுகிறோம், அறிவிக்கிறோம்; இப்பொழுது ஆரம்பமாகியிருக்கும் அவருடைய நீதியுள்ள ஆட்சிக்கு தங்களை மனமுவந்து அளிப்பவர்கள், நீடித்திருக்கும் சமாதானம், ஜீவன், விடுதலை மற்றும் முடிவில்லா மகிழ்ச்சியினால் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.” இந்தக் கறைப்படுத்தப்பட்டிருக்கும் காலங்களில், மனிதனால் உண்டாக்கப்பட்ட அரசாங்கங்கள், விசேஷமாக கிறிஸ்தவமண்டலத்தில் உள்ளவர்கள், உலகத்தின் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு முழுவதுமாக தவறுகையில், அந்த எக்காளச் சவால் 1922-ல் இருந்ததை விட இன்னும் அதிகமான வலிமையுடன் ஒலிக்கிறது. அவருடைய ஜெயங்கொள்ளும் கிறிஸ்துவின் கைகளில் உள்ள கடவுளுடைய ராஜ்யம் மனிதவர்க்கத்தின் ஒரே ஒரு நம்பிக்கை என்பது எவ்வளவு உண்மையாக இருக்கிறது!
20. (அ) 1922-லும் அதற்குப் பின்வரும் காலத்திலும் என்ன ஏதுக்களின் மூலமாக அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபையால் நியாயத்தீர்ப்பு செய்திகள் எக்காளம் ஊதப்பட்டிருக்கிறது? (ஆ) முதல் எக்காள சத்தத்திலிருந்து கிறிஸ்தவமண்டலத்தில் என்ன விளைவடைந்தது?
20 தீர்மானங்கள், துண்டுப்பிரதிகள், சிறு புத்தகங்கள், புத்தகங்கள், பத்திரிகைகள் மற்றும் பேச்சுகளின் மூலம், இதுவும் மேலும் இதற்குப் பின் வந்த அறிவிப்புகளும் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபையின் மூலம் எக்காளம் ஊதப்பட்டது. முதல் எக்காள சத்தம் திரும்பத் திரும்ப அடிக்கும் கல்மழையின் கடினமாக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டு கிறிஸ்தவமண்டலம் அடிக்கப்படுவதில் விளைவடைந்தது. இருபதாவது நூற்றாண்டின் யுத்தங்களில் அவள் பங்குகொண்டதன் காரணமாக, அவளுடைய இரத்தப்பழி வெளியாக்கப்பட்டிருக்கிறது, மேலும் யெகோவாவின் எரிகிற கோபாக்கினைக்கு தகுதியுள்ளவளாக காண்பிக்கப்பட்டிருக்கிறாள். யோவான் வகுப்பார், திரள் கூட்டத்தின் பின் ஆதரவுடன், முதல் எக்காள சத்தத்தை தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்தவமண்டலம் அழிவுக்கு தகுதியுள்ளது என்ற யெகோவாவுடைய நோக்குநிலைக்குக் கவனத்தை ஈர்த்துவருகிறார்கள்.—வெளிப்படுத்துதல் 7:9, 15.
எரிகிற மலையைப் போன்று
21. இரண்டாவது தூதன் அவனுடைய எக்காளத்தை ஊதுகையில் என்ன சம்பவிக்கிறது?
21 “இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலை போன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது; அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொரு பங்கு இரத்தமாயிற்று. சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொரு பங்கு செத்துப் போயிற்று; கப்பல்களில் மூன்றிலொரு பங்கு சேதமாயிற்று.” (வெளிப்படுத்துதல் 8:8, 9) இந்தப் பயங்கரமான காட்சி எதைப் படமாக காண்பிக்கிறது?
22, 23. (அ) சந்தேகமில்லாமல் இரண்டாவது எக்காளம் ஊதுவதன் விளைவாக என்ன தீர்மானம் வந்தது? (ஆ) “சமுத்திரத்தில் மூன்றிலொரு பங்கு” என்பதால் என்ன பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது?
22 ஆகஸ்ட் 18-26, 1923-ல் அ.ஐ.மா., கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சலிஸ்-ல் நடந்த மாநாட்டின் பின்னணிக்கு எதிராக நாம் அதை நன்றாக புரிந்து கொள்ளலாம். J. F. ரதர்ஃபர்டு சனிக்கிழமை பிற்பகல் கொடுத்த பேச்சு “செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும்” என்ற பொருளின் பேரில் இருந்தது. “செம்மறியாடுகள்” கடவுளுடைய ராஜ்யத்தின் பூமிக்குரிய பகுதியை சுதந்தரிக்கும் நீதியை நேசிக்கும் ஆட்கள் என்பதாக தெளிவாக அடையாளம் காண்பிக்கப்பட்டார்கள். அதைப் பின்தொடர்ந்த ஒரு தீர்மானம், “விசுவாசதுரோக குருமார் மற்றும் ‘அவர்களுடைய மந்தைகளின் தலைவர்,’ வலிமையான பொருளாதார மற்றும் அரசியல் செல்வாக்குடைய உலகப்பிரகாரமான மனிதர்கள்,” இவர்களின் பாசாங்குத் தன்மைக்கு கவனத்தை ஈர்த்தது. அது, “மதப்பிரிவு சர்ச்சுகளில் உள்ள சமாதானத்தையும் ஒழுங்கையும் நேசிக்கும் பெரிய கூட்டத்தை . . . கர்த்தரால் ‘பாபிலோன்’ என்று குறிக்கப்பட்டுள்ள அநீதியுள்ள குருவர்க்க ஒழுங்குமுறைகளிலிருந்து வெளியே வரும்படியும்” மேலும் “கடவுளுடைய ராஜ்யத்தின் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்கு” தங்களை ஆயத்தம் செய்யவும் கேட்டுக்கொண்டது.
23 சந்தேகமில்லாமல், இந்தத் தீர்மானம் இரண்டாவது எக்காளம் ஊதுவதன் விளைவாக வந்தது. காலப்போக்கில் அந்தச் செய்திக்கு பிரதிபலிக்கிறவர்கள் ஏசாயா இந்த வார்த்தைகளில் விவரித்த தொகுதியிலிருந்து பிரிந்து போவார்கள்: “துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப் போலிருக்கிறார்கள்; அது அமர்ந்திருக்கக்கூடாமல், அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது.” (ஏசாயா 57:20; 17:12, 13) இவ்வாறு, “சமுத்திரம்” அமைதியின்மையையும் புரட்சியையும் தூண்டிவிடும் அமைதியற்ற, நிலைகுலையச் செய்யப்பட்ட, கலகத்தனமான, மனித வகுப்பாரை நன்றாக படமாக காண்பிக்கிறது. (வெளிப்படுத்துதல் 13:1-ஐ ஒப்பிடவும்.) அந்தச் ‘சமுத்திரம்’ இல்லாமற்போகும் ஒரு காலம் வரும். (வெளிப்படுத்துதல் 21:1) இடையில், இரண்டாவது எக்காளம் ஊதுவதோடு, யெகோவா அதன் மூன்றிலொரு பங்குக்கு எதிராக நியாயத்தீர்ப்பை அறிவிக்கிறார்—கிறிஸ்தவமண்டலத்தின் பகுதியிலேயே இருக்கும் அடக்கமுடியாத பாகம்.
24. சமுத்திரத்துக்குள் போடப்பட்ட எரிகிற மலை போன்ற கட்டியால் எது படமாகக் காட்டப்படுகிறது?
24 அக்கினியால் எரிகிற ஒரு பெரிய மலை போன்ற கட்டி இந்தச் ‘சமுத்திரத்துக்குள்’ போடப்பட்டது. பைபிளில், மலைகள் அடிக்கடி அரசாங்கங்களை அடையாளப்படுத்துகிறது. உதாரணமாக, கடவுளுடைய ராஜ்யம் ஒரு மலையைப் போல் வருணிக்கப்படுகிறது. (தானியேல் 2:35, 44) நாசகரமான பாபிலோன் “எரிந்து போன பர்வதமாக” ஆயிற்று. (எரேமியா 51:25) ஆனால் யோவான் பார்க்கும் மலையைப் போன்ற கட்டி இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. அது சமுத்திரத்துக்குள் போடப்படுவதானது, எவ்வாறு, முதல் உலக யுத்தத்தின் போதும் அதற்குப் பிறகும், அரசாங்கத்தைப் பற்றிய கேள்வி மனிதவர்க்கத்தின் மத்தியில், விசேஷமாக கிறிஸ்தவமண்டலத்தின் நாடுகளில் ஒரு தீவிரமான விவாதமாக ஆனது என்பதை நன்றாக எடுத்துக்காட்டுகிறது. இத்தாலியில், முஸ்ஸோலினி ஃபாசிஸத்தை அறிமுகப்படுத்தினான். ஜெர்மனி ஹிட்லரின் நாஸிசத்தை தழுவினது, மற்ற தேசங்கள் சமூகப் பொதுவுடைமைக் கொள்கையின் வித்தியாசமான முறைகளை முயற்சி செய்தன. ரஷ்யாவில் ஓர் அடிப்படை மாற்றம் நிகழ்ந்தது. அங்கே தீவிர பொதுவுடைமைக் கட்சியின் புரட்சி முதல் பொதுவுடைமை நாட்டை உண்டாக்கினது, இதன் விளைவாக கிறிஸ்தவமண்டலம் முற்காலத்தில் அதனுடைய அரண்களில் ஒன்றாக இருந்ததில் அதிகாரத்தையும் செல்வாக்கையும் இழந்தது.
25. இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின் அரசாங்கம் எவ்வாறு எரிந்து கொண்டிருக்கும் ஒரு விவாதமாக தொடர்ந்தது?
25 பாஸிஸ மற்றும் நாஸி முயற்சிகள் இரண்டாவது உலக யுத்தத்தினால் மறைந்தன. ஆனால் அரசாங்கம் நெருப்பைப் போன்ற விவாதமாக தொடர்ந்து இருந்தது. மேலும் மனித சமுத்திரம் தொடர்ந்து கடைந்து புதிய புரட்சிகரமான அரசாங்கங்களை வெளிக் கொண்டு வந்தது. 1945-க்குப் பின் வந்த பத்தாண்டுகளில், இவை சீனா, வியாட்நாம், கியூபா, மற்றும் நிகராகுவா போன்ற அநேக இடங்களில் நிறுவப்பட்டன. கிரீஸில் இராணுவ வல்லாட்சியில் ஒரு சோதனை தோல்வியுற்றது. கம்பூச்சியாவில் (கம்போடியாவில்) மாறா மரபேற்பு பொதுவுடைமைக்குள் ஒரு சுற்றுப்பயணம், அறிவிக்கப்பட்ட இருபது லட்சமும் அதற்கு மேலுமான மரணங்களில் விளைவடைந்தது.
26. ‘அக்கினியால் எரிகிற மலை’ மனிதவர்க்கத்தின் சமுத்திரத்தில் எவ்வாறு தொடர்ந்து அலைகளை உண்டுபண்ணிக் கொண்டிருந்திருக்கிறது?
26 அந்த ‘அக்கினியால் எரிகிற மலை’ மனிதவர்க்க சமுத்திரத்தில் தொடர்ந்து அலைகளை உண்டாக்கிக் கொண்டிருந்தது. அரசாங்கத்தின் பேரில் போராட்டங்கள் ஆப்பிரிக்கா, அமெரிக்காக்கள், ஆசியா மற்றும் பசிபிக் தீவுகளிலே அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் போராட்டங்களில் அநேகம் கிறிஸ்தவமண்டல நாடுகளில் நடந்திருக்கின்றன அல்லது கிறிஸ்தவமண்டல மிஷனரிமார் விறுவிறுப்பாகச் செயலாற்றுபவர்களாக ஆகியிருக்கிற நாடுகளில் நடந்திருக்கின்றன. ரோமன் கத்தோலிக்க பாதிரிமார்கூட பொதுவுடைமைக் கொள்கையரின் கொரியில்லா குழுக்களில் சேர்ந்துகொண்டு அவற்றில் அங்கத்தினர்களாக சண்டை போட்டார்கள். அதே சமயத்தில், புராட்டஸ்டன்ட் சுவிசேஷ தொகுதிகள் அவை சொன்ன பிரகாரம் பொதுவுடைமைக் கொள்கையரின் “கொடிய மற்றும் கடுமை தணியாத அதிகாரத்திற்கான தாகத்தை” எதிர்த்து மத்திய அமெரிக்காவில் உழைத்தன, ஆனால் மனிதவர்க்கத்தின் சமுத்திரத்தில் இந்தக் குலுக்கல்கள் எதுவும் சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டு வர முடியாதிருக்கின்றன.—ஒப்பிடவும்: ஏசாயா 25:10-12; 1 தெசலோனிக்கேயர் 5:3.
27. (அ) “சமுத்திரத்தில் மூன்றில் ஒரு பங்கு” எவ்வாறு இரத்தமாக மாறியிருக்கிறது? (ஆ) ‘சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொரு பங்கு’ எவ்வாறு செத்துப் போயிற்று, மேலும் ‘கப்பல்களில் மூன்றிலொரு பங்குக்கு’ என்ன நடக்கும்?
27 இரண்டாவது எக்காள சத்தம், மனிதவர்க்கத்தில் யார் கடவுளுடைய ராஜ்யத்துக்கு கீழ்ப்படியாமல் அரசாங்கத்தின் பேரில் புரட்சிகரமானப் போர்களில் தங்களை உட்படுத்தினார்களோ, அவர்கள் இரத்தப் பழியுள்ளவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக கிறிஸ்தவமண்டலத்தின் “சமுத்திரத்தில் மூன்றிலொரு பங்கு” இரத்தத்தைப் போல் ஆகியிருக்கிறது. கடவுளுடைய கண்களில் அங்கேயிருக்கும் உயிருள்ளவையெல்லாம் செத்ததாக இருக்கின்றன. சமுத்திரத்தின் மூன்றிலொன்றில் படகுகளைப் போல் மிதந்து கொண்டிருக்கும் அடிப்படையில் மாற்றத்தை விரும்பும் அமைப்புகள் எதுவும் இறுதியில் கப்பற்சேதத்தை தவிர்க்க முடியாது. அந்தச் சமுத்திரத்தின் குறுகிய நாட்டுப் பற்று மற்றும் இரத்தப் பழியில் இன்னும் புரண்டு கொண்டிருப்பவர்களிலிருந்து பிரிந்து வருவதற்கான எக்காளத்தைப் போன்ற அழைப்பை பல லட்சக்கணக்கான செம்மறி ஆட்டைப் போன்ற ஜனங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காக நாம் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறோம்!
ஒரு நட்சத்திரம் வானத்திலிருந்து விழுகிறது
28. மூன்றாவது தூதன் எக்காளம் ஊதுகையில் என்ன நடக்கிறது?
28 “மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப் போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொரு பங்கின் மேலும், நீரூற்றுகளின் மேலும் விழுந்தது. அந்த நட்சத்திரத்திற்கு எட்டியென்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றிலொரு பங்கு எட்டியைப் போலக் கசப்பாயிற்று; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள்.” (வெளிப்படுத்துதல் 8:10, 11) மறுபடியும், பைபிளின் மற்ற பகுதிகள் கர்த்தருடைய நாளில் இந்த வசனம் எவ்வாறு பொருந்துகிறது என்பதைக் காண நமக்கு உதவுகின்றன.
29. ‘தீவட்டியைப் போல் எரிகிற ஒரு பெரிய நட்சத்திரத்தின்’ அடையாள முறைமையை எது நிறைவேற்றுகிறது, ஏன்?
29 நாம் ஏற்கெனவே ஏழு சபைகளுக்கு இயேசு அனுப்பின செய்திகளில் ஒரு நட்சத்திரத்தின் குறிப்பு அடையாள முறைமையைப் பார்த்துவிட்டோம், அதில் ஏழு நட்சத்திரங்கள் சபைகளின் மூப்பர்களை அடையாளப்படுத்துகின்றன. b (வெளிப்படுத்துதல் 1:20) அபிஷேகம் செய்யப்பட்ட ‘நட்சத்திரங்கள்’ அபிஷேகம் செய்யப்பட்ட மற்ற எல்லாரோடும், அவர்களுடைய பரலோக சுதந்திரத்தின் அடையாளமாக பரிசுத்த ஆவியினால் முத்திரை போடப்படும் நேரத்திலிருந்து ஆவிக்குரிய கருத்தில் பரலோக இடங்களில் குடியிருக்கிறார்கள். (எபேசியர் 2:6, 7) இருந்தபோதிலும், அப்பேர்ப்பட்ட நட்சத்திரத்தைப் போன்றவர்களிலிருந்து விசுவாசதுரோகிகள், உட்பிரிவுவாதிகள் எழும்பி மந்தையை தவறாக வழிநடத்துவார்கள் என்று அப்போஸ்தலனாகிய பவுல் எச்சரித்தார். (அப்போஸ்தலர் 20:29, 30) இவ்விதமான உண்மையற்றத் தன்மை ஒரு பெரிய விசுவாசதுரோகத்தில் விளைவடையும், இந்த விழுந்துபோன மூப்பர்களிலிருந்து ஒரு கூட்டு கேட்டின் மகன் உண்டாகி, மனிதவர்க்கத்தின் மத்தியில் ஒரு கடவுளைப் போன்ற ஸ்தானத்திற்கு தன்னை உயர்த்துவான். (2 தெசலோனிக்கேயர் 2:3, 4) கிறிஸ்தவமண்டலத்தின் குருமார் உலகக் காட்சியில் தோன்றினபோது பவுலின் எச்சரிக்கைகள் நிறைவேறின. இந்தத் தொகுதி நன்றாகவே ‘தீவட்டியைப் போல் எரிகிற ஒரு பெரிய நட்சத்திரம்’ என்ற அடையாளத்தினால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது.
30. (அ) வானத்திலிருந்து விழுந்த ஒருவனாக பாபிலோன் அரசன் பேசப்படுவது எதை அர்த்தப்படுத்தினது? (ஆ) வானத்திலிருந்து விழுவதானது எதைக் குறிக்கக்கூடும்?
30 இந்தக் குறிப்பிட்ட நட்சத்திரம் வானத்திலிருந்து விழுவதை யோவான் பார்க்கிறார். எவ்வாறு? ஒரு பூர்வ அரசனின் அனுபவங்கள் புரிந்துகொள்ள நமக்கு உதவுகின்றன, பாபிலோனின் அரசனிடம் பேசுகிறவனாக, ஏசாயா சொன்னான்: “அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே!” (ஏசாயா 14:12) பாபிலோன் கோரேசின் சேனைகளால் தோற்கடிக்கப்பட்டபோது, இந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேற்றமடைந்தது, அதனுடைய அரசன் உலக ஆட்சியிலிருந்து இழிவான தோல்விக்கு திடீரென இறங்கினான். இவ்வாறு, வானத்திலிருந்து விழுவதானது ஓர் உயர்ந்த நிலையை இழந்து அவமானப்பட்டு விழுவதைக் குறிக்கக்கூடும்.
31. (அ) கிறிஸ்தவமண்டலத்தின் குருமார் “பரலோக” ஸ்தானத்திலிருந்து எப்பொழுது விழுந்தார்கள்? (ஆ) குருமாரினால் கொடுக்கப்பட்ட தண்ணீர்கள் எவ்வாறு “எட்டி”யாக மாறியிருக்கிறது, மேலும் அநேகருக்கு என்ன விளைவுடன்?
31 கிறிஸ்தவமண்டலத்தின் குருமார் உண்மையான கிறிஸ்தவத்திலிருந்து விசுவாசதுரோகம் செய்தபோது, எபேசியர் 2:6, 7-ல் பவுலால் விவரிக்கப்பட்டிருக்கும் உன்னதமான “பரலோக” ஸ்தானத்திலிருந்து அவர்கள் விழுந்தார்கள். புத்துயிரூட்டும் சத்தியத்தின் தண்ணீர்களை கொடுப்பதற்குப் பதிலாக, “எட்டியைக்” கொடுத்தார்கள், நரக அக்கினி, உத்தரிக்கும் ஸ்தலம், திரித்துவம் மற்றும் முன்விதிக்கப்படுதல் போன்ற கசப்பான பொய்கள்; மேலும், அவர்கள் தேசங்களை யுத்தத்திற்குள் வழிநடத்தினார்கள். அவர்களை கடவுளின் ஒழுக்கமுள்ள ஊழியர்களாக கட்டியெழுப்ப தவறினார்கள். விளைவு? பொய்களுக்கு நம்பினவர்களை ஆவிக்குரிய விதத்தில் நஞ்சூட்டுதல் ஆகும். அவர்களுடைய நிலைமை எரேமியாவின் நாளின் உண்மையற்ற இஸ்ரவேலரின் நிலைமையைப் போலிருந்தது, அவர்களுக்கு யெகோவா சொன்னார்: “ஆதலால், இதோ, நான் அவர்கள் எட்டியைப் புசிக்க செய்து, குடிக்கப் பிச்சுக் கலந்த தண்ணீரைக் கொடுப்பேன், ஏனென்றால், எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரம்பிற்று.”—எரேமியா 9:15; 23:15, NW.
32. ஆவிக்குரிய பரலோகங்களிலிருந்து கிறிஸ்தவமண்டலத்தின் வீழ்ச்சி எப்பொழுது தெளிவாகக் காணப்பட்டது, மேலும் அது எவ்வாறு நாடகமாக காட்டப்பட்டது?
32 ஆவிக்குரிய பரலோகங்களிலிருந்து இந்த வீழ்ச்சி 1919-ல் தெளிவாகத் தெரிந்தது, அப்பொழுது, கிறிஸ்தவமண்டலத்தின் குருமாருக்கு மாறாக, அபிஷேகம் செய்யப்பட்ட சிறிய மீதியானோர் ராஜ்ய அக்கறைகளின் மேல் நியமிக்கப்பட்டார்கள். (மத்தேயு 24:45-47) மேலும் 1922-லிருந்து அந்த வீழ்ச்சி, இந்தக் கிறிஸ்தவர்களின் தொகுதி கிறிஸ்தவமண்டல குருமாரின் தவறுதல்களை வெளிப்படையாகத் தெரிவிப்பதற்கான அவர்களுடைய நடவடிக்கையை புதுப்பித்தபோது நாடகமாக காட்டப்பட்டது.
33. அ.ஐ.மா., கொலம்பஸிலுள்ள ஒஹாயோவில் 1924-ல் நடந்த மாநாட்டில் கிறிஸ்தவமண்டல குருமாரைப் பற்றி என்ன வெளிப்படுத்தப்பட்டது?
33 இதன் சம்பந்தமாக, பொற்காலம் விவரித்த வண்ணமாக, “சகாப்தங்களினூடே பைபிள் மாணாக்கரால் நடத்தப்பட்ட மிகப் பெரிய மாநாட்டிலே” செய்யப்பட்ட அறிவிப்பு முனைப்புமிக்கதாய் இருந்தது. இந்த மாநாடு கொலம்பஸிலுள்ள ஒஹாயோவில் ஜூலை 20-27, 1924-ல் கூடினது. சந்தேகமில்லாமல் மூன்றாவது எக்காளம் ஊதின தூதனின் கட்டளையின்படி, அங்கே ஒரு வலிமை வாய்ந்த தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது, மேலும் பின்னர் 5 கோடி பிரதிகள் துண்டுப்பிரதியாக விநியோகிக்கப்பட்டன. அது குருமார் குற்றம்சாட்டப்படுதல் (ஆங்கிலம்) என்ற தலைப்பின் கீழ் பிரசுரிக்கப்பட்டது. ஓர் உபதலைப்பு விவாதத்தை அளித்தது: “வாக்குப்பண்ணப்பட்ட வித்துக்கு எதிராக சர்ப்பத்தின் வித்து.” அந்தக் குற்றம்சாட்டுதல் தானே இதைப் போன்ற காரியங்களில் கிறிஸ்தவமண்டலத்தின் குருமாரை வெளிப்படுத்தினது, அதாவது அவர்கள் உயர்வாக-ஒலிக்கும் மதப் பட்டப்பெயர்களை வைத்துக்கொள்ளுதல், பெரிய வர்த்தகர்களையும் தொழிலாகக் கொண்டுள்ள அரசியல்வாதிகளையும் தங்களுடைய மந்தைகளில் முதன்மையானவர்களாக ஆக்குதல், மனிதர் முன்பாக பிரகாசிக்க வேண்டுமென்ற அவர்கள் விரும்புதல், மற்றும் மேசியாவின் ராஜ்யத்தைப் பற்றிய செய்தியை ஜனங்களுக்கு பிரசங்கிக்க அவர்கள் மறுத்தல். ஒவ்வொரு ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவனும் “நம்முடைய தேவனின் பழிவாங்கும் நாளை” அறிவிப்பதற்கும் “துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும்” கடவுளால் கட்டளையிடப்பட்டிருக்கிறான் என்பதை அது வலியுறுத்தினது.—ஏசாயா 61:2, கிங் ஜேம்ஸ்.
34, 35. (அ) மூன்றாவது தூதன் அவருடைய எக்காளத்தை ஊத ஆரம்பித்ததிலிருந்து குருமாரின் அதிகாரத்துக்கும் செல்வாக்குக்கும் என்ன நேரிட்டிருக்கிறது? (ஆ) கிறிஸ்தவமண்டலத்தின் குருமாருக்கு எதிர்காலம் எதைக் கொண்டிருக்கிறது?
34 மூன்றாவது தூதன் அவருடைய எக்காளத்தை ஊத ஆரம்பித்ததிலிருந்து, மனிதவர்க்கத்தின் மத்தியில் குருமாரின் ஆதிக்கத்தின் நிலை வழுக்கிக் கொண்டு வந்திருக்கிறது, இன்றைய நாளிலும் சகாப்தத்திலும், அவர்களில் வெகு சிலரே முந்திய நூற்றாண்டுகளில் அனுபவித்த கடவுளைப் போன்ற அதிகாரங்களை வைத்திருக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்கிப்பின் காரணமாக, பெரிய எண்ணிக்கையான ஜனங்கள் குருமாரால் போதிக்கப்பட்டிருக்கும் அநேக கோட்பாடுகள் ஆவிக்குரிய நச்சு—“எட்டி”—என்பதை அறிய வந்திருக்கிறார்கள். மேலும், வடக்கு ஐரோப்பாவில் குருமாரின் அதிகாரம் ஏறக்குறைய செலவழிந்துவிட்டது, மற்ற சில நாடுகளிலும், அரசாங்கம் அவர்களுடைய செல்வாக்கை கடுமையாக குறைவாக்கியிருக்கிறது. ஐரோப்பாவில் கத்தோலிக்க பகுதிகளில் மற்றும் அமெரிக்காக்களில், பொருளாதார, அரசியல் மற்றும் ஒழுக்க விவகாரங்களில் குருமாரின் அவதூறான நடத்தை அவர்களுடைய மதிப்பை கறைப்படுத்தியிருக்கிறது. இப்பொழுதிலிருந்து, அவர்களுடைய நிலைமை இன்னும் மோசமாக தான் இருக்கும், ஏனென்றால் சீக்கிரத்தில் மற்ற எல்லா பொய் மதத்தினரின் அதே முடிவை அவர்கள் அடைவார்கள்.—வெளிப்படுத்துதல் 18:21; 19:2.
35 யெகோவா கிறிஸ்தவமண்டலத்தை வாதிப்பது இன்னும் முடியவில்லை. நான்காவது எக்காள சத்தத்திற்கு பிறகு என்ன நடக்கிறது என்பதை கவனியுங்கள்.
இருள்!
36. நான்காம் தூதன் அவருடைய எக்காளத்தை ஊதின பின் என்ன நடக்கிறது?
36 “நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றிலொரு பங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொரு பங்கும் சேதப்பட்டது, அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடைந்தது; பகலிலும் மூன்றிலொரு பங்கு பிரகாசமில்லாமற் போயிற்று, இரவிலும் அப்படியேயாயிற்று.” (வெளிப்படுத்துதல் 8:12) எகிப்தின் மேல் வந்த ஒன்பதாவது வாதை சொல்லர்த்தமான இருளின் வாதையாக இருந்தது. (யாத்திராகமம் 10:21-29) ஆனால் மனிதரை வாதிக்க வரும் இந்த அடையாள அர்த்தமுள்ள இருள் என்ன?
37. கிறிஸ்தவ சபைக்கு வெளியே உள்ளவர்களுடைய ஆவிக்குரிய நிலையை அப்போஸ்தலர்கள் பேதுருவும் பவுலும் எவ்வாறு விவரித்தார்கள்?
37 அப்போஸ்தலனாகிய பேதுரு உடன் விசுவாசிகளிடம், ஆவிக்குரிய விதத்தில் பேசுகையில், அவர்கள் கிறிஸ்தவர்கள் ஆகிறதற்கு முன்பு அந்தகாரத்தில் இருந்தார்கள் என்று சொன்னார். (1 பேதுரு 2:9) பவுலும் கூட, கிறிஸ்தவ சபைக்கு வெளியில் இருக்கிறவர்களுடைய ஆவிக்குரிய நிலையை விவரிப்பதற்கு ‘அந்தகாரம்’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார். (எபேசியர் 5:8; 6:12; கொலோசெயர் 1:13; 1 தெசலோனிக்கேயர் 5:4, 5) ஆனால் கடவுளை நம்புகிறோம் என்று உரிமைபாராட்டி, இயேசுவை தங்களுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்ளுகிறோம் என்று சொல்லும் கிறிஸ்தவமண்டலத்தில் உள்ளவர்களைப் பற்றியதென்ன?
38. கிறிஸ்தவமண்டலத்தின் “வெளிச்சத்தைக்” குறித்து நான்காம் தூதன் என்ன உண்மையை எக்காளம் ஊதுகிறான்?
38 உண்மையான கிறிஸ்தவர்கள் அவர்களுடைய கனிகளினால் அறியப்படுவார்கள் என்றும், அவரைப் பின்பற்றுகிறவர்களாக உரிமைபாராட்டும் அநேகர் “அக்கிரமச் செய்கைக்காரர்களாக” இருப்பார்கள் என்றும் இயேசு சொன்னார். (மத்தேயு 7:15-23) உலகத்தின் மூன்றிலொரு பங்காக இருக்கும் கிறிஸ்தவமண்டலத்தின் கனிகளைப் பார்க்கையில், அவள் மொத்தமான ஆவிக்குரிய இருளில் தடவித் தேடிக்கொண்டு இருக்கிறாள் என்பதை எவரும் மறுக்க முடியாது. (2 கொரிந்தியர் 4:4) அவள் மிக அதிகமாக குற்றஞ்சாட்டப்படத்தக்கதாக இருக்கிறாள், ஏனென்றால் அவள் கிறிஸ்தவள் என்பதாக உரிமைபாராட்டுகிறாள். எனவே, கிறிஸ்தவமண்டலத்தின் “வெளிச்சம்,” உண்மையிலேயே, இருளாயிருக்கிறது என்று நான்காம் தூதன் எக்காளம் ஊதுவது தகுதியானதாகவே இருக்கிறது. அவளுடைய ‘வெளிச்சத்தின்’ ஊற்றுமூலங்கள் பாபிலோனினைச் சேர்ந்தவை—கிறிஸ்தவமல்லாதவை.—மாற்கு 13:22, 23; 2 தீமோத்தேயு 4:3, 4.
39. (அ) 1925 மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானம் கிறிஸ்தவமண்டலத்தின் பொய்யான வெளிச்சத்தை எவ்வாறு விவரித்தது? (ஆ) 1955-ல் மேலும் என்ன வெளிப்படுத்தப்பட்டது?
39 அந்தப் பரலோக அறிவிப்புக்கு இசைவாக, ஆகஸ்ட் 29, 1925, அ.ஐ.மா., இண்டியானா, இண்டியானாபோலிஸில் கடவுளுடைய ஜனங்களின் ஒரு திரள் கூட்டத்தினர் மாநாட்டில் கூடி, “நம்பிக்கையின் செய்தி” என்ற தலைப்புள்ள ஓர் ஒளிவுமறைவற்ற தீர்மானம் வெளியிடுவதை ஏற்றுக்கொண்டார்கள். மறுபடியும், அநேக மொழிகளில் ஏறக்குறைய 5 கோடி பிரதிகள் விநியோகிக்கப்பட்டன. வாணிக கொள்ளை ஆதாயக்காரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் மத குருமார்கள் சேர்ந்த கூட்டு அளிக்கும் பொய்யான வெளிச்சத்தையும், இதன் விளைவாக “ஜனங்கள் இருளுக்குள் விழுந்து இருப்பதையும்” அது விவரித்தது. “சமாதானம், செழுமை, ஆரோக்கியம், ஜீவன், விடுதலை மற்றும் நித்திய மகிழ்ச்சி, இந்த ஆசீர்வாதங்களைப்” பெறுவதற்கு கடவுளுடைய ராஜ்யமே உண்மையான நம்பிக்கை என்பதாக அது மேலும் குறித்துக்காட்டினது. மாபெரிய அமைப்பாகிய கிறிஸ்தவமண்டலத்திற்கு எதிராக இவ்விதமான செய்திகளை அறிவிப்பதற்கு அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சிறிய கூட்டத்திற்கு தைரியம் தேவைப்பட்டது. ஆனால், மாறாமல், 1920-களிலிருந்து இன்று வரையாக அவர்கள் அவ்விதம் செய்திருக்கிறார்கள். வெகு சமீப காலங்களில், 1955-ல் கிறிஸ்தவமண்டலமா கிறிஸ்தவமா—எது “உலகத்தின் வெளிச்”சமாயிருக்கிறது? என்ற தலைப்புடைய ஒரு சிறு புத்தகத்தை அநேக மொழிகளில் உலகம் முழுவதும் விநியோகம் செய்வதன் மூலம் குருவர்க்கத்தினரின் குற்றங்குறைகள் மேலும் வெளிப்படுத்தப்பட்டன. இன்று, உலகத்தில் அநேகர் அவர்கள்தாமே பார்க்கும்படியாக கிறிஸ்தவமண்டலத்தின் மாய்மாலம் அவ்வளவு தெளிவாக ஆகியிருக்கிறது. ஆனால், இருளின் ராஜ்யமாக அவள் இருப்பதை வெளிப்படுத்துவதை யெகோவாவின் ஜனங்கள் விட்டுவிடவில்லை.
ஒரு பறக்கும் கழுகு
40. நான்கு எக்காள சத்தங்கள் கிறிஸ்தவமண்டலம் என்னவாக இருப்பதாக காண்பித்தது?
40 இந்த முதல் நான்கு எக்காள சத்தங்கள் கிறிஸ்தவமண்டலத்தின் பாழாயுள்ள மற்றும் மரணத்தை விளைவிக்கும் நிலையை வெளிப்படுத்துவதில் உண்மையிலேயே விளைவடைந்தது. “பூமி”யில் அவளுடைய பாகம் யெகோவாவின் நியாயத்தீர்ப்புக்கு தகுதியுள்ளதாக வெளிப்படுத்தப்பட்டது. அவளுடைய நாடுகள் மற்றும் வேறு இடங்களில் உருவாகும் புரட்சிகரமான அரசாங்கங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு பகையானது என்று காண்பிக்கப்பட்டது. அவளுடைய குருமாரின் விழுந்த நிலை காண்பிக்கப்பட்டது, அவளுடைய ஆவிக்குரிய நிலையின் பொதுவான இருளை எல்லாரும் பார்க்கும்படி செய்யப்பட்டது. கிறிஸ்தவமண்டலம் சாத்தானுடைய ஒழுங்குமுறையின் மிக அதிக குற்றம்சாட்டப்படுவதற்கு உரிய பாகமாக உண்மையிலேயே இருக்கிறது.
41. எக்காள சத்தங்களின் தொடர்ச்சியில் ஓர் இடை நிறுத்தத்தில் யோவான் என்ன பார்க்கிறவராகவும் கேட்கிறவராகவும் இருக்கிறார்?
41 வெளிப்படுவதற்கு இன்னும் என்ன இருக்கிறது? இந்தக் கேள்விக்குப் பதிலைக் கண்டுபிடிப்பதற்கு முன், எக்காள சத்தங்களின் தொடர்ச்சியில் ஒரு சுருக்கமான இடை நிறுத்தம் இருக்கிறது. அடுத்து தான் பார்ப்பதை யோவான் விவரிக்கிறார்: “பின்பு, ஒரு தூதன் [ஒரு கழுகு, NW] வானத்தின் மத்தியிலே பறந்துவரக் கண்டேன்; அவன் [அது, NW] மகா சத்தமிட்டு: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காளசத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, (ஆபத்துவரும்) என்று சொல்லக்கேட்டேன்.”—வெளிப்படுத்துதல் 8:13.
42. பறக்கும் கழுகினால் என்ன பொருள்படலாம், மற்றும் அதனுடைய செய்தி என்ன?
42 ஒரு கழுகு விரிவான பகுதியில் உள்ள ஜனங்கள் அதைப் பார்க்கும்படியாக, வானத்தில் உயர பறக்கிறது. அது ஓர் அசாதாரணமான கூர்மையான பார்வையுடையதாக இருக்கிறது, அதற்கு, எதிரே நீண்ட தூரம் பார்க்க முடியும். (யோபு 39:29) கடவுளுடைய சிங்காசனத்தைச் சுற்றியுள்ள நான்கு கேருபீய ஜீவன்களில் ஒன்று ஒரு பறக்கும் கழுகுபோல படமாகக் காட்டப்பட்டது. (வெளிப்படுத்துதல் 4:6, 7) இந்தக் கேருபீனோ கூர்நோக்குடைய மற்றொரு கடவுளுடைய ஊழியனோ, ஒரு வல்லமை வாய்ந்த செய்தியைச் சத்தமாக அறிவிக்கிறது: “ஐயோ, ஐயோ, ஐயோ”! மீந்திருக்கும் மூன்று எக்காள சத்தங்கள் கேட்கையில், பூமியில் குடியிருப்பவர்கள் கவனிக்கட்டும், ஒவ்வொன்றும் இந்த ஆபத்துகளில் ஒன்றோடு இணைக்கப்பட்டிருக்கிறது.
[அடிக்குறிப்புகள்]
a மாறாக, திரள் கூட்டம் யெகோவாவினுடைய அங்கீகாரமின்மையின் எரியும் உஷ்ணத்தை அனுபவிப்பதில்லை என்று வெளிப்படுத்துதல் 7:16 காண்பிக்கிறது.
b இயேசுவின் வலது கரத்தில் உள்ள ஏழு நட்சத்திரங்கள் கிறிஸ்தவ சபையின் அபிஷேகம் செய்யப்பட்ட கண்காணிகளை படமாகக் காண்பிக்கையில், இன்று உலகத்தில் இருக்கும் சுமார் 1,00,000 சபைகளில் உள்ள மூப்பர்களில் மிகப் பெரும்பான்மையர் திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். (வெளிப்படுத்துதல் 1:16; 7:9) அவர்களுடைய நிலை என்ன? இவர்கள் அபிஷேகம் செய்யப்பட்ட உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பார் மூலமாக பரிசுத்த ஆவியினால் அவர்களுடைய நியமனத்தைப் பெறுவதால், இவர்கள் இயேசுவின் வலது கரத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாக சொல்லக்கூடும், ஏனென்றால் அவர்களும் அவருடைய உதவி மேய்ப்பர்களாக இருக்கிறார்கள். (ஏசாயா 61:5, 6; அப்போஸ்தலர் 20:28) தகுதிபெற்ற அபிஷேகம் செய்யப்பட்ட சகோதரர்கள் இல்லாத இடங்களில் சேவிப்பதன் மூலம் அவர்கள் “ஏழு நட்சத்திரங்களுக்கு” ஆதரவு கொடுக்கிறார்கள்.
[கேள்விகள்]
[பக்கம் 139-ன் அட்டவணை]
கிறிஸ்தவமண்டலத்தின் தண்ணீர்கள் எட்டியாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன
கிறிஸ்தவமண்டலத்தின் நம்பிக்கைகளும் மனப்பான்மைகளும் பைபிள் உண்மையிலேயே என்ன சொல்லுகிறது
கடவுளுடைய தனிப்பட்ட பெயர் முக்கியமில்லை: “ஒரே ஒரு கடவுளுக்கு இடுகுறிப் பெயரை உபயோகிப்பது . . . கிறிஸ்தவ சர்ச்சின் எல்லாருடைய விசுவாசத்திற்கு முழுவதுமாக தகுதியற்றது.” (ரிவைஸ்டு ஸ்டான்டர்டு வர்ஷன்-க்கு முகவுரை) கடவுளுடைய நாமம் பரிசுத்தப்படுவதாக என்று இயேசு ஜெபித்தார். பேதுரு சொன்னார்: “யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்.” (அப்போஸ்தலர் 2:21, NW; யோவேல் 2:32; மத்தேயு 6:9; யாத்திராகமம் 6:3; வெளிப்படுத்துதல் 4:11; 15:3; 19:6)
கடவுள் ஒரு திரித்துவம்: “பிதாவும் கடவுள், குமாரனும் கடவுள், பரிசுத்த ஆவியும் கடவுள், எனினும் மூன்று கடவுட்கள் இல்லை, ஒரே கடவுள் இருக்கிறார்.” (தி கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா, 1912 பதிப்பு) யெகோவா இயேசுவிலும் பெரியவராயிருக்கிறார் மற்றும் கிறிஸ்துவுக்குக் கடவுளும் தலையுமாயிருக்கிறார் என்று பைபிள் சொல்லுகிறது. (யோவான் 14:28; 20:17; 1 கொரிந்தியர் 11:3) பரிசுத்த ஆவி கடவுளுடைய கிரியை நடப்பிக்கும் சக்தி. (மத்தேயு 3:11; லூக்கா 1:41; அப்போஸ்தலர் 2:4)
மனித ஆத்துமா சாகாத தன்மையுடையது: “மனிதன் சாகும்போது, அவனுடைய ஆத்துமாவும் சரீரமும் பிரிக்கப்படுகிறது. அவனுடைய சரீரம் . . . அழிகிறது . . . என்றபோதிலும் மனித ஆத்துமா மரிப்பதில்லை.” (மரணத்திற்குப்பின் என்ன நேரிடுகிறது (ஆங்கிலம்), ரோமன் கேத்தலிக் பிரசுரம்) மனிதன் ஓர் ஆத்துமாவாக இருக்கிறான். மரணத்தில் ஆத்துமா யோசிப்பதையோ உணருவதையோ நிறுத்திவிடுகிறது. அது உண்டாக்கப்பட்ட மண்ணுக்குத் திரும்புகிறது. (ஆதியாகமம் 2:7; 3:19; சங்கீதம் 146:3, 4; பிரசங்கி 3:19, 20; 9:5, 10; எசேக்கியேல் 18:4, 20)
பொல்லாதவர்கள் மரணத்திற்குப்பின் நரகத்தில் தண்டிக்கப்படுகிறார்கள்: “பாரம்பரிய கிறிஸ்தவ நம்பிக்கையின் பிரகாரம், நரகம் முடிவில்லா கடும் துயரமும் நோவும் உள்ள ஓர் இடம்.” (தி உவர்ல்டு புக் என்ஸைக்ளோப்பீடியா, 1987 பதிப்பு) பாவத்தின் சம்பளம் மரணம், வாதனைக்குரிய வாழ்க்கை அல்ல. (ரோமர் 6:23) மரித்தோர் உணர்வற்றவர்களாக நரகத்தில் (ஹேடீஸ், ஷியோல்), இளைப்பாறிக்கொண்டு, உயிர்த்தெழுதலுக்காக எதிர்பார்த்திருக்கிறார்கள். (சங்கீதம் 89:48; யோவான் 5:28, 29; 11:24, 25; வெளிப்படுத்துதல் 20:13, 14)
“மீடியாட்ரிக்ஸ் என்ற பட்டப்பெயர் [பெண் மத்தியஸ்தர்] நமது அன்னைக்கு பொருத்தப்படுகிறது.” (நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா, 1967 பதிப்பு) கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே ஒரே மத்தியஸ்தர் இயேசு. (யோவான் 14:6; 1 தீமோத்தேயு 2:5; எபிரெயர் 9:15; 12:24)
குழந்தைகள் முழுக்காட்டப்பட வேண்டும்: “ஆரம்பத்திலிருந்தே முழுக்காட்டுதலாகிய புனித சடங்கை சர்ச் குழந்தைகளுக்குக் கொடுத்திருக்கிறது. இந்தப் பழக்கம் சட்டத்திற்குட்பட்டதென்று மட்டும் கருதப்படாமல், ஆனால் இது இரட்சிப்புக்கு அத்தியாவசியம் என்றும்கூட கற்பிக்கப்பட்டது.” (நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா, 1967 பதிப்பு) முழுக்காட்டுதல் சீஷராக்கப்பட்டு இயேசுவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய கற்றுக்கொடுக்கப்பட்டவர்களுக்கு. முழுக்காட்டுதலுக்குத் தகுதிபெற, ஒரு நபர் கடவுளுடைய வார்த்தையை புரிந்துகொள்ள வேண்டும் மற்றும் விசுவாசிக்க வேண்டும். (மத்தேயு 28:19, 20; லூக்கா 3:21-23; அப்போஸ்தலர் 8:35, 36)
அநேக சர்ச்சுகள் பாமர வகுப்பார் மற்றும் பாமர வகுப்பாருக்கு ஊழியம் செய்யும் குரு வகுப்பார் என்று பிரிக்கப்பட்டிருக்கின்றன. குரு வகுப்பார் அவர்களுடைய ஊழியத்துக்குப் பரிமாற்றமாக சம்பளம் கொடுக்கப்படுகிறார்கள். மேலும் “திருத்தகு,” “பாதிரி,” அல்லது “பெருந்தகை” போன்ற பட்டப்பெயர்களின் மூலம் பாமர வகுப்பாருக்கு மேலாக உயர்த்தப்பட்டிருக்கிறார்கள். எல்லா முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் ஊழியர்களாக இருந்து நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் பங்குகொண்டார்கள். (அப்போஸ்தலர் 2:17, 18; ரோமர் 10:10-13; 16:1) ஒரு கிறிஸ்தவன் “இலவசமாகக் கொடுக்க வேண்டும்,” சம்பளத்துக்காக அல்ல. (மத்தேயு 10:7, 8) இயேசு மதசம்பந்தமான பட்டப்பெயர்களைப் பயன்படுத்துவதைக் கண்டிப்பாகத் தடைசெய்தார். (மத்தேயு 6:2; 23:2-12; 1 பேதுரு 5:1-3)
வணக்கத்தில் சொரூபங்கள், உருவங்கள் மற்றும் சிலுவைகள் பயன்படுத்தப்படுகின்றன: “கிறிஸ்துவின், கடவுளின் கன்னித்தாயின் மேலும் மற்ற புனிதர்களின் . . . சொரூபங்கள் . . . சர்ச்சுகளில் வைக்கப்பட்டு அதற்குரிய பயபக்தியும் கனமும் செலுத்தப்பட வேண்டும்.” (டிக்ளரேஷன் ஆஃப் தி கவுன்சில் ஆஃப் டிரென்ட் [1545-63]) எல்லாவிதமான விக்கிரகாராதனையிலிருந்து கிறிஸ்தவர்கள் விலகியோட வேண்டும். சம்பந்தப்பட்ட வணக்கம் என்றழைக்கப்படுவதையும் இது உள்ளடக்குகிறது. (யாத்திராகமம் 20:4, 5; 1 கொரிந்தியர் 10:14; 1 யோவான் 5:21) அவர்கள் கடவுளை தரிசித்து அல்ல ஆனால் ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுகிறார்கள். (யோவான் 4:23, 24; 2 கொரிந்தியர் 5:7)
கடவுளுடைய நோக்கங்கள் அரசியல் மூலமாக நிறைவேற்றப்படும் என்பதாக சர்ச் அங்கத்தினர் கற்பிக்கப்படுகிறார்கள். காலஞ்சென்ற கார்டினல் ஸ்பெல்மன் கூறினார்: “சமாதானத்திற்கு ஒரே பாதை இருக்கிறது . . . குடியாட்சியின் நெடுஞ்சாலை.” செய்திக் குறிப்புகள், உலகத்தின் அரசியலில் மதம் உட்பட்டிருப்பதையும் (ஆட்சிக்கெதிரான எழுச்சிகளிலும்கூட) மேலும் ஐநா-வை “ஒற்றுமைக்கும் சமாதானத்துக்கும் கடைசி நம்பிக்கை” என அவள் ஆதரிப்பதையும் அறிவிக்கின்றன. இயேசு ஏதோ ஓர் அரசியல் அமைப்பை அல்ல, கடவுளுடைய ராஜ்யமே மனிதவர்க்கத்துக்கான நம்பிக்கையென பிரசங்கித்தார். (மத்தேயு 4:23; 6:9, 10) அரசியலில் உட்படுவதை அவர் மறுத்தார். (யோவான் 6:14, 15) அவருடைய ராஜ்யம் இவ்வுலகத்தின் பாகமாக இல்லை; எனவே, அவரைப் பின்பற்றுகிறவர்களும் உலகத்தின் பாகமாக இருக்கக்கூடாது. (யோவான் 18:36; 17:16) யாக்கோபு உலக சிநேகத்திற்கெதிராக எச்சரித்தார். (யாக்கோபு 4:4)
[பக்கம் 132-ன் படம்]
ஏழு முத்திரைகளை உடைப்பது, ஏழு எக்காளங்கள் ஊதப்படுவதில் விளைவடைகிறது
[பக்கம் 140-ன் படம்]
“உலகத் தலைவர்களுக்கு ஒரு சவால்.” (1922) இந்தத் தீர்மானம் ‘பூமிக்கு’ எதிரான யெகோவாவின் வாதையை விளம்பரப்படுத்துவதற்கு உதவியது
[பக்கம் 140-ன் படம்]
“எல்லா கிறிஸ்தவர்களுக்கும் ஓர் எச்சரிக்கை.” (1923) ‘சமுத்திரத்தின் மூன்றிலொரு பங்குக்கு’ எதிரான யெகோவாவின் பாதகமான நியாயத்தீர்ப்பை இந்தத் தீர்மானத்தின் மூலம் யாவருக்கும் தெரியும்படி அறிவிக்கப்பட்டது
[பக்கம் 141-ன் படம்]
“குருமார் குற்றம்சாட்டப்படுதல்.” (1924) இந்தத் துண்டுப்பிரதி விரிவாக சுற்றி அனுப்பப்பட்டதானது கிறிஸ்தவமண்டல குருமாரின் ‘நட்சத்திரம்’ விழுந்துவிட்டது என்பதை ஜனங்களுக்கு அறிவிக்க உதவியது
[பக்கம் 141-ன் படம்]
“நம்பிக்கையின் செய்தி” (1925) இந்த ஒளிவுமறைவில்லாத தீர்மானம் கிறிஸ்தவமண்டல வெளிச்சத்தின் ஊற்றுமூலங்களாக எண்ணப்பட்டவைகள் உண்மையிலேயே இருளின் ஊற்றுமூலங்கள் என்பதை வெளிப்படுத்த பயன்படுத்தப்பட்டது