Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சர்ப்பத்தின் தலையை நசுக்குதல்

சர்ப்பத்தின் தலையை நசுக்குதல்

அதிகாரம்  40

சர்ப்பத்தின் தலையை நசுக்குதல்

தரிசனம் 14​—வெளிப்படுத்துதல் 20:1-10

பொருள்: சாத்தானை அபிஸ்ஸுக்கு உட்படுத்துதல், ஆயிர ஆண்டு ஆட்சி, மனிதவர்க்கத்தின் கடைசி சோதனை மற்றும் சாத்தானின் அழிவு

நிறைவேற்றத்தின் காலம்: மிகுந்த உபத்திரவத்தின் முடிவிலிருந்து சாத்தான் அழிக்கப்படும் வரை

1. பைபிளிலுள்ள அந்த முதல் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் எவ்வாறு படிப்படியாய்த் தொடர்ந்தது?

 பைபிளின் முதல் தீர்க்கதரிசனம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? யெகோவா தேவன் சர்ப்பத்தை நோக்கிப் பின்வருமாறு சொன்னபோது அதைக் கூறினார்: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.” (ஆதியாகமம் 3:15) இப்பொழுது அந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் அதன் உச்சக்கட்டத்துக்கு வருகிறது! சாத்தான் யெகோவாவின் ஸ்திரீயைப்போன்ற பரலோக அமைப்புக்கு எதிராகப் போரிடுவதன் சரித்திரத்தை நாம் படிப்படியாய் ஆராய்ந்துபார்த்தோம். (வெளிப்படுத்துதல் 12:1, 9) இந்தச் சர்ப்பத்தின் பூமிக்குரிய வித்து, அதன் மதம், அரசியல், மற்றும் பெரிய வாணிபத்தைக் கொண்டு, இங்கே பூமியில், இயேசு கிறிஸ்துவும் அவரைப் பின்பற்றுவோரான 1,44,000 பேரான இந்த ஸ்திரீயினுடைய வித்தின்மீது கொடுமையான துன்புறுத்தலைக் குவித்திருக்கிறது. (யோவான் 8:37, 44; கலாத்தியர் 3:16, 29) சாத்தான் இயேசுவைக் கடும் வேதனையான மரணத்துக்குட்படுத்தினான். ஆனால் இது குதிங்கால் காயத்தைப்போல் நிரூபித்தது, ஏனெனில் கடவுள் தம்முடைய உண்மையுள்ள குமாரனை மூன்றாம் நாளில் உயிர்த்தெழுப்பினார்.—அப்போஸ்தலர் 10:38-40.

2. அந்தச் சர்ப்பம் எவ்வாறு நசுக்கப்படுகிறது, சர்ப்பத்தின் பூமிக்குரிய வித்துக்கு என்ன நேரிடுகிறது?

2 சர்ப்பத்தையும் அதன் வித்தையும் பற்றியதென்ன? பெரும்பாலும் பொ.ச. 56-ல் அப்போஸ்தலன் பவுல் ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு ஒரு நீண்ட நிருபத்தை எழுதினார். அதை முடிக்கையில், அவர் பின்வருமாறு கூறி அவர்களை ஊக்கப்படுத்தினார்: “சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின்கீழே நசுக்கிப்போடுவார்.” (ரோமர் 16:20) இது மேலீடாகப் பாதிக்கும் நசுக்குதலைப் பார்க்கிலும் மிகைப்பட்டது. சாத்தான் நசுக்கப்படவிருக்கிறான்! இங்கே பவுல் சின்டிரைபோ (syn·triʹbo) என்ற கிரேக்கச் சொல்லைப் பயன்படுத்தினார், இது, கொழுங்குழம்பு போன்ற நிலைக்கு நசுக்குவது, மிதித்துப்போடுவது, நசுக்குவதால் முற்றிலும் அழித்துப்போடுவது எனப் பொருள்படுகிறது. இந்தச் சர்ப்பத்தின் மனித வித்தைக் குறித்ததில், கர்த்தருடைய நாளில் உண்மையில் வாதிக்கப்படவும், உச்சக்கட்டமாக, மிகுந்த உபத்திரவத்தில் மகா பாபிலோனும் இவ்வுலகத்தின் அரசியல் ஒழுங்குமுறைகளும், தங்கள் பணவிவகார மற்றும் இராணுவ மேதகையோருடன் முழுமையாக நசுக்கப்படவும் இருக்கிறது. (வெளிப்படுத்துதல், அதிகாரங்கள் 18-ம் 19-ம்) இவ்வாறு இந்த இரண்டு வித்துக்களிடையேயுள்ள பகைமையை ஓர் உச்சக்கட்டத்துக்கு யெகோவா கொண்டுவருகிறார். கடவுளுடைய ஸ்திரீயின் வித்து சர்ப்பத்தின் பூமிக்குரிய வித்தின்மீது வெற்றிபெறுகிறது, அந்த வித்து இனிமேலும் இல்லை!

சாத்தான் அபிஸ்ஸுக்கு உட்படுத்தப்படுகிறான்

3. சாத்தானுக்கு என்ன நேரிடப்போவதாக யோவான் நமக்குச் சொல்லுகிறார்?

3 அவ்வாறெனில், சாத்தானுக்குத்தானேயும் அவனுடைய பேய்களுக்கும் என்ன வைக்கப்பட்டிருக்கிறது? யோவான் நமக்குச் சொல்வதாவது: “ஒரு தூதன் பாதாளத்தின் [அபிஸ்ஸின், NW] திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே [அபிஸ்ஸிலே, NW] தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான். அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும்.”—வெளிப்படுத்துதல் 20:1-3.

4. அபிஸ்ஸின் திறவுகோலையுடைய இந்தத் தூதன் யார், நமக்கு எவ்வாறு தெரியும்?

4 இந்தத் தூதன் யார்? யெகோவாவின் பிரதான சத்துருவை ஒழித்துப்போடக்கூடியதற்கு அவர் மிகுதியான வல்லமையுடையவராக இருக்க வேண்டும். அவர் “பாதாளத்தின் [அபிஸ்ஸின், NW] திறவுகோலையும் பெரிய சங்கிலியையும்” வைத்திருக்கிறார். இது முந்தின ஒரு தரிசனத்தை நமக்கு நினைப்பூட்டுகிறதல்லவா? ஆம், வெட்டுக்கிளிகளின்மீது ஆண்ட அரசர் “பாதாளத்தின் [அபிஸ்ஸின், NW] தூதன்” என்று அழைக்கப்படுகிறார்! (வெளிப்படுத்துதல் 9:11) ஆகவே, யெகோவாவின் முக்கிய நியாயநிரூபணராகிய, மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து செயல்படுவதை, இங்கே நாம் மறுபடியுமாகக் கவனிக்கிறோம். சாத்தானைப் பரலோகத்திலிருந்து வெளித்தள்ளினவரும், மகா பாபிலோனை நியாயந்தீர்த்தவரும், அர்மகெதோனில் ‘பூமியின் ராஜாக்களையும் அவர்களுடைய சேனைகளையும்’ ஒழித்தவருமான இந்தப் பிரதான தூதன், நிச்சயமாகவே, சாத்தானை அபிஸ்ஸுக்கு உட்படுத்துவதற்கு அந்த வல்லமைமிகுந்த அடியைக் கொடுப்பதைக் கீழ்ப்பட்ட ஒரு தூதனிடம் விட்டு தாம் விலகிக்கொள்ளமாட்டார்!—வெளிப்படுத்துதல் 12:7-9; 18:1, 2; 19:11-21.

5. அபிஸ்ஸின் தூதன் பிசாசான சாத்தானை எவ்வாறு கையாளுகிறார், ஏன்?

5 அந்தச் சிவப்புநிற பெரிய வலுசர்ப்பம் பரலோகத்திலிருந்து கீழே தள்ளப்பட்டபோது, அவன் “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம்” எனக் குறிப்பிட்டுப் பேசப்பட்டான். (வெளிப்படுத்துதல் 12:3, 9) இப்பொழுது, பிடிபட்டு அபிஸ்ஸுக்கு உட்படுத்தப்படும் நிலையில் அவன் “பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பம்” என மீண்டும் முழுமையாக விவரிக்கப்படுகிறான். வெறியுடன் விழுங்குபவனும், வஞ்சிப்பவனும், பழிதூற்றுபவனும், எதிரியுமான இந்த இழிபேரெடுத்தவன் சங்கிலியால் கட்டப்பட்டு ‘அபிஸ்ஸுக்குள்’ தள்ளப்படுகிறான், அவன் இனிமேலும் “ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு” அது இறுக மூடி முத்திரையிடப்படுகிறது. இவ்வாறு சாத்தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு அபிஸ்ஸுக்கு உட்படுத்தப்பட்டிருப்பான், இந்தக் காலத்தின்போது, ஆழமான சிறைக்கிடங்கிலுள்ள ஒரு கைதியின் காரியத்தைப்போல், மனிதவர்க்கத்தின்மீது அவனுடைய செல்வாக்கு இராது. அபிஸ்ஸின் தூதன், நீதியுள்ள ராஜ்யத்தோடு எவ்விதத் தொடர்பும் இராதபடி சாத்தானை முற்றிலும் நீக்கிவைக்கிறார். மனிதவர்க்கத்துக்கு எத்தகைய விடுதலையாயிருக்கும்!

6. (அ) அந்தப் பேய்களும் அபிஸ்ஸுக்குள் செல்கின்றனரென்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது? (ஆ) இப்பொழுது எது தொடங்கலாம், ஏன்?

6 அந்தப் பேய்களுக்கு என்ன நேரிடுகிறது? அவர்களும் “நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்”டிருக்கின்றனர். (2 பேதுரு 2:4) சாத்தான் “பேய்களின் தலைவனாகிய பெயல்செபூல்” என்றழைக்கப்படுகிறான். (லூக்கா 11:15, 18, தி.மொ.; மத்தேயு 10:25) சாத்தானோடு சேர்ந்து அவர்கள் நீடித்தக் காலம் உழைத்துவந்ததைக் கருதுகையில், அவர்களுக்கும் அதே ஆக்கினைத்தீர்ப்பு வழங்கப்பட வேண்டுமல்லவா? அந்தப் பேய்களுக்கு இந்த அபிஸ், நெடுங்காலமாக பயத்துக்குரிய ஒன்றாக இருந்திருக்கிறது; ஒரு சந்தர்ப்பத்தில் இயேசு அவற்றை எதிர்ப்பட்டபோது, “தங்களைப் பாதாளவிருளிலே [அபிஸ்ஸின் இருளிலே, NW] போகக் கட்டளையிடாதபடி அவைகள் அவரை [தொடர்ந்து, NW] வேண்டிக்கொண்டன.” (லூக்கா 8:31, தி.மொ.) ஆனால் சாத்தான் அபிஸ்ஸுக்குள் தள்ளப்படுகையில், நிச்சயமாகவே அவனுடைய தூதர்களும் அவனுடன் அபிஸ்ஸுக்குள் தள்ளப்படுவர். (ஏசாயா 24:21, 22-ஐ ஒத்துப்பாருங்கள்.) சாத்தானையும் அவனுடைய பேய்களையும் அபிஸ்ஸுக்கு உட்படுத்தின பின்பு, இயேசு கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு ஆட்சி தொடங்கலாம்.

7. (அ) அபிஸ்ஸில் சாத்தானும் அவனுடைய பேய்களும் என்ன நிலையில் இருப்பார்கள், நமக்கு எவ்வாறு தெரியும்? (ஆ) ஹேடீஸும் அபிஸ்ஸும் ஒன்றேதானா? (அடிக்குறிப்பைக் காண்க.)

7 அபிஸ்ஸுக்குள் இருக்கையில் சாத்தானும் அவனுடைய பேய்களும் செயல்படுவார்களா? “முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து [அபிஸ்ஸிலிருந்து, NW] ஏறிவந்து, நாசமடையப்போகிற”தான அந்த ஏழு தலைகளையுடைய சிவப்புநிற, மூர்க்க மிருகத்தை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். (வெளிப்படுத்துதல் 17:8) அபிஸ்ஸுக்குள் இருக்கையில் அது “இல்லை.” அது செயலற்றதாக, இயங்காததாக, எல்லா எண்ணங்களுக்கும் நோக்கங்களுக்கும் செத்ததாக இருந்தது. அவ்வாறே, இயேசுவைப்பற்றிப் பேசி, அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு கூறினார்: “கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணும்படி பாதாளத்துக்கு [அபிஸ்ஸுக்குள், NW] இறங்குகிறவன் யார்?” (ரோமர் 10:7) அந்த அபிஸ்ஸுக்குள் இருக்கையில், இயேசு மரித்திருந்தார். a அவ்வாறெனில், சாத்தானும் அவனுடைய பேய்களும், தாங்கள் அபிஸ்ஸுக்குள்ளிருக்கும் அந்த ஆயிர ஆண்டுகள் மரித்தநிலையைப்போன்ற செயலற்ற நிலையில் இருப்பார்களென்னும் முடிவுக்கு வருவது நியாயமாயிருக்கிறது. நீதியை நேசிப்போருக்கு எத்தகைய நற்செய்தி!

ஆயிரம் ஆண்டுகளுக்கு நியாயந்தீர்க்கிறார்

8, 9. சிங்காசனங்களில் உட்கார்ந்திருப்பவர்களைப் பற்றி இப்பொழுது யோவான் நமக்கு என்ன சொல்லுகிறார், அத்தகையோர் யார்?

8 அந்த ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு, சாத்தான் கொஞ்சக்காலத்துக்கு அபிஸ்ஸிலிருந்து விடுதலை செய்யப்படுகிறான். ஏன்? இதற்குப் பதில் கொடுப்பதற்கு முன்பாக, யோவான் நம்முடைய கவனத்தை அந்தக் காலப் பகுதியின் தொடக்கத்துக்குத் திரும்பக் கொண்டுவருகிறார். நாம் வாசிப்பதாவது: “அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.” (வெளிப்படுத்துதல் 20:4அ) பரலோகங்களில் மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவுடன் சிங்காசனங்களில் உட்கார்ந்து ஆட்சி செய்யும் இவர்கள் யாவர்?

9 அவர்கள் “மனுஷகுமாரனுடைய சாயலான” ஒருவருடன் ராஜ்யத்தில் ஆளுவதாக தானியேல் விவரித்த “பரிசுத்தவான்கள்.” (தானியேல் 7:13, 14, 18) அவர்கள் யெகோவாவின் முன்னிலையில்தானே பரலோக சிங்காசனங்களில் உட்காரும் அந்த 24 மூப்பர்களே. (வெளிப்படுத்துதல் 4:4) இயேசு பின்வருமாறு அவர்களுக்கு வாக்குக் கொடுத்த அந்த 12 அப்போஸ்தலர்களும் இவர்களில் அடங்கியிருக்கின்றனர்: “சமஸ்தமும் புதிதாக்கப்படுங் காலத்தில் மனுஷகுமாரன் தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள்.” (மத்தேயு 19:28, தி.மொ.) பவுலும் உண்மையுடன் நிலைத்திருந்த கொரிந்திய கிறிஸ்தவர்களுங்கூட அவர்களில் அடங்கியிருக்கின்றனர். (1 கொரிந்தியர் 4:8; 6:2, 3) ஜெயங்கொண்ட லவோதிக்கேயா சபையின் உறுப்பினர்களுங்கூட அவர்களில் அடங்கியிருப்பர்.—வெளிப்படுத்துதல் 3:21.

10. (அ) அந்த 1,44,000 அரசர்களை இப்பொழுது யோவான் எவ்வாறு விவரிக்கிறார்? (ஆ) யோவான் நமக்கு முன்னால் சொன்னதன் ஆதாரத்தின்பேரில், இந்த 1,44,000 அரசர்களில் யார் அடங்கியிருக்கின்றனர்?

10 சிங்காசனங்கள்—1,44,000 சிங்காசனங்கள்—“மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்ட,” ஜெயங்கொண்டவர்களான அபிஷேகஞ்செய்யப்பட்ட இவர்களுக்காக ஆயத்தஞ்செய்யப்பட்டிருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 14:1, 4) “அன்றியும்,” யோவான் தொடர்ந்து சொல்லுகிறார், “இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் [கோடாரியால், NW] சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன்.” (வெளிப்படுத்துதல் 20:4ஆ) அவ்வாறெனில், ஐந்தாவது முத்திரையை உடைத்தபோது, தங்கள் இரத்தத்துக்குப் பழிவாங்கத் தாம் இன்னும் எவ்வளவு காலம் காத்திருப்பாரென யெகோவாவைக் கேட்ட, அபிஷேகஞ்செய்யப்பட்ட அந்தக் கிறிஸ்தவ இரத்தச் சாட்சிகளும் அந்த அரசர்களுக்குள் அடங்கியிருக்கின்றனர். அந்தச் சமயத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கி கொடுக்கப்பட்டு இன்னும் கொஞ்சக்காலம் காத்திருக்கும்படி சொல்லப்பட்டது. ஆனால் இப்பொழுது ராஜாதி ராஜாவும் கர்த்தாதி கர்த்தாவுமானவர் மகா பாபிலோனைப் பாழாக்கி, ராஜ்யங்களை அழித்து, சாத்தானை அபிஸ்ஸுக்கு உட்படுத்தினதன்மூலம் அவர்கள் பழிவாங்கப்பட்டாகிவிட்டது.—வெளிப்படுத்துதல் 6:9-11; 17:16; 19:15, 16.

11. (அ) ‘கோடாரியால் சிரச்சேதம்பண்ணப்பட்டார்கள்’ என்ற இந்தக் கூற்றை நாம் எவ்வாறு விளங்கிக்கொள்வது? (ஆ) அந்த 1,44,000 பேர் எல்லாரும் பலிக்குரிய ஒரு மரணத்தில் மரித்தார்களென ஏன் சொல்லப்படலாம்?

11 இந்த 1,44,000 ராஜரிக நியாயாதிபதிகள் எல்லாரும் மாம்சப்பிரகாரமாய் ‘கோடாரியால் சிரச்சேதம்பண்ணப்பட்டார்களா’? சொல்லர்த்தமான கருத்தில் பெரும்பாலும் சிலரே அவ்வாறு செய்யப்பட்டார்கள். எனினும், இந்தக் கூற்று ஏதோவொரு வகையில் இரத்தச்சாட்சி மரணத்தைச் சகிக்கும் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் யாவரையும் உள்ளடக்கும்படி சந்தேகமில்லாமல் கருதப்பட்டது. b (மத்தேயு 10:22, 28) நிச்சயமாகவே, சாத்தான் அவர்கள் எல்லாரையும் கோடாரியால் சிரச்சேதம்பண்ண விரும்பியிருப்பான், ஆனால், உண்மையில், இயேசுவின் அபிஷேகஞ்செய்யப்பட்ட சகோதரர் யாவரும் இரத்தச்சாட்சிகளாக மரிக்கிறதில்லை. அவர்களில் பலர் நோய் அல்லது முதிர்வயதின் காரணமாக மரிக்கின்றனர். எனினும், இத்தகையோரும், யோவான் இப்பொழுது காணும் அந்தத் தொகுதிக்குரியோராக இருக்கின்றனர். அவர்கள் யாவருடைய மரணமும் ஒரு கருத்தில், பலிக்குரியதாயுள்ளது. (ரோமர் 6:3-5) கூடுதலாக, அவர்களில் ஒருவரும் இவ்வுலகத்தின் பாகமானோராக இருக்கவில்லை. ஆகவே, அவர்கள் எல்லாரும் உலகத்தால் பகைக்கப்பட்டனர், உண்மையில், அதன் கண்களில் செத்தவர்களாகி விட்டனர். (யோவான் 15:19; 1 கொரிந்தியர் 4:13) அவர்களில் ஒருவரும் மூர்க்க மிருகத்தையாகிலும் அதன் சொரூபத்தையாகிலும் வணங்கவில்லை, மேலும் அவர்கள் மரித்தபோது, அவர்களில் ஒருவரும் அந்த மிருகத்தின் முத்திரையைத் தாங்கிச்செல்லவில்லை. அவர்களெல்லாரும் ஜெயங்கொண்டவர்களாக மரித்தனர்.—1 யோவான் 5:4; வெளிப்படுத்துதல் 2:7; 3:12; 12:11.

12. அந்த 1,44,000 அரசர்களைப்பற்றி யோவான் என்ன அறிவிக்கிறார், அவர்கள் உயிருக்கு வருவது எப்பொழுது நடைபெறுகிறது?

12 ஜெயித்தவர்களான இவர்கள் மறுபடியும் உயிர்வாழ்கிறார்கள்! யோவான் அறிவிப்பதாவது: “அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.” (வெளிப்படுத்துதல் 20:4இ) ராஜ்யங்கள் அழிக்கப்பட்டு, சாத்தானும் அவனுடைய பேய்களும் அபிஸ்ஸுக்கு உட்படுத்தப்பட்டுத்தீரும் வரையில் இந்த நியாயாதிபதிகள் உயிர்த்தெழுப்பப்படுகிறதில்லையென இது பொருள்படுகிறதா? இல்லை. இவர்களில் பெரும்பான்மையர் ஏற்கெனவே உயிருடன் வெகுவாய் செயல்படுவோராக இருக்கின்றனர், எவ்வாறெனில் அவர்கள் அர்மகெதோனில் ராஜ்யங்களுக்கு எதிராக இயேசுவுடன் சவாரிசெய்தனர். (வெளிப்படுத்துதல் 2:26, 27; 19:14) நிச்சயமாகவே, அவர்களுடைய உயிர்த்தெழுதல் 1914-ல் இயேசு வந்திருத்தலின் தொடக்கத்தை உடனடுத்து தொடங்குகிறதெனவும், சிலர் மற்றவர்களுக்கு முன்னால் உயிர்த்தெழுப்பப்படுகின்றனரெனவும் பவுல் குறிப்பிட்டார். (1 கொரிந்தியர் 15:51-54; 1 தெசலோனிக்கேயர் 4:15-17) ஆகையால், தனி நபர்களாக அவர்கள் ஒவ்வொருவரும் பரலோகங்களில் அழியாமைக்குரிய ஜீவனின் பரிசைப் பெற்று வருவதால், அவர்கள் உயிருக்கு வருவது ஒரு காலப்பகுதியை எடுத்துக்கொள்கிறது.—2 தெசலோனிக்கேயர் 1:7; 2 பேதுரு 3:11-14.

13. (அ) இந்த 1,44,000 பேர் ஆட்சி செய்யும் காலமாகிய அந்த ஆயிரம் ஆண்டுகளை நாம் எவ்வாறு கருதவேண்டும், ஏன்? (ஆ) ஹீராபோலிஸின் பப்பையாஸ் இந்த ஆயிரம் ஆண்டுகளை எவ்வாறு கருதினார்? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

13 அவர்கள் ஆட்சிசெய்வதும் நியாயந்தீர்ப்பதும் ஆயிரம் ஆண்டுகளுக்கு நடைபெறும். இது சொல்லர்த்தமான ஆயிரம் ஆண்டுகளா அல்லது அடையாளக்குறிப்பான, வரையறுக்கப்படாத நீண்ட காலப்பகுதியென நாம் கருதவேண்டுமா? “ஆயிரங்கள்” என்பது 1 சாமுவேல் 21:11-ல் (NW) இருப்பதுபோல், வரையறுக்கப்படாத பெரும் எண்ணிக்கையைக் குறிக்கலாம். ஆனால் இங்கே இந்த “ஆயிரம்” சொல்லர்த்தமானது, எவ்வாறெனில், வெளிப்படுத்துதல் 20:5-7-ல் (தி.மொ.) அந்த ஆயிரம் வருஷம்” என மூன்று தடவைகள் தோன்றுகிறது. பவுல் பின்வருமாறு சொன்னபோது, இந்த நியாயத்தீர்ப்பின் காலத்தை ‘ஒரு நாள்’ என அழைத்தார்: “[கடவுள்] ஒரு நாளை குறித்திருக்கிறார்; அதிலே அவர் . . . பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்க்கப்போகிறார்.” (அப்போஸ்தலர் 17:31, தி.மொ.) யெகோவாவுக்கு ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாள்போல் இருக்கிறதென பேதுரு சொல்வதால், இந்த நியாயத்தீர்ப்பின் நாள் சொல்லர்த்தமான ஓர் ஆயிரம் ஆண்டுகள் என்பது பொருத்தமாயுள்ளது. c2 பேதுரு 3:8.

மரணமடைந்த மற்றவர்கள்

14. (அ) “மரணமடைந்த மற்றவர்க”ளைப் பற்றி என்ன கூற்றை யோவான் இடைக்குறிப்பாகச் சேர்க்கிறார்? (ஆ) அப்போஸ்தலன் பவுல் சொன்ன கூற்றுகள், “உயிரடைய” என்ற பதத்தின்பேரில் எவ்வாறு விளக்கத்தைத் தருகின்றன?

14 எனினும், “மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை” என்று அப்போஸ்தலன் யோவான் இங்கே இடைக்குறிப்பாகச் சேர்த்திருப்பதைக் கவனிக்கையில், இந்த அரசர்கள் யாரை நியாயந்தீர்ப்பார்கள்? (வெளிப்படுத்துதல் 20:5அ, தி.மொ.) “உயிரடைய” என்பது மறுபடியுமாக சூழமைவின்படி விளங்கிக்கொள்ளப்பட வேண்டும். இந்தச் சொற்றொடர் பல்வேறு சூழ்நிலைமைகளில் பல்வேறு பொருள்களை உடையதாக இருக்க முடியும். உதாரணமாக, பவுல் தன் உடன் கிறிஸ்தவர்களான அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களைக் குறித்து: “மீறுதல்களாலும் பாவங்களாலும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் உயிர்ப்பித்தார்,” என்று சொன்னார். (எபேசியர் 2:1, தி.மொ.) ஆம், ஆவியால் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், இயேசுவின் பலியில் வைத்த விசுவாசத்தின் ஆதாரத்தின்பேரில் நீதியுள்ளவர்களாகத் தீர்க்கப்பட்டு, முதல் நூற்றாண்டிலேயும் ‘உயிர்ப்பிக்கப்பட்டார்கள்.’—ரோமர் 3:23, 24.

15. (அ) கிறிஸ்தவ காலத்துக்கு முன்னிருந்த யெகோவாவின் சாட்சிகள் கடவுளுடன் என்ன நிலைநிற்கையை அனுபவித்து மகிழ்ந்தனர்? (ஆ) மற்றச் செம்மறியாடுகள் எவ்வாறு ‘உயிரடைகின்றனர்,’ அவர்கள் எப்பொழுது பூமியை அதன் முழுமையான கருத்தில் சுதந்தரித்துக்கொள்வார்கள்?

15 இவ்வாறே, கிறிஸ்தவ காலத்துக்கு முன்னிருந்த, யெகோவாவின் சாட்சிகள், கடவுளோடு நட்புறவைக் குறித்ததில் நீதியுள்ளோராகத் தீர்க்கப்பட்டார்கள்; ஆபிரகாமும், ஈசாக்கும், யாக்கோபும் மாம்சப்படி மரித்திருந்தபோதிலும் “ஜீவனுள்ளோ”ராகப் பேசப்பட்டனர். (மத்தேயு 22:31, 32; யாக்கோபு 2:21, 23) எனினும், அவர்களும் உயிர்த்தெழுப்பப்படுகிற மற்ற எல்லாரும், அர்மகெதோனைத் தப்பிப்பிழைக்கிற உண்மையுள்ள மற்றச் செம்மறியாடுகளாலாகிய இந்தத் திரள் கூட்டத்தாரும், புதிய உலகத்தில் இவர்களுக்குப் பிறக்கக்கூடிய பிள்ளைகளுங்கூட, மனித பரிபூரணத்துக்கு இனியும் உயர்த்தப்பட வேண்டும். கிறிஸ்துவும் அவருடைய துணை அரசர்களும் ஆசாரியர்களும் இதை, இயேசுவின் மீட்கும் கிரய பலியின் ஆதாரத்தின்பேரில், அந்த ஆயிர ஆண்டு நியாயத்தீர்ப்பின் நாளின்போது நிறைவேற்றுவார்கள். “மரணமடைந்த மற்றவர்கள்,” அந்த நாளின் முடிவுக்குள், பரிபூரண மானிடராக இருப்பார்களென்ற கருத்தில் ‘உயிரடைந்திருப்பார்கள்.’ நாம் காணப்போகிறபடி, அவர்கள் கடைசி சோதனையில் தேறவேண்டும், ஆனால் அவர்கள் அந்தச் சோதனையைப் பரிபூரண மானிடராக எதிர்ப்படுவர். அந்தச் சோதனையில் தேறினபின்பு, கடவுள் அவர்களை என்றென்றும் வாழ்வதற்குத் தகுதியுள்ளோராக, முழுமையான கருத்தில் நீதியுள்ளவர்களாகத் தீர்ப்பார். பின்வரும் வாக்கின் முழுமையான நிறைவேற்றத்தை அவர்கள் அனுபவிப்பார்கள்: “நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.” (சங்கீதம் 37:29) கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்துக்கு எத்தகைய மகிழ்ச்சி நிறைந்த எதிர்காலம் முன்வைக்கப்பட்டிருக்கிறது!

முதலாம் உயிர்த்தெழுதல்

16. கிறிஸ்துவுடன் அரசர்களாக ஆளுவோர் அனுபவிக்கும் உயிர்த்தெழுதலை யோவான் எவ்வாறு விவரிக்கிறார், ஏன்?

16 “உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்ட”வர்களுக்கு இப்பொழுது கவனத்தைத் திருப்பி, யோவான் எழுதுவதாவது: “இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.” (வெளிப்படுத்துதல் 20:5ஆ) இது முதலாவது என்பது எவ்வாறு? காலத்தைக் குறித்ததில் இது “முதலாம் உயிர்த்தெழுதல்,” எவ்வாறெனில் இதை அனுபவிப்போர் “தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக” இருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 14:4) முக்கியத்துவத்திலும் இது முதலாவதானது, ஏனெனில் இதில் பங்குகொள்வோர் இயேசுவுடன் அவருடைய பரலோக ராஜ்யத்தில் உடனாளும் அரசர்களாகி, மனிதவர்க்கத்தின் மற்ற யாவரையும் நியாயந்தீர்க்கின்றனர். கடைசியாக, இது தரத்திலும் முதலாவதானது. இயேசு கிறிஸ்து ஒருவரையே தவிர, இந்த முதலாம் உயிர்த்தெழுதலில் எழுப்பப்பட்டவர்கள் மாத்திரமே அழியாமையைப் பெறும் ஒரே சிருஷ்டிகளாக பைபிளில் பேசப்பட்டுள்ளனர்.—1 கொரிந்தியர் 15:53; 1 தீமோத்தேயு 6:16.

17. (அ) அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்குரிய ஆசீர்வாதமான அந்த எதிர்பார்ப்பை யோவான் எவ்வாறு விவரிக்கிறார்? (ஆ) ‘இரண்டாம் மரணம்’ என்பது என்ன, ஜெயங்கொண்ட 1,44,000 பேரின்மீது இதற்கு ஏன் “அதிகாரமில்லை”?

17 அபிஷேகஞ்செய்யப்பட்ட இவர்களுக்கு எத்தகைய ஆசீர்வாதமான எதிர்பார்ப்பு! யோவான் அறிவிக்கிறபடி: “முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் [சந்தோஷமுள்ளவனும், NW] பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை.” (வெளிப்படுத்துதல் 20:6அ) சிமிர்னாவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு இயேசு வாக்குக்கொடுத்தபடி, ‘முதலாம் உயிர்த்தெழுதலில்’ பங்குடைய ஜெயங்கொண்ட இவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவதன் நம்பிக்கையில்லாமல் அழியும், முழுமையான அழிவைக் குறிக்கும் “இரண்டாம் மரணத்”தால் பாதிக்கப்படும் ஆபத்தில் இரார். (வெளிப்படுத்துதல் 2:11; 20:14) இத்தகைய ஜெயங்கொள்வோர்மீது இரண்டாம் மரணத்துக்கு “அதிகாரமில்லை,” ஏனெனில் இவர்கள் அழியாமையையும் சாவாமையையும் தரித்திருப்பார்கள்.—1 கொரிந்தியர் 15:53.

18. பூமியின் புதிய அரசர்களைக் குறித்து யோவான் இப்பொழுது என்ன சொல்லுகிறார், இவர்கள் எதை நிறைவேற்றுவார்கள்?

18 சாத்தான் அதிகாரம் வகித்தபோது இருந்த பூமியின் ராஜாக்களிலிருந்து எவ்வளவாய் வேறுபட்டவர்கள்! ராஜாக்கள் வெறும் 50 அல்லது 60 ஆண்டுகளே பெரும்பாலும் ஆண்டனர், மிகப் பெரும்பான்மையர் ஒருசில ஆண்டுகளே ஆண்டனர். அவர்களில் பலர் மனிதவர்க்கத்தை ஒடுக்கினர். எவ்வாறாயினும், என்றும் மாறிக்கொண்டேயிருக்கும் அதிபதிகளின்கீழ், என்றும் மாறிக்கொண்டிருக்கும் அரசாட்சி கோட்பாடுகளுடன் ஜனங்கள் எவ்வாறு நிலையாக நன்மையடைய முடியும்? நேர்மாறாக, பூமியின் புதிய அரசர்களைப்பற்றி யோவான் கூறுவதாவது: “இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.” (வெளிப்படுத்துதல் 20:6ஆ) இயேசுவுடன்கூட, இவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரே அரசாங்கமாகியிருப்பர். இயேசுவின் பரிபூரண மனித பலியின் மதிப்பைப் பயன்படுத்துவதில் இவர்களுடைய ஆசாரிய சேவை, கீழ்ப்படிதலுள்ள மனிதரை ஆவிக்குரிய, ஒழுக்கசம்பந்தமான மற்றும் மாம்ச பரிபூரணத்துக்கு உயர்த்தும். அவர்களுடைய அரச சேவை, யெகோவாவின் நீதியையும் பரிசுத்தத் தன்மையையும் பிரதிபலிக்கும் உலகளாவிய ஒரு மனித சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதில் பலனடையும். இயேசுவோடு, ஆயிரம் ஆண்டுகளுக்கு நியாயாதிபதிகளாக, இவர்கள், நல்லமுறையில் பிரதிபலிக்கும் மனிதரை நித்திய ஜீவனின் இலக்கை நோக்கிச் செல்லும்படி அன்புடன் வழிநடத்துவார்கள்.—யோவான் 3:16.

கடைமுடிவான சோதனை

19. அந்த ஆயிர ஆண்டு ஆட்சியின் முடிவுக்குள் பூமியின் நிலைமையும் மனிதவர்க்கத்தின் நிலைமையும் எவ்வாறிருக்கும், இப்பொழுது இயேசு என்ன செய்கிறார்?

19 அந்த ஆயிர ஆண்டு ஆட்சியின் முடிவுக்குள் பூமி முழுவதும் அந்த முதல் ஏதேனைப் போன்றதாகிவிட்டிருக்கும். அது உண்மையான பரதீஸாயிருக்கும். ஆதாமிய பாவத்தின் எல்லாத் தடங்களும் நீக்கப்பட்டு, கடைசி சத்துருவாகிய மரணம் இல்லாமற்போகச் செய்யப்பட்டிருக்குமாதலால், கடவுளுக்கு முன்பாகத் தனக்காகப் பரிந்துபேசும்படி ஒரு பிரதான ஆசாரியர் பரிபூரண மனிதவர்க்கத்துக்கு இனிமேலும் தேவையிராது. ஓர் உலகத்தை ஒரே அரசாங்கத்துடன் உண்டுபண்ணும்படியான கடவுளுடைய நோக்கத்தைக் கிறிஸ்துவின் ராஜ்யம் நிறைவேற்றிவிட்டிருக்கும். இந்தக் கட்டத்தில், இயேசு தம்முடைய “தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார்.”—1 கொரிந்தியர் 15:22-26; ரோமர் 15:12.

20. கடைசி சோதனைக்கான நேரம் வருகையில் என்ன நடக்குமென யோவான் நமக்குச் சொல்லுகிறார்?

20 இப்பொழுது கடைசி சோதனைக்கான நேரம். பரிபூரணமாக்கப்பட்ட அந்த மனிதவர்க்க உலகம், ஏதேனிலிருந்த அந்த முதல் மனிதர்களுக்கு வேறுபட்டு, தன் உத்தமத்தில் உறுதியாய் நிலைநிற்குமா? என்ன நடக்கிறதென்பதை யோவான் நமக்குச் சொல்கிறார்: “அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும். அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.”—வெளிப்படுத்துதல் 20:7-9அ.

21. தன்னுடைய கடைசி முயற்சிக்காக, சாத்தான் எவ்வாறு தொடர்ந்து செயல்படுகிறான், அந்த ஆயிர ஆண்டு ஆட்சிக்குப் பின்பும் சிலர் சாத்தானைப் பின்பற்றுவார்கள் என்பது ஏன் நம்மை ஆச்சரியப்பட செய்ய வேண்டியதில்லை?

21 சாத்தானின் கடைசி முயற்சி எவ்வாறு முடியும்? “பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும்” அவன் வஞ்சித்து, அவர்களை “யுத்தத்திற்கு” வழிநடத்துகிறான். மகிழ்ச்சி நிறைந்த, கட்டியெழுப்பும் தேவராஜ்ய ஆட்சியின் ஆயிர ஆண்டுகளுக்குப் பின்பு யார் சாத்தானுடைய பக்கத்தை ஆதரிக்க முடியும்? பரிபூரண ஆதாமும் ஏவாளும் ஏதேனின் பரதீஸில் வாழ்க்கையை அனுபவித்து மகிழ்ந்துகொண்டிருக்கையில் சாத்தான் அவர்களை மோசம்போக்க முடிந்ததை மறந்துவிடாதீர்கள். மேலும், அந்த முதல் கலகத்தின் கெட்ட விளைவுகளைக் கண்டிருந்த பரலோகத் தூதர்களை அவன் தவறாக வழிநடத்த முடிந்தது. (2 பேதுரு 2:4; யூதா 6) ஆகவே, கடவுளுடைய ராஜ்யத்தின் மகிழ்ச்சிமிகுந்த ஓர் ஆயிர ஆண்டுகளின் ஆட்சிக்குப் பின்புங்கூட, பரிபூரண மானிடரில் சிலர் சாத்தானைப் பின்பற்றும்படி கவர்ந்திழுக்கப்படுவரென்பதில் நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

22. (அ) ‘பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகள்’ என்று சொல்லப்படுவது எதைக் குறிப்பிட்டுக்காட்டுகிறது? (ஆ) அந்தக் கலகக்காரர்கள் ஏன் ‘கோகும் மாகோகும்’ என்று அழைக்கப்படுகின்றனர்?

22 இந்தக் கலகக்காரர்களை ‘பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகள்’ என பைபிள் அழைக்கிறது. இது, மனிதவர்க்கம் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட தேசத்தாராக மறுபடியும் பிரிக்கப்பட்டிருப்பரென பொருள்படுகிறதில்லை. இவர்கள், யெகோவாவின் நீதியும் பற்றுறுதியுமுள்ளோரிலிருந்து தங்களைப் பிரித்துக்கொண்டு, இன்று ராஜ்யங்கள் காட்டும் அதே கெட்ட மனப்பான்மையைக் காட்டுவார்களென்றே இது குறிப்பிட்டுக் காட்டுகிறது. எசேக்கியேலின் தீர்க்கதரிசனத்திலிருந்த மாகோகின் கோகு செய்ததுபோல், இவர்கள், பூமியிலிருக்கும் தேவராஜ்ய அரசாங்கத்தை அழிக்கும் நோக்கத்துடன், “தீங்கான ஒரு திட்டத்தை யோசனை செய்வார்கள்.” (எசேக்கியேல் 38:3, 10-12, NW) ஆகவே, அவர்கள் ‘கோகும் மாகோகும்’ என அழைக்கப்படுகின்றனர்.

23. அந்தக் கலகக்காரரின் எண்ணிக்கை “கடற்கரை மணலத்தனையாயிருக்கும்” என்ற இந்த உண்மை குறித்துக்காட்டுவது என்ன?

23 சாத்தானுடைய கலகத்தில் அவனைச் சேர்ந்துகொள்வோரின் எண்ணிக்கை “கடற்கரை மணலத்தனையாயிருக்கும்.” அது எத்தனை? முன்குறிக்கப்பட்ட எண் எதுவும் இல்லை. (ஒத்துப்பாருங்கள்: யோசுவா 11:4; நியாயாதிபதிகள் 7:12.) இந்தக் கலகக்காரரின் முடிவான மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு தனி ஆளும் சாத்தானின் வஞ்சகமான சூழ்ச்சிகளுக்குப் பிரதிபலிக்கும் முறையின்பேரில் சார்ந்திருக்கும். எனினும், “பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும்” வென்று மேற்கொள்வதற்குப் போதிய வலிமைவாய்ந்தோராக அவர்கள் உணருவார்களாதலால், சந்தேகமில்லாமல், கணிசமான எண்ணிக்கை இருக்கும்.

24. (அ) ‘பிரியமான நகரம்’ எது, அதை எவ்வாறு வளைந்துகொள்ள முடியும்? (ஆ) ‘பரிசுத்தவான்களுடைய பாளையம்’ குறிப்பதென்ன?

24 இந்தப் ‘பிரியமான நகரம்,’ மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து தம்மை பின்பற்றுவோரிடம் வெளிப்படுத்துதல் 3:12-ல் குறிப்பிட்டுப் பேசியிருப்பதும், “பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரம்” என அவர் அழைக்கிறதுமான அந்த நகரமாக இருக்க வேண்டும். இது பரலோக அமைப்பாக இருப்பதால், பூமிக்குரிய அந்தச் சேனைகள் அதை எவ்வாறு ‘வளைந்துகொள்ள’ முடியும்? “பரிசுத்தவான்களுடைய பாளையத்தை” அவர்கள் வளைந்துகொள்வதால் அவ்வாறு செய்கின்றனர். ஒரு பாளையம் நகரத்துக்கு வெளியேயுள்ளது; ஆகையால், ‘பரிசுத்தவான்களுடைய பாளையம்’ யெகோவாவின் அரசாங்க ஏற்பாட்டை பற்றுறுதியுடன் ஆதரிப்போராக, புதிய எருசலேமின் பரலோக இருப்பிடத்துக்கு வெளியே பூமியிலிருப்போரைக் குறிக்க வேண்டும். சாத்தானின் கீழுள்ள கலகக்காரர்கள் இந்த உண்மையுள்ளவர்களைத் தாக்குகையில், கர்த்தராகிய இயேசு தம்மைத் தாக்குவதாக அதைக் கருதுகிறார். (மத்தேயு 25:40, 45) பூமியைப் பரதீஸாக்குவதில் பரலோகப் புதிய எருசலேம் நிறைவேற்றியிருக்கிற எல்லாவற்றையும் முற்றிலும் அழித்துப்போட அந்த ‘ஜாதிகள்’ முயற்சி செய்யும். ஆகையால் “பரிசுத்தவான்களுடைய பாளையத்தைத்” தாக்குவதில், “பிரியமான நகரத்தை”யும் அவர்கள் தாக்குகின்றனர்.

அக்கினியும் கந்தகமுமான கடல்

25. ‘பரிசுத்தவான்களுடைய பாளையத்தை’ இந்தக் கலகக்காரர் தாக்குவதன் விளைவை யோவான் எவ்வாறு விவரிக்கிறார், இது சாத்தானுக்கு எதைக் குறிக்கும்?

25 சாத்தான் செய்யும் இந்தக் கடைசி முயற்சி வெற்றிபெறுமா? நிச்சயமாக இல்லை—மாகோகின் கோகு நம்முடைய நாளில் ஆவிக்குரிய இஸ்ரவேலின்பேரில் செய்யவிருக்கும் தாக்குதல் வெற்றிபெறமாட்டாததுபோலவே இதுவும் வெற்றிபெறாது! (எசேக்கியேல் 38:18-23) யோவான் இதன் விளைவை உயிர்ப்புள்ள முறையில் விவரிக்கிறார்: “அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது. மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான்.” (வெளிப்படுத்துதல் 20:9ஆ-10அ) இந்தச் சமயத்தில் இந்த ஆதி சர்ப்பமாகிய சாத்தான், வெறும் அபிஸ்ஸுக்கு உட்பட மாத்திரமே செய்யப்படாமல், உண்மையில் நசுக்கி இல்லாமற்போகும்படி செய்யப்படுவான்; நொறுக்கி, அக்கினியால் எரிக்கப்படுவதுபோல் முற்றிலும் அழித்தொழிக்கப்படுவான்.

26. அந்த ‘அக்கினியும் கந்தகமுமான கடல்’ ஏன் சொல்லர்த்தமான வதைக்கும் இடமாக இருக்க முடியாது?

26 ‘அக்கினியும் கந்தகமுமான கடல்’ சொல்லர்த்தமான வதைக்கும் இடமாக இருக்க முடியாதென நாம் ஏற்கெனவே கவனித்தோம். (வெளிப்படுத்துதல் 19:20) சாத்தான் அங்கே கடும் வேதனையோடு வதைக்கப்படுவதை நித்திய காலமெல்லாம் அனுபவிக்க வேண்டுமானால், யெகோவா அவனை உயிரோடு காத்து வைக்க வேண்டியிருக்கும். எனினும், உயிர் ஒரு பரிசாக இருக்கிறது, ஒரு தண்டனையல்ல. மரணமே பாவத்துக்குரிய தண்டனை, மேலும் பைபிளில் சொல்லியிருக்கிறபடி, மரித்த சிருஷ்டிகள் வேதனையை உணருகிறதில்லை. (ரோமர் 6:23; பிரசங்கி 9:5, 10) மேலும், மரணமும்தானே, ஹேடீஸோடுகூட, அக்கினியும் கந்தகமுமான அதே கடலுக்குள் தள்ளப்படுகிறதென நாம் பின்னால் வாசிக்கிறோம். நிச்சயமாகவே, மரணமும் ஹேடீஸும் வேதனையை அனுபவிக்க முடியாது!—வெளிப்படுத்துதல் 20:14.

27. சோதோம் கொமோராவுக்கு நேரிட்டது, அக்கினியும் கந்தகமுமான கடல் என்ற இந்தச் சொற்றொடரை விளங்கிக்கொள்ள நமக்கு எவ்வாறு உதவிசெய்கிறது?

27 அந்த அக்கினியும் கந்தகமுமான கடல் அடையாளக்குறிப்பானதென்ற கருத்தை இதெல்லாம் உறுதிப்படுத்துகிறது. மேலும், அக்கினியும் கந்தகமும் குறிப்பிட்டிருப்பது, பூர்வ சோதோம் கொமோராவின் அழிவை நினைப்பூட்டுகிறது, படுமோசமான அக்கிரமத்தினிமித்தம் கடவுள் அவற்றை அழித்தார். அவற்றின் காலம் வந்தபோது, “அப்பொழுது யெகோவா சோதோமின் மேலும் கொமோராவின்மேலும் வானத்திலிருந்து, யெகோவாவினிடம் நின்றே, கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி”னார். (ஆதியாகமம் 19:24, தி.மொ.) இந்த இரண்டு பட்டணங்களுக்கும் நேரிட்டது “நித்திய அக்கினியின் ஆக்கினை” என அழைக்கப்படுகிறது. (யூதா 7, தி.மொ.) எனினும், அந்த இரண்டு பட்டணங்களும் நித்தியமாய் வாதிக்கப்படுவதை அனுபவிக்கவில்லை. மாறாக, அவற்றின் நடத்தைகெட்ட குடிமக்களோடுகூட அவை, அழித்தொழிக்கப்பட்டன, எல்லா காலத்துக்குமாகத் தடமே இல்லாமற்போகச் செய்யப்பட்டன. அந்தப் பட்டணங்கள் இன்று இல்லை, அவை இருந்த இடத்தையும் ஒருவரும் நிச்சயமாய்ச் சொல்ல முடிகிறதில்லை.

28. அக்கினியும் கந்தகமுமான கடல் என்பது என்ன, அது எவ்வாறு மரணத்தையும், ஹேடீஸையும், அபிஸ்ஸையும் போன்றதல்ல?

28 இதற்கு ஒத்திசைவாக, பைபிள்தானே அந்த அக்கினியும் கந்தகமுமான கடலின் பொருளைப் பின்வருமாறு விளக்குகிறது: “இது [அக்கினிக் கடலானது, NW] இரண்டாம் மரணம்.” (வெளிப்படுத்துதல் 20:14) இதுவும் இயேசு குறிப்பிட்டுப்பேசின கெஹென்னாவும் ஒன்றே என்பது தெளிவாயிருக்கிறது, துன்மார்க்கர் என்றென்றுமாக வதைக்கப்படுவோராக அல்ல, அழிக்கப்பட்டவர்களாக நிலைத்திருக்கும் ஓர் இடம். (மத்தேயு 10:28, NW) இது, உயிர்த்தெழுப்பப்படுவதன் நம்பிக்கையில்லாத முற்றுமுழுமையான, அறவே ஒழியும் அழிவாகும். இவ்வாறு, மரணத்துக்கும், ஹேடீஸுக்கும், அபிஸ்ஸுக்கும் திறவுகோல்கள் இருக்கையில், அக்கினியும் கந்தகமுமான கடலைத் திறப்பதற்கான ஒரு திறவுகோல் குறிப்பிடப்படுகிறதில்லை. (வெளிப்படுத்துதல் 1:18; 20:1) அதன் கைதிகளை அது ஒருபோதும் விடுதலை செய்யாது.—மாற்கு 9:43-47-ஐ ஒத்துப்பாருங்கள்.

இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுதல்

29, 30. பிசாசையும் மூர்க்க மிருகத்தையும் கள்ளத் தீர்க்கதரிசியையும் பற்றி யோவான் என்ன சொல்லுகிறார், இதை எவ்வாறு விளங்கிக்கொள்ள வேண்டும்?

29 பிசாசையும் மேலும் மூர்க்க மிருகத்தையும் கள்ளத் தீர்க்கதரிசியையும் குறிப்பிட்டு, யோவான் இப்பொழுது நமக்குப் பின்வருமாறு சொல்லுகிறார்: “அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.” (வெளிப்படுத்துதல் 20:10ஆ) இது என்ன பொருள்படக்கூடும்? ஏற்கெனவே குறிப்பிட்டபடி, மூர்க்க மிருகமும் கள்ளத் தீர்க்கதரிசியும், மேலும் மரணமும் ஹேடீஸும் போன்ற அடையாளக் குறிப்புகளானவை, சொல்லர்த்தமான முறையில் வாதனையை அனுபவிக்க முடியுமென சொல்வது பகுத்தறிவுக்குப் பொருத்தமானதல்ல. ஆகவே, சாத்தான் நித்திய காலமெல்லாம் துன்பமனுபவித்துக் கொண்டிருப்பானென்று நம்ப நமக்கு எந்தக் காரணமுமில்லை. அவன் அறவே அழிக்கப்படவிருக்கிறான்.

30 ‘வாதனை’ என்பதற்கு இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்கச் சொல், பசனீஸோ (ba·sa·niʹzo) முக்கியமாய் “(உலோகங்களை) உரைகல்லைக்கொண்டு சோதித்தல்” என பொருள்படுகிறது. “வதைப்பதைப் பயன்படுத்தி கேள்வி கேட்டல்” என்பது இரண்டாவது பொருள். (தி நியூ தாயர்ஸ் கிரீக்-இங்லிஷ் லெக்ஸிக்கன் ஆஃப் தி நியூ டெஸ்டமென்ட்) இந்தக் கிரேக்கச் சொல் பயன்படுத்தியிருப்பதன் சூழமைவு, சாத்தானுக்கு நேரிடுவது, யெகோவாவின் ஆட்சியினுடைய நேர்மையையும் நீதியையும் பற்றிய விவாதத்தின்பேரில் ஓர் உரைகல்லாக நித்திய காலத்துக்கும் சேவிக்குமென குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஈடற்ற அரசாட்சியைப் பற்றிய அந்த விவாதம் சதா காலத்துக்கும் ஒரே தடவையாகத் தீர்க்கப்பட்டிருக்கும். யெகோவாவின் அரசாட்சிக்கெதிரான ஒரு சவாலைத் தவறென நிரூபிப்பதற்கு, இனி ஒருபோதும் நீடித்த ஒரு காலம் அதைச் சோதிக்கத் தேவையில்லை.—சங்கீதம் 92:1, 14-ஐ ஒத்துப்பாருங்கள்.

31. “வதைப்பது” என்ற ஒரே பொருள் சம்பந்தப்பட்ட இரண்டு கிரேக்கச் சொற்கள், பிசாசான சாத்தான் அனுபவிக்கும் தண்டனையை விளங்கிக்கொள்ள நமக்கு எவ்வாறு உதவிசெய்கின்றன?

31 மேலுமாக, பஸானிஸ்டெஸ் (ba·sa·nistesʹ) “உபாதிக்கிறவன்” என்ற சம்பந்தப்பட்ட சொல், “சிறைக்காவலாளன்” என பொருள்படுவதற்கு பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (மத்தேயு 18:34, கிங்டம் இண்டர்லீனியர்) இதற்கு ஒத்திசைய, சாத்தான் அக்கினிக் கடலில் என்றென்றுமாகச் சிறைப்படுத்தப்பட்டிருப்பான்; அவன் ஒருபோதும் விடுவிக்கப்படான். முடிவாக, யோவான் நன்றாய் அறிந்திருந்த கிரேக்க செப்டுவஜின்ட் பைபிளில், இதற்குச் சம்பந்தப்பட்ட சொல் பாஸனாஸ் (ba·sa·nos), மரணத்துக்கு வழிநடத்துகிற அவமானத்தைக் குறிப்பிட பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (எசேக்கியேல் 32:24, 30) இது, சாத்தான் அனுபவிக்கும் தண்டனை, அக்கினியும் கந்தகமுமான கடலில் தாழ்வுபடுத்தும், நித்திய மரணம் என்பதைக் காண நமக்கு உதவிசெய்கிறது. அவனுடைய செயல்கள் அவனோடு அழிந்துவிடுகின்றன.—1 யோவான் 3:8.

32. இந்தப் பேய்கள் என்ன தண்டனையை அனுபவிப்பார்கள், நமக்கு எவ்வாறு தெரியும்?

32 இந்தப் பேய்கள், இந்த வசனத்தில் மறுபடியும் குறிப்பிடப்படுகிறதில்லை. அந்த ஆயிர ஆண்டுகளின் முடிவில் இவர்கள் சாத்தானோடு விடுதலைசெய்யப்பட்டு பின்பு அவனோடுகூட நித்திய மரணமாகிய தண்டனையை அனுபவிப்பார்களா? அத்தாட்சி ஆம் என பதிலளிக்கிறது. செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் பற்றிய உவமையில், இயேசு, அந்த வெள்ளாடுகள் “பிசாசுக்காகவும் அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தஞ்செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினிக்குள்,” போவார்களெனக் கூறினார். (மத்தேயு 25:41, NW) “நித்திய அக்கினி” என்ற இந்தக் கூற்று, சாத்தான் தள்ளப்படவிருக்கிற அந்த அக்கினியும் கந்தகமுமான கடலையே குறிப்பிட வேண்டும். பிசாசின் தூதர்கள் அவனோடுகூட பரலோகத்திலிருந்து வெளித்தள்ளப்பட்டார்கள். அந்த ஆயிர ஆண்டு ஆட்சியின் தொடக்கத்தில் அவர்கள் அவனோடுகூட அபிஸ்ஸுக்குள் சென்றார்கள் என்பது தெளிவாயிருக்கிறது. அவ்வாறெனில், பொருத்தமாகவே, அக்கினியும் கந்தகமுமான கடலில் அவர்களும் அவனோடு அழிக்கப்படுவர்.—மத்தேயு 8:29.

33. ஆதியாகமம் 3:15-ன் எந்த முடிவான நுட்பவிவரம் அப்பொழுது நிறைவேற்றப்படும், எந்தக் காரியத்துக்கு யெகோவாவின் ஆவி இப்பொழுது யோவானின் கவனத்தை இழுக்கிறது?

33 இவ்வாறு, ஆதியாகமம் 3:15-ல் பதிவுசெய்யப்பட்ட அந்தத் தீர்க்கதரிசனத்தின் முடிவான நுட்பவிவரம் நிறைவேற்றமடைகிறது. சாத்தான் அக்கினிக் கடலிலே தள்ளப்படுகையில், ஓர் இரும்பு குதிங்காலின்கீழ் அதன் தலை நசுக்கி நொறுக்கப்பட்ட ஒரு பாம்பைப்போல் செத்தவனாகியிருப்பான். அவனும் அவனுடைய பேய்களும் என்றென்றுமாக ஒழிந்துபோய்விட்டிருப்பர். வெளிப்படுத்துதலின் புத்தகத்தில் அவர்களைப்பற்றி அதற்கு மேலும் குறிப்பிடப்படுகிறதில்லை. இப்பொழுது, தீர்க்கதரிசனப்பிரகாரம் இவர்களை அழித்தொழித்துவிட்டதால், பூமிக்குரிய ஒரு நம்பிக்கையை இருதயத்தில் போற்றி வளர்த்தவர்களுக்கு இன்றியமையாத அக்கறைக்குரிய ஒரு காரியத்துக்கு யெகோவாவின் ஆவி கவனத்தை இழுக்கிறது: “ராஜாதி ராஜாவும்,” “அவரோடுகூட இருக்கிற . . . அழைக்கப்பட்டவர்களும், தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களும்” ஆளும் அந்தப் பரலோக ஆட்சியிலிருந்து மனிதவர்க்கத்துக்கு என்ன பலனுண்டாகும்? (வெளிப்படுத்துதல் 17:14) இதற்குப் பதிலளிக்க, யோவான் நம்மை அந்த ஆயிர ஆண்டு ஆட்சியின் தொடக்கத்துக்கு மறுபடியும் ஒருமுறை திரும்பக் கொண்டுவருகிறார்.

[அடிக்குறிப்புகள்]

a இயேசு மரித்திருந்தபோது ஹேடீஸில் இருந்தாரென மற்ற வேதவசனங்கள் சொல்லுகின்றன. (அப்போஸ்தலர் 2:31) எனினும், ஹேடீஸும் அபிஸ்ஸும் எப்பொழுதும் ஒன்றேயென நாம் முடிவுசெய்யக்கூடாது. அந்த மூர்க்க மிருகமும் சாத்தானும் அபிஸ்ஸுக்குள் செல்கிறபோதிலும், மனிதர் மாத்திரமே ஹேடீஸுக்குச் செல்கின்றனரெனச் சொல்லப்படுகிறது, அங்கே அவர்கள் தங்கள் உயிர்த்தெழுதல் வரை மரணத்தில் தூங்குகின்றனர்.—யோபு 14:13; வெளிப்படுத்துதல் 20:13.

b யோவானுடைய நாளில் பட்டயமே மிகப் பொதுவாய் பயன்படுத்தப்பட்டபோதிலும், கோடாரி (கிரேக்கில், பேலிக்கஸ் [peʹle·kus]) ரோமில் மரணதண்டனை நிறைவேற்றுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய கருவியாக இருந்ததெனத் தோன்றுகிறது. (அப்போஸ்தலர் 12:2) ஆகையால், இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள இந்தக் கிரேக்கச் சொல், பிபிலேக்கிஸ்மெனன் (pe·pe·le·kis·meʹnon) (“கோடாரியால் சிரச்சேதம் பண்ணப்பட்டார்கள்”), “கொல்லப்பட்டார்கள்” என்பதையே குறிக்கிறது.

c தன்னுடைய பைபிள் அறிவில் சிறிதை, வெளிப்படுத்துதலின் எழுத்தாளராகிய யோவானின் மாணாக்கரிடமிருந்து பெற்றதாகச் சொல்லப்படுகிற ஹீராபோலிஸின் பப்பையாஸ், கிறிஸ்துவின் சொல்லர்த்தமான ஆயிர ஆண்டு ஆட்சியில் நம்பினதாக நான்காம் நூற்றாண்டு சரித்திராசிரியர் யூஸிபியஸால் (யூஸிபியஸ் அவரோடு கண்டிப்பாய் ஒத்திராதபோதிலும்) அறிவிக்கப்பட்டிருப்பது, அக்கறையைத் தூண்டுகிறது.—சர்ச்சின் சரித்திரம், (ஆங்கிலம்), யூஸிபியஸ், III, 39.

[கேள்விகள்]

[பக்கம் 293-ன் படம்]

சவக்கடல். சோதோமும் கொமோராவும் இருந்த இடமாக இருக்கலாம்

[பக்கம் 294-ன் படம்]

“உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்”