Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

“சாத்தானுடைய ஆழமான காரியங்களை” வெறுத்தல்

“சாத்தானுடைய ஆழமான காரியங்களை” வெறுத்தல்

அதிகாரம் 10

“சாத்தானுடைய ஆழமான காரியங்களை” வெறுத்தல்

தியத்தீரா

1. மற்ற சபைகளின் சம்பந்தமாக தியத்தீரா எந்த இடத்தில் இருந்தது, மேலும் என்ன வகையான மத சூழமைவில் இருந்தது?

 பெ ர்கமாவுக்கு (பெர்கமு) தென்கிழக்கே சுமார் 64 கிலோமீட்டருக்கு அப்பால் செழிப்பான துருக்கிய நகரமான அகிஸார் இருக்கிறது. சுமார் 1,900 ஆண்டுகளுக்கு முன்பாக, இந்த நகரம் தியத்தீரா இருந்த இடமாக இருந்தது. ஒரு பயணக் கண்காணி பெர்கமுவிலிருந்து உள்நாட்டுப்பாதை வழியாக சுலபமாக தியத்தீராவை சென்றடைந்து, பின்னர் வெளிப்படுத்துதல் 3-ம் அதிகாரத்தில் குறிக்கப்பட்டுள்ள மீதமுள்ள சபைகளாகிய சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா சபைகளுக்கு ஒரு சுற்றுப் பயணத்தில் செல்ல முடியும். பெர்கமுவைப் போல் தியத்தீரா பேரரச வணக்கத்துக்கு ஒரு முக்கியமான மையமாக இருந்ததாக தெரியவில்லை, ஆனால், புறமத கடவுட்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புண்ணிய ஸ்தலங்களையும் ஆலயங்களையும் கொண்டிருந்தது. தியத்தீரா வாணிகத்திற்கு மைய இடமாக குறிப்பிடத்தக்கதாயிருந்தது.

2, 3. (அ) கிறிஸ்தவத்திற்கு மாறிய ஒரு தியத்தீர நபரைப்பற்றி முன்னர் என்ன பதிவு செய்யப்பட்டுள்ளது? (ஆ) இயேசு ‘தேவகுமாரனாகவும்,’ ‘அக்கினி ஜுவாலைப் போன்ற கண்களை’ கொண்டிருப்பதும் தியத்தீராவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு என்ன உட்பொருளைக் கொண்டிருக்கிறது?

2 பவுல் மக்கெதோனியாவில் பிரசங்கம் செய்துகொண்டிருக்கையில், இரத்தாம்பரம் விற்கிற, லீதியாள் என்னும் பெயர்கொண்ட தியத்தீர பெண்ணை அவர் சந்தித்தார். பவுல் பிரசங்கித்துக்கொண்டிருந்த செய்தியை லீதியாளும் அவளுடைய வீட்டார் எல்லாரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு அசாதாரணமான உபசரிப்பைக் காண்பித்தனர். (அப்போஸ்தலர் 16:14, 15) கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட தியத்தீர நாட்டைச் சேர்ந்தவரில் பதிவில் அவர்கள் முதல் நபராக ஆனார்கள். காலப்போக்கில், அந்த நகரம்தானேயும் கிறிஸ்தவர்களாலான ஒரு சபையைக் கொண்டிருக்கலானது. இயேசு தம்முடைய பின்வரும் மிக நீண்ட செய்தியை அவர்களிடமாக குறிப்பிடுகிறார்: “தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினி ஜுவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம் போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது.”—வெளிப்படுத்துதல் 2:18.

3 வெளிப்படுத்துதலில் வேறே இடங்களில், யெகோவாவை ‘என்னுடைய பிதா’ என்று இயேசு குறிப்பிட்டிருந்தபோதிலும், இந்த ஒரு முறை மட்டும்தான் “தேவ குமாரன்” என்ற சொல் தோன்றுகிறது. (வெளிப்படுத்துதல் 2:27; 3:5, 21) இந்தப் பட்டப் பெயரை இங்கே பயன்படுத்துவது, யெகோவாவுடன் இயேசுவின் நெருங்கிய உறவை தியத்தீர கிறிஸ்தவர்களுக்கு நினைவுபடுத்துகிறது. இந்தக் குமாரன் ‘அக்கினி ஜுவாலை போன்ற கண்களை கொண்டிருக்கிறார்’—கறைப்படுத்திக் கொண்டிருக்கிற எதையாவது அவர் சபையில் கண்டால் அதற்கு எதிராக அவருடைய நியாயத்தீர்ப்பு பற்றி எரியும் என்பதற்கு தியத்தீராவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு இது ஓர் எச்சரிக்கை. பிரகாசிக்கிற வெண்கலம் போன்ற பாதங்களை இரண்டாவது முறையாக குறிப்பிடுவதன் மூலம் இந்தப் பூமியில் நடக்கும்போது அவருடைய சொந்த உண்மைத்தன்மையில் பிரகாசிக்கிற முன்மாதிரியை அவர் வலியுறுத்துகிறார். தியத்தீராவிலுள்ள கிறிஸ்தவர்கள் சந்தேகமில்லாமல் அவருடைய அறிவுரைக்குச் செவிகொடுத்தார்கள், எனவே இன்று நாமும் அதையே செய்யவேண்டும்!—1 பேதுரு 2:21.

4, 5. (அ) தியத்தீராவிலுள்ள கிறிஸ்தவர்களை இயேசு ஏன் போற்ற முடிந்தது? (ஆ) தியத்தீராவிலிருந்த சபை இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளுக்கு எவ்வாறு மாதிரிப் படிவமாய் இருக்கிறது?

4 சந்தோஷகரமாக, தியத்தீராவிலுள்ளவர்களை இயேசு போற்ற முடியும். அவர் பின்வருமாறு சொல்கிறார்: “உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன்.” (வெளிப்படுத்துதல் 2:19) எபேசியர்களைப் போலில்லாமல், அங்கிருந்த அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் யெகோவாவுக்கான அவர்களுடைய முதல் அன்பை இழக்கவில்லை. அவர்களுடைய விசுவாசம் உறுதியாயிருக்கிறது. மேலுமாக, அவர்களுடைய கிரியைகள் முன்பு இருந்ததைப் பார்க்கிலும் அதிகமாயிருக்கிறது, மேலும் முந்திய மூன்று சபைகளைப் போலவே, தியத்தீராவிலுள்ள கிறிஸ்தவர்கள் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று உலகம் முழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகளின் கிட்டத்தட்ட 1,00,000 சபைகளுக்கு மாதிரிப்படிவமாய் இருக்கிறது! ஊழியத்தில் ஒரு வைராக்கிமான ஆவி இந்த அமைப்பில் ஊடுருவிச் சென்று இளைஞரையும் முதியோரையும் தூண்டுவதால் யெகோவாவுக்கான அன்பு பிரகாசிக்கிறது. அதிகரித்துக் கொண்டிருக்கும் எண்ணிக்கையான ஆட்கள் பயனியர்களாக தங்களையே அர்ப்பணிக்கிறார்கள். இவ்வாறு கடவுளுடைய வரப்போகிற ராஜ்யத்தின் மகிமையான நம்பிக்கையை அறிவிப்பதற்காக இன்னும் மீதமிருக்கும் காலத்தை ஞானமாகப் பயன்படுத்துகிறார்கள்!—மத்தேயு 24:14; மாற்கு 13:10.

5 பல பத்தாண்டுகளாக, அபிஷேகஞ்செய்யப்பட்ட மீதியானோரும் திரள் கூட்டத்தாருமாகிய அநேக உண்மையுள்ளோர், அவர்களைச் சுற்றியுள்ள உலகம் அதிகமதிகமாக நம்பிக்கையற்ற இருளில் மூழ்கிக்கொண்டிருக்கும்போது, கடவுளின் ஊழியத்தில் பின்பற்றத்தக்க சகிப்புத் தன்மையைக் காண்பித்து வந்திருக்கின்றனர். ஆனால் நாம் நல்ல தைரியத்துடன் இருப்போமாக! கடவுளின் முன்னாளைய தீர்க்கதரிசிகளின் அத்தாட்சியை வெளிப்படுத்துதல் உறுதிப்படுத்துகிறது. “யெகோவாவின் பெரிய நாள் சமீபித்திருக்கிறது. அது சமீபித்திருக்கிறது, மேலும் மிகவும் விரைவாக அது வந்துகொண்டிருக்கிறது.”—செப்பனியா 1:14, NW; யோவேல் 2:1; ஆபகூக் 2:3; வெளிப்படுத்துதல் 7:9; 22:12, 13.

“யேசபேல் என்னும் ஸ்திரீ”

6. (அ) போற்றத்தக்க காரியங்கள் இருந்தபோதிலும், உடனடியான கவனத்தைத் தேவைப்படுத்துகிற என்ன பிரச்சினையை தியத்தீரா சபையில் இயேசு கவனிக்கிறார்? (ஆ) யேசபேல் யார், மேலும் ஒரு தீர்க்கதரிசினியாக இருப்பதற்கு அவள் ஆதாரமுள்ள தகுதியைக் கொண்டிருந்தாளா?

6 இயேசுவின் அக்கினி ஜுவாலைக் கண்கள் மேலும் ஊடுருவிப் பார்த்திருக்கின்றன. உடனடியான கவனத்தைத் தேவைப்படுத்துகிற ஏதோவொன்றை அவர் காண்கிறார். “ஆகிலும்,” என்று தியத்தீராவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு அவர் பின்வருமாறு சொல்கிறார்: “உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம் பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.” (வெளிப்படுத்துதல் 2:20) பொ.ச.மு. பத்தாவது நூற்றாண்டில், இஸ்ரவேலின் ராஜா ஆகாபின் மனைவி பாகால் வணக்கத்தாளாகிய யேசபேல் ராணி தன்னுடைய கொலைகார, விபச்சார, ஆதிக்கம் செலுத்தும் வழிகளுக்குப் பேர்பெற்றவளாகியிருந்தாள். யெகோவாவினால் அபிஷேகஞ்செய்யப்பட்டவராகிய யெகூ அவளுடைய மரண தண்டனையை நிறைவேற்றினார். (1 இராஜாக்கள் 16:31; 18:4; 21:1-16; 2 இராஜாக்கள் 9:1-7, 22, 30, 33) விக்கிரகாராதனைக்காரியாகிய யேசபேலுக்கு ஒரு தீர்க்கதரிசினியாக இருக்க எந்தவித தகுதியும் இருக்கவில்லை. இஸ்ரவேலில் உண்மையுள்ள தீர்க்கதரிசினிகளாக சேவித்த மிரியாம், தெபொராள் போன்று அவள் இருக்கவில்லை. (யாத்திராகமம் 15:20, 21; நியாயாதிபதிகள் 4:4; 5:1-31) மேலும் வயதான அன்னாளையும் சுவிசேஷகனான பிலிப்புவின் நான்கு குமாரத்திகளையும் தூண்டியதைப் போல யெகோவாவின் ஆவி தீர்க்கதரிசனம் உரைக்க அவளைத் தூண்டியிருக்கவில்லை.—லூக்கா 2:36-38; அப்போஸ்தலர் 21:9.

7. (அ) “யேசபேல் என்னும் ஸ்திரீ”யைக் குறிப்பிடுவதன் மூலம் இயேசு தெளிவாக என்ன செல்வாக்கை குறிப்பிடுகிறார்? (ஆ) கூட்டுறவு கொண்டிருந்த சில பெண்கள் தங்களுடைய சுய இச்சையான போக்கை எவ்வாறு நியாயப்படுத்தியிருக்கக்கூடும்?

7 ஆகையால், தெளிவாகவே தியத்தீராவில் ஒரு தீர்க்கதரிசினியாக உரிமைபாராட்டுகிற “யேசபேல் என்னும் ஸ்திரீ” ஒரு போலியானவள். கடவுளுடைய ஆவி அவளை வழிநடத்தவில்லை. அவள் யார்? பெரும்பாலும் சபைக்குள் வெட்கக்கேடான சீர்கேட்டை உண்டாக்கும் செல்வாக்காக செயல்படுகிற ஒரு பெண் அல்லது பெண்களின் தொகுதியாக அவள் இருக்கிறாள். சபையுடன் கூட்டுறவுகொண்ட சில பெண்கள், வேதவசனங்களைத் தவறாக பொருத்துவதன் மூலம் தங்களுடைய சுய இச்சையான போக்கை நாணமற்ற விதத்தில் சரியென்று நியாயப்படுத்திக் காட்டிக்கொண்டு, சபையின் அங்கத்தினர்களை ஒழுக்கக்கேடான காரியங்களில் உட்படுத்தியிருக்கலாம். உண்மையிலேயே பொய் தீர்க்கதரிசனம்! மற்றவர்களும் அவர்களுடைய சொந்த வழிகளான “விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை” ஆகியவற்றில் விழும்படி ஆதிக்கம் செலுத்துவார்கள். (கொலோசெயர் 3:5) பெரும்பாலான கிறிஸ்தவமண்டல மதங்களில் ஆதரவு காட்டப்பட்ட, அல்லது கண்டும் காணாது விடப்பட்டிருக்கிற, ஒழுக்கங்கெட்ட, சுயநலமான வாழ்க்கைப் பாணிக்கு சபையில் இருப்பவர்கள் இடங்கொடுக்க அவர்கள் செய்திருப்பார்கள்.

8. (அ) தியத்தீராவிலுள்ள “யேசபேல்” பற்றி இயேசுவின் அறிவிப்பு என்ன? (ஆ) நவீன காலங்களில் தவறான பெண் செல்வாக்கு எவ்வாறு உணரப்பட்டிருக்கிறது?

8 தியத்தீராவிலுள்ள மூப்பர்களுக்கு இயேசு பின்வருமாறு தொடர்ந்து சொல்கிறார்: ‘அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணை கொடுத்தேன்; தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை. இதோ, நாம் அவளைக் கட்டில் கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ் செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளை விட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளுவேன்.’ (வெளிப்படுத்துதல் 2:21, 22) ஆகாபின் மேல் ஆதிக்கம் செலுத்தி, அப்போது மரண தண்டனை நிறைவேற்ற கடவுளால் நியமிக்கப்பட்ட யெகூவை எதிர்த்து நின்ற பூர்வ யேசபேல் போன்று, பெண்களின் இந்தச் செல்வாக்கு கணவர்களையும் மூப்பர்களையும் சூழ்ச்சியாக கையாள முயன்று கொண்டிருக்கலாம். தியத்தீராவிலுள்ள மூப்பர்கள், இந்த நாணமில்லாத யேசபேல் செல்வாக்கை அனுமதித்துக் கொண்டிருக்கிறதாக தெரிகிறது. இங்கு இயேசு அவர்களுக்கும், இன்று பூலோக முழுவதும் உள்ள யெகோவாவின் மக்களின் சபைக்கும் பலமான எச்சரிப்பைக் கொடுக்கிறார். நவீன காலங்களில், அப்படிப்பட்ட பிடிவாதமான சில பெண்கள் தங்கள் கணவர்கள் விசுவாசதுரோகிகளாகும்படி தூண்டியிருக்கின்றனர், மேலும் யெகோவாவின் உண்மையுள்ள ஊழியர்களுக்கு எதிராகவும்கூட நீதிமன்ற நடவடிக்கை எடுக்கும்படி பின்னின்று தூண்டிவிட்டிருக்கின்றனர்.—யூதா 5-8-ஐ ஒப்பிடவும்.

9. (அ) யேசபேல் பற்றிய இயேசுவின் வார்த்தைகள் சபையிலுள்ள எல்லா பெண்கள் மீதும் சாதகமற்ற விதத்தில் ஏன் பிரதிபலிப்பதில்லை? (ஆ) எப்பொழுது மட்டுமே யேசபேல் செல்வாக்கு எழும்புகிறது?

9 அது கிறிஸ்தவ சபையிலிருக்கும் உண்மையுள்ள பெண்களின் மேல் எந்தவிதத்திலும் சாதகமற்ற விதத்தில் பிரதிபலிக்கிறதில்லை. தற்காலங்களில், சாட்சிப்பகரும் வேலையின் பெரும்பாகம் உண்மையுள்ள சகோதரிகளாலே செய்யப்படுகிறது; அவர்கள் நடத்தும் வீட்டு வேதப்படிப்புகள் மூலமாக, பெருந்திரளான புதியவர்களை சபைக்குள் கொண்டு வருகின்றனர். சங்கீதம் 68:11-ல் (NW) குறிப்பிட்டுள்ளபடி கடவுள்தாமே இந்த ஏற்பாட்டை ஆசீர்வதிக்கிறார், “யெகோவாதாமேயும் சொல்கிறார்; நற்செய்தியைப் பிரசித்திப்படுத்துகிற பெண்கள் ஒரு பெரிய சேனை.” “தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றதாயிருக்கிற” அவர்களுடைய மனைவிகளின் அமைதலான, மரியாதையோடுகூடிய நடத்தையினால் கணவர்கள் மேல் நன்மைக்கான செல்வாக்கு ஏற்படலாம். (1 பேதுரு 3:1-4) திறமையும் சுறுசுறுப்புமுள்ள மனைவி ராஜாவாகிய லேமுவேலினால் புகழப்பட்டிருக்கிறாள். (நீதிமொழிகள் 31:10-31) ஆண்களை குற்றஞ்செய்யத் தூண்டுவதன் மூலமாக அல்லது தலைமை ஸ்தானத்தைச் சவால்விடுவதன் மூலமாக அல்லது அசட்டை செய்வதன் மூலமாக பெண்கள் வழியிலிருந்து விலகும்போது மட்டுமே அந்த யேசபேல் செல்வாக்கு எழும்புகிறது.—எபேசியர் 5:22, 23; 1 கொரிந்தியர் 11:3.

10. (அ) யேசபேலும் அவளுடைய பிள்ளைகளும் ஏன் நியாயத்தீர்ப்பை பெறவேண்டும்? (ஆ) யேசபேலின் பிள்ளைகளாகிறவர்கள் என்ன அபாயகரமான நிலையில் இருக்கிறார்கள், மேலும் அப்படிப்பட்டவர்கள் என்ன செய்யவேண்டும்?

10 “யேசபேல் என்னும் ஸ்திரீ”யைக் குறிப்பிடும்போது, இயேசு இவ்வாறு தொடருகிறார்: “அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.” (வெளிப்படுத்துதல் 2:23) யேசபேலும் அவள் பிள்ளைகளும் மனந்திரும்ப இயேசு காலத்தை அனுமதித்திருந்தார், ஆனால் அவர்களோ அவர்களுடைய ஒழுக்கக்கேடான வழிகளில் நிலைத்திருப்பதனால் நியாயத்தீர்ப்பைக் கட்டாயமாகவே பெற வேண்டும். இன்றுள்ள கிறிஸ்தவர்களுக்கு இதில் வலிமையுள்ள ஒரு செய்தி இருக்கிறது. யேசபேலைப் போன்று நடப்பவர்கள், ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி, தலைமைத்துவம் மற்றும் ஒழுக்கம் பற்றிய பைபிள் நியமங்களை மீறுவதன் மூலம் அல்லது பிடிவாதமாக இருந்து தேவராஜ்ய ஒழுங்கை அசட்டை செய்வதன் மூலம் அவளுடைய பிள்ளைகளாகி ஆவிக்குரிய விதத்தில் அபாயகரமான நோய்வாய்ப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். உண்மையாகவே, அப்படிப்பட்ட ஓர் ஆள் சபையிலுள்ள மூப்பர்களை அவனுக்காக ஜெபம் பண்ணும்படி அழைத்தால், “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் [யெகோவா, NW] அவனை எழுப்புவார்”—அவன் மனத்தாழ்மையுடன் அந்த ஜெபங்களுக்கு ஒத்திசைந்து நடக்கும் பட்சத்தில் மட்டுமே. ஆனால் எவனும் (அல்லது எவளும்) ஒழுக்கக்கேடான செயல்களை மறைத்துப் போட முயற்சி செய்வதன் மூலம் அல்லது வைராக்கியமான ஊழியம் செய்வதாக வெளித்தோற்றத்தில் காட்டிக்கொள்வதன் மூலம் கடவுளையோ கிறிஸ்துவையோ ஏமாற்றிவிடலாம் என்று நினைத்துவிட வேண்டாம்.—யாக்கோபு 5:14, 15.

11. சட்டவிரோதமான பெண்களின் செல்வாக்கு ஊடுருவுவதைக் குறித்து விழிப்புடன் இருப்பதற்கு சபைகள் இன்று எவ்வாறு உதவப்படுகின்றன?

11 சந்தோஷகரமாக, யெகோவாவின் சாட்சிகளின் பெரும்பாலான சபைகள் இந்த ஆபத்துக்கு இன்று விழிப்புள்ளவையாக இருக்கின்றன. தேவாட்சிக்கு எதிரான மனநிலைகளையும் தவறு செய்வதை நோக்கிச் செல்லும் போக்குகளையும் குறித்து மூப்பர்கள் விழிப்புள்ளவர்களாயிருக்கின்றனர். ஆபத்தின் வழியில் இருக்கின்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் அதிக தாமதமாவதற்கு முன்பாக அவர்கள் தங்கள் ஆவிக்குரிய தன்மையைக் கட்டியெழுப்பி சீர்பொருந்தும்படியாக உதவி செய்ய இந்த மூப்பர்கள் முயற்சிசெய்கிறார்கள். (கலாத்தியர் 5:16; 6:1) அன்பாகவும் உறுதியாகவும், இந்தக் கிறிஸ்தவக் கண்காணிகள் பெண்களின் விடுதலை என்பதற்கு ஒத்த நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்காக சிறிய தன்னலக் கும்பல்கள் எடுக்கக்கூடிய பெண்களின் எந்த முயற்சியையும் தடுத்துப்போடுகின்றனர். மேலுமாக, யெகோவாவின் சாட்சிகளுடைய வெளியீடுகளில், காலத்திற்கேற்ற அறிவுரைகள் அவ்வப்போது கொடுக்கப்படுகின்றன. a

12. யெகூவைப் போன்ற ஒரு வைராக்கியத்தை யோவான் வகுப்பார் இன்று என்ன வழியில் காட்டுகின்றனர்?

12 இருப்பினும், படுமோசமான ஒழுக்கக்கேட்டில் ஈடுபட்டிருக்கையில், மேலும் குறிப்பாக இது ஒரு பழக்கமாகி விட்டிருக்கையில் மனந்திரும்பாத பாவிகள் கட்டாயமாக சபை நீக்கம் செய்யப்பட வேண்டும். இஸ்ரவேலில் யேசபேலின் செல்வாக்கின் எல்லா தடயங்களையும் நீக்கிப் போடுவதற்கான யெகூவின் வைராக்கியத்தை நாம் நினைவுகூருகிறோம். அதைப்போலவே, இன்று, இந்த யோவான் வகுப்பார் உறுதியான நடவடிக்கை எடுத்து தங்களுடைய “யோனதாப்” தோழர்களுக்கு முன்மாதிரியை வைத்து, மேலும் எதை வேண்டுமானாலும் செய்ய அனுமதிக்கும் கிறிஸ்தவமண்டல ஊழியர்களிடமிருந்து அதிக வித்தியாசப்பட்டவர்களாக தங்களைக் காண்பித்துக் கொண்டிருக்கின்றனர்.—2 இராஜாக்கள் 9:22, 30-37; 10:12-17.

13. தவறான பெண் செல்வாக்கிற்கு அடிபணிந்துவிடுகிறவர்களுக்கு என்ன நேரிடும்?

13 யெகோவாவின் தூதுவரும் நியாயாதிபதியுமாக, தேவனுடைய குமாரன் நவீன யேசபேலை அடையாளங்காண்பதிலும் அவளுடைய ஆவிக்குரிய வியாதி உண்மையிலேயே தீராத ஒன்றாய் முற்றியதாக இருப்பதினால் அவளை வியாதியஸ்தரின் படுக்கையில் எறிவதிலும் சரியாகவே செயல்படுகிறார். (மல்கியா 3:1, 5) பெண்களின் இந்தத் தவறான செல்வாக்கிற்கு அடிபணிந்துவிட்டிருப்பவர்களும்கூட மகா உபத்திரவத்தை அனுபவிப்பார்கள்—சபை நீக்கம் செய்யப்பட்டிருப்பதனால் துயரத்தையும், மரித்தவர்களைப் போல கிறிஸ்தவ சபையிலிருந்து துண்டிக்கப்படுதலையும் அனுபவிப்பார்கள். இவர்கள் மனந்திரும்பி, தங்கள் போக்கை மாற்றிக்கொண்டு, சபைக்குள் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால்,—மிகவும் தாமதமானால் மிகுந்த உபத்திரவத்தில்—‘சாவுக்கேதுவான வாதையினால்’ சரீரப்பிரகாரமான மரணத்தையும் அவர்கள் எதிர்ப்படுகிறார்கள். இதற்கிடையில், அவர்களுடைய தவறான செயல்களுக்காக முழுமையாக மனந்திரும்பினால் திரும்ப நிலைநாட்டப்படுவது கூடியதாயிருக்கிறது.—மத்தேயு 24:21, 22; 2 கொரிந்தியர் 7:10.

14. (அ) யேசபேல் செல்வாக்கு போன்ற சில பிரச்சினைகளைக் கையாள இயேசு எவ்வாறு மூப்பர்களைப் பயன்படுத்துகிறார்? (ஆ) அப்படிப்பட்ட பிரச்சினைகளைக் கையாளக்கூடிய மூப்பர்களை சபை எவ்வாறு ஆதரிக்கவேண்டும்?

14 இயேசு “உள்ளிந்திரியங்களையும்” அதாவது, மிகவும் ஆழமான உள்ளுணர்ச்சிகளையும் “இருதயங்களையும்” அதாவது, உள்நோக்கங்களை உள்ளடக்கிய உள்ளான ஆளையும் ஆராய்கிறவர் என்பதை “எல்லாச் சபைகளும்” கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டும். இந்த நோக்கத்திற்காக, சபையில் தோன்றக்கூடிய யேசபேல் செல்வாக்கு போன்ற சில பிரச்சினைகளை கையாளுவதில் நம்பத்தகுந்த நட்சத்திரங்களை அல்லது மூப்பர்களை அவர் பயன்படுத்துகிறார். (வெளிப்படுத்துதல் 1:20) இந்த மூப்பர்கள் இந்த வகையான ஒரு காரியத்தை முழுமையாக ஆராய்ந்து நியாயத்தீர்ப்பு கொடுத்த பிறகு, எடுக்கப்பட்ட நடவடிக்கை ஏன், என்ன காரணங்களுக்காக என்பதைக் குறித்து தனிப்பட்ட நபர்கள் ஊடுருவி பார்க்கக்கூடாது. காரியங்களைப் பற்றிய மூப்பர்களின் முடிவை எல்லாரும் மனத்தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டு சபையில் இந்த நட்சத்திரங்களுக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்க வேண்டும். யெகோவாவிற்கும் அவருடைய அமைப்பு சம்பந்தப்பட்ட ஏற்பாட்டிற்குமான உண்மைத்தவறாமை பலனளிக்கப்படும். (சங்கீதம் 37:27-29; எபிரெயர் 13:7, 17) அவனவன் கிரியைகளுக்குத்தக்கதாக இயேசு கொடுக்கும்போது, உங்களுடைய சொந்த பங்கு ஓர் ஆசீர்வாதமாயிருப்பதாக.—கலாத்தியர் 5:19-24; 6:7-9.

“உங்களுக்குள்ளதைப் பற்றிக்கொண்டிருங்கள்”

15. (அ) யேசபேலினால் கறைப்படுத்தப்படாதவர்களுக்கு இயேசு என்ன சொல்லவேண்டியிருந்தது? (ஆ) கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டிய எல்லோருமே 1918-ல் விசுவாசதுரோக கிறிஸ்தவமண்டலத்தினால் கறைப்படுத்தப்படவில்லை என்பதை எது காண்பிக்கிறது?

15 இயேசுவின் அடுத்த வார்த்தைகள் ஆறுதலைக் கொண்டு வருகின்றன: “தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்து கொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள் மேல் வேறொரு பாரத்தையும் சுமத்த மாட்டேன். உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள்.” (வெளிப்படுத்துதல் 2:24, 25) யேசபேலின் செல்வாக்கினால் பாதிக்கப்படாத உண்மையுள்ள ஆத்துமாக்கள் தியத்தீராவில் இருக்கின்றன. அதைப்போலவே 1918-க்கு 40 வருடங்கள் முன்பாகவும் அது முதற்கொண்டும், கிறிஸ்தவர்களென உரிமைபாராட்டிக் கொண்டிருந்த எல்லாருமே கிறிஸ்தவமண்டலத்தில் முழுக்கமுழுக்க காணப்படும் ஒழுக்கக்கேடான, சீர்கேடான வழிகளைப் பொறுத்துக்கொண்டில்லை. இப்பொழுது யெகோவாவின் சாட்சிகள் என்று அறியப்படுகிற பைபிள் மாணாக்கரின் சிறிய தொகுதி, கிறிஸ்தவமண்டலத்தின் கோட்பாடுகளில் அநேகம் கிறிஸ்தவமல்லாத தொடக்கத்தைக் கொண்டிருப்பதைக் காண சர்ச் அங்கத்தினர்களுக்கு உதவி செய்ய முயற்சி செய்து, விசுவாசதுரோக கிறிஸ்தவமண்டலத்தின் மூலம் பெற்றுக்கொண்ட எல்லா பாபிலோனிய நம்பிக்கைகளையும் பழக்கங்களையும் தன்னிடத்திலிருந்து நீக்கிப்போடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள். “யேசபேல் என்னும் ஸ்திரீ”யின் கட்டுப்பாடற்ற போதகமும் இதில் அடங்கியிருக்கிறது.

16. இயேசுவும், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ நிர்வாகக் குழுவும் எந்த ஒரு பாரத்தையும் மேலுமாக கூட்டாமலிருந்தபோதிலும் என்ன காரியங்கள் தவிர்க்கப்பட வேண்டும்?

16 யோவான் வகுப்பார் இன்று திரள் கூட்டத்தாராகிய அவர்களுடைய தோழர்களையும், இழிவுபடுத்தும் பொழுதுபோக்கு உலகில் இருப்பதைப் போன்ற ஒழுக்கங்கெட்ட செல்வாக்குகளைக் குறித்து எச்சரிக்கையுடனிருக்கும்படி உற்சாகப்படுத்தியிருக்கின்றனர். அறியவேண்டும் என்ற ஆர்வத்தினால் அல்லது எதை தவிர்க்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்வதற்காக சீர்கேடானதைப் பார்க்கவோ அனுபவிக்கவோ அவசியமில்லை. ‘சாத்தானின் ஆழமான காரியங்களில்’ இருந்து தூர விலகியிருப்பதே ஞானமான போக்காகும். இயேசு பின்வருமாறு சொல்கிற பிரகாரம்: ‘வேறு எந்த பாரத்தையும் நான் உங்கள் மீது சுமத்திக்கொண்டில்லை.’ இது முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ நிர்வாகக் குழுவின் பின்வரும் தீர்மானத்தை நமக்கு நினைவுபடுத்துகிறது: “விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்க வேண்டுமென்பதே. அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள் மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வது நலமாயிருக்கும்.” (அப்போஸ்தலர் 15:28, 29) ஆவிக்குரிய செழுமைக்காக பொய் மதம், இரத்தத்தை தவறாக பயன்படுத்துதல் (இரத்தம் ஏற்றிக்கொள்வது போன்று), மேலும் ஒழுக்கக்கேடு இவற்றை தவிருங்கள்! மேலும் உங்கள் சரீர ஆரோக்கியமும் கூட அநேகமாக பாதுகாக்கப்படும்.

17. (அ) சாத்தான் இன்று எவ்வாறு “ஆழமான காரியங்க”ளுடன் மக்களை சோதித்திருக்கிறான்? (ஆ) சாத்தானின் சிக்கலான போலி அறிவு நிறைந்த உலகின் “ஆழமான காரியங்க”ளிடமாக நம்முடைய மனநிலை என்னவாக இருக்கவேண்டும்?

17 அறிவாற்றலைப் பொய்யாய்ப் புகழ்ந்து காட்டும் சிக்கலான ஆழ்ந்த சிந்தனைகள், தத்துவங்கள் போன்ற மற்ற ‘ஆழமான காரியங்களை’ இன்று சாத்தான் உடையவனாயிருக்கிறான். கட்டுப்பாடற்ற, ஒழுக்கங்கெட்ட நியாயங்கள் ஆகியவற்றோடு, ஆவியுலகத் தொடர்பும் பரிணாமக் கோட்பாடும் இவற்றில் அடங்கும். இந்த ‘ஆழமான காரியங்களை’ சர்வ-ஞான சிருஷ்டிகர் எவ்வாறு கருதுகிறார்? அப்போஸ்தலன் பவுல், அவர் இவ்வாறு சொல்லுவதாக குறிப்பிடுகிறார்: ‘ஞானிகளுடைய ஞானத்தை நான் அழிப்பேன்.’ அதற்கு நேர் எதிராக ‘தேவனுடைய ஆழமான காரியங்கள்’ எளிதாகவும் தெளிவாக விளங்குகிறதாகவும், இருதயத்திற்கு அனலூட்டக்கூடியதாகவும் இருக்கின்றன. ஞானமுள்ள கிறிஸ்தவர்கள் சாத்தானின் சிக்கலான போலி அறிவு நிறைந்த உலகின் ‘ஆழமான காரியங்களை’ வெறுத்தொதுக்குகின்றனர். “உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்,” என்பதை நினைவில் வையுங்கள்.—1 கொரிந்தியர் 1:19, கிங்டம் இன்டர்லீனியர்; 2:10; 1 யோவான் 2:17.

18. முடிவு வரையாக உண்மைத்தன்மையுடனிருக்கும் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்களை இயேசு உறுதியளித்துள்ளார், மேலும் உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் அர்மகெதோனில் என்ன சிலாக்கியத்தைக் கொண்டிருப்பார்கள்?

18 தியத்தீராவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு இப்பொழுது இயேசு இருதயத்திற்கு அனலூட்டும் வார்த்தைகளைப் பேசுகிறார். அது இன்றுள்ள அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களையும்கூட உற்சாகப்படுத்துகிறது: “ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள் மேல் அதிகாரம் கொடுப்பேன். அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப் போல நொறுக்கப்படுவார்கள்.” (வெளிப்படுத்துதல் 2:26, 27) உண்மையில் என்னே அதிசயமான சிலாக்கியம்! அபிஷேகஞ்செய்யப்பட்ட ஜெயங்கொள்கிறவர்கள் அவர்களுடைய உயிர்த்தெழுதலில், கலகத்தனமான தேசங்களுக்கு எதிராக அர்மகெதோனில் அழிவாகிய ‘இருப்புக்கோலை’ கையாளுவதில் இயேசுவோடு பங்குபெறுவதே அவர்கள் பெறும் இந்த அதிகாரமாகும். மண்பாண்டங்களை நொறுக்குவது போல கிறிஸ்து அவருடைய எதிரிகளை அடித்து நொறுக்கும்போது, அதிக பட்சத்தில், அந்தத் தேசங்களின் அணுசக்தி வல்லமை, ஒரு நனைந்து போன பட்டாசு போல சிதறிப்போகும்.—சங்கீதம் 2:8, 9; வெளிப்படுத்துதல் 16:14, 16; 19:11-13, 15.

19. (அ) ‘விடிவெள்ளி நட்சத்திரம்’ யார், ஜெயிப்பவர்களுக்கு அவர் எவ்வாறு கொடுக்கப்படுவார்? (ஆ) திரள் கூட்டத்தாருக்கு என்ன உற்சாகமூட்டுதல் கொடுக்கப்பட்டுள்ளது?

19 இயேசு மேலும் இவ்வாறு சொல்கிறார்: “விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன்.” (வெளிப்படுத்துதல் 2:28) இந்த “நட்சத்திரம்” என்ன என்பதை விளக்குபவராக பிறகு இயேசு தாமேயும் இவ்வாறு சொல்கிறார்: “நான் தாவீதின் வேரும், சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன்.” (வெளிப்படுத்துதல் 22:16) ஆம், பிலேயாமின் விருப்பமில்லாத உதடுகளிலிருந்து யெகோவா பலவந்தமாக வரப்பண்ணின பின்வரும் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவது இயேசுவாகும்: “ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்.” (எண்ணாகமம் 24:17) ஜெயங்கொள்பவர்களுக்கு “விடிவெள்ளி நட்சத்திரத்தை” இயேசு எவ்வாறு கொடுப்பார்? தெளிவாகவே, தம்மையே அவர்களுக்கு அளிப்பதன் மூலம், அவர்களை அவரோடு மிக நெருக்கமான உறவுக்குள் எடுத்துக் கொள்வதன் மூலம் அவ்வாறு செய்கிறார். (யோவான் 14:2, 3) நிச்சயமாகவே, சகித்திருப்பதற்கு ஒரு வலிமையுள்ள தூண்டுகோலாக இருக்கிறது! சீக்கிரத்தில் அந்தப் ‘பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரம்’ அவருடைய ராஜ்ய அதிகாரத்தை இங்கே பூமியில் பரதீஸை திரும்ப நிலைநாட்டப் பயன்படுத்துவார் என்பதை அறிவது திரள் கூட்டத்தாருக்கும்கூட இது தூண்டுகோலாக இருக்கிறது!

உத்தமத்தைக் காத்துக்கொள்ளுதல்

20. கிறிஸ்தவமண்டலத்தில் என்ன வளர்ச்சிகள் தியத்தீரா சபையிலுள்ள சில பலவீனங்களை நமக்கு நினைவுபடுத்துகிறது?

20 இந்தச் செய்தி, தியத்தீராவிலுள்ள கிறிஸ்தவர்களை அதிகமாக உற்சாகப்படுத்தியிருக்க வேண்டும். தியத்தீராவிலுள்ள கிறிஸ்தவர்களிடம் அவர்களுடைய சில பிரச்சினைகளைப் பற்றி பரலோகத்தில் உள்ள மகிமைப்படுத்தப்பட்ட தேவகுமாரன் தனிப்பட்ட விதத்தில் பேசியிருக்கிறார் என்பதைக் கற்பனைச் செய்துபாருங்கள்! நிச்சயமாகவே, அப்படிப்பட்ட அன்பான பராமரிப்புக்குக் குறைந்த பட்சம் சபையில் சிலராவது நல்ல முறையில் பிரதிபலித்தார்கள். ஏழு செய்திகளில் மிக நீளமான இந்தச் செய்தியானது, இன்று உண்மையான கிறிஸ்தவ சபையை அடையாளம் காண நமக்கும் கூட உதவுகிறது. யெகோவாவின் ஆலயத்திற்கு 1918-ல் இயேசு நியாயத்தீர்ப்புக்காக வந்தபோது, கிறிஸ்தவத்தை பின்பற்றுவதாக உரிமைபாராட்டிய பெரும்பான்மையான அமைப்புகள் விக்கிரகாராதனையினாலும் ஆவிக்குரிய ஒழுக்கக்கேட்டினாலும் கறைபடுத்தப்பட்டிருந்தது. (யாக்கோபு 4:4) சிலர் தங்களுடைய நம்பிக்கைகளுக்கு செவன்த் டே அட்வென்டிஸ்டைச் சேர்ந்த எல்லன் ஒயிட் மேலும் கிறிஸ்டியன் சைன்டிஸ்ட்டைச் சேர்ந்த மேரி பேக்கர் எட்டி, போன்ற 19-ம் நூற்றாண்டின் உறுதியான மனமுள்ள பெண்களின் போதகங்களை ஆதாரமாகக் கொண்டார்கள், மேலும் வெகு சமீப காலங்களில் பெண்கள் ஆலய பிரசங்க பீடத்திலிருந்து பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார்கள். (1 தீமோத்தேயு 2:11, 12-லுள்ள வேறுபாட்டைக் காணவும்.) கத்தோலிக்க மதத்தின் பல்வேறு முறைகளில், கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் மேலாக மரியாள் அடிக்கடி கனப்படுத்தப்படுகிறார்கள். இயேசு அவ்விதமாக அவர்களை கனப்படுத்தவில்லை. (யோவான் 2:4; 19:26) அப்படிப்பட்ட சட்டவிரோத பெண்களின் செல்வாக்கை அனுமதிக்கிற அமைப்புகள் உண்மையில் கிறிஸ்தவமாக ஏற்றுக்கொள்ளப்பட முடியுமா?

21. தியத்தீராவிற்குக் கொடுத்த இயேசுவின் செய்தியில் தனி நபர்களுக்கு என்ன பாடங்கள் இருக்கின்றன?

21 தனிப்பட்ட கிறிஸ்தவர்கள், யோவான் வகுப்பாராயிருந்தாலும் சரி அல்லது திரள் கூட்டத்தாராயிருந்தாலும் சரி, இந்தச் செய்தியை ஆழ்ந்து சிந்தித்துப் பார்ப்பது நல்லது. (யோவான் 10:16) தியத்தீராவைச் சேர்ந்த யேசபேலின் சீஷர்கள் செய்ததைப் போல, ஒரு சுலபமான போக்கைப் பின்பற்றுவது கவர்ச்சியாக இருப்பதாக சிலர் காணக்கூடும். விட்டுக்கொடுத்துவிடுவதற்கான தூண்டுதலும் இருக்கிறது. இன்று, இரத்தம் சம்பந்தப்பட்ட பொருட்களை சாப்பிடுதல் அல்லது இரத்தமேற்றிக் கொள்ளுதல் போன்ற விவாதங்களை எதிர்ப்பட வேண்டியிருக்கிறது. வெளி ஊழியத்தில் வைராக்கியத்தோடு ஈடுபடுதல் அல்லது பேச்சுக்களைக் கொடுத்தல் போன்றவை மற்ற பகுதிகளில், வன்முறை நிறைந்த ஒழுக்கக்கேடான திரைப்படங்கள் மற்றும் வீடியோ படங்கள் பார்ப்பது அல்லது மிதமிஞ்சிய மதுபான உபயோகம் இவற்றில் குறைந்த கண்டிப்புடன் இருக்க உரிமை அளிப்பதாக சிலர் உணரலாம். தியத்தீராவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கான இயேசுவின் எச்சரிக்கை அதுபோன்ற உரிமைகளை நாம் எடுக்கக்கூடாது என்று நமக்குச் சொல்கிறது. தியத்தீராவிலிருந்த அநேக கிறிஸ்தவர்களைப் போல நாம் பிளவுபட்டவர்களாக அல்ல, ஆனால் சுத்தமானவர்களாகவும் முழு ஆத்துமாவுடனிருக்கும்படி யெகோவா விரும்புகிறார்.

22. கேட்கும் காதுள்ளவர்களாயிருப்பதன் முக்கியத்துவத்தை இயேசு எவ்வாறு வலியுறுத்திக் காண்பிக்கிறார்?

22 முடிவாக, இயேசு இவ்வாறு அறிவிக்கிறார்: “ஆவியானவர் [ஆவி, NW] சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.” (வெளிப்படுத்துதல் 2:29) இங்கே, நான்காவது முறையாக கிளர்ச்சி உண்டுபண்ணும் இந்த வசனிப்பை இயேசு மீண்டும் கூறுகிறார், அது இன்னும் வர இருக்கிற எல்லா மூன்று செய்திகளையும் முடிவடையச் செய்யும். சாதகமாய் பிரதிபலிக்கும் செவியை நீங்கள் உடையவராயிருக்கிறீர்களா? அப்படியானால், அவருடைய ஆவியைக்கொண்டு, அவருடைய வழிமூலத்தின் வாயிலாக கடவுள் தொடர்ந்து அறிவுரை கொடுத்துக்கொண்டிருக்கையில், கருத்துடன் செவிகொடுத்துக் கொண்டிருங்கள்.

[அடிக்குறிப்பு]

a உதாரணத்துக்கு, நவம்பர் 1, 2003 தேதியிட்ட காவற்கோபுர பத்திரிகையில், “உண்மையுள்ள கிறிஸ்தவ பெண்கள்—கடவுளின் மதிப்புமிக்க வணக்கத்தார்” என்ற கட்டுரையைக் காண்க.

[கேள்விகள்]

[பக்கம் 51-ன் படம்]

இன்று, சாட்சிபகரும் ஊழியத்தின் பெரும் பங்கை உண்மையுள்ள சகோதரிகள் செய்துவருகின்றனர், இவர்கள் பணிவோடு தேவாட்சிக்குட்பட்ட அதிகாரத்துக்கு ஆதரவு கொடுக்கின்றனர்