Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டிய நிகழ்ச்சிகள்

சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டிய நிகழ்ச்சிகள்

அதிகாரம் 3

சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டிய நிகழ்ச்சிகள்

1. இந்த உலகின்மீது கொண்டுவரப்படும் கடவுளுடைய நியாயத்தீர்ப்பின் நிறைவேற்றத்தை எவ்வாறு நீங்கள் தப்பிக்க முடியும்?

 நீங்கள் இன்று உலக சம்பவங்களைக் குறித்து ஆழ்ந்த அக்கறையுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஏன் அப்படி? ஏனெனில் இந்த உலகம் கடவுளுடைய நியாயத்தீர்ப்பின் நிறைவேற்றத்தைத் தப்பிக்க முடியாது. ஆனால் நீங்கள் தப்பித்துக்கொள்ளலாம். அழிவுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த ‘உலகத்தின் பாகமாக இல்லாமல்’ இருப்பதன் மூலமாக உங்களால் அப்படிச் செய்ய முடியும். இது இன்பந்துறந்த துறவு வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்வதை அர்த்தப்படுத்துவதில்லை. ஓர் ஆரோக்கியகரமான, அர்த்தமுள்ள வாழ்க்கையை அனுபவித்தபோதிலும், அரசியல் சீர்கேட்டிலிருந்தும், பேராசைக்கொண்ட வர்த்தகத்திலிருந்தும் கடவுளை அவமதிக்கும் மதத்திலிருந்தும் மேலும் வன்முறையான மற்றும் ஒழுக்கங்கெட்ட நடத்தையிலிருந்தும் நீங்கள் உங்களைப் பிரித்து வைத்துக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது. அதே சமயத்தில், ஒழுக்கம் சம்பந்தப்பட்டதில் கடவுளுடைய உயர்ந்த தராதரங்களை நீங்கள் பின்பற்றி, அவருடைய சித்தத்தைச் செய்யத் தேட வேண்டும். (யோவான் 17:14-16, NW; செப்பனியா 2:2, 3; வெளிப்படுத்துதல் 21:8) இப்படிப்பட்ட காரியங்களில் உங்களைத்தாமே நீங்கள் பொருத்தி, வாழ்க்கையில் தேவையான மாற்றங்களைச் செய்வது எவ்வளவு முக்கியமானது என்பதை பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல் காண்பிக்கிறது.

2. அப்போஸ்தலன் யோவான் இந்த மகத்தான தீர்க்கதரிசனமாகிய வெளிப்படுத்துதலை எப்படி அறிமுகப்படுத்துகிறார், கடவுள் யாரிடம் இந்த முக்கிய செய்தியை கொடுத்தார்?

2 அப்போஸ்தலன் யோவான் இந்த மகத்தான தீர்க்கதரிசனத்தை பின்வரும் வார்த்தைகளால் அறிமுகப்படுத்துகிறார்: “சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் [அடிமைகளுக்குக், NW] காண்பிக்கும் பொருட்டு, தேவன் இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும் . . . வெளிப்படுத்தினதுமான விசேஷம்.” (வெளிப்படுத்துதல் 1:1அ) எனவே உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவே கடவுளிடமிருந்து இந்த முக்கிய செய்தியை பெற்றுக்கொண்டார். இயேசு புரியாத திரித்துவத்தின் பாகமாக இல்லாமல் இங்கே தம்முடைய தந்தைக்குக் கீழ்ப்பட்டிருப்பவராக காட்டப்படுகிறார். இதே விதமாக, கிறிஸ்தவ சபையை உண்டுபண்ணும் ‘அடிமைகள்’ இயேசு கிறிஸ்து ‘எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறதற்கு’ அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 14:4; எபேசியர் 5:24) ஆனால் இன்று உண்மையில் கடவுளுடைய ‘அடிமைகளாக’ இருப்பது யார்? வெளிப்படுத்துதல் புத்தகம் அவர்களுக்கு எவ்வாறு நன்மைபயக்குகிறது?

3. (அ) இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்பட்டிருக்கும் அந்த ‘அடிமைகள்’ யார்? (ஆ) தேவதூதர்களுடைய வழிநடத்துதலின்கீழ் அந்த உண்மையுள்ள ‘அடிமைகள்’ என்ன வேலையை செய்து வருகிறார்கள்?

3 வெளிப்படுத்துதல் புத்தகத்தை எழுதிய அப்போஸ்தலன் யோவான் தன்னை அப்படிப்பட்ட ஒரு அடிமையாக விவரிக்கிறார். உயிர் வாழ்ந்த கடைசி அப்போஸ்தலனாகவும், பரலோகத்தில் அழியாமையை சுதந்தரித்துக்கொள்ளும் ஆவியால் அபிஷேகஞ்செய்யப்பட்ட ‘அடிமைகள்’ தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவராகவும் இருந்தார். இன்று, இவர்களில் ஒரு சில ஆயிரம்பேர் மட்டுமே பூமியில் மீந்துள்ளனர். ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகள் அடங்கிய ஒரு திரள் கூட்டமான வேறே ஊழியர்களையுங்கூட கடவுள் கொண்டிருக்கிறார். இன்று எண்ணிக்கையில் லட்சக்கணக்கான ஆட்களாக இவர்கள் இருக்கின்றனர். தேவதூதர்களின் வழிநடத்துதலின்கீழ், இவர்கள் அபிஷேகஞ்செய்யப்பட்ட ‘அடிமைகளுடன்’ முழு மனிதவர்க்கத்துக்கும் நித்திய நற்செய்தியை அறிவிப்பதில் பங்குகொள்கின்றனர். பூமியிலிருக்கிற சாந்தகுணமுள்ளோர் இரட்சிப்பைக் கண்டடைய இந்த “அடிமை”களும், ஆ, எப்படி தங்களை அற்பணிக்கின்றனர்! (மத்தேயு 24:14; வெளிப்படுத்துதல் 7:9, 14; 14:6) சந்தோஷத்தைத் தரும் இந்த நற்செய்தியிலிருந்து நன்மையடைய நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை வெளிப்படுத்துதல் புத்தகம் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

4. (அ) யோவான் வெளிப்படுத்துதல் புத்தகத்தை 1,900-க்கும் அதிக ஆண்டுகள் முன்பாகவே எழுதியதால், “சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவை”களைப் பற்றி எப்படி அவர் சொன்னான்? (ஆ) முன்னுரைக்கப்பட்ட காரியங்களைக் குறித்ததில், இப்போது சான்றுகள் எதைக் காட்டுகின்றன?

4 என்றபோதிலும், ‘சீக்கிரத்தில் சம்பவிக்க வேண்டியவைகள்’ இந்த ‘அடிமைகளுக்கு’ காண்பிக்கப்படும் என்பதை யோவானால் எவ்வாறு சொல்ல முடிந்தது? இந்த வார்த்தைகள் 1,900-க்கும் அதிக ஆண்டுகள் முன்பாக சொல்லப்படவில்லையா? யெகோவாவுடைய பார்வையில், ஆயிரம் வருஷம் “நேற்றுக்கழிந்த நாள் போல” இருப்பதால், மனித குடியிருப்புக்காக பூமியைப் படைத்து அதை ஆயத்தஞ்செய்வதில் அவர் செலவிட்ட வரையரையற்ற காலத்தோடு ஒப்பிடும்போது அவருடைய நோக்குநிலையில் 1,900 ஆண்டுகள் ஒரு குறுகிய காலமே. (சங்கீதம் 90:4) அப்போஸ்தலன் பவுல் தனக்கிருந்த ‘எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும்’ குறித்து எழுதினார், ஏனெனில் தனக்கு இருந்த பரிசின் மெய்ம்மையானது அருகாமையிலிருப்பதாக அவனுக்கு உண்மையில் தோன்றியது. (பிலிப்பியர் 1:20) என்றாலும், இன்று, முன்னறிவிக்கப்பட்ட எல்லா காரியங்களும் கால அட்டவணையில் குறித்தப் பிரகாரம் நடைபெறும் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உண்டு. சரித்திரத்திலேயே முன்னொருபோதும் இல்லாத அளவுக்கு, மனிதவர்க்கம் தப்பிப்பிழைப்பதே ஆபத்தில் இருக்கிறது. கடவுள் மட்டுமே இதற்கு பரிகாரத்தைக் கொண்டுள்ளார்!—ஏசாயா 45:21.

தொடர்புகொள்வதற்கான வழிமூலம்

5. வெளிப்படுத்துதல் எப்படி அப்போஸ்தலன் யோவானுக்கும் பின்னர் சபைகளுக்கும் தெரிவிக்கப்பட்டது?

5 வெளிப்படுத்துதல் 1:1ஆ, 2, (NW) தொடர்ந்து சொல்கிறது: “இவர் [இயேசு] தம்முடைய தூதனை அனுப்பி இதை [வெளிப்படுத்தின விசேஷத்தை] அடையாளங்களினால் அவர் மூலமாக தம்முடைய அடிமையாகிய யோவானுக்கு கொடுத்தார். இவன் தேவனுடைய வசனத்தைக் குறித்தும், இயேசு கிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக் குறித்தும், தான் கண்ட யாவற்றையும் குறித்தும் சாட்சியாக அறிவித்திருக்கிறான்.” எனவே, கடவுளால் ஏவப்பட்ட இந்தப் பதிவை யோவான் தேவதூதுவன் மூலமாக பெற்றுக்கொண்டார். இதை அவர் ஒரு சுருளில் எழுதி, அப்பொழுதிருந்த சபைகளுக்கு அனுப்பினார். சந்தோஷகரமாகவே, இன்று பூமியில் கிட்டத்தட்ட 1,00,000 சபைகளில் இருக்கிற தம்முடைய ஒன்றுபட்ட ஊழியர்களை உற்சாகமூட்டுவதற்கு, இதை நமக்கு கடவுள் பாதுகாத்துவைத்திருக்கிறார்.

6. இயேசு, இன்று, தம்முடைய ‘அடிமைகளுக்கு’ ஆவிக்குரிய போஜனத்தை கொடுக்க உபயோகிக்கப்போகும் வழிமூலத்தை எவ்வாறு அடையாளப்படுத்திக்காட்டினார்?

6 யோவானுடைய நாட்களில் வெளிப்படுத்துதலிலுள்ள செய்திகளைத் தெரிவிப்பதற்கு கடவுள் ஒரு வழிமூலத்தைக் கொண்டிருந்தார். அந்த வழிமூலத்தின் பூமிக்குரிய பாகமாக யோவான் இருந்தார். அதேபோன்று, இன்று, அவருடைய ‘அடிமைகளுக்கு’ ஆவிக்குரிய போஷாக்கை கொடுப்பதற்கு கடவுள் ஒரு வழிமூலத்தைக் கொண்டிருக்கிறார். இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவைக்குறித்த அவருடைய முக்கியமான தீர்க்கதரிசனத்தில், இந்த வழிமூலத்தின் பூமிக்குரிய பாகத்தை இயேசு அடையாளப்படுத்தினார்: “ஏற்ற வேளையிலே தன் வேலைக்காரருக்கு போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் [அடிமை, NW].” (மத்தேயு 24:3, 45-47) இந்த தீர்க்கதரிசனப் பொருளை வெளிப்படுத்துவதற்கு அவர் இந்த யோவான் வகுப்பையே பயன்படுத்துகிறார்.

7. (அ) வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள அடையாளங்கள் எவ்வாறு நம்மை பாதிக்க வேண்டும்? (ஆ) யோவான் வகுப்பாரில் சிலர் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் காணப்படும் தரிசனங்களுடைய நிறைவேற்றத்தில் எவ்வளவு காலமாக பங்கெடுத்திருக்கின்றனர்?

7 இயேசு வெளிப்படுத்தின விசேஷத்தை “அடையாளங்களி”னால் அல்லது குறிப்பு அடையாளக் குறிகளினால் அளித்ததாக அப்போஸ்தலன் யோவான் எழுதுகிறார். இவை ஆராய்வதற்கு உயிர்ப்புள்ளதாகவும் கிளர்ச்சியூட்டுவதாகவும் இருக்கின்றன, வல்லமைவாய்ந்த செயலை சித்தரித்துக் காட்டுகின்றன. இந்தத் தீர்க்கதரிசனத்தையும் அதனுடைய உட்பொருளையும் மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதில் வைராக்கியத்தோடு ஈடுபட நம்மை இது தூண்ட வேண்டும். வெளிப்படுத்துதல், சிலிர்ப்பூட்டுகிற அநேக தரிசனங்களை நமக்கு அளிக்கிறது, இந்த ஒவ்வொரு தரிசனத்திலும் யோவான் சுறுசுறுப்பாக ஈடுபடுபவராகவோ பார்வையாளராகவோ அதில் பங்குகொண்டார். யோவான் வகுப்பாரைச் சேர்ந்த சிலர் பல பத்தாண்டுகளாக இந்தத் தரிசனங்களுடைய நிறைவேற்றத்தில் பங்கெடுத்திருக்கிறார்கள், இதனுடைய பொருளை மற்றவர்களுக்கு எடுத்துவிளக்க கடவுளுடைய ஆவி வெளிப்படுத்தியதற்கு இவர்கள் சந்தோஷமுடன் இருக்கிறார்கள்.

8. (அ) வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள தரிசனங்கள் ஒவ்வொன்றிலும் எது தெளிவாக தெரிகிறது? (ஆ) வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள மிருகங்களை அடையாளங்கண்டுகொள்வதற்கு தானியேலுடைய தீர்க்கதரிசனம் நமக்கு எப்படி உதவுகிறது?

8 வெளிப்படுத்துதலில் உள்ள இந்தத் தரிசனங்கள் காலக்கிரமமாக தொகுக்கப்பட்ட வரிசையில் கொடுக்கப்படவில்லை. ஒவ்வொன்றும் நிறைவேற்றத்திற்கான அதனுடைய சொந்தக் காலப்பகுதியைக் கொண்டிருக்கிறது. அநேக தரிசனங்கள் முந்தைய தீர்க்கதரிசனங்களின் வார்த்தைகளை எதிரொலிக்கின்றன, இந்தத் தீர்க்கதரிசனங்கள் அவற்றின் அர்த்தத்துக்குக் குறிப்புகளைக் கொடுக்கின்றன. உதாரணமாக, தானியேலுடைய தீர்க்கதரிசனம் பயப்படத்தக்க நான்கு மிருகங்களை விவரித்து, அவை பூமியிலே ஆட்சி செய்யும் அதிகாரங்களை சித்தரிக்கின்றன என்பதை விளக்கியது. எனவே, வெளிப்படுத்துதலில் சொல்லப்பட்டுள்ள மிருகங்கள் தற்போது உள்ளவற்றையும் உள்ளடக்கிய அரசியல் ஆட்சிமுறைகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன என்று நாம் புரிந்துகொள்ள உதவப்படுகிறோம்.—தானியேல் 7:1-8, 17; வெளிப்படுத்துதல் 13:2, 11-13; 17:3.

9. (அ) யோவானைப் போன்று, யோவான் வகுப்பார் என்ன மனப்பான்மையை காட்டியிருக்கின்றனர்? (ஆ) நாம் சந்தோஷமுள்ளவர்களாக ஆவதற்கு யோவான் எவ்வாறு வழியைக் காண்பிக்கிறார்?

9 கடவுள், இயேசு கிறிஸ்து மூலமாக அவருக்குக் கொடுத்த செய்திக்கு சாட்சி கொடுப்பதில் யோவான் உண்மையுள்ளவராக இருந்தான். அவர் “தான் கண்ட யாவற்றையும்” விவரமாக விளக்கியுள்ளார். இந்தத் தீர்க்கதரிசனத்தை முழுமையாக விளங்கிக்கொண்டு அதனுடைய சிறந்தக் குறிப்புகளை கடவுளுடைய ஜனங்களுக்குத் தெரியப்படுத்துவதற்கு, யோவான் வகுப்பார் கடவுளிடமிருந்தும் இயேசு கிறிஸ்துவினிடமிருந்தும் ஊக்கத்துடன் வழிநடத்துதலை நாடியிருக்கிறார்கள். அபிஷேகஞ்செய்யப்பட்ட சபையின் நன்மைக்காக (கடவுள் மிகுந்த உபத்திரவத்தினூடாக உயிரோடே காப்பாற்றப்போகும் உலகளாவிய திரள் கூட்டத்திற்காக) யோவான் இவ்வாறு எழுதினார்: “இந்த தீர்க்கதரிசன வார்த்தைகளைச் சப்தமாக வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவற்றைக் கைக்கொள்ளுகிறவர்களும் சந்தோஷமுள்ளவர்கள், ஏனெனில் குறிக்கப்பட்ட காலம் சமீபமாயிருக்கிறது.”—வெளிப்படுத்துதல் 1:3, NW.

10. சந்தோஷமடைவதற்கு வெளிப்படுத்துதல் புத்தகத்தைக் குறித்ததில் நாம் என்ன செய்ய வேண்டும்?

10 வெளிப்படுத்துதலை படிப்பதன் மூலம், இன்னும் அதிகமாக, அதில் எழுதியுள்ளவற்றை கைக்கொள்வதன் மூலம், நீங்கள் மிகவும் பயனடைவீர்கள். யோவான் தான் எழுதிய ஒரு நிரூபத்தில் விளக்கினார்: “நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல. தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.” (1 யோவான் 5:3, 4) அப்படிப்பட்ட விசுவாசத்தைக் கட்டுவதன் மூலமாக நீங்கள் அளவில்லா சந்தோஷத்தையுடையவர்களாக இருக்க முடியும்!

11. (அ) தீர்க்கதரிசன வார்த்தைகளை நாம் கைக்கொள்வது ஏன் அவசரமானது? (ஆ) இப்போது என்ன காலம் அபாயகரமான விதத்தில் நெருங்கிவருகிறது?

11 “குறிக்கப்பட்ட காலம் சமீபமாயிருப்”பதால், தீர்க்கதரிசன வார்த்தைகளை நாம் கைக்கொள்வது அவசரமானது. இது எதற்கான குறிக்கப்பட்ட காலம்? கடவுளின் நியாயத்தீர்ப்புகளை உள்ளடக்கிய வெளிப்படுத்துதலில் காணப்பட்டுள்ள தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்திற்குரிய காலமே ஆகும். சாத்தானிய உலக ஒழுங்குமுறையின்மீது கடவுளும் இயேசு கிறிஸ்துவும் இறுதியான நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான காலம் அருகாமையில் உள்ளது. ‘அந்த நாள் அல்லது நேரத்தை’ தம்முடைய தந்தை மாத்திரமே அறிந்திருப்பதாக இயேசு பூமியிலிருக்கும்போது சொன்னார். நம் நாளில் பெருகிவரும் தொல்லைகளை முன்நோக்கினவாறு இயேசு மேலும் சொன்னார்: ‘இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்து போகாது.’ எனவே கடவுளின் தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான குறிக்கப்பட்ட காலம் அபாயகரமான விதத்தில் கிட்ட நெருங்கிவருகிறது. (மாற்கு 13:8, 30-32) ஆபகூக் 2:3 சொல்கிற பிரகாரம்: “குறித்தக் காலத்துக்கு தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும். அது தாமதிப்பதில்லை.” மிகுந்த உபத்திரவத்தினூடே நாம் இரட்சிப்படைவது கடவுளுடைய தீர்க்கதரிசன வார்த்தையை நாம் கைக்கொள்வதைச் சார்ந்திருக்கிறது.—மத்தேயு 24:20-22.

[கேள்விகள்]

[பக்கம் 15-ன் பெட்டி]

வெளிப்படுத்துதல் புத்தகத்தைப் புரிந்து கொள்வதற்கு நமக்கு அவசியமானவை

• யெகோவாவுடைய ஆவியின் உதவியைப் பெறுவது

• எப்போது கர்த்தருடைய நாள் ஆரம்பித்தது என்பதைப் பகுத்துணர்வது

• இன்றைய உண்மையும் விவேகமுமுள்ள அடிமையை அடையாளங்கண்டுகொள்வது