Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜீவ புஸ்தகச்சுருளில் உங்கள் பெயர் இருக்கிறதா?

ஜீவ புஸ்தகச்சுருளில் உங்கள் பெயர் இருக்கிறதா?

அதிகாரம் 11

ஜீவ புஸ்தகச்சுருளில் உங்கள் பெயர் இருக்கிறதா?

சர்தை

1. சர்தையிலுள்ள சபையின் ஆவிக்குரிய நிலைமை என்னவாயிருக்கிறது, இயேசு எவ்வாறு தம்முடைய செய்தியை ஆரம்பிக்கிறார்?

 நவீன கால அகிஸ்ஸார் (தியத்தீரா) நகருக்குத் தெற்கே சுமார் 48 கிலோமீட்டருக்கு அப்பால், மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவிடமிருந்து ஒரு செய்தியை பெறவிருக்கும் அடுத்த சபை சர்தை இருக்கிறது. நம்முடைய பொது சகாப்தத்துக்கு முன்பாக ஆறாவது நூற்றாண்டில், இந்த நகரம் பூர்வ லீதியா ராஜ்யத்தின் பெருமை வாய்ந்த தலைநகராகவும் மிகப் பெரிய ஐசுவரியவானாயிருந்த குரோஸஸ் அரசனுடைய இருப்பிடமாகவும் இருந்தது. யோவானின் நாளிற்குள், அது கடினமான காலத்திற்குள் விழுந்திருந்தது, மேலும் குரோஸஸின் கீழிருந்த அதனுடைய முன்னாளைய சிறப்பு வெறும் வரலாறு மட்டுமே. அதைப் போலவே, அங்குள்ள கிறிஸ்தவ சபை ஆவிக்குரிய விதத்தில் வறுமையாகிவிட்டிருந்தது. முதலாவது முறையாக, இயேசு அவருடைய செய்தியை ஒரு போற்றுதலான வார்த்தையோடு ஆரம்பிக்கவில்லை. அதற்குப் பதிலாக, அவர் இவ்வாறு கூறுகிறார்: “சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது: உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.”​—வெளிப்படுத்துதல் 3:1.

2. (அ) இயேசு “ஏழு ஆவிகளை” கொண்டிருப்பது சர்தையிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு என்ன முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது? (ஆ) சர்தை சபை என்ன நற்பெயரைக் கொண்டிருந்தது, ஆனால் உண்மைகள் என்னவாயிருந்தன?

2 இயேசு தம்மை ‘ஏழு ஆவிகளையுடையவர்’ என்பதாக ஏன் அடையாளப்படுத்துகிறார்? ஏனெனில், இந்த ஆவிகள் யெகோவாவின் பரிசுத்த ஆவி அதனுடைய முழுமையான அளவில் பாய்ந்து செல்வதை பிரதிநிதித்துவம் செய்கின்றன. பின்பு, யோவான் அவற்றை “ஏழு கண்கள்” என்பதாகவும் விவரிக்கிறார், இது கடவுளின் பரிசுத்த ஆவி இயேசுவுக்கு அளிக்கும் ஊடுருவிச் செல்லும் பார்வையைக் குறிப்பிடுகிறது. (வெளிப்படுத்துதல் 5:6 ) இவ்வாறாக, என்ன நிலைமை இருந்தாலும் அதை அவர் வெளியாக்கி கையாளக்கூடியவராயிருக்கிறார். (மத்தேயு 10:26; 1 கொரிந்தியர் 4:5 ) சர்தையிலுள்ள சபை உயிருடன், சுறுசுறுப்பாக இருப்பதாக நற்பெயர்பெற்றிருந்தது. ஆனால் அது ஆவிக்குரிய பிரகாரமாக மரித்திருப்பதை இயேசுவால் பார்க்க முடிகிறது. தெளிவாகவே, அதனுடைய பெரும்பாலான அங்கத்தினர்கள், அவர்கள் கிறிஸ்தவர்களாவதற்கு முன்னிருந்த அக்கறையின்மை என்ற நிலைமைக்கு மீண்டும் வீழ்ந்து விட்டிருந்தனர்.​—எபேசியர் 2:1-3-ஐ ஒப்பிடுக; எபிரெயர் 5:11-14.

3. (அ)  இயேசு “ஏழு நட்சத்திரங்களை” கொண்டிருக்கும் உண்மையை “சர்தை சபையின் தூதன்” ஏன் தனிப்பட்ட கவனக்குறிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும்? (ஆ) சர்தையிலுள்ள சபைக்கு இயேசு என்ன பலமான அறிவுரையைக் கொடுக்கிறார்?

3 “ஏழு நட்சத்திரங்களை” உடையவர் அவர்தான் என்பதையும் இயேசு “சர்தை சபையின் தூதனுக்கு” நினைப்பூட்டுகிறார். அந்தச் சபை மூப்பர்களை அவருடைய வலது கையில் பிடித்துக்கொண்டு, அவர்களுடைய மேய்க்கும் வேலையில் அவர்களை வழிநடத்த அதிகாரம் கொண்டிருக்கிறார். அவர்கள் ‘ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்வதற்கு’ தங்களுடைய இருதயங்களை அமையப்பண்ணவேண்டும். (நீதிமொழிகள் 27:23 ) ஆகவே, இயேசுவின் பின்வரும் அடுத்த வார்த்தைகளுக்கு கவனமாகச் செவிகொடுக்க வேண்டியவர்களாயிருந்தார்கள்: “நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்கு முன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை. ஆகையால், நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப் போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும் வேளையை அறியாதிருப்பாய்.”​—வெளிப்படுத்துதல் 3:2, 3.

4. “மீதமுள்ள காரியங்களை பலப்படுத்து”வதற்கு சர்தையிலுள்ள சபைக்கு பேதுருவின் வார்த்தைகள் எவ்வாறு உதவும்?

4 சர்தையிலுள்ள மூப்பர்கள் அவர்கள் சத்தியத்தைக் கற்றுக்கொண்டபோது முதலில் கொண்டிருந்த மகிழ்ச்சியையும் பிறகு பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களையும் நினைவுகூரவேண்டிய அவசியமாயிருக்கிறது. ஆனால் இப்போதோ ஆவிக்குரிய நடவடிக்கைகளைக் குறித்ததில் அவர்கள் மரித்திருக்கிறார்கள். விசுவாசத்தின் கிரியைகள் இல்லாமையால் அவர்களுடைய சபை குத்துவிளக்கு அணைந்துபோகும் நிலையில் ஒளிவிட்டுக்கொண்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பாக, அப்போஸ்தலன் பேதுரு ஆசியாவிலுள்ள சபைகளுக்கு (அநேகமாக சர்தை உட்பட ) கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்டதும்​—⁠‘பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியுடன்’ பிரசங்கிக்கப்பட்டுமிருக்கிற மகிமையான நற்செய்திக்கு போற்றுதலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று எழுதினார்​—⁠யோவானின் தரிசனத்தின் ஏழு ஆவிகளினால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது. ‘அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும் அவருக்குச் சொந்த ஜனமாயும் அவர்கள் இருக்கிறார்கள்’ என்றும் அந்த ஆசிய கிறிஸ்தவர்களுக்கு பேதுரு நினைவுப்படுத்தினார். (1 பேதுரு 1:12, 25; 2:9 ) அப்பேர்ப்பட்ட ஆவிக்குரிய சத்தியங்களைத் தியானிப்பது சர்தையிலுள்ள சபை மனந்திரும்பவும் ‘ஸ்திரப்படவும்’ உதவும்.​—2 பேதுரு 3:9.

5. (அ) சர்தையிலுள்ள கிறிஸ்தவர்களின் போற்றுதலுக்கு என்ன ஏற்பட்டது? (ஆ) இயேசுவின் அறிவுரைக்கு சர்தை கிறிஸ்தவர்கள் பிரதிபலிக்கவில்லை என்றால் என்ன ஏற்படும்?

5 இந்தச் சமயத்தில், சத்தியத்திற்கான அவர்களுடைய போற்றுதலும் அன்பும் அநேகமாக அணைந்து போன ஒரு நெருப்பைப் போன்றிருந்தது. ஒருசில தணல்கள் மட்டுமே தொடர்ந்து ஒளிவீசிக் கொண்டிருந்தன. பொறியை விசிறிவிட்டு, நெருப்பைத் தூண்டிவிட்டு, அவர்களுடைய அஜாக்கிரதையினால் செய்யப்பட்டிருந்த பாவங்களிலிருந்து மனந்திரும்பி, ஆவிக்குரிய விதத்தில் உயிருடனிருக்கும் ஒரு சபையாக மீண்டும் ஆகவேண்டும் என்று இயேசு அவர்களை உற்சாகப்படுத்துகிறார். (2 தீமோத்தேயு 1:6, 7 வசனங்களை ஒப்பிடுக. ) இல்லாவிடில், எதிர்பாராத சமயத்தில் இயேசு நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற​—⁠ஒரு “திருடனைப்போல்”​—⁠வரும்போது சர்தையில் உள்ள சபை தயாராயிருக்காது.​—மத்தேயு 24:43, 44.

ஒரு “திருடனைப்போல்” வருதல்

6. இயேசு எவ்வாறு 1918-ல் “திருடனைப்போல்” வந்தார், அவரைப் பின்பற்றுபவர்களாக உரிமைபாராட்டியவர்கள் மத்தியில் அவர் என்ன நிலைமையைக் கண்டார்?

6 அவர் ஒரு “திருடனைப்போல்” வருவது பற்றிய இயேசுவின் எச்சரிப்பு நவீன காலங்கள் வரை வந்தடைகிறது. கர்த்தருடைய நாளிற்குள் தப்பிப்பிழைத்த கிறிஸ்தவர்களுக்கு இது ஒரு விசேஷித்த பொருத்தத்தை கொண்டிருந்தது. மல்கியாவின் பின்வரும் தீர்க்கதரிசனம் 1914-க்கு பின் சீக்கிரத்தில் ஒரு நிறைவேற்றத்தைக் கொண்டிருந்தது: “நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்கிறார்.” (மல்கியா 3:1; வெளிப்படுத்துதல் 1:10 ) “உடன்படிக்கையின் தூத”னாக இயேசு அவரைப் பின்பற்றுகிறவர்களென்று உரிமைபாராட்டியவர்களைச் சோதிக்கவும் நியாயந்தீர்க்கவும் வந்தார். (1 பேதுரு 4:17 ) அந்தச் சமயத்தில், 1918-ல், ஆவிக்குரிய பிரகாரமாக பேசினால், கிறிஸ்தவமண்டலம் முதல் உலக யுத்தத்தில் இரத்தம் சிந்துதலில் உட்பட்டும், முழுவதுமாக மரித்தும் இருந்தது. உண்மைக் கிறிஸ்தவர்களுங்கூட, யுத்தத்துக்கு முன்பாக அவ்வளவு வைராக்கியமாக பிரசங்கித்தவர்கள், ஆவிக்குரிய வகையில் அரைத் தூக்கமான காலத்தினூடே சென்றுவிட்டனர். அவர்களுடைய முக்கியமான மூப்பர்களில் சிலர் சிறையில் போடப்பட்டு, பிரசங்க நடவடிக்கை ஏறக்குறைய நிறுத்தப்பட்டது. அடுத்த வருடத்தில் யெகோவாவின் ஆவி இந்தக் கிறிஸ்தவர்களை எழுப்பியபோது எல்லாரும் தயாராயிருக்கவில்லை. இயேசுவுடைய உவமையின் புத்தியில்லாத கன்னிகைகளுக்கு ஒப்பாக, சிலர் யெகோவாவுக்கு ஊழியம் செய்யும் சிலாக்கியத்துக்கு ஆவிக்குரிய பிரகாரமாக முன்னேற்பாட்டுடன் இல்லை. இருப்பினும், மகிழ்ச்சிகரமாக, இயேசுவின் பின்வரும் எச்சரிப்புக்கு செவிகொடுத்திருந்த புத்தியுள்ள கன்னிகைகளைப்போல அநேகர் இருந்தனர்: “[அந்த ] நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.”​—மத்தேயு 25:1-13.

7. இன்று ஏன் கிறிஸ்தவர்கள் தங்களை விழிப்புள்ளவர்களாக வைத்துக்கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது?

7 ஒரு கிறிஸ்தவன் விழித்திருப்பதற்கான அவசியம் கர்த்தருடைய நாளின் ஆரம்பத்தில் முடிவடையவில்லை. “இவைகளெல்லாம் நிறைவேறுங் காலத்துக்கு அடை­யாளம்” பற்றிய அவருடைய பெரிய தீர்க்கதரிசனத்தில், இயேசு பின்வரும் பலமான எச்சரிக்கையைக் கொடுத்தார்: “அந்த நாளையும் அந்த நாழிகையையும் பற்றி ஒருவனும் அறியான் . . . குறிக்கப்பட்ட காலத்தை, நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள். விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள். நான் உங்களுக்குச் சொல்லு­கிறதையே ­எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள்.” (மாற்கு 13:4, 32, 33, 37, NW ) ஆம், இந்தக் குறிக்கப்பட்ட நாழிகை வரையாக, நாம் ஒவ்வொருவரும், அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களாக இருந்தாலும் சரி, அல்லது திரள் கூட்டத்­தாராய் இருந்தாலும் சரி, ஆவிக்குரிய தூக்கத்துக்குள் மெதுவாக மிதந்து செல்வதற்கு எதிராக போராடுவதும் விழிப்புடன் நிலைத்திருப்பதும் அவசியம். யெகோவாவின் நாள், “இரவிலே திருடன் வருகிற விதமாய்” வரும்போது, சாதகமான நியாயத்தீர்ப்பைப் பெறுவதற்கு, நாம் அதிக விழிப்புள்ளவர்களாக காணப்படுவோமாக.​—1 தெசலோனிக்கேயர் 5:2, 3; லூக்கா 21:34-36; வெளிப்படுத்துதல் 7:9.

8. ஆவிக்குரிய பிரகாரமாக தொடர்ந்து உயிருள்ளவர்களாயிருப்பதற்கு கடவுளுடைய மக்களை இன்று யோவான் வகுப்பார் எவ்வாறு உற்சாகப்படுத்துகின்றனர்?

8 கடவுளுடைய ஜனங்களை ஆவிக்குரிய விதத்தில் தொடர்ந்து உயிருடன் வைத்துக்கொள்வதற்கு தூண்டுவதற்கான தேவை இருப்பது பற்றி யோவான் வகுப்புதானேயும் இன்று விழிப்புடனிருக்கிறது. இந்த நோக்கத்திற்காக, பூமி முழுவதும் ஒவ்வொரு வருடமும் பல தடவைகள் விசேஷித்த கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. சமீப ஒரு வருடத்தில், 2,981 மாவட்ட மாநாடுகளில் 1,09,53,744 பேர் ஆஜராயிருந்து, 1,22,701 புதிய விசுவாசிகள் முழுக்காட்டப்பட்டனர். நூறு வருடங்களுக்கு மேலாக, யெகோவாவின் பெயரையும் நோக்கத்தையும் அறிவிப்பதில் காவற்கோபுர பத்திரிகையை யோவான் வகுப்பார் பயன்படுத்தியிருக்கின்றனர். இரண்டு உலக யுத்தங்களின் போதும் உண்டான கசப்பான துன்புறுத்தல்களுக்குப் பிரதிபலிக்கும் வகையில், “பயப்படாதவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்” (1919 ), “செயல்பட ஓர் அழைப்பு” (1925 ), மேலும் “துன்புறுத்தலின் தோல்வி” (1942 ) போன்ற கட்டுரைகளைப் பிரசுரிப்பதன் மூலம் காவற்கோபுர பத்திரிகை யெகோவாவின் சாட்சிகளைப் புதுப்பிக்கப்பட்ட வைராக்கியத்துக்கு எழுப்பினது.

9. (அ) எல்லா கிறிஸ்தவர்களும் தங்களைத்தாங்களே என்ன கேட்டுக்கொள்ள வேண்டும்? (ஆ) காவற்கோபுர பத்திரிகை என்ன உற்சாகமூட்டுதலைக் கொடுத்திருக்கிறது?

9 சர்தையில் உள்ளதைப் போல், இன்றுள்ள சபைகளில், எல்லா கிறிஸ்தவர்களுக்கும் தொடர்ச்சியான சுயபரிசோதனை இன்றியமையாததாக இருக்கிறது. நாம் எல்லாரும் நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்: நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய ‘கிரியைகள் முழுமையாக செய்யப்பட்டிருக்கின்றனவா’? மற்றவர்களை நியாயந்தீர்க்காமல் நாம் தனிப்பட்ட விதமாக சுயதியாக ஆவியை வளர்த்து தேவனுக்கு முழு ஆத்துமாவோடு சேவை செய்ய கடினமாக முயற்சி செய்கிறோமா? இதன் சம்பந்தமாக, காவற்கோபுர பத்திரிகையானது, “நீங்கள் எப்படிப்பட்டவர்களென நிரூபித்துக் கொள்ளுங்கள்,” “இனி நமக்கென்று வாழாதிருத்தல்” போன்ற தலைப்புகளையுடைய விஷயங்களைக் கலந்தாராய்வதன் மூலம் ஊக்கப்படுத்தியிருக்கிறது.  a அப்படிப்பட்ட ஆவிக்குரிய உதவியைக் கொண்டவர்களாக, யெகோவாவுக்கு முன் உத்தமத்தன்மையில் மனத்தாழ்மையோடும் ஜெபசிந்தையோடும் நடப்பதற்கு நாம் முயற்சி செய்கையில் உள்ளுக்குள் நம்மை நாமே நன்றாக ஆராய்ந்து பார்ப்போமாக.​—சங்கீதம் 26:1-3; 139:23, 24.

“சிலபேர்”

10. சர்தையிலுள்ள சபையில் என்ன உற்சாகமூட்டும் அம்சத்தை இயேசு கண்டார், இது நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்?

10 சர்தையிலுள்ள சபைக்கான இயேசுவின் அடுத்த வார்த்தைகள் அதிக உற்சாகமூட்டுவதாக இருக்கின்றன. அவர் இவ்வாறு சொல்கிறார்: “ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து, என்னோடேகூட நடப்பார்கள். ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவ புஸ்தகத்திலிருந்து [ஜீவ புஸ்தகச்சுருளிலிருந்து, NW ] அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப் போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன்.” (வெளிப்படுத்துதல் 3:4, 5) இந்த வார்த்தைகள் நம்மை எழுப்பி உண்மையுள்ளவர்களாக இருப்பதற்கான நம்முடைய தீர்மானத்தைப் பலப்படுத்தவில்லையா? ஒரு மூப்பர் குழுவின் அஜாக்கிரதையின் காரணமாக ஒரு சபை முழுவதுமாக ஆவிக்குரிய ஆழ்ந்த தூக்கத்தில் விழக்கூடும். இருப்பினும், அங்கிருக்கும் சில தனிப்பட்ட நபர்கள், தங்களுடைய கிறிஸ்தவ அடையாளத்தை சுத்தமாகவும் கறைபடாமலும் வைத்துக்கொண்டு அதன் மூலம் யெகோவாவிடம் ஒரு நல்ல பெயரை தொடர்ந்து கொண்டிருப்பதற்காக தைரியமாய் கடுமையாக முயற்சிக்கக்கூடும்.​—நீதிமொழிகள் 22:1.

11, 12. (அ) பெரிய விசுவாசதுரோக சமயத்தின்போதுங்கூட, சர்தையிலுள்ள அந்த உண்மையுள்ள “சிலபேர்” போன்று எவ்வாறு சிலர் இருந்திருக்கின்றனர்? (ஆ) கர்த்தருடைய நாளின்போது கோதுமைப் போன்ற கிறிஸ்தவர்களுக்கு என்ன விடுதலை வந்தது?

11 ஆம், அந்த ‘வஸ்திரங்கள்’ ஒரு கிறிஸ்தவனாக, ஒரு தனிப்பட்ட நபரின் நீதியான அடையாளத்தைக் குறிக்கிறது. (ஒப்பிடுக: வெளிப்படுத்துதல் 16:15; 19:8. ) பெரும்பான்மையர் அக்கறையற்றவர்களாயிருப்பினும், “சிலபேர்,” சர்தையிலுள்ள ஒரு சில அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், இந்த அடையாளத்தை வைத்துக்கொள்ள இன்னமும் சமாளித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதைப் பார்ப்பது இயேசுவின் இருதயத்திற்கு அனலூட்டக்கூடியதாக இருந்திருக்க வேண்டும். அதைப்போலவே, கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டவர்கள் பெரிய விசுவாசதுரோக நீண்ட நூற்றாண்டுகளின்போது, பொய் மத உலகப் பேரரசாகிய மகா பாபிலோனிற்குள் இணைக்கப்பட்டபோது, பெரிய தடங்கல்களுக்கு எதிராக யெகோவாவின் சித்தத்தைச் செய்வதற்கு, முயற்சி செய்த ஒரு சில தனிப்பட்ட நபர்கள் அங்கே எப்போதும் இருந்திருக்க வேண்டும். ஏராளமான பிரிவினைவாத களைகளின் மத்தியில் மறைந்திருக்கும் கோதுமையைப் போன்று இந்த நீதிமான்கள் இருந்தனர்.​—வெளிப்படுத்துதல் 17:3-6; மத்தேயு 13:24-29.

12 “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுவரையாக எல்லா நாட்களிலும்” இந்தக் கோதுமைப் போன்ற கிறிஸ்தவர்களோடு இயேசு இருப்பதாக உறுதியளித்தார். அவர்கள் யாரென்றும் என்ன நற்பெயர்களைத் தங்களுக்கு உண்டாக்கியிருக்கிறார்கள் என்றும் அவர் அறிந்திருக்கிறார். (மத்தேயு 28:20, NW; பிரசங்கி 7:1 ) கர்த்தருடைய நாள் ஆரம்பித்தபோது, இன்னும் உயிரோடிருந்த அந்த விசுவாசமுள்ள ‘சிலரின்’ மகிழ்ச்சியைக் கற்பனை செய்து பாருங்கள்! ஆவிக்குரிய பிரகாரமாக மரித்திருந்த கிறிஸ்தவமண்டலத்திலிருந்து அவர்கள் இறுதியாக பிரித்தெடுக்கப்பட்டு, சிமிர்னாவிலிருந்த சபையைப் போன்று ஒரு நீதியான சபைக்குள் கூட்டிச் சேர்க்கப்பட்டார்கள்.​—மத்தேயு 13:40-43.

13. தங்களுடைய ‘வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத’ அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்கள் வைக்கப்பட்டுள்ளன?

13 முடிவுவரையாக உண்மையாக இருந்து, அவர்களுடைய கிறிஸ்தவ அடையாளத்தைக் கறைப்படுத்திக்கொள்ளாத சர்தையிலுள்ள அந்த நபர்கள், ஓர் ஆச்சரியமான நம்பிக்கையின் நிறைவேற்றத்தை அடைகின்றனர். இயேசுவின் மேசியானிய ராஜ்யம் 1914-ல் ஸ்தாபிக்கப்பட்ட பின்பு, அவர்கள் ஆவி வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்பட்டிருக்கிறார்கள். மேலும் ஜெயங்கொள்பவர்களாக அவர்களுடைய கறையற்ற, களங்கமற்ற நீதியின் அடையாளமாக வெண்வஸ்திரம் தரித்தவர்களாக இருக்கிறார்கள். ஜீவனுக்கு வழிநடத்தும் இடுக்கமான ­பாதையில் நடந்தவர்களாக, அவர்கள் ஒரு நித்திய வெகுமதியை அனுபவிப்பார்கள்.​—மத்தேயு 7:14; வெளிப்படுத்துதல் 6:9-11-ஐயும் காண்க.

என்றென்றும் ஜீவ புத்தகத்திலே!

14. ‘ஜீவபுஸ்தகம்’ என்றால் என்ன, அங்கு யாருடைய பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன?

14 ‘ஜீவபுஸ்தகம்’ என்றால் என்ன, அதில் யாருடைய பெயர்கள் வைத்திருக்கப்பட்டிருக்கும்? ஜீவபுஸ்தகம் அல்லது சுருள் என்பது நித்திய ஜீவ அளிப்பைப் பெறுவதற்கு தகுதியுள்ள யெகோவாவின் ஊழியர்களின் பதிவைக் குறிப்பிடுகிறது. (மல்கியா 3:16 ) இங்கே வெளிப்படுத்துதலில் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் பெயர்களுக்கு தெளிவான குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பூமியின்மீது நித்திய ஜீவனுக்கான வரிசையிலுள்ளவர்களின் பெயர்களுங்கூட அதிலே பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. மேலும், அந்தப் புஸ்தகத்திலிருந்து பெயர்கள் ‘கிறுக்கிப் போடப்படவும்’ முடியும். (யாத்திராகமம் 32:32, 33 ) ஆயினும், மரணம் வரையாக, ஜீவபுஸ்தகத்தில் பெயர்கள் நிலைத்திருக்கும் யோவான் வகுப்பார் பரலோகத்தில் அழியாத ஜீவனைப் பெறுகிறார்கள். (வெளிப்படுத்துதல் 2:10 ) தம் பிதாவுக்கு முன்பாகவும் அவருடைய தூதர்களுக்கு முன்பாகவும் இயேசு விசேஷமாக அறிக்கையிடும் பெயர்கள் இவையே. அந்த வெகுமதி எவ்வளவு மேன்மையானது!

15. திரள் கூட்டத்தின் அங்கத்தினர்கள் எவ்வாறு அவர்களுடைய பெயர்களை அழிக்க முடியாத வகையில் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்படும்படி செய்வர்?

15 ஜீவபுஸ்தகத்தில் பெயர் எழுதப்பட்டுள்ள திரள் கூட்டத்தாரும் மிகுந்த உபத்திரவத்திலிருந்து உயிரோடு வருவார்கள். இயேசுவின் ஆயிர வருட ஆட்சி முழுவதுமாகவும் அதைத் தொடர்ந்து வரும் இறுதியான சோதனையின்போதும் விசுவாசத்தை அப்பியாசிப்பதன் மூலம் இவர்கள் பரதீஸான பூமியில் நித்திய ஜீவன் என்ற வெகுமதியளிக்கப்படுவார்கள். (தானியேல் 12:1; வெளிப்படுத்துதல் 7:9, 14; 20:15; 21:4 ) அதற்குப் பிறகு ஜீவபுஸ்தகத்தில் அவர்களுடைய பெயர்கள் அழிக்க முடியாத வகையில் எழுதப்பட்டு நிலைத்திருக்கும். பரிசுத்த ஆவியின் மூலம் இங்கு அளிக்கப்பட்டிருப்பதை அறிந்தவர்களாக, இயேசு மீண்டும் மீண்டும் கொடுக்கும் அறிவுரைகளுக்கு நீங்கள் மிகவும் ஊக்கத்துடன் பிரதிபலிக்கமாட்டீர்களா: “ஆவியானவர் [ஆவி, NW ] சபைகளுக்குச் சொல்வதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்”?​—வெளிப்படுத்துதல் 3:6.

[அடிக்குறிப்பு]

a ஜூலை 15, 2005, மார்ச் 15, 2005 தேதியிட்ட காவற்கோபுர பத்திரிகைகளைக் காண்க.

[கேள்விகள்]

[பக்கம் 57-ன் படம்]

ஜீவபுஸ்தகத்தில் உங்களுடைய பெயர் நிலைத்திருப்பதாக