Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜெயிக்கிறவர்களாக இருக்க கடினமாக பிரயாசப்படுதல்

ஜெயிக்கிறவர்களாக இருக்க கடினமாக பிரயாசப்படுதல்

அதிகாரம் 8

ஜெயிக்கிறவர்களாக இருக்க கடினமாக பிரயாசப்படுதல்

சிமிர்னா

1. (அ) மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவிடமிருந்து அடுத்து எந்த சபை ஒரு செய்தியைப் பெறுகிறது? (ஆ) “முதலானவரும் கடைசியானவரும்” என்று தம்மை அழைப்பதன் மூலம் அந்தச் சபையிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு இயேசு எதை நினைவுபடுத்தினார்?

 பூர்வ எபேசு இன்று பாழடைந்து கிடக்கிறது. ஆனால் இயேசுவின் இரண்டாவது செய்தி சேரவேண்டிய இடம் இன்னும் சுறுசுறுப்பான ஒரு நகரமுள்ள இடமாக உள்ளது. எபேசிய இடிபாடுகளுக்கு சுமார் 54 கிலோமீட்டர் வடக்கே துருக்கிய நகரமான இஸ்மிர் உள்ளது. இங்கே, பக்தி வைராக்கியத்தோடு செயல்படுகிற யெகோவாவின் சாட்சிகளுடைய நான்கு சபைகள் இன்றுங்கூட காணப்படுகின்றன. இங்கே, முதல் நூற்றாண்டில், சிமிர்னா சபை இருந்தது. இப்போது, இயேசுவின் அடுத்துவரும் வார்த்தைகளைக் கவனியுங்கள்: “சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுத வேண்டியது என்னவெனில்; முதலானவரும் கடைசியானவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது.” (வெளிப்படுத்துதல் 2:8, NW) சிமிர்னாவில் உள்ள அந்தக் கிறிஸ்தவர்களுக்கு இதை சொல்வதன் மூலம், இயேசு, உத்தமத்தைக் காத்துக்கொண்டவர்களில் அவரே முதலில் யெகோவாவால் நேரடியாக அழியாமையுள்ள ஆவி வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்பட்டார் என்பதையும் அவ்வாறு எழுப்பப்படுகிறவர்களில் அவரே கடைசியானவராகவும் இருந்தார் என்பதையும் அவர்களுக்கு நினைவுப்படுத்துகிறார். அபிஷேகஞ்செய்யப்பட்ட மற்றெல்லா கிறிஸ்தவர்களையும் இயேசு தாமே உயிர்த்தெழுப்புவார். இவ்வாறாக அவரோடுகூட அழியாமையுள்ள பரலோக வாழ்க்கையை பகிர்ந்துகொள்ளும் நம்பிக்கையுடைய அவருடைய சகோதரர்களுக்கு அறிவுரை கொடுப்பதற்கு அவர் உண்மையில் தகுதிபெற்றிருக்கிறார்.

2. “மரித்திருந்து பிழைத்த”வருடைய வார்த்தைகளால் ஏன் எல்லா கிறிஸ்தவர்களும் தேற்றப்பட்டிருக்கிறார்கள்?

2 நீதியினிமித்தம் துன்புறுத்தலை சகித்திருப்பதில் இயேசு வழிகாட்டியாய் இருந்தார். அதற்குரிய வெகுமதியையும் அவர் பெற்றார். மரணம் வரையாக அவர் உண்மையுள்ளவராக இருந்ததும், அதைப் பின்தொடர்ந்து அவர் உயிர்த்தெழுப்பப்பட்டதுதானே எல்லா கிறிஸ்தவர்களுக்கும் நம்பிக்கைக்கான ஆதாரமாக இருக்கின்றன. (அப்போஸ்தலர் 17:31) இயேசு “மரித்திருந்து பிழைத்த” காரியம், சத்தியத்தினிமித்தமாக எதை சகிக்கவேண்டியதாக இருந்தாலும் அது வீணாகப்போகாது என்பதை நிரூபிக்கிறது. இயேசுவின் உயிர்த்தெழுதல் எல்லா கிறிஸ்தவர்களுக்கும் உற்சாகத்தின் ஊற்றுமூலமாக இருக்கிறது, விசேஷமாக விசுவாசத்துக்காக துன்புறுத்தப்படுவதற்கு அவர்கள் அழைக்கப்படுகையில் அது அப்படியாக இருக்கிறது. உங்களுடைய நிலைமை அவ்வாறாக இருக்கிறதா? அப்படியானால், சிமிர்னாவிலுள்ள சபைக்கு இயேசு அடுத்துச் சொன்ன வார்த்தைகளிலிருந்து நீங்களும் தைரியமாயிருக்க முடியும்:

3. (அ) சிமிர்னாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு என்ன உற்சாகமூட்டுதலை இயேசு கொடுத்தார்? (ஆ) சிமிர்னாவிலுள்ள கிறிஸ்தவர்கள் ஏழ்மையாக இருந்தபோதிலும், அவர்கள் ‘ஐசுவரியமுள்ளவர்களாக’ இருந்தார்கள் என்று இயேசு ஏன் சொன்னார்?

3 “உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன்.” (வெளிப்படுத்துதல் 2:9) சிமிர்னாவில் உள்ள அவருடைய சகோதரர்களை இயேசு எந்தக் குறையும் கூறாமல் அன்பாக பாராட்டுகிறார். விசுவாசத்தினிமித்தமாக அவர்கள் மிகவும் உபத்திரவப்பட்டிருக்கிறார்கள். பெரும்பாலும் அவர்களுடைய உண்மைத்தன்மையின் காரணமாக அவர்கள் பொருளாதாரத்தில் ஏழ்மையிலிருக்கிறார்கள். (எபிரெயர் 10:34) என்றாலும், அவர்கள் முக்கியமாக ஆவிக்குரிய காரியங்களின் பேரில் கவனம் செலுத்துகிறார்கள், இயேசு கூறியது போல, பொக்கிஷங்களை அவர்கள் பரலோகத்தில் சேர்த்து வைத்திருக்கிறார்கள். (மத்தேயு 6:19, 20) ஆகவே, பிரதான மேய்ப்பர் அவர்களை ‘ஐசுவரியமுள்ளவர்களாக’ நோக்குகிறார்.—யாக்கோபு 2:5-ஐ ஒப்பிடுக.

4. சிமிர்னாவிலுள்ள கிறிஸ்தவர்கள் யாரிடமிருந்து அதிக எதிர்ப்பை அனுபவித்தார்கள், எதிர்ப்பு தெரிவித்தவர்களை இயேசு எவ்வாறு நோக்கினார்?

4 சிமிர்னாவிலுள்ள கிறிஸ்தவர்கள் உலகப்பிரகாரமான யூதர்களின் கையில் அதிக எதிர்ப்பை சகித்து நிலைத்திருந்ததை இயேசு குறிப்பாக கவனிக்கிறார். ஆரம்ப நாட்களில், இந்த மதத்தில் உள்ள அநேகர் கிறிஸ்தவ மதம் பரவுவதை உறுதியாக எதிர்த்தனர். (அப்போஸ்தலர் 13:44, 45; 14:19) இப்போது, எருசலேமின் வீழ்ச்சிக்கு ஒரு சில பத்தாண்டுகளுக்குப் பின், சிமிர்னாவிலுள்ள அந்த யூதர்கள் அதே சாத்தானிய ஆவியை வெளிக்காட்டுகின்றனர். இயேசு அவர்களை “சாத்தானிய கூட்ட”மாக நோக்குவது ஆச்சரியப்படுவதற்கில்லை!  a

5. சிமிர்னாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு என்ன சோதனைகள் வர இருந்தன?

5 அப்படிப்பட்ட பகைமையை எதிர்பட்டுக்கொண்டிருந்த சிமிர்னாவிலுள்ள கிறிஸ்தவர்கள் இயேசுவால் இவ்வாறு தேற்றப்படுகிறார்கள்: “நீ படப்போகிற துன்பங்களைக் குறித்து பயப்படாதே; இதோ! உங்களை முற்றிலும் சோதிக்கும்படிக்கு பிசாசானவன் உங்களில் சிலரை சிறையில் போடுவான்; உங்களைப் பத்து நாள் உபத்திரவப்படுத்துவான். மரணம் வந்தாலும் உண்மையாய் நிரூபியுங்கள், அப்பொழுது நான் உனக்கு ஜீவகிரீடத்தைத் தருவேன்.” (வெளிப்படுத்துதல் 2:10, NW) இங்கே இயேசு கிரேக்க பன்மையான ‘உங்களை’ என்பதை மூன்று முறை பயன்படுத்துகிறார். அவருடைய இந்த வார்த்தைகள் சபை முழுவதையும் உள்ளடக்குவதை காட்டுகின்றன. சிமிர்னாவில் உள்ள கிறிஸ்தவர்களின் சோதனைகள் சீக்கிரத்தில் முடிவடையும் என்பதாக இயேசு உறுதி அளிக்க முடியாது. சிலர் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு சிறையில் போடப்படுவார்கள். அவர்களுக்கு உபத்திரவம் ‘பத்து நாட்களுக்கு’ இருக்கும். பத்து என்ற இந்த எண் பூமி சம்பந்தமாக முழுமையை அல்லது நிறைவை அடையாளப்படுத்துகிறது. உத்தமத்தைக் காத்துக்கொள்கிற அந்த ஆவிக்குரிய ஐசுவரியவான்களுங்கூட மாம்சத்தில் இருக்கும்போது முழுமையாக சோதிக்கப்படுவர்.

6. (அ) சிமிர்னாவிலுள்ள கிறிஸ்தவர்கள் ஏன் பயப்படக்கூடாது? (ஆ) சிமிர்னாவிலுள்ள சபைக்கு இயேசு தம்முடைய செய்தியை எவ்விதம் முடித்தார்?

6 என்றபோதிலும், சிமிர்னாவில் இருக்கிற கிறிஸ்தவர்கள் பயப்படவோ இணங்கிப்போகவோ கூடாது. கடைசிவரை அவர்கள் உண்மையுள்ளவர்களாக இருந்தால், ‘ஜீவகிரீடம்’ அவர்கள் பரிசாக வைக்கப்பட்டிருக்கிறது. இவர்களுடைய விஷயத்தில், பரலோகங்களில் சாவாமையுள்ள வாழ்க்கையாக அது இருக்கிறது. (1 கொரிந்தியர் 9:25; 2 தீமோத்தேயு 4:6-8) அப்போஸ்தலன் பவுல் இந்த அரிதான பரிசையடைய எதையும், தன்னுடைய பூமிக்குரிய வாழ்க்கையையுங்கூட, தியாகம் செய்வதை தகுதியுள்ளதாக கருதினார். (பிலிப்பியர் 3:8) சிமிர்னாவிலுள்ள அந்த உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் இதேவிதமாகவே உணர்ந்தார்கள் என்பது தெளிவாயிருக்கிறது. இயேசு தம்முடைய செய்தியை பின்வருமாறு சொல்லி முடிக்கிறார்: “ஆவியானவர் [ஆவி, NW] சபைகளுக்குச் சொல்வதை காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை.” (வெளிப்படுத்துதல் 2:11) மரணத்தால் பாதிக்கப்படாத சாவாமையுள்ள பரலோக வாழ்க்கை ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.—1 கொரிந்தியர் 15:53, 54.

‘பத்து நாள் உபத்திரவம்’

7, 8. சிமிர்னாவிலுள்ள சபையைப் போன்று, 1918-ல் கிறிஸ்தவ சபை எவ்வாறு ‘முற்றிலும் சோதனைக்கு’ உட்படுத்தப்பட்டது?

7 சிமிர்னாவிலிருந்த கிறிஸ்தவர்களைப் போலவே, இன்று, யோவான் வகுப்பாரும் அவர்களுடைய கூட்டாளிகளும் ‘முற்றிலும் சோதனைக்கு’ உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். அவ்வாறு இப்போதும் தொடர்ந்து செய்யப்படுகின்றனர். சோதனையிலும் அவர்கள் உண்மையுடனிருப்பதானது கடவுளுடைய சொந்த ஜனமாக அவர்களை அடையாளப்படுத்துகிறது. (மாற்கு 13:9, 10) கர்த்தருடைய நாள் ஆரம்பித்து சில காலத்திற்குப் பின், சிமிர்னாவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு கூறப்பட்ட இயேசுவின் வார்த்தைகள், ஒரு சிறிய சர்வதேச தொகுதியான யெகோவாவின் ஜனங்களுக்கு உண்மையிலேயே ஆறுதலைக் கொண்டுவந்தது. (வெளிப்படுத்துதல் 1:10) இவர்கள் 1879 முதற்கொண்டு கடவுளுடைய வார்த்தையிலிருந்து ஆவிக்குரிய ஐசுவரியங்களைத் தோண்டியெடுத்து அவற்றை மற்றவர்களுடன் இலவசமாக பகிர்ந்து வந்தனர். ஆனால் முதல் உலகயுத்தத்தின்போது, அவர்கள் யுத்த ஜுர பிடியில் சிக்காததாலும் கிறிஸ்தவமண்டலத்தின் தவறுகளைப் பயமின்றி பகிரங்கமாக அம்பலப்படுத்தியதாலும் அதிக பகைமையையும் எதிர்ப்பையும் எதிர்ப்பட வேண்டியிருந்தது. ஒரு சில கிறிஸ்தவமண்டலத் தலைவர்களின் தூண்டுதலினால் 1918-ல் அவர்கள் அனுபவித்த துன்புறுத்தல் ஓர் உச்சக்கட்டத்தை அடைந்தது. இது அங்கே இருந்த யூத சமுதாயத்திடமிருந்து கிறிஸ்தவர்கள் அனுபவித்த துன்புறுத்தலுக்கு ஒப்பாயிருந்தது.

8 உவாட்ச் டவர் சொஸையிட்டியின் புதிய தலைவரான ஜோஸெஃப் F. ரதர்ஃபர்டும் ஏழு கூட்டாளிகளும் ஜுன் 22, 1918-ல் சிறைக்கு அனுப்பப்பட்டபோது அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் துன்புறுத்தல் அலை உச்சக்கட்டத்தை அடைந்தது. அவர்களில் அநேகருக்கு 20 ஆண்டுகால சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஒன்பது மாதங்களுக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்கள். மே 14, 1919-ல், மேல்முறையீட்டு நீதிமன்றம் அவர்களுடைய தவறான குற்றத்தீர்ப்புகளை ரத்துசெய்தது; வழக்கு விசாரணையில் 130 தவறுகள் காட்டப்பட்டிருந்தன. இந்தக் கிறிஸ்தவர்களை 1918-ல் ஜாமீனில் விடுவிக்க மறுத்தவரும் புனித கிரகரியின் வரிசையில் பெருந்தகையன் என்ற பட்டம் பெற்றவருமான மான்டன் என்ற ரோமன் கத்தோலிக்க நீதிபதி 1939-ல் ஆறு குற்றச்சாட்டுகளில் இலஞ்சம் கேட்டதற்கும் பெற்றதற்கும் இரண்டு வருட சிறையிருப்பு தண்டனையும் பத்தாயிரம் டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டார்.

9. நாசி ஜெர்மனியில் இருந்த யெகோவாவின் சாட்சிகள் ஹிட்லரால் எவ்வாறு நடத்தப்பட்டனர், மேலும் குருவர்க்கத்தினரிடமிருந்து எப்பேர்ப்பட்ட பிரதிபலிப்பு வந்தது?

9 ஜெர்மனியில், நாசி ஆட்சியின்போது, ஹிட்லர் யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசங்க வேலைக்கு முழுமையாக தடைவிதித்தான். அநேக ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான சாட்சிகள் கொடூரமான முறையில் சித்திரவதை முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் சிறைப்படுத்தி வைக்கப்பட்டனர், இதில் அநேகர் மரித்தனர், அதே சமயத்தில் ஹிட்லரின் இராணுவத்தில் சேர்ந்து யுத்தம் செய்ய மறுத்த சுமார் 200 இளைஞர் கொல்லப்பட்டனர். இவை எல்லாவற்றுக்கும் குருவர்க்கத்தினரின் ஆதரவு இருந்தது. மே 29, 1938 தேதியிட்ட தி ஜெர்மன் வே என்ற செய்தித்தாளில் பிரசுரிக்கப்பட்ட ஒரு கத்தோலிக்க குருவின் வார்த்தைகள் இதற்கு அத்தாட்சி பகருகின்றன. அவர் சொன்னார்: “பைபிள் மாணாக்கர்கள் [யெகோவாவின் சாட்சிகள்] என்றழைக்கப்பட்டவர்கள் . . . தடைசெய்யப்பட்ட ஒரு நாடு இன்று பூமியில் இருக்கிறது. அதுவே ஜெர்மனி! . . . அடால்ஃப் ஹிட்லர் அதிகாரத்துக்கு வந்தபோது, ஜெர்மன் கத்தோலிக்க குருவர்க்கத்தினர் அவர்களுடைய கோரிக்கையை மறுபடியும் சொன்னபோது, ஹிட்லர் இவ்வாறு சொன்னார்: ‘இந்த ஊக்கமுள்ள பைபிள் மாணாக்கர்கள் [யெகோவாவின் சாட்சிகள்] என்று அழைக்கப்படுகிறவர்கள் தொல்லை தருபவர்கள்; . . . இவர்களை போலி ஆட்களாக கருதுகிறேன். இந்த அமெரிக்க நீதிபதி ரதர்ஃபர்டினால் ஜெர்மானிய கத்தோலிக்கர்கள் இவ்விதமாக அவமானப்படுத்தப்படுவதை நான் பொறுத்துக் கொள்ள மாட்டேன்; ஜெர்மனியில் [யெகோவாவின் சாட்சிகளை] நான் அழித்துவிடப்போகிறேன்.’” இதற்கு மதகுரு “மிகவும் நல்லது!” என்றார்.

10. (அ) கர்த்தருடைய நாள் தொடருகையில், யெகோவாவின் சாட்சிகள் என்ன துன்புறுத்தலை எதிர்ப்பட்டு வருகிறார்கள்? (ஆ) மத சுயாதீனத்திற்காக கிறிஸ்தவர்கள் நீதிமன்றங்களில் போராடியபோது அடிக்கடி விளைவு எப்படி இருந்தது?

10 கர்த்தருடைய நாள் தொடருகிற சமயத்தில், சர்ப்பமும் அவனுடைய வித்தும் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு விரோதமாகவும் அவர்களோடு தோழமை கொண்டிருக்கிறவர்களுக்கு விரோதமாகவும் இன்னும் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களில் அநேகர் சிறைப்படுத்தப்பட்டு கொடுமையாக துன்புறுத்தப்பட்டிருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 12:17) அந்தச் சத்துருக்கள் தொடர்ந்து ‘தீமையை கட்டளைகளினால் பிறப்பித்துக்கொண்டிருக்கின்றனர்.’ யெகோவாவின் ஜனங்களோ இவ்வாறு உறுதியாக நிலைத்திருக்கின்றனர்: “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.” (சங்கீதம் 94:20; அப்போஸ்தலர் 5:29) காவற்கோபுர பத்திரிகை 1954-ல் இவ்வாறு அறிவித்தது: “கடந்த நாற்பது ஆண்டுகளில், 70-க்கும் மேற்பட்ட நாடுகள் ஏதாவது ஒரு சமயத்திலாவது, தடையுத்தரவுகளைப் பிறப்பித்து யெகோவாவின் சாட்சிகளை துன்புறுத்தி வந்திருக்கின்றன.” மத சுயாதீனத்திற்காக நீதிமன்றங்களில் போராடுவதற்கான சாத்தியமிருந்தால் இந்தக் கிறிஸ்தவர்கள் அப்படி செய்து, அநேக நாடுகளில் மெச்சத்தகுந்த வெற்றிகளைக் கண்டிருக்கிறார்கள். ஐக்கிய மாகாணங்களில் உள்ள உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே 50 சாதகமான தீர்ப்புகளை யெகோவாவின் சாட்சிகள் வென்றிருக்கிறார்கள்.

11. கர்த்தருடைய நாளில் தம்முடைய வந்திருத்தலின் அடையாளத்தைப் பற்றிய இயேசுவின் எந்தத் தீர்க்கதரிசனம் யெகோவாவின் சாட்சிகளின்பேரில் நிறைவேற்றம் அடைந்திருக்கிறது?

11 இராயனுடையதை இராயனுக்குத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்ற இயேசுவின் கட்டளைக்கு வேறு எந்தத் தொகுதியும் அவர்களைப் போல மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு கீழ்ப்படியவில்லை. (லூக்கா 20:25; ரோமர் 13:1, 7) என்றாலும், வேறு எந்தத் தொகுதியினரின் அங்கத்தினர்களும் இத்தனை அநேக வித்தியாசமான ஆட்சிகளின் கீழ் இத்தனை அநேக நாடுகளில் சிறைப்படுத்தப்பட்டதில்லை. மேலும் இன்று வரையாக, அமெரிக்காக்களில், ஐரோப்பாவில், ஆப்பிரிக்காவில், ஆசியாவில், இது தொடர்ந்து நடந்து வருகிறது. அவருடைய வந்திருத்தலின் அடையாளத்தைப் பற்றிய இயேசுவின் முக்கிய தீர்க்கதரிசனம் பின்வரும் வார்த்தைகளையும் உள்ளடக்கியது: “அப்பொழுது உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களை கொலை செய்வார்கள். என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள்.” (மத்தேயு 24:3, 9) கர்த்தருடைய நாளில், யெகோவாவின் கிறிஸ்தவ சாட்சிகளின் மேல் இது நிச்சயமாகவே நிறைவேறியிருக்கிறது.

12. துன்புறுத்தலுக்கு எதிராக யோவான் வகுப்பார் கடவுளுடைய ஜனங்களை எவ்வாறு பலப்படுத்தியிருக்கின்றனர்?

12 உபத்திரவங்களுக்கு எதிராக கடவுளுடைய ஜனங்களைப் பலப்படுத்துவதற்காக, சிமிர்னாவிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு இயேசு சொன்ன வார்த்தைகளின் சாராம்சத்தை யோவான் வகுப்பார் தொடர்ந்து நினைப்பூட்டி வந்திருக்கின்றனர். உதாரணமாக, நாசி துன்புறுத்தல் ஆரம்பமானபோது, 1933-லும் 1934-லும் காவற்கோபுர பத்திரிகை மத்தேயு 10:26-33-ஐ கலந்தாராய்ந்த “அவர்களுக்குப் பயப்பட வேண்டாம்”; தானியேல் 3:17, 18-ஐ அடிப்படையாகக்கொண்ட “கடுஞ்சோதனை”; மேலும் தானியேல் 6:22-ஐ மையமாகக்கொண்டு “சிங்கங்களின் வாய்கள்,” போன்ற கட்டுரைகளைக் கொண்டிருந்தது. 1980-களில், இந்தப் புத்தகம் முதன்முதல் பிரசுரிக்கப்பட்ட இந்தப் பத்தாண்டுகளில், யெகோவாவின் சாட்சிகள் 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான துன்புறுத்தலை அனுபவித்துக் கொண்டிருந்தபோது, காவற்கோபுரம் “துன்புறுத்தப்பட்டாலும் சந்தோஷமாயிருத்தல்” மேலும் “கிறிஸ்தவர்கள் துன்புறுத்தலை சகிப்புத்தன்மையுடன் எதிர்ப்படுகிறார்கள்,” போன்ற கட்டுரைகளைக் கொண்டு கடவுளுடைய ஜனங்களைப் பலப்படுத்தியது. b

13. சிமிர்னாவிலுள்ள கிறிஸ்தவர்களைப்போன்று, யெகோவாவின் கிறிஸ்தவ சாட்சிகள் ஏன் துன்புறுத்தலுக்குப் பயப்படுவதில்லை?

13 உண்மையாகவே, யெகோவாவின் கிறிஸ்தவ சாட்சிகள் சரீரப்பிரகாரமான துன்புறுத்தலையும், மற்ற சோதனைகளையும், அடையாளமான 10 நாட்கள் அனுபவிக்கிறார்கள். சிமிர்னாவிலிருந்த கிறிஸ்தவர்களைப் போலவே அவர்களும் பயந்திருக்கவில்லை; இங்கே பூமியில் தொல்லைகள் அதிகரித்துக்கொண்டுபோனாலும் நம்மில் எவருமே பயப்பட வேண்டிய அவசியமில்லை. கஷ்டங்களின்கீழ் சகித்து நிலைத்திருப்பதற்கும் மேலும் சந்தோஷமாக ‘நம் ஆஸ்திகளை கொள்ளையிடக் கொடுப்பதற்கும்’ நாம் ஆயத்தமாயிருக்கிறோம். (எபிரெயர் 10:32-34) கடவுளுடைய வார்த்தையைப் படித்து அதை நம்முடைய சொந்தமாக ஆக்கிக்கொள்வதன் மூலம், நாம் விசுவாசத்தில் உறுதியாக நிலைநிற்பதற்கு ஆயத்தமாக இருப்போம். நீங்கள் உத்தமத்தன்மையைக் காத்துக்கொள்வதில் யெகோவா உங்களை காக்கக்கூடியவராகவும் காக்கப்போகிறவராகவும் இருப்பார் என்பதில் நிச்சயமாயிருங்கள். “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.”—1 பேதுரு 5:6-11.

[அடிக்குறிப்புகள்]

a யோவான் மரித்து சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு, 86 வயதான பாலிகார்ப் இயேசுவில் கொண்டிருந்த நம்பிக்கையை மறுதலிக்காததன் காரணமாக சிமிர்னாவில் எரித்துக்கொல்லப்பட்டான். பாலிகார்ப்பின் உயிர்த்தியாகம் (ஆங்கிலம்), இந்த நிகழ்ச்சி நடந்த அதே காலப் பகுதியில் எழுதப்பட்டதாக நம்பப்படுகிற ஒரு புத்தகம் சொல்கிறது: எரிப்பதற்காக விறகுக்கட்டை சேர்க்கப்படும்போது, “யூதர்கள் வழக்கமாக செய்வதுபோல தீவிர வைராக்கியத்துடன் உதவி செய்ய இறங்கினார்கள்”—“ஒரு பெரிய ஓய்வு நாளில்” கொல்லப்பட்டபோதிலும் அவ்வாறு செய்தனர்.

b நவம்பர் 1, 1933; அக்டோபர் 1 மற்றும் 15, டிசம்பர் 1 மற்றும் 15, 1934; மே 1983 ஆகிய ஆங்கில காவற்கோபுர பத்திரிகைகளைக் காண்க.

[கேள்விகள்]

[பக்கம் 39-ன் பெட்டி/ படம்]

அநேக ஆண்டுகளாக, நாசி ஆட்சியின்போது, ஜெர்மனியிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய உத்தமத்தன்மையைக் குறித்து சரித்திராசிரியர்கள் சான்று பகர்ந்து வந்திருக்கின்றனர். சரித்திராசிரியர் கிலாடியா கூன்ஸ் 1986-ல் வெளியிட்ட தந்தை நாட்டில் தாய்மார்கள் (ஆங்கிலம்) என்ற புத்தகம் இப்படியாகச் சொல்கிறது: “நாசி அல்லாத பின்னணிகளிலிருந்து வந்த ஜெர்மானியர்களில் மிகப் பெரும்பான்மையர் அவர்கள் வெறுக்கும் ஆட்சியின்கீழ் வாழ்வதற்கு வழிகளை கண்டுகொண்டனர். . . . புள்ளி விவரம் மற்றும் கருத்தாய்வின் உட்தோற்றத்தின் மறு முனையில் 20,000 யெகோவாவின் சாட்சிகள் இருந்தனர். இவர்கள் ஒவ்வொருவரும் நடைமுறையில் நாசி அரசாங்கத்துக்கு எவ்விதமான கீழ்ப்படிதலையும் கொடுக்க மறுத்தனர். . . . அதிவொன்றுபட்ட தொகுதியிலுள்ள எதிர்ப்பாளர்கள் மதத்தினால் ஆதரிக்கப்பட்டனர். முதலிலிருந்தே, யெகோவாவின் சாட்சிகள் நாசி அரசாங்கத்தின் எந்தக் கருத்துடனும் ஒத்துப்போகவில்லை. ஜெர்மனியில் இரகசிய காவல் படையினர் 1933-ல் அவர்களுடைய தேசிய தலைமையகத்தை அழித்து, 1935-ல் அந்தப் பிரிவுக்குத் தடையுத்தரவு போட்டபின்புங்கூட ‘ஹிட்லர் வாழ்க’ என்று சொல்வதற்குங்கூட மறுத்தனர். யெகோவாவின் சாட்சிகளில் ஏறக்குறைய பாதிப் பேர் (அநேகர் ஆண்கள்) சித்திரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர், ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். மற்றொரு ஆயிரம் பேர் 1933-க்கும் 1945-க்கும் இடையில் மரித்தனர். . . . கத்தோலிக்கரும் புராட்டஸ்டன்டினரும் அவர்களுடைய மதத் தலைவர்கள் ஹிட்லருடன் ஒத்துழைக்கத் தங்களைத் தூண்டுவதை கேட்டனர். அவர்கள் எதிர்ப்பார்களேயானால், சர்ச் மற்றும் அரசின் உத்தரவுக்கு எதிராக அவர்கள் அவ்விதம் செய்தனர்.”