Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தேவனுடைய இஸ்ரவேலரை முத்திரை போடுதல்

தேவனுடைய இஸ்ரவேலரை முத்திரை போடுதல்

அதிகாரம் 19

தேவனுடைய இஸ்ரவேலரை முத்திரை போடுதல்

தரிசனம் 4​—வெளிப்படுத்துதல் 7:1-17

பொருள்: 1,44,000 முத்திரையிடப்படுகிறார்கள், மேலும் ஒரு திரள் கூட்டத்தினர் யெகோவாவின் சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்பதாக காணப்படுகிறார்கள்

நிறைவேற்றத்தின் காலம்: 1914-ல் கிறிஸ்து இயேசு சிங்காசனத்தில் அமர்த்தப்பட்ட அவருடைய ஆயிரம் வருட ஆட்சிக்குள்ளும்

1. தெய்வீக கோபாக்கினையின் மகா நாளிலே “யார் நிலைநிற்கக்கூடும்”?

 “யார் நிலைநிற்கக்கூடும்”? (வெளிப்படுத்துதல் 6:17) ஆம், உண்மையிலேயே யார்? சாத்தானுடைய ஒழுங்குமுறையை தெய்வீக கோபாக்கினையின் மகா நாளிலே பாழாக்குகையில், உலகத்தின் ஆட்சியாளர்களும் ஜனங்களும் அந்தக் கேள்வியை நன்றாக கேட்கலாம். சீக்கிரத்தில் வர இருக்கும் அந்தப் பெரிய மாற்றம் எல்லா மனித உயிரையும் அழித்துவிடும் என்பதாக அவர்களுக்கு தோன்றும். ஆனால் அப்படி அழிக்குமா? சந்தோஷகரமாக, கடவுளுடைய தீர்க்கதரிசி நமக்கு உறுதியளிக்கிறார்: “யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்.” (யோவேல் 2:32, NW) அப்போஸ்தலராகிய பேதுருவும் பவுலும் அந்த உண்மையை உறுதிப்படுத்துகிறார்கள். (அப்போஸ்தலர் 2:19-21; ரோமர் 10:13) ஆம், யெகோவாவின் நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் தப்பிப்பிழைக்கிறவர்களாக இருப்பார்கள். இவர்கள் யார்? அடுத்து வரும் தரிசனம் திறக்கையில் நாம் பார்க்கலாம்.

2. யெகோவாவின் நியாயத்தீர்ப்பின் நாளைத் தப்பிப்பிழைப்பவர்கள் இருப்பார்கள் என்பது ஏன் குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது?

2 எவரும், யெகோவாவின் நியாயத்தீர்ப்பின் நாளினூடே உயிரோடே வருவதானது உண்மையிலேயே குறிப்பிடத்தக்கது, ஏனென்றால் கடவுளுடைய தீர்க்கதரிசிகளில் இன்னொருவர் அதை இந்த வார்த்தைகளில் விவரிக்கிறார்: “இதோ, கோராவாரிக் காற்றாகிய கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] பெருங்காற்று உக்கிரமாயெழும்பி, அடித்து, துன்மார்க்கருடைய தலையின் மேல் மோதும். கர்த்தர் [யெகோவா, NW] தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய உக்கிர கோபம் தணியாது.” (எரேமியா 30:23, 24) அந்தப் புயலினூடே தப்பிப்பிழைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுப்பது அவசரமாக இருக்கிறது!—நீதிமொழிகள் 2:22; ஏசாயா 55:6, 7; செப்பனியா 2:2, 3.

நான்கு காற்றுகள்

3. (அ) தேவதூதர்கள் என்ன தனிச்சிறப்புள்ள சேவை செய்வதை யோவான் பார்க்கிறார்? (ஆ) ‘நான்கு காற்றுகளினால்’ அடையாளப்படுத்தப்படுவது என்ன?

3 யெகோவா இந்தப் பெரும் கோபத்தை கட்டவிழ்த்துவிடுவதற்கு முன்பாக, பரலோக தூதர்கள் ஒரு தனிச்சிறப்பான சேவையை செய்கிறார்கள். யோவான் இப்பொழுது இதைத் தரிசனத்தில் பார்க்கிறார்: “இவைகளுக்குப் பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின் மேலாவது, சமுத்திரத்தின் மேலாவது, ஒரு மரத்தின் மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்க கண்டேன்.” (வெளிப்படுத்துதல் 7:1) இது இன்று நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது? இந்த ‘நான்கு காற்றுகள்,’ பொல்லாத பூமிக்குரிய சமுதாயம், ஒழுக்கமற்ற மனிதராகிய கொந்தளிக்கும் ‘கடல்,’ பூமியின் மக்களிடமிருந்து ஆதரவையும் வாழ்க்கைப் பிழைப்பையும் பெறும் மிக உயரமுள்ள மரத்தைப் போன்ற ஆட்சியாளர்கள் மீது சீக்கிரத்தில் அவிழ்த்துவிடப்படும் அழிவுக்குரிய நியாயத்தீர்ப்பின் தெளிவான அடையாளமாக இருக்கின்றன.—ஏசாயா 57:20; சங்கீதம் 37:35, 36.

4. (அ) நான்கு தேவதூதர்கள் எதை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்? (ஆ) நான்கு காற்றுகளும் அவிழ்த்துவிடப்படுகையில், சாத்தானின் பூமிக்குரிய அமைப்பின் மீது என்ன பாதிப்பு உண்டாகும்?

4 சந்தேகமில்லாமல், இந்த நான்கு தூதர்கள், குறிக்கப்பட்டிருக்கும் காலம் வரையாக நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்படுவதை நிறுத்திவைக்க யெகோவா பயன்படுத்தும் நான்கு தேவதூதர் தொகுதிகளை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு திசைகளிலிருந்து ஒரே சமயத்தில் அந்தத் தெய்வீக கோபாக்கினையின் காற்றுகளை விரைவாகச் சுழலும்படி தேவதூதர்கள் அவிழ்த்துவிடுகையில், நாசம் மிகப் பெரியதாயிருக்கும். அது, பூர்வ ஏலாமியரை சிதறப்பண்ணி, நொறுக்கி, வேருடன் அழிப்பதற்கு யெகோவா பயன்படுத்திய நான்கு காற்றுகளைப் போன்றிருக்கும், ஆனால் மிகப்பெரிய அளவில் இருக்கும். (எரேமியா 49:36-38) இது, அம்மோன் தேசத்தாரை நிர்மூலமாக்க யெகோவா கொண்டு வந்த “பெருங்காற்றை” விட மிக அதிக நாசத்தை விளைவிக்கும் ஒரு மிகப் பெரிய புயல் காற்றாக இருக்கும். (ஆமோஸ் 1:13-15) யெகோவாவுடைய கடுங்கோபத்தின் நாளிலே, அவருடைய அரசாட்சியை வரும் எல்லா நித்திய காலத்திற்கும் நியாயநிரூபணம் செய்கையில், பூமியின் மீதுள்ள சாத்தானுடைய அமைப்பின் எந்தப் பாகமும் நிலைநிற்க முடியாது.—சங்கீதம் 83:15, 18; ஏசாயா 29:5, 6.

5. கடவுளுடைய நியாயத்தீர்ப்புகள் பூமி முழுவதையும் உள்ளடக்கும் என்பதை புரிந்துகொள்ள எரேமியாவின் தீர்க்கதரிசனம் நமக்கு எவ்வாறு உதவுகிறது?

5 கடவுளுடைய நியாயத்தீர்ப்புகள் பூமி முழுவதையும் பாழாக்கும் என்று நாம் நிச்சயமாக இருக்கக்கூடுமா? அவருடைய தீர்க்கதரிசியாகிய எரேமியாவுக்கு மறுபடியும் கவனமாக செவிகொடுங்கள்: “இதோ, ஜாதி ஜாதிக்குத் தீமை பரம்பும், பூமியின் எல்லைகளிலிருந்து மகா புசல் எழும்பும். அக்காலத்திலே பூமியின் ஒரு முனை துவக்கிப் பூமியின் மறுமுனை மட்டும் கர்த்தரால் [யெகோவாவால், NW] கொலையுண்டவர்கள் கிடப்பார்கள்.” (எரேமியா 25:32, 33) இந்தக் கடும் புயல் காற்று அடிக்கையில் இந்த உலகத்தை இருள் வளைத்துக்கொள்ளும். அதின் ஆட்சி செய்யும் செயற்கருவிகள் சூனிய நிலைக்குள் தள்ளப்படும். (வெளிப்படுத்துதல் 6:12-14) ஆனால் எதிர்காலம் அனைவருக்கும் இருண்டதாக இருக்காது. அப்படியானால், யார் நிமித்தமாக, அந்த நான்கு காற்றுகள் அடிக்காதபடிக்கு பிடித்து வைக்கப்பட்டிருக்கின்றன?

தேவனுடைய ஊழியக்காரர் முத்திரையிடப்படுதல்

6. நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கும்படியாக யார் அந்தத் தேவதூதர்களிடம் சொல்லுகிறார்? இது எதற்கு நேரத்தை அனுமதிக்கிறது?

6 யோவான், எவ்வாறு சிலர் தப்பிப்பிழைப்பதற்கு குறிக்கப்படுவார்கள் என்பதை, விவரிப்பவராய் தொடர்ந்து சொல்கிறார்: “ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலையுடைய வேறொரு தூதன் சூரியன் உதிக்கும் திசையிலிருந்து ஏறிவரக் கண்டேன்; அவன், பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி: நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரை போட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான்.”—வெளிப்படுத்துதல் 7:2, 3.

7. அந்த ஐந்தாம் தூதன் உண்மையிலேயே யார், மேலும் அவருடைய அடையாளத்தை நிலைநாட்ட என்ன அத்தாட்சி நமக்கு உதவுகிறது?

7 இந்த ஐந்தாம் தூதனின் பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும், அவர் மகிமைப்படுத்தப்பட்ட கர்த்தராகிய இயேசுவாக இருக்க வேண்டும் என்பதாக எல்லா அத்தாட்சிகளும் காண்பிக்கிறது. இயேசு பிரதான தூதனாக இருப்பதனால், அவர் இங்கே மற்ற தூதர்களின் மேல் அதிகாரத்தையுடையவராக காண்பிக்கப்படுகிறார். (1 தெசலோனிக்கேயர் 4:16; யூதா 9) “சூரியன் உதிக்கும் திசையிலிருந்து வரும் ராஜாக்களைப்” போல, பூர்வ பாபிலோனை கீழ்ப்படுத்தினபோது தரியு மற்றும் கோரேசு ராஜாக்கள் செய்தது போல, கிழக்கிலிருந்து எழும்பி வருகிறார்—யெகோவாவும் அவருடைய கிறிஸ்துவும்—நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற வருகிறார்கள். (வெளிப்படுத்துதல் 16:12; ஏசாயா 45:1; எரேமியா 51:11; தானியேல் 5:31) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு முத்திரை போடுதல் அவருக்கு ஒப்படைக்கப்பட்டிருப்பதாலுங்கூட, இந்தத் தூதன் இயேசுவைப் போன்று இருக்கிறார். (எபேசியர் 1:13, 14) மேலுமாக, காற்றுகள் அவிழ்த்துவிடப்படும்போது, தேசங்களின் மீது நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவதில் பரலோக சேனைகளை வழிநடத்துவது இயேசுவே. (வெளிப்படுத்துதல் 19:11-16) அப்படியென்றால் நியாயமாகவே, தேவனுடைய ஊழியக்காரரை முத்திரை போடும் வரை சாத்தானுடைய பூமிக்குரிய அமைப்பு அழிக்கப்படுவதை நிறுத்தி வைக்க கட்டளை கொடுப்பது இயேசுவாக இருப்பார்.

8. முத்திரை போடுதல் என்றால் என்ன, மேலும் அது எப்பொழுது ஆரம்பித்தது?

8 இந்த முத்திரை போடுதல் என்ன, மேலும் இந்தத் தேவனுடைய ஊழியக்காரர் யாவர்? முதல் யூத கிறிஸ்தவர்கள் பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே நாளன்று, பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் செய்யப்பட்டபோது முத்திரை போடுதல் ஆரம்பித்தது. பின்னர், கடவுள், “புறஜாதிகளின் ஜனங்களை” அழைத்து அபிஷேகம் பண்ணத் தொடர்ந்தார். (ரோமர் 3:29; அப்போஸ்தலர் 2:1-4, 14, 32, 33; 15:14) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் “கிறிஸ்துவுக்குரியவர்கள்” என்ற ஓர் உறுதியை கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி அப்போஸ்தலனாகிய பவுல் எழுதி, மேலும் கூட்டினார்: “[தேவன்] நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்.” (2 கொரிந்தியர் 1:21, 22; வெளிப்படுத்துதல் 14:1-ஐ ஒப்பிடவும்.) இவ்வாறாக, இந்த ஊழியக்காரர் தேவனுடைய ஆவிக்குரிய குமாரர்களாக ஏற்றுக்கொள்ளப்படுகையில், பரலோகத்தை சுதந்தரிப்பதற்கு முன்பாக ஓர் அச்சாரத்தைப் பெறுகிறார்கள்—ஒரு முத்திரை அல்லது வாக்குறுதி. (2 கொரிந்தியர் 5:1, 5; எபேசியர் 1:10, 11) அப்போது அவர்கள் இவ்வாறு சொல்லக்கூடும்: “நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி கொடுக்கிறார். நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனே கூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனே கூடப் பாடுபட்டால் அப்படியாகும்.”—ரோமர் 8:15-17.

9. (அ) மீந்திருக்கும் ஆவியால் பிறப்பிக்கப்பட்ட தேவனுடைய குமாரர்களின் பங்கில் என்ன சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது? (ஆ) அபிஷேகம் செய்யப்பட்டவர்களின் சோதனை எவ்வளவு காலத்துக்கு இருக்கும்?

9 ‘நாம் அவருடனே கூடப் பாடுபட்டால்’—அது எதை அர்த்தப்படுத்துகிறது? ஜீவ கிரீடத்தைப் பெறுவதற்கு, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் சகித்திருந்து, மரணம் வரையாக உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். (வெளிப்படுத்துதல் 2:10) ‘ஒரு தரம் இரட்சிக்கப்படுவது, எப்பொழுதும் இரட்சிக்கப்பட்டிருப்பது’ என்ற ஒரு காரியம் அல்ல. (மத்தேயு 10:22; லூக்கா 13:24) மாறாக, அவர்கள் இவ்விதமாக எச்சரிக்கப்படுகிறார்கள்: “உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.” அப்போஸ்தலனாகிய பவுலைப் போல அவர்களும் முடிவாக இவ்வாறு சொல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும்: “நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக் கொண்டேன்.” (2 பேதுரு 1:10, 11; 2 தீமோத்தேயு 4:7, 8) ஆகவே, சோதிக்கப்பட்ட மற்றும் உண்மையுள்ள ‘நம்முடைய தேவனுடைய ஊழியக்காரர்’ என்பதை முடிவாக, மாற்றமுடியாத விதத்தில், அடையாளப்படுத்தும் வகையில், இயேசுவும் அவரோடு இருக்கும் தூதர்களும் இவர்கள் எல்லாருடைய ‘நெற்றியில்’ முத்திரையை உறுதியாக ஊன்றச் செய்யும் வரை, இங்கே பூமியில் மீந்திருக்கும் ஆவியினால் பிறப்பிக்கப்பட்ட தேவனுடைய குமாரர்களின் சோதனையும் புடமிடுதலும் தொடர வேண்டும். அந்த முத்திரை பிறகு ஒரு நிரந்தரமான குறியாக ஆகிறது. தெளிவாகவே, உபத்திரவத்தின் நான்கு காற்றுகள் அவிழ்த்து விடப்படுகையில், ஆவிக்குரிய இஸ்ரவேலர் எல்லாரும் மாம்சத்தில் சிலர் இன்னும் உயிரோடு இருந்தபோதிலும் முடிவான நிலையில் முத்திரை போடப்பட்டிருப்பார்கள். (மத்தேயு 24:13; வெளிப்படுத்துதல் 19:7) முழு உறுப்பினர் பகுதி நிறைவு பெற்றிருக்கும்.—ரோமர் 11:25, 26.

எவ்வளவு பேர் முத்திரை போடப்படுகிறார்கள்

10. (அ) முத்திரை போடப்பட்டவர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டது என்பதை எந்த வேதவசனங்கள் காண்பிக்கின்றன? (ஆ) முத்திரை போடப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை என்ன, மேலும் அவர்கள் எவ்வாறு பட்டியலிடப்படுகிறார்கள்?

10 இந்த முத்திரை பெறுதலின் வரிசையில் இருப்பவர்களிடம் இயேசு சொன்னார்: “பயப்படாதே, சிறு மந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.” (லூக்கா 12:32) வெளிப்படுத்துதல் 6:11 மற்றும் ரோமர் 11:25 போன்ற மற்ற வசனங்கள், இந்தச் சிறு மந்தையின் எண்ணிக்கை உண்மையாக வரையறுக்கப்பட்டது, மேலும், உண்மையில், முன் தீர்மானிக்கப்பட்டது என்று காண்பிக்கின்றன. யோவானின் அடுத்த வார்த்தைகள் இதை உறுதிப்படுத்துகின்றன: “முத்திரை போடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக் கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரை போடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர். யூதா கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். ரூபன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். காத் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். ஆசேர் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். நப்தலி கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். மனாசே கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். சிமியோன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். செபுலோன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம், பென்யமீன் கோத்திரத்தில் முத்திரை போடப்பட்டவர்கள் பன்னீராயிரம்.”—வெளிப்படுத்துதல் 7:4-8.

11. (அ) 12 கோத்திரங்களுக்குரிய குறிப்பு ஏன் சொல்லர்த்தமான, மாம்சத்துக்குரிய இஸ்ரவேலுக்கு பொருந்தாது? (ஆ) வெளிப்படுத்துதல் 12 கோத்திரங்களை ஏன் பட்டியலிடுகிறது? (இ) ஏன், தேவனுடைய இஸ்ரவேலரில், தனிப்பட்ட விதத்தில் ராஜரீக அல்லது ஆசாரியத்துவ கோத்திரம் இல்லை?

11 சொல்லர்த்தமான, மாம்சத்துக்குரிய இஸ்ரவேலரை இது குறிக்காதா? இல்லை, ஏனென்றால் வெளிப்படுத்துதல் 7:4-8 வழக்கமான கோத்திரப் பட்டியலிலிருந்து வேறுபடுகிறது. (எண்ணாகமம் 1:17, 47) தெளிவாகவே, இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியல் மாம்சத்துக்குரிய யூதர்களை அவர்களின் கோத்திரங்களின் பிரகாரம் அடையாளப்படுத்தும் நோக்கத்திற்காக இல்லாமல், ஆனால் ஆவிக்குரிய இஸ்ரவேலரின் அதே விதமான அமைப்பின் கட்டுமானத்தைக் காட்டுவதற்காக. இது சமநிலைப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தப் புதிய தேசத்தின் அங்கத்தினர்கள் சரியாக 1,44,000 பேராக இருக்கிறார்கள்—12 கோத்திரங்களின் ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் 12,000 பேர். இந்தத் தேவனுடைய இஸ்ரவேலரில் தனிப்பட்ட விதத்தில் எந்தக் கோத்திரமும் ராஜரீக அல்லது ஆசாரியத்துவ கோத்திரமாக இல்லை. முழு தேசமும் அரசர்களாக ஆட்சி செய்ய இருக்கிறார்கள், மேலும் முழு தேசமும் ஆசாரியர்களாக சேவை செய்ய இருக்கிறார்கள்.—கலாத்தியர் 6:16; வெளிப்படுத்துதல் 20:4, 6.

12. ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக 24 மூப்பர்கள் வெளிப்படுத்துதல் 5:9, 10-ன் வார்த்தைகளை பாடுவது ஏன் பொருத்தமாக இருக்கிறது?

12 ஆவிக்குரிய இஸ்ரவேலராக தெரிந்துகொள்ளப்படுவதற்கு முதல் வாய்ப்பு இயற்கையான யூதர்கள் மற்றும் யூத மத மாறினவார்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தபோதிலும், அவர்களில் ஒரு சிறுபான்மையோரே பிரதிபலித்தார்கள். ஆகையால் யெகோவா அழைப்பை புறஜாதிகளுக்கு நீட்டினார். (யோவான் 1:10-13; அப்போஸ்தலர் 2:4, 7-11; ரோமர் 11:7) “இஸ்ரவேலருடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களாக” முன்னர் இருந்த எபேசியரின் காரியத்தில் இருந்தது போல, இப்பொழுது யூதரல்லாதவர்கள் தேவனுடைய ஆவியினால் முத்திரிக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் சபையின் பாகமாக ஆக முடியும். (எபேசியர் 2:11-13; 3:5, 6; அப்போஸ்தலர் 15:14) ஆகவே, 24 மூப்பர்கள் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக இவ்விதம் பாடுவது பொருத்தமாக இருக்கிறது: “சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம்.”—வெளிப்படுத்துதல் 5:9, 10.

13. இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரனாகிய யாக்கோபு தன்னுடைய நிரூபத்தை “சிதறியிருக்கிற 12 கோத்திரங்களுக்கு” என்று எழுதியது ஏன் சரியாகவே இருக்கிறது?

13 கிறிஸ்தவ சபை “தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததி, ராஜரீகமான ஆசாரியக் கூட்டம், பரிசுத்த ஜாதி.” (1 பேதுரு 2:9) தேவனுடைய தேசமாக இயற்கை இஸ்ரவேலுக்கு மாற்றீடாக, அது ஒரு புதிய இஸ்ரவேல், அதாவது, “உண்மையான ‘இஸ்ரவேல்.’” (ரோமர் 9:6-8; மத்தேயு 21:43) a இந்தக் காரணத்திற்காகவே, இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரனாகிய யாக்கோபு, ஆவிக்குரிய கவனிப்பும் வழிநடத்துதலுமடங்கிய அவருடைய கடிதத்தை “சிதறியிருக்கிற 12 கோத்திரங்களுக்கு” எழுதினது முற்றிலும் சரியானதாக இருந்தது, அதாவது எண்ணிக்கை காலப்போக்கில் 1,44,000 ஆகும் அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களின் உலகளாவிய சபையாக இருந்தது.—யாக்கோபு 1:1.

இன்றைய தேவனுடைய இஸ்ரவேலர்

14. ஆவிக்குரிய இஸ்ரவேலரை உண்டாக்கும் சொல்லர்த்தமான எண்ணிக்கை 1,44,000 என்பதாக யெகோவாவின் சாட்சிகள் மாறாமல் கருதியிருப்பதை எது காட்டுகிறது?

14 அக்கறையூட்டும் விதத்தில், சார்ல்ஸ் T. ரஸல், 1,44,000-ஐ தனி நபர்களைக் கொண்ட சொல்லர்த்தமான எண்ணிக்கையுடைய ஓர் ஆவிக்குரிய இஸ்ரவேலரை உண்டுபண்ணுகிறவர்கள் என்பதாக அறிந்துகொண்டார். வேதாகமங்களில் படிப்புகள், புத்தகம் 6, புதிய சிருஷ்டிப்பு, (ஆங்கிலம்) 1904-ல் பிரசுரிக்கப்பட்ட அவருடைய புத்தகத்தில் இவ்வாறு எழுதினார்: “தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுடைய [தெரிந்துகொள்ளப்பட்ட அபிஷேகம் செய்யப்பட்டவர்களுடைய] திட்டமான, தீர்மானிக்கப்பட்ட எண்ணிக்கை அநேக முறைகள் வெளிப்படுத்துதலில் சொல்லப்பட்டிருக்கிறது. (7:4; 14:1); என்னவெனில், 1,44,000 பேர் ‘மனிதரின் மத்தியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள்’ என்று நம்புவதற்கு எங்களுக்கு எல்லா காரணமும் இருக்கிறது.” வெளிச்சம், புத்தகம் 1, 1930-ல் பைபிள் மாணாக்கர் பிரசுரித்தது, அதில் அதே போல் சொல்லப்பட்டது: “கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினர்களாகிய 1,44,000 பேர் இவ்வாறாக சபையில், தேர்ந்தெடுக்கப்பட்டு அபிஷேகம் பண்ணப்பட்டவர்களாக, அல்லது முத்திரை போடப்பட்டவர்களாக, காட்டப்பட்டிருக்கிறார்கள்.” சொல்லர்த்தத்தில் 1,44,000 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய இஸ்ரவேலரை உண்டுபண்ணுகிறார்கள் என்ற கருத்தை யெகோவாவின் சாட்சிகள் மாறாமல் கொண்டு இருக்கிறார்கள்.

15. கர்த்தருடைய நாளுக்கு சற்று முன்பாக, புறஜாதிகளின் காலங்கள் முடிந்த பின்பு மாம்சப்பிரகாரமான யூதர்கள் எதை அனுபவிப்பார்கள் என்பதாக உண்மையான பைபிள் மாணாக்கர்கள் நினைத்தார்கள்?

15 இருப்பினும், இன்றைக்கு மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலர் ஓரளவு விசேஷித்த தயவுக்கு தகுதியுள்ளவர்கள் அல்லவா? கர்த்தருடைய நாளுக்கு சற்று முன்னான காலப்பகுதியில், உண்மையான பைபிள் மாணாக்கர்கள் கடவுளுடைய வார்த்தையின் அநேக அடிப்படை சத்தியங்களை திரும்பக் கண்டுபிடிக்கையில், புறஜாதிகளின் காலங்கள் முடிவடைவதுடன் யூதர்கள் மறுபடியும் கடவுளுக்கு முன்பாக ஒரு சிலாக்கியத்துக்குரிய நிலைநிற்கையை அனுபவிப்பார்கள் என்று நினைத்தார்கள். இவ்வாறாக, காலம் அருகாமையில் இருக்கிறது (ஆங்கிலம்) (புத்தகம் 2, வேதாகமங்களில் படிப்புகள்) 1889-ல் பிரசுரிக்கப்பட்ட C. T. ரஸலின் புத்தகம் எரேமியா 31:29-34-ஐ இயற்கை யூதர்களுக்குப் பொருத்தி விளக்கினது: “புறஜாதிகளுடைய ஆட்சியின் கீழ் இஸ்ரவேலருடைய தண்டனை கி.மு. [607]-லிருந்து தொடர்ந்திருக்கிறது, அது இன்றும் தொடர்கிறது, கி.பி. 1914-க்கு அவர்களுடைய ‘ஏழு காலங்களின்’ கால எல்லை—2,520 வருடங்களுக்கு முன்பாக அவர்களுடைய தேசத்தைத் திரும்பவும் அமைத்தலை எதிர்பார்ப்பதற்கு எந்தக் காரணமுமில்லை.” யூதர்கள் அப்பொழுது ஒரு தேசிய புதுப்பித்தலை அனுபவிப்பார்கள் என்பதாகத் தோன்றியது, மேலும் அந்த எதிர்பார்ப்பு 1917-ல் தெளிவாக பிரகாசித்தது, அப்போது பால்ஃபூர் உறுதிமொழி பலஸ்தீனாவை யூதர்களுக்கு ஒரு தேசிய வீடாக ஆக்குவதற்கு பிரிட்டிஷ் ஆதரவை உறுதியளித்தது.

16. கிறிஸ்தவ செய்தியைக் கொண்டு மாம்சப்பிரகாரமான யூதர்களைச் சென்றெட்டுவதற்கு யெகோவாவின் சாட்சிகளால் என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டன, மேலும் என்ன விளைவுடன்?

16 முதல் உலக யுத்தத்தை தொடர்ந்து மகா பிரிட்டனின் கீழ் பலஸ்தீனா ஆட்சியுரிமைப் பெற்ற பகுதியாக ஆனது, அநேக யூதர்கள் அந்த நாட்டுக்கு திரும்புவதற்கு வழி திறக்கப்பட்டது. 1948-ல் அரசு முறைப்பட்ட இஸ்ரவேல் நாடு உருவாக்கப்பட்டது. யூதர்கள் தெய்வீக ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள் என்பதை இது சுட்டிக்காட்டவில்லையா? அநேக வருடங்களாக, யெகோவாவின் சாட்சிகள் இது அவ்வாறு இருந்தது என்பதாக நம்பினார்கள். இவ்வாறாக, 1925-ல் 128 பக்கங்கள் அடங்கிய ஒரு புத்தகத்தை யூதர்களுக்கு ஆறுதல் (ஆங்கிலம்) என்பதை அவர்கள் பிரசுரித்தார்கள். 1929-ல் 360 பக்கங்கள் அடங்கிய ஒரு கவர்ச்சிகரமான வாழ்க்கை (ஆங்கிலம்) என்ற புத்தகத்தை வெளியிட்டார்கள். பைபிள் புத்தகமாகிய யோபுடைய சரித்திரத்தையும் சேர்த்து, யூதர்களுடைய அக்கறையைத் தூண்டுவதற்காக, இது வடிவமைக்கப்பட்டது. இந்த மேசியானிய செய்தியைக் கொண்டு யூதர்களை சென்றெட்டுவதற்கு, விசேஷமாக நியூ யார்க் நகரத்தில், பேரளவான முயற்சிகள் செய்யப்பட்டன. மகிழ்ச்சிகரமாக, சில நபர்கள் பிரதிபலித்தார்கள், ஆனால் மொத்தத்தில், முதல் நூற்றாண்டில் இருந்த அவர்களுடைய முற்பிதாக்களைப் போல, மேசியாவின் வந்திருத்தலுக்கான அத்தாட்சியை ஏற்க மறுத்துவிட்டார்கள்.

17, 18. புதிய உடன்படிக்கை மற்றும் பைபிளின் திரும்ப நிலைநாட்டுதலைக் குறித்த தீர்க்கதரிசனங்களைப் பற்றி பூமியில் உள்ள தேவனுடைய ஊழியக்காரர் என்ன புரிந்துகொள்ளுதலுக்கு வந்தார்கள்?

17 மொத்தமாக யூதர், ஒரு ஜனமாக அல்லது ஒரு தேசமாக, வெளிப்படுத்துதல் 7:4-8-ல் அல்லது கர்த்தருடைய நாளுக்குத் தொடர்புடைய மற்ற பைபிள் தீர்க்கதரிசனங்களில் விவரிக்கப்பட்டிருக்கும் இஸ்ரவேலர் அல்ல என்பது தெளிவாக இருந்தது. பாரம்பரியத்தை பின்பற்றுகிறவர்களாக, யூதர்கள் தொடர்ந்து தெய்வீக நாமத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தார்கள். (மத்தேயு 15:1-3, 7-9) எரேமியா 31:31-34 சிந்திக்கையில், யெகோவாவின் சாட்சிகளால் 1934-ல் வெளியிடப்பட்ட ஜெஹோவா என்ற தலைப்புடைய புத்தகம், தீர்மானமாக சொன்னது: “புதிய உடன்படிக்கை இஸ்ரவேலரின் இயற்கை வம்சத்தாரோடு மற்றும் பொதுவாக மனிதவர்க்கத்தோடு எந்தச் சம்பந்தமும் உடையதாக இல்லை, ஆனால் . . . ஆவிக்குரிய இஸ்ரவேலருக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.” திரும்ப நிலைநாட்டப்படுதலைக் குறித்த பைபிள் தீர்க்கதரிசனங்கள் இயற்கை யூதர்களுக்கோ அல்லது அரசியல் சார்ந்த இஸ்ரவேலுக்கோ தொடர்புடையதாக இல்லை, அரசியல் சார்ந்த இஸ்ரவேல் ஐக்கிய நாடுகளின் ஓர் அங்கத்தினராகவும் இயேசு யோவான் 14:19, 30 மற்றும் 18:36-ல் சொன்ன உலகத்தின் பாகமாகவும் இருக்கின்றன.

18 பூமியில் உள்ள தேவனுடைய ஊழியக்காரர், 1931-ல் மிக்க மகிழ்ச்சியுடன் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை பெற்றிருந்தனர். அவர்கள் சங்கீதம் 97:11-ன் வார்த்தைகளுக்கு முழு இருதயத்துடன் ஒப்புதலைக் கொடுக்கக்கூடும்: “நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.” ஆவிக்குரிய இஸ்ரவேலர் மட்டுமே புதிய உடன்படிக்கைக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் தெளிவாக அறிந்துகொள்ளக்கூடியவர்களாக இருந்தார்கள். (எபிரெயர் 9:15; 12:22, 24) பிரதிபலிக்காத மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலருக்கோ அல்லது பொதுவான மனிதவர்க்கத்திற்கோ அதனில் பங்கு இல்லை. இந்தப் புரிந்துகொள்ளுதல் தேவாட்சிக்குரிய வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் தெய்வீக வெளிச்சத்தின் பிரகாசமான ஒரு செய்திக்கு வழியை தெளிவாக்கினது. அவரிடத்தில் சேருகிற எல்லா மனிதர்களுக்கும் யெகோவா எவ்வாறு அபரிமிதமாக அவருடைய இரக்கம், கிருபை, சத்தியத்தை அளிக்கிறார் என்பதை இது வெளிக்காட்டும். (யாத்திராகமம் 34:6; யாக்கோபு 4:8) ஆம், தூதர்கள், அழிவுக்குரிய நான்கு காற்றுகளை பிடித்து வைத்திருப்பதன் மூலம் தேவனுடைய இஸ்ரவேலர் தவிர மற்றவர்களும் நன்மையடைவார்கள். இவர்கள் யாராக இருக்கக்கூடும்? நீங்கள் அவர்களில் ஒருவராக இருக்கக்கூடுமா? இப்போது நாம் பார்க்கலாம்.

[அடிக்குறிப்பு]

a பொருத்தமாகவே, இஸ்ரவேல் என்ற பெயர் “தேவன் வழக்காடுகிறார்; தேவனோடு (விடா முயற்சியோடு வழக்காடுகிறவர்)” என்று அர்த்தப்படுத்தப்படுகிறது.—ஆதியாகமம் 32:28, துணைக்குறிப்புகளடங்கிய புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள், அடிக்குறிப்பு.

[கேள்விகள்]

[பக்கம் 114-ன் முழுபடம்]

[பக்கம் 116, 117-ன் படம்]

தேவனுடைய உண்மையான இஸ்ரவேலரின் பொதுவான தெரிந்தெடுத்தல் பொ.ச. 33-ன் பெந்தெகொஸ்தே நாளிலிருந்து 1935 வரையாக முன் சென்றது, 1935-ல் வாஷிங்டன், டி.சி.-யில் நடந்த வரலாற்று சிறப்புடைய யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டில், பூமிக்குரிய வாழ்க்கை எதிர்பார்ப்புகள் உடைய ஒரு திரள் கூட்டம் கூட்டிச்சேர்ப்பதற்கு அழுத்தம் மாற்றப்பட்டது (வெளிப்படுத்துதல் 7:9)