Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்த இரகசியத்தை வெளிப்படுத்துதல்

பரிசுத்த இரகசியத்தை வெளிப்படுத்துதல்

அதிகாரம் 6

பரிசுத்த இரகசியத்தை வெளிப்படுத்துதல்

1. வெளிப்படுத்துதல் 1:10-17-ல் பதிவு செய்யப்பட்டுள்ள பிரகாசமுள்ள சித்தரிப்பிற்கு நாம் எவ்வாறு பிரதிபலிக்க வேண்டும்?

 உயர்த்தப்பட்ட இயேசுவைப் பற்றிய தரிசனம் உண்மையிலேயே பிரமிப்பூட்டுகிறது! சந்தேகமில்லாமல், அங்கே அப்போஸ்தலன் யோவானுடன் நாமும் பார்வையாளர்களாக இருந்திருந்தால், நாமுங்கூட அந்தப் பிரகாசமான மகிமையினால் ஆட்கொள்ளப்பட்டு அவர் செய்ததைப்போலவே சாஷ்டாங்கமாய் விழுந்திருப்போம். (வெளிப்படுத்துதல் 1:10-17) இன்று, கடவுளால் ஏவப்பட்ட இந்த மிகச் சிறந்த தரிசனம் நம்மைச் செயல்பட தூண்டுவதற்கு பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறது. யோவானைப்போன்று, இத்தரிசனம் குறிக்கும் எல்லாவற்றிற்கும் தாழ்மையோடுகூடிய போற்றுதலை நாம் காண்பிக்க வேண்டும். இயேசு சிங்காசனத்திலேற்றப்பட்ட அரசராக, பிரதான ஆசாரியராக மற்றும் நியாயாதிபதியாக அவர் வகிக்கும் ஸ்தானத்துக்குப் போற்றுதலுடன்கூடிய மரியாதையை நாம் எப்போதும் கொண்டிருப்போமாக.—பிலிப்பியர் 2:5-11.

“முதலானவரும் கடைசியானவரும்”

2. (அ) என்ன பட்டப்பெயரோடு இயேசு தம்மை அறிமுகப்படுத்துகிறார்? (ஆ) “நான் முந்தினவரும் கடைசியானவரும்” என்று யெகோவா சொல்லும்போது அது எதை அர்த்தப்படுத்துகிறது? (இ) “முதலானவரும் கடைசியானவரும்” என்ற இயேசுவின் பட்டப்பெயர் எதற்கு கவனத்தை அழைக்கிறது?

2 இருந்தபோதிலும், நமக்கிருக்கும் அச்சம் ஆரோக்கியமற்ற பயத்தைக் கொண்டிருப்பதற்கு இடங்கொடுக்க வேண்டியதில்லை. அப்போஸ்தலன் அடுத்து விவரிக்கிறவிதமாக, யோவானிடமிருந்த பயத்தை நீக்க இயேசு உறுதியளித்தார். “அப்பொழுது அவர் தம்முடைய வலது கரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முதலானவரும் கடைசியானவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்.” (வெளிப்படுத்துதல் 1:17ஆ, NW) ஏசாயா 44:6-ல், யெகோவா, அவர் ஒருவரே சர்வவல்லமையுள்ள கடவுளாக வகிக்கிற ஸ்தானத்தைக் குறித்து இவ்வாறு சரியாகவே விவரித்து சொல்கிறார்: “நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத் தவிர தேவன் இல்லை.” a இயேசு தம்மை “முதலானவரும் கடைசியானவரும்” என்ற பட்டப்பெயரைக்கொண்டு அறிமுகப்படுத்தும்போது, மகத்தான சிருஷ்டிகராகிய யெகோவாவுக்கு சரிசமமானவராக இருப்பதாக உரிமைபாராட்டுகிறதில்லை. கடவுளால் அவருக்கு தகுதியாகவே அளிக்கப்பட்ட பட்டப்பெயரை அவர் பயன்படுத்துகிறார். ஏசாயாவில், மெய் கடவுளாக, தம்முடைய ஒப்பற்ற நிலையைப் பற்றி யெகோவா சொல்லிக்கொண்டிருந்தார். அவரே நித்தியத்துக்கும் கடவுள், நிச்சயமாகவே, அவரைத் தவிர வேறே கடவுள் இல்லை. (1 தீமோத்தேயு 1:17) வெளிப்படுத்துதலில், அவருடைய நிகரற்ற உயிர்த்தெழுதலிடமாக கவனத்தைத் திருப்புகிறவராக, தமக்குக் கொடுக்கப்பட்ட பட்டப்பெயரைக் குறித்து இயேசு பேசிக்கொண்டிருக்கிறார்.

3. (அ) இயேசு எவ்விதத்தில் “முதலானவரும் கடைசியானவரு”மாக இருந்தார்? (ஆ) இயேசு “மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்”களை வைத்திருக்கிறார் என்பதன் மூலம் என்ன அர்த்தப்படுத்தப்படுகிறது?

3 இயேசுவே, உண்மையில் சாவாமையுள்ள ஆவி வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்பட இருந்த “முதல்” மனிதராக இருந்தார். (கொலோசெயர் 1:18) மேலும், அப்பேர்ப்பட்ட வாழ்க்கைக்கு யெகோவாவினால் நேரடியாக உயிர்த்தெழுப்பப்பட வேண்டிய “கடைசி” நபராகவுமிருக்கிறார். இப்படியாக, அவர் ‘உயிருள்ளவரும் . . . சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவராகவும்’ ஆகிறார். அவர் அழியாமையை அனுபவிக்கிறார். இந்தக் காரியத்தில், “ஜீவனுள்ள தேவன்” என்றழைக்கப்படுகிற, சாவாமையுள்ள தம்முடைய பிதாவைப்போன்றிருக்கிறார். (வெளிப்படுத்துதல் 7:2; சங்கீதம் 42:2) மற்ற எல்லா மனிதவர்க்கத்தினருக்கும், இயேசுவே “உயிர்த்தெழுதலும் ஜீவனுமா” இருக்கிறார். (யோவான் 11:25) இதற்கு இசைவாக யோவானிடம் சொல்கிறார்: “மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், . . . நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.” (வெளிப்படுத்துதல் 1:18) மரித்தோரை உயிர்த்தெழுப்புவதற்கு யெகோவா அவருக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார். எனவே, மரணத்தினாலும் பாதாளத்தினாலும் (பிரேதக்குழியினாலும்) கட்டப்பட்டிருக்கிறவர்களுக்கு வாசல்களைத் திறப்பதற்கான திறவுகோல்களைத் தாம் கொண்டிருப்பதாக இயேசுவால் சொல்ல முடிந்தது.—மத்தேயு 16:18-ஐ ஒப்பிடுக.

4. என்ன கட்டளையை இயேசு மறுபடியும் சொல்கிறார், யாருடைய நன்மைக்காக?

4 இங்கே இயேசு தரிசனத்தைப் பதிவு செய்வதற்கு, மறுபடியும் தம்முடைய கட்டளையை யோவானிடம் சொல்கிறார்: “நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப் பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது.” (வெளிப்படுத்துதல் 1:19) நம்முடைய போதனைக்காக, என்ன கிளர்ச்சியூட்டும் காரியங்களை யோவான் இன்னும் தெரிவிக்க இருக்கிறார்?

நட்சத்திரங்களும் குத்துவிளக்குகளும்

5. ‘ஏழு நட்சத்திரங்களையும்’ ‘ஏழு குத்துவிளக்குகளையும்’ இயேசு எவ்விதம் விளக்குகிறார்?

5 யோவான், இயேசுவை வலது கரத்தில் ஏழு நட்சத்திரங்களோடு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியில் கண்டிருக்கிறார். (வெளிப்படுத்துதல் 1:12, 13, 16) இயேசு இப்போது இதை விளக்குகிறார்: “என் வலது கரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.”—வெளிப்படுத்துதல் 1:20.

6. ஏழு நட்சத்திரங்கள் எதை பிரதிநிதித்துவம் செய்கின்றன, இந்தச் செய்திகள் ஏன் குறிப்பாக இவற்றிற்கு அனுப்பப்பட்டன?

6 அந்த ‘நட்சத்திரங்கள்’ “ஏழு சபைகளின் தூதர்களா”வர். வெளிப்படுத்துதலில், சில சமயங்களில், நட்சத்திரங்கள் சொல்லர்த்தமாக தூதர்களை அடையாளப்படுத்துகின்றன, ஆனால் காணக்கூடாத ஆவி சிருஷ்டிகளுக்கு எழுதுவதற்கு ஒரு மனித எழுத்தாளனை இயேசு உபயோகிக்கமாட்டார். எனவே, அந்த ‘நட்சத்திரங்கள்’ இயேசுவின் தூதுவர்களாக கருதப்படுகிற சபையிலுள்ள மனித கண்காணிகளாக அல்லது மூப்பர்களாக இருக்க வேண்டும். b இந்தச் செய்திகள் நட்சத்திரங்களுக்கு அனுப்பப்படுகிறது, ஏனென்றால் இவர்கள் யெகோவாவுடைய மந்தையை கண்காணிக்கும் பொறுப்பையுடையவர்களாக இருக்கிறார்கள்.—அப்போஸ்தலர் 20:28.

7. (அ) இயேசு ஒவ்வொரு சபையிலும் உள்ள ஒரே ஒரு தூதனிடம் பேசுவது, ஒவ்வொரு சபையும் ஒரே ஒரு மூப்பரை மட்டுமே கொண்டுள்ளதை குறிக்கவில்லை என்பதை எது காட்டுகிறது? (ஆ) இயேசுவின் வலது கரத்திலுள்ள ஏழு நட்சத்திரங்களினால் யார் உண்மையிலேயே பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறார்கள்?

7 ஒவ்வொரு சபையிலுமுள்ள ஒரே ஒரு ‘தூதனோடு’ மட்டும் இயேசு பேசுவதன் காரணமாக ஒவ்வொரு சபையும் ஒரே ஒரு மூப்பரையே உடையதாயிருக்கிறது என்று இது குறிக்கிறதா? இல்லை. பவுலின் நாளிலேயே எபேசு சபை, ஒரே ஒரு மூப்பரை அல்ல, அநேக மூப்பர்களைக் கொண்டிருந்தது. (வெளிப்படுத்துதல் 2:1; அப்போஸ்தலர் 20:17) ஆகவே யோவானின் நாளில், செய்திகள் சபைகளுக்கு (எபேசுவிலிருந்த சபை உட்பட) வாசிக்கும்படியாக ஏழு நட்சத்திரங்களுக்கு அனுப்பப்பட்டபோது, யெகோவாவின் அபிஷேகஞ்செய்யப்பட்ட சபைகளிலுள்ள மூப்பர் குழுக்களிலிருந்த அனைவரையும் நட்சத்திரங்கள் பிரதிநிதித்துவம் செய்திருக்க வேண்டும். அதேவிதமாகவே, இன்று கண்காணிகள் அவர்களுடைய சபைகளுக்கு நிர்வாகக் குழுவிலிருந்து பெறுகிற கடிதங்களை வாசிக்கின்றனர். இந்தக் குழு, இயேசுவின் தலைமையின்கீழ் சேவிக்கிற அபிஷேகஞ்செய்யப்பட்ட கண்காணிகளை உள்ளடக்குகிறது. இயேசுவின் ஆலோசனைகளை அவர்களுடைய சபைகள் பின்பற்றி செயல்படுவதை உள்ளூர் சபை மூப்பர்களைக்கொண்ட குழுக்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். உண்மையில், ஆலோசனை மூப்பர்களுக்கு மட்டுமல்ல, சபைகளில் கூட்டுறவு கொண்டுள்ள எல்லாருடைய நன்மைக்காகவும் இருக்கிறது.—வெளிப்படுத்துதல் 2:11-ஐ காண்க.

8. இயேசுவின் வலது கரத்தில் மூப்பர்கள் இருப்பது எதைக் குறித்துக் காட்டுகிறது?

8 இயேசு சபையின் தலைவராக இருப்பதால், மூப்பர்கள் அவருடைய வலது கரத்தில், அதாவது, அவருடைய கட்டுப்பாட்டின் கீழும் வழிநடத்துதலின் கீழும் இருக்கிறார்கள் என்று சரியாகவே சொல்லப்பட்டுள்ளது. (கொலோசெயர் 1:18) அவர் பிரதான மேய்ப்பராக இருக்கிறார், இவர்கள் உதவி மேய்ப்பர்களாக இருக்கிறார்கள்.—1 பேதுரு 5:2-4.

9. (அ) அந்த ஏழு குத்துவிளக்குகளும் பிரதிநிதித்துவம் செய்வது என்ன, குத்துவிளக்குகள் ஏன் சபைகளுக்கு பொருத்தமான அடையாளமாயிருக்கின்றன? (ஆ) அப்போஸ்தலன் யோவானுக்கு இந்தத் தரிசனம் எதை ஞாபகப்படுத்தியிருக்க வேண்டும்?

9 அந்த ஏழு குத்துவிளக்குகள் யோவான் வெளிப்படுத்துதல் புத்தகத்தை எழுதிய ஏழு சபைகளாம்: எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா மற்றும் லவோதிக்கேயா என்பவை. சபைகள் ஏன் குத்துவிளக்குகளால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன? ஏனெனில், இந்த இருள் சூழ்ந்த உலகில், கிறிஸ்தவர்கள், தனிப்பட்ட ஆட்களாக அல்லது கூட்டாக, சபைகளாக “அவர்கள் வெளிச்சம் மனுஷர் முன்பாக பிரகாசிக்க” செய்ய வேண்டும். (மத்தேயு 5:14-16) கூடுதலாக, குத்துவிளக்குகள் சாலொமோனின் ஆலய சாமான்களில் இருந்தன. சபைகளைக் குத்துவிளக்குகள் என்றழைப்பது, உதாரண அர்த்தத்தில், அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள் கொண்ட ஒவ்வொரு உள்ளூர் சபையும் கடவுளுடைய ஆவி வாசஞ்செய்யும் “தேவனுடைய ஆலய”மாக இருக்கிறது என்பதை யோவானுக்கு ஞாபகப்படுத்தியிருக்க வேண்டும். (1 கொரிந்தியர் 3:16) மேலும், யூத ஆலய ஏற்பாட்டின் மாதிரிப்படிவத்தில், அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள் கொண்ட சபையின் அங்கத்தினர்கள் ‘ராஜரீக ஆசாரியக்கூட்டமாக’ யெகோவாவின் பெரிய ஆவிக்குரிய ஆலய ஏற்பாட்டில் சேவை செய்கிறார்கள். இதற்கு இயேசு பிரதான ஆசாரியராக இருக்கிறார், அங்கே யெகோவாதாமே பரலோக மகா பரிசுத்த ஸ்தலத்தில் வாசஞ்செய்கிறார்.—1 பேதுரு 2:4, 5, 9; எபிரெயர் 3:1; 6:20; 9:9-14, 24.

பெரிய விசுவாசதுரோகம்

10. பொ.ச. 70-ல் யூத ஒழுங்குமுறைக்கும் அதனுடைய மனந்திரும்பாத ஆதரவாளர்களுக்கும் என்ன ஏற்பட்டது?

10 யோவான் வெளிப்படுத்துதலை எழுதினபோது, கிறிஸ்தவ மதம் தோன்றி, 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருந்தது. ஆரம்பத்தில், யூத மதத்திலிருந்து வந்த 40 வருட இடைவிடா எதிர்ப்பை இது அனுபவித்தது. பிறகு பொ.ச. 70-ல் யூத ஒழுங்குமுறை மரண அடியை பெற்றது, அப்போது மனந்திரும்பாத யூதர்கள் அவர்களுடைய தேசிய அடையாளத்தை இழந்தார்கள், அதோடு உண்மையாகவே அவர்களுக்கு விக்கிரகமாக இருந்த எருசலேம் ஆலயத்தையும் இழந்தார்கள்.

11. சபைகளில் வளர்ந்துவரும் போக்குகளைக்குறித்து பிரதான மேய்ப்பர் எச்சரிப்பது ஏன் சமயோசிதமாயிருந்தது?

11 இருந்தபோதிலும், அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் மத்தியில் விசுவாசதுரோகம் எழும்பும் என்பதாக அப்போஸ்தலன் பவுல் முன்னறிவித்தார். மேலும் யோவான் வயோதிபமாயிருக்கும்போது விசுவாசதுரோகம் ஏற்கெனவே படிப்படியாக வளர்ந்துக்கொண்டிருந்தது என்பதாக இயேசுவின் செய்திகள் காட்டுகின்றன. ஸ்திரீயின் வித்தை கெடுப்பதற்காக சாத்தானின் முழு முயற்சிக்கு தடைக்கல்லாக செயல்பட்டவர்களில் யோவான் கடைசி நபராக இருந்தான். (2 தெசலோனிக்கேயர் 2:3-12; 2 பேதுரு 2:1-3; 2 யோவான் 7-11) எனவே, யெகோவாவுடைய பிரதான மேய்ப்பர், வளர்ந்துவரும் போக்குகளைக் குறித்து எச்சரித்து, நல் இருதயமுள்ளோர் நீதிக்காக உறுதியுடன் நிலைத்துநிற்பதற்கு உற்சாகம் கொடுத்து சபைகளிலுள்ள மூப்பர்களுக்கு எழுதுவதற்கு இது சரியான காலமாகவே இருந்தது.

12. (அ) யோவானின் நாளுக்குப் பின் வந்த நூற்றாண்டுகளில் விசுவாசதுரோகம் எவ்வாறு வளர்சிசியடைந்தது? (ஆ) கிறிஸ்தவமண்டலம் எவ்வாறு தோன்றினது?

12 பொ.ச. 96-ல் இருந்த சபைகள் இயேசுவின் செய்திகளுக்கு எப்படிப் பிரதிபலித்தது என்பது நமக்கு தெரியாது, ஆனால், யோவான் மரித்த பிற்பாடு விசுவாசதுரோகம் வேகமாக வளர்ந்ததை நாம் அறிந்திருக்கிறோம். “கிறிஸ்தவர்கள்” பைபிள் கைப்பிரதிகளில் யெகோவாவின் பெயரை உபயோகிப்பதை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக “கர்த்தர்” அல்லது “தேவன்” என்ற பதங்களை உபயோகித்தார்கள். நான்காவது நூற்றாண்டிற்குள், பொய்க் கோட்பாடாகிய திரித்துவம் சபைகளில் கொஞ்சங்கொஞ்சமாக நுழைந்திருந்தது. இதே காலப்பகுதியிலேயே ஆத்துமா அழியாமை என்ற கோட்பாடும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்தது. கடைசியில், ரோம பேரரசனாகிய கான்ஸ்டன்டீன் ‘கிறிஸ்தவ’ மதத்திற்கு தேசிய அங்கீகாரம் கொடுத்தான். இது கிறிஸ்தவமண்டலத்தின் வளர்ச்சிக்கு வழிசெய்தது. சர்ச்சும் அரசாங்கமும் ஆயிரம் ஆண்டு காலம் ஆட்சிசெய்ய ஒன்றுசேர்ந்தன. ஒரு புது பாணி “கிறிஸ்தவன்” ஆவது சுலபமாக இருந்தது. எல்லா ஜாதியாரும் தங்களுடைய பூர்வ புறமத நம்பிக்கைகளை இந்த மதத்தின் பாகமாக ஆக்கிக்கொண்டார்கள். கிறிஸ்தவமண்டலத்திலுள்ள தலைவர்களில் அநேகர் ஒடுக்குகிற கொடுங்கோல் அரசியல்வாதிகளாக மாறி அவர்களுடைய விசுவாசதுரோக கருத்துக்களை பட்டயத்தைக்கொண்டு கட்டாயப்படுத்தி நடைமுறைப்படுத்தினார்கள்.

13. பிரிவினைகளுக்கு எதிராக இயேசு எச்சரித்திருந்தபோதிலும் விசுவாசதுரோக கிறிஸ்தவர்கள் என்ன போக்கைத் தெரிந்துகொண்டனர்?

13 இயேசு ஏழு சபைகளுக்கு எழுதிய வார்த்தைகள் விசுவாசதுரோக கிறிஸ்தவர்களால் முழுவதுமாக அலட்சியம் செய்யப்பட்டன. இயேசு எபேசிய கிறிஸ்தவர்களை அவர்கள் ஆதியில் கொண்டிருந்த அன்பை திரும்ப பெறும்படியாக எச்சரித்திருந்தார். (வெளிப்படுத்துதல் 2:4) என்றபோதிலும், கிறிஸ்தவமண்டலத்து உறுப்பினர்கள், யெகோவாவின் பேரில் கொண்ட அன்பினால் பிணைக்கப்பட்டவர்களாக இராமல், கொடூரமான யுத்தங்களில் ஈடுபட்டு ஒருவரையொருவர் பயங்கரமாக துன்புறுத்தினர். (1 யோவான் 4:20) பெர்கமுவிலுள்ள சபையைப் பிரிவினைகளுக்கு எதிராக இயேசு எச்சரித்திருந்தார். இருந்தபோதிலும், இரண்டாம் நூற்றாண்டிலேயே பிரிவினைகள் தோன்றின, இன்று கிறிஸ்தவமண்டலம் ஆயிரக்கணக்கான கலவரமான பிரிவுகளையும் மதங்களையும் உடையதாயிருக்கிறது.—வெளிப்படுத்துதல் 2:15.

14. (அ) ஆவிக்குரிய விதத்தில் மரித்திருக்கும் நிலைக்கு எதிராக இயேசு எச்சரித்திருந்தபோதிலும், கிறிஸ்தவர்களென உரிமைபாராட்டியவர்கள் என்ன போக்கைத் தெரிந்துகொண்டனர்? (ஆ) விக்கிரகாராதனை மற்றும் ஒழுக்கக்கேட்டிற்கு எதிரான இயேசுவின் எச்சரிப்பை கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டியவர்கள் என்ன வழிகளில் கவனிக்கத் தவறிவிட்டனர்?

14 இயேசு சர்தை சபையை ஆவிக்குரிய விதமாக மரித்திருக்கும் நிலைக்கு எதிராக எச்சரித்திருந்தார். (வெளிப்படுத்துதல் 3:1) சர்தையில் இருந்தவர்களைப் போன்று, கிறிஸ்தவர்கள் என உரிமைபாராட்டினவர்கள், கிறிஸ்தவ கிரியைகளை விரைவில் மறந்து, அதிக முக்கியத்துவம் வாய்ந்த பிரசங்க வேலையை பணத்திற்காக வேலைசெய்யும் சிறுப்பான்மையான குருவர்க்கத்துக்கு ஒப்படைத்தனர். இயேசு தியத்தீராவிலுள்ள சபையை விக்கிரகாராதனைக்கும் வேசித்தனத்துக்கும் எதிராக எச்சரித்திருந்தார். (வெளிப்படுத்துதல் 2:20) என்றாலும், கிறிஸ்தவமண்டலம் விக்கிரகங்கள் பயன்படுத்தப்படுவதை வெளிப்படையாக அங்கீகரித்து, தேசியம் மற்றும் பொருளாசையாகிய அதிமறைமுகமான விக்கிரகாராதனையை ஊக்குவித்தது. மேலும், ஒழுக்கக்கேடு சில சமயங்களில் எதிராக பேசப்பட்டாலும், அதிக அளவில் எப்போதும் சகித்துக்கொள்ளப்பட்டே வந்திருக்கிறது.

15. ஏழு சபைகளுக்கான இயேசுவின் வார்த்தைகள் கிறிஸ்தவமண்டலத்தின் மதங்களைப் பற்றி என்ன வெளிப்படுத்துகின்றன, கிறிஸ்தவமண்டல குருவர்க்கம் என்னவாக நிரூபித்திருக்கிறது?

15 ஆகவே, இயேசு ஏழு சபைகளுக்கு சொன்ன வார்த்தைகள், யெகோவாவின் விசேஷ ஜனமாக இருப்பதில், எல்லா கிறிஸ்தவமண்டல மதங்களும் முற்றிலும் தோல்வியடைந்திருப்பதை வெளிப்படுத்துகின்றன. உண்மையில், கிறிஸ்தவமண்டல குருவர்க்கத்தினரே சாத்தானிய வித்தின் மிக அதிக முதன்மை வாய்ந்த அங்கத்தினர்களாக இருந்திருக்கின்றார். “அக்கிரமக்கார”னாக இவர்களைப்பற்றி சொல்லி, அவர்களுடைய “வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும் . . . அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும்,” என்பதாக அப்போஸ்தலன் பவுல் முன்னறிவித்தார்.—2 தெசலோனிக்கேயர் 2:9, 10.

16. (அ) யாருக்கு எதிராக கிறிஸ்தவமண்டல தலைவர்கள் தனிப்பட்ட வெறுப்பை வெளிக்காட்டினார்கள்? (ஆ) இருண்ட இடைநிலைக்காலங்களின்போது கிறிஸ்தவமண்டலத்தில் என்ன நிகழ்ந்தது? (இ) புராட்டஸ்டன்ட் கிளர்ச்சி அல்லது கிறிஸ்தவ மத சீர்திருத்த இயக்கம் கிறிஸ்தவமண்டல விசுவாசதுரோக வழிகளை மாற்றியதா?

16 மதஞ்சார்ந்த மற்றும் மதசார்பற்ற கிறிஸ்தவமண்டலத் தலைவர்கள், கடவுளுடைய மந்தையின் மேய்ப்பர்களாக உரிமைபாராட்டிக்கொண்டு, பைபிள் படிப்பை ஊக்குவிக்க முயற்சி செய்த எவரிடமும் அவர்களுடைய வேதப்பூர்வமற்ற பழக்கவழக்கங்களை வெளிப்படுத்தின எவரிடமும் தனிப்பட்ட வெறுப்பை வெளிக்காட்டினர். ஜான் ஹஸ்சும் பைபிள் மொழிபெயர்ப்பாளரான உவில்லியம் டின்டேலும் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள். இருண்ட இடைநிலைக் காலத்தின்போது, பேய்த்தனமான கத்தோலிக்க மதஞ்சார்ந்த விசாரணையின்போது விசுவாசதுரோக ஆட்சி ஓர் உச்சநிலையை அடைந்தது. சர்ச்சின் போதகங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறவர்களும் அதனுடைய அதிகாரத்தை மறுத்தவர்களும் இரக்கமற்ற முறையில் அடக்கி ஒடுக்கப்பட்டனர். சமயபேதமுள்ளவர்கள் என்றழைக்கப்பட்ட எண்ணிலடங்கா ஆயிரக்கணக்கானோர் சாகும் வரையாக சித்திரவதை செய்யப்பட்டார்கள், அல்லது மரத்தில் அறையப்பட்டு எரிக்கப்பட்டார்கள். இவ்வாறாக, கடவுளின் ஸ்திரீபோன்ற அமைப்பின் எந்த ஒரு மெய்யான வித்தும் விரைவில் நசுக்கிப்போடப்படுவதை நிச்சயப்படுத்திக்கொள்ள சாத்தான் முயற்சி செய்தான். புராட்டஸ்டன்ட் கிளர்ச்சி அல்லது கிறிஸ்தவ மத சீர்திருத்த இயக்கம் நடைபெற்றபோது (1517 முதற்கொண்டு) அநேக புராட்டஸ்டன்ட் சர்ச்சுகள் அதே வகையான சகிப்புத்தன்மையற்ற ஆவியை வெளிக்காட்டின. கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் உண்மையுள்ளவர்களாக இருக்க முயற்சி செய்தவர்களைக் கொலைசெய்வதன் மூலம் அவர்களுங்கூட இரத்தப்பழியுடையவர்களானார்கள். உண்மையாகவே, “பரிசுத்தவான்களின் இரத்தம்” மிகுதியாய் சிந்தப்பட்டது!—வெளிப்படுத்துதல் 16:6; மத்தேயு 23:33-36-ஐ ஒப்பிடுக.

வித்து சகித்துநிலைத்திருக்கிறது

17. (அ) கோதுமை மற்றும் களைகளைப் பற்றிய இயேசுவின் உவமை என்ன முன்னறிவித்தது? (ஆ) 1918-ல் என்ன நிகழ்ந்தது, என்ன நிராகரிக்கப்பட்டு என்ன நியமிக்கப்படுவதில் விளைவடைந்தது?

17 கோதுமை மற்றும் களைகளைப்பற்றிய அவருடைய உவமையில் கிறிஸ்தவமண்டலம் மேலோங்கி ஆட்சிசெய்யும்போது இருக்கப்போகிற இருண்ட காலத்தைப் பற்றி இயேசு முன்னறிவித்தார். இருந்தபோதிலும், எல்லா விசுவாசதுரோக நூற்றாண்டுகளினூடே, தனிப்பட்ட கோதுமைப் போன்ற கிறிஸ்தவர்கள், உண்மையான அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள் இருப்பார்கள். (மத்தேயு 13:24-29, 36-43) இவ்வாறாக 1914 அக்டோபரில் கர்த்தருடைய நாள் ஆரம்பித்தபோது, உண்மைக் கிறிஸ்தவர்கள் அப்போதும் பூமியிலிருந்தனர். (வெளிப்படுத்துதல் 1:10) சுமார் மூன்றரையாண்டுகளுக்குப் பிறகு, 1918-ல் யெகோவா, அவருடைய உடன்படிக்கையின் தூதனாகிய இயேசுவுடன் நியாயந்தீர்ப்பதற்காக அவருடைய ஆவிக்குரிய ஆலயத்துக்கு வந்ததாக தோன்றுகிறது. (மல்கியா 3:1; மத்தேயு 13:47-50) முடிவாக பொய் கிறிஸ்தவர்களை நிராகரித்து, எஜமான், ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையை’ அவருடைய ஆஸ்திகள் எல்லாவற்றின் மேலும் நியமிப்பதற்கு இது காலமாக இருந்தது.—மத்தேயு 7:22, 23; 24:45-47.

18. என்ன “காலம்” 1914-ல் வந்தது, அடிமை என்ன செய்வதற்கு இது காலமாயிருந்தது?

18 அங்கே சொல்லப்பட்டவற்றிலிருந்து நாம் காண்கிறவிதமாக, ஏழு சபைகளுக்கான இயேசுவின் செய்திகளில் எழுதப்பட்டுள்ள காரியங்களுக்கு இந்த அடிமை விஷேசித்த கவனம் செலுத்தவேண்டிய காலமாகவும் அது இருந்தது. உதாரணமாக, சபைகளை நியாயந்தீர்க்க தாம் வருவதைக் குறித்து இயேசு குறிப்பிட்டார். இந்த நியாயத்தீர்ப்பு 1918-ல் ஆரம்பமானது. (வெளிப்படுத்துதல் 2:5, 16, 22, 23; 3:3) “பூமியில் குடியிருக்கிறவர்களைச் சேர்க்கும்படியாகப் பூச்சக்கரத்தின் மேலெங்கும் வரப்போகிற சோதனைக் காலத்தி”லிருந்து பிலதெல்பியா சபையைப் பாதுகாப்பதாகச் சொல்கிறார். (வெளிப்படுத்துதல் 3:10, 11) கர்த்தருடைய நாளின் ஆரம்பமாகிய 1914-லிலேயே இந்தச் “சோதனைக் காலம்” வருகிறது. இதற்குப் பிறகு கிறிஸ்தவர்கள் ஸ்தாபிக்கப்பட்ட கடவுளுடைய ராஜ்யத்தினிடம் அவர்களுடைய பற்றுமாறாத்தன்மை சம்பந்தமாக சோதிக்கப்பட்டார்கள்.—மத்தேயு 24:3, 9-13-ஐ ஒப்பிடுக.

19. (அ) ஏழு சபைகள் இன்று எதைப் படமாக குறிக்கின்றன? (ஆ) அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுடன் பெரிய எண்ணிக்கையில் யார் சேர்ந்துகொண்டுள்ளனர், மேலும் இயேசுவின் ஆலோசனையும் அவர் விவரிக்கிற நிலைமைகளும் ஏன் அவர்களுக்குங்கூட பொருந்துகின்றன? (இ) முதல் நூற்றாண்டு ஏழு சபைகளுக்கான இயேசுவின் செய்திகளை நாம் எவ்வாறு நோக்க வேண்டும்?

19 இதன் காரணமாகவே, அந்தச் சபைகளுக்கான இயேசுவின் வார்த்தைகள் 1914-லிருந்து அவற்றின் பிரதான பொருத்தத்தை உடையதாக இருந்திருக்கிறது. இந்தக் காட்சியமைப்பில், ஏழு சபைகளும் கர்த்தருடைய நாளில் இருக்கிற அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களடங்கிய எல்லா சபைகளையும் படமாக குறிக்கின்றன. மேலும், கடந்த 70-க்கும் மேற்பட்ட ஆண்டுகளில், யோவான் படமாக குறித்திருக்கும் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களோடு பூமியில் பரதீஸில் என்றும் வாழும் நம்பிக்கையுடைய அதிக எண்ணிக்கையான விசுவாசிகளும் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள். யெகோவாவின் ஊழியர்கள் அனைவருக்கும் நீதி மற்றும் உண்மைத்தன்மைக்கும் ஒரே ஒரு தராதரம் மட்டுமே இருப்பதால் மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்துவின் ஆலோசனைகளும் அவருடைய சோதனையின் விளைவாக சபைகளில் அவர் கண்ட நிலைமைகளும் இவர்களுக்குங்கூட அதே சமமான வலிமையோடு பொருந்தும். (யாத்திராகமம் 12:49; கொலோசெயர் 3:11) எனவே, சிறிய ஆசியாவிலுள்ள ஏழு முதல் நூற்றாண்டு சபைகளுக்கான இயேசுவின் செய்திகள் வெறும் சரித்திரப்பூர்வமான புதுமைகள் அல்ல. அவை நம் ஒவ்வொருவருக்கும் ஜீவனையோ மரணத்தையோ குறிக்கின்றன. ஆகவே இயேசுவின் வார்த்தைகளுக்கு நாம் கவனமாக செவிகொடுப்போமாக.

[அடிக்குறிப்புகள்]

a ஏசாயா 44:6-ல் மூல எபிரெயுவில் “முதலானவரும்” “கடைசியானவரும்” என்ற வார்த்தைகளுடன் திட்டமான சுட்டிடைச் சொல் இல்லை, ஆனால் வெளிப்படுத்துதல் 1:17-ல் இயேசு தம்மைப் பற்றி விவரித்த இடத்தில் மூல கிரேக்கில் திட்டமான சுட்டிடைச்சொல் காணப்படுகிறது. எனவே, வெளிப்படுத்துதல் 1:17-ல் இலக்கணரீதியில் ஒரு பட்டப்பெயரைக் குறிப்பிடுகிறது, என்றாலும் ஏசாயா 44:6 யெகோவாவின் தேவத்துவத்தை விவரிக்கிறது.

b கிரேக்க வார்த்தையான ஏஞ்ஜிலாஸ் (agʹge·los) (உச்சரிக்கப்படுகையில் ஏஞ்சலாஸ் “anʹge·los”) என்பது “தூதுவன்” மற்றும் “தூதன்” என்று பொருள்கொள்கிறது. மல்கியா 2:7-ல் ஒரு லேவிய ஆசாரியன் “தூதுவன்” (எபிரெயுவில், மல்ஆக்கு [mal·ʼakhʹ] ) என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளார்.—துணைக்குறிப்புகளடங்கிய புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் (ஆங்கிலம்) அடிக்குறிப்பை காண்க.

[கேள்விகள்]

[பக்கம் 32-ன் பெட்டி]

சோதனை மற்றும் நியாயத்தீர்ப்பின் காலம்

சுமார் பொ.ச. 29 அக்டோபரில் இயேசு யோர்தான் நதியில் முழுக்காட்டப்பட்டு நியமிக்கப்பட்ட அரசராக அபிஷேகஞ்செய்யப்பட்டார். மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, பொ.ச. 33-ல், அவர் எருசலேம் ஆலயத்துக்கு வந்து அதைக் கள்ளர் குகையாக்கினவர்களை வெளியே துரத்தினார். தேவனுடைய வீட்டில் நியாயத்தீர்ப்பு தொடங்கும்போது 1914 அக்டோபரில் இயேசு பரலோகங்களில் சிங்காசனத்தில் அமர்த்தப்பட்ட சமயம் முதல், கிறிஸ்தவர்கள் என்று உரிமைபாராட்டியவர்களைச் சோதிப்பதற்கு வரும் வரையாக உள்ள மூன்றரை ஆண்டுகள் இதற்கு ஓர் இணைப்பொருத்தமாயிருப்பதாக தோன்றுகிறது. (மத்தேயு 21:12, 13; 1 பேதுரு 4:17) யெகோவாவுடைய ஜனங்களின் ராஜ்ய நடவடிக்கை 1918-ன் ஆரம்பத்தில் மிகுந்த எதிர்ப்பை எதிர்ப்பட்டது. அது பூமி முழுவதும் ஒரு சோதனைக் காலமாக இருந்தது, பயந்திருந்தவர்கள் பிரித்தெடுக்கப்பட்டார்கள். மே 1918-ல் கிறிஸ்தவமண்டல குருமார் உவாட்ச் டவர் சொஸையிட்டி அலுவலர்களைச் சிறைப்படுத்தும்படி தூண்டினர். ஆனால் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு இவர்கள் விடுதலையாக்கப்பட்டனர். பின்னர், அவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. சோதிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட கடவுளுடைய ஜனங்களின் அமைப்பு 1919-லிருந்து கிறிஸ்து இயேசுவைக்கொண்ட யெகோவாவின் ராஜ்யமே மனிதவர்க்கத்தினருக்கான நம்பிக்கை என்பதை அறிவிப்பதில் வைராக்கியத்துடன் முன்னோக்கிச் சென்றது.—மல்கியா 3:1-3.

இயேசு 1918-ல் சோதனை செய்ய ஆரம்பித்தபோது, கிறிஸ்தவமண்டல குருவர்க்கம், சந்தேகமில்லாமல், பாதகமான நியாயத்தீர்ப்பைப் பெற்றது. கடவுளுடைய ஜனங்களுக்கு எதிராக துன்புறுத்தலை தூண்டிவிட்டதோடு மட்டுமல்லாமல், முதல் உலக யுத்தத்தின்போது போரிட்டுவந்த தேசங்களை ஆதரிப்பதன் மூலமாக அவர்கள் பெரும் இரத்தப்பழிக்குள்ளானார்கள். (வெளிப்படுத்துதல் 18:21, 24) அந்தக் குருமார், பிற்பாடு தங்களுடைய நம்பிக்கையை மனிதனால் உண்டாக்கப்பட்ட சர்வதேச சங்கத்தின்மீது வைத்தார்கள். முழு உலக பொய் மதப் பேரரசுடன், 1919-லேயே கிறிஸ்தவமண்டலம் கடவுளுடைய தயவிலிருந்து முழுவதுமாக வீழ்ந்த நிலையில் இருந்தது.

[பக்கம் 28, 29-ன் வரைப்படம்]

எபேசு

சிமிர்னா

பெர்கமு

தியத்தீரா

சர்தை

பிலெதெல்பியா

லவோதிக்கேயா

[பக்கம் 31-ன் படம்]

பைபிளை மொழிபெயர்த்த ஆட்களையும் அதை வாசித்தவர்களையும் அல்லது அதை வைத்திருந்தவர்களையும்கூட துன்புறுத்தி கொலை செய்வதன் மூலம் கிறிஸ்தவமண்டல மதம் பெரும் இரத்தப்பழிக்கு உள்ளானது