Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாபிலோனின் முடிவைக் குறித்து துக்கித்தலும் களிகூருதலும்

பாபிலோனின் முடிவைக் குறித்து துக்கித்தலும் களிகூருதலும்

அதிகாரம் 37

பாபிலோனின் முடிவைக் குறித்து துக்கித்தலும் களிகூருதலும்

1. மகா பாபிலோனின் திடீர் அழிவுக்கு ‘பூமியின் ராஜாக்கள்’ எவ்வாறு பிரதிபலிப்பார்கள்?

 பாபிலோனின் முடிவு யெகோவாவின் மக்களுக்கு நற்செய்தி, ஆனால் அதை தேசங்கள் எவ்வாறு நோக்குகின்றன? யோவான் இவ்வாறு நமக்குச் சொல்கிறார்: “அவளுடனே வேசித்தனஞ்செய்து செல்வச்செருக்காய் வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் அவள் வேகிறதினால் உண்டான புகையைக் காணும்போது அவளுக்காக அழுது புலம்பி, அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! [மிகவும் கொடியது, மிகவும் கொடியது, NW] பாபிலோன், மகா நகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள்.”—வெளிப்படுத்துதல் 18:9, 10.

2. (அ) மகா பாபிலோனை சிவப்புநிற மூர்க்க மிருகத்தின் பத்துக் கொம்புகள் அழித்தபோதிலும் “பூமியின் ராஜாக்கள்” அவளுடைய முடிவைக்குறித்து ஏன் துக்கிக்கின்றனர்? (ஆ) துயரம்நிறைந்த ராஜாக்கள் ஏன் பாழாக்கப்பட்ட பட்டணத்திலிருந்து தூரத்தில் நிற்கின்றனர்?

2 சிவப்புநிற மூர்க்க மிருகத்தின் அடையாள அர்த்தமுள்ள பத்துக் கொம்புகள் பாபிலோனை அழித்தது என்ற உண்மையை நோக்குமிடத்து, தேசங்களின் இந்தப் பிரதிபலிப்பு ஆச்சரியமானதாகத் தோன்றலாம். (வெளிப்படுத்துதல் 17:16) ஆனால் பாபிலோன் அழிந்தபிறகு, மக்களை அமைதிப்படுத்தி, கீழ்ப்பட்டிருக்கும்படி செய்வதில் அவள் அவர்களுக்கு எவ்வளவு பயனுள்ளவளாக இருந்தாள் என்பதை இறுதியில் “பூமியின் ராஜாக்கள்” உணருவார்கள். குருமார் யுத்தங்களைப் பரிசுத்தமானவை என அறிவித்து, படைக்கு ஆட்களைச் சேர்க்கும் பிரதிநிதிகளாக செயல்பட்டு, யுத்தகளத்திற்கு போகும்படி இளைஞரிடம் பிரசங்கித்திருக்கின்றனர். பொது மக்களை ஒடுக்குவதில் ஊழல்நிறைந்த ஆட்சியாளர்கள் மதத்தின் பின்நின்று செயல்படுவதற்கு மதம் ஒரு பரிசுத்த திரையை அளித்தது. (ஒப்பிட்டுப் பாருங்கள்: எரேமியா 5:30, 31; மத்தேயு 23:27, 28.) என்றபோதிலும், இப்போது இந்தத் துயரம்நிறைந்த ராஜாக்கள் பாழாக்கப்பட்ட பட்டணத்திலிருந்து தூரத்தில் நிற்பதைக் கவனியுங்கள். அவளுக்கு உதவிசெய்யும்படி அவர்கள் போதியளவு அருகில் வருவதில்லை. அவள் அழிவதைக் கண்டு கவலைப்படுகின்றனர், ஆனால் வரும் இடர்களை ஏற்றுக்கொண்டு அவள் சார்பாக செயலில் ஈடுபடுமளவிற்கு அவர்கள் கவலைப்படவில்லை.

வர்த்தகர்கள் அழுதுபுலம்புகிறார்கள்

3. யாரும்கூட மகா பாபிலோனின் அழிவைக்குறித்து வருத்தப்படுகிறார்கள், இதற்கு என்ன காரணங்களை யோவான் கொடுக்கிறார்?

3 மகா பாபிலோனின் அழிவைக்குறித்து வருத்தப்படுபவர்கள் பூமியின் ராஜாக்கள் மட்டுமே அல்ல. “பூமியின் வர்த்தகர்களும் தங்கள் தங்கள் சரக்குகளாகிய பொன்னையும், வெள்ளியையும், இரத்தினங்களையும், முத்துக்களையும், சல்லாவையும், இரத்தாம்பரத்தையும், பட்டாடைகளையும், சிவப்பாடைகளையும், சகலவித வாசனைக் கட்டைகளையும், தந்தத்தினால் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும், விலையுயர்ந்த மரத்தினாலும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் வெள்ளைக் கல்லினாலும் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும், இலவங்கப்பட்டையையும், தூபவர்க்கங்களையும், தைலங்களையும், சாம்பிராணியையும், திராட்சரசத்தையும், எண்ணெயையும், மெல்லிய மாவையும், கோதுமையையும், மாடுகளையும், ஆடுகளையும், குதிரைகளையும், இரதங்களையும், அடிமைகளையும், மனுஷருடைய ஆத்துமாக்களையும் இனிக் கொள்வாரில்லாதபடியால், அவளுக்காக அழுது புலம்புவார்கள். உன் ஆத்துமா இச்சித்த பழவர்க்கங்கள் உன்னைவிட்டு [மகா பாபிலோனைவிட்டு, NW] நீங்கிப்போயின; கொழுமையானவைகளும் சம்பிரமமானவைகளும் உன்னைவிட்டு நீங்கிப்போயின; நீ அவைகளை இனிக் காண்பதில்லை.”—வெளிப்படுத்துதல் 18:11-14.

4. ‘பூமியின் வர்த்தகர்கள்’ ஏன் மகா பாபிலோனின் முடிவுக்காக அழுது புலம்புகிறார்கள்?

4 ஆம், மகா பாபிலோன் செல்வந்த வர்த்தகர்களின் நெருங்கிய தோழியும் நல்ல வாடிக்கையாளுமாயிருந்தாள். உதாரணமாக, கிறிஸ்தவமண்டல துறவிமாடங்களும் கன்னிமாடங்களும் சர்ச்சுகளும் கடந்த நூற்றாண்டுகளில் மிகப் பெரிய அளவில் பொன்னையும், வெள்ளியையும், இரத்தினங்களையும், விலையுயர்ந்த மரங்களையும், மற்ற வகைப் பொருளாதார செல்வங்களையும் முயன்று பெற்றிருக்கின்றன. மேலுமாக, ஊதாரித்தனமாக களியாட்டங்களுக்காக வாங்குவதிலும், குடிவெறி சிற்றின்பக் கேளிக்கைக் கூத்தாட்டங்களோடுகூட கிறிஸ்துவைக் கனவீனப்படுத்தும் கிறிஸ்மஸ் மற்றும் பரிசுத்த நாட்கள் என அழைக்கப்படும் மற்ற கொண்டாட்டங்களுக்கும் மதத்தின் ஆசீர்வாதம் கொடுக்கப்பட்டிருக்கின்றன. தூர தேசங்களுக்குக் கிறிஸ்தவமண்டல மிஷனரிகள் சென்றதன்மூலம் இந்த உலகத்தின் ‘வர்த்தகர்களுக்குப்’ புதிய சந்தைக்கூடங்களைத் திறந்துவைத்திருக்கின்றனர். ஜப்பானில், 17-ம் நூற்றாண்டில், வியாபாரிகளுடன் வந்த கத்தோலிக்க சமயக் கோட்பாடுகள் நிலப்பண்ணைமுறை சார்ந்த யுத்தங்களில் ஈடுபடுபவர்களாக இருந்தனர். ஒசாக்கா காப்பரண் மாளிகை சுவர்களின் கீழ் நடந்த இறுதியான யுத்தத்தைக் குறித்து அறிக்கை செய்வதாய் தி என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இவ்வாறு குறிப்பிடுகிறது: “சிலுவையும் இரட்சகரின் மற்றும் ஸ்பெய்னின் புனிதக் காப்பாளரான ஜேம்ஸின் உருவப்படங்களும் முனைப்பாகத் தீட்டப்பட்ட கொடிகளைக் கொண்டிருக்கும் பகைவர்களுக்கெதிராக தாங்கள் சண்டையிடுவதாக டோக்குகாவா படைகள் தங்களைக் கண்டார்கள்.” வெற்றிபெற்ற தன்னலக்கும்பல் துன்புறுத்தி, உண்மையிலேயே கத்தோலிக்க சமயக்கோட்பாட்டை அந்தத் தேசத்திலிருந்து துடைத்தழித்தனர். இன்று உலக காரியங்களில் சர்ச்சுகளின் பங்கெடுத்தல் அதேபோன்று எந்த ஆசீர்வாதத்தையும் அவளுக்குக் கொண்டுவராது.

5. (அ) “வர்த்தகர்க”ளின் துக்கிப்பை வானத்திலிருந்துண்டான சத்தம் மேலுமாக எவ்வாறு விவரிக்கிறது? (ஆ) வர்த்தகர்களுங்கூட ஏன் “தூரத்திலே நின்று”கொண்டிருக்கின்றனர்?

5 வானத்திலிருந்துண்டான சத்தம் மேலுமாக இவ்வாறு சொல்கிறது: “இப்படிப்பட்டவைகளைக் கொண்டு வர்த்தகம்பண்ணி, அவளால் ஐசுவரியவான்களானவர்கள் அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று; ஐயையோ! [மிகவும் கொடியது, மிகவும் கொடியது, NW] சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே! என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள்.” (வெளிப்படுத்துதல் 18:15, 16) மகா பாபிலோனின் அழிவினால், அந்த வியாபார கூட்டாளியின் இழப்பினால், ‘வர்த்தகர்கள்’ துக்கிக்கிறார்கள். உண்மையில், இது ‘மிகவும் கொடியது, மிகவும் கொடிய’தாக அவர்களுக்கிருக்கிறது. ஆனாலும், அவர்களுடைய துக்கிப்பிற்குக் காரணம் முற்றிலும் தன்னலமானதாக இருப்பதையும், அவர்கள்—ராஜாக்களைப் போலவே—“தூரத்திலே நின்று”கொண்டிருக்கின்றனர் என்பதையும் கவனியுங்கள். மகா பாபிலோனுக்கு எந்த உதவியும் செய்யும்படி அவர்கள் போதியளவு அருகில் வருவதில்லை.

6. வானத்திலிருந்துண்டான சத்தம் எவ்வாறு மாலுமிகள் மற்றும் கப்பலாட்களின் துக்கிப்பை விவரிக்கிறது, அவர்கள் ஏன் அழுகிறார்கள்?

6 பதிவு மேலுமாக சொல்கிறது: “மாலுமிகள் யாவரும், கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள் யாவரும், கப்பலாட்களும், சமுத்திரத்திலே தொழில்செய்கிற யாவரும் தூரத்திலே நின்று, அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கொப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு, தங்கள் தலைகள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு: ஐயையோ, [மிகவும் கொடியது, மிகவும் கொடியது, NW] மகா நகரமே! சமுத்திரத்திலே கப்பல்களையுடைய அனைவரும் இவளுடைய உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானார்களே! ஒரு நாழிகையிலே இவள் பாழாய்ப்போனாளே! என்று அழுது துக்கித்து ஓலமிடுவார்கள்.” (வெளிப்படுத்துதல் 18:17-19) பூர்வ பாபிலோன் வர்த்தக நகரமாக இருந்தது, பெரிய கப்பற்படையைக் கொண்டிருந்தது. இதேபோன்று, மகா பாபிலோன் தன் ஜனங்களாகிய “திரளான தண்ணீர்க”ளின்மூலம் மிகுதியாக வியாபாரம் செய்கிறாள். இது அவளுடைய மதசம்பந்தப்பட்ட பிரஜைகளுக்கு வேலைவாய்ப்பை அளிக்கிறது. இவர்களுக்கு மகா பாபிலோனின் அழிவு எப்படிப்பட்ட பொருளாதார இழப்பாக இருக்கும்! அவளைப் போன்ற வாழ்க்கைப் பிழைப்புக்கான மற்றொரு ஊற்றுமூலம் இனி ஒருபோதுமிராது.

அவளுடைய அழிவைக்குறித்துக் களிகூருதல்

7, 8. வானத்திலிருந்து வந்த சத்தம் மகா பாபிலோனைக் குறித்த அதன் செய்தியை எவ்வாறு உச்சக்கட்டமாக அறிவிக்கிறது, அந்த வார்த்தைகளுக்கு யார் செவிசாய்ப்பார்கள்?

7 மேதிய-பெர்சியர்களால் பூர்வ பாபிலோன் கவிழ்க்கப்பட்டபோது எரேமியா தீர்க்கதரிசனமாக இவ்வாறு சொன்னார்: “வானமும் பூமியும் அவைகளிலுள்ள யாவும் பாபிலோன்மேல் கெம்பீரிக்கும்.” (எரேமியா 51:48) மகா பாபிலோன் அழிக்கப்படும்போது வானத்திலிருந்து வந்த சத்தம் மகா பாபிலோனைக் குறித்த அதன் செய்தியை உச்சக்கட்டமாக அறிவிக்கிறது: “பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்கள் நிமித்தம் தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே!” (வெளிப்படுத்துதல் 18:20) இப்போது உயிர்த்தெழுப்பப்பட்டு 24 மூப்பர்களின் ஏற்பாட்டில் தங்கள் நிலைகளை ஏற்றிருக்கும் அப்போஸ்தலரும் பூர்வ கிறிஸ்தவ தீர்க்கதரிசிகளும் யெகோவாவும் தேவதூதர்களும் கடவுளுடைய பூர்வ எதிரியின் அழிவைக் காண்பதில் சந்தோஷப்படுவார்கள்.—சங்கீதம் 97:8-12-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.

8 உண்மையில் எல்லா “பரிசுத்தவான்”களும்—பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட்டிருந்தாலும் அல்லது பூமியில் வாழ்ந்துகொண்டிருந்தாலும்—வேறே ஆடுகளின் திரள்கூட்டமாகிய அவர்கள் கூட்டாளிகளும் கெம்பீர சத்தமிடுவார்கள். குறித்த காலத்தில், பூர்வத்தின் உண்மையுள்ள மனிதர்கள் அனைவரும் புதிய ஒழுங்குமுறையில் உயிர்த்தெழுப்பப்படுவார்கள், அவர்களும்கூட களிகூருதலில் சேர்ந்துகொள்வார்கள். கடவுளுடைய ஜனங்கள் தாமேயும் தங்களுடைய பொய் மதத் துன்புறுத்துவோரைப் பழிவாங்க முயற்சி செய்யவில்லை. அவர்கள் யெகோவாவின் வார்த்தைகளை நினைவுகூர்ந்தனர்: “பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் [யெகோவா, NW] சொல்லுகிறார்.” (ரோமர் 12:19; உபாகமம் 32:35, 41-43) யெகோவா இப்போது பதிற்செய்திருக்கிறார். சிந்தப்பட்ட அனைத்து இரத்தத்திற்காகவும் மகா பாபிலோன் பழிவாங்கப்பட்டதாயிருக்கும்.

பெரிய ஏந்திரக்கல்லை எறிதல்

9, 10. (அ) பலமுள்ள தூதன் இப்போது என்ன செய்கிறார் மற்றும் சொல்கிறார்? (ஆ) வெளிப்படுத்துதல் 18:21-ல் பலமுள்ள தூதன் நடப்பித்ததைப்போன்ற என்ன செயல் எரேமியாவின் காலத்தில் நடந்தது, அது என்ன உறுதியளித்தது? (இ) பலமுள்ள தூதன் செய்ததை யோவான் கண்டது எதை உறுதியளிக்கிறது?

9 அடுத்து யோவான் காண்பது மகா பாபிலோனுக்கான யெகோவாவின் நியாயத்தீர்ப்பு இறுதியானது என்பதை உறுதிப்படுத்துகிறது: “பலமுள்ள தூதனொருவன் பெரிய ஏந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகா நகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒருபோதும் காணப்படாமற்போகும் [என்றார்].” (வெளிப்படுத்துதல் 18:21) எரேமியாவின் காலத்தில், வல்லமைவாய்ந்த தீர்க்கதரிசன அர்த்தமுள்ள இதேபோன்ற செயல் நடப்பிக்கப்பட்டது. “பாபிலோன்மேல் வரும் எல்லாத் தீங்கையும்,” ஒரு புத்தகத்தில் எழுதும்படியாக எரேமியா ஆவியால் ஏவப்பட்டார். அந்தப் புத்தகத்தை செராயாவின் கையில் கொடுத்து பாபிலோனுக்கு அவரைப் போகும்படியாக சொன்னார். அங்கே எரேமியாவின் கட்டளைகளுக்கிணங்க அந்த நகரத்திற்கு எதிரான உறுதிமொழியை செராயா இவ்வாறு வாசித்தார்: “கர்த்தாவே, இந்த ஸ்தலத்திலே மனுஷனும் மிருகமுமுதலாய்த் தங்கித் தரிக்காதபடிக்கும், அது என்றென்றைக்கும் பாழாய்க் கிடக்கும்படிக்கும், அதை அழித்துப்போடுவேன் என்று தேவரீர் அதைக்குறித்து உரைத்தீர்.” பின்பு செராயா அந்தப் புத்தகத்துடன் ஒரு கல்லைக் கட்டி அதை ஐப்பிராத்து ஆற்றிலே எறிந்துவிட்டு இப்படியாக சொல்கிறார்: “இப்படியே பாபிலோன் முழுகிப்போகும், நான் அதின்மேல் வரப்பண்ணும் தீங்கினால் எழுந்திருக்கமாட்டாமல் இளைத்து விழுவார்கள்.”—எரேமியா 51:59-64.

10 புத்தகத்துடன் ஒரு கல்லைக் கட்டி ஆற்றில் எறிவதுதானே பாபிலோன் ஒருபோதும் மீண்டெழாதபடி புறக்கணிக்கப்பட்ட நிலைக்குத் தள்ளப்படும் என்பதற்கு ஓர் உறுதியை அளித்தது. இதேபோன்ற ஒரு செயலை பலமுள்ள தூதன் செய்வதை அப்போஸ்தலன் யோவான் காண்பது மகா பாபிலோனிடமான யெகோவாவின் நோக்கம் அதேவிதமாக நிறைவேற்றப்படும் என்பதற்கு பலமான உறுதியை அளிக்கிறது. பூர்வ பாபிலோனின் முற்றிலும் அழிந்த நிலை வெகு சமீபத்தில் பொய் மதத்திற்கு என்ன ஏற்படும் என்பதை இன்று பலமாக உறுதிப்படுத்துகிறது.

11, 12. (அ) இப்போது அந்தப் பலமுள்ள தூதன் மகா பாபிலோனை நோக்கி எப்படிப் பேசுகிறார்? (ஆ) விசுவாசதுரோக எருசலேமைக் குறித்து எரேமியா எவ்வாறு தீர்க்கதரிசனமுரைத்தார், நம்முடைய நாளுக்கு அது எதைக் குறித்தது?

11 இப்போது அந்தப் பலமுள்ள தூதன் மகா பாபிலோனை நோக்கி இப்படிப் பேசுகிறார்: “சுரமண்டலக்காரரும், கீதவாத்தியக்காரரும், நாகசுரக்காரரும், எக்காளக்காரருமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை; எந்தத் தொழிலாளியும் இனி உன்னிடத்தில் காணப்படுவதுமில்லை; ஏந்திரசத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணவாளனும் மணவாட்டியுமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. உன் வர்த்தகர் பூமியில் பெரியோர்களாயிருந்தார்களே; உன் சூனியத்தால் எல்லா ஜாதிகளும் மோசம்போனார்களே.”—வெளிப்படுத்துதல் 18:22, 23.

12 ஒப்பிடக்கூடிய வார்த்தைகளில் விசுவாசதுரோக எருசலேமைக் குறித்து எரேமியா தீர்க்கதரிசனமுரைத்தார்: “மகிழ்ச்சியின் சத்தத்தையும், சந்தோஷத்தின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும், ஏந்திரத்தின் சத்தத்தையும் விளக்கின் வெளிச்சத்தையும் அவர்களிலிருந்து நீங்கப்பண்ணுவேன் . . . இந்தத் தேசமெல்லாம் வனாந்தரமும் பாழுமாகும்.” (எரேமியா 25:10, 11) மகா பாபிலோனின் பிரதான பாகமாகிய கிறிஸ்தவமண்டலம் ஜீவனற்ற பாழ்நிலைக்குட்படும், இது பொ.ச.மு. 607-ல் எருசலேமின் பாழாக்கப்பட்ட நிலையுடன் தெளிவாகவே நுட்பமாக விளக்கிக்காட்டப்படுகிறது. ஒருகாலத்தில் கவலையில்லாமலும் தினந்தோறும் எழும் ஆரவார சத்தத்திலும் களிகூர்ந்துகொண்டிருந்த கிறிஸ்தவமண்டலம் கைப்பற்றப்பட்டதாகவும் கைவிடப்பட்டதாகவும் தன்னைக் காண்பாள்.

13. என்ன திடீர் மாற்றம் மகா பாபிலோனை மேற்கொள்கிறது, அவளுடைய “வர்த்தகர்” மீது என்ன பாதிப்பை உண்டுபண்ணுகிறது?

13 உண்மையாகவே, இங்கே தேவதூதன் யோவானுக்குச் சொல்கிற விதமாக, மகா பாபிலோனின் சகலமும் வல்லமைவாய்ந்த, சர்வதேச பேரரசிலிருந்து வெறுமையான, பாலைவனத்தைப்போன்ற பாழ்நிலமாகும். உயர்மட்டத்திலுள்ள பெருஞ்செல்வந்தர்கள் உட்பட அவளுடைய “வர்த்தகர்” தங்களுடைய சொந்த அனுகூலத்திற்காக அல்லது மறைவிடமாக அவளுடைய மதத்தைப் பயன்படுத்தினார்கள், மதகுருமார்கள் அவர்களுடனேகூட பகட்டானநிலையைப் பகிர்ந்துகொள்வதை ஆதாயமாகக் கண்டார்கள். ஆனால் இந்த வர்த்தகர் இனிமேலும் மகா பாபிலோனை தங்களுடைய உடந்தையாளாகக் கொண்டிருக்கமாட்டார்கள். அவளுடைய ஆன்மீகச் சார்பான மதச் செயல்களால் பூமியின் தேசங்களை அவள் ஒருபோதும் மோசம்போக்க முடியாது.

திகைக்க வைக்கும் இரத்தப்பழி

14. கடுமையான யெகோவாவின் நியாயத்தீர்ப்புக்குப் பலமுள்ள தூதன் என்ன காரணத்தைக் கொடுக்கிறார், இயேசு பூமியிலிருக்கையில் அதேபோன்ற எதைக் கூறினார்?

14 இறுதியாக, பலமுள்ள தேவதூதன் இவ்வளவு கடுமையாக மகா பாபிலோனை ஏன் யெகோவா நியாயந்தீர்க்கிறார் என்பதைச் சொல்கிறார். தேவதூதன் இவ்வாறு சொல்கிறார்: “தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது.” (வெளிப்படுத்துதல் 18:24) பூமியிலிருக்கையில் இயேசு எருசலேமிலிருந்த மதத்தலைவர்களிடம் ‘நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழிக்கு’ அவர்கள் பொறுப்புள்ளவர்கள் என சொன்னார். அப்படியே அந்தக் கோணலான சந்ததி பொ.ச. 70-ல் அழிக்கப்பட்டது. (மத்தேயு 23:35-38) இன்று, கடவுளுடைய ஊழியர்களைத் துன்புறுத்துவதால் மற்றொரு மதவாதிகள் ஆகிய சந்ததி இரத்தப்பழியுடையதாய் இருக்கிறது.

15. நாசி ஜெர்மனியிலுள்ள கத்தோலிக்க சர்ச் இரண்டு குற்றங்களில் எப்படி இரத்தப்பழியுடையதாய் இருந்தது?

15 கத்தோலிக்க சர்ச்சும் நாசி ஜெர்மனியும் (ஆங்கிலம்) என்ற தன்னுடைய புத்தகத்தில் குன்டர் லீ இவ்வாறு எழுதுகிறார்: “ஏப்ரல் 13 [1933]-ல் பவாரியாவில் யெகோவாவின் சாட்சிகள் ஒடுக்கப்பட்டபோது, கல்வி மற்றும் மதத்தின் அமைச்சகம் விலக்கிய மதத்தை இன்னும் பின்பற்றும் அந்த மதத்தின் அங்கத்தினர்கள் யாரேனும் இருந்தால் அறிக்கைசெய்யும்படி கொடுத்த பொறுப்பைக்கூட சர்ச் ஏற்றுக்கொண்டது.” இவ்வாறு ஆயிரக்கணக்கான சாட்சிகளைச் சித்திரவதை முகாம்களுக்கு அனுப்புவதன்மூலம் கத்தோலிக்க சர்ச் பொறுப்பைப் பகிர்ந்துகொள்கிறது; கொலைசெய்யப்பட்ட நூற்றுக்கணக்கான சாட்சிகளின் ஜீவ இரத்தத்தால் அவற்றின் கைகள் கறைபடிந்திருக்கிறது. வில்ஹெம் குசரோ போன்ற இளம் சாட்சிகள் துப்பாக்கியால் சுடும் காவற்துறை படையினரின் கைகளில் தைரியமாக மரிக்கமுடியும் எனக் காண்பித்தனர், மனசாட்சிக்குக் கட்டுப்பட்ட எதிர்ப்பாளர்களுக்கு இந்தத் துப்பாக்கியால் சுடும் காவற்துறை படை அளவுக்கு அதிகமாக நல்லது என்று ஹிட்லர் தீர்மானித்தார்; ஆகவே, வில்ஹெமின் சகோதரன் உவொல்ஃப்கேங் 20 வயதாயிருக்கையில் தலைவெட்டு பொறியால் மரித்தார். அதேசமயத்தில், தங்கள் தாய்நாட்டின் படையிலே மரிக்கும்படி கத்தோலிக்கச் சர்ச் இளம் ஜெர்மானிய கத்தோலிக்கர்களை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்தது. சர்ச்சின் இரத்தப்பழி தெளிவாக காணும்படி இருக்கிறது!

16, 17. (அ) மகா பாபிலோன் என்ன இரத்தப்பழிக்குக் குற்றஞ்சாட்டப்படவேண்டும், நாசியின் திட்டமிட்ட ரஷ்ய நாட்டு யூதர் படுகொலைக்கு வாடிகன் எப்படி இரத்தப்பழிக்குள்ளாகியது? (ஆ) தற்காலத்தில் நூற்றுக்கணக்கான யுத்தங்களில் லட்சக்கணக்கான ஆட்கள் கொலைசெய்யப்பட்டதற்கு என்ன ஒரு வழியில் பொய் மதம் குற்றஞ்சாட்டப்படவேண்டும்?

16 என்றபோதிலும், “பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய” இரத்தத்திற்காகவும் மகா பாபிலோன் குற்றஞ்சாட்டப்பட வேண்டும் என்று தீர்க்கதரிசனம் சொல்லுகிறது. அது நவீன காலங்களில் உண்மையாகவே இருக்கிறது. உதாரணமாக, ஜெர்மனியில் ஹிட்லர் பதவிக்குவர கத்தோலிக்கரின் உட்சூழ்ச்சி உதவியதால், நாசியின் திட்டமிட்ட ரஷ்ய நாட்டு யூதர் படுகொலையில் மரித்த அறுபது லட்சம் யூதர்களின் கொடுமையான இரத்தப்பழியில் வாடிகன் பங்கேற்கிறது. மேலுமாக, நம் நாட்களில் நூற்றுக்கணக்கான யுத்தங்களில் பத்து கோடிக்கும் மேலான ஆட்கள் கொலைசெய்யப்பட்டிருக்கின்றனர். இதன் சம்பந்தமாக பொய்மதம் குற்றஞ்சாட்டப்படவேண்டுமா? ஆம், இரண்டு வழிகளில்.

17 ஒரு வழியானது அநேக யுத்தங்கள் மத வேறுபாடுகளுடன் சம்பந்தப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, 1946-48-ல் இந்தியாவில் நடந்த முகமதியர்களுக்கும் இந்துக்களுக்குமிடையேயான வன்முறைச் செயல் மதத்தால் தூண்டுவிக்கப்பட்டதே. நூறாயிரக்கணக்கான உயிர்கள் இழக்கப்பட்டன. ஈரானுக்கும் ஈராக்குக்கும் இடையே 1980-களின் பத்தாண்டுகளில் நடந்த சண்டை மத உட்பிரிவு சார்ந்த வேறுபாடுகளுடன் சம்பந்தப்பட்டது, இதில் நூறாயிரக்கணக்கானவர்கள் மரித்தனர். வட அயர்லாந்தில் கத்தோலிக்கருக்கும் புராட்டஸ்டன்டினருக்கும் இடையேயான வன்முறைச் செயல் ஆயிரக்கணக்கான உயிர்களை அழித்தது. இந்தச் செயல் எல்லையை சுற்றாய்வு செய்கையில் பத்திரிகை பத்தி எழுத்தாளர் C. L. சுல்ஸ்பெக்கர் 1976-ல் இவ்வாறு சொன்னார்: “பூமியைச் சுற்றிலும் இப்போது நடந்துகொண்டிருக்கும் ஒருவேளை பாதியளவான அல்லது அதற்குமதிகமான யுத்தங்கள் வெளிப்படையாகவே மத சண்டைகளாகவோ மதப் போராட்டத்தில் உட்பட்டதாகவோ இருப்பது துயரார்ந்த உண்மையாகும்.” மகா பாபிலோனின் கொந்தளிப்பான சரித்திரம் முழுவதிலும் இதுவே உண்மையாயிருக்கிறது.

18. இந்த உலக மதங்கள் இரத்தப்பழியுடையதாய் இருப்பதற்கு இரண்டாவது வழி என்ன?

18 இரண்டாவது வழி என்ன? யெகோவாவின் நோக்குநிலையில் அவருடைய ஊழியர்களுக்கான யெகோவாவின் தேவைகளைப் பற்றிய சத்தியத்தை இவ்வுலக மதங்கள் அவற்றைப் பின்பற்றுபவர்களுக்கு நம்பத்தக்கவிதத்தில் கற்பிக்காததால், அவை இரத்தக்கறை படிந்ததாக இருக்கின்றன. கடவுளுடைய மெய் வணக்கத்தார் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றவேண்டுமென்றும் மற்றவர்கள் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களிடம் அன்பு காட்டவேண்டுமென்றும் அவர்கள் நம்பத்தக்க விதத்தில் ஜனங்களுக்குக் கற்பிக்கவில்லை. (மீகா 4:3, 5; யோவான் 13:34, 35; அப்போஸ்தலர் 10:34, 35; 1 யோவான் 3:10-12) மகா பாபிலோனை உண்டுபண்ணும் மதங்கள் இந்தக் காரியங்களைக் கற்றுக்கொடுக்காததால் அதைப் பின்பற்றுபவர்கள் சர்வதேச யுத்தங்கள் என்னும் கடும்சுழற்சியினிடமாக இழுக்கப்பட்டிருக்கின்றனர். 20-ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் கிறிஸ்தவமண்டலத்தில் ஆரம்பித்த, உடன் மதவாதிகள் ஒருவரையொருவர் கொலை செய்வதில் விளைவடைந்த இரண்டு உலக யுத்தங்களிலும் இது எவ்வளவு தெளிவாயிருக்கிறது! கிறிஸ்தவர்களென உரிமைபாராட்டும் அனைவரும் பைபிள் நியமங்களைப் பின்பற்றியிருந்தால் அந்த யுத்தங்கள் ஒருபோதும் நிகழ்ந்திருக்காது.

19. மகா பாபிலோன் என்ன திகைக்க வைக்கும் இரத்தப்பழியைக் கொண்டிருக்கிறது?

19 யெகோவா இந்த எல்லா இரத்தஞ்சிந்துதலுக்குமான குற்றத்தை மகா பாபிலோனின் பாதத்தில் வைக்கிறார். மதத்தலைவர்கள், முக்கியமாக கிறிஸ்தவமண்டலத்திலிருப்பவர்கள், பைபிள் சத்தியத்தைத் தங்கள் ஜனங்களுக்குக் கற்பித்திருப்பார்களேயானால் இப்படிப்பட்ட இரத்தம் சிந்துதல் ஏற்பட்டிருக்காது. அப்படியென்றால், உண்மையிலேயே, நேரடியாகவோ மறைமுகமாகவோ மகா பாபிலோன்—மகா வேசியும் பொய் மத உலகப் பேரரசும்—துன்புறுத்திக் கொலை செய்த ‘தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தத்திற்காக’ மட்டுமல்லாமல் ‘பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தத்திற்காகவும்’ யெகோவாவிடம் பதில் சொல்லவேண்டும். மகா பாபிலோன் உண்மையிலேயே திகைக்க வைக்கும் இரத்தப்பழியைக் கொண்டிருக்கிறது. அவளுடைய முடிவான அழிவு சம்பவிக்கும்போது நல்ல விடுதலையே!

[கேள்விகள்]

[பக்கம் 270-ன் பெட்டி]

உடன்படுதலின் விலை

குன்டர் லீ கத்தோலிக்க சர்ச்சும் நாசி ஜெர்மனியும் என்ற தன்னுடைய புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார்: “ஜெர்மன் கத்தோலிக்கச் சமயம் நாசி ஆட்சிமுறையை எதிர்க்கும் கொள்கையை உறுதியான பின்பற்றியிருந்தால் உலக சரித்திரம் வித்தியாசமான போக்கில் சென்றிருக்கும். இந்தப் போராட்டம் ஹிட்லரை வீழ்ச்சியடையச் செய்து, அவருடைய அநேக குற்றச் செயல்களில் எல்லாவற்றையும் தடுப்பதில் அடிப்படையில் தோல்வியுற்றிருந்தாலும் அளவிடமுடியாதளவிற்கு சர்ச்சின் ஒழுக்க தன்மானத்தை இந்த நோக்குநிலை உயர்த்தியிருக்கக்கூடும். இப்படிப்பட்ட மனித தடுக்கும் ஆற்றல் மறுக்கமுடியாதளவு பெரியதே, ஆனால் இந்தத் தியாகங்கள் எல்லா விளைவுகளிலும் சிறந்ததை உண்டுபண்ணுவதற்காக செய்யப்பட்டிருக்கலாம். தன்னுடைய சொந்த தேசத்தில்தானே நம்பிக்கையற்ற நிலையிருக்கும்போது ஹிட்லர் துணிந்து யுத்தத்தில் இறங்கியிருக்க மாட்டார், சொல்லர்த்தமாக லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். . . . ஹிட்லரின் சித்திரவதை முகாம்களில் நாசிக்கு எதிரான ஆயிரக்கணக்கான ஜெர்மானியர்கள் துன்புறுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டபோது, போலந்தின் கற்றறிந்தோர் வகுப்பார் கொலைசெய்யப்பட்டபோது, ஸ்லாவி அன்ட்டர்மென்சென் [கீழ்மக்கள்] இனஞ் சார்ந்த மனிதர்கள் கீழானவர்களாக நடத்தப்பட்டதன் விளைவாக நூறாயிரக்கணக்கான ரஷ்யர்கள் மரித்தபோது, ‘ஆரியரல்லாதவர்கள்’ என்ற காரணத்தால் 60,00,000 பேர் கொலைசெய்யப்பட்டபோது, ஜெர்மனியிலிருந்த கத்தோலிக்க சர்ச்சின் சமயத்துறை முதல்வர்கள் அந்த ஆட்சிமுறையை அழியாது பாதுகாத்து, இந்தக் குற்றச் செயல்களை அனுமதித்தனர். ஆவிக்குரிய தலைவரும் ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் பிரதான ஒழுக்க போதகருமான ரோமிலிருந்த போப் தொடர்ந்து பேசாதிருந்தார்.”—பக்கங்கள் 320, 341.

[பக்கம் 268-ன் படம்]

ஆட்சியாளர்கள் ‘மிகவும் கொடியது, மிகவும் கொடியது,’ எனச் சொல்கின்றனர்

[பக்கம் 268-ன் படம்]

வர்த்தகர்கள் ‘மிகவும் கொடியது, மிகவும் கொடியது,’ எனச் சொல்கின்றனர்