Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

‘புஸ்தகச் சுருளைத் திறப்பதற்கு பாத்திரவான் யார்?’

‘புஸ்தகச் சுருளைத் திறப்பதற்கு பாத்திரவான் யார்?’

அதிகாரம் 15

‘புஸ்தகச் சுருளைத் திறப்பதற்கு பாத்திரவான் யார்?’

1. யோவானின் தரிசனத்தில் இப்பொழுது என்ன ஏற்படுகிறது?

 க ம்பீரமானது! பிரமிக்கச் செய்கிறது! அக்கினித் தீபங்கள், கேருபீன்கள், 24 மூப்பர்கள் மேலும் கண்ணாடிக் கடல் இவற்றின் காட்சியமைவில் யெகோவாவின் சிங்காசனம் இவ்விதமாக உணர்ச்சி தூண்டும் தரிசனமாக இருக்கிறது. ஆனால், யோவானே அடுத்து நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்? யோவான் இந்தப் பரலோக காட்சியின் முக்கிய மையப்பகுதிக்கு கவனத்தை ஒருமுகப்படுத்துகிறார், நமக்கு இவ்வாறு சொல்கிறார்: “அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் [புஸ்தகச் சுருளை, NW] சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன். புஸ்தகத்தைத் [புஸ்தகச் சுருளை, NW] திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன். வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின் கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் [புஸ்தகச் சுருளை, NW] திறக்கவும் அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது. ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் [புஸ்தகச் சுருளை, NW] திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன்.”—வெளிப்படுத்துதல் 5:1-4.

2, 3. (அ) புஸ்தகச் சுருளைத் திறப்பதற்கு யாரோ ஒருவர் காணப்படவேண்டும் என்று யோவான் ஏன் ஆவலுடையவராயிருக்கிறார், ஆனால் அதனுடைய எதிர்பார்ப்பு பற்றி என்ன தோன்றுகிறது? (ஆ) கடவுளுடைய அபிஷேகஞ்செய்யப்பட்ட மக்கள் நம்முடைய நாளில் எதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்?

2 எல்லா படைப்புகளின் சர்வலோகப் பேரரசர், யெகோவாதாமேயும், அந்தப் புஸ்தகச் சுருளைப் பிடித்துக் கொண்டிருக்கிறார். இது முன்புறமும் பின்புறமும் எழுதப்பட்டிருப்பதனால், இது மிக இன்றியமையாத தகவல் நிறைந்ததாய் இருக்க வேண்டும். நம்முடைய அறிவார்வம் தூண்டப்படுகிறது. புஸ்தகச் சுருளில் என்ன அடங்கியிருக்கிறது? யோவானுக்கு யெகோவாவின் அழைப்பை நாம் மீண்டும் நினைவிற்கு கொண்டு வருகிறோம்: “இங்கே ஏறிவா, இவைகளுக்குப் பின்பு சம்பவிக்க வேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன்.” (வெளிப்படுத்துதல் 4:1) சிலிர்க்கும் எதிர்பார்ப்புடன், அந்தக் காரியங்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கு நாம் ஆவலாக இருக்கிறோம். ஆனால் ஐயோ, புஸ்தகச் சுருளானது இறுக்கமாக மூடப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருக்கிறது!

3 புஸ்தகச் சுருளைத் திறப்பதற்குப் பாத்திரவானாயுள்ள எவராவது ஒருவரை பலமான தூதன் கண்டுபிடிப்பாரா? கிங்டம் இன்டர்லீனியர் பிரகாரம், புஸ்தகச் சுருளானது யெகோவாவுடைய “வலது கரத்திலே” இருக்கிறது. இதை அவர் தம்முடைய திறந்த உள்ளங்கையில் பிடித்திருக்கிறார் என்பதைக் குறிக்கிறது. ஆனால், பரலோகத்திலோ பூமியிலோ உள்ள ஒருவனும் புஸ்தகச் சுருளை ஏற்றுக்கொள்ளவும் திறக்கவும் பாத்திரவானாக இல்லை என்பதாகத் தோன்றுகிறது. பூமியின் கீழே, கடவுளின் உண்மையுள்ள ஊழியர்களில் மரித்திருப்பவர்களின் மத்தியிலும்கூட, இந்த உயர்ந்த கனத்திற்கு தகுதிபெற்றவர் ஒருவரும் இல்லை. தெளிவாகவே யோவான் நிலைகுலைந்திருப்பது குறித்து ஆச்சரியமில்லை! எனினும் ஒருவேளை “சம்பவிக்க வேண்டியவைகளை” அவர் அறிந்துகொள்ளப் போவதில்லை. நம்முடைய நாளிலும்கூட, கடவுளுடைய அபிஷேகம் செய்யப்பட்ட மக்கள், வெளிப்படுத்துதல் மீது யெகோவா அவருடைய வெளிச்சத்தையும் சத்தியத்தையும் அனுப்புவதற்காக ஆர்வமுடன் காத்திருந்திருக்கின்றனர். தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்திற்காக, அவருடைய மக்களை “மகத்தான இரட்சிப்பின்” வழியில் நடத்துவதற்காக, குறிக்கப்பட்ட காலத்தில் இதை அவர் படிப்படியாக செய்வார்.—சங்கீதம் 43:3, 5.

பாத்திரவான்

4. (அ) புஸ்தகச் சுருளையும் அதனுடைய முத்திரைகளையும் திறப்பதற்கு பாத்திரராயிருக்கக்கூடிய யார் கண்டுபிடிக்கப்பட்டார்? (ஆ) இப்பொழுது யோவான் வகுப்பாரும் அவர்களுடைய கூட்டாளிகளும் என்ன வெகுமதி மற்றும் சிலாக்கியத்தில் பங்குகொள்கின்றனர்?

4 ஆம், புஸ்தகச் சுருளைத் திறப்பதற்கு ஒருவர் பாத்திரராய் இருக்கிறார்! யோவான் விவரித்துரைக்கிறார்: “அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் [புஸ்தகச் சுருளை, NW] திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார்.” (வெளிப்படுத்துதல் 5:5) எனவே யோவானே, அந்தக் கண்ணீரைத் துடைத்துக்கொள்ளும்! இன்று யோவான் வகுப்பாரும் அவர்களுடைய உண்மையுள்ள கூட்டாளிகளும்கூட அறிவொளியூட்டுதலுக்காக பொறுமையாக காத்திருக்கையில் பல பத்தாண்டுகளாக கடினமான சோதனைகளைச் சகித்திருக்கின்றனர். தரிசனத்தை விளங்கிக்கொள்வதில் இப்பொழுது நாம் என்னே ஓர் ஆறுதலான வெகுமதியைக் கொண்டிருக்கிறோம்! மேலும் இதனுடைய செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்பதன் மூலம் இதனுடைய நிறைவேற்றத்தில் பங்குபெறுவது என்னே ஒரு சிலாக்கியம்!

5. (அ) யூதாவைப்பற்றி என்ன தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது, மேலும் யூதாவின் வம்சத்தில் வந்தவர்கள் எங்கு ஆட்சி செய்தனர்? (ஆ) ஷைலோ யார்?

5 ஆ, ‘யூதா கோத்திரத்துச் சிங்கம்’! யூத வம்ச மூதாதையரான யாக்கோபு அவருடைய நான்காவது குமாரன், யூதாவைப் பற்றி அறிவித்த தீர்க்கதரிசனத்தை யோவான் நன்கு அறிந்திருந்தான்: “யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்து கொண்டு ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம் போலும் மடங்கிப்படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்? சமாதான கர்த்தர் [ஷைலோ, NW] வருமளவும் செங்கோல் யூதாவை விட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களைவிட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள்.” (ஆதியாகமம் 49:9, 10) தேவனுடைய மக்களின் அரச வழி யூதாவிலிருந்து தோன்றியது. தாவீதுடன் தொடங்கி, பாபிலோனியர்கள் அந்த நகரத்தை அழிக்கும் வரையாக எருசலேமில் ஆட்சி செய்த எல்லா இராஜாக்களும் யூதாவின் வம்ச வழியில் வந்தவர்கள். ஆனால் அவர்களில் ஒருவரும் யாக்கோபினால் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட ஷைலோவாக இல்லை. ஷைலோ என்பதன் அர்த்தம் “உரிமைக்காரர்.” தீர்க்கதரிசனமாக, இந்தப் பெயர், இப்பொழுது தாவீதிய ராஜ்யத்திற்கு நிரந்தரமாக உரிமையுடையவராயிருக்கும் இயேசுவைச் சுட்டிக் காண்பித்தது.—எசேக்கியேல் 21:25-27; லூக்கா 1:32, 33; வெளிப்படுத்துதல் 19:16.

6. என்ன வழியில் இயேசு ஈசாயின் ‘துளிரும்’ மேலும் ‘தாவீதின் வேருமாக’ இருந்தார்?

6 யோவான் உடனடியாக “தாவீதின் வேருமானவர்” என்பதற்கான குறிப்பை உணர்கிறார். வாக்குப்பண்ணப்பட்ட மேசியா தீர்க்கதரிசனப் பிரகாரமாக “ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து [தாவீது ராஜாவின் தந்தையிலிருந்து] ஒரு துளிர் தோன்றி” மேலும் ‘ஜனங்களுக்குக் கொடியாக நிற்கும் ஈசாயின் வேர்’ என்று இரண்டு விதமாகவும் அழைக்கப்பட்டுள்ளார். (ஏசாயா 11:1, 10) ஈசாயின் குமாரனாக, தாவீதின் அரச வழியில் பிறந்திருப்பதனால், இயேசு ஈசாயின் துளிராக இருந்தார். மேலுமாக, ஈசாயின் வேருமாக, தாவீதிய அரச மரபு மீண்டும் முளைக்க காரணமாயிருந்தார், இதற்கு ஜீவனையும் ஆதாரத்தையும் என்றென்றுமாக கொடுக்கிறார்.—2 சாமுவேல் 7:16.

7. சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருடைய கையிலிருந்து புஸ்தகச் சுருளை எடுப்பதற்கு எது இயேசுவை தகுதியுள்ளவராக ஆக்குகிறது?

7 இயேசு, பரிபூரண மனிதனாக, உத்தமத்தன்மையிலும் கடும் வேதனை தருகிற சோதனைகளின் கீழும் யெகோவாவைச் சேவித்த ஒப்புயர்வற்ற ஒருவராக இருக்கிறார். அவர் சாத்தானின் சவாலுக்கு முழுமையான பதிலைக் கொடுத்தார். (நீதிமொழிகள் 27:11) இவ்வாறாக, அவருடைய தியாக மரணத்திற்கு முந்தின இரவில் அவர் செய்ததைப் போன்று, அவரால் சொல்ல முடிந்தது: “நான் உலகத்தை ஜெயித்திருக்கிறேன்.” (யோவான் 16:33) இந்தக் காரணத்திற்காக, யெகோவா உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவிடம் ‘வானத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரத்தையும்’ ஒப்படைத்தார். கடவுளுடைய ஊழியர்களில் அவர் ஒருவர் மாத்திரமே, அதனுடைய முக்கியத்துவம் வாய்ந்த செய்தியை அறிவிப்பதற்காக, புஸ்தகச் சுருளைப் பெறத் தகுதிபெற்றிருக்கிறார்.—மத்தேயு 28:18.

8. (அ) ராஜ்யம் சம்பந்தமாக இயேசுவின் தகுதியை எது காண்பிக்கிறது? (ஆ) புஸ்தகச் சுருளை திறப்பதற்கு தகுதியுள்ளவரை 24 மூப்பர்களில் ஒருவர் யோவானுக்கு வெளிப்படுத்துவது ஏன் பொருத்தமாக இருக்கிறது?

8 உண்மையாகவே, இயேசு புஸ்தகச் சுருளை திறக்க வேண்டும் என்பது பொருத்தமாகவே இருக்கிறது. கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தின் அரசராக 1914 முதற்கொண்டு முடிசூட்டப்பட்டுமிருக்கிறார், மேலும் புஸ்தகச் சுருள் ராஜ்யத்தைப் பற்றியும் அது என்ன நிறைவேற்றப் போகிறது என்பதைப்பற்றியும் அதிகத்தை வெளிப்படுத்துகிறது. இயேசு பூமியில் இருக்கும்போது ராஜ்ய சத்தியத்திற்கு உண்மையுடன் சாட்சி கொடுத்தார். (யோவான் 18:36, 37) அவர் தம்மைப் பின்பற்றியவர்களை ராஜ்யத்தின் வருகைக்காக ஜெபிக்கும்படி கற்பித்தார். (மத்தேயு 6:9, 10) அவர் கிறிஸ்தவ சகாப்தத்தின் ஆரம்பத்தில் ராஜ்யத்தின் நற்செய்தியின் பிரசங்கித்தலைத் தொடங்கி வைத்தார், மேலும் முடிவு காலத்தின்போது அந்தப் பிரசங்க வேலை உச்சநிலை அடைதலை தீர்க்கதரிசனமாக உரைத்தார். (மத்தேயு 4:23; மாற்கு 13:10) முத்திரைகளைத் திறக்கப்போகிறவர் இயேசுவே என்று யோவானுக்கு 24 மூப்பர்களில் ஒருவர் வெளிப்படுத்தியது அப்படியே பொருத்தமாக இருக்கிறது. ஏன்? ஏனெனில் இந்த மூப்பர்கள் சிங்காசனங்களின் அமர்ந்து கிரீடங்களை அணிந்து கிறிஸ்துவுடன் அவருடைய ராஜ்யத்தில் உடன் சுதந்தரவாளிகளாக இருக்கிறார்கள்.—ரோமர் 8:17; வெளிப்படுத்துதல் 4:4.

‘அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி’

9. சிங்கத்திற்குப் பதிலாக, ‘சிங்காசனத்தின் மத்தியில்’ என்ன நிற்கிறதை யோவான் காண்கிறார், மேலும் இதை அவர் எவ்வாறு விவரித்தார்?

9 யோவான் இந்த ‘யூதா கோத்திரத்துச் சிங்கத்தைக்’ கவனித்துப் பார்க்கிறார். ஆனால் எவ்வளவு திகைக்கச் செய்வதாயிருக்கிறது! முழுவதும் வித்தியாசப்பட்ட ஓர் அடையாள அர்த்தமுள்ள உருவம் தோன்றுகிறது: “அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக் கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.”—வெளிப்படுத்துதல் 5:6.

10. யோவான் பார்த்த “ஆட்டுக்குட்டி” யார், மேலும் அந்த வார்த்தை ஏன் பொருத்தமாயிருக்கிறது?

10 நான்கு ஜீவன்களாலும் 24 மூப்பர்களாலும் உண்டாக்கப்பட்ட வட்டங்களுக்கு உள்ளே, சிங்காசனத்திற்கு அருகே, சரியாக மத்தியில், ஓர் ஆட்டுக்குட்டி இருக்கிறது! சந்தேகமில்லாமல் யோவான் சீக்கிரத்தில் இந்த ஆட்டுக்குட்டியை, ‘யூதா கோத்திரத்துச் சிங்கம்’ மேலும் ‘தாவீதின் வேர்’ என்பவற்றுடன் அடையாளம் காண்கிறார். அவர், அறுபதுக்கும் அதிகமான வருடங்களுக்கு முன்பாக, முழுக்காட்டுபவனாகிய யோவான் “உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி,” என்பதாக பார்த்துக்கொண்டிருந்த யூதர்களுக்கு இயேசுவை அறிமுகப்படுத்தியதை அறிந்திருக்கிறார். (யோவான் 1:29) பூமியில் அவருடைய முழு வாழ்க்கையின்போது, உலகத்தினால் கறைபடாமல் இருந்தார்—குற்றமில்லாத ஓர் ஆட்டுக்குட்டியைப் போன்று—இவ்வாறு அவருடைய குற்றமற்ற ஜீவனை மனிதவர்க்கத்திற்கு ஒரு பலியாக கொடுக்க முடியும்.—1 கொரிந்தியர் 5:7; எபிரெயர் 7:26.

11. மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவை “அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி”யைப் போன்று பிரதிநிதித்துவம் செய்வது ஏன் மதிப்பற்றதாக இருக்காது?

11 மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவை “அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி”யைப் போன்று பிரதிநிதித்துவம் செய்வது ஏதோ ஒரு வகையில் சிறுமைப்படுத்தப்படுவதாக அல்லது மதிப்பற்றதாக இருக்கிறதா? இல்லவே இல்லை! மரணம் வரையாக இயேசு உண்மைத்தன்மையில் நிலைத்திருந்த உண்மையானது சாத்தானுக்கு ஒரு பெரிய தோல்வியாகவும் யெகோவா தேவனுக்கு ஒரு பெரிய வெற்றியாகவும் இருந்தது. இந்த வழியில் இயேசுவை பிரதிநிதித்துவம் செய்வதானது சாத்தானிய உலகத்தின் மீதான அவருடைய வெற்றியை உயிர்ச்சித்திரம் போன்று வருணிக்கிறது, மேலும் யெகோவாவும் இயேசுவும் மனிதவர்க்கத்திற்காகக் கொண்டிருக்கிற ஆழமான அன்பின் ஒரு நினைப்பூட்டுதலாகவும் இருக்கிறது. (யோவான் 3:16; 15:13; கொலோசெயர் 2:15-ஐ ஒப்பிடுக.) அதனால் இயேசு, வாக்குப்பண்ணப்பட்ட வித்தாக, புஸ்தகச் சுருளைத் திறப்பதற்கு மிகச் சிறந்த தகுதிபெற்றவராக குறிப்பிடப்படுகிறார்.—ஆதியாகமம் 3:15.

12. ஆட்டுக்குட்டியின் ஏழு கொம்புகள் எதற்குப் படமாக இருக்கின்றன?

12 இந்த ‘ஆட்டுக்குட்டியானவருக்கான’ நம்முடைய போற்றுதலை வேறு எதுவும் கூட்டுகிறது? அவர் ஏழு கொம்புகளைக் கொண்டிருக்கிறார், பைபிளில் அடிக்கடி கொம்புகள் வல்லமை அல்லது அதிகாரத்தின் ஓர் அடையாளமாக இருக்கிறது, மேலும் ஏழு, முழுமைத்தன்மையைக் குறிப்பிடுகிறது. (ஒப்பிடவும்: 1 சாமுவேல் 2:1, 10; சங்கீதம் 112:9; 148:14.) எனவே, ஆட்டுக்குட்டியின் ஏழு கொம்புகள், இயேசுவிடம் யெகோவா ஒப்படைத்திருக்கிற வல்லமையின் நிறைவானத்தன்மையை பிரதிநிதித்துவம் செய்கிறது. அவர் “எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்திற்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில் மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்திற்கும் மேலாயிருக்கிறார்.” (எபேசியர் 1:20-23; 1 பேதுரு 3:22) யெகோவா அவரை பரலோக அரசராக சிங்காசனத்தில் அமர்த்தின 1914-லிருந்து, இயேசு விசேஷமாக வல்லமையை, அரசாங்க வல்லமையை உபயோகித்திருக்கிறார்.—சங்கீதம் 2:6.

13. (அ) ஆட்டுக்குட்டியின் ஏழு கண்கள் எதற்கு படமாக இருக்கிறது? (ஆ) ஆட்டுக்குட்டியானவர் எதைச் செய்ய தொடங்குகிறார்?

13 மேலுமாக, ‘தேவனுடைய ஏழு ஆவிகள் என்று அர்த்தம் கொள்கிற’ ஆட்டுக்குட்டியின் ஏழு கண்களால் படமாக்கக் காட்டப்பட்டதைப் போன்று, பரிசுத்த ஆவியுடன் முழுமையாக இயேசு நிரப்பப்பட்டிருக்கிறார். யெகோவாவின் செயல் நடப்பிக்கும் சக்தி அவருடைய பூமிக்குரிய ஊழியர்களுக்கு நிறைவாக வருவதற்கு இயேசுவே வழிமூலமாக இருக்கிறார். (தீத்து 3:6) தெளிவாகவே, இந்த ஆவியின் மூலமாகவே பரலோகத்திலிருந்து பூமியின் மீது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அவர் பார்க்கிறார். அவருடைய பிதாவைப் போன்று, இயேசு பரிபூரண பகுத்துணர்வைக் கொண்டிருக்கிறார். அவருடைய பார்வையிலிருந்து எதுவும் தப்புவதில்லை. (ஒப்பிடவும்: சங்கீதம் 11:4; சகரியா 4:10.) தெளிவாகவே, இந்தக் குமாரன்—உலகத்தை ஜெயித்து உத்தமத்தைக் காத்துக்கொண்டவர், யூதா கோத்திரத்துச் சிங்கம்; தாவீதின் வேர்; மனிதவர்க்கத்திற்காக தன்னுடைய ஜீவனைக் கொடுத்தவர்; முழு அதிகாரத்தையும் பரிசுத்த ஆவியை நிறைவான அளவிலும் யெகோவா தேவனிடமிருந்து பரிபூரண பகுத்துணர்வையும் பெற்றவர்—ஆம், இந்த ஒருவர் யெகோவாவின் கையிலிருந்து புஸ்தகச் சுருளை வாங்குவதற்கு மிகச் சிறந்த முறையில் தகுதிவாய்ந்தவராக இருக்கிறார். யெகோவாவின் மேன்மையான அமைப்பில் இந்த ஊழிய வேலையை ஏற்றுக்கொள்ள அவர் தயங்குகிறாரா? இல்லை! மாறாக, “அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்து புஸ்தகத்தை [புஸ்தகச் சுருளை, NW] வாங்கினார்.” (வெளிப்படுத்துதல் 5:7) மனப்பூர்வமான கீழ்ப்படிதலுக்கு என்னே ஒரு சிறந்த உதாரணம்!

துதிப்பாடல்கள்

14. (அ) இயேசுவின் புஸ்தகச் சுருளை எடுக்கும் செயலுக்கு நான்கு ஜீவன்களும் 24 மூப்பர்களும் எவ்வாறு பிரதிபலிக்கின்றன[ர்]? (ஆ) 24 மூப்பர்களைப் பற்றி யோவான் பெற்றுக்கொள்கிற தகவல் அவர்களுடைய அடையாளத்தையும் நிலையையும் எவ்வாறு உறுதிப்படுத்துகிறது?

14 யெகோவாவின் சிங்காசனத்திற்கு முன்பாக இருந்த அந்த மற்றவர்கள் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர்? “அந்தப் புஸ்தகத்தை [புஸ்தகச் சுருளை, NW] அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்து நான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்[தனர்].” (வெளிப்படுத்துதல் 5:8) கடவுளுடைய சிங்காசனத்திற்கு முன்பாக உள்ள நான்கு கேருபீய ஜீவன்களைப் போன்று, 24 மூப்பர்கள், அவருடைய அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளுகிறவர்களாய் இயேசுவுக்கு தலை வணங்கி நிற்கின்றனர். ஆனால் இந்த மூப்பர்கள் மட்டுமே, சுரமண்டலங்களையும் தூபவர்க்கத்தின் கலசங்களையும் கொண்டிருக்கின்றனர். a மேலும் இப்பொழுது அவர்கள் மட்டுமே ஒரு புதிய பாடலைப் பாடுகின்றனர். (வெளிப்படுத்துதல் 5:9) இவ்வாறாக, அவர்கள், சுரமண்டலங்களை எடுத்துக்கொண்டு ஒரு புதிய பாடலை பாடுகிற பரிசுத்த “தேவனுடைய இஸ்ரவேலின்” 1,44,000 பேருக்கு ஒத்திருக்கின்றனர். (கலாத்தியர் 6:16; கொலோசெயர் 1:12; வெளிப்படுத்துதல் 7:3-8; 14:1-4) மேலுமாக, 24 மூப்பர்கள், பூர்வ இஸ்ரவேலில் ஆசரிப்புக்கூடாரத்தில் யெகோவாவுக்குத் தூபவர்க்கத்தை எரித்த ஆசாரியர்கள் செய்த சேவைக்கு படமாக இருக்கும் பரலோக, ஆசாரிய வேலையை நிறைவேற்றுகிறவர்களாக காண்பிக்கப்படுகிறார்கள். மேலும் கடவுள், மோசேயின் நியாயப்பிரமாணத்தை நடுவில் இராதபடிக்கு எடுத்து, இயேசுவின் கழுமரத்தில் அதை ஆணி அடித்தபோது அந்த வேலை பூமியின் மீது முடிவுக்கு வந்தது. (கொலோசெயர் 2:14) இவை எல்லாவற்றிலிருந்தும் நாம் என்ன முடிவுக்கு வருகிறோம்? இங்கே மேற்கொண்ட அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள் ‘தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளும்’ அவர்களுடைய இறுதியான நியமிப்பில் காணப்படுகிறார்கள்.—வெளிப்படுத்துதல் 20:6.

15. (அ) இஸ்ரவேலில், கூடாரத்தின் மகா பரிசுத்த ஸ்தலத்தில் நுழைவதற்கு யார் ஒருவர் மட்டுமே சிலாக்கியமளிக்கப்பட்டிருந்தார்? (ஆ) மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைவதற்கு முன்பு தூபவர்க்கத்தை எரிப்பது பிரதான ஆசாரியனுக்கு ஏன் ஜீவன் அல்லது மரண காரியமாயிருந்தது?

15 பூர்வ இஸ்ரவேலில், யெகோவாவின் அடையாள பிரசன்னத்தின் முன்பு மகா பரிசுத்தத்தில் நுழைவது பிரதான ஆசாரியனுக்கு கட்டுப்படுத்தப்பட்டதாய் இருந்தது. அவருக்கு, தூபவர்க்கத்தை எடுத்துச் செல்வது ஜீவன் அல்லது மரணக் காரியமாக இருந்தது. யெகோவாவின் சட்டம் சொன்னது: “[ஆரோன்] கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின் மேலுள்ள நெருப்புத்தணலினால் தூபகலசத்தை நிரப்பி, பொடியாக்கப்பட்ட சுகந்த தூபவர்க்கத்திலே தன் கைப்பிடிகள் நிறைய எடுத்து, திரைக்கு உட்புறமாகக் கொண்டு வந்து, தான் சாகாதபடிக்குத் தூபமேகமானது சாட்சிப் பெட்டியின் மேல் இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக, கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] சந்நிதியில் அக்கினியின் மேல் தூபவர்க்கத்தைப் போடக்கடவன்.” (லேவியராகமம் 16:12, 13) தூபவர்க்கத்தை அவன் எரிக்காமல், மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் வெற்றிகரமாக நுழைவது பிரதான ஆசாரியனுக்கு கூடாத காரியமாயிருந்தது.

16. (அ) கிறிஸ்தவ ஒழுங்குமுறையில், மாதிரிப்படிவ மகா பரிசுத்த ஸ்தலத்தில் யார் நுழைகின்றனர்? (ஆ) அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ஏன் ‘தூபவர்க்கத்தை எரிக்க’ வேண்டியிருக்கிறது?

16 கிறிஸ்தவ ஒழுங்குமுறையில், மாதிரிப்படிவ பிரதான ஆசாரியர், இயேசு கிறிஸ்து மட்டுமல்லாமல், ஆனால் 1,44,000 துணை ஆசாரியர்கள் ஒவ்வொருவரும், பரலோகத்தில் யெகோவாவினுடைய பிரசன்னத்தின் இடமாகிய மாதிரிப்படிவ மகா பரிசுத்த ஸ்தலத்தில் கடைசியில் சேரக்கூடியவார்களாக இருக்கிறார்கள். (எபிரெயர் 10:19-23) 24 மூப்பர்களால் இங்கே பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருக்கிற இந்த ஆசாரியர்கள் ‘தூபவர்க்கத்தை எரிக்காமல்’ அதாவது, யெகோவாவுக்கு இடைவிடாமல் ஜெபங்களையும், விண்ணப்பங்களையும் ஏறெடுக்காமல் இந்த மகா பரிசுத்த ஸ்தலத்தில் நுழைவது முடியாத காரியம்.—எபிரெயர் 5:7; யூதா 20, 21; சங்கீதம் 141:2-ஐ ஒப்பிடவும்.

ஒரு புதிய பாட்டு

17. (அ) என்ன புதிய பாடலை 24 மூப்பர்கள் பாடுகிறார்கள்? (ஆ) ‘புதிய பாடல்’ என்ற சொற்றொடர் பைபிளில் வழக்கமாக எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது?

17 இப்பொழுது ஓர் இனிய இசைப் பாடல் தொனிக்கிறது. இது ஆட்டுக்குட்டியானவருக்கு அவருடைய ஆசாரிய கூட்டாளிகள், 24 மூப்பர்களால் பாடப்படுகிறது: “அவர்கள் ஒரு புதிய பாட்டை பாடுகிறார்கள்: நீரே புஸ்தகச் சுருளை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர், ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து ஆட்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டீர்.” (வெளிப்படுத்துதல் 5:9, NW) ‘புதிய பாடல்’ என்ற சொற்றொடர் பைபிளில் அநேக முறைகள் வருகிறது, மேலும் சில வல்லமையான விடுதலையின் செயலுக்காக யெகோவாவைப் புகழ்வதற்கு வழக்கமாக குறிப்பிடப்படுகிறது. (சங்கீதம் 96:1; 98:1; 144:9) இவ்வாறாக, பாடல் புதியதாக இருக்கிறது, ஏனெனில் பாடுபவர் யெகோவாவின் கூடுதலான ஆச்சரியப்படத்தக்க வேலைகளை இப்பொழுது அறிவித்து, மேலும் அவருடைய மகிமையான நாமத்திற்கு புதுப்பிக்கப்பட்ட போற்றுதலை வெளிக்காட்டக்கூடும்.

18. அவர்களுடைய புதிய பாடலுடன் 24 மூப்பர்கள் எதற்காக இயேசுவைத் துதிக்கிறார்கள்?

18 இருப்பினும், இங்கே, 24 மூப்பர்கள் புதிய பாடலை யெகோவாவுக்கு முன்பாக இல்லாமல் இயேசுவுக்கு முன்பாக பாடுகிறார்கள். ஆனால் நியமம் ஒன்றாகவே இருக்கிறது. தேவனுடைய குமாரனாக, அவர்களுக்காக செய்திருக்கிற புதிய காரியங்களுக்காக அவர்கள் இயேசுவை துதிக்கிறார்கள். அவருடைய இரத்தத்தின் மூலமாக, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருந்து, அதனால் யெகோவாவின் விசேஷித்த ஜனமாக ஒரு புதிய தேசத்தைக் கொண்டுவருவதை கூடிய காரியமாக்கினார். (ரோமர் 2:28, 29; 1 கொரிந்தியர் 11:25; எபிரெயர் 7:18-25) இந்தப் புதிய ஆவிக்குரிய தேசத்தின் அங்கத்தினர்கள் மாம்சப்பிரகாரமான அநேக தேசங்களிலிருந்து வந்தவர்கள். ஆனால் இயேசு அவர்களை ஒரே தேசத்தைப் போன்று ஒரே சபையாக ஐக்கியப்படுத்தினார்.—ஏசாயா 26:2; 1 பேதுரு 2:9, 10.

19. (அ) மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலர்கள் அவர்களுடைய உண்மையற்றத் தன்மையின் காரணமாக என்ன ஆசீர்வாதத்தை உணரத் தவறிவிட்டார்கள்? (ஆ) யெகோவாவின் புதிய தேசம் என்ன ஆசீர்வாதத்தை அனுபவிக்க பெறுகிறது?

19 மோசேயின் நாட்களில் யெகோவா இஸ்ரவேலர்களை ஒரு தேசமாக ஏற்படுத்தினபோது, அவர்களுடன் ஓர் உடன்படிக்கை செய்து, அந்த உடன்படிக்கைக்கு அவர்கள் உண்மையுள்ளவர்களாக நிலைத்திருப்பார்களேயானால் அவருக்கு முன்பாக ஆசாரிய ராஜ்யமாய் இருப்பார்கள் என்று வாக்களித்திருந்தார். (யாத்திராகமம் 19:5, 6) இஸ்ரவேலர்கள் உண்மையுள்ளவர்களாக இருக்கவில்லை, மேலும் இந்த வாக்குத்தத்தத்தை ஒருபோதும் அடையவும் இல்லை. மறுபட்சத்தில், இயேசுவினால் மத்தியஸ்தம் செய்யப்பட்ட புதிய உடன்படிக்கையினால் உண்டாக்கப்பட்ட புதிய தேசம் உண்மையுள்ளதாக நிலைத்திருக்கிறது. எனவே, இதனுடைய அங்கத்தினர்கள் பூமியின் மீது அரசர்களாக ஆட்சி செய்யவும் மேலும் ஆசாரியர்களாக சேவை செய்யவும், மனிதவர்க்கத்தில் நல்ல இருதயமுள்ளவர்கள் யெகோவாவுடன் ஒப்புரவு ஆவதற்கு உதவி செய்யக்கூடியவர்களாகவும் ஆகிறார்கள். (கொலோசெயர் 1:20) புதிய பாட்டு விவரிக்கிறப் பிரகாரமாகவே இது இருக்கிறது: “எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம்.” (வெளிப்படுத்துதல் 5:10) மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவுக்கு இந்தப் புதிய துதிப்பாடலை பாடுவதில் அந்த 24 மூப்பர்கள் என்னே மகிழ்ச்சியைக் கொண்டிருக்கிறார்கள்!

ஒரு பரலோக சேர்ந்திசை

20. இப்பொழுது ஆட்டுக்குட்டியானவருக்கு என்ன துதிப்பாடல் ஒலிக்கப்படுகிறது?

20 இந்தப் புதிய பாடலுக்கு யெகோவாவின் அமைப்பின் மற்ற பரலோக கூட்டத்தினர் எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள்? யோவான் அவர்களுடைய இருதயப்பூர்வமான ஒத்திசைவைப் பார்ப்பதில் கிளர்ச்சியடைகிறார்: “பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது. அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்.” (வெளிப்படுத்துதல் 5:11, 12) மனதில் பதியவைக்கும் என்னே ஒரு துதிப்பாடல்!

21. ஆட்டுக்குட்டியானவரை துதிப்பதானது யெகோவாவின் சர்வலோகப் பேரரசுரிமை அல்லது நிலையை குறைவுப்படுத்துகிறதா? விளக்கவும்.

21 இது ஏதோ ஒரு வகையில் இயேசு யெகோவா தேவனை மாற்றீடு செய்திருக்கிறார் என்றும், எல்லா படைப்புகளும் அவருடைய பிதாவை துதிப்பதற்குப் பதிலாக அவரைத் துதிக்க திரும்பியிருக்கின்றன என்றும் அர்த்தம் கொள்கிறதா? நிச்சயமாகவே இல்லை! மாறாக, இந்தத் துதிப்பாடல் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியதுடன் ஒத்திசைவாயிருக்கிறது: “தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக [இயேசுவை] உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும் பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைப்பண்ணும்படிக்கும் எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.” (பிலிப்பியர் 2:9-11) இங்கே இயேசு உயர்த்தப்பட்டிருக்கிறார். ஏனெனில் எல்லா படைப்புகளுக்கும் முன்பாக முக்கியமான விவாதத்தை தீர்ப்பதில் அவருடைய பங்கின் காரணமாக—யெகோவாவின் நீதியான அரசாட்சியை மெய்ப்பித்துக் காட்டுதல். மெய்யாகவே, இது அவருடைய பிதாவுக்கு என்னே மகிமையைக் கொண்டுவந்திருக்கிறது!

பொங்கியெழும் வாழ்த்துப் பாடல்

22. என்ன இசை பாடலில் பூமிக்குரிய பகுதியிலிருந்து குரல்கள் சேர்ந்துகொள்கின்றன?

22 யோவானால் விவரிக்கப்பட்ட காட்சியில், பரலோக கூட்டத்தினர் இயேசுவுக்கு, அவருடைய உண்மைத்தன்மை மேலும் அவருடைய பரலோக அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளும் விதத்தில், இன்னிசையுடன் ஆர்ப்பரிக்கிறார்கள். இதில், பூமிக்குரிய பகுதியிலிருந்து குரல்கள் சேர்ந்து கொள்கின்றன—பிதா, குமாரன் இருவரையும் துதிப்பதில் இவர்களும் பங்குகொள்கின்றனர். ஒரு மனித குமாரனின் சாதனைகள் பெற்றோருக்கு மிகுந்த நற்பெயரைக் கொண்டுவருவதைப் போன்று, இயேசுவின் உண்மைதவறாத போக்கு எல்லா படைப்புகள் மத்தியிலிருந்தும் ‘தேவனும் பிதாவுமானவருக்கு மகிமையைக்’ கொண்டுவருகிறது. இவ்வாறாக, யோவான் தொடர்ந்து சொல்கிறார்: “வானத்திலும் பூமியிலும், பூமியின்கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக் கேட்டேன்.”—வெளிப்படுத்துதல் 5:13.

23, 24. (அ) பரலோகத்தில் வாழ்த்துப் பாடல் எப்பொழுது தொடங்கும், மேலும் பூமியில் எப்பொழுது என்பதை எது குறித்து காட்டுகிறது? (ஆ) வருடங்கள் கடந்துசெல்லச் செல்ல வாழ்த்துப் பாடலின் ஒலி எவ்வாறு மிகுந்த ஆரவாரமிக்கதாகிக்கொண்டு வருகிறது?

23 இந்த முதல் தரமான வாழ்த்துப் பாடல் எப்பொழுது ஒலிக்கிறது? கர்த்தருடைய நாளின் ஆரம்பத்தில் இது ஆரம்பமானது. சாத்தானும் அவனுடைய பேய்களும் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டப் பிறகு, ‘பரலோகத்திலுள்ள எல்லா படைப்புகளும்’ இந்தத் துதிப் பாடலில் ஒன்றுபடுகிறது. மேலும், பதிவு காண்பிக்கிற பிரகாரமாக, 1919 முதற்கொண்டு பூமியின் மீது வளர்ந்துகொண்டிருக்கிற ஒரு திரள் கூட்டம் யெகோவாவைத் துதிப்பதில் அவர்களுடைய சத்தங்களை ஒன்றுபடுத்தியிருக்கின்றனர், ஒரு சில ஆயிரத்திலிருந்து 2005-ல் அறுபது லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்திருக்கிறது. b சாத்தானின் பூமிக்குரிய ஒழுங்குமுறை அழிக்கப்பட்ட பின்பு, ‘பூமியின் மீதுள்ள ஒவ்வொரு சிருஷ்டியும்,’ யெகோவா மற்றும் அவருடைய குமாரனின் துதிகளைப் பாடிக்கொண்டிருக்கும். யெகோவாவின் சொந்த குறிக்கப்பட்ட சமயத்தில், மரித்திருக்கிற எண்ணமுடியாத லட்சக்கணக்கானோரின் உயிர்த்தெழுதல் தொடங்கும், அதன் பிறகு, ‘பூமியின் கீழுள்ள ஒவ்வொரு சிருஷ்டியும்,’ தேவனின் ஞாபகார்த்தத்தில் உள்ளவை வாழ்த்துப் பாடலைப் பாடுவதில் சேர்ந்துகொள்ள சந்தர்ப்பத்தைக் கொண்டிருக்கும்.

24 ஏற்கெனவே, ‘பூமியின் கடையாந்தரத்திலிருந்தும் கடல் மற்றும் தீவுகளிலிருந்தும்,’ லட்சக்கணக்கான மனிதர்கள் யெகோவாவின் பூகோள அமைப்புடன் சேர்ந்து ஒரு புதியப் பாடலை பாடிக்கொண்டிருக்கின்றனர். (ஏசாயா 42:10; சங்கீதம் 150:1-6) இந்த மகிழ்ச்சியான துதி, ஆயிர வருட ஆட்சியின் முடிவில், மனிதவர்க்கம் பரிபூரணத்திற்கு உயர்த்தப்பட்டிருக்கும்பொழுது, ஓர் உச்சக்கட்டத்தை அடையும். அந்தப் பழைய பாம்பு, பிரதான வஞ்சகன், சாத்தான்தானேயும், அதன் பிறகு ஆதியாகமம் 3:15-ன் முழுமையான நிறைவேற்றத்தில் அழிக்கப்படுவான், மேலும் வெற்றிக்களிப்பின் உச்சக்கட்டத்தில், எல்லா ஜீவனுள்ள சிருஷ்டிகளும், ஆவி மற்றும் மனிதன், ஒன்றாக சேர்ந்து பாடுவார்கள்: “சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக.” பிரபஞ்சம் முழுவதிலும் வேறுபடுகிற எந்தக் குரலும் இருக்காது.

25. (அ) சர்வலோக வாழ்த்துப்பாடலைப் பற்றிய யோவானின் விவரம் நம்மை என்ன செய்ய தூண்டுகிறது? (ஆ) தரிசனம் முடிவு பெறுகையில் நான்கு ஜீவன்களாலும் 24 மூப்பர்களாலும் நமக்கு என்ன உயர்ந்த உதாரணம் வைக்கப்பட்டிருக்கிறது?

25 அது என்னே ஒரு மகிழ்ச்சிகரமான காலமாக இருக்கும்! நிச்சயமாகவே இங்கே யோவான் விவரிப்பதானது நம்முடைய இருதயத்தை சந்தோஷத்தினால் நிரப்பி, யெகோவாவுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் இருதயப்பூர்வமான துதிகளைப் பாடுவதில் பரலோக கூட்டங்களுடன் சேர்ந்துகொள்ள நம்மை உந்துவிக்கிறது. நீதியான வேலைகளில் நீடித்திருக்க எப்பொழுதுமிருந்ததைக் காட்டிலும் நாம் அதிக தீர்மானமுள்ளவர்களாக இல்லையா? நாம் அவ்வாறு செய்தால், யெகோவாவின் உதவியுடன், தனிப்பட்டவர்களாக சந்தோஷமான உச்சக்கட்டத்தில் அங்கே நாம் இருப்போம், அந்தச் சர்வலோக துதியின் சேர்ந்திசையில் நம்முடைய குரல்களை சேர்ப்போம் என்று நாம் எதிர்பார்க்க முடியும். நிச்சயமாகவே, கேருபீய நான்கு ஜீவன்களும், உயிர்த்தெழுப்பப்பட்ட அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் முழு ஒத்திசைவில் இருக்கின்றனர், ஏனென்றால் தரிசனம் பின்வரும் வார்த்தைகளுடன் முடிவுபெறுகிறது: “நான்கு ஜீவன்களும் ஆமென் என்று சொல்லின. இருபத்து நான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து . . . தொழுதுகொண்டார்கள்.”—வெளிப்படுத்துதல் 5:14.

26. நாம் எதில் விசுவாசம் வைக்க வேண்டும், மேலும் ஆட்டுக்குட்டியானவர் என்ன செய்வதற்கு ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறார்?

26 அன்பான வாசகரே, ‘பாத்திரராகிய’ ஆட்டுக்குட்டியானவருடைய பலியில் நீங்கள் விசுவாசம் வைத்து மேலும் யெகோவாவை—‘சிங்காசனத்தில் வீற்றிருப்பவரை’—வணங்கவும் சேவிக்கவும் உங்களுடைய மனத்தாழ்மையான முயற்சிகளில் ஆசீர்வதிக்கப்படுவீராக. இன்று யோவான் வகுப்பார், தேவையான “[ஆவிக்குரிய] உணவை ஏற்ற வேளையிலே” கொடுத்து உங்களுக்கு உதவி அளிக்கட்டும். (லூக்கா 12:42, NW) ஆனால் இதோ! ஆட்டுக்குட்டியானவர் ஏழு முத்திரைகளைத் திறக்க தயார் செய்கிறார். இப்பொழுது என்ன கிளர்ச்சியூட்டும் வெளிப்படுத்துதல்கள் நமக்காக வைக்கப்பட்டிருக்கின்றன?

[அடிக்குறிப்புகள்]

a இலக்கணரீதியில், ‘ஒவ்வொருவரும் ஒரு சுரமண்டலத்தையும் தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் கொண்டிருக்கின்றனர்,’ என்ற சொற்றொடர் மூப்பர்களும் நான்கு ஜீவன்களும் ஆகிய இரண்டு சாராரையும் குறிப்பிடக்கூடும். இருப்பினும், இந்தச் சொற்றொடர் 24 மூப்பர்களை மட்டுமே குறிப்பிடுகிறது என்பதைச் சூழமைவு தெளிவாக்குகிறது.

b பக்கம் 64-ல் உள்ள அட்டவணையைப் பார்க்கவும்.

[கேள்விகள்]

[பக்கம் 86-ன் முழுபடம்]