Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளின் மகத்தான பொருள்

பைபிளின் மகத்தான பொருள்

அதிகாரம் 2

பைபிளின் மகத்தான பொருள்

வேதவாக்கியங்களுக்கு அர்த்தம் சொல்லுதல் வெளிப்படுத்துதல் புத்தகத்தின் பூட்டி வைக்கப்பட்ட இரகசியங்கள் உண்மையுள்ள பைபிள் மாணாக்கர்களை வெகு காலமாக குழப்பிக்கொண்டிருந்தன. கடவுளுடைய குறித்த காலத்தில் அந்த இரகசியங்கள் வெளிப்படுத்தப்பட வேண்டியதாக இருந்தன, ஆனால் எப்படி, எப்போது, மேலும் யாருக்கு வெளிப்படுத்த வேண்டும்? குறிக்கப்பட்ட காலம் சமீபித்தபோது கடவுளுடைய ஆவிமட்டுமே அதன் பொருளை வெளிப்படுத்த முடியும். (வெளிப்படுத்துதல் 1:3) பூமியில் இருக்கிற கடவுளின் வைராக்கியமுள்ள அடிமைகளுக்கு அந்த தெய்வீக இரகசியங்கள் வெளிப்படுத்தப்படும், அப்போது அவருடைய நியாயத்தீர்ப்புகளை அறிவிப்பதற்கு அவர்கள் பலப்படுத்தப்படுவர். (மத்தேயு 13:10, 11) இந்தப் புத்தகத்தில் இருக்கிற விளக்கங்கள் சிறிதும் பிழையற்றவை என்று உரிமைபாராட்டுவதற்கில்லை. “அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா?” என்று யோசேப்பை போன்று நாங்களும் சொல்கிறோம். (ஆதியாகமம் 40:8) என்றாலும், அதே சமயத்தில், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கங்கள் முழு பைபிளுடனும் ஒத்திசைந்திருக்கிறது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், நம்முடைய பேரழிவுக்குரிய காலங்களின் உலக நிகழ்ச்சிகளில் தெய்வீக தீர்க்கதரிசனம் எப்படிக் குறிப்பிடத்தக்க விதத்தில் நிறைவேற்றம் அடைந்திருக்கிறது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

1. யெகோவாவுடைய மகத்தான நோக்கம் என்ன?

 ஒரு பைபிள் நீதிமொழி சொல்கிறது: “ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் அதின் முடிவு நல்லது.” (பிரசங்கி 7:8) யெகோவாவுடைய மகத்தான நோக்கத்தின் உயிர்ப்பூட்டும் உச்சக்கட்டத்தை, அவருடைய பெயர் எல்லா படைப்புக்கும் முன்பாக பரிசுத்தப்படுவதைக் குறித்து நாம் வெளிப்படுத்துதல் புத்தகத்திலேயே வாசிக்கிறோம். கடவுள் தம்முடைய முற்காலத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் மூலம் அநேக தடவைகள் அறிவித்தது போல: “நான் கர்த்தர் [யெகோவா, NW] என்று அறிந்துகொள்வார்கள்.”—எசேக்கியேல் 25:17; 38:23.

2. வெளிப்படுத்துதல் புத்தகம் பைபிளில் உள்ள முந்திய புத்தகங்களோடுகூட என்ன மனநிறைவளிக்கும் அறிவையடைய நமக்கு உதவுகிறது?

2 வெளிப்படுத்துதல் புத்தகம் நமக்காக காரியங்களுடைய வெற்றிகரமான முடிவை எடுத்துக் கூறுவது போல, அவற்றின் ஆரம்பத்தைக் குறித்து முந்தியுள்ள பைபிள் புத்தகங்கள் நமக்கு விளக்குகின்றன. இந்தப் பதிவை ஆராய்வதன் மூலம், உட்பட்டிருக்கும் விவாதங்களை அறிந்துகொள்ளவும் கடவுளுடைய நோக்கங்களைக் குறித்த ஒரு முழுமையானக் கருத்தைப் பெறவும் நம்மால் முடிகிறது. இது என்னே மனநிறைவளிக்கிறது! மேலும், மனிதவர்க்கத்துக்குக் காத்திருக்கும் மகத்தான எதிர்காலத்தில் பங்குகொள்ளும் பொருட்டு இது நம்மைச் செயல்பட தூண்டவேண்டும். (சங்கீதம் 145:16, 20) இத்தருணத்தில், முழு மனிதவர்க்கம் இப்போது எதிர்ப்படுகிற மிக முக்கியமான விவாதத்தையும் மேலும் அந்த விவாதத்தைத் தீர்ப்பதற்காக கடவுள் தெளிவாக முன்கூறின நோக்கத்தையும் நினைவில் வைப்பதற்கு முழு பைபிளுடைய பின்னணியையும் பொருளையும் கலந்தாராய்வது பொருத்தமாக தோன்றுகிறது.

3. ஆதியாகம புத்தகத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனம் வெளிப்படுத்துதல் புத்தகத்தையும் உட்பட முழு பைபிளின் பொருளாக அமைகிறது?

3 பைபிளின் முதல் புத்தகமாகிய ஆதியாகமம் ‘அந்த ஆதியைப்பற்றி’ சொல்லி, கடவுள் பூமியில் மனிதனைச் சிருஷ்டித்து அதோடு பூமிக்குரிய படைப்பை நிறைவு செய்த விஷயத்தை உள்ளடக்கும் கடவுளுடைய படைப்பு வேலைகளைப் பற்றி விவரிக்கிறது. சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏதேன் தோட்டத்தில் கடவுள்தாமே உரைத்த முதல் தெய்வீக தீர்க்கதரிசனத்தையுங்கூட ஆதியாகமம் தெரிவிக்கிறது. முதல் மனுஷியாகிய ஏவாளை வஞ்சிப்பதற்கு அப்போதுதானே ஒரு சர்ப்பம் பயன்படுத்தப்பட்டது; இவள் தன்னோடு, “நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை” புசிப்பதன் மூலம் அவளோடு யெகோவாவின் சட்டத்தை மீறுவதற்கு தன் கணவனாகிய ஆதாமும் சேர்ந்துகொள்ள வற்புறுத்தி இணங்கவைத்தாள். இந்தப் பாவம்செய்த தம்பதியினருக்கு நியாயத்தீர்ப்பு அளிக்கையில் கடவுள் சர்ப்பத்தை நோக்கி: “உனக்கும் ஸ்திரீக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன், அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்,” என்று சொன்னார். (ஆதியாகமம் 1:1; 2:17; 3:1-6, 14, 15) இந்தத் தீர்க்கதரிசனமே, வெளிப்படுத்துதல் புத்தகத்தையும் உட்பட முழு பைபிளின் பொருளாக அமைகிறது.

4. (அ) முதல் தீர்க்கதரிசனத்தைக் கடவுள் உரைத்த பிற்பாடு, நம்முடைய முதல் பெற்றோருக்கு என்ன நேர்ந்தது? (ஆ) முதல் தீர்க்கதரிசனம் சம்பந்தமாக என்ன கேள்விகள் எழும்புகின்றன, அவற்றிற்கு விடைகளை அறிந்திருப்பது ஏன் அவசியம்?

4 கடவுள், அந்த தீர்க்கதரிசனமுரைத்தவுடனே, நம்முடைய முதல் பெற்றோரை ஏதேனிலிருந்து துரத்தினார். இனிமேலும் அவர்கள் பரதீஸில் நித்திய ஜீவனை எதிர்நோக்கியிருக்க முடியாது; இனி அவர்கள் வெளியிலுள்ள ஆயத்தம்செய்யப்படாத பூமியிலேயே வாழ்க்கை நடத்த வேண்டியவர்களாயிருந்தனர். மரணத் தீர்ப்பின்கீழ், பாவம் சுமந்த பிள்ளைகளையே இவர்கள் பிறப்பிப்பர். (ஆதியாகமம் 3:23-4:1; ரோமர் 5:12) என்றாலும், அந்த ஏதேனிய தீர்க்கதரிசனம் எதை அர்த்தப்படுத்துகிறது? எவர் உட்பட்டிருக்கின்றனர்? அது வெளிப்படுத்துதலோடு எப்படித் தொடர்புபடுத்தப்படுகிறது? இன்று, நமக்கு அது என்ன செய்தியை கொண்டிருக்கிறது? யெகோவாவை அந்தத் தீர்க்கதரிசனமுரைக்கும்படி வழிநடத்திய இந்தத் துயர் மிகுந்த சம்பவத்தின் விளைவுகளிலிருந்து தனிப்பட்டவிதமாக விடுபட, இந்தக் கேள்விகளுக்கு விடைகளை அறிந்துக்கொள்வதற்கு நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.

நாடகத்திலுள்ள கதாபாத்திரங்கள்

5. ஏவாளைச் சர்ப்பம் வஞ்சித்தபோது கடவுளுடைய பேரரசாட்சி சம்பந்தப்பட்டதிலும் அவருடைய பெயர் சம்பந்தப்பட்டதிலும் என்ன காரியங்கள் வளர ஆரம்பித்தன, இந்த விவாதம் எப்படி தீர்வுக்கு கொண்டுவரப்படும்?

5 ஆதியாகமம் 3:15-ல் உள்ள தீர்க்கதரிசனம் ஏவாளிடம் பொய் பேசின சர்ப்பத்தை நோக்கி சொல்லப்பட்டது. ஏவாள் கீழ்ப்படியவில்லையென்றால், மரிப்பதற்கு மாறாக சுயாதீனம் பெற்றவளாக ஒரு தேவதையாக ஆகக்கூடும் என்று இந்தச் சர்ப்பம் அவளிடம் குறிப்பாக சொன்னது. இப்படியாக, யெகோவாவைப் பொய்யராகவும், அவருடைய உன்னத அரசாட்சியை வேண்டாமென ஒதுக்கித் தள்ளுவதன் மூலம் மனிதர்கள் மேம்பட்ட ஒரு வாழ்க்கையை வாழ முடியும் என்றும் சர்ப்பம் மறைமுகமாக குறிப்பிட்டது. (ஆதியாகமம் 3:1-5) யெகோவாவுடைய பேரரசாட்சி சவால்விடப்பட்டு, அவருடைய நற்பெயருக்கு இழுக்கு கொண்டுவரப்பட்டது. வெளிப்படுத்துதல் புத்தகம் நீதியுள்ள நியாயாதிபதியாகிய யெகோவா எப்படி தன் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் ராஜ்ய ஆளுகையை தம்முடைய பேரரசாட்சியை நியாயநிரூபணம் செய்வதற்கும் அவருடைய பெயரின்மீது கொண்டுவரப்பட்ட எல்லா நிந்தனைகளை நீக்கவும் பயன்படுத்துகிறார் என்பதை விவரிக்கிறது.—வெளிப்படுத்துதல் 12:10; 14:7.

6. சர்ப்பத்தின் மூலம் ஏவாளிடம் பேசின அந்த நபரை வெளிப்படுத்துதல் புத்தகம் எப்படி அடையாளங்காட்டுகிறது?

6 “சர்ப்பம்” என்ற இந்தப் பதம், வெறும் ஒரு சொல்லர்த்தமான பாம்பைக் குறிக்கிறதா? இல்லவே இல்லை! வெளிப்படுத்துதல் புத்தகம், இந்தப் பாம்பின் மூலம் பேசின அந்த மோசமான ஆவி சிருஷ்டியை நாம் அடையாளங் கண்டுகொள்ளச்செய்கிறது. இதுவே, “தன் தந்திரத்தினால் ஏவாளை வஞ்சித்த,” “குடியிருக்கப்பட்ட பூமியனைத்தையும் தவறாக வழிநடத்துகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்ப”மாக இருந்தது.—வெளிப்படுத்துதல் 12:9, NW; 2 கொரிந்தியர் 11:3, தி.மொ.

7. ஆதியாகமம் 3:15-ல் சொல்லப்பட்ட அந்த ஸ்திரீ ஆவி மண்டலத்தை சேர்ந்தவள் என்று எது குறிப்பிட்டுக் காட்டுகிறது?

7 அடுத்து, அந்த “ஸ்திரீ”யைப்பற்றி ஆதியாகமம் 3:15 பேசுகிறது. இந்த ஸ்திரீ ஏவாளாக இருந்தாளா? ஒருவேளை, ஏவாள் அப்படியாக நினைத்திருக்கலாம். (ஆதியாகமம் 4:1-ஐ ஒப்பிடுக.) ஆனால், 5,000-க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பாக ஏவாள் மரித்ததன் காரணமாக, இது ஏவாளுக்கும் சாத்தானுக்குமிடையே உள்ள நெடுங்கால பகைமையாக இருந்திருக்க முடியாது. மேலும், யெகோவா பார்த்துப் பேசிய இந்த சர்ப்பம் ஒரு காணக்கூடாத ஆவியாக இருப்பதன் காரணமாக, இந்த ஸ்திரீயும் ஆவி மண்டலத்துக்குரியவளாக இருப்பாள் என்று நாம் எதிர்பார்க்கலாம். வெளிப்படுத்துதல் 12:1, 2 இதையே உறுதிப்படுத்துகிறது. இந்த அடையாள அர்த்தமுள்ள ஸ்திரீ, ஆவி சிருஷ்டிகளடங்கிய யெகோவாவின் பரலோக அமைப்பு என்று குறிப்பிட்டுக் காட்டுகிறது.—ஏசாயா 54:1, 5, 13-ஐயும் காண்க.

பகைமையில் இருக்கும் இரண்டு வித்துக்கள்

8. இரண்டு வித்துக்களையும்பற்றி இப்போது சொல்லப்படுவதில் நாம் ஏன் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும்?

8 அடுத்து, ஆதியாகமம் 3:15-ல் இரண்டு வித்துக்கள் தோன்றுகின்றன. இவற்றிற்கு நாம் ஆழ்ந்த கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், இந்தப் பூமியின் மீது நியாயமாக ஆட்சிசெய்வதன்பேரில் இருக்கிற முக்கிய விவாதத்தோடு இவை சம்பந்தப்பட்டிருக்கின்றன. இது, நம் ஒவ்வொருவரையும், இளைஞர் அல்லது முதியோரையும் உட்படுத்துகிறது. இந்த வித்துக்களில் எதன் சார்பாக நீங்கள் இருக்கிறீர்கள்?

9. அந்தச் சர்ப்பத்தின் வித்து யாரை நிச்சயமாகவே உட்படுத்துகிறது?

9 முதலாவதாக, சர்ப்பத்தின் வித்தை அல்லது சர்ப்பத்தின் சந்ததியைக் குறித்து சொல்லப்படுகிறது. இது என்ன? இது நிச்சயமாகவே சாத்தானோடு கலகத்தனத்தில் சேர்ந்துகொண்ட மற்ற ஆவி சிருஷ்டிகளை உட்படுத்துகிறது. முடிவில், இவர்களே பூமி பகுதிக்கு ‘அவனோடுகூட தள்ளப்பட்டார்கள்.’ (வெளிப்படுத்துதல் 12:9) “பேய்களின் தலைவ”னாக சாத்தான் அல்லது பெயெல்செபூல் என்பவன் இருப்பதன் காரணமாக, அவனுடைய காணக்கூடாத அமைப்பை இவர்களே உண்டுபண்ணுகின்றனர் என்பது தெளிவாயிருக்கிறது.—மாற்கு 3:22, தி.மொ.; எபேசியர் 6:12.

10. பைபிள் மற்ற ஆட்களை எப்படி சாத்தானுடைய வித்தின் பாகமாக அடையாளங்காட்டுகிறது?

10 மேலும், இயேசு தன் காலத்தில் வாழ்ந்த யூத மதத் தலைவர்களை நோக்கி இப்படியாகச் சொன்னார்: “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசுக்குரியவர்கள்; உங்கள் பிதாவின் இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்.” (யோவான் 8:44, தி.மொ.) அந்த மதத் தலைவர்கள் கடவுளுடைய குமாரனாகிய இயேசுவை பகைப்பதன் மூலம் அவர்களும்கூட சாத்தானுடைய சந்ததியினராக இருப்பதை வெளிப்படுத்திக் காட்டினார்கள். சாத்தானுடைய வித்தின் பாகமாக இவர்கள் சாத்தானை அடையாள அர்த்தமுள்ள பிதாவாக சேவித்து வந்தார்கள். சரித்திரத்தினூடே அநேகர் சாத்தானுடைய சித்தத்தைச் செய்பவர்களாக, குறிப்பாக இயேசுவின் சீஷர்களை எதிர்த்து துன்புறுத்துவதன் மூலம் அவ்வித்தின் பாகமாக தங்களை அடையாளங்காட்டியிருக்கிறார்கள். இவர்களே ஒரு தொகுதியாக, பூமியில் சாத்தானுடைய காணக்கூடிய அமைப்பை உண்டுபண்ணுவதாக விவரிக்கப்படலாம்.—யோவான் 15:20; 16:33; 17:15 ஆகிய வசனங்களைக் காண்க.

ஸ்திரீயின் வித்து அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறது

11. நூற்றாண்டுகளினூடே ஸ்திரீயின் வித்தைக் குறித்து கடவுள் எதை வெளிப்படுத்தினார்?

11 கடைசியாக, ஆதியாகமம் 3:15-லுள்ள தீர்க்கதரிசனம், ஸ்திரீயின் வித்தைப் பற்றி குறிப்பிடுகிறது. சாத்தான் அவனுடைய வித்து வளர்ச்சியடைவதில் ஈடுபட்டிருக்கையில், யெகோவா ஒரு வித்தை தம்முடைய ‘ஸ்திரீ’க்கு அல்லது மணவாட்டியைப் போன்ற பரலோக அமைப்புக்கு உண்டுபண்ண முன்னேற்பாடுகளை செய்துவந்தார். சுமார் 4,000 ஆண்டுகளாக, கீழ்ப்படிதலுள்ள தெய்வபயமுள்ள மனிதர்களிடம் யெகோவா அந்த வித்து வருவதைப் பற்றிய நுணுக்க விவரங்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்திவந்தார். (ஏசாயா 46:9, 10) இதன் காரணமாக ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் மற்ற ஆட்களும், அந்த வித்து அவர்களுடைய வம்சாவழியில் தோன்றும் என்ற அந்த வாக்கின்பேரில் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள முடியும். (ஆதியாகமம் 22:15-18; 26:4; 28:14) அவர்களுடைய உறுதியான விசுவாசத்தின் காரணமாக சாத்தானும் அவனைச் சேர்ந்த ஆட்களும் இப்பேர்ப்பட்ட யெகோவாவின் ஊழியர்களை அடிக்கடி துன்புறுத்தினர்.—எபிரெயர் 11:1, 2, 32-38.

12. (அ) ஸ்திரீயினுடைய வித்தின் பிரதான பாகம் எப்போது வந்தது, எந்த சம்பவத்தோடு? (ஆ) இயேசு எந்த நோக்கத்துக்காக அபிஷேகஞ்செய்யப்பட்டார்?

12 இறுதியில், நம்முடைய பொது சகாப்தம் 29-ம் ஆண்டில், பரிபூரண மனிதனாகிய இயேசு யோர்தான் நதியிலே தம்மைத்தாமே அளித்து முழுக்காட்டுதல் பெற்றார். அப்போது யெகோவா பரிசுத்த ஆவியால் அவரை பிறப்பித்து சொன்னார்: “இவர் என் நேச குமாரன், இவரை நான் அங்கீகரித்திருக்கிறேன்.” (மத்தேயு 3:17, NW) இங்கு இயேசு, பரலோகத்தில் இருக்கும் கடவுளுடைய ஆவிக்குரிய அமைப்பிலிருந்து அனுப்பப்பட்டாரென அடையாளங் கண்டுகொள்ளப்பட்டார். பரலோக ராஜ்யத்தின் நியமிக்கப்பட்ட அரசராகவும் அபிஷேகம் செய்யப்பட்டார். இந்த ராஜ்யமே பூமியின்மீது யெகோவாவுடைய பெயரில் மறுபடியுமாக அரசாட்சியை ஸ்தாபிக்கும். இவ்வாறு, அரசாங்கத்தை அல்லது அரசுரிமையை உட்படுத்திய விவாதத்தை, இனி ஒருபோதும் இல்லாத வகையில் ஒரே முறையாக இது தீர்வுக்கு கொண்டு வரும். (வெளிப்படுத்துதல் 11:15) ஆக, இயேசுவே அந்த ஸ்திரீயின் பிரதான வித்தாக, முன்னுரைக்கப்பட்ட மேசியாவாக இருக்கிறார்.—ஒப்பிடுக: கலாத்தியர் 3:16; தானியேல் 9:25.

13, 14. (அ) ஸ்திரீயின் வித்து வெறும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நபராக இருக்க முடியாது என்று அறிவதில் ஏன் நாம் ஆச்சரியப்படக்கூடாது? (ஆ) மனிதவர்க்கத்திலிருந்து எத்தனை பேரை வித்தின் இரண்டாவது பாகமாக ஆவதற்கு கடவுள் தெரிந்தெடுத்திருக்கிறார், இவர்கள் எந்த வகையான அமைப்பை உண்டுபண்ணுகின்றனர்? (இ) இந்த வித்தோடு யாருங்கூட ஒன்றுபட்டு சேவிக்கின்றனர்?

13 அந்த ஸ்திரீயின் வித்து, வெறுமென ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நபராக இருக்க முடியுமா? சாத்தானின் வித்தைப் பற்றியதென்ன? சாத்தானுடைய வித்து, பெருந்திரளான பொல்லாத தூதர்களையும் கடவுளை அவமதிக்கும் மனிதர்களையும் உள்ளடக்குவதாக பைபிள் அடையாளங்காட்டுகிறது. ஆகவே, உத்தமத்தைக் காத்துக்கொள்ளும் 1,44,000 ஆட்களை மனிதவர்க்கத்திலிருந்து தெரிந்தெடுத்து, மேசியானிய வித்தாகிய இயேசு கிறிஸ்துவோடு ஆசாரிய உடன் அரசர்களாக செய்வதற்கான கடவுளுடைய நோக்கத்தைக் கற்றறிவதில் நாம் ஆச்சரியப்படவேண்டிய தேவையில்லை. வெளிப்படுத்துதல் புத்தகம், பிசாசு கடவுளுடைய ஸ்திரீயாகிய அமைப்பினிடம் பகைமையைக் கொண்டவனாக, “அவளுடைய வித்தின் மீதியானோரோடு யுத்தம் பண்ணப்போ”னான் என்று சொல்லும்போது இவர்களையே குறித்துக் காட்டுகிறது.—வெளிப்படுத்துதல் 12:17, NW; 14:1-4.

14 பைபிளில், அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், இயேசுவின் சகோதரர்களாக அழைக்கப்படுகிறார்கள். அவருடைய சகோதரர்களாக, ஒரே தாய் தந்தையரைக் கொண்டிருக்கிறார்கள். (எபிரெயர் 2:11) இவர்களுடைய தந்தை யெகோவா தேவன். ஆகவே, கடவுளுடைய மணவாட்டியைப்போன்ற பரலோக அமைப்பாகிய “அந்த ஸ்திரீ” தாயாக இருக்க வேண்டும். கிறிஸ்து இயேசு இந்த வித்தின் பிரதான பாகமாகவும், இவர்கள் வித்தின் இரண்டாவது பாகமாகவும் ஆகிறார்கள். பூமியிலிருக்கும் இந்த ஆவியால் பிறப்பிக்கப்பட்ட கிறிஸ்தவர்களின் சபையே கடவுளுடைய காணக்கூடிய அமைப்பை உண்டுபண்ணுகிறது, இது பரலோகங்களிலுள்ள கடவுளுடைய ஸ்திரீபோன்ற அமைப்பின்கீழ் சேவிக்கிறது, அங்கேதானே உயிர்த்தெழுதலில் அவர்கள் கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபடுவர். (ரோமர் 8:14-17; கலாத்தியர் 3:16, 29) எல்லா தேசங்களிலிருந்து வரும் மற்றச் செம்மறியாடுகளாகிய லட்கக்கணக்கானோர், இந்த வித்தின் பாகமாக இல்லாதபோதிலும் பூமியிலிருக்கும் கடவுளுடைய அமைப்போடு சேவிக்க ஒன்றுபடுத்தப்படுகின்றனர். இந்த மற்றச் செம்மறியாடுகளில் நீங்களும் ஒருவரா? அப்படியானால், பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனை அனுபவிப்பது உங்களுடைய மகிழ்ச்சிகரமான நம்பிக்கையாக இருக்கிறது.—யோவான் 10:16; 17:1-3.

பகைமை எப்படி வளர்ந்தது

15. (அ) சாத்தானுடைய மனித மற்றும் தேவதூத வித்தின் படிப்படியான வளர்ச்சியைக் குறித்து விவரிக்கவும். (ஆ) நோவா காலத்தில் நடந்த ஜலப்பிரளயத்தின்போது சாத்தானுடைய வித்துக்கு என்ன ஏற்பட்டது?

15 மனித சரித்திர தொடக்கத்திலேயே, சாத்தானுடைய மனித வித்து வெளிப்பட ஆரம்பித்தது. உதாரணமாக, முதன் முதலில் பிறந்த மனிதனாகிய காயீன், “தீயோனுக்குரியவனாயிருந்து தன் சகோதரனை [ஆபேலை] கொலை செய்”தான். (1 யோவான் 3:12, தி.மொ.) பின்னர், ஏனோக்கு யெகோவாவின் வருகையைக் குறித்து இப்படியாக சொன்னார்: “எல்லாருக்கும் நியாயத்தீர்ப்பு கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும் ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட” வருகிறார் என்றார். (யூதா 14, 15) மேலும், கலகக்கார தூதர்கள் சாத்தானோடு சேர்ந்து, அவனுடைய வித்தின் பாகமானார்கள். இவர்கள் மாம்ச சரீரங்களில் உருவெடுத்து வந்து மனுஷ குமாரத்திகளை விவாகம் செய்துகொள்ள பரலோகத்தில் இருக்கிற “தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டு” வந்தனர். அவர்கள் கொடுமையுள்ள கலப்பு இன மீமானிட பிள்ளைகளைப் பிறப்பித்தனர். அந்த உலகம் கொடுமையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருந்ததால் கடவுள் அதை ஜலப்பிரளயத்தால் அழித்து உண்மையுள்ள நோவாவையும் அவனுடைய குடும்பத்தாரையும் மாத்திரம் காப்பாற்றினார். அந்தக் கீழ்ப்படியாத தூதர்கள்—இப்பொழுது சாத்தானின் கட்டுப்பாட்டிலுள்ள பேய்கள்—தண்டனைவிதிக்கப்பட்ட மனித மனைவிகளையும், கலப்பின பிள்ளைகளையும் விட்டுப்போக கட்டாயப்படுத்தப்பட்டார்கள். மாம்ச சரீரத்தை களைந்து இவர்கள் ஆவி மண்டலத்துக்குச் சென்று, சாத்தான்மீதும் அவனுடைய வித்தின்மீதும் வேகமாக நெருங்கிக்கொண்டிருக்கும் கடவுளின் தண்டனைத்தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர்.—யூதா 6; ஆதியாகமம் 6:4-12; 7:21-23; 2 பேதுரு 2:4, 5.

16. (அ) ஜலப்பிரளயத்துக்கு பின்பு எந்த ஒரு கொடுங்கோலன் காட்சியில் தோன்றினான், சாத்தானுடைய வித்தின் பாகமாக இருப்பதை எப்படி அவன் வெளிக்காட்டினான்? (ஆ) பாபிலோனின் கோபுரத்தைக் கட்டவிருந்த ஆட்களை கடவுள் எப்படி தடைசெய்தார்?

16 அந்தப் பெரிய ஜலப்பிரளயத்திற்குச் சிறிது காலத்திற்குப் பின்பு, நிம்ரோது என்னும் பேர்கொண்ட கொடுங்கோலன் பூமியில் தோன்றினான். இவனை பைபிள் “யெகோவாவுக்கு எதிராக பலத்த வேட்டைக்காரன்,” என்று விவரிக்கிறது—மெய்யாகவே சர்ப்பத்தின் வித்தினுடைய பாகம். சாத்தானைப் போன்றே, கலக ஆவியைக் காண்பித்து பாபேல் அல்லது பாபிலோன் நகரத்தைக் கட்டி, மனிதவர்க்கம் சிதறி வாழ்ந்து பூமியை நிரப்பவேண்டும் என்ற யெகோவாவின் நோக்கத்துக்கு எதிராக செயல்பட்டான். பாபிலோனின் மையப் பகுதி “வானத்தையளாவும் சிகரமுள்ள” ஒரு பெரிய கோபுரமாக இருக்கவிருந்தது. அந்தக் கோபுரத்தைக் கட்டவிருந்த ஆட்களை கடவுள் தடை செய்தார். அவர்களுடைய பாஷையை தாறுமாறாக்கி “அவர்கள் அவ்விடத்திலிருந்து பூமியின் மீதெங்கும் சிதறிப்போகப் பண்ணினார்,” ஆனால் பாபிலோன் நிலைத்திருக்கவிடப்பட்டது.—ஆதியாகமம் 9:1; 10:8-12; 11:1-9.

வல்லரசுகள் தோன்றுகின்றன

17. மனிதவர்க்கம் பெருகினபோது, மனித சமுதாயத்தை கறைப்படுத்தும் எந்த ஓர் அம்சம் காட்சிக்கு வந்தது, இதன் விளைவாக எந்தப் பெரிய வல்லரசுகள் எழும்பின?

17 யெகோவாவின் அரசாட்சிக்கு எதிராக படிப்படியாக வெளிப்பட்ட மனித சமுதாயத்தில் முனைப்பான அம்சங்கள் பாபிலோனில் தோன்றின. அவற்றில் ஒன்று அரசியல். மனிதவர்க்கம் பெருகினபோது ஆட்சியைக் கைப்பற்றுவதில் பேராசைக்கொண்ட மனிதர்கள் நிம்ரோதின் மாதிரியைப் பின்பற்றினார்கள். மனிதன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனிதனை ஆட்சி செய்யத் தொடங்கினான். (பிரசங்கி 8:9) உதாரணமாக, ஆபிரகாம் வாழ்ந்த காலப்பகுதியில், சோதோமும், கொமோராவும், அருகாமையிலுள்ள நகரங்களும், சிநெயார் மற்றும் வேறு தொலைதூர தேசத்து அரசர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன. (ஆதியாகமம் 14:1-4) இதன் விளைவாக, இராணுவ மற்றும் அமைப்புக்குரிய நுண்ணறிவாளர்கள், அவர்களுடைய சொந்த சிறப்புக்கும் மகிமைக்கும் பிரம்மாண்டமான பேரரசை உருவாக்கினர். எகிப்து, அசீரியா, பாபிலோன், மேதிய பெர்சியா, கிரீஸ் மற்றும் ரோம் உள்ளடக்கிய சிலவற்றை பைபிள் குறிப்பிடுகிறது.

18. (அ) அரசியல் ஆட்சியாளர்களிடம் என்ன ஒரு மனப்பான்மையை கடவுளுடைய ஜனங்கள் ஏற்கின்றனர்? (ஆ) சில சமயங்களில், கடவுளுடைய அக்கறைகளை முன்னேற்றுவிப்பதற்கு அரசியல் ஆட்சியாளர்கள் எப்படி உதவியிருக்கின்றனர்? (இ) அநேக ஆட்சியாளர்கள் எப்படி தங்களை சர்ப்பத்தினுடைய வித்தின் பாகமாக வெளிக்காட்டியிருக்கின்றனர்?

18 அப்படிப்பட்ட வல்லரசுகளை யெகோவா அனுமதித்தார், கடவுளுடைய ஜனங்கள் அவற்றின் கட்டுப்பாட்டிலுள்ள தேசங்களில் வாழ்ந்தபோது, சம்பந்தப்பட்ட கீழ்ப்படிதலை அவற்றிற்கு கொடுத்திருக்கின்றனர். (ரோமர் 13:1, 2) சில சமயங்களில், கடவுளுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதோடு அவருடைய ஜனங்களுக்கு ஒரு பாதுகாப்பாகவுங்கூட அவை உதவியிருக்கின்றனர். (எஸ்றா 1:1-4; 7:12-26; அப்போஸ்தலர் 25:11, 12; வெளிப்படுத்துதல் 12:15, 16) என்றாலும், அநேக ஆட்சியாளர்கள் மெய் வணக்கத்துக்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் சர்ப்பத்தினுடைய வித்தின் பாகமாக தங்களை வெளிக்காட்டியிருக்கிறார்கள்.—1 யோவான் 5:19.

19. வெளிப்படுத்துதல் புத்தகத்தில் உலக வல்லரசுகள் எவ்வாறு சித்தரித்துக் காட்டப்படுகின்றன?

19 மனிதர்களாகிய நமக்கு சந்தோஷத்தை கொண்டுவருவதிலோ நம்முடைய பிரச்னைகளைத் தீர்ப்பதிலோ மனித ஆட்சி பெரும்பாலும் படுதோல்வியடைந்திருக்கிறது. பல்வேறுபட்ட ஆட்சி முறைகளைக்கொண்டு முயன்றுபார்க்க யெகோவா மனிதவர்க்கத்தை அனுமதித்திருக்கிறார், ஆனால் ஊழல்களில் ஈடுபடுவதையோ மோசமாக அரசாங்கங்கள் ஜனங்களை ஆளுகைச் செய்வதையோ அவர் ஏற்றுக்கொள்வதில்லை. (நீதிமொழிகள் 22:22, 23) ஒடுக்குகிற உலக வல்லரசுகளை இறுமாப்புக்கொண்ட கொடூரமான மூர்க்க மிருகமாக வெளிப்படுத்துதல் சித்தரித்துக் காட்டுகிறது.—வெளிப்படுத்துதல் 13:1, 2.

தன்னலமுள்ள வர்த்தக வியாபாரிகள்

20, 21. சாத்தானின் பொல்லாத வித்துக்குரியவர்களாக, “சேனைத்தலைவர்க”ளோடும் “பலவான்க”ளோடும் எந்த இரண்டாவது பிரிவு சேர்க்கப்படவேண்டும், ஏன்?

20 அரசியல் தலைவர்களோடு நெருங்கிய உறவுகொண்ட, வர்த்தக சரக்குகளை ஏமாற்றி வியாபாரஞ்செய்யும் ஆட்கள் இப்பொழுது தோன்றினர். பழங்காலத்திய பாபிலோனின் பாழ்க்கடிப்புகளிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட பதிவுகள், உடன் மனிதர்களுடைய சாதகமற்ற சூழ்நிலைகளைச் சுயநலத்திற்காக பயன்படுத்தி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது அதிக அளவில் வழக்கத்தில் இருந்ததைக் காட்டுகின்றன. அந்நாள் முதல் இந்நாள் வரையாக உலக வணிகர்கள் சுயநல லாபத்திற்காக தொடர்ந்து செயல்பட்டுவருகின்றனர், பல தேசங்களில், ஜனத்தொகையில் பெரும்பாலான ஆட்கள் வறுமையால் வாடிக்கொண்டிருக்கும்போது ஒரு சிலர் அதிக பணக்காரர்களாக ஆகியிருக்கிறார்கள். இப்போது பெரும் கவலைக்குக் காரணமாய் இருக்கிற, பேரழிவை ஏற்படுத்தும் அணுஆயுதங்கள் உட்பட குவித்துவைக்கப்பட்டுள்ள அழிவுக்குரிய கொடிய படைக்கலங்களை ஆட்சியாளர்களுக்குக் கொடுப்பதன் மூலம் இந்தத் தொழிற்சகாப்தத்தில், வியாபாரிகளும் உற்பத்தியாளர்களும், பெரும் லாபத்தை சம்பாதித்திருக்கின்றனர். இப்பேர்ப்பட்ட பேராசை கொண்ட வர்த்தக பெருஞ்செல்வர்களும் அவர்களைப் போலவே இருக்கும் மற்றவர்களும் சாத்தானின் பொல்லாத வித்துக்குரியவர்களாக, “சேனைத்தலைவர்க”ளோடும் “பலவான்க”ளோடும் சேர்க்கப்படவேண்டும். இவர்கள் எல்லாரும் அழிவுக்கு தகுதியானவர்களென கடவுளும் கிறிஸ்துவும் தீர்ப்பளிக்கும் பூமிக்குரிய அமைப்பின் பாகமாக இருக்கிறார்கள்.—வெளிப்படுத்துதல் 19:18.

21 ஊழல்மிக்க அரசியலோடும் பேராசைகொண்ட வர்த்தகத்தோடும் கடவுளுடைய சாதகமற்ற நியாயத்தீர்ப்பைப் பெறத் தகுதியுள்ள மனித சமுதாயத்தின் மூன்றாவது மூலக்கூறும் சேர்க்கப்படவேண்டும். அது என்ன? நன்கு அறியப்பட்ட இந்தப் பூகோள அமைப்பைப்பற்றி வெளிப்படுத்துதல் என்ன சொல்கிறது என்பதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

மகா பாபிலோன்

22. பூர்வ பாபிலோனில் எப்பேர்ப்பட்ட மதம் வளர்ந்து வந்தது?

22 பூர்வ பாபிலோன் ஒரு அரசியல் ஸ்தாபனமாக மட்டும் இல்லை. அந்த நகரம் யெகோவாவின் பேரரசுரிமைக்கு எதிராக ஸ்தாபிக்கப்பட்டிருந்ததன் காரணமாக, மதம் உட்பட்டிருந்தது. உண்மையில் பூர்வ பாபிலோன் மத விக்கிரகாராதனையின் பிறப்பிடமாக மாறியது. அதனுடைய ஆசாரியர்கள், கடவுளை கனவீனப்படுத்தும் இப்பேர்ப்பட்ட கோட்பாடுகளை, மரணத்திற்குப்பின் உயிர்வாழக்கூடிய மனித ஆத்துமா, பேய்களால் நடத்தப்படுகிற நித்திய திகில் மற்றும் வாதனைக்குரிய இடம் போன்றவற்றை போதித்தனர். சிருஷ்டிகள், எண்ணிறந்த தேவர்கள் மற்றும் தேவதைகள் வழிபாட்டை பேணி வளர்த்தனர். பூமி மற்றும் அதன்மீதுள்ள மனிதனின் தோற்றத்தை விளக்குவதற்கு கட்டுக்கதைகளை உண்டுபண்ணினர். குழந்தைப் பெறுதல் மேலும் விளைச்சலின் செழுமை மற்றும் யுத்தத்தின் வெற்றி போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்காக இழிவான சடங்குகளைச் செய்து, பலிகளையும் செலுத்தி வந்தனர்.

23. (அ) பாபிலோனிலிருந்து சிதறிச்சென்றபோது ஜனங்கள் தங்களோடு எதை எடுத்துச் சென்றனர், என்ன விளைவோடு? (ஆ) உலகம் தழுவும் பொய் மதப் பேரரசை வெளிப்படுத்துதல் என்ன பெயரைக்கொண்டு குறிப்பிடுகிறது? (இ) எப்பொழுதும் எதற்கு விரோதமாக பொய் மதம் போராடியிருக்கிறது?

23 பாபிலோனிலிருந்து பல்வேறு மொழி பிரிவுகள் பூமியின்மீது சிதறிச்சென்றபோது அவர்கள் பாபிலோனிய மதத்தையும் தங்களோடு எடுத்துச்சென்றனர். இப்படியாக பூர்வ பாபிலோனிலிருந்து மத சடங்குகளும் நம்பிக்கைகளும் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்காக்கள், தூரக் கிழக்கு நாடுகள் மற்றும் தென் பசிபிக் நாடுகளில் இருந்த பூர்வ குடிமக்களிடையே நிறைந்து காணப்பட்டன; மேலும் இப்படிப்பட்ட பல நம்பிக்கைகள் இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கின்றன. பொருத்தமாகவே, உலகம் தழுவும் பொய் மதப் பேரரசை மகா பாபிலோன் என்னும் பேர்கொண்ட ஒரு நகரமாக வெளிப்படுத்துதல் குறிப்பிடுகிறது. (வெளிப்படுத்துதல் 17, 18 அதிகாரங்கள்) எங்கெல்லாம் இது விதைக்கப்பட்டிருக்கிறதோ அங்கெல்லாம் ஒடுக்கும் ஆசாரியத்துவங்கள், மூடநம்பிக்கை, அறியாமை, ஒழுக்கக்கேடு ஆகியவற்றை பொய் மதம் முளைப்பித்திருக்கிறது. சாத்தானின் கரத்தில் இது ஒரு சக்தி வாய்ந்த கருவியாக இருந்துவந்திருக்கிறது. சர்வலோகப் பேரரசரும் ஆண்டவருமான யெகோவாவுடைய மெய் வணக்கத்திற்கு எதிராக மகா பாபிலோன் எப்பொழுதுமே மூர்க்கமாக போராடியிருக்கிறது.

24. (அ) ஸ்திரீயினுடைய வித்தின் “குதிங்காலை” சர்ப்பம் எவ்வாறு நசுக்கிப்போட்டது? (ஆ) ஸ்திரீயினுடைய வித்தை நசுக்கிப்போடுவது ஏன் ஒரு குதிங்கால் காயமாக மட்டும் விவரிக்கப்படுகிறது?

24 சர்ப்பத்தினுடைய வித்தின் மிக அதிக குற்றஞ்சாட்டப்படக்கூடிய பாகமாக, முதல் நூற்றாண்டு யூத மதத்திலிருந்த வேதபாரகரும் பரிசேயரும் ஸ்திரீயினுடைய வித்தின் பிரதான பிரிதிநிதியை துன்புறுத்துவதிலும் முடிவாக கொலைசெய்வதிலும் தலைமையேற்று செயல்பட்டனர். இவ்விதமாக சர்ப்பம் “அவருடைய [வித்தினுடைய] குதிங்காலை நசுக்”கிப்போட்டது. (ஆதியாகமம் 3:15; யோவான் 8:39-44; அப்போஸ்தலர் 3:12, 15) இது ஏன் ஓரு குதிங்கால் காயமாக மட்டும் விவரிக்கப்படுகிறது? ஏனெனில் இந்தக் காயம் வெகு குறைந்த நாட்களே இங்கே பூமியிலே தொடக்கூடியதாக இருந்தது. இது நிரந்தரமானதாக இருக்கவில்லை, ஏனெனில் யெகோவா மூன்றாம் நாளிலே இயேசுவை உயிர்த்தெழுப்பி, ஆவி வாழ்க்கைக்கு அவரை உயர்த்தினார்.—அப்போஸ்தலர் 2:32, 33; 1 பேதுரு 3:18.

25. (அ) மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவானவர் எவ்வாறு ஏற்கெனவே சாத்தானுக்கும் அவனுடைய தூதர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுத்திருக்கிறார்? (ஆ) சாத்தானுடைய பூமிக்குரிய வித்து எப்போது நீக்கிப்போடப்படும்? (இ) சர்ப்பமாகிய சாத்தானின் “தலையை” கடவுளுடைய ஸ்திரீயின் வித்து நசுக்கிப்போடுவது எதைக் குறிக்கும்?

25 மகிமைப்படுத்தப்பட்ட இயேசு கிறிஸ்து இப்பொழுது கடவுளின் வலது பாரிசத்தில் சேவித்து, யெகோவாவின் சத்துருக்களை நியாயந்தீர்க்கிறார். இது, நம் நாளில் ஆபத்துகள் பெருகுவதற்கு காரணமாயிருக்கிறது. அவர்களைக் கீழே விழத்தள்ளி இந்தப் பூமியிலே தங்கள் செயல்களைத் தொடருவதற்கு கட்டுப்படுத்தினதன் மூலம், சாத்தானுக்கும் அவனைச் சேர்ந்த தூதர்களுக்கும் எதிராக அவர் ஏற்கெனவே நடவடிக்கை எடுத்திருக்கிறார். (வெளிப்படுத்துதல் 12:9, 12) ஆனால் முன்னறிவிக்கப்பட்ட சாத்தானின் பூமிக்குரிய வித்தை நீக்குவது, மகா பாபிலோன் மீதும் சாத்தானின் பூமிக்குரிய அமைப்பின் எல்லா பிரிவுகள்மீதும் கடவுள் நியாயத்தீர்ப்பை நிறைவேற்றும்போது நடைபெறும். முடிவில், கடவுளுடைய ஸ்திரீயின் வித்தாகிய இயேசு கிறிஸ்து இந்தத் தந்திரமான பழைய சர்ப்பமாகிய சாத்தானின் “தலையை” நசுக்கிப்போடுவார், மனிதவர்க்க விவகாரங்களிலிருந்து அவனை முழுமையாக நீக்குவதையும் அவனுடைய மொத்த அழிவையும் இது அர்த்தப்படுத்தும்.—ரோமர் 16:20.

26. வெளிப்படுத்துதலிலுள்ள தீர்க்கதரிசனத்தை நாம் ஆராய்வது ஏன் மிக அதிக முக்கியமானது?

26 இவை எல்லாம் எப்படி நடைபெறும்? பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதலில் இதுவே நமக்காக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது முனைப்பான அடையாளங்களினாலும் குறிகளினாலும் எடுத்துக்காட்டப்பட்டு, தொடர் தரிசனங்களால் நமக்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஆவலோடு இந்தச் சக்தி வாய்ந்த தீர்க்கதரிசனத்தை நாம் ஆராய்வோமாக. வெளிப்படுத்துதலிலுள்ள வார்த்தைகளை நாம் கேட்டு கைக்கொண்டால் உண்மையிலேயே நாம் சந்தோஷமுள்ளவர்களாக இருப்போம். இப்படிச் செய்வதன் மூலம் சர்வலோக பேரரசராகிய யெகோவா தேவனுடைய பெயருக்கு மகிமையைக் கொண்டுவருவதில் பங்குகொண்டு, அவருடைய நித்திய ஆசீர்வாதங்களை நாம் சுதந்தரித்துக்கொள்வோம். தயவுசெய்து தொடர்ந்து நீங்கள் படித்து கற்றுக்கொண்டவற்றை ஞானமாக பொருத்திப் பிரயோகியுங்கள். மனிதவர்க்க சரித்திரத்தின் இந்த உச்சக்கட்ட காலப்பகுதியில் இது உங்களுக்கு இரட்சிப்பை குறிக்கக்கூடும்.

[கேள்விகள்]

[பக்கம் 13-ன் படம்/​பெட்டி]

வியாபார நடவடிக்கைகளைப் பற்றிய பூர்வ கியூனிஃபார்ம் பதிவுகள்

பாபிலோனிய காலத்தில் வாழ்ந்த ஹமுராபி என்பவரால் தொகுக்கப்பட்ட கிட்டத்தட்ட 300 சட்டங்களை ஜேம்ஸ் B. பிரிக்கர்டின் பதிப்பான ஏன்ஷியன்ட் நியர் ஈஸ்டர்ன் டெக்ஸ்ட்ஸ் என்ற புத்தகம் வரிசைப்படுத்துகிறது. அந்நாளைய வர்த்தக உலகத்தில் தெளிவாக ஊடுருவிக்கிடந்த வெளிப்படையான நேர்மையற்ற தன்மையைச் சட்டப்படி தடை செய்வது தேவையாக இருந்தது என்பதை இவை காட்டுகின்றன. உதாரணமாக: “ஒரு மிராசுதார் வேறொரு மிராசுதாரின் மகனிடமிருந்தோ ஒரு மிராசுதாரின் அடிமையிடமிருந்தோ, சாட்சிகளும் ஒப்பந்தங்களும் இல்லாமல், வெள்ளி, பொன், ஆண் அடிமை, பெண் அடிமை, எருது, செம்மறியாடு, கழுதை அல்லது ஏதாவது ஒரு பொருளையோ விலைக்கு வாங்கினாலோ பாதுகாத்து வைப்பதற்கு பெற்றுக்கொண்டாலோ அந்த மிராசுதார் ஒரு திருடன் என்பதால் சாகடிக்கப்பட வேண்டும்.”