Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மகா நகரம் அழிந்துபோயிற்று

மகா நகரம் அழிந்துபோயிற்று

அதிகாரம் 36

மகா நகரம் அழிந்துபோயிற்று

தரிசனம் 12​—வெளிப்படுத்துதல் 18:1–19:10

பொருள்: மகா பாபிலோனின் வீழ்ச்சியும் அழிவும்; ஆட்டுக்குட்டியானவரின் கல்யாணம் அறிவிக்கப்படுவது

நிறைவேற்றத்தின் காலம்: ஆண்டு 1919-லிருந்து மிகுந்த உபத்திரவத்துக்குப் பின் வரையாக

1. மிகுந்த உபத்திரவத்தின் துவக்கத்தை எது குறித்துக்காட்டும்?

 தி டீரென்றும், அதிர்ச்சியூட்டுகிற, பாழாக்குகிற அழிவு—மகா பாபிலோனுக்குச் சம்பவிப்பது இவ்வாறுதான் இருக்கும்! சரித்திரத்திலேயே மிகப் பெரிய அழிவுக்குரிய சம்பவமாக இது இருக்கும், ‘உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவத்தின்’ துவக்கத்தைக் குறிக்கும்.—மத்தேயு 24:21.

2. அரசியல் பேரரசுகள் எழும்பி வீழ்ச்சியடைந்தபோதிலுங்கூட, எந்த வகையான பேரரசு தொடர்ந்து நிலைத்திருக்கிறது?

2 பொய் மதம் நீண்ட காலமாக இருந்து வந்திருக்கிறது. யெகோவாவை எதிர்த்து பாபேல் கோபுரத்தைக் கட்டுவதற்கு ஆட்களை ஏற்பாடு செய்த கொலை வெறிகொண்ட நிம்ரோது காலம் முதற்கொண்டு தொடர்ந்து இருந்துவந்திருக்கிறது. யெகோவா அந்தக் கலகக்கார ஆட்களின் மொழியைத் தாறுமாறாக்கி, பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப் பண்ணினபோது, பாபிலோனிய பொய் மதமும் அவர்களோடேகூட சென்றது. (ஆதியாகமம் 10:8-10; 11:4-9) அது முதற்கொண்டு, அரசியல் பேரரசுகள் எழும்பி வீழ்ச்சியடைந்து வந்திருக்கின்றன, பாபிலோன் மதமோவெனில் தொடர்ந்து நிலைத்திருந்திருக்கிறது. அது தீர்க்கதரிசனமாய் சொல்லப்பட்ட மகா பாபிலோனாக, பல்வேறு வடிவங்களையும் உருவங்களையும் எடுத்து பொய் மத உலகப் பேரரசாக மாறியிருக்கிறது. விசுவாசத்துரோக “கிறிஸ்தவ” கொள்கையோடுகூட முற்கால பாபிலோனிய போதனைகளைக் கலப்படம்செய்து வளர்ந்த கிறிஸ்தவமண்டலமே இதன் மிகப் பிரதான பாகமாயிருக்கிறது. மகா பாபிலோன் வெகு நீண்டகால சரித்திரப் பதிவைக் கொண்டிருப்பதன் காரணமாக, அநேகர் அது அழிக்கப்பட இருப்பதை நம்புவது கடினமாயிருப்பதாக காண்கிறார்கள்.

3. பொய் மதம் அழிவுக்குத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துதல் புத்தகம் எப்படி உறுதிப்படுத்துகிறது?

3 ஆகவே, வெளிப்படுத்துதல் புத்தகம் அவளுடைய வீழ்ச்சியைப் பற்றிய இரண்டு விவரவிளக்கங்களையும் அதற்குப் பின் முற்றிலுமான அழிவுக்கு வழிநடத்தக்கூடிய சம்பவங்களையும் நமக்குக் கொடுப்பதன் மூலம் பொய் மதம் அழிவுக்குத் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவது பொருத்தமானதாயிருக்கிறது. முடிவில், அரசியல் வட்டாரத்தில் முன்பு நேசம்வைத்த ஆட்களே, ‘மகா வேசியை’ அழித்துப்போடுகிறார்கள் என்று இவளைப் பற்றி நாம் ஏற்கெனவே பார்த்தோம். (வெளிப்படுத்துதல் 17:1, 15, 16) இப்போது, மற்றொரு தரிசனத்தில், நாம் அவளை ஒரு நகரமாக காண இருக்கிறோம், பூர்வ பாபிலோனின் மதத்துக்குரிய மாதிரியாக இது இருக்கிறது.

மகா பாபிலோன் தள்ளுண்டுபோடப்படுகிறாள்

4. (அ) அடுத்து யோவான் எந்தத் தரிசனத்தைப் பார்க்கிறார்? (ஆ) அந்தத் தூதனை நாம் எவ்வாறு அடையாளங்கண்டுகொள்ளலாம், மகா பாபிலோனின் வீழ்ச்சியைக் குறித்து அவர் அறிவிப்பது ஏன் பொருத்தமாயிருக்கிறது?

4 யோவான் பதிவைத் தொடருகிறவராய் நமக்குச் சொல்கிறார்: “இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று. அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! [என்றான்.]” (வெளிப்படுத்துதல் 18:1, 2அ) யோவான் இரண்டாம் முறை தேவதூதனுடைய அந்த அறிவிப்பைக் கேட்கிறார். (வெளிப்படுத்துதல் 14:8-ஐ பாருங்கள்.) என்றபோதிலும், இந்த முறை பரலோக தூதனுடைய பொலிவின் மூலம் அதன் முக்கியத்துவம் வலியுறுத்திக் காட்டப்படுகிறது. அவரது மகிமை முழு பூமியையும் பிரகாசிக்கச் செய்கிறது! யாராக அவர் இருக்கக்கூடும்? பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, எசேக்கியேல் தீர்க்கதரிசி ஒரு பரலோக காட்சியைக் குறித்து, “அவருடைய [யெகோவாவுடைய] மகிமையினால் பூமி பிரகாசித்தது,” என்று அறிக்கையிட்டார். (எசேக்கியேல் 43:2) ‘[கடவுளுடைய] மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்த’ கர்த்தராகிய இயேசுவே, யெகோவாவுடைய மகிமைக்கு ஒப்பான மகிமையோடு பிரகாசிக்கிற ஒரே தூதனாயிருப்பார். (எபிரெயர் 1:3) 1914-ல், இயேசு பரலோகத்திலே அரசரானார். அதுமுதல் யெகோவாவுடைய துணை அரசராகவும் நீதிபதியாகவும் பூமியின் மீது அதிகாரம் செலுத்திவந்திருக்கிறார். அவ்வாறிருக்க, மகா பாபிலோனின் வீழ்ச்சியைக் குறித்து அவர் அறிவிப்பதே பொருத்தமானதாய் இருக்கிறது.

5. (அ) மகா பாபிலோனின் வீழ்ச்சியை முன்னறிவிப்பதற்கு அந்தத் தூதன் யாரை பயன்படுத்துகிறார்? (ஆ) ‘தேவனுடைய வீட்டைச்’ சேர்ந்தவர்களாக உரிமைபாராட்டியவர்களோடு நியாயத்தீர்ப்பு துவங்கியபோது, கிறிஸ்தவமண்டலத்துக்கு என்ன நேரிட்டது?

5 மனிதவர்க்கத்துக்கு முன்பாக இத்தகைய திகைப்படையச்செய்யும் செய்தியை முன்னறிவிப்பதற்கு, மிகுந்த அதிகாரமுடைய இந்தத் தூதன் யாரை பயன்படுத்துகிறார்? ஏன், அந்த வீழ்ச்சியின் காரணமாக விடுவிப்பைப் பெற்ற பூமியிலுள்ள அபிஷேகஞ்செய்யப்பட்ட மீந்தவர்களையே, யோவான் வகுப்பாரையே பயன்படுத்துகிறார். இவர்கள் 1914 முதல் 1918 வரை மகா பாபிலோனின் கைகளில் மிகவும் பாடனுபவித்தார்கள், 1918-லோவெனில், கர்த்தராகிய யெகோவாவும், அவருடைய ‘[ஆபிரகாமிய] உடன்படிக்கையின் தூதர்,’ இயேசு கிறிஸ்துவும் ‘தேவனுடைய வீட்டில்’ கிறிஸ்தவர்கள் என உரிமைபாராட்டியவர்களோடு நியாயத்தீர்ப்பை துவங்கினார்கள். இவ்வாறு விசுவாசத்துரோக கிறிஸ்தவமண்டலம் நியாயவிசாரணைக்கு கொண்டுவரப்பட்டது. (மல்கியா 3:1; 1 பேதுரு 4:17) முதல் உலகப் போரில் உள்ளான அவளுடைய பெருமளவான இரத்தப்பழியும் யெகோவாவுடைய உண்மையுள்ள சாட்சிகளைத் துன்புறுத்துவதில் உடந்தையாயிருந்ததும் பாபிலோனிய மத நம்பிக்கைகளும் நியாயத்தீர்ப்பு நாளின்போது அவளுக்கு உதவிசெய்யவில்லை; மகா பாபிலோனின் வேறெந்த பாகமும் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெறவில்லை.ஏசாயா 13:1-9-ஐ ஒத்துப்பாருங்கள்.

6. மகா பாபிலோன் 1919-ற்குள் விழுந்தது என்று ஏன் சொல்லலாம்?

6 ஆகவே 1919 போல் மகா பாபிலோன் விழுந்தது, இது கடவுளுடைய மக்கள் ஆவிக்குரிய விதத்தில் செழுமையாயிருந்த அவர்களுடைய தேசத்தில், சொல்லப்போனால், ஒரே நாளில் விடுவிக்கப்பட்டு மறுபடியும் ஸ்தாபிக்கப்படுவதற்கு வழியைத் திறந்தது. (ஏசாயா 66:8) அந்த வருடத்துக்குள், யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் பெரிய தரியுவாகவும் பெரிய கோரேசாகவும் இருந்து, இனிமேலும் பொய் மதம் யெகோவாவுடைய மக்கள்மீது பிடியைக் கொண்டிராதபடி காரியங்களில் அமையச் செயல்பட்டார்கள். அவர்கள் யெகோவாவைச் சேவித்து, வேசியைப்போலிருக்கும் மகா பாபிலோனுக்குத் தீர்ப்பளிக்கப்பட்டாயிற்று என்றும் யெகோவாவுடைய அரசாட்சி நியாயநிரூபணம் செய்யப்படுவது வெகு சமீபத்திலிருக்கிறது என்றும், கேட்கிற எல்லா ஆட்களிடமும் தெரியப்படுத்துவதிலிருந்து இனிமேலும் அது அவர்களைத் தடைசெய்ய முடியவில்லை!—ஏசாயா 45:1-4; தானியேல் 5:30, 31.

7. (அ) மகா பாபிலோன் 1919-ல் அழிக்கப்படாவிட்டாலுங்கூட, யெகோவா அவளை எவ்வாறு நோக்கினார்? (ஆ) மகா பாபிலோன் 1919-ல் விழுந்தபோது, யெகோவாவுடைய மக்களுக்கு என்ன நடந்தது?

7 பூர்வ பாபிலோன் நகரம் பெர்சியனாகிய கோரேசுடைய சேனைகளிடத்தில் பொ.ச.மு. 539-ல் வீழ்ச்சியடைந்தபோது, அது அழிக்கப்படாத விதமாகவே, மகா பாபிலோன் 1919-ல் அழிக்கப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் யெகோவாவுடைய நோக்குநிலையில், அந்த அமைப்பு விழுந்தாயிற்று. அவள் ஆக்கினைக்கென நியாயந்தீர்க்கப்பட்டு அழிக்கப்பட வைக்கப்பட்டிருக்கிறாள்; ஆகவே, யெகோவாவுடைய மக்களைப் பொய் மதம் இனிமேலும் சிறையிருப்பில் வைக்கமுடியாது. (லூக்கா 9:59, 60-ஐ ஒத்துப்பாருங்கள்.) இவர்கள் ஏற்றவேளையிலே ஆவிக்குரிய உணவைக் கொடுக்க எஜமானரின் உண்மையும் விவேகமுமுள்ள அடிமையாக சேவிப்பதற்கு விடுவிக்கப்பட்டார்கள். “நன்றாய்ச் செய்தாய்” என்ற ஒரு நியாயத்தீர்ப்பை இவர்கள் பெற்று, யெகோவாவுடைய வேலையில் மறுபடியும் சுறுசுறுப்புள்ளவர்களாவதற்கு பொறுப்பளிக்கப்பட்டார்கள்.—மத்தேயு 24:45-47, NW; 25:21, 23, NW; அப்போஸ்தலர் 1:8.

8. காவற்காரன் ஏசாயா 21:8, 9-ல் என்ன சம்பவத்தை அறிவிக்கிறார், அந்தக் காவற்காரனுக்கு முன்நிழலாக இன்று யார் இருக்கிறார்கள்?

8 ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பு, யெகோவா மற்ற தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தி இந்தத் திரும்புக் கட்டத்தைக் குறிக்கும் சம்பவத்தை முன்னுரைக்கச் செய்தார். “ஆண்டவரே, நான் பகல்முழுதும் என் காவலிலே நின்று, இராமுழுதும் நான் என் காவலிடத்திலே தரித்திருக்கிறேன் என்று சிங்கத்தைப்போல் சத்தமிட்டுக் கூப்பிடு”கிற ஒரு காவற்காரனைப் பற்றி ஏசாயா பேசுகிறார். அந்தக் காவற்காரன் எந்தச் சம்பவத்தை பகுத்தறிந்து சிங்கம்போன்ற தைரியத்தோடு அறிவிக்கிறார்? இந்தச் சம்பவத்தையே: “பாபிலோன் விழுந்தது, விழுந்தது; அதின் விக்கிரக தேவர்களையெல்லாம் தரையோடே மோதி உடைத்தார்,” என்பதாக அறிவித்தார். (ஏசாயா 21:8, 9) இந்தக் காவற்காரன், முழுமையாக விழித்திருக்கிற இன்றைய யோவான் வகுப்பாருக்கு நன்றாகவே முன்நிழலாக இருக்கிறார், இந்த வகுப்பார் பாபிலோன் விழுந்தது என்ற செய்தியை எங்கும் ஒலிக்கச்செய்வதற்கு காவற்கோபுர பத்திரிகையையும் மற்ற தேவராஜ்ய பிரசுரங்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.

மகா பாபிலோன் படிப்படியாக வீழ்ச்சியுறுதல்

9, 10. (அ) பாபிலோனிய மதத்தின் செல்வாக்கு முதல் உலகப் போர் முதல் என்ன படிப்படியான வீழ்ச்சியுறுதலை அனுபவித்திருக்கிறது? (ஆ) மகா பாபிலோனின் விழுந்துபோன நிலைமையை அந்தப் பலமுள்ள தூதன் எப்படி விவரிக்கிறார்?

9 பொ.ச.மு. 539-ல், பூர்வ பாபிலோன் விழுந்தது நீண்டகால படிப்படியான வீழ்ச்சியுறுதலின் துவக்கமாக, அவள் அழிக்கப்படுவதில் முடிவடைந்தது. அதேபோல, முதல் உலகப் போர் முதற்கொண்டு, பாபிலோனிய மதத்தின் செல்வாக்கு பூகோள அளவில் பெரிதும் குறைந்துகொண்டு வந்திருக்கிறது. ஜப்பானில், இரண்டாம் உலகப் போரைப் பின்தொடர்ந்து, ஷின்டோ அரசர் வணக்கத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. சீனாவில், மதரீதியிலான அனைத்து ஏற்பாடுகளையும் நடவடிக்கைகளையும் கம்யூனிஸ அரசாங்கம் கட்டுப்படுத்தி வருகிறது. புராட்டஸ்டன்ட் மதத்தையுடைய வடக்கு ஐரோப்பாவில், அநேகர் மதத்தை அலட்சியமாக கருதுகின்றனர். மேலும் சமீபத்தில் ரோமன் கத்தோலிக்கச் சர்ச், பூமியில் அதன் ஆதிக்கத்திற்குள் இருப்பவர்களிடையே உண்டான பிளவுகளாலும், கருத்துப் பேதங்களாலும் நிலைபெற்றதாயில்லை.—மாற்கு 3:24-26-ஐ ஒத்துப்பாருங்கள்.

10 சந்தேகமில்லாமல் இத்தகைய போக்குகளெல்லாமே ‘ஐபிராத்து நதி வற்றிப்போவதன்’ பாகமாக இருக்கின்றன, மகா பாபிலோனுக்கு வரப்போகிற படைத் தாக்குதலுக்கு ஆயத்தமாக செய்யப்படுகின்றன. அக்டோபர் 1986-ல், செலவுக்கேற்ற வருவாய் இல்லாததன் காரணமாக, சர்ச் “மறுபடியும் பிச்சையெடுக்கவேண்டும்” என்று போப் அறிவித்ததிலும் இந்த ‘வற்றிப்போவது’ காட்டப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 16:12) அந்தப் பலமான தூதன் இங்கு அறிவிக்கிற விதமாக, 1919 முதல், விசேஷமாக, மகா பாபிலோன் ஓர் ஆவிக்குரிய பாழ்நிலமாக பொது மக்களுடைய பார்வைக்கு வெளிக்காட்டப்பட்டிருக்கிறது: “அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்தஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று.” (வெளிப்படுத்துதல் 18:2ஆ) வெகு விரைவில், இன்றைய ஈராக் நாட்டில் காணப்படும் பாபிலோனிய பாழ்க்கடிப்புகள் சிதைவுற்றிருப்பது போல அவள் சொல்லர்த்தமாக அத்தகைய ஒரு பாழ்நிலமாக இருப்பாள்.—எரேமியா 50:25-28-ஐயும் பாருங்கள்.

11. எந்தக் கருத்தில் மகா பாபிலோன் “பேய்களுடைய குடியிருப்பும்,” ‘அசுத்த ஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமுள்ள பறவைகளுடைய கூடுமாயிற்று’?

11 ‘பேய்கள்’ என்று இங்கு சொல்லப்பட்டுள்ள வார்த்தை விழுந்துபோன பாபிலோனைப் பற்றிய ஏசாயாவுடைய விவரிப்பில் காணப்பட்டுள்ள “ஆடு உருவத்தையுடைய பேய்கள்” (செரிம் [seʽi·rimʹ]) என்ற வார்த்தைக்கு ஒத்ததாக இருக்கிறது: “காட்டுமிருகங்கள் அங்கே படுத்துக்கொள்ளும்; ஊளையிடும் பிராணிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும்; கோட்டான்கள் அங்கே குடிகொள்ளும்; காட்டாடு [ஆடு உருவத்தையுடைய பேய்கள், NW] அங்கே துள்ளும்.” (ஏசாயா 13:21) அது சொல்லர்த்தமாக, பேய்களைக் குறிப்பிட்டுக் காட்டாமல், மாறாக அதன் தோற்றம், பார்ப்பவர்களைப் பேய்கள் என்று நினைக்குமாறு செய்யும் பறட்டை மயிரையுடைய பாலைவன மிருகங்களைக் குறிப்பிட்டுக் காட்டியது. மகா பாபிலோனின் பாழ்க்கடிப்புகளில் அத்தகைய மிருகங்கள் அசுத்தமான, விஷம்நிறைந்த காற்றோடுகூட (“அசுத்த ஆவிக”ளோடு) அடையாள அர்த்தமுடன் உயிர்வாழ்வது ஆவிக்குரியரீதியில் அவளுடைய மரித்த நிலைமையை எடுத்துக் காட்டுகிறது. மனிதவர்க்கத்துக்கு எந்தவொரு உயிரூட்டும் எதிர்பார்ப்பையும் அவள் தன்னிடம் கொண்டில்லை.—எபேசியர் 2:1, 2-ஐ ஒத்துப்பாருங்கள்.

12. மகா பாபிலோனின் நிலைமை எப்படி எரேமியா தீர்க்கதரிசனத்தின் 50-ம் அதிகாரத்தோடு ஒத்திருக்கிறது?

12 அவளது நிலைமை எரேமியாவின் தீர்க்கதரிசனத்திற்கும் ஒத்திருக்கிறது: “பட்டயம் கல்தேயர்மேலும், பாபிலோன் குடிகள்மேலும், அதினுடைய பிரபுக்கள்மேலும், அதினுடைய ஞானிகள்மேலும் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார். . . . வறட்சி அதின் தண்ணீர்கள்மேல் வரும், அவைகள் வறண்டுபோம்; அது விக்கிரக தேசம்; அருக்களிப்பான சிலைகளின்மேல் மனமயங்கியிருக்கிறார்கள். ஆகையால் காட்டுமிருகங்களும் ஓரிகளும் அதிலே குடியிருக்கும்; கோட்டான்கள் அதிலே தங்கும்; இனி என்றென்றைக்கும் அது குடியேற்றப்படுவதில்லை; தலைமுறை தலைமுறையாக ஒருவரும் அதில் சஞ்சரிப்பதுமில்லை.” கடவுள் சோதோமையும் கொமோராவையும் கவிழ்த்துப்போட்டதற்கு ஒத்திருக்கிற ஒரு தண்டனையிலிருந்து, விக்கிரகாராதனையும் திரும்பத்திரும்ப அதே ஜெபங்களை ஓதுவதும் மகா பாபிலோனைக் காப்பாற்ற முடியாது.—எரேமியா 50:35-40.

காமவெறியூட்டும் மது

13. (அ) மகா பாபிலோனின் வேசித்தனத்துடைய விஸ்தாரமான பரபெல்லையிடமாக அந்தப் பலமான தூதன் எப்படி கவனத்தைத் திருப்புகிறார்? (ஆ) பூர்வ பாபிலோனில் பெருகியிருந்த எந்த ஒழுக்கக்கேடு மகா பாபிலோனிலும் கண்டறியப்பட்டிருக்கிறது?

13 அடுத்து, அந்தப் பலமான தூதன் மகா பாபிலோனுடைய வேசித்தனத்தின் விஸ்தாரமான பரப்பெல்லையிடமாக கவனத்தைத் திருப்புகிறவராய் அறிவிக்கிறார்: “அவளுடைய வேசித்தனத்தின் [காமவெறியூட்டும் மதுவை, NW] a எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள்.” (வெளிப்படுத்துதல் 18:3) அவள் மனிதவர்க்கத்தின் எல்லா தேசங்களுக்கும் தன்னுடைய அசுத்தமான மத வழிகளைக் கற்பித்திருக்கிறாள். கிரேக்க சரித்திராசிரியன், ஹெரோடொடஸின் பிரகாரம், பூர்வ பாபிலோனில், ஒவ்வொரு கன்னிப்பெண்ணும் ஆலய வழிபாட்டில் தன்னுடைய கற்பை ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுவதன் மூலம் இழக்கவேண்டியதாயிருந்தது. கம்பூச்சியாவிலுள்ள அங்கோர் வாட் என்ற இடத்தில் யுத்தத்தால் சேதமுற்ற சிற்பங்களிலும், இந்துமத விஷ்ணு தேவரைச் சுற்றிலுமுள்ள அருவருப்பான காமவெறியூட்டும் படங்களை காட்டும் இந்தியாவிலுள்ள காஜுராஹோ என்ற இடத்தில் உள்ள ஆலயங்களிலும் அருவருப்புமிகுந்த பாலின சீர்குலைவான நிலைமை இந்நாள் வரையாக வருணித்துக் காட்டப்பட்டிருக்கிறது. ஐக்கிய மாகாணங்களில், 1987-ல் மற்றும் திரும்பவும் 1988-ல் டிவி சுவிசேஷகர்களின் உலகை அதிரவைத்த ஒழுக்கயீனத்தின் வெளிப்பாடுகளும் மத ஊழியர்களிடையே மிகப்பரவலாக இருந்துவந்த ஓரினப்புணர்ச்சிப் பழக்கம் வெளிக்காட்டப்பட்டதும், கிறிஸ்தவமண்டலமுங்கூட சொல்லர்த்தமான வேசித்தனத்தைத் திடுக்கிடவைக்கக்கூடிய மட்டுமீறிய அளவுக்கு அனுமதிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகின்றன. இருந்தபோதிலும், எல்லா தேசங்களும் இன்னுமதிக வினைமையான வேசித்தன பழக்கத்திற்குப் பலியாகியிருக்கின்றன.

14-16. (அ) ஃபாசிஸ இத்தாலியில் என்ன ஆவிக்குரிய, கள்ளத்தனமான மத-அரசியல் தொடர்பு வளர்ந்தது? (ஆ) இத்தாலி அபிஸ்ஸினியாவைக் கைப்பற்றியபோது, ரோமன் கத்தோலிக்கச் சர்ச்சின் பிஷப்புகள் என்ன கூற்றுகளைக் கூறினர்?

14 நாசி ஜெர்மனியில் ஹிட்லரை அதிகாரத்திற்கு உயர்த்திய கள்ளத்தனமான மத-அரசியல் தொடர்பைப் பற்றி நாம் ஏற்கெனவே பார்த்தோம். உலக விவகாரங்களில் மதம் தலையிடுவதன் காரணமாக மற்ற நாடுகளும் பாடனுபவித்தன. உதாரணமாக: ஃபாசிஸ இத்தாலியில் பிப்ரவரி 11, 1929-ல் லாட்டரன் ஒப்பந்தத்தை முசோலினியும் கார்டினல் காஸ்பர்ரியும் கையொப்பமிட்டு, வாடிகன் நகரத்தை ஒரு தனியுரிமைக்கொண்ட நாடாகச் செய்தனர். போப் பையஸ் XI, “இத்தாலியைத் திரும்பக் கடவுளுக்கும் கடவுளை திரும்ப இத்தாலிக்கும் கொடுத்துவிட்டதாக” உரிமைபாராட்டினார். அதுதான் உண்மையா? ஆறு வருடங்களுக்குப் பின் என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். அக்டோபர் 3, 1935-ல், இத்தாலி அபிஸ்ஸினியாவைக் கைப்பற்றி, அது “அடிமைத்தனத்தை இன்னும் கொண்டிருக்கும் ஒரு காட்டுமிராண்டித்தனமான நாடா”யிருந்ததாக உரிமைபாராட்டியது. யார் உண்மையில் காட்டுமிராண்டித்தனமாக இருந்தது? முசோலினியின் காட்டுமிராண்டித்தனமான தன்மையைக் கத்தோலிக்கச் சர்ச் கண்டனஞ்செய்ததா? போப் தெளிவான கூற்றுகளைச் சொல்லவில்லையென்றாலும், அவருடைய பிஷப்புகள் தங்கள் இத்தாலிய ‘தாயகத்தின்’ போர்ச் சேனைகளை எந்தவித கூச்சமுமின்றி ஆசீர்வதித்தனர். சர்வாதிகாரிகளின் காலத்தில் வாடிகன் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் அந்தோனி ரோட்ஸ் அறிக்கைச் செய்கிறார்:

15 “யூடீனின் [இத்தாலியின்] பிஷப் அக்டோபர் 19, [1935] தேதியிட்ட பாதிரிக்குரிய கடிதத்தில் இவ்வாறு எழுதினார்: ‘இந்த வழக்கின் சரியான விஷயங்களையும் தவறான விஷயங்களையும் பற்றித் தீர்ப்பு வழங்குவது சமயோசிதமாகவோ சரியானதாகவோ இல்லை. நம்முடைய யுத்தத் தளவாடங்களின் வெற்றிக்கு உதவுவதே இத்தாலியர்களாக, இன்னும் அதிகமாக கிறிஸ்தவர்களாக நம்முடைய கடமையாயிருக்கிறது.’ பாடுவாவின் பிஷப் அக்டோபர் 21 அன்று ‘நாம் அனுபவிக்கும் இந்தக் கடினமான காலங்களில், நம்முடைய ஆட்சியாளர்கள்மீதும் படைக்கலங்கள்மீதும் நம்பிக்கையைக் கொண்டிருக்க உங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்’ என்று எழுதினார். கிரெமோனாவின் பிஷப் அக்டோபர் 24 அன்று பல படைத்துறைக் கொடிகளைப் பிரதிஷ்டைசெய்து சொன்னார்: ‘கடவுளுடைய ஆசீர்வாதம், ஆப்பிரிக்கத் தேசத்தில், இத்தாலிய மேதைக்குப் புதிய, செழுமையான நிலங்களை வெற்றிபெற்று, இப்படி ரோம கிறிஸ்தவ பண்பாட்டை அவர்களுக்குக் கொண்டுவரக்கூடிய இந்தப் போர் வீரர்களோடு இருப்பதாக. இத்தாலி திரும்பவும் இந்த முழு உலகத்துக்கும் நல்ல நம்பகமான கிறிஸ்தவ ஆலோசகராக இருக்கக்கடவது.’”

16 ரோமன் கத்தோலிக்க குருமாரின் ஆசீர்வாதத்தோடு அபிஸ்ஸினியா கைப்பற்றப்பட்டது. இவர்களில் யாரேனும், எந்த விஷயத்திலாவது, ‘எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி சுத்தமாயிருப்பதில்’ அப்போஸ்தலன் பவுலைப் போல உரிமைபாராட்ட முடியுமா?—அப்போஸ்தலர் 20:26.

17. அதன் மதகுருமார் “தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாக” அடிக்காததினிமித்தம் ஸ்பெய்ன் எப்படி பாடனுபவித்தது?

17 ஜெர்மனி, இத்தாலி, அபிஸ்ஸினியா ஆகியவற்றோடுகூட மகா பாபிலோனின் வேசித்தனத்திற்குப் பலியான மற்றொரு தேசமும் இருக்கிறது—ஸ்பெய்ன். மக்களாட்சி அரசாங்கம் ரோமன் கத்தோலிக்கச் சர்ச்சின் பெரிய அதிகாரத்தைக் குறைப்பதற்கு படிகளை எடுத்ததே அந்த தேசத்தில் 1936-39-ல் நடந்த உள்நாட்டுப் போரை ஓரளவு தூண்டியிருந்தது. போர் நடந்துகொண்டிருக்கையில், அந்தப் புரட்சிகரமான சேனைகளின் கத்தோலிக்கப் ஃபாசிஸ தலைவரான ஃபிரான்கோ “பரிசுத்த சிலுவைப் போரின் கிறிஸ்தவ மாபெருந்தலைவர்” என்று தன்னையே விவரித்தார். பின்னர் அவர் இந்தப் பட்டப்பெயரை வைத்திருக்கவில்லை. நடந்த சண்டையில் அநேக நூற்றாயிரக்கணக்கான ஸ்பானியர்கள் மரித்தனர். இதைத் தவிர, பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த ஒரு மதிப்பீட்டுக்கணக்கின் பிரகாரம், அரசியல் முன்னேற்றக் கருத்துள்ளவர் கட்சியைச்சேர்ந்த 40,000 அங்கத்தினர்களைப் ஃபிரான்கோவின் தேசியவாதிகள் கொன்றனர். இந்த முன்னேற்றக் கருத்துள்ளவர் கட்சியைச்சேர்ந்த ஆட்கள் 8,000 மதகுருமாரை—சந்நியாசிகளை, பாதிரிகளை, மாடக் கன்னிகளை, புதிதாக மதம் மாறியவர்களை—கொன்றுபோட்டனர். உள்நாட்டுப் போரின் திகிலும் அவல நிலையும் இத்தகையதாகவே இருக்கிறது, இயேசுவின் வார்த்தைகளுக்கு செவிசாய்ப்பதன் ஞானத்தை இது எடுத்துக்காட்டுகிறது: “உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.” (மத்தேயு 26:52) இத்தகைய பெருத்த இரத்தப்பழிக்குக் கிறிஸ்தவமண்டலம் உள்ளாகியிருப்பது எவ்வளவு அருவருப்பானது! உண்மையிலேயே, அவளுடைய குருமார் “தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாக” முற்றிலும் அடிக்கவில்லை!—ஏசாயா 2:4.

வர்த்தகர்கள்

18. “பூமியின் வர்த்தகர்” யார்?

18 “பூமியின் வர்த்தகர்” யார்? சந்தேகமில்லாமல், வியாபாரிகள், பெரும் வணிகர்கள், பெரிய வியாபாரம் செய்யக்கூடிய சாமர்த்தியமான வியாபாரிகள் என்று இவர்களை இன்று நாம் அழைப்போம். முறைப்படியான வியாபாரம் செய்வது தவறு என்று சொல்வதற்கில்லை. நேர்மையின்மை, பேராசை போன்றவற்றை எச்சரித்து வியாபாரம் செய்யும் ஆட்களுக்கு பைபிள் ஞானமான புத்திமதியைக் கொடுக்கிறது. (நீதிமொழிகள் 11:1; சகரியா 7:9, 10; யாக்கோபு 5:1-5) “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே” பெரிய ஆதாயம். (1 தீமோத்தேயு 6:6, 17-19) என்றபோதிலும், சாத்தானுடைய உலகம் நீதியான நியமங்களைப் பின்பற்றுவதில்லை. ஊழல் நிறைந்திருக்கிறது. மதத்திலும், அரசியலிலும்—பெரிய வியாபாரத்திலும்—அது காணப்படுகிறது. பெரிய அரசாங்க அதிகாரிகள் செய்யும் பணமோசடி, தடை செய்யப்பட்ட போர்க்கலங்களை சட்டத்துக்கு விரோதமாக வியாபாரம் செய்வது போன்று நற்பெயரை கெடுக்கும் அவதூறான காரியங்களைப் பற்றி அவ்வப்போது செய்தி மூலங்கள் தெரியப்படுத்துகின்றன.

19. உலகப் பொருளாதாரத்தைப் பற்றிய என்ன உண்மை, பூமியின் வர்த்தகர் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் சாதகமற்ற விதத்தில் குறிப்பிடப்பட்டதன் காரணத்தை விளக்க உதவுகிறது?

19 கோடிக்கணக்கான மனிதர்கள் வாழ்க்கைக்குரிய தேவைகளில்லாமல் இருக்கும்போது, உலகமுழுவதும் ஒவ்வொரு வருடமும் பத்தாயிரம் கோடி டாலருக்கும் மேலாக போர்த் தளவாடங்களின் வியாபாரம் உயர்ந்துகொண்டே செல்கிறது. அது நல்லதல்ல. ஆனால் யுத்தத் தளவாடங்களே உலகின் பொருளாதாரத்துக்கு ஓர் அடிப்படையான ஆதாரமாகத் தோன்றுகின்றன. ஏப்ரல் 11, 1987 தேதியிட்ட ஸ்பெக்டேட்டர் என்ற லண்டன் பத்திரிகையிலுள்ள ஒரு கட்டுரை அறிக்கைச் செய்தது: “வெறுமனே நேரடியாகத் தொடர்புகொண்ட தொழிற்சாலைகளை எண்ணிப்பார்த்தால், ஐ.நா.-வில் 4,00,000 வியாபாரங்களும் ஐரோப்பாவில் 7,50,000 வியாபாரங்களும் உட்பட்டிருக்கின்றன. ஆனால், அக்கறைக்குரிய காரியம் என்னவென்றால், ஆயுதங்களைக் கட்டியமைப்பதில் சமுதாயமும் பொருளாதாரமும் வகிக்கும் பாகம் வளர்ந்துகொண்டிருக்க, உற்பத்தியாளர்கள் நன்கு பாதுகாக்கப்பட்டிருக்கிறார்களா என்று உண்மையிலிருக்கிற கேள்வி மறைந்துவிடுகிறது.” அணுகுண்டுகளும் மற்ற ஆயுதங்களும் பூமி முழுவதிலும், பிற்கால எதிரிகளுக்கும் வியாபாரம் செய்யப்பட்டு பெரும் லாபங்கள் கிடைக்கின்றன. ஒரு நாள் அந்த அணுகுண்டுகள் அக்கினிமயமான அழிவாக வந்து அவற்றை விற்பவர்களை அழித்துப்போடும். என்னே ஒரு முரண்படும் மெய்ம்மையாயிருக்கிறது! இதோடுகூட இந்த யுத்தத் தளவாடங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையைச் சுற்றியிருக்கும் இலஞ்ச ஊழல். ஸ்பெக்டேட்டர் என்ற பத்திரிகையின் பிரகாரம், ஐக்கிய மாகாணங்களில் மட்டும் “ஒவ்வொரு வருடமும் இராணுவ நிறுவனம் $90 கோடி மதிப்பையுடைய யுத்தத் தளவாடங்களையும் கருவிகளையும் மாயமாக இழந்துவிடுகிறது.” வெளிப்படுத்துதல் புத்தகத்திலுள்ள பூமியின் வர்த்தகர் சாதகமற்ற விதத்தில் குறிப்பிடப்படுவதில் எந்தவித ஆச்சரியமுமில்லை!

20. மதம் ஊழல்நிரம்பிய வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறது என்பதை எந்த உதாரணம் காட்டுகிறது?

20 மகிமையான தூதன் முன்னுரைத்தபடி, மதம் அத்தகைய ஊழல்நிரம்பிய வியாபார நடவடிக்கைகளில் மிகவும் ஈடுபட்டிருக்கிறது. உதாரணமாக, 1982-ல் இத்தாலியின் பான்கோ அம்புரோசியானோ மூடப்பட்டதோடு வாடிகன் சம்பந்தப்பட்டிருந்தது. அந்த வழக்கு 1980-களினூடே தொடர்ந்து நீடித்தது. அதில் விடையளிக்கப்படாத கேள்வி: அந்தப் பணம் எங்கே போனது? பிப்ரவரி 1987-ல் மிலான் குற்றத்துறை நடுவர்கள் ஓர் அமெரிக்க தலைமைக்குரு உட்பட, மூன்று வாடிகன் மதகுருமார்களைக் கைது செய்ய ஆணைகளைப் பிறப்பித்தனர், இவர்கள் கடன் தீர்க்கமுடியாமல் மோசடிசெய்ததற்கு துணை ஆட்களாக இருந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டனர். வாடிகனோ அயல்நாட்டிடம் ஒப்படைக்கப்பட்ட மனுவை நிராகரித்தது. ஜூலை 1987-ல், எதிர்ப்பைத் தெரிவித்து செய்யப்பட்ட அமளியின் மத்தியிலும், வாடிகனுக்கும் இத்தாலிய அரசாங்கத்திற்குமிடையே செய்யப்பட்ட ஒரு பழைய ஒப்பந்தத்தை அடிப்படையாகக்கொண்டு, இத்தாலியிலுள்ள பெரிய மறுவிசாரணை நீதிமன்றம் அந்த ஆணைகளை ரத்துசெய்தது.

21. இயேசு தம்முடைய நாளில், கேள்விக்குரிய வியாபார நடவடிக்கைகளில் சம்பந்தம் வைத்திருக்கவில்லை என்பதை எப்படி அறிந்துகொள்கிறோம், ஆனால் இன்று பாபிலோனிய மதத்தில் எதை பார்க்கிறோம்?

21 இயேசு தம்முடைய நாளில், கேள்விக்குரிய வியாபார நடவடிக்கைகளில் சம்பந்தம் வைத்திருந்தாரா? இல்லை. அவர் ஒரு சொத்துக்குச் சொந்தக்காரராகவுங்கூட இருக்கவில்லை, அவருக்குத் “தலைசாய்க்க இடமில்லை.” ஐசுவரியவானாயிருந்த இளம் தலைவர் ஒருவனிடம், “உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா,” என்று இயேசு ஆலோசனை கொடுத்தார். அது ஒரு சிறந்த அறிவுரையாக இருந்தது, ஏனெனில், வியாபாரம் சம்பந்தப்பட்ட காரியங்களின்மீது உண்டான எல்லா கவலைகளையும் அவன் மனதிலிருந்து அகற்றிப்போடுவதில் அது விளைவடைந்திருக்கும். (லூக்கா 9:58; 18:22) மாறாக, பாபிலோனிய மதம் பெரிய வியாபாரத்தோடு வேண்டாத உறவுகளை எப்போதும் வைத்திருக்கிறது. உதாரணமாக, 1987-ல் ஃப்ளாரிடாவிலுள்ள மியாமியில் கத்தோலிக்கத் தலைமைக் குருவுடைய மாவட்டத்தின் நிதி நிர்வாக அதிகாரியாயிருந்தவர், அணுஆயுதங்கள், A-தரமிடப்பட்ட திரைப்படங்கள், சிகரெட்டுகள் ஆகிய கம்பெனிகளில் சர்ச் பங்குகளை கொண்டிருந்தது என்பதை ஒத்துக்கொண்டதாக ஆல்பெனி டைம்ஸ் யூனியன் அறிக்கைச் செய்தது.

‘என் ஜனங்களே, அவளைவிட்டு வெளியே வாருங்கள்’

22. (அ) வானத்திலிருந்து உண்டான சத்தம் என்ன சொல்கிறது? (ஆ) பொ.ச.மு. 537-லும் பொ.ச. 1919-லும் நடந்த என்ன காரியம் கடவுளுடைய மக்களின் பாகத்தில் அதிக சந்தோஷத்திற்கு வழிநடத்தியது?

22 அந்தத் தீர்க்கதரிசன மாதிரியின் கூடுதலான நிறைவேற்றத்தை, யோவான் அடுத்துச் சொல்லும் வார்த்தைகள் குறிப்பிடுகின்றன: “பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள் [என்றது].” (வெளிப்படுத்துதல் 18:4) எபிரெய வேதாகமத்தில் உள்ள பூர்வ பாபிலோனின் வீழ்ச்சியைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் யெகோவா அவருடைய மக்களுக்குச் சொல்லும் இந்தக் கட்டளையையும் உட்படுத்துகின்றன: “பாபிலோனின் நடுவிலிருந்தோ”டுங்கள். (எரேமியா 50:8, 13) அதேவிதமாக, மகா பாபிலோனுக்கு வரப்போகிற அழிவினிமித்தம், கடவுளுடைய மக்கள் தப்பித்துக்கொள்ளும்படி இப்போது துரிதப்படுத்தப்படுகிறார்கள். பொ.ச.மு. 537-ல் பாபிலோனிலிருந்து தப்பியோடுவதற்குக் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பம் உண்மையுள்ள இஸ்ரவேலர்களுடைய பாகத்தில் அதிக மகிழ்ச்சியைத் தந்தது. அதேவிதமாக, 1919-ல் கடவுளுடைய மக்கள் பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்டது, அவர்களுடைய பாகத்திலும் சந்தோஷத்திற்கு வழிநடத்தியது. (வெளிப்படுத்துதல் 11:11, 12) அதுமுதற்கொண்டு மற்ற லட்சக்கணக்கான ஆட்கள் ஓடும்படி சொல்லப்பட்டுள்ள கட்டளைக்குக் கீழ்ப்படிந்திருக்கிறார்கள்.

23. வானத்திலிருந்து உண்டான சத்தம் மகா பாபிலோனை விட்டு ஓடிவருவதன் அவசரத்தன்மையை எப்படி வலியுறுத்திக் காட்டுகிறது?

23 உலக மதங்களோடு உறுப்பினர்களாக இல்லாமல், முற்றிலும் பிரித்துக்கொண்டு மகா பாபிலோனை விட்டு ஓடிவருவது உண்மையிலேயே அவ்வளவு அவசரமாயிருக்கிறதா? அவசரமாகத்தான் இருக்கிறது, ஏனென்றால் இந்தப் பண்டைய, பயங்கரமான மகா பாபிலோனைப் பற்றிய கடவுளுடைய நோக்குநிலையை நாம் ஏற்பது அவசியமானது. அவர் அவளை மகா வேசி என்று அழைப்பதன் மூலம் அவருடைய வார்த்தைகள் அவளைக் குறைத்துக்கூறுவதாய் இல்லை. ஆகவே இப்போது வானத்திலிருந்து வரும் சத்தம் இந்த வேசியைக் குறித்து மேலும் சொல்கிறது: “அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவுகூர்ந்தார். அவள் உங்களுக்குப் பலனளித்தது போல நீங்களும் அவளுக்குப் பலனளியுங்கள்; அவளுடைய கிரியைகளுக்குத்தக்கதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்துகொடுங்கள். அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லையென்று அவள் தன் இருதயத்திலே எண்ணினாள். ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரே நாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர்.”—வெளிப்படுத்துதல் 18:5-8.

24. (அ) எதைத் தவிர்ப்பதற்கு கடவுளுடைய மக்கள் மகா பாபிலோனை விட்டு ஓடிவரவேண்டும்? (ஆ) மகா பாபிலோனை விட்டு ஓடிவராத ஆட்கள் எந்தப் பாவங்களில் அவளோடு பங்குடையவர் ஆவர்?

24 அவை கடுஞ்சொற்கள்! ஆகவே, செயல்படுவது அவசியமாயிருக்கிறது. எரேமியா தன் காலத்திலிருந்த இஸ்ரவேலர்களை இவ்வாறு சொல்லி செயல்பட துரிதப்படுத்தினார்: “பாபிலோனின் . . . நடுவிலிருந்து ஓ[டுங்கள்], . . . இது கர்த்தர் அதினிடத்தில் பழிவாங்குகிற காலமாயிருக்கிறது; அவர் அதற்குப் பதில் செலுத்துவார். என் ஜனங்களே, நீங்கள் அதின் நடுவிலிருந்து புறப்படுங்கள்; கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்துக்குத் தப்பும்படி அவனவன் தன்தன் ஆத்துமாவை இரட்சித்துக்கொள்ளக்கடவன்.” (எரேமியா 51:6, 45) அதேவிதமாக, இன்றுள்ள கடவுளுடைய மக்களுக்கு வானத்திலிருந்து உண்டாகும் சத்தம் அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாதபடிக்கு மகா பாபிலோனிலிருந்து ஓடும்படி எச்சரிக்கிறது. மகா பாபிலோன் உட்பட, இந்த உலகத்தின்மீது வரக்கூடிய வாதைபோன்ற நியாயத்தீர்ப்புகள் இப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. (வெளிப்படுத்துதல் 8:1–9:21; 16:1-21) இந்த வாதைகளினிமித்தம் அவதிப்பட்டு, அவளோடு முடிவில் மரிக்க விரும்பாத கடவுளுடைய மக்கள் பொய் மதத்திலிருந்து தங்களையே பிரித்துவைத்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், அந்த அமைப்பில் தொடர்ந்திருப்பது அவளுடைய பாவங்களில் பங்குகொள்ள அவர்களைச் செய்விக்கும். அவளைப்போலவே அவர்கள், ஆவிக்குரிய வேசித்தனம் செய்ததற்கும் “பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய” இரத்தம் சிந்தப்படுவதற்கும் குற்றமுள்ளவர்களாக ஆவார்கள்.—வெளிப்படுத்துதல் 18:24; ஒத்துப்பாருங்கள்: எபேசியர் 5:11; 1 தீமோத்தேயு 5:22.

25. கடவுளுடைய மக்கள் எந்த வழிகளில் பூர்வ பாபிலோனை விட்டு வெளியே வந்தனர்?

25 என்றாலும், மகா பாபிலோனை விட்டு கடவுளுடைய மக்கள் எப்படி வெளியே வருவார்கள்? பூர்வ பாபிலோனுடைய விஷயத்தில், யூதர்கள் பாபிலோன் பட்டணத்திலிருந்து வாக்குப்பண்ணப்பட்ட தேசம் வரை கால்நடையாய் பிரயாணம்பண்ண வேண்டியிருந்தது. ஆனால் அதைக் காட்டிலும் அதிகம் உட்பட்டிருந்தது. ஏசாயா தீர்க்கதரிசனமாக இஸ்ரவேலர்களிடம் சொன்னார்: “புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள்.” (ஏசாயா 52:11) ஆம், யெகோவாவுடைய வணக்கத்தைக் கறைபடுத்தும் பாபிலோனிய மதத்தின் அனைத்து அசுத்தமான பழக்கவழக்கங்களையும் அவர்கள் விட்டுவரவேண்டும்.

26. ‘நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு, அசுத்தமானதைத் தொடாதிருங்கள்’ என்ற வார்த்தைகளுக்கு கொரிந்து கிறிஸ்தவர்கள் எப்படி கீழ்ப்படிந்தனர்?

26 கொரிந்தியருக்கு எழுதிய தன்னுடைய நிருபத்தில் அப்போஸ்தலன் பவுல் ஏசாயாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிச் சொன்னார்: “அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? . . . ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.” அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிய கொரிந்து கிறிஸ்தவர்கள் கொரிந்து பட்டணத்தை விட்டுச் செல்லவேண்டியதில்லை. என்றபோதிலும், அவர்கள் வெளிப்படையாக பொய் மதத்தின் அசுத்தமான ஆலயங்களையும் ஆவிக்குரிய பிரகாரமாக அந்த விக்கிரக வணக்கத்தாருடைய அசுத்தமான செயல்களிலுமிருந்து தங்களையே பிரித்துக்கொள்ள வேண்டியது அவசியமாயிருந்தது. கடவுளுடைய மக்கள் 1919-ல் மகா பாபிலோனை விட்டு ஓடிச்செல்ல துவங்கியதினிமித்தம் எஞ்சியிருந்த அசுத்தமான போதனைகளிலும் பழக்கவழக்கங்களிலுமிருந்து தங்களை சுத்திகரித்துக்கொண்டனர். இவ்வாறு, அவருடைய சுத்திகரிக்கப்பட்ட மக்களாக அவரைச் சேவித்தனர்.—2 கொரிந்தியர் 6:14-17; 1 யோவான் 3:3.

27. பூர்வ பாபிலோனுக்கும் மகா பாபிலோனுக்கும் இடையே என்ன இணைப்பொருத்தங்கள் இருக்கின்றன?

27 பூர்வ பாபிலோனுடைய வீழ்ச்சியும் முடிவான அழிவும் அவள் செய்த பாவங்களினிமித்தம் கிடைத்த தண்டனையாகும். “அதின் ஆக்கினை வானமட்டும் ஏறி”னது. (எரேமியா 51:9) அதேபோல, மகா பாபிலோனின் பாவங்கள் “வானபரியந்தம் எட்டி,” யெகோவாவுடைய கவனத்துக்குத்தாமே கொண்டுவரப்பட்டிருக்கின்றன. அநீதி, விக்கிரகாராதனை, ஒழுக்கக்கேடு, கொடுமை, களவு, கொலை செய்தமைக்கு அவள் குற்றமுள்ளவளாயிருக்கிறாள். சிறியளவில், யெகோவாவுடைய ஆலயத்துக்கும் அவருடைய உண்மை வணக்கத்தாருக்கும் செய்த காரியங்களுக்குப் பழிவாங்குவதாய் பூர்வ பாபிலோனின் வீழ்ச்சியிருந்தது. (எரேமியா 50:8, 14; 51:11, 35, 36) அதேபோல, கடந்த நூற்றாண்டுகளினூடே உண்மை வணக்கத்தாருக்குச் செய்த காரியங்களுக்குப் பழிவாங்குவதன் வெளிக்காட்டுகளாக, மகா பாபிலோனின் வீழ்ச்சியும் முடிவில் அவளுக்கு ஏற்படவிருக்கும் அழிவும் இருக்கிறது. உண்மையில், அவளுக்கு ஏற்படும் முடிவான அழிவு ‘நம்முடைய தேவன் நீதியைச் சரிக்கட்டும் நாளின்’ துவக்கமாயிருக்கிறது.—ஏசாயா 34:8-10; 61:2; எரேமியா 50:28.

28. மகா பாபிலோனிடம் யெகோவா என்ன நீதியான தராதரத்தைப் பிரயோகிக்கிறார், ஏன்?

28 மோசேயின் நியாயப்பிரமாணத்தின்கீழ், இஸ்ரவேலன் ஒருவன் தன்னுடைய உடன் தேசத்தானிடமிருந்து திருடுவானேயானால், பதிலாக குறைந்தபட்சம் இரட்டிப்பாய் அவன் கொடுக்கவேண்டும். (யாத்திராகமம் 22:1, 4, 7, 9) வரப்போகிற மகா பாபிலோனின் அழிவில், யெகோவா இதேபோன்ற ஒரு நீதியான தராதரத்தைப் பிரயோகிப்பார். அவள் எவ்வளவாய் கொடுத்தாளோ, அவ்வளவாய் அவள் இரட்டிப்பாய் பெறவேண்டும். எந்தவித இரக்கமும் காட்டப்படாது, ஏனெனில் மகா பாபிலோன் தனக்குப் பலியான ஆட்களுக்கு எந்தவித இரக்கத்தையும் காட்டவில்லை. ‘செல்வச்செருக்காய்’ தன்னைத்தானே வைத்துகொள்வதற்குப் பூமியிலுள்ள மக்களிடமிருந்து சுரண்டி வாழ்ந்தாள். இப்போது அவள் கஷ்டத்தையும் துக்கத்தையும் அனுபவிப்பாள். பூர்வ பாபிலோன், தான் முற்றிலும் ஒரு பாதுகாப்பான நிலைமையிலுள்ளதாக உணர்ந்து, “நான் விதவையாவதில்லை, நான் சந்தான தேசத்தை அறிவதில்லை,” என்று பெருமைப்பட்டுக்கொண்டாள். (ஏசாயா 47:8, 9, 11) மகா பாபிலோனும் பாதுகாப்பாகத்தான் உணர்ந்துவருகிறது. ஆனால் “வல்லமையுள்ளவ”ராகிய யெகோவா விதித்திருக்கும் அவளுடைய அழிவோ, “ஒரே நாளில்” நடப்பதுபோல வெகு விரைவில் நடைபெறும்!

[அடிக்குறிப்பு]

a துணைக்குறிப்புகளடங்கிய புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள், அடிக்குறிப்பு.

[கேள்விகள்]

[பக்கம் 263-ன் பெட்டி]

“ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்”

ஐரோப்பிய வியாபாரிகள் 1800-களின் முற்பகுதியில் அபினியை பெரிய அளவில் சீனாவுக்குக் கடத்தி வந்தனர். மார்ச் 1839-ல் சீன அதிகாரிகள் பிரிட்டிஷ் வியாபாரிகளிடமிருந்து அம்மருந்தைக்கொண்ட 20,000 பெட்டிகளைக் கைப்பற்றுவதன் மூலம் சட்டத்துக்கு விரோதமாக செய்யப்பட்டு வந்த வியாபாரத்தைத் தடுத்து நிறுத்த முயன்றனர். இது பிரிட்டனுக்கும் சீனாவுக்குமிடையே அமளியை உண்டுபண்ணியது. இந்த இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவுகள் மோசமானபோது, புராட்டஸ்டன்ட் மிஷனரிகள் இப்படிப்பட்ட பின்வரும் கூற்றுகளைச் சொல்லி போர் தொடுக்கும்படி பிரிட்டனைத் துரிதப்படுத்தினர்:

“இந்தக் கஷ்டங்கள் என் இருதயத்தை எவ்வளவு சந்தோஷப்படுத்துகின்றன, ஏனெனில், இங்கிலாந்து அரசாங்கம் கோபங்கொள்ளும் என்று நான் நினைக்கிறேன், சீனாவில் கிறிஸ்துவின் சுவிசேஷம் உட்பிரவேசிப்பதற்கு தடையாய் இருப்பவற்றை கடவுள் தம்முடைய வல்லமையைக்கொண்டு இடித்துப்போடுவார் என்று நான் நினைக்கிறேன்.”—ஹென்ரியட்டா ஷக், சத்தர்ன் பாப்டிஸ்ட் மிஷனரி.

கடைசியாக, போர் ஆரம்பித்தது—அந்தப் போர்தான் இன்று அபினி போர் என்று அறியப்படுகிறது. மிஷனரிகள் இருதயப்பூர்வமாக இவ்வித குறிப்புகளைச் சொல்லி பிரிட்டனை உற்சாகப்படுத்தினர்:

“நான் தற்போதைய காரியங்களின் நிலைமையை அபினியினால் நடந்த காரியமாகவோ ஆங்கிலேயர்களால் நடந்த காரியமாகவோ பின்நோக்கிப் பார்ப்பதற்கு பதிலாக, சீனாவிடம் இரக்கங்காட்டி அவளுடைய தனிமைப்பட்டிருந்த சுவரை இடித்து உட்பிரவேசிப்பதற்குக் கடவுள் மனிதனுடைய பொல்லாப்பைப் பயன்படுத்தி, அவருடைய நோக்கங்களை நிறைவேற்றச் செய்த மகத்தான திட்டமாகக் காண கட்டாயப்படுத்தப்படுகிறேன்.”—பீட்டர் பார்க்கர், பேரவையில் மிஷனரி.

மற்றொரு பேரவை மிஷனரி, சாமுவேல் W. வில்லியம்ஸ் கூடுதலாக சொன்னார்: “குறிப்பிடத்தக்க விதத்தில் வெளிப்படையான இந்த எல்லா காரியங்களிலும் கடவுளுடைய கரம் தெளிவாய் காணப்படுகிறது. பூமியின்மேல் பட்டயத்தையே அனுப்பவந்தேன் என்று சொன்னவர் அவருடைய சத்துருக்களுக்குத் தீவிரமான அழிவைக் கொண்டுவந்து, தம்முடைய சொந்த ராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்கு இப்போது இங்கு வந்திருக்கிறார் என்பதில் எங்களுக்கு சந்தேகமேயில்லை. அவர் சமாதானப் பிரபுவை ஸ்தாபிக்கும் வரை கவிழ்த்துப்போட்டுக்கொண்டே செல்வார்.”

சீன குடிமக்களின் பயங்கரமான படுகொலை சம்பந்தமாக J. லூயிஸ் ஷக் எழுதினார்: “தெய்வீக சத்தியம் முன்செல்லாமல் தடைசெய்யும் அநாவசியமான காரியங்களை நீக்கிப்போடுவதற்கு உள்ள கர்த்தரின் நேரடியான கருவிகளாக . . . இப்பேர்ப்பட்ட காட்சிகளை நான் கருதுகிறேன்.”

பேரவை மிஷனரி, இலைஜா C. பிரிட்ஜ்மன் கூடுதலாக சொன்னார்: “கடவுள் தம்முடைய ராஜ்யத்திற்கு வழியை ஆயத்தப்படுத்த, எப்போதும் உள்நாட்டு அதிகாரத்தின் பலத்த கரங்களை உபயோகித்திருக்கிறார் . . . இந்த மகத்தான காலங்களில் பிரதிநிதியாயிருப்பது மனிதர்கள்; வழிநடத்தும் வல்லமை, கடவுள். எல்லா தேசத்தாருக்கும் மேலாக இருக்கிற பெரிய ஆளுநர், சீனாவை தண்டிக்கவும் தாழ்த்தவும் இங்கிலாந்தைப் பயன்படுத்தியிருக்கிறார்.”—சீனாவிலும் அமெரிக்காவிலும் உள்ள மிஷனரி வியாபார நிறுவனம் (ஆங்கிலம்) என்பதில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஸ்டார்ட் கிரேடன் மில்லர் 1974-ல் எழுதிய “என்ட்ஸ் அன்ட் மீன்ஸ்” என்ற ஒரு கட்டுரையிலிருந்து மேற்கோள்கள் எடுக்கப்பட்டுள்ளன (ஜான் K. ஃபேர்பாங்க் என்பவரால் பதிப்புச் செய்யப்பட்ட ஹார்வார்ட் ஆராய்ச்சி).

[பக்கம் 264-ன் பெட்டி]

“பூமியின் வர்த்தகர் . . . ஐசுவரியவான்களானார்கள்”

“[பெர்நாடினோ] நொகாரா [வாடிகனின் நிதி நிர்வாக அதிகாரி] 1929-க்கும் இரண்டாம் உலகப் போர் துவங்குவதற்குமிடையே வாடிகன் தலைநகரத்தையும் வாடிகன் பிரதிநிதிகளையும் இத்தாலியின் பொருளாதாரத்தின் வெவ்வேறான அம்சங்களில் உழைக்கும்படி நியமித்தார்—விசேஷமாக, மின்சக்தி, தொலைபேசி தொடர்புகள், கடனும் சேமித்தலும், சிறிய ரயில் சாலைகள், மேலும் விவசாய சாதனங்களின் உற்பத்தி, சிமென்ட், செயற்கை நெசவு நூல்கள் ஆகியவை. இந்தத் துணிகரமான முயற்சிகள் நன்கு பலனளித்தன.

“நொகாரா, லா சொஸையிடா இட்டாலியானா டெல்லா விஸ்கோசா, லா சூப்பர்டெஸ்ஸிலி, லா சொஸையிடா மெரிடியொநால் இன்டஸ்ட்ரி டெஸ்ஸிலி, லா ஸிசரேயான் உட்பட மற்ற அநேக கம்பெனிகளைப் பேராசையோடு ஒன்றுசேர்த்தார். CISA-விஸ்கோஸா என்று அதற்குப் பெயரிட்டு, பெரிதும் நம்பத்தகுந்த, குருமாராயில்லாத வாடிகன் நபர் ஒருவர், பாரொன் ஃபிரான்செஸ்கோ மரியா ஒடேஸ்ஸோ என்பவரின் கட்டுப்பாட்டின்கீழ் வைத்துவிட்டு, நொகாரா SNIA-விஸ்கோஸா என்ற இத்தாலியின் மிகப் பெரிய ஜவுளி உற்பத்தியாளருடைய புதிய கம்பெனியைக் கைப்பற்றிக்கொள்ள திட்டமிட்டார். முடிவில் SNIA-விஸ்கோஸாவின் மீதிருந்த வாடிகனின் அக்கறை அதிகமாக வளர்ந்து, காலப்போக்கில் வாடிகனின் கட்டுப்பாட்டின்கீழ் வந்தது—நடைபெற்ற இக்காரியத்தின் நிரூபணமாக இதன் பின்னர் பாரொன் ஒடேஸ்ஸோ துணை ஜனாதிபதியாக ஆனார்.

“இப்படி நொகாரா ஜவுளி தொழிலில் ஈடுபட்டார். அவர் அநேக மறைமுகமான சூழ்ச்சிகளைத் தன்னிடம் உடையவராயிருந்ததன் காரணமாக மற்ற தொழிற்சாலைகளில் வேறு வழிகளைப் பயன்படுத்தி அதில் ஈடுபட்டார். இந்தத் தன்னலமற்ற மனிதன் . . . இத்தாலிய பொருளாதாரத்துக்கு உயிரூட்ட இத்தாலிய சரித்திரத்திலேயே எந்தவொரு தனிப்பட்ட வியாபாரியும் செய்யாத அளவுக்கு மிகவும் அதிகத்தைச் செய்தார் . . . பெனிட்டோ முசோலினி, தான் கற்பனை செய்த ஆட்சியை முற்றிலும் அடையமுடியவில்லை, ஆனால் வாடிகனும் பெர்நாடினோ நொகாராவும் மற்றொரு வகையான ஆட்சியை அமைத்துக்கொள்ள உதவினார்.”—வாடிகன் எம்பையர், நினோ லொ பெல்லோ எழுதியது, பக்கங்கள் 71-3.

மகா பாபிலோனுக்கும் பூமியின் வர்த்தகர்களுக்குமிடையே உள்ள நெருக்கமான ஒத்துழைப்புக்கு இது வெறும் ஓர் உதாரணமாக இருக்கிறது. தங்கள் வியாபார கூட்டாளி அழிக்கப்படும்போது இந்த வர்த்தகர்கள் துக்கிப்பார்கள் என்பதில் ஆச்சரியமேயில்லை!

[பக்கம் 259-ன் படம்]

மனிதர் பூமி முழுவதும் சிதறிச்செல்கையில், பாபிலோனிய மதத்தையும் தங்களோடு எடுத்துச் சென்றனர்

[பக்கம் 259-ன் படம்]

[பக்கம் 261-ன் படம்]

காவற்காரனைப் போல, பாபிலோன் விழுந்தது என்று யோவான் வகுப்பு அறிவிக்கிறது

[பக்கம் 266-ன் படம்]

பூர்வ பாபிலோனின் பாழ்க்கடிப்புகள் மகா பாபிலோனுக்கு வரக்கூடிய அழிவைக் குறித்துக்காட்டுகின்றன