Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மதுரமும் கசப்பும் கலந்த செய்தி

மதுரமும் கசப்பும் கலந்த செய்தி

அதிகாரம் 24

மதுரமும் கசப்பும் கலந்த செய்தி

தரிசனம் 6​—வெளிப்படுத்துதல் 10:1–11:19

பொருள்: சிறு புஸ்தகத்தைப் பற்றிய தரிசனம்; ஆலய அனுபவங்கள்; ஏழாவது எக்காளம் ஊதப்படுவது

நிறைவேற்றத்தின் காலம்: இயேசு 1914-ல் சிங்காசனத்திலேற்றப்பட்டதிலிருந்து மிகுந்த உபத்திரவம் வரை

1, 2. (அ) இரண்டாம் ஆபத்து எதில் விளைவடைந்தது, இந்த ஆபத்து எப்போது முடிவுக்குக் கொண்டுவரப்படும்? (ஆ) வானத்திலிருந்து யார் இறங்கி வருவதாக யோவான் இப்போது காண்கிறார்?

 இரண்டாம் ஆபத்து நாசகரமானதாயிருந்திருக்கிறது. இது “மனுஷரில் மூன்றிலொருபங்கை,” கிறிஸ்தவமண்டலத்தையும் அவளுடைய தலைவர்களையும் வாதித்திருக்கிறது, இப்படியாக அவர்கள் ஆவிக்குரிய பிரகாரமாக மரித்தவர்களாக அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 9:15) இதற்குப் பின்பு மூன்றாம் ஆபத்து எதை கொண்டுவரும் என்பதாக யோவான் ஒருவேளை யோசித்திருக்க வேண்டும். ஆனால் காத்திருங்கள்! வெளிப்படுத்துதல் 11:14-ல் பதிவாகியுள்ள குறிப்பை நாம் வந்தடையும் வரை இரண்டாம் ஆபத்து இன்னும் முடிவடைந்துவிடவில்லை. இதற்கு முன்பு, யோவான் ஒரு திருப்பத்தை காண இருக்கிறார், இதில் இவர்தானே பங்குக்கொள்கிறார். அச்சந்தரும் காட்சியோடு இது ஆரம்பமாகிறது:

2 “பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்து இறங்கிவரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது.”—வெளிப்படுத்துதல் 10:1.

3. (அ) ‘பலமுள்ள தூதன்’ யார்? (ஆ) அவருடைய சிரசின்மேல் உள்ள வானவில் எதைக் குறிக்கிறது?

3 இந்தப் ‘பலமுள்ள தூதன்’ யார்? தெளிவாகவே, மகிமைப்பொருந்திய இயேசு கிறிஸ்துவாக இவர் இருக்கிறார், இப்போது வேறொரு பங்கை வகிக்க இருக்கிறார். அவர் காணக்கூடாதவராக, மேகத்தினால் சூழப்பட்டிருக்கிறார், இது இயேசுவைக் குறித்து யோவான் முன்பு சொன்ன வார்த்தைகளை நம்முடைய நினைவுக்கு கொண்டுவருகிறது: “இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்.” (வெளிப்படுத்துதல் 1:7; ஒப்பிடுக: மத்தேயு 17:2-5.) அவருடைய சிரசின்மேல் வானவில்லிருந்ததானது யோவான் முன்பு யெகோவாவுடைய சிங்காசனத்தை கண்ட காட்சியை நமக்கு நினைப்பூட்டுகிறது, அது ‘பார்வைக்கு மரகதம்போல தோன்றிய வானவில்லோடிருந்தது.’ (வெளிப்படுத்துதல் 4:3; ஒப்பிடுக: எசேக்கியேல் 1:28.) அந்த வானவில்லானது கடவுளுடைய சிங்காசனத்தைச் சுற்றிலுமுள்ள சாந்தியையும் அமைதியையும் குறித்துக் காட்டினது. இதைப் போலவே, அந்தத் தூதனுடைய சிரசின்மேல் உள்ள இந்த வானவில்லானது அவரை விசேஷித்த சமாதான தூதுவராகவும், யெகோவா முன்கூறின “சமாதானப்பிரபு”வாகவும் அடையாளப்படுத்தினது.—ஏசாயா 9:6, 7.

4. பின்வருபவற்றால் என்ன குறித்துக்காட்டப்படுகிறது: (அ) “சூரியனைப்போல” இருக்கும் பலமுள்ள தூதனுடைய முகம்? (ஆ) “அக்கினி ஸ்தம்பங்களைப்போல” உள்ள தூதனுடைய கால்கள்?

4 அந்தப் பலமுள்ள தூதனுடைய முகம் “சூரியனைப்போல” இருந்தது. இயேசு கடவுளுடைய ஆலயத்தில் இருப்பதாக அவர் முன்பு கண்ட தரிசனத்திலே, யோவான் அவருடைய முகம் “வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்த”தாக கவனித்தார். (வெளிப்படுத்துதல் 1:16) இயேசு “நீதியின் சூரிய”னாக, யெகோவாவுடைய நாமத்துக்குப் பயந்திருக்கிறவர்களின் நன்மைக்காக தம்முடைய செட்டைகளிலே ஆரோக்கியத்தையுடையவராய்ப் பிரகாசிக்கிறார். (மல்கியா 4:2) இந்தத் தூதருடைய முகம் மட்டுமல்ல ஆனால் அவருடைய கால்களும் மகிமைப்பொருந்தியதாக, “அக்கினி ஸ்தம்பங்களைப்போல” உள்ளன. அவருடைய உறுதியான நிலையானது யெகோவா “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும்” கொடுத்திருக்கிறவருடையதைப் போன்று இருக்கிறது.—மத்தேயு 28:18; வெளிப்படுத்துதல் 1:14, 15.

5. பலமுள்ள தூதனுடைய கையில் எதை யோவான் காண்கிறார்?

5 யோவான் மேலும் இப்படியாக காண்கிறார்: ‘திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவர் கையில் இருந்தது; தன் வலது பாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்தான்.’ (வெளிப்படுத்துதல் 10:2) மற்றொரு புஸ்தகமா? ஆம், ஆனால் இம்முறை அது முத்திரைப்போடப்பட்டில்லை. விரைவில் யோவானிடமிருந்து நாம் கிளர்ச்சியூட்டும் கூடுதலான வெளிப்படுத்துதல்களை எதிர்பார்க்கலாம். என்றாலும் முதலில், நமக்கு அடுத்துவருவதன் பின்னணியானது கொடுக்கப்படுகிறது.

6. (அ) இயேசுவுடைய பாதங்கள் பூமியின் மேலும் சமுத்திரத்தின் மேலும் இருப்பது ஏன் பொருத்தமாக இருக்கிறது? (ஆ) சங்கீதம் 8:5-8 எப்போது முழுவதுமாக நிறைவேறினது?

6 நாம் மறுபடியும் இயேசுவைப் பற்றிய சித்தரிப்பை எடுத்துக்கொள்வோம். அவருடைய அக்கினி கால்கள் பூமியின்மேலும் சமுத்திரத்தின்மேலும் வைக்கப்பட்டிருக்கின்றன, இவற்றின் மீது அவர் இப்போது முழு அதிகாரமுடையவராயிருக்கிறார். இது தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட சங்கீதத்தில் சொல்லப்பட்டதை போலவே இருக்கிறது: “நீர் [யெகோவா] அவனைத் [இயேசுவைத்] தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர். உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர்.” (சங்கீதம் 8:5-8; எபிரெயர் 2:5-9-ஐயும் காண்க.) இந்தச் சங்கீதம் இயேசு கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டு முடிவு காலம் ஆரம்பமானபோது 1914-ல் முழுவதுமாக நிறைவேற்றம் அடைந்தது. எனவே, இந்தத் தரிசனத்தில் யோவான் இங்கு காண்பது அந்த ஆண்டிலிருந்து பொருத்தத்தை கொண்டிருக்கிறது.—சங்கீதம் 110:1-6; அப்போஸ்தலர் 2:34-36; தானியேல் 12:4.

ஏழு இடிகள்

7. எவ்விதத்தில் அந்தப் பலமுள்ள தூதன் ஆர்ப்பரிக்கிறார், அவர் ஆர்ப்பரிப்பது எதை அர்த்தப்படுத்தினது?

7 இந்தப் பலமுள்ள தூதனைக் குறித்து யோவான் தன் மனதில் சிந்தித்துக்கொண்டிருப்பதை இந்தத் தூதன்தானே நீக்குகிறார்: “சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகா சத்தமாய் [தேவதூதன்] ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின.” (வெளிப்படுத்துதல் 10:3) இப்படிப்பட்ட பலமான கூப்பாடானது யோவானுடைய கவனத்தை கவருகிறது, உண்மையிலேயே, இயேசு ‘யூதா கோத்திரத்துச் சிங்கம்’ என்பதை இது உறுதிப்படுத்துகிறது. (வெளிப்படுத்துதல் 5:5) யெகோவாவும் சில சமயங்களில் ‘கெர்ச்சிப்பதாக’ சொல்லப்படுவதை யோவான் அறிந்திருக்க வேண்டும். யெகோவா கெர்ச்சிப்பதானது ஆவிக்குரிய இஸ்ரவேலர் மறுபடியும் ஒன்றுசேர்க்கப்படுவதையும் வரவிருக்கும் அழிவுக்குரிய “கர்த்தரின் [யெகோவாவின், NW] நாளை”யும் தீர்க்கதரிசனமாக அறிவிக்கிறது. (ஓசியா 11:10; யோவேல் 3:14, 16; ஆமோஸ் 1:2; 3:7, 8) அப்படியானால், தெளிவாகவே, இந்தப் பலமுள்ள தூதனுடைய சிங்கம்போன்ற ஆர்ப்பரிப்பானது சமுத்திரத்துக்கும் பூமிக்கும் அப்பேர்ப்பட்ட மகத்தான நிகழ்ச்சிகளை முன்னறிவிக்கிறது. இவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்க இது அழைக்கிறது.

8. ‘ஏழு இடிகளின் சத்தங்கள்’ என்ன?

8 யெகோவாவுடைய சிங்காசனத்திலிருந்தே இடிமுழக்கங்கள் புறப்படுவதாக யோவான் முன்பு கேட்டிருக்கிறார். (வெளிப்படுத்துதல் 4:5) தாவீதுடைய நாட்களில், சொல்லர்த்தமான இடியானது சில சமயங்களில் “கர்த்தருடைய [யெகோவாவுடைய, NW] சத்த”மாக பேசப்பட்டது. (சங்கீதம் 29:3) பூமியில் இயேசுவின் ஊழிய காலத்தின்போது யெகோவா தம்முடைய சொந்த பெயரை மகிமைப்படுத்துவதற்கான நோக்கத்தை ஜனங்களுக்கு கேட்கப்படும் வண்ணம் தெரியப்படுத்தினபோது அநேகருக்கு அது இடியைப்போல தொனித்தது. (யோவான் 12:28, 29) ஆகையால், ‘இவ்வேழு இடிகளுடைய சத்தங்கள்’ யெகோவாதாமே தம்முடைய நோக்கங்களைக் குறித்துச் சொன்ன கூற்றாகும் என்ற முடிவுக்கு வருவது நியாயமானது. அங்கு “ஏழு” இடிகள் இருந்ததானது யோவான் முழுமையாக கேட்டதைக் குறிப்பிடுகிறது.

9. வானத்திலிருந்து வந்த சத்தம் என்ன கட்டளையிடுகிறது?

9 ஆனால் கேளுங்கள்! மற்றொரு சத்தம் தொனிக்கிறது. ஒருவேளை, யோவான் எதிர்பார்த்திராத ஒரு கட்டளையாக அது இருந்திருக்கலாம்: “அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்.” (வெளிப்படுத்துதல் 10:4) இன்று, யெகோவா தம்முடைய தெய்வீக நோக்கங்களை வெளிப்படுத்தினவுடன் அறிவிப்பதற்கு யோவான் வகுப்பார் எப்படி மிகவும் ஆர்வமாக காத்திருக்கிறார்களோ அதைப்போலவே யோவானும் அந்த இடிமுழக்க செய்திகளை கேட்டு பதிவுசெய்ய ஆர்வமுடையவராயிருந்திருக்க வேண்டும். யெகோவாவுடைய குறித்த காலத்திலேயே அப்படிப்பட்ட வெளிப்படுத்துதல்கள் வருகின்றன.—லூக்கா 12:42; தானியேல் 12:8, 9-ஐயும் காண்க.

பரிசுத்த இரகசியத்தின் நிறைவேற்றம்

10. யாருடைய பெயரில் இந்தப் பலமுள்ள தூதன் ஆணையிடுகிறார், என்ன அறிவிப்போடு?

10 இதற்கிடையில், யெகோவா மற்றொரு கட்டளையை யோவானுக்கு உடையவராக இருக்கிறார். அவ்வேழு இடிமுழக்கங்கள் தொனித்த பிற்பாடு அந்தப் பலமுள்ள தூதன் மறுபடியும் சொல்கிறார்: “சமுத்திரத்தின்மேலும், பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி: இனி காலம் செல்லாது [தாமதமிராது, NW]; . . . என்று, வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான்.” (வெளிப்படுத்துதல் 10:5, 6அ, 7) யாருடைய பெயரில் இந்தப் பலமுள்ள தூதன் ஆணையிடுகிறார்? மகிமைப்பொருந்திய இயேசு தம் பெயரில் ஆணையிடாமல் உன்னத அதிகாரியாகிய, வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த அழியாமையுள்ளவருடைய பெயரில் ஆணையிடுகிறார். (ஏசாயா 45:12, 18) இந்த ஆணையோடு இனிமேலும் கடவுளுடைய பங்கில் தாமதமிராது என்பதாக இந்தத் தூதன் உறுதியளிக்கிறார்.

11, 12. (அ) “இனி தாமதமிராது” என்று அங்கு சொல்லப்படுவது எதை அர்த்தப்படுத்துகிறது? (ஆ) எது நிறைவேற்றப்படுகிறது?

11 கிரேக்க வார்த்தையாகிய குரோனோஸ் (khroʹnos) என்பதிலிருந்து இங்கு ‘தாமதம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் இந்த வார்த்தை சொல்லர்த்தமாக ‘காலத்தைக்’ குறிக்கிறது. ஆகவே காலம் நமக்கு தெரிந்ததுபோல முடிவடைவதற்கே இருக்கிறது என்ற காரணத்தினிமித்தம் இந்தத் தூதருடைய அறிவிப்பானது இப்படியாக மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று சிலர் எண்ணியிருக்கின்றனர்: “இனிமேலும் காலம் இருக்காது.” ஆனால் இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிற குரோனோஸ் என்ற வார்த்தையானது வரைநிலை சுட்டிடைச் சொல்லில்லாது பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகவே இது பொதுவாக, காலத்தை அர்த்தப்படுத்தாது, அதற்கு மாறாக ‘ஒரு காலத்தை’ அல்லது ‘ஒரு காலப்பகுதியை’ குறிக்கும். வேறு வார்த்தைகளில், யெகோவா இனிமேலும் காலத்தை உடையவராயில்லை (அல்லது காலத்தை தாமதிக்கப்போவதில்லை) என்பதை குறிக்கும். குரோனோஸ் என்ற வார்த்தைமூலத்திலிருந்து வந்த கிரேக்க வினைச்சொல்லானது எபிரெயர் 10:37-லும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, இங்கு பவுல் ஆபகூக் 2:3, 4-ஐ மேற்கோள் காட்டி, “வருகிறவர் . . . தாமதம்பண்ணார்,” என்றெழுதுகிறார்.

12 “இனி தாமதமிராது செல்லாது”—இவ்வார்த்தைகள் முதுமையை நோக்கிச் செல்லும் இன்றுள்ள யோவான் வகுப்பாருடைய கவனத்தை எப்படிக் கவருகின்றன! எந்த அர்த்தத்தில் தாமதமிராது? யோவான் நமக்கு தெரிவிக்கிறார்: “ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் [அவருடைய பரிசுத்த இரகசியம், NW] நிறைவேறும்.” (வெளிப்படுத்துதல் 10:6ஆ) யெகோவா தம்முடைய பரிசுத்த இரகசியத்தை மகிமையுடன்கூடிய வெற்றியோடு அதனுடைய சந்தோஷகரமான உச்சக்கட்டத்துக்கு கொண்டுவருவதற்கு காலம் கிட்டி வந்துவிட்டது!

13. கடவுளுடைய பரிசுத்த இரகசியம் என்ன?

13 இந்தப் பரிசுத்த இரகசியம் என்ன? ஏதேனில் முதலில் வாக்குப்பண்ணப்பட்ட அந்த வித்தை அது உட்படுத்துகிறது, இது பிரதானமாக, இயேசு கிறிஸ்து என்பது உறுதிப்படுத்தப்பட்டது. (ஆதியாகமம் 3:15; 1 தீமோத்தேயு 3:16) இது வித்து வரும் அந்த ஸ்திரீயை அடையாளங்கண்டுகொள்வதோடும் சம்பந்தப்பட்டிருக்கிறது. (ஏசாயா 54:1; கலாத்தியர் 4:26-28) மேலும், இந்த வித்துடைய வகுப்பாரின் இரண்டாந்தர உறுப்பினர்களையும் இந்த வித்து அரசாளும் ராஜ்யத்தையும் உள்ளடக்குகிறது. (லூக்கா 8:10; எபேசியர் 3:3-9; கொலோசெயர் 1:26, 27; 2:2; வெளிப்படுத்துதல் 1:5, 6) முடிவுக்காலத்தின்போது இந்த ஈடிணையற்ற பரலோக ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியானது பூமி முழுவதும் பிரசங்கிக்கப்பட வேண்டும்.—மத்தேயு 24:14.

14. கடவுளுடைய ராஜ்யத்தோடு மூன்றாவது ஆபத்தானது ஏன் சம்பந்தப்பட்டு பேசப்படுகிறது?

14 நிச்சயமாகவே, இதுவே மிகச்சிறந்த செய்தி. என்றாலும், வெளிப்படுத்துதல் 11:14, 15-ல் மூன்றாம் ஆபத்தானது ராஜ்யத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. ஏன்? ஏனெனில் சாத்தானுடைய ஒழுங்குமுறையை விரும்புகிறவர்களுக்கு, கடவுளுடைய பரிசுத்த இரகசியம் நிறைவேறுவதென்ற நற்செய்தியை எக்காள சத்தமிடுவதானது—அதாவது, கடவுளுடைய மேசியானிய ராஜ்யம் கிட்டிவந்துவிட்டது என்பதானது—ஆபத்தான செய்தியாகும். (2 கொரிந்தியர் 2:16-ஐ ஒப்பிட்டுப் பார்க்கவும்.) அவர்கள் மிகவும் விரும்புகிற உலக ஏற்பாடானது அழிக்கப்பட்டுப்போவதற்கான நேரம் நெருங்கிவிட்டதை அது அர்த்தப்படுத்தும். அப்படிப்பட்ட அச்சுறுத்துகிற உக்கிர எச்சரிப்புகள் கொண்ட அவ்வேழு இடிகளின் சத்தங்கள் யெகோவாவுடைய பழிவாங்கும் மகா நாள் கிட்டிவர இன்னும் தெளிவாகவும் சத்தமாகவும் தொனிக்கின்றன.—செப்பனியா 1:14-18.

திறக்கப்பட்ட புஸ்தகம்

15. வானத்திலிருந்து வரும் சத்தமும் பலமுள்ள தூதனும் யோவானிடம் சொல்லுவது என்ன, இது யோவான் மீது என்ன பாதிப்பைக் கொண்டிருக்கிறது?

15 யோவான் இந்த ஏழாவது எக்காளம் ஊதப்பட்டு கடவுளுடைய பரிசுத்த இரகசியம் நிறைவேறுவதற்கு காத்திருக்கையில், அவருக்குக் கூடுதலான ஒரு வேலை கொடுக்கப்படுகிறது: “நான் வானத்திலிருந்து பிறக்கக் கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி: சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல, நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதுரமாயிருக்கும் என்றான். நான் அந்தச் சிறு புஸ்தத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அது தேனைப்போல மதுரமாயிருந்தது; நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று. அப்பொழுது அவன் [அவர்கள், NW] என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்ல வேண்டும் என்றான் [என்றார்கள், NW].”—வெளிப்படுத்துதல் 10:8-11.

16. (அ) யோவானுடையதைப் போன்ற அனுபவத்தை எப்படி எசேக்கியேல் தீர்க்கதரிசியும் அனுபவித்தார்? (ஆ) அந்தச் சிறு புஸ்தகம் ஏன் யோவானுக்கு தித்திப்பாயிருந்தது, ஆனால் ஜீரணிக்க அது ஏன் கசப்பாயிருந்தது?

16 எசேக்கியேல் தீர்க்கதரிசி பாபிலோனியாவில் நாடு கடத்தப்பட்டிருந்தபோது அனுபவித்த, ஓரளவு அதே அனுபவத்தை யோவான் உடையவராயிருக்கிறார். அவருங்கூட புஸ்தகத்தைப் புசிக்க கட்டளையிடப்பட்டார், இது அவர் வாய்க்குத் தித்திப்பாயிருந்தது. ஆனால் அவர் வயிற்றை நிரப்பியவுடன் கலகக்கார இஸ்ரவேல் வீட்டாருக்குக் கசப்பான காரியங்களை முன்னுரைக்க அவரைப் பொறுப்புள்ளவராக்கியது. (எசேக்கியேல் 2:8–3:15) மகிமைப்பொருந்திய இயேசு கிறிஸ்து யோவானுக்குக் கொடுக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகமுங்கூட அதே விதமாக தெய்வீக செய்தியாகும். யோவான் “அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்து” பிரசங்கிக்க வேண்டும். இந்தப் புஸ்தகம் தெய்வீக மூலத்திலிருந்து வந்ததன் காரணமாக அதை உட்கொள்வது அவருக்குத் தித்திப்பாயிருக்கிறது. (ஒப்பிடுக: சங்கீதம் 119:103; எரேமியா 15:15, 16.) ஆனால் ஜீரணிப்பதை கசப்பாயிருப்பதாக அவர் காண்கிறார் ஏனெனில்—முன்பு எசேக்கியேலுக்கு இருந்ததுபோல—இது கலகக்கார மானிடருக்கு வெறுக்கத்தக்க காரியங்களை முன்னுரைக்கிறது.—சங்கீதம் 145:20.

17. (அ) யோவானை “மறுபடியும்” தீர்க்கதரிசனஞ்சொல்ல வைப்பவர்கள் யார், இது எதை குறிக்கும்? (ஆ) யோவான் கண்ட தெளிவான சித்தரிப்புக் காட்சி எப்போது நிறைவேற இருந்தது?

17 நிச்சயமாகவே, யோவானை மறுபடியும் தீர்க்கதரிசனஞ்சொல்லக் கூறுபவர்கள் யெகோவா தேவனும் இயேசு கிறிஸ்துவும் ஆவர். யோவான் பத்மு தீவுக்கு கடத்தப்பட்டிருந்தபோதிலும் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இதுவரை பதிவாகியுள்ள விஷயத்தின் மூலம் ஜனங்களையும் ஜாதிகளையும் பாஷைக்காரரையும் ராஜாக்களையுங்குறித்து முன்பே தீர்க்கதரிசனஞ்சொல்லி இருக்கிறார். “மறுபடியும்” என்ற இந்த வார்த்தையானது வெளிப்படுத்துதல் புத்தகத்தில் பதிவாகியுள்ள மற்ற எஞ்சிய விஷயங்களை அவர் எழுதி அறிவிக்க வேண்டும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. ஆனால் இங்கு யோவான்தாமே இந்தத் தீர்க்கதரிசனக் காட்சியில் பங்குக்கொள்கிறார் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். அவர் பதிவுசெய்வதானது உண்மையில் அந்தப் பலமுள்ள தூதன் சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கும்போது, 1914-க்கு பிற்பாடு நிறைவேற உள்ள தீர்க்கதரிசனமாக இருக்கிறது. அப்படியானால், இன்றுள்ள யோவான் வகுப்பாருக்கு இந்தத் தெளிவான சித்தரிப்பைக்கொண்ட காட்சியானது எதைக் குறிக்கும்?

இன்றைய சிறு புஸ்தகம்

18. கர்த்தருடைய நாளின் ஆரம்ப காலத்தில், வெளிப்படுத்துதல் புத்தகத்தின் பேரில் எப்பேர்ப்பட்ட அக்கறையை யோவான் வகுப்பார் காட்டினர்?

18 யோவான் காண்பது கர்த்தருடைய நாளின் ஆரம்பத்தில் யோவான் வகுப்பார் அனுபவிப்பதை குறிப்பிடத்தக்க விதத்தில் முன்நிழலாக எடுத்துக்காட்டுகிறது. யெகோவாவின் நோக்கங்களைக் குறித்தும், அவ்வேழு இடிகளும் எதைக் குறிக்கின்றன என்பதைக் குறித்தும் அப்போது அவர்கள் அரைகுறையாக தெரிந்துவைத்திருந்தார்கள். என்றாலும், வெளிப்படுத்துதல் புத்தகத்தில் அவர்களுக்கு ஆழ்ந்த அக்கறையிருந்தது, சார்ல்ஸ் டேஸ் ரஸல் தன்னுடைய வாழ்நாளின்போது அந்தப் புத்தகத்திலுள்ள அநேக பகுதிகளைக் குறித்து விளக்கம் தந்துள்ளார். 1916-ல் அவருடைய மரணத்துக்குப் பிறகு, அவர் எழுதிவைத்த அநேக விஷயங்கள் தொகுக்கப்பட்டு நிறைவேறித்தீர்ந்த இரகசியம் (ஆங்கிலம்) என்ற தலைப்புக்கொண்ட ஒரு புத்தகமாகப் பிரசுரிக்கப்பட்டது, என்றாலும், காலப்போக்கில், வெளிப்படுத்துதல் புத்தகம் சம்பந்தமாக இப்புத்தகம் அளித்த விளக்கங்கள் திருப்தியளிப்பதாய் இல்லை. அந்த ஏவப்பட்ட பதிவை திருத்தமாக புரிந்துகொள்ள கிறிஸ்துவின் சகோதரர்களாகிய மீதியானோர், அந்தத் தரிசனங்கள் நிறைவேற ஆரம்பமாகும் வரை கொஞ்சக்காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.

19. (அ) அவ்வேழு இடிமுழக்க சத்தங்கள் முழுமையாக பிரகடனப்படுவதற்கு முன்னரே யோவான் வகுப்பாரை எப்படி யெகோவா தேவன் பயன்படுத்தினார்? (ஆ) இந்தத் திறக்கப்பட்ட சிறு புஸ்தகம் யோவான் வகுப்பாருக்கு எப்போது கொடுக்கப்பட்டது, அவர்களுக்கு இது எதைக் குறித்தது?

19 என்றபோதிலும், யோவானைப்போல அவ்வேழு இடிமுழக்க சத்தங்கள் முழுமையாக பிரகடனப்படுவதற்கு முன்னரே யெகோவா இவர்களைப் பயன்படுத்தினார். இவர்கள் 1914-க்கு முன்பு 40 ஆண்டுகள் ஊக்கமாக பிரசங்கம்செய்து வந்தனர், முதல் மகா உலக யுத்தத்தின்போது சுறுசுறுப்புள்ளவர்களாக இருப்பதற்கு போராடியிருந்தனர். இவர்களே எஜமான் வரும்போது ஏற்றவேளையில் வேலைக்காரருக்கு போஜனம்கொடுத்து வந்த ஆட்களில் காணப்பட்டவர்களாக நிரூபித்தனர். (மத்தேயு 24:45-47) எனவே, இவர்களுக்கே 1919-ல் இந்தத் திறக்கப்பட்ட சிறு புஸ்தகமானது கொடுக்கப்பட்டது—அதாவது, மனிதவர்க்கத்துக்கு பிரசங்கிக்க ஒரு திறந்த செய்தியானது கொடுக்கப்பட்டது. எசேக்கியேலைப் போல, கடவுளை உண்மையில் சேவித்துவராதபோதிலும் அவரை சேவிப்பதாக உரிமைபாராட்டிய உண்மையற்ற அமைப்பாகிய கிறிஸ்தவமண்டலத்துக்கு, ஒரு செய்தியை உடையவர்களாயிருந்தனர். யோவானைப் போல “அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்து” அவர்கள் இன்னும் அதிகமாக பிரசங்கிக்க இருந்தனர்.

20. யோவான் அந்தப் புஸ்தகத்தை புசித்தது எதை படமாகக் குறித்துக்காட்டினது?

20 யோவான் புஸ்தகத்தை புசித்ததானது இயேசுவுடைய சகோதரர்கள் இந்த வேலையை ஏற்றுக்கொண்டனர் என்பதை படமாகக் குறிப்பிட்டுக் காட்டியது. கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தையுடைய இப்பகுதியோடு அடையாளப்படுத்தப்பட்டு, அதிலிருந்து போஷாக்கைப் பெறும் அளவுக்கு அவர்கள் இப்போது ஆனதன் காரணமாக இந்த வேலையானது அவர்களுடைய பாகமாக ஆனது. ஆனால் யெகோவாவுடைய நியாயத்தீர்ப்புகளின் வார்த்தைகளை அவர்கள் பிரசங்கிக்க இருந்ததன் காரணமாக மனிதவர்க்கத்தில் அநேக ஆட்களுக்கு அவை சுவையற்றவையாக இருந்தன. இது உண்மையில் வெளிப்படுத்துதல் 8-ம் அதிகாரத்தில் முன்னுரைக்கப்பட்ட வாதைகளையும் உள்ளடக்கினது. என்றாலும், அந்தத் தீர்ப்புகளைக் குறித்து அறிவதும் அவற்றைத் தெரிவிக்க யெகோவா மறுபடியும் அவர்களைப் பயன்படுத்துகிறார் என்பதும் இந்த உண்மைக் கிறிஸ்தவர்களுக்கு மதுரமுள்ளதாயிருந்தது.—சங்கீதம் 19:9, 10.

21. (அ) திரள் கூட்டத்தினருக்குங்கூட அந்தச் சிறு புஸ்தகத்திலுள்ள செய்தியானது எப்படி மதுரமுள்ளதாக ஆனது? (ஆ) எதிர்க்கிறவர்களுக்கு இந்த நற்செய்தியானது ஏன் கெட்ட செய்தியாக இருக்கிறது?

21 காலப்போக்கில், இந்தப் புஸ்தகத்திலுள்ள செய்தி “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்த . . . திரளான கூட்டமாகிய ஜனங்க”ளுக்கும்கூட மதுரமுள்ளதாக ஆனது, இவர்களே கிறிஸ்தவமண்டலத்தில் செய்யப்பட்டு வரும் அருவருப்பான காரியங்களைக் கண்டு பெருமூச்சுவிடுகிற ஆட்களில் காணப்பட்டனர். (வெளிப்படுத்துதல் 7:9; எசேக்கியேல் 9:4) இவர்களுங்கூட யெகோவாவுடைய மகத்தான ஏற்பாட்டைக் குறித்து விளக்க மதுரமுள்ள, கிருபைபொருந்திய வார்த்தைகளைப் பயன்படுத்தி செம்மறியாட்டைப்போன்ற கிறிஸ்தவர்களுக்கு இந்த நற்செய்தியை உற்சாகத்தோடு அறிவித்து வருகிறார்கள். (சங்கீதம் 37:11, 29; கொலோசெயர் 4:6) ஆனால் எதிர்க்கிறவர்களுக்கு இது கெட்ட செய்தியாக இருக்கிறது. ஏன்? இவர்கள் நம்பிக்கைவைக்கும்—மேலும் ஒரு நிரந்தரமற்ற மனநிறைவையுங்கூட அவர்களுக்கு கொண்டுவந்திருக்கும்—ஒழுங்குமுறையானது அழிக்கப்பட்டுப்போக வேண்டும் என்று பொருள்படுகிறது. அவர்களுக்கு இந்த நற்செய்தியானது தண்டனைத்தீர்ப்பைக் குறிக்கிறது.—பிலிப்பியர் 1:27, 28; ஒப்பிடுக: உபாகமம் 28:15; 2 கொரிந்தியர் 2:15, 16.

[கேள்விகள்]

[பக்கம் 160-ன் படம்]

யோவான் வகுப்பாரும் அவர்களுடைய கூட்டாளிகளும் மனிதவர்க்கத்தில் உள்ள அனைவருக்கும் மதுரமும் கசப்பும் கலந்த செய்தியை அறிவிக்கின்றனர்