Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் பரம சிங்காசனத்தின் சிறப்புத்தன்மை

யெகோவாவின் பரம சிங்காசனத்தின் சிறப்புத்தன்மை

அதிகாரம் 14

யெகோவாவின் பரம சிங்காசனத்தின் சிறப்புத்தன்மை

தரிசனம் 2​—வெளிப்படுத்துதல் 4:1–5:14

பொருள்: கடவுளுடைய நியாயாசனத்திற்கு முன் நடைபெறும் ஆச்சரியப்படத்தக்க நிகழ்ச்சிகள்

நிறைவேற்றத்தின் காலம்: இத்தரிசனமானது 1914-லிருந்து ஆயிர வருட ஆட்சி முடிவு வரையிலும் அதற்குப் பிற்பாடும் நடைபெறும் சம்பவங்களை முக்கியப்படுத்திக் காட்டுகிறது, அப்போது வானத்திலும் பூமியிலும் இருக்கிற ஒவ்வொரு சிருஷ்டியும் யெகோவாவைத் துதிக்கும்.—வெளிப்படுத்துதல் 5:13

1. யோவான் நம்மோடு பகிர்ந்துகொள்ளக்கூடிய தரிசனங்களில் நாம் ஏன் ஆழ்ந்த அக்கறையுடையவர்களாக இருக்க வேண்டும்?

 யோவான் மேலுமாக ஆத்துமாவை உந்துவிக்கக்கூடிய தரிசனங்களை நம்மோடு பகிர்ந்துகொள்ள தொடங்குகிறார். ஏவுதலின் மூலம் அவர் இன்னும் கர்த்தருடைய நாளில் இருக்கிறார். எனவே, அவர் விவரிக்கக்கூடியவை, உண்மையாகவே அந்த நாளில் வாழ்ந்துகொண்டிருக்கிற நமக்கு ஆழமான அர்த்தத்தைக் கொண்டிருக்கின்றன. இந்தத் தரிசனங்களின் மூலமாக, யெகோவா பரலோக மெய்மைகளின் மீதான காணக்கூடாமையான திரையை நீக்குகிறார். மேலும் பூமியின் மீது நிறைவேற்றப்படப்போகிற நியாயத்தீர்ப்பைப் பற்றிய அவருடைய சொந்த நோக்குநிலையை நமக்குக் கொடுக்கிறார். மேலுமாக, நாம் பரலோக அல்லது பூமிக்குரிய நம்பிக்கையைக் கொண்டிருந்தாலும், இந்த வெளிப்படுத்துதல்கள் யெகோவாவின் நோக்கத்தில் நம்முடைய இடத்தைக் காண்பதற்கு நமக்கு உதவுகின்றன. அதனால், நாம் எல்லாரும், யோவானின் அறிவிப்பில் தொடர்ந்து ஆழ்ந்த அக்கறை உடையவர்களாக இருக்க வேண்டும்: “இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகளைச் சப்தமாக வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவற்றைக் கைக்கொள்ளுகிறவர்களும் சந்தோஷமுள்ளவர்கள்.”—வெளிப்படுத்துதல் 1:3, NW.

2. யோவான் இப்பொழுது என்ன அனுபவத்தைக் கொண்டிருக்கிறார்?

2 யோவான் அடுத்து காண்பது நவீன கால மனிதனுக்கு வீடியோ மூலம் அளிக்கப்படும் எதைக் காட்டிலும் மிகச் சிறந்ததாக விளங்குகிறது! அவர் எழுதுகிறார்: “இவைகளுக்குப் பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காள சத்தம் போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப் பின்பு சம்பவிக்க வேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.” (வெளிப்படுத்துதல் 4:1) விண்வெளி வீரர்கள் துருவி ஆய்வு செய்யும் விண்வெளிக்கும் அதிக மேலாக உயர்த்தப்பட்டிருக்கும் பருப்பொருள் பிரபஞ்சத்தின் பால்வீதி மண்டலங்களுக்கும் மேலாக, யெகோவாவின் பிரசன்னமாகிய காணக்கூடாத பரலோகங்களைத் தரிசனத்தில் யோவான் ஊடுருவிப் பார்க்கிறார். திறக்கப்பட்ட ஒரு வாசல் வழியாக நுழைவது போன்று, யெகோவாதாமேயும் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் இடமாகிய இறுதியான ஆவிக்குரிய பரலோகங்களின், அதிகமாக கிளர்ச்சியடையச் செய்யும் ஒரு விரிவான காட்சியை அவருடைய கண்களுக்கு விருந்தாகக் கொள்வதற்கு யோவான் அழைக்கப்படுகிறார். (சங்கீதம் 11:4; ஏசாயா 66:1) என்னே ஒரு சிலாக்கியம்!

3. ‘எக்காளம் போன்ற’ சத்தம் எதை மனதிற்கு கொண்டு வருகிறது, மேலும் சந்தேகமில்லாமல் இதனுடைய ஊற்றுமூலர் யார்?

3 பைபிள் இந்த “முதல் சத்தத்தை” அடையாளங்காட்டுவதில்லை. முன்னர் கேட்கப்பட்ட இயேசுவின் பலமான சத்தத்தைப்போன்று, இது கட்டளையிடுகிற எக்காள சத்தத்தைக் கொண்டிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 1:10, 11) இது சீனாய் மலையில் யெகோவாவின் பிரசன்னத்தை அடையாள அறிவிப்புச் செய்த ஊடுருவிச் செல்லும் அந்த எக்காள சத்தத்தை மனதிற்குக் கொண்டு வருகிறது. (யாத்திராகமம் 19:18-20) சந்தேகமில்லாமல், யெகோவா அழைப்பானையின் மாட்சிமைப்பொருந்திய ஊற்றுமூலராக இருக்கிறார். (வெளிப்படுத்துதல் 1:1) யோவான், தரிசனத்தில், யெகோவாவினுடைய அரசாட்சியின் எல்லா பரந்த பகுதிகளிலும் மகா பரிசுத்தமான இடத்தில் நுழையும்படி அவர் வாசலைத் திறந்திருக்கிறார்.

யெகோவாவின் பிரகாசமான பிரசன்னம்

4. (அ) அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு யோவானின் தரிசனம் என்ன அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது? (ஆ) பூமியின் மீது என்றென்றும் வாழும் நம்பிக்கையுடையவர்களுக்கு தரிசனம் என்ன அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது?

4 யோவான் என்ன பார்க்கிறார்? கவனியுங்கள், அவருடைய மகத்தான அனுபவங்களை இப்போது நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்: “உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின் மேல் ஒருவர் வீற்றிருந்தார்.” (வெளிப்படுத்துதல் 4:2) உடனடியாக, யோவான், கடவுளின் செயல் நடப்பிக்கும் சக்தியின் மூலம் யெகோவாவின் சிங்காசனத்திடத்திற்குத்தானே ஆவிக்குரிய பிரகாரமாக எடுத்து செல்லப்படுகிறார். யோவானுக்கு எவ்வளவு கிளர்ச்சியூட்டுவதாயிருக்கிறது! இங்கே, அவரும் மற்ற அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களும் அவர்களுக்காக “அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரம்” முன்குறிக்கப்பட்டுள்ள இடமாகிய அந்த மகிமையான பரலோகங்களின் கண்கூசச் செய்யும் முன்காட்சி கொடுக்கப்படுகிறது. (1 பேதுரு 1:3-5; பிலிப்பியர் 3:20) பூமியின் மீது என்றென்றும் வாழ்வதற்கு நம்பிக்கைக்கொண்டிருப்பவர்களுக்கு, யோவானின் தரிசனமும்கூட மிக ஆழ்ந்த அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. இது அவர்களுக்கு, யெகோவாவின் பிரசன்னத்தின் மகிமையையும் தேசங்களை நியாயந்தீர்ப்பதிலும் அதற்கு பின்னர் பூமியின் மீது மனித ஜீவன்களை ஆட்சி செய்வதிலும் யெகோவாவால் பயன்படுத்தப்படும் பரலோக ஆட்சி அமைப்பையும் புரிந்துகொள்வதற்கு உதவுகிறது. மெய்யாகவே, யெகோவா மிக மேம்பட்ட அமைப்பின் தேவனாயிருக்கிறார்!

5. உடன்படிக்கை பெட்டியின் கிருபாசனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட என்ன உண்மையை யோவான் பார்க்கிறார்?

5 அங்கே பரலோகத்தில் யோவான் காண்கிறதில் அநேகம் வனாந்தரத்திலிருந்த கூடாரத்தின் தோற்றத்திற்கு ஒத்திருக்கிறது. இது, ஏறக்குறைய 1,600 ஆண்டுகளுக்கு முன்பாக, இஸ்ரவேலர்களுக்காக மெய் வணக்கத்தின் வழிபாட்டு இடமாக கட்டப்பட்டிருந்தது. அந்தக் கூடாரத்தின் பரிசுத்தங்களின் பரிசுத்தத்தில் உடன்படிக்கை பெட்டி இருந்தது, அந்தப் பெட்டியின் திடமான பொன் கிருபாசனத்தின் மேல்புறத்திலிருந்து யெகோவாதாமேயும் பேசினார். (யாத்திராகமம் 25:17-22; எபிரெயர் 9:5) எனவே, பெட்டியின் கிருபாசனம் யெகோவாவின் சிங்காசனத்தின் அடையாளமாக சேவித்தது. யோவான் இப்பொழுது அந்த அடையாள பிரதிநிதித்துவத்தின் உண்மையைக் காண்கிறார்: யெகோவாவாகிய ஆண்டவர்தாமே அவருடைய மேன்மையான பரலோக சிங்காசனத்தின் மீது மிகச் சிறந்த மேன்மை நிலையில் அமர்ந்திருக்கிறார்!

6. யெகோவாவைப் பற்றிய என்ன எண்ணத்தை யோவான் நமக்குக் கொடுக்கிறார், மேலும் இது ஏன் பொருத்தமாகவே இருக்கிறது?

6 யெகோவாவின் சிங்காசனத்தின் தரிசனங்களைக் கொண்டிருந்த முன்னாளைய தீர்க்கதரிசிகளைப் போலில்லாமல், யோவான், அதில் அமர்ந்திருக்கிற பரிசுத்தமானவரை விளக்கமாக விவரிக்கவில்லை. (எசேக்கியேல் 1:26, 27; தானியேல் 7:9, 10) ஆனால் யோவான், சிங்காசனத்தில் அமர்ந்துள்ளவரைப் பற்றிய அவருடைய எண்ணத்தை, இந்த வார்த்தைகளில் நமக்குக் கொடுக்கிறார்: “வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச் சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அது பார்வைக்கு மரகதம் போல் தோன்றிற்று.” (வெளிப்படுத்துதல் 4:3) என்னே ஒப்பற்ற சிறப்புத்தன்மை! யோவான், பளபளப்பான, ஒளிவிடக்கூடிய இரத்தினக்கற்களைப் போன்ற, களங்கமில்லாத சுடர்விடக்கூடிய அழகை உணர்கிறார். யெகோவாவைப் பற்றி சீஷனாகிய யாக்கோபின் விளக்கமாகிய “சோதிகளின் பிதா” என்பதுடன் இது எவ்வளவு சரியாக பொருந்துகிறது! (யாக்கோபு 1:17) வெளிப்படுத்துதலை எழுதிய பிறகு வெகு சீக்கிரமே யோவான்தானேயும் குறிப்பிட்டார்: “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை.” (1 யோவான் 1:5) யெகோவா உண்மையிலேயே என்னே ஒரு மிக உயர்ந்த மகிமை வாய்ந்த பிரமுகராயிருக்கிறார்!

7. யெகோவாவின் சிங்காசனத்தைச் சுற்றி வானவில் இருக்கிறது என்ற உண்மையிலிருந்து நாம் என்ன அறிந்துகொள்ள முடியும்?

7 யோவான், சிங்காசனத்தைச் சுற்றி மரகதப் பச்சை நிறமான ஒரு வானவில் இருப்பதைப் பார்க்கிறார் என்பதை கவனியுங்கள். இங்கே வானவில் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை (ஐரிஸ், [irʹis]) ஒரு முழுமையான வட்டமான தோற்றத்தைக் குறிப்பிடுகிறது. வானவில் முதலில் பைபிளில் நோவாவின் நாளுடன் தொடர்புபடுத்தி குறிப்பிடப்பட்டுள்ளது. பிரளய தண்ணீர் வற்றிய பிறகு, யெகோவா ஒரு வானவில்லை மேகத்தில் தோன்றச் செய்து, அது எதை அடையாளப்படுத்தினது என்பதை இந்த வார்த்தைகளினால் விளக்கினார்: “நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன்.” (ஆதியாகமம் 9:13, 15) அப்படியென்றால் பரலோக தரிசனம் யோவானின் மனதிற்கு எதைக் கொண்டு வரும்? அவர் பார்த்த வானவில்லானது, யோவான் வகுப்பார் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறதைப் போன்ற, யெகோவாவுடன் சமாதானமான உறவுக்கானத் தேவையை அவருக்கு நினைவுப்படுத்தியிருக்க வேண்டும். இது யெகோவாவின் பிரசன்னத்தின் சாந்தத்தையும் அமைதியையும் யெகோவா புதிய பூமியின் சமுதாயத்தில் மனிதவர்க்கத்தின் மீது அவருடைய கூடாரத்தை விரிக்கும்போது எல்லா கீழ்ப்படிதலுள்ள மனிதர்களுக்கும் விரிவாக்கப்படும் அமைதியையுங்கூட அவருடைய மனதில் பதிய வைக்கும்.—சங்கீதம் 119:165; பிலிப்பியர் 4:7; வெளிப்படுத்துதல் 21:1-4.

இருபத்து நான்கு மூப்பர்களை அடையாளம் காணுதல்

8. சிங்காசனத்தைச் சுற்றி யோவான் யாரை பார்க்கிறார், இவர்கள் யாரை பிரதிநிதித்துவம் செய்கிறார்கள்?

8 பூர்வ வாசஸ்தலத்தில் சேவை செய்வதற்கு ஆசாரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள் என்பதை யோவான் அறிந்திருந்தார். எனவே அவர் அடுத்து விவரிப்பதைப் பார்த்ததில் ஆச்சரியமடைந்திருக்கக்கூடும்: “அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்து நான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்து நான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன் முடி சூடி, அந்தச் சிங்காசனங்களின் மேல் உட்கார்ந்திருக்கக் கண்டேன்.” (வெளிப்படுத்துதல் 4:4) ஆம், ஆசாரியர்களுக்குப் பதிலாக, 24 மூப்பர்கள் அங்கே சிங்காசனத்தில் அமர்த்தப்பட்டு அரசர்களைப் போன்று முடிசூட்டப்பட்டு இருக்கிறார்கள். இந்த மூப்பர்கள் யார்? அவர்கள் கிறிஸ்தவ சபையின் அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் இல்லை, உயிர்த்தெழுப்பப்பட்டு, அவர்களுக்கு யெகோவா வாக்களித்திருந்த பரலோக ஸ்தானத்தில் இருக்கின்றனர். அது நமக்கு எவ்வாறு தெரியும்?

9, 10. அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவ சபையை 24 மூப்பர்கள் அதனுடைய மகிமையான பரலோக நிலையில் பிரதிநிதித்துவம் செய்கிறார்கள் என்று நாம் எவ்வாறு தெரிந்துகொள்கிறோம்?

9 முதலாவதாக, அவர்கள் கிரீடங்களை அணிந்திருக்கின்றனர். பைபிள் அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ‘அழியாத கிரீடத்தை’ பெற்றுக்கொள்கிறவர்களாக, முடிவில்லா வாழ்க்கை—சாவாமையை—அடையக்கூடியவர்கள் என்பதாக பேசுகிறது. (1 கொரிந்தியர் 9:25; 15:53, 54) ஆனால் இந்த 24 மூப்பர்கள் சிங்காசனங்களின் மீது அமர்ந்திருப்பதனால், பொன் கிரீடங்கள் இந்தச் சூழமைவில் அரசு அதிகாரத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. (ஒப்பிடவும்: வெளிப்படுத்துதல் 6:2; 14:14.) இது, 24 மூப்பர்கள் அவர்களுடைய பரலோக நிலையில் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிற அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களை வர்ணிக்கிறது என்ற முடிவை ஆதரிக்கிறது, ஏனென்றால் அவருடைய ராஜ்யத்தில் சிங்காசனங்களின் மேல் அமர்வதற்கு அவர்களுடன் இயேசு உடன்படிக்கை செய்தார். (லூக்கா 22:28-30) இயேசுவும் இந்த 24 மூப்பர்களும் மட்டும்—தேவதூதர்கள்கூட அல்ல—யெகோவாவின் முன்னிலையில் பரலோகத்தில் ஆட்சி செய்கிறவர்களாக விவரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

10 இது இயேசு லவோதிக்கேய சபைக்கு செய்த வாக்குறுதியுடன் ஒத்திருக்கிறது: “ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள் செய்வேன்.” (வெளிப்படுத்துதல் 3:21) ஆனால் 24 மூப்பர்களின் பரலோக நியமனம் அரசாங்க ஆட்சிக்கு மாத்திரம் கட்டுப்படுத்தப்பட்டதாயில்லை. வெளிப்படுத்துதல் புத்தகத்தின் முகவுரையில் யோவான் இயேசுவைப் பற்றி சொன்னான்: “தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினார்.” (வெளிப்படுத்துதல் 1:5, 6) இவர்கள் அரசர்களும் ஆசாரியர்களுமாயிருக்கின்றனர். “இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடே கூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.”—வெளிப்படுத்துதல் 20:6.

11. மூப்பர்களின் எண்ணிக்கை 24 என்பது ஏன் பொருத்தமாக இருக்கிறது, மேலும் அந்த எண் எதைக் குறிப்பிடுகிறது?

11 சிங்காசனத்தைச் சுற்றியுள்ள 24 மூப்பர்களை யோவான் பார்ப்பதில், எண் 24 என்ன முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கிறது? அநேக காரியங்களில் பூர்வ இஸ்ரவேலின் உண்மையுள்ள ஆசாரியர்களினால் இவை முன்நிழலாக காட்டப்பட்டிருந்தன. அப்போஸ்தலனாகிய பேதுரு அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு எழுதினார்: “தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரிக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்த ஜனமாயும் இருக்கிறீர்கள்.” (1 பேதுரு 2:9) அக்கறைக்குரிய விதத்தில், பூர்வ யூத ஆசாரியத்துவம் 24 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பிரிவுக்கும், யெகோவாவுக்கு முன்பாக சேவை செய்வதற்கு, வருடத்தில் அதனதன் வாரங்கள் நியமிக்கப்பட்டிருந்தது, அதனால் பரிசுத்த சேவையானது இடைவிடாமல் செய்யப்பட்டது. (1 நாளாகமம் 24:5-19) இது, பரலோக ஆசாரியத்துவம் பற்றிய யோவானின் தரிசனத்தில் விளக்கிக் காட்டப்பட்டுள்ள அந்த 24 மூப்பர்களுக்கு பொருத்தமாகவே இருக்கிறது, ஏனெனில் இந்த ஆசாரியத்துவம் யெகோவாவை முடிவில்லாமல் தொடர்ந்து சேவிக்கிறது. முழுமையாகும்போது, அங்கே 24 பிரிவுகள் இருக்கும். ஒவ்வொன்றும் 6,000 ஜெயங்கொள்ளுகிறவர்களோடு, வெளிப்படுத்துதல் 14:1-4 நமக்குச் சொல்லுகிற பிரகாரம், 1,44,000 (24 × 6,000) ஆட்டுக்குட்டியானவராகிய இயேசு கிறிஸ்துவுடன் பரலோக சீயோன் மலையில் நிற்பதற்கு ‘மனிதவர்க்கத்திலிருந்து மீட்டுக்கொண்டவர்களாக’ இருக்கிறார்கள். எண் 12 என்பது தெய்வீகமாக சமநிலைப்படுத்தப்பட்ட அமைப்பை குறிப்பிடுவதனால், 24 என்பது அப்படிப்பட்ட ஏற்பாட்டை இரட்டிப்பாக்குகிறது—அல்லது பலப்படுத்துகிறது.

மின்னல்கள், இடிமுழக்கங்கள் மற்றும் சத்தங்கள்

12. அடுத்து யோவான் என்ன பார்க்கிறார் மற்றும் கேட்கிறார், மேலும் ‘மின்னல்கள், இடிமுழக்கங்கள், சத்தங்கள்’ மனதிற்கு எதைக் கொண்டு வருகின்றன?

12 அடுத்து யோவான் என்ன பார்க்கிறார் மற்றும் கேட்கிறார்? “அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன.” (வெளிப்படுத்துதல் 4:5அ) யெகோவாவின் பரலோக வல்லமையின் மற்ற பிரமிக்கத்தக்க வெளிப்படுத்தல்களை எந்தளவு நினைப்பூட்டுவதாயிருக்கிறது! உதாரணமாக, யெகோவா சீனாய் மலையின் மீது ‘இறங்கி வந்தபோது,’ மோசே அறிக்கை செய்தார்: “மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின் மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காள சத்தமும் உண்டாயிற்று; . . . எக்காள சத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார்.”—யாத்திராகமம் 19:16-19.

13. யெகோவாவின் சிங்காசனத்திலிருந்து வெளிவரும் மின்னல்களினால் என்ன படமாக காட்டப்படுகின்றன?

13 கர்த்தருடைய நாளின்போது, யெகோவா அவருடைய வல்லமையையும் பிரசன்னத்தையும் ஓர் உயர்வான வழியில் வெளிப்படும்படி செய்கிறார். இல்லை, சொல்லர்த்தமான மின்னல்கள் மூலம் அல்ல, ஏனென்றால் யோவான் அடையாளங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்படியென்றால், மின்னல்கள் எதைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன? மின்னலின் திடீரொளிகள் வெளிச்சம் கொடுக்க முடியும், ஆனால் அவை ஒருவரை சாகடிக்கவும் முடியும். ஆகவே, யெகோவாவின் சிங்காசனத்திலிருந்து வெளிவரும் இந்த மின்னல்கள் அவருடைய மக்களுக்கு தொடர்ந்து அளித்துள்ள அறிவொளியூட்டுதலின் திடீரொளிகளை இன்னும் அதிகம் குறிப்பிடும் விதமாக, அவருடைய உக்கிரமான நியாயத்தீர்ப்பு செய்திகளை நன்றாக படமாகக் காட்டுகின்றன.—ஒப்பிடவும்: சங்கீதம் 18:14; 144:5, 6; மத்தேயு 4:14-17; 24:27.

14. இன்று எவ்வாறு சத்தங்கள் முழக்கப்பட்டிருக்கின்றன?

14 சத்தங்களைப் பற்றி என்ன? சீனாய் மலைக்கு யெகோவாவின் இறங்கி வருதலின்போது, மோசேயுடன் ஒரு சத்தம் பேசியது. (யாத்திராகமம் 19:19) வெளிப்படுத்துதல் புத்தகத்தில் பரலோகத்திலிருந்து வந்த சத்தங்கள் கட்டளைகள் மற்றும் அறிவிப்புகளில் பலவற்றைக் கொடுத்தன. (வெளிப்படுத்துதல் 4:1; 10:4, 8; 11:12; 12:10; 14:13; 16:1, 17; 18:4; 19:5; 21:3) இன்றுங்கூட, யெகோவா தம்முடைய மக்களுக்கு, பைபிள் தீர்க்கதரிசனங்கள் மற்றும் நியமங்கள் பற்றிய அவர்களுடைய புரிந்துகொள்ளுதலை ஒளியூட்டுவதற்கு கட்டளைகள் மற்றும் அறிவிப்புகள் கொடுத்திருக்கிறார். அறிவொளியூட்டக்கூடிய தகவல்கள் சர்வதேச மாநாடுகளில் அடிக்கடி வெளிப்படுத்தப்பட்டு, அப்படிப்பட்ட பைபிள் சத்தியங்கள், அடுத்து உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்டுமிருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் நற்செய்தியின் உண்மையுள்ள பிரசங்கிமாரைப்பற்றிச் சொன்னார்: “அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே.”—ரோமர் 10:18.

15. கர்த்தருடைய நாளின் இந்தக் காலப்பகுதியின்போது சிங்காசனத்திலிருந்து என்ன இடிமுழக்கங்கள் வெளிவந்திருக்கின்றன?

15 இடிமுழக்கம் பொதுவாக மின்னலைப் பின்தொடருகிறது. தாவீது சொல்லர்த்தமான இடிமுழக்கத்தை “யெகோவாவுடைய சத்தம்” என்பதாகக் குறிப்பிடுகிறார். (சங்கீதம் 29:3, 4, NW) யெகோவா தாவீதுக்காக அவருடைய எதிரிகளுடன் யுத்தம் செய்தபோது, அவரிடமிருந்து இடிமுழக்கம் வந்ததாக சொல்கிறது. (2 சாமுவேல் 22:14; சங்கீதம் 18:13) எலிகூ யோபுவிடம் யெகோவா “நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை” செய்கிறபடியால் அவர் சத்தம் இடிமுழக்கத்தைப் போன்றிருக்கிறது என்பதாக சொன்னார். (யோபு 37:4, 5) கர்த்தருடைய நாளின் இந்தக் காலப்பகுதியிலே, யெகோவா அவருடைய எதிரிகளுக்கு எதிராக நடப்பிக்கப் போகிற பெரிய செயல்களைப் பற்றிய எச்சரிக்கையை ‘இடிமுழக்கம் செய்திருக்கிறார்,’ இந்த அடையாள அர்த்தமான இடிமுழக்கங்கள் பூமி முழுவதும் எதிரொலிக்கப்பட்டும் மீண்டும் எதிரொலிக்கப்பட்டும் இருக்கின்றன. நீங்கள் இந்த இடிமுழக்க அறிவிப்புகளுக்கு கவனம் செலுத்தி, அவற்றினுடைய சத்தத்தோடு உங்களுடையதையும் சேர்த்துக்கொள்வதில் உங்களுடைய நாவை ஞானமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களென்றால் சந்தோஷமுள்ளவர்கள்!—ஏசாயா 50:4, 5; 61:1, 2.

அக்கினி தீபங்களும் கண்ணாடிக் கடலும்

16. ஏழு ‘அக்கினி தீபங்களால்’ குறிப்பிடப்பட்டிருப்பது என்ன?

16 மேலுமாக யோவான் என்ன பார்க்கிறார்? இது: “தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்து கொண்டிருந்தன. அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக்கொப்பான கண்ணாடிக் கடலிருந்தது.” (வெளிப்படுத்துதல் 4:5ஆ, 6அ) யோவான்தானேயும் ஏழு தீபங்களின் உட்கருத்தை நமக்குச் சொல்கிறார்: ‘தேவனுடைய ஏழு ஆவிகள்.’ எண் 7 ஒரு தெய்வீக முழுமைத்தன்மையைக் குறிக்கிறது, எனவே, ஏழு தீபங்கள் பரிசுத்த ஆவியின் அறிவொளியூட்டும் சக்தியின் நிறைவானத்தன்மையைப் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். இன்று, யோவான் வகுப்பார் இந்த அறிவொளியூட்டுதலுடன், ஆவிக்குரிய பசியுள்ள பூமியின் மக்களுக்கு இதைக் கடத்தும் உத்தரவாதத்துடன் பொறுப்பளிக்கப்பட்டிருப்பதற்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்! இந்த ஒளியைப் பிரகாசிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் காவற்கோபுர பத்திரிகை, சுமார் 150 மொழிகளில் கோடிக்கணக்கான பிரதிகள் வெளிவருவது குறித்து நாம் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறோம்!—சங்கீதம் 43:3.

17. ‘பளிங்குக்கொப்பானக் கண்ணாடிக் கடல்’ அடையாளப்படுத்துவது என்ன?

17 யோவான் ‘பளிங்குக்கொப்பான கண்ணாடிக்கடலையும்’ பார்க்கிறார். யெகோவாவின் பரலோக நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்டவர்களின் சம்பந்தமாக இது எதை அடையாளப்படுத்தும்? இயேசு சபையைப் பரிசுத்தமாக்கின வழியைப்பற்றி, “திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்[தார்],” என்று பவுல் பேசினார். (எபேசியர் 5:26) அவருடைய மரணத்திற்கு முன்பாக, இயேசு அவருடைய சீஷர்களிடம் சொன்னார்: “நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.” (யோவான் 15:3) எனவே, இந்தப் பளிங்குக்கொப்பான கண்ணாடிக்கடல், சுத்திகரிக்கும் பதிவுசெய்யப்பட்ட தேவனுடைய வார்த்தையைப் பிரதிநிதித்துவம் செய்யவேண்டும். யெகோவாவின் பிரசன்னத்திற்குள் வருகிற அந்த ராஜரீக ஆசாரியத்துவம் அவருடைய வார்த்தையினால் முழுமையாக சுத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

கவனி—‘நான்கு ஜீவன்கள்’!

18. சிங்காசனத்தின் மத்தியிலும் அதைச் சுற்றிலும் யோவான் என்ன பார்க்கிறார்?

18 யோவான் இப்பொழுது வேறொரு தோற்றத்தைப் பார்க்கிறார். அவர் எழுதுகிறார்: “அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன, அவைகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருந்தன.”—வெளிப்படுத்துதல் 4:6ஆ.

19. நான்கு ஜீவன்களால் படமாகக் காட்டப்பட்டிருப்பது என்ன, மேலும் இதை நாம் எவ்வாறு தெரிந்துகொள்கிறோம்?

19 இந்த ஜீவன்கள் எதற்குப் படமாக இருக்கின்றன? மற்றொரு தீர்க்கதரிசியாகிய எசேக்கியேலினால் அறிவிக்கப்பட்ட ஒரு தரிசனம் விடையைக் காண்பதற்கு நமக்கு உதவுகிறது. எசேக்கியேல், யெகோவா பரம ரதத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டார், அதோடு யோவானால் விவரிக்கப்பட்டதைப் போன்ற அதே இயல்புகளைக் கொண்டிருக்கிற ஜீவன்களும் உடன் சென்றன. (எசேக்கியேல் 1:5-11, 22-28) பிறகு, எசேக்கியேல் ரத சிங்காசனம், அதோடு ஜீவன்கள் உடன்செல்வதை மீண்டும் கண்டார். இருப்பினும், இந்தச் சமயத்தில், ஜீவன்களை கேருபீன்கள் என்பதாகக் குறிப்பிட்டார். (எசேக்கியேல் 10:9-15) யோவான் பார்க்கிற நான்கு ஜீவன்கள் தேவனுடைய அநேக கேருபீன்களைப் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும்—அவருடைய ஆவி அமைப்பில் உயர்ந்த நிலையிலுள்ள சிருஷ்டிகள். பூர்வ ஆசரிப்புக்கூடார ஏற்பாட்டில், யெகோவாவின் சிங்காசனத்தைப் பிரதிநிதித்துவம் செய்த உடன்படிக்கைப் பெட்டியின் கிருபாசனத்தின் மீது இரண்டு தங்க கேருபீன்கள் வைக்கப்பட்டிருந்ததனால், யெகோவாவின் முன்னிலையில் அவ்வளவு அருகாமையில் கேருபீன்கள் நிறுத்தப்பட்டிருப்பதை பார்க்கையில் யோவான் இதை அசாதாரணமாக நினைத்திருக்க மாட்டார். இந்தக் கேருபீன்களுக்கு இடையில் இருந்து, யெகோவாவின் சத்தம் தேசத்திற்கு கட்டளைகளைக் கொடுத்தது.—யாத்திராகமம் 25:22; சங்கீதம் 80:1.

20. நான்கு ஜீவன்கள் “அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும்” இருக்கின்றன என்று என்ன விதத்தில் சொல்ல முடியும்?

20 இந்த நான்கு ஜீவன்கள் “அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றியிலும்” இருக்கின்றன. சரியாக இது எதை அர்த்தப்படுத்துகிறது? ஒவ்வொரு பக்கத்தின் நடுமையத்தில் ஒன்று நின்றுகொண்டிருக்கும்படியான இந்த வழியில் சிங்காசனத்தைச் சுற்றி அவை நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன என்பதை இது குறிக்கக்கூடும். அதனால், இன்றைய ஆங்கில மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பாளர்கள் மூல கிரேக்க சொற்றொடரை இந்த விதமாக பொழிப்புரை செய்துள்ளனர்: “சிங்காசனத்தைச் சுற்றி அதனுடைய பக்கங்கள் ஒவ்வொன்றிலும்.” இன்னொரு விதத்தில், சிங்காசனம் உள்ள பரலோகத்தில் நான்கு ஜீவன்கள் மத்திய நிலையில் இருக்கின்றன, என்று இந்தச் சொற்றொடர் பொருள்படக்கூடும். பெரும்பாலும், அதனால் தான் தி ஜெருசெலம் பைபிள் அந்தச் சொற்றொடரை இவ்வாறு மொழிபெயர்க்கிறது: “மத்தியில், சிங்காசனத்தைச் சுற்றிலும்தானே தொகுக்கப்பட்டிருக்கிறது.” முக்கியமான காரியமானது யெகோவாவின் சிங்காசனத்துடன் கேருபீன்களின் நெருங்கிய தன்மையாகும், அது எசேக்கியேல் பார்த்த யெகோவாவின் அமைப்பு இரதத்தின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள கேருபீன்களுக்கு ஒப்பிடக்கூடியது. (எசேக்கியேல் 1:15-22) இவை எல்லாம் சங்கீதம் 99:1-ன் (NW) வார்த்தைகளுடன் ஒத்திருக்கின்றன: “யெகோவா ராஜரீகம் பண்ணுகிறார் . . . அவர் கேருபீன்கள் மத்தியில் வீற்றிருக்கிறார்.”

21, 22. (அ) நான்கு ஜீவன்களை யோவான் எவ்வாறு விவரிக்கிறார்? (ஆ) நான்கு ஜீவன்களின் ஒவ்வொன்றினுடைய தோற்றத்தினாலும் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டிருப்பது என்ன?

21 யோவான் தொடருகிறார்: “முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும், இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனுஷமுகம் போன்ற முகமுள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன.” (வெளிப்படுத்துதல் 4:7) ஏன் இந்த நான்கு ஜீவன்களும் ஒன்றிலிருந்து மற்றொன்று அவ்வளவு வித்தியாசப்பட்டதாகக் காணப்படுகின்றன? இந்தத் தனிப்பட்ட ஜீவன்கள் திட்டவட்டமான தெய்வீக குணாதிசயங்களை உயர்த்திக் காட்டுகின்றன. முதலாவதாக, சிங்கம் இருக்கிறது. பைபிளில் சிங்கமானது தைரியத்துக்கு, விசேஷமாக நீதி மற்றும் நேர்மையை தொடர்ந்து கடைப்பிடிப்பதில் ஓர் அடையாளமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (2 சாமுவேல் 17:10; நீதிமொழிகள் 28:1) இவ்வாறாக, சிங்கமானது தைரியமான நீதியாகிய தெய்வீக குணாதிசயத்தை நன்றாகவே பிரதிநிதித்துவம் செய்கிறது. (உபாகமம் 32:4; சங்கீதம் 89:14) இரண்டாவது ஜீவன் காளைக்கொப்பாக இருக்கிறது. என்ன குணாதிசயத்தை காளை உங்களுடைய மனதிற்குக் கொண்டு வருகிறது? இஸ்ரவேலர்களுக்கு, இதனுடைய வல்லமையின் காரணமாக காளையானது மதிப்புமிக்க சொத்தாக இருந்தது. (நீதிமொழிகள் 14:4; யோபு 39:9-11-ஐயும் காண்க.) ஆகையால், இளங்காளை வல்லமையை, யெகோவால் கொடுக்கப்படும் சத்துவத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது.—சங்கீதம் 62:11; ஏசாயா 40:26.

22 மூன்றாவது ஜீவன் மனிதனுடையதைப் போன்ற முகத்தைக் கொண்டிருக்கிறது. பூமியின் மீது மனிதன் மட்டும் கடவுளுடைய சாயலில், மிக உயர்ந்த குணமாகிய அன்புடன், படைக்கப்பட்டிருப்பதால் இது தேவனைப் போன்ற அன்பை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். (ஆதியாகமம் 1:26-28; மத்தேயு 22:36-40; 1 யோவான் 4:8, 16) சந்தேகமில்லாமல், கேருபீன்கள் யெகோவாவின் சிங்காசனத்தைச் சுற்றி சேவை செய்கையில் இந்தக் குணாதிசயத்தை வெளிக்காட்டுகின்றன. இப்பொழுது நான்காவது ஜீவனைப்பற்றி என்ன? இது தோற்றத்தில் பறக்கிற கழுகைப் போன்றிருக்கிறது. யெகோவாதாமேயும் கழுகின் சிறந்த பார்வைத் திறனுக்குக் கவனத்தை ஈர்க்கிறார்: “அதின் கண்கள் தூரத்திலிருந்து அதைப் பார்க்கும்.” (யோபு 39:29) எனவே, கழுகு நீண்ட தூர நோக்குடைய ஞானத்தை நன்கு அடையாளப்படுத்துகிறது. யெகோவா ஞானத்தின் ஊற்றுமூலராக இருக்கிறார். கேருபீன்கள் அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகையில் தெய்வீக ஞானத்தைப் பயன்படுத்துகின்றன.—நீதிமொழிகள் 2:6; யாக்கோபு 3:17.

யெகோவாவின் துதிகள் ஒலிக்கின்றன

23. நான்கு ஜீவன்கள் ‘கண்களால் நிறைந்திருக்கின்றன’ என்ற உண்மையினால் அடையாளப்படுத்தப்பட்டிருப்பது என்ன, மேலும் அவை மூன்று ஜோடி சிறகுகள் கொண்டிருப்பதனால் வலியுறுத்தப்பட்டிருப்பது என்ன?

23 யோவான் அவருடைய விவரிப்பைத் தொடருகிறார்: “அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்றும் அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW] பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.” (வெளிப்படுத்துதல் 4:8) இந்தக் கண்களின் நிறைவானது முழுமையான மேலும் நீண்ட தூரப் பார்வையைத் தெரிவிக்கிறது. நான்கு ஜீவன்களும், தூங்கவேண்டிய அவசியத்தைக் கொண்டில்லாதிருப்பதனால் இதை முடிவில்லாமல் செய்கின்றன. அவை இப்படியாக எழுதப்பட்டவரைப் பின்பற்றுகின்றன: “தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது.” (2 நாளாகமம் 16:9) அவ்வளவு அதிகமான எண்ணிக்கையான கண்களைக் கொண்டிருப்பதனால் கேருபீன்கள் எங்கும் பார்க்க முடியும். அவற்றின் கவனத்திலிருந்து எதுவும் தப்பித்துக்கொள்ளுவது இல்லை. ஆகையால் அவை தேவனுக்கு அவருடைய நியாயத்தீர்ப்பின் வேலையில் சேவை செய்ய நல்ல ஆயத்த நிலையிலுள்ளன. அவரைக் குறித்து இது சொல்லப்படுகிறது: “யெகோவாவின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப் பார்க்கின்றன.” (நீதிமொழிகள் 15:3, NW) மேலும் மூன்று ஜோடி சிறகுகளுடன்—எண் மூன்று பைபிளில் வலியுறுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது—கேருபீன்கள் யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளை முன்னறிவிப்பதிலும் அவற்றை நிறைவேற்றுவதிலும் மின்னலைப்போன்ற வேகத்துடன் செல்ல முடியும்.

24. கேருபீன்கள் எவ்வாறு யெகோவாவைத் துதிக்கின்றன, மேலும் என்ன முக்கியத்துவத்துடன்?

24 கவனியுங்கள்! கேருபீன்கள் யெகோவாவிற்கு அளிக்கிற துதியின் பாடல் இன்னிசையுடன், ஆத்துமாவை உந்துவிக்கிறதாக இருக்கிறது: “இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW] பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்.” மீண்டுமாக, மூன்றின் தன்மை உச்ச அளவை குறிப்பிடுகிறது. கேருபீன்கள் யெகோவா தேவனின் பரிசுத்தத்தன்மையை உறுதியாக வலியுறுத்திக் கூறுகின்றன. அவர் பரிசுத்தத்தின் ஊற்றுமூலராகவும் முடிவான நிலையாகவும் இருக்கிறார். அவர் “நித்தியத்தின் ராஜா”வாகவும் எப்போதும் “அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவரும்” ஆக இருக்கிறார். (1 தீமோத்தேயு 1:17; வெளிப்படுத்துதல் 22:13) கேருபீன்கள் யெகோவாவின் இணையற்ற குணாதிசயங்களை எல்லா படைப்புகளுக்கும் முன்பாக அறிவிப்பு செய்கையில் அவை ஓய்வெடுத்துக்கொள்வதில்லை.

25. எவ்வாறு ஜீவன்களும் 24 மூப்பர்களும் யெகோவாவைப் போற்றுவதில் இணைந்திருக்கின்றன[ர்]?

25 பரலோகங்களின் பரலோகம் யெகோவாவுக்குத் துதிகளை எதிரொலிக்கிறது! யோவானின் விவரிப்பு தொடருகிறது: “மேலும், சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது, இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து: கர்த்தாவே, [யெகோவாவே, NW] தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.” (வெளிப்படுத்துதல் 4:9-11) எல்லா வசனங்களிலும், இது நம்முடைய தேவனும் ஆண்டவருமாகிய யெகோவாவுக்கு மிக அதிக மேன்மையான மரியாதைக்குரிய அறிவிப்புகளில் ஒன்றாக இருக்கிறது!

26. ஏன் 24 மூப்பர்கள் தங்களுடைய கிரீடங்களை யெகோவாவுக்கு முன்பாக கழற்றி வைக்கின்றனர்?

26 இயேசு காண்பிக்கிறதைப் போன்ற அதே மனநிலையை, 24 மூப்பர்கள் கொண்டிருக்கின்றனர், யெகோவாவுக்கு முன்பாக தங்களுடைய கிரீடங்களைக் கழற்றி வைப்பதிலும்கூட. தேவனுடைய பிரசன்னத்தில் தங்களை உயர்த்திக்கொள்வது அவர்களுடைய மனதுகளிலிருந்து வெகுதூரத்திலிருக்கிறது. இயேசு எப்போதும் செய்வது போல, அவர்களுடைய ராஜரீகத்தின் ஒரே நோக்கம், அவருக்கு மகிமையையும் கனத்தையும் கொண்டுவருவதற்கு என்பதை தாழ்மையுடன் உணர்ந்திருக்கின்றனர். (பிலிப்பியர் 2:5, 6, 9-11) கீழ்ப்படிதலுடன், அவர்கள் தங்களுடைய சொந்த தாழ்ந்த நிலையை ஏற்றுக்கொண்டு இருக்கின்றனர். மேலும் அவர்களுடைய ஆளுகை யெகோவாவின் சர்வலோக அரசாட்சியின் மேல் சார்ந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கின்றனர். இவ்விதமாக, சகலத்தையும் உண்டாக்கின தேவனுக்குத் துதியையும் மகிமையையும் கொடுப்பதில் கேருபீன்களுடனும் மற்ற உண்மையுள்ள சிருஷ்டிப்புடனும் இருதயப்பூர்வமான ஒத்திசைவில் இருக்கிறார்கள்.—சங்கீதம் 150:1-6.

27, 28. (அ) இந்தத் தரிசனத்தைப் பற்றிய யோவானின் விவரிப்பு நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்? (ஆ) யோவான் அடுத்து காண்பதையும் கேட்பதையும் குறித்து என்ன கேள்விகள் எழும்புகின்றன?

27 இந்தத் தரிசனத்தைப் பற்றிய யோவானுடைய விவரிப்பை வாசிக்கையில் யார் உணர்ச்சிவசப்படாமல் இருக்கக்கூடும்? அது பிரகாசமாகவும், கம்பீரமானதாகவும் இருக்கிறது! ஆனால் மெய்ம்மை எதைப் போன்று இருக்க வேண்டும்? யெகோவாவின் மாட்சிமைத்தானே போற்றுதலுள்ள இருதயத்தையுடைய எவரையும், ஜெபத்திலும் பகிரங்கமாக அவருடைய நாமத்தை பிரகடனம் செய்வதிலும், நான்கு ஜீவன்களோடும் 24 மூப்பர்களோடும் சேர்ந்துகொள்வதற்கு உயிர்ப்பூட்ட வேண்டும். இன்று சாட்சிகளாக இருக்கக்கூடிய சிலாக்கியத்தை உடைய கிறிஸ்தவர்களுக்கு கடவுளாக இருக்கிறவர் இவரே. (ஏசாயா 43:10) யோவானின் தரிசனம் பொருந்தக்கூடிய கர்த்தருடைய நாளில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவில் வையுங்கள். அந்த “ஏழு ஆவிகள்” நம்மை வழிநடத்தி பலப்படுத்துவதற்கு எப்பொழுதும் அருகில் இருக்கின்றன. (கலாத்தியர் 5:16-18) ஒரு பரிசுத்த கடவுளை சேவிப்பதில் பரிசுத்தமாக இருப்பதற்கு நமக்கு உதவி செய்ய கடவுளுடைய வார்த்தை இன்று கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. (1 பேதுரு 1:14-16) நிச்சயமாகவே, நாம் இந்தத் தீர்க்கதரிசனத்தின் வார்த்தைகளை சப்தமாக வாசிப்பதற்கு சந்தோஷமுள்ளவர்களாக இருக்கிறோம். (வெளிப்படுத்துதல் 1:3, NW) யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கவும், மேலும் அவருடைய துதிகளைச் சுறுசுறுப்பாக பாடுவதிலிருந்து உலகம் நம்முடைய கவனத்தைத் திருப்புவதை அனுமதிக்காமல் இருக்கவும், என்னே ஒரு தூண்டுதலை அவை அளிக்கின்றன!—1 யோவான் 2:15-17.

28 இதுவரை, பரலோகத்தில் திறந்து வைக்கப்பட்ட கதவின் வழியாக அணுகுவதற்கு அழைக்கப்படுகையில் பார்த்ததை யோவான் விவரித்திருக்கிறார். மிகச் சிறந்த விதத்தில், யெகோவா, அவருடைய மாட்சிமை மற்றும் பெருந்தன்மையின் எல்லா சிறப்பிலும், அவருடைய பரம சிங்காசனத்தில் வீற்றிருப்பதை அவர் அறிக்கை செய்கிறார். எல்லா அமைப்புகளிலும் மிக அதிக வல்லமையுள்ளதனால் அவர் சூழப்பட்டிருக்கிறார்—அதனுடைய பிரகாசத்திலும் உண்மைதவறாமையிலும் ஒளி வீசுகிறது. தெய்வீக வழக்கு மன்றம் அமர்ந்திருக்கிறது. (தானியேல் 7:9, 10, 18) தனிச்சிறப்புடைய ஒன்று நிகழ்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அது என்ன, மற்றும் அது நம்மை இன்று எவ்வாறு பாதிக்கிறது? காட்சி திறக்கையில் நாம் பார்ப்போமாக!

[கேள்விகள்]

[பக்கம் 75-ன் முழுபடம்]

[பக்கம் 78-ன் முழுபடம்]