Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உயிர்த்தெழுதல்

உயிர்த்தெழுதல்

உயிர்த்தெழுதல்

சொற்பொருள் விளக்கம்: “உயிர்த்தெழுதல்” என்று மொழிபெயர்த்துள்ள அனாஸ்டாஸிஸ் (A.na’sta.sis) என்ற கிரேக்கச் சொல்லின் நேர்ப்பொருள் “மறுபடியும் எழுந்துநிற்பது” என்பதாகும், இது மரணத்திலிருந்து எழுந்திருத்தலைக் குறிக்கிறது. “மரித்தோர் உயிர்த்தெழுதல்” என்ற முழு சொற்றொடர் வேத எழுத்துக்களில் திரும்பத்திரும்பப் பயன்படுத்தியிருக்கிறது. (மத். 22:31; அப். 4:2; 1 கொரி. 15:12) எபிரெயுவில் அது டெக்கியாத் ஹம்மெத்திம் (techi.yath ham.me.thim) என்பதாகும், இதன் பொருள் “மரித்தோரின் மீட்டுயிர்ப்பு” என்பதாகும். (மத். 22:23, அடிக்குறிப்பு, NW துணைக் குறிப்புகளையுடைய பதிப்பு) உயிர்த்தெழுப்புதல், அந்த ஆளின் வாழ்க்கை-மாதிரியை மீண்டும் செயல்படுத்துவதை உட்படுத்துகிறது, அந்த வாழ்க்கை-மாதிரியைக் கடவுள் தம்முடைய நினைவில் வைத்திருக்கிறார். அந்த ஆளுக்குக் கடவுள் கொண்டுள்ள சித்தத்தின்படி, அந்த நபர் மனித அல்லது ஆவி உடலில் திரும்ப உயிர்ப்பிக்கப்படுகிறான் எனினும் தான் மரித்தபோது கொண்டிருந்த அதே சுபாவத்தையும் நினைவுபதிவுகளையும் உடைய, தன்னுடைய சொந்த அதே தனித்துவத்தை இழக்காமல் கொண்டிருக்கிறான். மரித்தோரை உயிர்த்தெழுப்புவதற்கான இந்த ஏற்பாடு யெகோவாவின் தகுதியற்றத் தயவின் மேன்மையான வெளிக்காட்டாகும்; இது அவருடைய ஞானத்தையும் வல்லமையையும் காணச் செய்கிறது, மேலும் பூமியைக் குறித்த அவருடைய முதல் நோக்கம் இதைக்கொண்டு நிறைவேற்றப்படப்போகிற ஓர் ஏதுவாயும் இருக்கிறது.

உடலுருவற்ற ஆத்துமா மாம்ச உடலுடன் திரும்ப ஒன்றுசேருதலே உயிர்த்தெழுதலா?

இது கூடியதாவதற்கு, நிச்சயமாகவே, மாம்ச உடலிலிருந்து பிரியக்கூடிய உடலற்ற ஆவியினாலான ஆத்துமாவை மனிதர் கொண்டிருக்கவேண்டும். பைபிள் அத்தகைய காரியத்தைக் கற்பிக்கிறதில்லை. இந்தக் கொள்கை கிரேக்கத் தத்துவஞானத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஆத்துமாவைப்பற்றி பைபிள் கற்பிப்பது 375-378-ம் பக்கங்களில் குறிப்பிட்டிருக்கிறது. அழியாமையையுடைய உடலற்ற ஆத்துமாவில் கிறிஸ்தவமண்டலத்தினுடைய நம்பிக்கையின் தொக்கத்தைக் குறித்த அத்தாட்சிக்கு, 379, 380-ம் பக்கங்களைப் பாருங்கள்.

இயேசு மாம்ச உடலில் எழுப்பப்பட்டாரா, இப்பொழுது பரலோகத்தில் அத்தகைய உடல் அவருக்கு இருக்கிறதா?

1 பேதுரு 3:18: “கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். [“ஆவியால்,” KJ; “ஆவியில்,” RS, NE, Dy, JB]” (இயேசு மரித்தோரிலிருந்து உயிர்ப்பிக்கப்பட்டபோது, ஆவி உடலில் உயிர்ப்பிக்கப்பட்டார். கிரேக்க மூலவாக்கியத்தில் “மாம்சம்” மற்றும் “ஆவி” என்றச் சொற்கள் ஒன்றுக்கொன்று நேர்மாறாக வைக்கப்பட்டிருக்கின்றன, அவை இரண்டுமே நான்காம் வேற்றுமையில் இருக்கின்றன; ஆகையால் “ஆவியால்” என்பதை ஒரு மொழிபெயர்ப்பாளன் பயன்படுத்தினால், “மாம்சத்தால்” என்றும் அவன் நிலையாய்ச் சொல்லிவரவேண்டும். அல்லது “மாம்சத்தில்” என்பதை அவன் பயன்படுத்தினால் “ஆவியில்” என்றும் அவன் சொல்லவேண்டும்.)

அப். 10:40, 41, தி.மொ.: “அவரைக் [இயேசு கிறிஸ்துவைக்] கடவுள் மூன்றாம் நாளில் எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணப்படச் செய்தார். முழு ஜனத்துக்குமல்ல, சாட்சிகளாகக் கடவுளால் முன்குறிக்கப்பட்ட . . . எங்களுக்கே.” (மற்றவர்களும் ஏன் அவரைப் பார்க்கவில்லை? ஏனெனில் அவர் ஆவி சிருஷ்டியாயிருந்தார் மேலும், கடந்த காலத்தில் தேவதூதர்கள் செய்ததுபோல் தம்மைக் காணச்செய்ய மாம்ச உடல்களில் புலப்படச் செய்போது, தம்முடைய அப்போஸ்தலரின் முன்னிலையில் மாத்திரமே அவ்வாறு செய்தார்.)

1 கொரி.15:45: “அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் [ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டபோது இருந்ததுபோல் பரிபூரணராயிருந்த இயேசு கிறிஸ்து] உயிர்ப்பிக்கிற ஆவியானார்.”

இயேசு உயிர்த்தெழுப்பப்பட்ட உடலைக் குறித்து லூக்கா 24:36-39 குறிக்கும் பொருளென்ன?

லூக்கா 24:36-39: “இவைகளைக் குறித்து அவர்கள் [சீஷர்கள்] பேசிக்கொண்டிருக்கையில், இயேசுதாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே” என்று சொன்னார்.

மனிதர் ஆவிகளைக் காண முடியாது, ஆகையால் சீஷர்கள் தாங்கள் ஓர் ஆவேசத்தை அல்லது தரிசனத்தைக் காண்பதாக எண்ணினரெனத் தெரிகிறது. (மாற்கு 6:49, 50 ஒப்பிடவும்.) தாம் ஆவேசம் அல்லவென இயேசு அவர்களுக்கு உறுதிப்படுத்தினார்; அவர்கள் அவருடைய மாம்ச உடலைக் காணவும் அவரைத் தொட்டு, எலும்புகளை உணரவும் முடியும்; அவர்களுடைய முன்னிலையில் அவர் சாப்பிட்டார். அவ்வாறே, கடந்தக் காலத்தில், தூதர்கள் மனுஷருக்குக் காணப்படும்படி மாம்ச உடலில் தோன்றினார்கள்; அவர்கள் சாப்பிட்டார்கள், சிலர் மணஞ்செய்து பிள்ளைகளையும் தோற்றுவித்தார்கள். (ஆதி. 6:4; 19:1-3) தம்முடைய உயிர்த்தெழுதலுக்குப் பின், இயேசு அதே மாம்ச உடலில் எப்பொழுதும் தோன்றவில்லை (ஒருவேளை அவர் அப்பொழுது ஓர் ஆவியாயிருந்த உண்மையை அவர்களுடைய மனதில் உறுதியாய்ப் பதிய செய்வதற்காக இருக்கலாம்), ஆகையால் அவருடைய மிக நெருங்கிய தோர்களும் அவரை உடனடியாக அடையாளங் கண்டுகொள்வில்லை. (யோவான் 20:14, 15; 21:4-7) எனினும், புலப்படத்தக்க உடலில் திரும்பத்திரும்ப அவர்களுக்குத் தோன்றினதாலும் தாங்கள் அறிந்த இயேசுவோடு அடையாளங்கண்டுகொள்ளச் செய்யும் காரியங்களைச் சொல்வதாலும் செய்வதாலும், தாம் மரித்தோரிலிருந்து உண்மையில் உயிர்த்தெழுப்பப்பட்டாரென்ற உண்மையில் அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்தினார்.

இயேசு இப்பொழுது பரலோகத்தில் கொண்டுள்ள உடலில் அந்தச் சீஷர்கள் அவரை உண்மையில் கண்டிருந்தால், மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவை “இவர் அவருடைய [கடவுளுடைய] மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிரு”க்கிறாரென பவுல் பின்னால் குறிப்பிட்டிருக்கமாட்டான், ஏனெனில் கடவுள் ஆவியாயிருக்கிறார் அவர் மாம்சத்தில் ஒருபோதும் இருக்கவில்லை.—எபி. 1:3; 1 தீமோத்தேயு 6:16-ஐ ஒத்துப்பாருங்கள்.

இயேசு உயிர்த்தெழுந்ததற்குப் பின் தோற்றமளித்தவற்றைப் பற்றிய அறிக்கைகளை வாசிக்கையில், 334-ம் பக்கத்தில் எடுத்துக் குறிப்பிடப்பட்டுள்ள 1 பேதுரு 3:18-ஐயும் 1 கொரிந்தியர் 15:45-ஐயும் மனதில் வைத்துக்கொண்டால் அவற்றைச் சரியாய்ப் புரிந்துகொள்ள நமக்கு உதவிசெய்யும்.

மேலும் பக்கங்கள் 217, 218-ல் “இயேசு கிறிஸ்து” என்பதன்கீழ்ப் பாருங்கள்.

கிறிஸ்துவுடன் பரலோக வாழ்க்கையில் பங்குகொள்ள யார் உயிர்த்தெழுப்பப்படுவார்கள், அவர்கள் அங்கே என்ன செய்வார்கள்?

லூக்கா 12:32: “பயப்படாதே சிறு மந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.” (இதில் விசுவாசங்காட்டின எல்லாரும் அடங்கியில்லை; இந்த எண்ணிக்கை மட்டுப்பட்டது. அவர்கள் பரலோகத்தில் இருப்பது ஒரு நோக்கத்திற்காக.)

வெளி. 20:4, 6: “நான் சிங்காசனத்தைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக்கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. . . . முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.”

மேலும் பக்கங்கள் 162-168-ல், “பரலோகம்” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

பரலோக வாழ்க்கைக்கு எழுப்பப்பட்டவர்கள் முடிவில் அங்கே மகிமைப்படுத்தப்பட்ட மாம்ச உடலைப் பெற்றிருப்பார்களா?

பிலி. 3:20, 21: “கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து . . . தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.” (இது, அவர்களுடைய மாம்ச உடலே முடிவில் பரலோகத்தில் மகிமையானதாக்கப்படுமென பொருள்கொள்கிறதா? அல்லது பரலோக வாழ்க்கைக்கு எழுப்பப்படுகையில் தாழ்ந்த மாம்ச உடலைக் கொண்டிருப்பதற்குப் பதில் அவர்கள் மகிமையான ஆவி உடல் தரிக்கப்படுவரென பொருள் கொள்கிறதா? பின்வரும் வேதவசனங்கள் பதில் சொல்லட்டும்.)

1 கொரி. 15:40, 42-44, 47-50: “வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே; பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே; . . . மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். . . . ஜென்ம சரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; . . . முந்தின மனுஷன் [ஆதாம்] பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் [இயேசு கிறிஸ்து] வானத்திலிருந்து வந்த கர்த்தர். மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே. மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம். சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது.” (இரண்டு வகை சரீரங்கள் எவ்வாறாவது கலப்பதற்கு அல்லது மாம்ச உடலைப் பரலோகத்துக்கு எடுத்துச் செல்வதற்கு இங்கே அனுமதியில்லை.)

பொதுவில் மனிதவர்க்கத்துக்கு உயிர்த்தெழுதல் எதைக் குறிக்குமென்பதை இயேசு எவ்வாறு நிரூபித்துக் காட்டினார்?

யோவான் 11:11, 14-44: “[இயேசு தம்முடைய சீஷர்களிடம்:] நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார். . . . இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாய்ச் [சொன்னார்]. . . . இயேசு வந்தபோது அவன் [லாசரு] கல்லறையில் வைக்கப்பட்டு நாலுநாளாயிற்றென்று கண்டார். இயேசு அவளை [மார்த்தாள், லாசருவின் ஒரு சகோதரி] நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், . . . என்றார். . . . பின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.” (மற்றொரு வாழ்க்கையில் ஆசீர்வாதமான நிலையிலிருந்த லாசருவை, அதைவிட்டு வரும்படி இயேசு இவ்வாறு அழைத்திருந்தால் அது அன்புள்ள காரியமாய் இருந்திராது. ஆனால் உயிரற்ற நிலையிலிருந்த லாசருவை இயேசு எழுப்பினது அவனுக்கும் அவனுடைய சகோதரிகளுக்கும் அன்பு காட்டினதாகும். மறுபடியும் ஒருமுறை லாசரு உயிருள்ள மனிதனானான்.)

மாற்கு 5:35-42: “ஜெபஆலயத் தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள். அவர்கள் சொன்ன வார்த்தைகளை இயேசு கேட்டவுடனே, ஜெபஆலயத்தலைவனை நோக்கி: பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்று சொல்லி; . . . பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தம்மோடே வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு, பிள்ளையிருந்த இடத்தில் பிரவேசித்து, பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறு பெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம். உடனே சிறு பெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாயிருந்தாள். அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள்.” (கிறிஸ்துவின் ஆயிர ஆண்டு ஆட்சியின்போது பூமியில் பொது உயிர்த்தெழுதல் நடந்தேறுகையில், பல லட்சக்கணக்கான பெற்றோரும் அவர்களுடைய பிள்ளைகளும் திரும்ப ஒன்றிணைகையில் மிகுதியாய்க் களிகூருவார்கள்.)

பூமியில் வாழும்படி எழுப்பப்படுவோருக்கு என்ன எதிர்பார்ப்புகள் காத்திருக்கின்றன?

லூக்கா 23:43, NW: “மெய்யாகவே இன்று நான் உனக்குச் சொல்கிறேன், நீ என்னுடன் பரதீஸில் இருப்பாய்.” (அரசராக ஆளும் கிறிஸ்துவின் ஆட்சியின்கீழ் பூமி முழுவதும் பரதீஸாக மாற்றப்படும்.)

வெளி. 20:12, 13: “மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் [புஸ்தகச் சுருள்கள், NW] திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் [ஜீவபுஸ்தகச் சுருள், NW] என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். . . . யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்.” (புஸ்தகச் சுருள்களைத் திறப்பது, ஏசாயா 26:9-க்குப் பொருந்த, தெய்வீகச் சித்தத்தைக் கற்பித்துப் பயிற்றுவிக்கும் ஒரு காலத்தைக் குறிக்கிறதெனத் தெரிகிறது. “ஜீவபுஸ்தகச் சுருள்” திறக்கப்பட்டது, இந்தக் கல்விக்குச் செவிகொடுப்போருக்கு அந்தச் சுருளில் தங்கள் பெயர்கள் எழுதப்படச் செய்வதற்கான வாய்ப்பு இருக்குமென குறிப்பாய் உணர்த்துகிறது. அவர்களுக்கு எதிரே மனித பரிபூரணத்தில் நித்திய ஜீவனடையும் எதிர்பார்ப்பு இருக்கும்.)

பக்கங்கள் 227-232-ல், “ராஜ்யம்” என்பதன்கீழ்ப் பாருங்கள்.

வெறுமென நியாயத்தீர்ப்பு அளிப்பதற்கும் பின்பு இரண்டாம் மரணத்துக்குட்படுத்துவதற்கும் சிலர் எழுப்பப்படுவார்களா?

யோவான் 5:28, 29-ன் பொருள் என்ன? அங்கே சொல்லியிருப்பதாவது: “ஞாபகார்த்தக் கல்லறைகளிலிருப்போர் அவருடைய குரலைக் கேட்டு வெளிவருவார்கள், நல்ல காரியங்களைச் செய்தவர்கள் ஜீவனுக்குரிய உயிர்த்தெழுதலுக்கும், தீமையானவற்றைச் செய்தவர்கள் ஆக்கினைத்தீர்ப்புக்குரிய உயிர்த்தெழுதலுக்கும் வருவார்கள்.” (NW) இயேசு இங்கே சொன்னதை அவர் பின்னால் யோனுக்குக் கொடுத்த வெளிப்படுத்தலின் துணைகொண்டு விளங்கிக்கொள்ளவேண்டும். (337-ம் பக்கத்தில் எடுத்துக் குறிப்பிட்டுள்ள வெளிப்படுத்துதல் 20:12, 13-ஐ பாருங்கள்.) முன்னால் நல்ல காரியங்களைச் செய்தவர்களும் முன்னால் கெட்ட காரியங்களைப் பழக்கமாய்ச் செய்தவர்களும் “யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படை”வார்கள். எந்தக் கிரியைகள்? அவர்கள் கடந்த வாழ்க்கையில் செய்தக் கிரியைகளின்பேரில் கண்டனஞ்செய்யப்படவிருக்கிறார்களென்ற கருத்தை நாம் ஏற்றால், அது: “மரித்தவன் இனிப் பாவத்துக்குக் கடன்பட்டவனல்ல,” என்று ரோமர் 6:7-ல் (தி.மொ.) சொல்லியிருப்பதற்கு முரண்படும். மேலும் வெறுமென அவர்களை அழிப்பதற்காக ஆட்களை உயிர்த்தெழுப்புவதும் நியாயமாயிராது. ஆகையால் யோன் 5:28, 29a-ல் இயேசு, வரப்போகிற உயிர்த்தெழுதலைக் குறிப்பிட்டார், பின்பு, 29-ம் வசனத்தின் மீதிபாகத்தில், அவர்கள் மனித பரிபூரணத்துக்கு உயர்த்தப்பட்டு நியாயம்விசாரிக்கப்பட்ட பின்னான முடிவைக் குறித்துப் பேசினார்.

பூமியில் உயிர்த்தெழுப்பப்படவிருப்போரைக் குறித்து வெளிப்படுத்துதல் 20:4-6 என்ன காட்டுகிறது?

வெளிப்படுத்துதல் 20:4-6: “நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் [கடவுளைப்பற்றிப் பேசினதற்காகவும், NW] சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், . . . கண்டேன். அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். மரணமடைந்த மற்றவர்கள் இந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.”

வளை அடைப்புக் குறிகளுக்கிடையில் சொல்லியுள்ளதைப் பின்தொர்ந்து வரும் குறிப்பை அதற்கு முன்னாலுள்ளதோடு இணைக்க வாசகருக்கு உதவிசெய்ய NW மற்றும் Mo மொழிபெயர்ப்புகளில் வளை அடைப்புக் குறிகள் பயன்படுத்தியுள்ளன. தெளிவாய்ச் சொல்லியுள்ளபடி, முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குகொள்வோர் “மரணமடைந்த மற்றவர்கள்” அல்லர். அந்த உயிர்த்தெழுதல் கிறிஸ்துவுடன் ஆயிரம் ஆண்டுகள் அரசாளுபவர்களுக்கேயாகும். இது, கிறிஸ்துவுடன் பரலோகத்தில் அரசாளுபவர்களைத் தவிர மனிதவர்க்கத்தில் வேறு எவரும் அந்த ஆயிரம் ஆண்டுகளின்போது வாழ்ந்திராரென பொருள்கொள்கிறதா? இல்லை; அவ்வாறிருந்தால் அவர்கள் ஆசாரியத்துவம் செய்வோராய்ச் சேவிக்க அங்கே ஒருவருமில்லையெனவும், அவர்கள் ஆட்சி எல்லை மக்கள் குடியிருப்பில்லாத பூகோளமாயிருக்கும் எனவும் பொருள்படும்.

அப்படியானால், “மரணமடைந்த மற்றவர்கள்” யாவர்? ஆதாமின் பாவத்தின் விளைவாய் மரித்த எல்லா மனிதவர்க்கத்தாரும், மேலும் மிகுந்த உபத்திரவத்தைத் தப்பிப் பிழைத்தவராயிருப்பினும் அல்லது அந்த ஆயிர ஆண்டுகளின்போது பிறப்பவராயிருப்பினும், அத்தகைய பாவத்தின் மரணத்தை விளைவிக்கும் பாதிப்புகளிலிருந்து விடுவிக்கப்பட வேண்டியவரானவர்களுமே.—எபேசியர் 2:1-ஐ ஒத்துப் பாருங்கள்.

என்ன கருத்தில் அவர்கள் அந்த ஆயிரம் ஆண்டுகளின் முடிவு வரையில் “உயிரடையவில்லை”? இது அவர்களுடைய உயிர்த்தெழுதலைக் குறிக்கிறதில்லை. இந்த ‘உயிரடைவது’ மனிதராக வெறுமென உயிர்வாழ்வதைப் பார்க்கிலும் மிக அதிகத்தை உட்படுத்துகிறது, இது ஆதாமினால் உண்டான பாவத்தின் எல்லா விளைவுகளிலிருந்தும் விடுதலையாக்கப்பட்ட மனித பரிபூரணத்தை அடைவதைக் குறிக்கிறது. 5-ம் வசனத்தில் இதைக் குறிப்பது, அதற்கு முந்தின வசனத்தில் பரலோகத்தில் இருக்கப்போகிறவர்கள் ‘உயிர்த்தார்கள்’ என்று சொன்னதை உடனடியாக அடுத்து வருவதைக் கவனியுங்கள். அவர்களுடைய காரியத்தில் அது பாவத்தின் எல்லா விளைவுகளிலிருந்தும் விடுதலையான உயிரைக் குறிக்கிறது; அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் அழியாமையும் தயவாய் அளிக்கப்படுகிறது. (1 கொரி. 15:54) அப்படியானால், “மரணமடைந்த மற்றவர்களுக்கு” அது மனித பரிபூரணத்தில் செழுமைநிறைந்த வாழ்க்கையைக் குறிக்க வேண்டும்.

இந்தப் பூமிக்குரிய உயிர்த்தெழுதலில் யார் அடங்கியிருப்பர்?

யோவான் 5:28, 29, NW: “இதைக் குறித்து ஆச்சரியப்படவேண்டாம், ஏனெனில் அந்த மணிநேரம் வருகிறது அதில் ஞாபகார்த்தக் கல்லறைகளிலுள்ள யாவரும் அவருடைய குரலைக் [இயேசுவின் குரலைக்] கேட்டு வெளிவருவார்கள்.” (“ஞாபகார்த்தக் கல்லறைகள்” என்று மொழிபெயர்த்துள்ள கிரேக்கச் சொல் டாஃபஸ் (ta’phos) [பிரேதக்குழி, ஒரு தனி பிணம் புதைக்குமிடம்] என்பதன் பன்மை அமைப்பல்ல அல்லது ஹேய்டீஸ் (hai’des) [பிரேதக்குழிநிலை, மரித்த மனிதவர்க்கத்தின் பொதுப் பிரேதக்குழி] அல்ல ஆனால் மெனிமெய்யான் (mnemei’on) [நினைவுச்சின்னம், ஞாபகார்த்தக் கல்லறை] என்பதன் பன்மை நான்காம் வேற்றுமை அமைப்பாகும் இது மரித்த ஆளின் நினைவைப் பாதுகாப்பதன்பேரில் அழுத்தத்தை வைக்கிறது. மன்னிக்கமுடியாதப் பாவங்களினிமித்தம் கெஹென்னாவில் அவர்களுடைய நினைவு முற்றிலும் அழிக்கப்பட்டுப்போனவர்களையல்ல, ஆனால் கடவுள் நினைவுகூர்ந்து, என்றென்றும் வாழும் வாய்ப்புடன் உயிர்த்தெழுப்பப்போகிற ஆட்களுடையதையேயாகும்.—மத். 10:28; மாற்கு 3:29; எபி. 10:26; மல். 3:16.)

அப். 24:15: “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று . . . நம்பிக்கைகொண்டிருக்கிறேன்.” (கடவுளுடைய நீதியுள்ள வழிகளில் வாழ்ந்தவர்களும், அறியாமையினால், அநீதியான காரியங்களைச் செய்தவர்களுமான இருதிறத்தாரும் உயிர்த்தெழுப்பப்படுவர். மரித்த சில குறிப்பிட்ட தனி நபர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்களாவென்ற நம்முடைய எல்லாக் கேள்விகளுக்கும் பைபிள் பதிலளிக்கிறதில்லை. ஆனால், எல்லா உண்மைகளையும் அறிகிற கடவுள், பட்சபாதமின்றி, தம்முடைய நீதியுள்ள தராதரங்களைப் புறக்கணியாத, இரக்கத்தால் மட்டுப்படுத்தப்பட்ட நீதியுடன் செயல் நடப்பிப்பாரென நாம் நம்பிக்கையுடனிருக்கலாம். ஆதியாகமம் 18:25-ஐ ஒத்துப்பாருங்கள்.)

வெளி. 20:13, 14, தி.மொ.: “சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் [ஹேடீஸும்] தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன, ஒவ்வொருவரும் தத்தம் செய்கைகளின்படியே தீர்ப்புப் பெற்றார்கள். அப்பொழுது மரணமும் பாதாளமும் [ஹேடீஸும்] அக்கினிக் கடலிலே எறியப்பட்டன, இதுவே இரண்டாம் மரணம், அக்கினிக்கடல்.” (ஆகையால், ஆதாமால் உண்டான பாவத்தினிமித்தம் மரித்தவர்கள், சமுத்திரத்திலோ, மரித்த மனிதவர்க்கத்தின் பூமிக்குரிய பிரேதக்குழியாகிய ஹேடீஸிலோ, எங்கே புதைக்கப்பட்டிருந்தாலும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.)

மேலும் “இரட்சிப்பு” என்ற முக்கிய தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

கோடிக்கணக்கானோர் மரித்தோரிலிருந்து எழுப்பப்படவிருக்கிறார்களென்றால், அவர்கள் எல்லாரும் எங்கே வாழ்வார்கள்?

கணிசமாய் மதிப்பிட பூமியில் வாழ்ந்த ஜனங்களின் எண்ணிக்கை 2,000,00,00,000 ஆகும். நாம் கவனித்தபடி, இவர்களில் எல்லாரும் உயிர்த்தெழுப்பப்படபோவதில்லை. அவர்கள் எல்லாரும் உயிர்த்தெழுப்பப்படுவரென நாம் வைத்துக்கொண்டாலும், போதிய இடமிருக்கும். தற்போது பூமியின் நிலப்பரப்பு 5,70,00,000 சதுர மைல்களாகும். (14,76,00,000 சதுர கிலோமீட்டர்கள்) இதில் பாதியளவை மற்ற நோக்கங்களுக்காக ஒதுக்கிவைத்தாலும், ஓர் ஏக்கருக்குச் சற்றுக் குறைந்தது (c. 0.37 ha) ஒவ்வொரு ஆளுக்கும் இன்னும் இருக்கும், இது போதியளவுக்கு மேற்பட்ட உணவை அளிக்க முடியும். தற்போதைய உணவுக்குறைபாடுகளுக்கு மூலகாரணம் போதியளவு விளைவிக்க இந்தப் பூமிக்கு ஆற்றலில்லை என்ற எதுவுமல்ல, அதற்கு மாறாக, அரசியல் போட்டியும் வாணிபப் பேராசையுமேயாகும்.

மேலும் பக்கம் 116-ல், “பூமி” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.