Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உலகம்

உலகம்

உலகம்

சொற்பொருள் விளக்கம்: காஸ்மாஸ் என்ற கிரேக்கச் சொல்லிலிருந்து மொழிபெயர்க்கையில் “உலகம்” என்பது பின்வருபவற்றைக் குறிக்கலாம்: (1) முழுமையாக மனிதவர்க்கம், அவர்களுடைய ஒழுக்க நிலைமை அல்லது வாழ்க்கைப்போக்குக்குப் புறம்பாக, (2) ஒருவன் அதற்குள் பிறந்திருப்பதும் அதில் அவன் வாழ்வதுமான மனித சூழ்நிலைமைகளின் அந்த ஒழுங்கமைப்பு, அல்லது (3) யெகோவாவின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களுக்குப் புறம்பான மனிதவர்க்கத் தொகுதி. பைபிள் மொழிபெயர்ப்பாளர்களில் சிலர் “உலகம்” என்பதை “பூமி,” “குடியிருப்புள்ள பூமி,” மற்றும் “காரியங்களின் ஒழுங்குமுறை,” என பொருள்படும் கிரேக்கச் சொற்களுக்குச் சமமான சொல்லாகவும் பயன்படுத்துவதன்மூலம் திருத்தமற்ற எண்ணப்பதிவுகளைக் கொடுத்திருக்கின்றனர். பின்வரும் ஆய்வுரை “உலகம்” என்பதற்கு மேலே கொடுத்துள்ள பொருள்விளக்கங்களில் மூன்றாவதென எண் குறிக்கப்பட்டுள்ளதன்பேரில் அதன் முக்கிய கவனத்தைச் செலுத்துகிறது.

இந்த உலகம் அக்கினியால் அழிக்கப்படுமா?

2 பேதுரு 3:7: “இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த [கடவுளுடைய] வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.” (மனிதவர்க்கம் முழுமையாக அல்ல, “தேவபக்தியில்லாதவர்களே” அழிக்கப்படவிருக்கிறார்கள் என்பதைக் கவனியுங்கள். இவ்வாறே, 6-ம் வசனம் நோவாவின் நாளில் “உலகம்” அழிந்ததைக் குறிப்பிடுகிறது. பொல்லாத ஜனங்கள் அழிக்கப்பட்டார்கள், ஆனால் பூமியும் அதோடுகூட கடவுள் பயமுள்ள நோவாவும் அவனுடைய வீட்டாரும் அழியாமல் தொடர்ந்திருந்தார்கள். வரவிருக்கிற நியாயத்தீர்ப்பு நாளில் “அக்கினி” சொல்லர்த்தமானதாக இருக்குமா, அல்லது அது முழுமையான அழிவை அடையாளமாய்க் குறிக்கிறதா? சொல்லர்த்தமான அக்கினி ஏற்கெனவே கடும் வெப்பமுள்ள சூரியன் மற்றும் நட்சத்திரங்கள் போன்ற இத்தகைய சொல்லர்த்தமான வானொளிக் கோங்களின்மேல் என்ன பாதிப்புடையதாயிருக்கும்? இந்த வசனத்தின்பேரில் மேலுமான ஆராய்ச்சிக்குப் பக்கங்கள் 113-115-ல், “பூமி” என்பதன்கீழ்ப் பாருங்கள்.)

நீதி. 2:21, 22: “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.”

இந்த உலகத்தை ஆளுகிறவர் யார்—கடவுளா சாத்தானா?

தானி. 4:35: “அவர் [மகா உன்னதக் கடவுளாகிய யெகோவா] தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை.” (இதே பாங்கில், எரேமியா 10:6, 7 யெகோவாவை “ஜாதிகளின் ராஜா” எனக் குறிப்பிடுகிறது, ஏனெனில் அவர் உச்ச உயர்நிலையிலுள்ள அரசர், பூமியின் அரசர்களையும் அவர்கள் ஆளும் ஜாதிகளையும் கணக்கொப்புவிக்கும்படி கேட்கக்கூடியவர் மற்றும் கேட்கப்போகிறவர். பூமியின் சிருஷ்டிகராக, யெகோவாவே அதன் உரிமையுள்ள அரசர்; இந்தப் பதவியை அவர் ஒருபோதும் விட்டுவிடவில்லை.)

யோவான் 14:30: “[இயேசு சொன்னதாவது:] இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.” (இந்த அதிபதி சந்தேகமில்லாமல் யெகோவா தேவன் அல்ல, அவருடைய சித்தத்தையே இயேசு எப்பொழுதும் உண்மைத்தவறாமல் நடப்பிக்கிறார். இந்த “உலகத்தின் அதிபதி” 1 யோன் 5:19-ல் சொல்லப்பட்டுள்ளபடி ‘உலகமுழுவதும் அவனுக்குள் கிடக்கிற’ அந்தப் ‘பொல்லாங்கனான’ பிசாசாகிய சாத்தானாகவே இருக்கவேண்டும். கடவுளுக்கு உரியதான ஒரு கிரகத்தில் மனிதவர்க்கம் வாழ்கிறபோதிலும், யெகோவாவின் கீழ்ப்படிதலுள்ள ஊழியராயிராதவர்களாலாகிய உலகம் சாத்தானின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கிறது ஏனெனில் அத்தகைய ஆட்கள் அவனுக்குக் கீழ்ப்படிகிறார்கள். யெகோவாவின் ஆட்சிக்கு முழு இருதயத்துடனும் கீழ்ப்படிகிறவர்கள் அந்த உலகத்தின் பாகமாயில்லை. 2 கொரிந்தியர் 4:4-ஐ ஒப்பிடுங்கள்.)

வெளி. 13:2: “வலுசர்ப்பமானது [பிசாசாகிய சாத்தான்] தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் [மிருகத்துக்குக்] கொடுத்தது.” (இந்த ‘மிருகத்தின்’ விவரிப்பை தானியேல் 7-உடன் ஒத்துப் பார்க்கையில், இது மனித அரசாங்கத்தைக் குறிக்கிறதென்று காட்டுகிறது, அத்தகைய ஒரே ஓர் அரசாங்கத்தையல்ல ஆனால் முழு உலகளாவிய அரசியல் ஆட்சி ஒழுங்குமுறையைக் குறிக்கிறது. சாத்தான் அதன் அதிபதி என்பது லூக்கா 4:5-7-உடன் ஒத்திருக்கிறது, மேலும் வெளிப்படுத்துதல் 16:14, 16-உடனும் ஒத்திருக்கிறது, இதில் பேய்த்தன வசனிப்புகள் பூமி முழுவதிலுமுள்ள அரசர்களை கடவுளுக்கு எதிராக அர்மகெதோனில் போர்செய்யும்படி வழிநடத்துகின்றனவென படக்குறிப்பு முறையில் விளக்கிக் காட்டியிருக்கிறது. சாத்தான் உலகத்தை ஆளுவது, கடவுள், சர்வலோக அரசாட்சிக்குரிய விவாதத்தைத் தீர்ப்பதற்குத் தாம் குறித்துள்ள காலம் வரும் வரையில் வெறுமென விட்டுக்கொடுத்து சகித்துவரும் ஒன்றேயாகும்.)

வெளி. 11:15: “உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும் [யெகோவாவுக்கும்], அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; . . . என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.” (1914-ல் இது நடந்போது, இந்தத் தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறைக்குக் “கடைசி நாட்கள்” தொங்கின. யெகோவாவின் அரசாட்சியின் ஒரு புதிய வெளிக்காட்டு தோன்றிற்று, இந்தச் சமயத்தில் மேசியானிய அரசரான அவருடைய சொந்தக் குமாரனின் மூலமாகும். சீக்கிரத்தில் இந்தப் பொல்லாத உலகம் அழிக்கப்படும், அதன் பொல்லாத ஆவி அதிபதியாகிய சாத்தான், மனிதவர்க்கத்தைப் பாதிக்க முடியாதபடி அபிஸ்ஸுக்குள்ளாக்கப்படுவான்.)

இவ்வுலகத்தினிடமும் இவ்வுலகத்தின் பாகமாக இருக்கிறவர்களிடமும் உண்மையான கிறிஸ்தவர்களின் மனப்பான்மை என்ன?

யோவான்15:19, NW: “நீங்கள் [இயேசுவைப் பின்பற்றுவோர்] இவ்வுலகத்தின் பாகமானோர் அல்ல, நான் உங்களை இவ்வுலகத்திலிருந்து தெரிந்தெடுத்தேன்.” (இவ்வாறு உண்மையான கிறிஸ்தவர்கள் கடவுளிடமிருந்து பிரிந்த மனித சமுதாயத்தொகுதியின் பாகமாயில்லை. இயல்பான மனித நடவடிக்கைகளை அவர்கள் கவனிக்கிறார்கள், ஆனால் இந்த உலகத்தின் இயல்பாயும் யெகோவாவின் நீதியுள்ள வழிகளுக்கு முரணாயுமுள்ள மனநிலைகளையும், பேச்சையும், நடத்தையையும் அவர்கள் அறவே விட்டுவிகுகிறார்கள்.) (பக்கங்கள் 269-276, மேலும் 389-393-ஐ பாருங்கள்.)

யாக். 4:4: “விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.” (கிறிஸ்தவர்கள் அபூரணராயிருப்பதால், உலகத்தோடு கொள்ளும் தொர்புகள்மூலம் சில சமயங்கள் அவர்கள் கறைப்படலாம். ஆனால் கடவுளுடைய வார்த்தையிலிருந்து அறிவுரை கொடுக்கப்படுகையில், அவர்கள் மனஸ்தாபப்பட்டுத் திரும்பி தங்கள் வழிகளைத் திருத்திக்கொள்கிறார்கள். எனினும், சிலர், வேண்டுமென்றே தெரிந்துகொள்வதால், இந்த உலகத்தோடு தங்களை ஒன்றுசேர்த்துக்கொண்டால் அல்லது அதன் ஆவியைப் பின்பற்றினால், தாங்கள் இனிமேலும் உண்மையான கிறிஸ்தவர்களல்ல கடவுளுடன் பகைமையில் இருக்கும் இவ்வுலகத்தின் பாகமாகிவிட்டனரென காட்டுகின்றனர்.)

ரோமர் 13:1: “எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது.” (இந்த அறிவுரைக்குச் செவிகொடுக்கிறவர்கள், இவ்வுலகத்தின் அரசாங்கங்களைக் கவிழ்க்க முயற்சிசெய்யும் கலகக்காரரல்ல. அரசியல் ஆளுநர்களின் அதிகாரத்துக்குத் தங்களைக் கீழ்ப்படுத்துகின்றனர், அத்தகைய ஆளுநர்கள் கட்டளையிடுபவை கடவுளுடைய கட்டளைகளுக்கு முரணாக இராதவரை அவர்களுக்குக் கீழ்ப்படிகிறார்கள். இத்தகைய அரசாங்கங்களைக் கடவுள் முன்கண்டு முன்னறிவித்திருக்கிறார். அவர் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்துவைத்திருப்பதனால் அல்ல, ஆனால் அவருடைய அனுமதிப்பால் அவை அதிகாரம் செலுத்துகின்றன. மேலும் உரிய காலத்தில் அவர் அவற்றை நீக்கிப்போடுவார்.)

கலா. 6:10: “ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.” (ஆகையால், உண்மையான கிறிஸ்தவர்கள் தங்கள் உடனொத்த மனிதருக்கு நன்மைசெய்வதிலிருந்து பின்வாங்குவதில்லை. அவர்கள் கடவுளுடைய மாதிரியைப் பின்பற்றுகிறார்கள், அவர் பொல்லாத ஆட்கள்மீதும் நல்லவர்கள்மீதும் சூரியன் பிரகாசிக்கும்படி செய்கிறார்.—மத். 5:43-48.)

மத். 5:14-16: “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; . . . மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.” (கிறிஸ்தவர்கள் செய்யும் காரியங்களினிமித்தம் மற்றவர்கள் கடவுளுக்கு மகிமை செலுத்தவேண்டுமென்றால், கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் கடவுளுடைய பெயரையும் நோக்கத்தையுங் குறித்து உலகத்துக்குச் சுறுசுறுப்பாய்ச் செயல்படும் சாட்சிகொடுப்போராக இருக்கவேண்டுமென்பது தெளிவாயிருக்கிறது. இந்த வேலைக்கே உண்மையான கிறிஸ்தவர்கள் முதன்மையான அக்கறை செலுத்துகின்றனர்.)

தற்போதைய உலகநிலைமைகள் குறிப்பதென்ன?

“கடைசி நாட்கள்” என்ற முக்கிய தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.