Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கனவுகள்

கனவுகள்

கனவுகள்

சொற்பொருள் விளக்கம்: தூங்கிக்கொண்டிருக்கையில் ஒருவரின் எண்ணங்கள் அல்லது மனத் தோற்றங்கள். இயல்பான கனவுகள், கடவுள் கொடுத்தக் கனவுகள், மற்றும் குறிசொல்லுதலை உட்படுத்தும் கனவுகள் ஆகியவற்றை பைபிள் குறிப்பிடுகிறது.—யோபு 20:8; எண். 12:6; சகரி. 10:2.

கனவுகள் நம்முடைய காலத்தில் விசேஷித்த அர்த்தத்தைக் கொண்டிருக்கின்றனவா?

கனவுகளைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் என்ன கற்றறிந்திருக்கின்றனர்?

“எல்லாரும் கனவு காண்கிறார்கள்,” என்று தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா (1984, புத். 5, பக். 279) சொல்கிறது. “வயதுவந்தவர்களில் பெரும்பான்மையர் எட்டு மணிநேர உறக்கத்தின்போது சுமார் 100 நிமிடங்கள் கனவு காண்கிறார்கள்.” ஆகையால் கனவுகள் இயல்பான மனித அனுபவமே.

ஹார்வர்ட் மருத்துவ பள்ளியின், மருத்துவர் ஆலன் ஹாப்சன், பின்வருமாறு சொன்னார்: “அவை தெளிவற்ற சமிக்கைகள். ஒரு நிபுணர் அதை எவ்வாறு வேண்டுமானாலும் தான் முன்தீர்மானித்தவிதமாகவே விளக்கம் தரக்கூடும். ஆனால் அவற்றின் அர்த்தம் கனவு காண்பவனையே சார்ந்திருக்கிறது—அந்தக் கனவில்தானே ஒன்றுமில்லை.” இதை அறிக்கை செய்கையில், தி நியு யார்க் டைம்ஸ் பத்திரிகையின் “சயன்ஸ் டைம்ஸ்” என்ற பகுதி மேலும் சொன்னதாவது: “கனவுகளுக்கு மிகுந்த முக்கியத்துவத்தைக் கொடுக்கும் வல்லுநர் குழுவில், ஒரு கனவின் மனோ தத்துவ செய்தியைக் கண்டுபிடிக்கப் பல அணுகுமுறைகள் இருக்கின்றன. ஒவ்வொன்றும் வெவ்வேறுபட்ட கருத்துக்களை கொடுக்கின்றன. ஃபிராய்டைப் பின்பற்றுபவன் ஒரு கனவில் ஒரு வகையான அர்த்தத்தைக் காண்பான், அதேசமயத்தில் யுங்கைப் பின்பற்றுபவன் மற்றொரு அர்த்தத்தைக் காண்பான், மற்றும் கெஸ்டால்டின் அணுகுமுறயைப் பின்பற்றுபவன் இன்னொரு அர்த்தத்தைக் காண்பான். . . . ஆனால் கனவுகள் மனோ தத்துவ அர்த்தத்தைக் கொண்டிருக்கின்றன என்ற கருத்து நரம்பியல் விஞ்ஞானிகளின் பலத்தத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறது.”—ஜூலை 10, 1984, பக். C12.

விசேஷித்த அறிவை அளிப்பதாகத் தோன்றும் கனவுகள் கடவுளிடமிருந்தல்லாமல் மற்றத் தோற்றுமூலத்திலிருந்து வரக்கூடுமா?

எரே. 29:8, 9: “உங்கள் நடுவிலிருக்கிற உங்கள் தீர்க்கதரிசிகளும் உங்கள் குறிகாரரும் உங்களை மோம்போக்கவொட்டாதிருங்கள்; சொப்பனம் காணப்பண்ணுகிற உங்கள் சொப்பனக்காரருக்குச் செவிகொடாமலும் இருங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் [யெகோவா, தி.மொ.] சொல்லுகிறார். அவர்கள் என் நாமத்தைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள்; நான் அவர்களை அனுப்பினதில்லை என்று கர்த்தர் [யெகோவா] சொல்லுகிறார்.”

ஹார்ப்பர்ஸ் பைபிள் அகராதி நமக்குப் பின்வருமாறு தெரிவிக்கிறது: “சொப்பனங்களில் பாபிலோனியருக்கு அத்தகைய மிகுந்த நம்பிக்கை இருந்ததால் முக்கியத் தீர்மானங்கள் எடுக்கவேண்டிய நாளுக்கு முந்திய இரவு, அவர்கள், ஆலோசனைக்காக எதிர்பார்த்து, கோயில்களில் தூங்கினர். கிரேக்கர் உடல் ஆரோக்கியத்திற்கான ஆலோசனையை விரும்பி ஈஸ்குலாப்பீயஸ் [இதன் அடையாளச் சின்னம் சுருண்டுள்ள சர்ப்பம்] கோயில்களில் தூங்கினர், மேலும் ரோமர் [சுருண்டுள்ள சர்ப்பத்தோடு சில சமயங்களில் சம்பந்தப்படுத்தப்பட்ட] செராப்பிஸின் கோயில்களில் தூங்கினர். எகிப்தியர்கள் கனவுகளுக்குப் பொருள்விளக்கம் அளிக்கும் பெரும் நுட்பவிவரமான புத்தகங்களைத் தயாரித்தனர்.”—(நியு யார்க், 1961) மெடலீன் மில்லர் மற்றும் J. லேன் மில்லர், பக். 141.

முற்காலத்தில், எச்சரிப்புகள், கட்டளை, மற்றும் தீர்க்கதரிசனம் ஆகியவற்றைக் கொடுப்பதற்குக் கடவுள் சொப்பனங்களைப் பயன்படுத்தினார், ஆனால் இப்பொழுது தம்முடைய ஜனங்களை இம்முறையில் வழிநடத்துகிறாரா?

கடவுளிடமிருந்து தோன்றிய அத்தகைய கனவு அல்லது சொப்பனங்களைப்பற்றிய குறிப்புகள் மத்தேயு 2:13, 19, 20; 1 இராஜாக்கள் 3:5; ஆதியாகமம் 40:1-8 ஆகியவற்றில் காணப்படுகின்றன.

எபி. 1:1, 2, தி.மொ.: “பூர்வகாலத்தில் கடவுள் பற்பல பங்காகவும் பற்பல வகையாகவும் [சொப்பனங்கள் உட்பட] தீர்க்கதரிசிகளின் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றி இந்தக் கடைசி நாட்களிலே குமாரன் [இயேசு கிறிஸ்துவின்] மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார் [இவருடைய போகங்கள் பைபிளில் பதிவுசெய்து வைக்கப்பட்டிருக்கின்றன.”]

1 கொரி. 13:8, NW: “தீர்க்கதரிசன வரங்கள் இருந்தாலும் [சில சமயங்களில் கனவுகளைக்கொண்டும் கடவுள் தம்முடைய ஊழியருக்குத் தீர்க்கதரிசனங்களைக் கொடுத்தார்], அவை ஒழியச் செய்யப்படும்.”

2 தீமோ. 3:16, 17: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் [முற்றிலும் NW,] தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், . . . பிரயோஜனமுள்ளவை.”

1 தீமோ. 4:1: “ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே . . . சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் [“ஏவப்பட்ட வசனிப்புகளுக்கும்,” NW, (சில சமயங்களில் இவை சொப்பனங்களில் அளிக்கப்படுகின்றன)] பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.”