Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஜெபம்

ஜெபம்

ஜெபம்

சொற்பொருள் விளக்கம்:  சத்தமாய் அல்லது ஒருவரின் எண்ணங்களில் மெளனமாய், உண்மையான கடவுளை அல்லது பொய்க் கடவுட்களை நோக்கி வணக்கமுறையில் பேசுதல்.

பலர் உணருவதுபோல், உங்கள் ஜெபங்களுக்கு நீங்கள் பதிலடைவதில்லையென உணருகிறீர்களா?

யாருடைய ஜெபங்களைக் கேட்க கடவுள் மனமுள்ளவர்?

சங். 65:2; அப். 10:34, 35: “ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.” “தேவன் பட்சபாதமுள்ளவரல்ல . . . எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்.” (ஒருவரின் நாட்டினம், தோலின் நிறம், அல்லது பொருளாதார சூழ்நிலைமைகள் இந்தக் காரியத்தைப் பாதிப்பதில்லை. ஒருவருடைய இருதயத்தின் உள்நோக்கங்களும் அவரின் வாழ்க்கைமுறையுமே பாதிப்பைக் கொண்டிருக்கிறது.)

லூக்கா 11:2: “நீங்கள் ஜெபம்பண்ணும்போது: “பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக, . . . என்று சொல்லுங்கள்.” (உங்கள் ஜெபங்களை, அவருடைய பெயர் யெகோவா என்று பைபிளில் சொல்லியுள்ள, பிதாவை நோக்கிச் சொல்கிறீர்களா? அல்லது, அதற்குப்பதில், உங்கள் ஜெபங்களைப் “பரிசுத்தவான்களை” நோக்கிச் சொல்கிறீர்களா?)

யோவான் 14:6, 14: “இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். . . . என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன் . . . என்றார்.” (பாவியான மனிதனாக உங்கள் சார்பில் இயேசுவின் பரிந்துபேசுதல் உங்களுக்குத் தேவையென்பதை மதித்துணர்ந்து, இயேசு கிறிஸ்துவின் பெயரில் நீங்கள் ஜெபிக்கிறீர்களா?)

1 யோவான் 5:14: “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால் அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப்பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.” (எனினும், இத்தகைய நம்பிக்கையைக் கொண்டிருக்க நீங்கள் முதலாவது கடவுளுடைய சித்தத்தை அறியவேண்டும். பின்பு உங்கள் வேண்டுகோள்கள் அதற்கிசைய இருக்கும்படி நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.)

1 பேதுரு 3:12: “கர்த்தருடைய [யெகோவாவின், NW] கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது. தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய [யெகோவாவின், NW] முகம் விரோதமாயிருக்கிறது.” (நீதி எது தீமை எதுவென தம்முடைய வார்த்தையின்மூலம் யெகோவா சொல்வதைக் கற்றறிய நீங்கள் நேரமெடுத்திருக்கிறீர்களா?)

1 யோவான் 3:22: “அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்குமுன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம்.” (கடவுளுக்குப் பிரியமாயிருப்பதே உண்மையில் உங்கள் விருப்பமா, மேலும் நீங்கள் ஏற்கெனவே அறிந்துள்ள அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய ஊக்கமான முயற்சி எடுக்கிறீர்களா?)

ஏசா. 55:6, 7, தி.மொ.: “யெகோவாவைக் கண்டடையத்தக்க சமயத்திலேயே அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையிலேயே அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். தெய்வபயமற்றவன் தன் வழியையும் அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு யெகோவாவினிடம் திரும்புக, அவர் அவன்மேல் மனதுருகுவார்; நமது கடவுளினிடமே திரும்புக, அவர் மன்னிப்புக்கு அளவில்லை.” (தீமைசெய்த ஆட்களையுங்கூட ஜெபத்தில் தம்மை நோக்கிக் கூப்பிடும்படி யெகோவா இரக்கமாய் அழைக்கிறார். ஆனால், கடவுளுடைய அங்கீகாரத்தைக் கொண்டிருக்க, அவர்கள் தங்கள் தவறான வழிகளையும் நினைவுகளையும் விட்டு உள்ளப்பூர்வமாய் மனந்திரும்பி தங்கள் போக்கை மாற்றவேண்டும்.)

எது ஒருவரின் ஜெபங்களைக் கடவுள் அங்கீகரிக்கத் தகாததாக்கலாம்?

மத். 6:5: “நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப்போலிருக்க வேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (மேலும் லூக்கா 18:9-14)

மத். 6:7: “நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.”

நீதி 28:9, தி.மொ.: “[கடவுளுடைய] பிரமாணத்தைக் கேளாதபடி, தனது செவியை விலக்குவோன் ஜெபம் அருவருப்பு.”

மீகா 3:4, தி.மொ.: “அவர்கள் யெகோவாவை நோக்கி அபயமிடும்போது அவர் அவர்களுக்குப் பதில்கொடார், அவர்கள் தீமையானவற்றைச் செய்கிறபடியினால் அக்காலத்திலே அவர் தமது முகத்தை அவர்களுக்கு மறைப்பார்.”

யாக். 4:3: “நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.”

ஏசா. 42:8; மத். 4:10, கத்.பை.: “நான் கர்த்தர் [“யாவே,” NW; “யெகோவா,” தி.மொ.], இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடன்.” “உன் தேவனாகிய கர்த்தரை [“உன் கடவுளாகிய யெகோவாவை,” NW] ஆராதித்து, அவர் ஒருவரையே சேவிப்பாயாக.” (மேலும் சங்கீதம் 115:4-8, அல்லது டூவே மொழிபெயர்ப்பில் 113:4-8) (ஜெபம் ஒரு வணக்கமுறை. செதுக்கி உருவாக்கப்பட்ட பொருட்களுக்கு அல்லது சிலைகளுக்கு முன் நீங்கள் ஜெபித்தால், அது கடவுளைப் பிரியப்படுத்துவதாகுமா?)

ஏசா. 8:19: “அவர்கள் உங்களை நோக்கி: அஞ்சனம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ?”

யாக். 1:6, 7: “அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் [யெகோவாவிடம், NW] எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக.”

ஜெபிப்பதற்குத் தகுந்த காரியங்கள் யாவை?

மத். 6:9-13, தி.மொ.: “நீங்கள் ஜெபஞ் செய்யவேண்டிய விதமாவது: [1] பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. [2] உம்முடைய ராஜ்யம் வருவதாக. [3] உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. [4] அன்றன்று வேண்டிய எங்கள் ஆகாரத்தை இன்றும் எங்களுக்குத் தாரும். [5] எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னித்திருக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். [6] எங்களைச் சோனைக்குட்படப்பண்ணாமல் தீயோனினின்று எங்களை இரட்சியும் என்பதே.” (கடவுளுடைய பெயருக்கும் நோக்கத்துக்கும் முதன்மை தரவேண்டியதைக் கவனியுங்கள்.)

சங். 25:4, 5, தி.மொ.: “யெகோவாவே, உமது வழிகளை எனக்குக் காட்டியருளும். உமது பாதைகளை எனக்குப் போதித்தருளும். உமது சத்தியத்திலே என்னை நடத்தி என்னைப் போதித்தருளும், நீரே என் ரட்சிப்பின் கடவுள்.”

லூக்கா 11:13: “பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?”

1 தெச. 5:17, 18, தி.மொ.: “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். எவ்விஷயத்திலும் நன்றிசெலுத்துங்கள்.”

மத். 14:19, 20: “அவர் [இயேசு] அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள். எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்.”

யாக். 5:16: “ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்.”

மத். 26:41: “நீங்கள் சோனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்.”

பிலி. 4:6, தி.மொ.: “நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படவேண்டாம். எல்லா விஷயத்திலும் உங்கள் விண்ணப்பங்களை ஸ்தாத்திரத்தோடு கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் கடவுளுக்குத் தெரியப்படுத்துங்கள்.”

ஒருவர் இவ்வாறு சொன்னால்—

‘முதல் என்னுடன் ஜெபம்செய்யுங்கள், பின்பு உங்கள் செய்தியை எனக்குக் கொடுங்கள்’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘நீங்கள் ஜெபத்தின் முக்கியத்துவத்தை மதித்துணருபவரென்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். யெகோவாவின் சாட்சிகளும் தவறாமல் ஜெபிக்கின்றனர். ஆனால் எப்பொழுது எவ்வாறு ஜெபிப்பதென்பதைப்பற்றி இயேசு சொன்ன ஒன்று ஒருவேளை உங்களுக்குப் புதியதாயிருக்கலாம். தாங்கள் பக்தியுள்ள, ஜெபஞ்செய்யும் ஆட்களென மற்றவர்கள் காணவேண்டுமென்ற நோக்கத்துடன் யாவருங்காண ஜெபங்களைச் செய்யக்கூடாதென அவர் தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னது உங்களுக்குத் தெரியுமா? . . . (மத். 6:5)’ பின்பு மேலும் சொல்லலாம்:  ‘நமக்கு முக்கிய அக்கறைக்குரியதாயிருக்கவேண்டியது எது, நம்முடைய ஜெபங்களில் நாம் முதல் வைக்கவேண்டியது எதுவென அவர் தொர்ந்து சொன்னதைக் கவனியுங்கள். அதையே நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ள வந்திருக்கிறேன். (மத். 6:9, 10)’

அல்லது இவ்வாறு சொல்லலாம்:  ‘சில மதத் தொகுதிகளிலிருந்துரும் பிரதிநிதிகள் அவ்வாறு செய்கிறார்களென எனக்குத் தெரியும். ஆனால் யெகோவாவின் சாட்சிகள் அவ்வாறு செய்வதில்லை, ஏனெனில் தம்முடைய சீஷர்கள் தங்கள் பிரசங்கிக்கும் வேலையை வேறொரு முறையில் செய்யவேண்டுமென இயேசு அவர்களுக்குக் கட்டளையிட்டார். “ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது, முதலாவது ஜெபியுங்கள்,” என்று சொல்வதற்குப் பதில், இங்கே மத்தேயு 10:12, 13-ல் காணப்படுகிறபடி அவர் சொன்னதைக் கவனியுங்கள். . . . மேலும் அவர்கள் எதைப்பற்றிப் பேசவேண்டுமென்பதை இங்கே 7-ம் வசனத்தில் பாருங்கள். . . . உங்களையும் என்னையும் போன்ற ஆட்களுக்கு இந்த ராஜ்யம் எவ்வாறு உதவிசெய்ய முடியும்? (வெளி. 21:4)’