Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பரிசுத்தவான்கள்

பரிசுத்தவான்கள்

பரிசுத்தவான்கள்

சொற்பொருள் விளக்கம்:  ரோமன் கத்தோலிக்கப் போதகத்தின்படி, பரிசுத்தவான்கள், மரித்து இப்பொழுது பரலோகத்தில் கிறிஸ்துவுடன் இருப்போரும், முதன்மையான பரிசுத்தமும் நற்பண்புமுடையோராக சர்ச் அங்கீகாரம் அளித்திருப்போருமாவர். கடவுளிடம் பரிந்துபேசுவோராக இந்தப் பரிசுத்தவான்களை வணங்கி வேண்டிக்கொள்ள வேண்டுமெனவும் பரிசுத்தவான்களின் நினைவூட்டுப் பொருட்களையும் பரிசுத்தவான்களின் சிலைகளையும் வணங்கவேண்டுமெனவும் டிரிடென்டீன் விசுவாசப்பிரமாணம் கூறுகிறது. மற்ற மதங்களும், பரிசுத்தவான்களின் உதவியை நாடி வேண்டிக்கொள்கின்றனர். சில மதங்கள், தங்கள் உறுப்பினர் யாவரும் பரிசுத்தவான்களெனவும் பாவத்துக்கு விலகினவர்களெனவும் கற்பிக்கின்றன. பைபிள் பல இடங்களில் பரிசுத்தவான்களைப்பற்றிக் குறிப்பிடுகிறது. கிறிஸ்துவைப் பின்பற்றும் ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட 1,44,000 பேர்களை அவ்வாறிருப்பதாகக் குறிப்பிடுகிறது.

ஒருவனைப் பரிசுத்தவானென அங்கீகரிப்பதற்கு முன்னால் அவன் பரலோக மகிமையை அடைந்திருக்கவேண்டுமென பைபிள் கற்பிக்கிறதா?

பரலோகத்திலுள்ள பரிசுத்தவான்களை பைபிள் நிச்சயமாகவே குறிப்பிடுகிறது. யெகோவா “பரிசுத்தர் [கிரேக்கில் ஹாஜியன் (ha’gi.on)” என பேசப்பட்டிருக்கிறார். (1 பேதுரு 1:15, 16; லேவியராகமம் 11:45-ஐ பாருங்கள்.) பூமியிலிருக்கையில் இயேசு கிறிஸ்துவை “தேவனுடைய பரிசுத்தர் [ha’gi.os]” எனவும் பரலோகத்தில் “பரிசுத்தர் [ha’gi.os]” எனவும் விவரித்திருக்கிறது. (மாற்கு 1:24; வெளி. 3:7, தி.மொ.) தேவதூதர்களும் “பரிசுத்தர்.” (அப். 10:22) மூல கிரேக்கிலுள்ள அதே அடிப்படை பதம் பூமியிலுள்ள பல ஆட்களுக்கும் பயன்படுத்தியிருக்கிறது.

அப். 9:32, 36-41: “பேதுரு போய் எல்லாரையும் சந்தித்துவருகையில், அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும் [ha.gi’ous] போனான். . . . யோப்பா பட்டணத்தில் தபீத்தாள் என்னும் பேருடைய ஒரு சீஷி [மரித்து] இருந்தாள் . . . பேதுரு . . . பிரேதத்தின் புறமாய்த் திரும்பி: தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள். அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும் விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்களுக்கு முன் நிறுத்தினான்.” (தெளிவாயுள்ளபடி, இந்தப் பரிசுத்தவான்கள் இன்னும் பரலோகத்துக்கும் சென்றில்லை, ஒரு பரிசுத்தவான் யாரென பேதுரு கருதியபடி முதன்மையான ஆட்களுமல்லர்.)

2 கொரி. 1:1; 13:12: “தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொரிந்துபட்டணத்திலுள்ள தேவனுடைய சபைக்கும், அகாயா நாடெங்குமுள்ள எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது.” “ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். பரிசுத்தவான்களெல்லாரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.” (கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டு கிறிஸ்துவோடு உடன்-சுதந்தரவாளிகளாகும் எதிர்பார்ப்புடன் கடவுளுடைய சேவைக்கென ஒதுக்கிவைக்கப்பட்ட இந்தப் பூர்வக் கிறிஸ்தவர்கள் எல்லாரும் பரிசுத்தவான்களென குறிப்பிடப்பட்டனர். அவர்கள் பரிசுத்தவான்களென அங்கீகரிக்கப்படுவது அவர்கள் மரித்தப் பின்னரேயென அதுவரையில் நிச்சயமாகவே ஒதுக்கிவைக்கப்படவில்லை.)

கடவுளிடம் பரிந்துபேசுவோராகச் செயல்படும்படி “பரிசுத்தவான்களை” நோக்கி ஜெபிப்பது வேதப்பூர்வமானதா?

இயேசு கிறிஸ்து பின்வருமாறு கூறினார்: “நீங்கள் இவ்வாறு பிரார்த்திப்பீர்களாக: பரமண்டலங்களிலேயிருக்கிற எங்கள் பிதாவே, . . . ” ஆகையால் ஜெபங்கள் பிதாவிடமே செய்யப்படவேண்டும். மேலும் இயேசு: “வழியும், சத்தியமும், ஜீவனும் நானே. என் வழியாய் அல்லாதே பிதாவினிடத்தில் சேருகிறவன் ஒருவனுமில்லை. என் நாமத்தினாலே நீங்கள் ஏதேனும் என்னைக் கேட்பீர்களாகில், நான் அதைச் செய்தருளுவேன்.” (மத். 6:9; அருளப்பர் [யோவான்] 14:6, 14, கத்.பை.) இவ்வாறு இயேசு, பரிந்துபேசுவோரின் பாகத்தை வேறு எவரும் நிரப்ப முடியுமென்ற எண்ணத்தை விலக்கிப்போட்டார். அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்துவைக் குறித்து மேலும் சொன்னதாவது: “அவரே (நமக்காக) மரித்தவர். பின்னும் அவரே உயிர்த்தெழுந்தவர்; அவரே சர்வேசுரனுடைய வலதுபாரிசத்திலிருக்கிறவர்; நமக்காகப் பரிந்துபேசுகிறவரும் அவரே.” “இவர் நமக்காக மனுப்பேசுவதற்கு எப்போதும் ஜீவியராயிருந்து, தமதுமூலமாய்ச் சர்வேசுரனிடத்தில் அண்டிவருகிறவர்களை . . . இரட்சிக்க வல்லவராயிருக்கிறார்.” (உரோமர் 8:34; எபி. 7:25, கத்.பை.) நம்முடைய ஜெபங்களுக்குக் கடவுள் செவிகொடுக்கவேண்டுமென்று நாம் உண்மையில் விரும்பினால், அவருடைய வார்த்தை கட்டளையிடுகிற அந்த வழியில் கடவுளை அணுகுவது ஞானமல்லவா? (மேலும் பக்கங்கள் 258, 259-ல், “மரியாள்” என்ற தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.)

எபே. 6:18, 20: “சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். . . . நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு [வாய்ப்பு, NW] எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள்.” (தடித்த எழுத்து சேர்க்கப்பட்டது.) (இங்கே பரிசுத்தவான்களிடமோ அவர்கள் மூலமோ அல்ல, பரிசுத்தவான்களுக்காக ஜெபிக்கும்படி ஊக்கமூட்டப்படுகின்றனர். நியு கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா 1967, புத். XI, பக். 670-ல் பின்வருமாறு ஒப்புக்கொள்கிறது: “வழக்கமாய் பு[திய] ஏ[ற்பாட்டில்], எல்லா ஜெபங்களும் தனிமுறையானது மட்டுமல்லாமல் வெளியரங்கமான பொதுமுறை ஜெபமும், கிறிஸ்துவின்மூலமாய்ப் பிதாவாகிய கடவுளை நோக்கிச் செய்யப்பட்டிருக்கிறது.”)

உரோமர் 15:30, கத்.பை.: “சகோதரரே, நம்முடைய ஆண்டவராகிய யேசுக் கிறீஸ்துநாதரைக் குறித்தும் இஸ்பிரீத்துசாந்துவின் சிநேகத்தைக் குறித்தும் நீங்கள் எனக்காகச் செய்யும் ஜெபங்களால் எனக்கு உதவியாயிருக்கும்படி உங்களை மன்றாடுகிறேன்.” (தானும் ஒரு பரிசுத்தவானாயிருந்த அப்போஸ்தலன் பவுல்தானே, தனக்காக ஜெபிக்கும்படி, தாங்களும் பரிசுத்தவான்களாயிருந்த உடன்தோழரான கிறிஸ்தவர்களைக் கேட்டான். ஆனால் பவுல் தன் ஜெபங்களை அந்த உடன்தோழரான பரிசுத்தவான்களை நோக்கிச் செய்யவில்லை, மேலும் தன் சார்பாக அவர்கள் செய்த ஜெபங்கள், பவுல் ஜெபத்தின்மூலம் பிதாவுடன் அனுபவித்து மகிழ்ந்த அந்தத் தனிப்பட்ட நெருங்கிய உறவினிடத்தை எடுக்கவில்லை என்பதைக் கவனியுங்கள். எபேசியர் 3:11, 12, 14-ஐ ஒத்துப்பாருங்கள்.)

பரிசுத்தவான்களின் நினைவூட்டுப்பொருட்களையும் சிலைகளையும் வணங்கும் பழக்கத்தை எவ்வாறு கருதவேண்டும்?

நியு கத்தோலிக் என்ஸைக்ளோபீடியா பின்வருமாறு ஒப்புக்கொள்கிறது: “நினைவூட்டுப்பொருட்களை வைத்து வணங்கும் வழிபாடு சரியென காட்டுவதற்குப் பழைய ஏற்பாட்டில் ஆதாரத்தைத் தேடுவது இவ்வாறு வீணே; புதிய ஏற்பாட்டிலும் நினைவுச் சின்னங்களுக்கு அதிகக் கவனம் செலுத்தியில்லை. . . . [சர்ச் “பிதா”] ஆரிஜன் இந்தப் பழக்கத்தை ஒரு சடப்பொருளுக்கு மரியாதை செலுத்தும் புறமத அடையாளமென கருதினதாகத் தெரிகிறது.”—(1967), புத். XII, பக். 234, 235.

மோசேயைக் கடவுள் அடக்கம்பண்ணினார், அவனுடைய பிரேதக்குழி இருந்த இடத்தை மனிதர் எவரும் ஒருபோதும் கண்டுபிடிக்கவில்லை, இது கவனிக்கத்தக்கது. (உபா. 34:5, 6) ஆனால் பிரதான தூதன் மிகாவேல் மோசயின் உடலைப்பற்றிப் பிசாசுடன் விவாதித்தானென யூதா புத்தகம் வசனம் 9, நமக்குத் தகவல் அளிக்கிறது. ஏன்? அதைக் கண்டுபிடிக்கும் இடத்தை மனிதர் அறியாதிருக்கும் முறையில் அதை முடிவுசெய்வது கடவுளுடைய நோக்கமென தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அந்த உடலை யாவரறியும்படி காட்சிப்படுத்தி அதை ஒருவேளை வணக்கத்துக்குரிய பொருளாகும்படி செய்ய மனிதரை அந்த உடலினிடம் வழிநடத்துவது சத்துருவின் நோக்கமாயிருந்ததா?

“பரிசுத்தவான்களின்” சிலைகளை வணங்குவதைக் குறித்து, “சிலைகள்” என்ற முக்கிய தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.

கத்தோலிக்கப் “பரிசுத்தவான்களுக்குப்” படத்தில் ஏன் ஒளிவட்டம் சூட்டியிருக்கிறது?

நியு கத்தோலிக்க என்ஸைக்ளோபீடியா பின்வருமாறு ஒப்புக்கொள்கிறது: “எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் பயன்படுத்தும் மிகச் சாதாரணமான தனி வேறுபாட்டுக்குறி, நிம்பஸ் (மேகம்) ஆகும், இது அந்தப் பரிசுத்தவானின் தலையைச் சூழ்ந்திருக்கும் ஒளிவீசும் தனிச் சிறப்பான வடிவமாகும். இதன் தொக்கங்கள் கிறிஸ்தவ காலத்துக்கு முந்தினது, புறமத ஏவுதலுக்குரிய கிரேக்கக் கலையில் மாதிரிகள் காணப்படுகின்றன; இந்த ஒளிவட்டம், ஒட்டுக்கலைகளிலும் நாணயங்களிலும் காணப்படுகிறபடி, நெப்ட்யூன், ஜூப்பிட்டர், பாக்கஸ், முக்கியமாய் அப்பொல்லோ (சூரியனின் கடவுள்) போன்ற அரைத் தெய்வ உருக்களுக்கும் தெய்வத்தன்மை வாய்ந்தவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டது.”—(1967), புத். XII, பக். 963.

தி நியு என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிக்காவில் சொல்லியிருப்பதாவது: “கிரேக்க மற்றும் ரோமக் கலையில் சூரியக் கடவுள் ஹெலியாஸும் ரோமப் பேரரசர்களும் ஒளிக்கதிர் கிரீடங்களோடு அடிக்கடித் தோன்றுகின்றனர். இதன் புறமதத் தோற்றத்தின் காரணமாக, இந்த உருவகை பூர்வ கிறிஸ்தவக் கலையில் தவிர்க்கப்பட்டது, ஆனால் எளிய வட்ட நிம்பஸைக் கிறிஸ்தவ பேரரசர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ உருப்படங்களுக்கு ஏற்றனர். 4-ம் நூற்றாண்டின் மத்திபத்திலிருந்து, கிறிஸ்துவுங்கூட இந்தப் பேரரசுக்குரிய சிறப்புக்குறியுடன் காட்டப்பட்டார். 6-ம் நூற்றுண்டுக்குப் பின்பே இந்த ஒளிவட்டம் கன்னி மரியாளுக்கும் மற்றப் பரிசுத்தவான்களுக்கும் பயன்படுத்தும் வழக்கமாயிற்று.”—(1976), மைக்ரோபீடியா, புத். IV, பக். 864.

கிறிஸ்தவத்தைப் புறமதக் குறியீட்டோடு கலப்பது சரியா?

“ஒளிக்கும் இருளுக்கும் கூட்டேது? கிறீஸ்துநாதருக்கும் பெலியாலுக்கும் ஒப்பந்தமென்ன? விசுவாசியுடனே அவிசுவாசிக்குப் பங்கேது? சர்வேசுரனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் பொருத்தமேது? . . . நீங்கள் சுயஞ்சீவிய கடவுளின் ஆலயமாயிருக்கிறீர்கள். . . . ஆனபடியினாலே நீங்கள் அவர்கள் மத்தியிலிருந்து பிரிந்து, புறப்பட்டுப்போவதுமன்றி, அசுத்தமானதைத் தொதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்போது நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்கள் என்று சர்வ வல்லவரான கர்த்தர் சொல்லுகிறார்.”—2 கொரி. 6:14-18, கத்.பை.

ஒரு மதத் தொகுதியின் உறுப்பினர் எல்லாரும் பரிசுத்தவான்களாக இவ்வாறு பாவத்துக்கு விலகினவர்களாயிருக்க முடியுமா?

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையானவர்கள் எல்லாரும் பரிசுத்தவான்கள் என்பது நிச்சயமாகவே உண்மை. (1 கொரி. 14:33, 34; 2 கொரி. 1:1; 13:13, RS, KJ) அவர்கள் “பாவ மன்னிப்பைப்” பெற்றார்களென்றும் கடவுளால் “பரிசுத்தமாக்கப்பட்டார்கள்” என்றும் விவரிக்கப்பட்டுள்ளனர். (அப். 26:18; 1 கொரி. 1:2) இருப்பினும், அவர்கள் தாங்கள் எல்லாப் பாவத்துக்கும் விலகினவர்களென உரிமைபாராட்டவில்லை. அவர்கள் பாவியான ஆதாமின் சந்ததியாராகப் பிறந்தனர். இந்தச் சுதந்தரம், அப்போஸ்தலன் பவுல் மனத்தாழ்மையுடன் ஒப்புக்கொள்கிறபடி, சரியானதைச் செய்வதை அவர்களுக்கு அடிக்கடி ஒரு போட்டமாக்கிற்று. (ரோமர் 7:21-25) மேலும் அப்போஸ்தலன் யோன் தெளிவாய்க் குறிப்பிட்டபடி: “நம்மிடத்தில் பாவமில்லை என்போமாகில், நம்மையே நாம் மோம்போக்குகிறோம்; சத்தியமும் நம்மிடத்திலிராது.” (1 யோவான் 1:8, கத்.பை.) ஆகையால், கிறிஸ்துவை உண்மையோடு பின்பற்றுவோரைக் குறித்து இந்தப் பதம் பயன்படுத்தியுள்ள கருத்தில் ஒரு பரிசுத்தவானாயிருப்பது, மாம்சத்தில் அவர்கள் எல்லாப் பாவத்துக்கும் விலகினவர்களெனக் குறிக்கிறதில்லை.

இன்று உண்மையான கிறிஸ்தவர்கள் எல்லாரும் பரலோக வாழ்க்கையைத் தங்களுக்கு முன்கொண்டுள்ள பரிசுத்தவான்களாவென்பதைக் குறித்து, பக்கங்கள் 164-168-ஐப் பாருங்கள்.

ஒருவர் இவ்வாறு சொன்னால்—

‘பரிசுத்தவான்களில் உங்களுக்கு நம்பிக்கையுண்டா?’

நீங்கள் இவ்வாறு விடையளிக்கலாம்:  ‘நீங்கள் எவர்களை மனதில் கொண்டிருக்கிறீர்கள்?’ அவர் மரியாளை மற்றும்/அல்லது அப்போஸ்தலரையெனக் குறிப்பிட்டால், நீங்கள் மேலும் இவ்வாறு சொல்லக்கூ டும்: (1) ‘ஆம், அவர்கள் பரிசுத்த வேத எழுத்துக்களில் குறிப்பிடப்படுகின்றனர், அதில் எழுதியுள்ளதை நான் நம்புகிறேன். ஆனால் அவர்கள் இன்று செய்துகொண்டிருக்கும் காரியத்திலும் அது நம்மைப் பாதிக்கும் முறையிலும் நான் முக்கியமாய் அக்கறைகொண்டிருக்கிறேன், உங்களுக்கு அதில் அக்கறையுண்டா? . . . இங்கே பரிசுத்த வேத எழுத்துக்களில் அவர்களைப்பற்றி வெகு ஊக்கமூட்டும் ஒன்றை நான் கண்டேன், அதை நான் உங்களுடன் பதிர்ந்துகொள்ள விரும்புகிறேன். (வெளி. 5:9, 10)’ [குறிப்பு, அந்த வசனத்தின் சொல்லமைப்பைப்பற்றி ஒரு கேள்வியை எழுப்பினால் பயன்படுத்துவதற்கு: JB மொழிபெயர்ப்பு சொல்வது “உலகத்தை ஆளுகின்றனர்,” CC “பூமியின்மீது ஆளுவார்கள்” என்றிருக்கிறது. Kx “பூமியின்மீது அரசர்களாக ஆளுவார்கள்,” என்று கூறுகிறது. ஆனால் NAB-லும் Dy-லும் “பூமியில் அரசாளுவார்கள்” என்றிருக்கிறது. கிரேக்க இலக்கணத்தின்பேரில் குறிப்புகளுக்கு, பக்கம் 168-இல் “பரலோகம்,” என்பதன்கீழ்ப் பாருங்கள்.] (2) ‘அத்தகைய அரசாங்கத்தின்கீழ் வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? (வெளி. 21:2-4)’

அல்லது இவ்வாறு சொல்லலாம்  (நீங்கள் கத்தோலிக்கராக ஒரு காலத்தில் இருந்திருந்தால்): ‘பரிசுத்தவான்களுக்காக வைக்கும் பண்டிகைகளில் நான் பல ஆண்டுகள் பங்குகொண்டிருந்தேன் அவர்களிடம் தவறாமல் ஜெபித்துவந்தேன். ஆனால் பின்பு பரிசுத்த வேத எழுத்துக்களில் நான் ஒன்றை வாசித்தேன், அது நான் செய்துகொண்டிருந்ததைத் திரும்ப ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்கும்படி செய்தது. அதை நான் உங்களுக்குக் காண்பிக்க தயவுசெய்து அனுமதியுங்கள். (பக்கம் 353-ஐ பாருங்கள்.)’